அண்மையில் நடந்த டொரோண்டோப் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்கள் டிசெதமிழனும் (இளங்கோ), தேவகாந்தனும் மிகவும் தீவிரமாக எதையோ விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அருகில் நின்றபடியே அவர்கள்தம் உரையாடலை அவதானித்துக்கொண்டிருந்தேன்.
அப்படி என்னதான் அவர்கள் விவாதித்துக்கொண்டிருந்தார்கள்?
'பாலையைப் பற்றிய டிசெதமிழனின் சந்தேகங்களுக்குத் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார் தேவகாந்தன். {மேலுள்ள படம் அப்போது அவர்கள் உரையாடிய பாலையை பின்னணியாகக் கொண்ட ஓவியம்.] அவர் பகிர்ந்து கொண்ட கருத்துகளில் , நான் செவி மடுத்தவை வருமாறு:
'தொல்காப்பியர் நானிலமென்று நான்கு நிலங்களைப்பற்றியே குறிப்பிடுகின்றார். பாலையை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் கைக்கிளை , பெருந்திணை என்று மொத்தம் ஏழு திணைகள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. தமிழகத்தில் ராஜஸ்தான் போல் பாலை நிலம் இல்லை.'
தேவகாந்தன் கூறுவது போல் தொல்காப்பியர் நிலங்களை நான்கு திணைகளாகத்தான் பிரித்துப் பார்க்கின்றார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். இவ்விதம் நானிலமாக நிலங்களைப் பிரிக்கும் தொல்காப்பியர் திணைகளை ஏழாகப் பிரிக்கின்றார். அதனைத் தொல்காப்பியத்தின் அகத்திணையியலின் முதல் பாவில் காணலாம்:
"கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப" — (தொல். பொருள் - அகத்திணையியல்)
ஐந்திணைகளுடன் கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றையும் சேர்த்து ஏழு திணை என்கின்றார் அவர். அடுத்து வரும் இரண்டாம் பா ஐந்திணைகள் பற்றிய பிரிவுகளை எடுத்துரைக்கின்றது. அது வருமாறு:
"அவற்றுள்,
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய
படுதிரை வையம் பாத்திய பண்பே" — (தொல். பொருள் - அகத்திணையியல்)
இதன் அர்த்தம் என்ன? நடுவண் திணை தவிர ஏனைய நான்கும் கடல் சூழந்த நிலத்தின் பண்பைக் காட்டுபவை. நிலத்தின் பண்பைக்காட்டுபவை - குறிஞ்சி , முல்லை, மருதம், நெய்தல்.
இங்கு தொல்காப்பியர் குறிப்பிடும் நடுவண் திணை ஏனைய சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பாலை என்பது இதனை ஆய்ந்த உரையாசிரியர்களின் கருத்து. உண்மையில் அகத்திணையியலில் பாலை என்னும் சொல்லைத்தொல்காப்பியர் பயன்படுத்தியிருக்காது விட்டிருந்தாலும் , புறத்திணையியலில் பயன்படுத்தியிருக்கின்றார்:
"வாகை தானே பாலையது புறனே
தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப" (தொல் - புறத்திணையியல்)
அகத்திணையில் கூறப்படும் பாலைக்குரிய புறனே புறத்திணையில் கூறப்படும் வாகை என்பது இதன் கருத்து.
அகத்திணையில் பாலை என்று குறிப்பிடாவிட்டாலும், நடுவண்திணை என்று குறிப்பிடப்பட்டிருப்பது புறத்திணையியலில் குறிப்பிடப்படும் பாலையே என்பது உரையாசிரியர்கள்தம் கருத்து.
உண்மையில் பாலை நிலம் தமிழகத்தில் இல்லாவிட்டாலும், காடு , மலைசார்ந்த நிலங்கள் வெப்பத்தால் வறண்டிருக்கும் போது காணப்படும் நிலத்தையே பாலை என்று சங்கத்தமிழ் அறிஞர்கள் கருதினர் என்பதையே , பின்னர் வெளியான சிலப்பதிகாரக் காப்பியத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடும் பின்வரும் வரிகள் சிறப்பாக விளக்குகின்றன:
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதுஓர் படிவம்கொள்ளும்..." (காடுகாண் காதை, சிலப்பதிகாரம்)
முல்லையும் , குறிஞ்சியும் காலநிலை மாற்றத்தால், வெப்பத்தால் வறண்ட நிலமாக மாறுவதையே பாலை என்கின்றார் இளங்கோவடிகள்.
இதனால்தான் பாலையைத் தனித்திணையாகத் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை போலும்.
மேலும் அகத்திணையில் பாலை தலைவன், தலைவியருக்கிடையிலான பிரிவைக்குறிப்பிடப்பயன்படுத்தப்படும். அதன் பொழுதுகளாக இளவேனில், முதுவேனில் போன்ற பெரும்பொழுதுகளும், வெப்பம் மிகுந்த நண்பகலும் கருதப்படும். பொருள் தேடத் தலைவன் நெடுந்தொலைவு செல்கின்றான். அப்பிரிவு அக்காதலர்களின் காதலை, அன்பைப்பிரித்து விடுவதில்லை. அப்பிரிவு நிலையை விவரிக்கவே தொல்காப்பியர் உட்படச் சங்க காலப்புலவர்கள் பாலையை ஒரு திணையாகப் பாவித்தனர்.
.jpg)
No comments:
Post a Comment