Pages

Tuesday, August 11, 2026

கட்டடக்கலைஞர் மயூரநாதன் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ! - வ.ந.கிரிதரன் -

கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன்

'டொரோண்டோ'ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ''யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)1" நூல் பற்றி நான் ஆற்றிய உரையின் விரிவான. ஓரளவு முழுமையான கட்டுரையிது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அங்கு முழுமையாக என் உரையினை ஆற்ற் முடியாது போயிற்று.  அதன் ஓரளவு  முழுமையான  எழுத்து வடிவம் இது.]

கட்டடக்கலைஞர் மயூரநாதன் அவரது இந்த நூல் மூலம் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவராக முகிழ்த்திருக்கின்றார் என்றுதான் கூற வேண்டும்.

வரலாற்று முக்கியத்துவம்

இலங்கைத்  தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முககிய குறைபாடுகளில் ஒன்று  வரலாற்றுத் தெளிவின்மை.  இலங்கையின் தொன்மக் குடிகளாக இருந்தும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை கோலோச்சிய யாழ்ப்பாண இராச்சியம் பற்றி, அதன் மன்னர்களைப்பற்றி, இருந்த இராஜதானிகள் பற்றி ஆதாரபூர்வமான,  வரலாற்றுச் சான்றுகளுடன் கூடிய வரலாறு  இல்லை என்றுதான் கூற வேண்டும்.  இலங்கைத் தமிழரின்  வரலாற்றைப் பற்றிக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நூல். அது போல் கைலையாமாலை , வையாபாடல் போன்றவையும் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. இவையெல்லாமே கூறும் வரலாறு இவை எழுதப்பட்ட காலத்திற்கு முற்பட்டவை. எனவே பல கர்ணபரம்பரைக் கதைகள், கேள்வி ஞானத்தகவல்களை உள்ளடக்கியவை. இவற்றை வடி கட்டு , உண்மை பொய் அறிவதற்கு முதலியார் செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோர் முயற்சி செய்திருக்கின்றார்கள்.  அவற்றின் விளைவுகளே முதலியார் செ.இராசநாயகத்தின் யாழ்ப்பாணச் சரித்திரமும், சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனமும். மேலும் பலர் யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதியிருந்தாலும், இவை முக்கியமானவை.

மேலும் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுவதில் இலங்கைத் தமிழர்  காட்டும் அசிரத்தை. இவ்விடயத்தில் எம்மவருக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை என்று நூலாசிரியர் மயூரநாதன்  அண்மைய ஆதித்தொலைக்காட்சி நேர்காணலில் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். உதாரணத்துக்கு அவர் கங்கா சத்திரம் இடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். கங்கா சத்திரம் இருந்ததால்தான் அப்பகுதி சத்திரத்துச் சந்தி என்று அழைக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இச்சமயத்தில் எனக்கு ஒரு நினைவு தோன்றுகின்றது. எண்பதுகளில் யாழ் ஈழநாடு பத்திரிகையில் யாழ் நகரில் பழமையின் சின்னங்கள் பேணப்படுவதன் அவசியம் என்றொரு கட்டுரை எழுதினேன்.  எழுதிய பின்னரே யாழ் மாநகரசபை கங்கா சத்திரத்தை இடித்தது. இவ்விதமிருக்கின்றது எம்மவரின் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுதல் பற்றிய புரிதல். இந்நிலை மாற வேண்டும். இதற்கு நிச்சயம் இந்நூல் உதவி புரியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.


அதே நேரம் சிங்களவர்களைப்பொறுத்தவரையில் தம் வரலாற்றினைக் காலத்துக்குக் காலம் ஒழுங்காகப் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள். தீபவம்சம், அதனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட மகாவம்சம், தொடர்ந்து எழுதப்பட்ட சூளவம்சம்  என அவர்கள் தம் வரலாற்றைப் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள். இவ்விதம் இலங்கைத் தமிழரும்  செய்து வந்திருந்தால் இலங்கைத் தமிழரின் வரலாற்றில் தற்போது எதிர்கொள்ளும் குழப்பங்களைத்  தவிர்த்திருக்கலாம்.

இந்நிலையில்தான் மயூரநாதனின் இந்நூலின் முக்கியத்துவம் உள்ளது.  பொது யுகத்தின் பின் 1621 தொடக்கம் 1948 வரையிலான காலகட்டத்தில் , யாழ்ப்பாண நகரம் எப்படியிருந்தது என்பதை ஆதாரபூர்வமாகச் , சான்றுகளுடன் விபரிக்கும் வரலாற்று நூல் 'யாழ்ப்பாண நகரின் வளர்ச்சி வரலாறு'  நூல். இவ்விதமான வரலாற்று நூல்கள் அதிக அளவில் எதிர்காலத்தில் வரவேண்டும். தமிழ நகரப் பகுதிகளில் நவீனத் தொழில் நுட்பம் கொண்டு , அண்மையில் யாழ் கோட்டைப் பகுதியில் நடத்தியது போல், ட்ரோன்கள், ரேடார் போன்றவற்றின் உதவி கொண்டும் ஆய்வுகள் செய்வதன் மூலம் கடந்த கால வரலாற்றினை இன்னும் தெளிவாக அறிய முடியும். அதே போல் வழக்கமான தொல்லியற் செயற்பாடுகளான அகழாய்வுகள் மூலமும் ஆய்வுகள் தொடர வேண்டும். இவற்றின் அடிப்படையில் மேலும் பல வரலாற்று நூல்கள் உருவாவது காலத்தின் தேவை.

பெளதிகரீதியிலான வரலாற்று நூல்

அடுத்தது மயூரநாதனின் இந்நூலின் முக்கியமான இன்னுமொரு சிறப்பு - இது பெளதிகரீதியில் யாழ்ப்பாண நகரத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளும் நூல் என்பதாகும்.  பொதுவாக அரச வம்சங்களின் அடிப்படையில் அமையும் வரலாற்று நூல் அல்ல இந்நூல்.

பெளதிகரீதியிலான நகரொன்றின் வளர்ச்சி வரலாறு என்னும்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அது என்ன பெளதிகரீதியிலான என்பதுதான் அது. 

பெளதிகக் கண்ணோட்டம் என்பது ஒரு நகரத்தின் கட்டமைப்பு, புவியியல், சுற்றுச்சூழல் , நில அமைப்பு, நகர அமைப்பு, கட்டடக் கலை, சமூக,அரசியல் தாக்கங்கள் ஏற்படுத்திய நகர மாற்றங்கள், தொழில் நுட்பங்கள் ஏற்படுத்திய விளைவுகள், மக்கள் தொகை அதிகரிப்பு, இவை காரணமாக நகரில் பல்வகைகளில் ஏற்பட்ட வளர்ச்சி, மற்றும் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள் இவற்றைப் பற்றிய வரலாறு என்று பொதுவாகக் கூறலாம். குறிப்பாகக் கூறினால் மேலும் விளக்கமாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

1 .நிலப்பயன்பாடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி  - நகரமொன்றின் நிலப்பயன்பாடு எவ்விதமிருந்தது ,காலத்துடன் எவ்விதம் மாறுதலடைந்தது என்பதை வெளிப்படுத்துவது அது பற்றிய வரலாறு.

2. கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு  - கட்டிடக்கலைப் பாணிகளின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள், நுட்பங்கள் மற்றும் அழகியல் கூறுகள் நகரத்தின் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகின்றன. இவற்றை வெளிப்படுத்தும் பெளதிகரீதியிலான வரலாறு.

3    சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் தாக்கங்கள்  -  ஒரு நகரத்தின் புவியியல் இருப்பிடம் (மலைகள், ஆறுகள், கடல்கள்) அதன் வளர்ச்சிப் போக்கை எவ்வாறு பாதித்தது என்பதை பெளதிக ரீதியிலான வரலாறு   வெளிப்படுத்துகிறது. 

4. சமூக-பொருளாதாரப் பரிணாமம்  -  நகரமொன்றின்  சமூக மற்றும் பொருளாதாரம் எவ்விதம் நகர அமைப்பைப் பாதிக்கின்றன என்பதைப் பெளதிகரீதியிலான வரலாறு எடுத்துரைக்கும்.

5. அழிவு மற்றும் மறுகட்டமைப்பு: போர்கள், இயற்கை சீற்றங்கள் அல்லது அரசியல் மாற்றங்கள் ஒரு நகரத்தின் பெளதிக அமைப்பை எவ்வாறு அழித்தன என்பதையும், பின்னர் அவை எவ்வாறு மறுகட்டமைக்கப்பட்டன என்பதையும் பெளதிக வரலாறு பதிவு செய்கிறது.         

6.     பழங்குடி அறிவு மற்றும் உள்ளூர் பாரம்பரியம்:  ஒரு நகரத்தின் பழமையான பெளதிக கட்டமைப்புகள், அங்கு வாழ்ந்த மக்களின் உள்ளூர் அறிவு, சுற்றுச்சூழல் பற்றிய புரிதல் மற்றும் பாரம்பரிய கட்டுமான முறைகளை வெளிப்படுத்தலாம். 

7.     எதிர்காலத் திட்டமிடல் மற்றும் சவால்கள்:  ஒரு நகரத்தின் பெளதிக வரலாற்றைப் புரிந்துகொள்வது, அதன் எதிர்காலத் திட்டமிடலுக்கு முக்கியமானது. கடந்தகாலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலமும், வெற்றிகரமான அணுகுமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் நிலையான மற்றும் மீள்திறன் மிக்க நகரங்களை உருவாக்க முடியும். புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களை வகுக்கும்போது, வரலாற்றுச் சூழல் மற்றும் பெளதிக அம்சங்களைப் புரிந்துகொள்வது, நகரத்தின் தனித்துவத்தை நிலைநிறுத்த உதவும்.

இவை பெளதிகரீதியிலான நகரொன்றின் வரலாறு வழங்கும் ஆரோக்கியமான விளைவுகள். அதே சமயம் மயூரநாதனின் இந்நூல் யாழ்ப்பாண நகரத்தின் அந்நியர் ஆதிக்கத்தின் கீழிருந்த காலத்தின் வரலாறு. இது அந்நியரின் ஆதிக்கத்தின் வரலாறு. இது தேவைதானா என்றும் சிலர் கேட்கக்கூடும். உண்மைதான்.இது அந்நியர் ஆதிக்கத்தின் கீழ் யாழ் மண் இருந்தபோது எப்படியிருந்தது என்பதை வெளிப்படுத்தும் வரலாறுதான். அதற்காக இது அந்நியர் பெருமை பேசும் வரலாறு அல்ல. அந்நோக்கத்தில்  இந்நூல் எழுதப்படவும் இல்லை. இது யாழ் மண்ணின் வரலாறு. மனிதன் ஒருவனின் வாழ்க்கையில் இன்பப்பக்கங்கள் அல்ல துன்பப்பக்கங்களும் நிச்சயம் இருக்கும், அம்மனிதனின் வரலாறு என்னும்போது அம்மனிதனின் இன்பப்பக்கத்தின் வரலாறு மட்டுமல்ல. துன்பப்பக்கத்தையும் உள்ளடக்கிய வரலாறுதான். அம்மனிதன் சிறையில் இருக்கலாம்,வெளியில் இருக்கலாம்,அம்மனிதனின் வரலாறு சுதந்திரமாக அவன் வெளியில் இருக்கும் வரலாற்றுடன் , சிறையில் அவன் இருந்த காலத்தையும் உள்ளடக்கியதுதான்.  

அது போன்றதுதான் நகரமொன்றின் வரலாறும், புகழ்பெற்ற துறைமுகப்பட்டினமாகப் புகழுடன் விளங்கிய யாழ்ப்பாண நகரம் சில நூற்றாண்டுகள் அந்நியர் ஆதிக்கத்தின் கீழும் இருந்தது. அக்காலகட்டத்தின் வரலாறு யாழ்மண்ணின் வரலாறு. அங்கு வாழ்ந்த மக்களின் வரலாறு. அதைத்தான் மயூரநாதனின் இந்நூலும் வெளிப்படுத்துகின்றது.அதனால்தான் இந்நூலின் முக்கியத்துவமும் அதிகரிக்கின்றது.

மேலும் அந்நியர் கால ஆட்சியில் ஒரு நகரத்தின் வரலாறு பதிவு செய்யப்படுவது, அது அந்நியரின் வரலாறாக இருந்தாலும்,  இது வெறும் அந்நியரின் வரலாறு  மட்டுமல்ல, நம் மண்ணிலும், நம் மக்களின் வாழ்விலும் அந்நிய ஆட்சி ஏற்படுத்திய ஆழமான தாக்கங்களின் வரலாறு.  அந்நிய ஆட்சி ஒரு நகரத்தின் பெளதிக, சமூக, பொருளாதார, மற்றும் கலாச்சார அமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்களை ஆவணப்படுத்துவது, அந்தத் தாக்கத்தின் முழு வீச்சையும் புரிந்துகொள்ள உதவுகிறது.  சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள், கட்டிடங்கள், பொது நிர்வாகக் கட்டமைப்புகள் போன்ற உள்கட்டமைப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன, அவை யாரால், ஏன் உருவாக்கப்பட்டன, அதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை அறிய  வழி வகுக்கின்றது.

ஒரு நகரம் அந்நியர் ஆட்சிக்கு முன் எப்படி இருந்தது, அந்நியர் ஆட்சியில் எப்படி மாறியது, ஆட்சிக்குப் பின் எப்படி பரிணாம வளர்ச்சி பெற்றது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க அந்நியர் காலப் பதிவுகள் அவசியம்.

அந்நியர்கள் தங்கள் தேவைகளுக்காக நகரத்தை எவ்வாறு வடிவமைத்தார்கள், அது உள்ளூர் சமூகத்தின் வளர்ச்சிக்கு எந்த அளவு உதவியது அல்லது தடையாக இருந்தது என்பதையும் அறியவும் அக்காலகட்ட வரலாறு உதவுகின்றது. 

அந்நியர்கள் தங்கள் நிர்வாக, அறிவியல், மற்றும் தொழில்நுட்ப அறிவை எவ்வாறு உள்ளூர் சூழலில் அறிமுகப்படுத்தினார்கள் என்பதை இந்த வரலாறு பதிவு செய்யும். இவை உள்ளூர் வளர்ச்சிக்கு எவ்வகையில் உதவின என்பதை அறிந்துகொள்ள இவ்வரலாறு துணை செய்யும்.

அதே சமயம், இந்த அறிவையும், உள்ளூர் வளங்களையும் பயன்படுத்தி எவ்வாறு தங்கள் நலன்களுக்காக சுரண்டினார்கள் என்பதையும் வரலாறு  அம்பலப்படுத்தக்கூடும். 

அந்நியர் ஆட்சி உள்ளூர் சமூக அமைப்பில், சமூக உறவுகளில், பொருளாதாரப் பிரிவினைகளில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பதிவுசெய்வது முக்கியம். புதிய சட்டங்கள், வரிவிதிப்புகள், நிர்வாக அமைப்புகள் எவ்வாறு சமூக மாற்றங்களைத் தூண்டின என்பதை அறியலாம். இவற்றைப்பற்றி அறிந்து  கொள்ள இவ்வகையான அந்நியக் காலகட்டப் பெளதிகரீதியிலான வரலாறு உதவும்.

அதே ச்மயம்   அந்நியர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள், கிளர்ச்சிகள், மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு இயக்கங்கள் பற்றிய பதிவுகளும், அந்நியர் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும், அவற்றின் வீரியத்தையும், பின்னணியையும் புரிந்துகொள்ள  அந்நியர் காலகட்ட வரலாறு  உதவி செய்யும்.

அந்நியர் வருகை கலாச்சாரக் கலப்புக்கு வழிவகுத்தது. புதிய மொழிகள், கல்வி முறைகள், மதங்கள், கலை வடிவங்கள் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டன, அவை உள்ளூர் கலாச்சாரத்துடன் எவ்வாறு இணங்கின அல்லது மோதின என்பதைப் பதிவுசெய்வது ஒரு நகரத்தின் பன்முக கலாச்சாரப் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அவ்வகையிலும் மயூரநாதனின் பெளதிகரீதியிலான வரலாற்றை எடுத்தியம்பும் இவ்வரலாற்று நூல் இருக்கின்றது.

இவ்வகையில் காலனித்துவக் கால வரலாற்றுப் பதிவுகள் ஒரு நகரத்தின் அடையாளத்தின் ஒரு பகுதியாகும்.  அந்நியர் காலப் பதிவுகள் சார்புத்தன்மை கொண்டவையாகவும், ஆதிக்கச் சக்திகளின் பார்வையை மட்டுமே பிரதிபலிப்பவையாகவும் இருக்கலாம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். ஆனால், அவற்றை விமர்சனபூர்வமாக அணுகி, உள்ளூர் மக்களின் குரல்களுடனும், பிற ஆதாரங்களுடனும் இணைத்துப் பார்க்கும்போது, அவை ஒரு நகரத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு அவசியமான, தவிர்க்க முடியாத கூறுகளாக மாறுகின்றன. இவை வெறும் அந்நியரின் வரலாறு அல்ல, அது நம்முடைய, பன்முகத்தன்மை கொண்ட, சவால்கள் நிறைந்த வரலாற்றின் ஒரு முக்கியமான அத்தியாயம்.

கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு! 

நல்லூர்க் காலம்  நகர அமைப்பு, கட்டடக்கலை

நல்லூர் ராஜதானியாக விளங்கிய காலகட்டம் பற்றிக்  குறிப்பிடுகையில் ஒல்லாந்தர் காலத்து நிலப்படங்கள், போர்த்துக்கேயர் காலத்து வரலாற்று அறிஞர்கள், பாதிரிமார்களின் நூல்கள் , கள ஆய்வு போன்றவற்றிலிருந்து நல்லூர் ராஜதானியின் தெருக்கள், ஆலயங்கள் பற்றிய தன் கருத்தை முன் வைக்கின்றார். எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (1996) நூல் பற்றியும் குறிப்பிடுகின்றார். 

"...முத்திரைச் சந்தை ஏறத்தாழ  இதன் மையத்தில் அமைந்துள்ளது.  எனினும், அக்கால நல்லூர்  ஒழுங்கான சதுர வடிவம் கொண்டது என்றோ,  அதன் சரியான மையத்திஒல் முத்திரைச் சந்தை  இருந்தது எனறோ  எடுத்துக்கொள்ள முடியாது.  ஒல்லாந்தர் கால நல்லூர்  ஒழுங்கற்ற வடிவம்  கொண்டதாக இருந்ததையே  அக்கால நிலப்படங்கள்  காட்டுகின்றன.  தற்காலத்தில் முத்திரைச்சந்தையிலிருந்து நான்குதிசைகளை நோக்கிச் செல்லும் வீதிகள் நல்லூர் தலைநகராக இருந்த காலத்திலேயே இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.  தெற்கு நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதி மட்டும் அக்காலத்தில் இருந்திருக்கலாம்." ('யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) , பக்கம் 69)

நகரம் ஒழுங்கான சதுர வடிவில் இருந்ததாகவோ , சந்தை நகரின் மையத்தில் இருந்ததாகவோ எடுத்துக்கொள்ள முடியாது என்ற  முடிவுக்கு அவர் வருவதற்கு முன்னர் , இவ்விடயத்தில் கட்டடக்கலை பற்றி, நகர அமைப்புப் பற்றிய வாஸ்துசாத்திர விதிகளையும் சிறிது கவனத்திலெடுத்திருக்கலாம். ஏனென்றால் நாம் இன்று வரை வாஸ்துசாஸ்த்திரம் பார்த்துத்தான் வீடுகளைக் கட்டுகின்றோம். இவ்விதிகளைத்தான் எம் முன்னோரும் நகரங்களை அமைக்கையில் பின் பற்றினார்கள். இவ்விதிகளின்படி தலைநகர்களை அமைக்கும்போது நகரின் மையத்தில் கிழக்கு - மேற்காக, வடக்கு - தெற்காக இரு பிரதான பாதைகள் இருக்க வேண்டும் எனவும், நகரம் சதுர வடிவில் (அவ்விதம் அமைக்க முடியாத சூழலில் செவ்வக வடிவில் ) அமைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றது. அத்துடன் இவ்விதம் அமைக்கப்படும் தலைநகரைச்சுற்றி மதில் அமைக்கப்பட வேண்டும் எனவும், பிரதான பாதைகள் மதில்களின் வாசல்களை சந்திக்குமிடத்துக்கண்மையில் ஒவ்வொரு திக்கிலும் ஆலயங்கள் அமைக்கப்பட வேண்டுமெனவும் கூறுகின்றது.  இவ்விதமான பண்டைய நகர அமைப்பு விதிகளை ஆராய்ந்து , தென்னிந்திய , வட இந்திய நகரங்கள் , ஆலயங்களையெல்லாம் ஆராய்ந்திருக்கும் Architecture of the World: India  என்னும் நூல் இவற்றை ஆராய்வதற்குரிய சிறந்த உசாத்துணை நூல்களில் ஒன்று. (Andreas Wolwahsen , Henri Stierlin (Editor)  இந்நிலையில் மயூரநாதன் இவ்விடயத்தில் முடிந்த முடிவுக்கு வராமல், வாஸ்துசாத்திர விதிகளின்படி அவ்விதம் இருந்திருக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் அதற்காக உறுதியான ஆதாரங்கள் இல்லையென்று குறிப்பிட்டிருக்கலாம் என்று மேற்படி அவரது கருத்தை வாசித்தபோது தோன்றியது.

மேலும்  ஒல்லாந்தர் , ஆங்கிலேயர் காலத்தில் நல்லூர் ஆனது கிராமம் ஆகச் சுருங்கி விட்டது என்பதையும் மயூரநாதன் அவர்களின் ஆவணங்கள் மூலம் எடுத்துக்காட்டியிருக்கின்றார். ஆனால் போர்த்துக்கேயர் காலத்து ஆவணங்களை ஆராய்ந்து The Kingdom of Jafanapatam 1645' நூலை எழுதிய P.E.Peiris ஓரிடத்தில் 'நல்லூர் பட்டணம்'  (Nallur Patanam) என்று  குறிப்பிட்டிருக்கின்றார்.  இது எதைக் காட்டுகின்றது என்றால் போர்த்துக்கேயர் காலத்தில் பட்டணமாக இருந்த நல்லூர் ஒல்லாந்தர் காலத்தில் கிராமமாகவும், சுற்றுலாத்தலமாகவும் மாறி விட்டிருக்கையில் ,  போர்த்துக்கேயரால் நல்லூர் ராஜதானி நகர ஆலயங்கள், கட்டடங்கள் எல்லாம் அழிக்கப்பட்ட நிலையில் , நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஒல்லாந்தரின் ஆவணங்களின் காலகட்டத்தில் நல்லூர் நகரத்தின் வீதிகள் எல்லாம் முக்கியமிழந்து , சிதைந்திருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இந்நிலையில் ஒல்லாந்தர் காலத்து நல்லூர் அமைப்பின் அடிப்படையில் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பைத்  தீர்மானிப்பதில் மிகுந்த சிக்கலுண்டு.  ஆனால் அதே சமயம் ''தற்காலத்தில் முத்திரைச்சந்தையிலிருந்து நான்குதிசைகளை நோக்கிச் செல்லும் வீதிகள் நல்லூர் தலைநகராக இருந்த காலத்திலேயே இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.  "தெற்கு நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதி மட்டும் அக்காலத்தில் இருந்திருக்கலாம்." என்று அவர் கூறுவது நல்லூர் ராஜதானியானது ஒழுங்கான வடிவத்தில் இருந்திருக்கலாம். 

அவர் இவ்விடயத்திம் முடிந்த முடிபாகக் கருத்தினைத் தெரிவித்திருந்தாலும், அவரது சிறப்பு மிக்க இந்நூல் , நல்லூர் ராஜதானி ஒழுங்கான வடிவில் அமைந்திருப்பதையே வெளிப்படுத்தும் தகவல்களைக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகின்றேன். நல்லூர் ராஜதானி சதுர வடிவில் அமைந்திருக்க வேண்டும் என்பதும், அதன் பிரதான வீதிகளாக வடக்கு - தெற்கு, கிழக்கு - மேற்கு வீதிகள் அமைந்திருக்க வேண்டும் என்பதையே என் ஆய்வு நூலில் தெரிவித்திருந்தேன்.  அவ்வீதிகளைப் பற்றிய மயூரநாதனின்  நூலிலுள்ள தகவல்களும் அவற்றையே உணர்த்துவதாக எனக்குத் தோன்றுகின்றது. 

மேலும் மயூரநாதனின் ஆய்வில் கிழக்கில் கோட்டை வாசல், கோட்டையடி ஆகிய காணிப்பெயர்களைக் கொண்ட  பகுதிகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனது ஆய்விலும் அக்காணிப் பகுதிகளைக்குறிப்பிட்டு, அவை கோட்டையின் கிழக்கு வாசல் இருந்திருக்கலாம் என்பதைக்  குறிப்பிடுகின்றன  என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தேன்.  மேலும் யாழ்ப்பாண வைபவமாலை சட்டநாதர் கோயிலுக்கு அண்மையில் வடக்கு வாசல் இருந்ததையும், வரலாற்றுக் குறிப்புகள் , யாழ்ப்பாண வைபவமாலை உட்பட, வீரமாகாளியம்மன் கோயிலுக்கு அண்மையில் மேற்கு வாசல் இருந்ததையும்   குறிப்பிடுகின்றன என்பதைக் குறிப்பிட்டு, இவற்றின் விளைவாகத் தெற்கு வாசலொன்று கையிலாசநாதர் கோயிலுக்கு அண்மையில் இருந்திருக்கலாம் என்ற ஊகத்துக்கு, தர்க்கபூர்வமான முடிவுக்கு வந்திருந்தேன். ஆனால் அதற்கான வரலாற்றுக்  குறிப்புகள் இதுவரையில் கிடைக்கவில்லை என்றும் , இது பற்றிப் போர்த்துக்கேயரின் குறிப்புகளை மேலும் ஆராய வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தேன்.  மயூரநாதனின் இந்நூலிலும் 1560 ஆம் ஆண்டுப் போர்த்துகேயரின் படையெடுப்பின்போது மேற்கு வாசல் இருந்ததையும், அங்கு ஒரு மதில் இருந்ததையும் போர்த்துக்கேயரின் குறிப்புகள் தெரிவிக்கின்றன என்னும் விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவையெல்லாம் நல்லூர் இராஜதானியானது மதிலுடன் சூழந்த இராஜதானியாக இருந்ததை எடுத்துக்காட்டுகின்றன. இவ்விதம் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு  கோட்டை நகரமாகவும், ஆலய நகரமாகவும்  இருந்திருக்கலாம் என்பதுவே என் ஆய்வின் முடிவுகள். இவ்விடயம்  பற்றி வெளியான முதலாவது நூல்  'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூல். 

மயூரநாதன் மேற்படி நூலில் கோட்டை வாசல்களைப்பற்றிய வரலாற்றுக்குறிப்புகளைக் கவனத்திலெடுக்கவில்லை என்பதை உணர முடிகின்றது.  கிழக்கிலுள்ள கோட்டை வாசல், கோட்டையடி, யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடும் வடக்கு வாசல், மேற்கு வாசல், போர்த்துக்கேயரின் குறிப்புகள் குறிப்பிடும் கோட்டை மதில் , நகர அமைப்பு பற்றிய வாஸ்துசாத்திர் விதிகள் போன்றவற்றையெல்லாம் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பைப்பொறுத்த வரையில் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை. அவற்றையும் கவனத்திலெடுத்திருந்தால் ஒரு வேளை மயூரநாதனின்  நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பின் வடிவம் பற்றிய கருத்துகளிலும் மாற்றங்கள் இருந்திருக்குமென்று கருதுகின்றேன். 

அவர் இவ்விடயத்திம் முடிந்த முடிபாகக் கருத்தினைத் தெரிவித்திருந்தாலும், அவரது சிறப்பு மிக்க இந்நூல் , நல்லூர் ராஜதானி ஒழுங்கான வடிவில் அமைந்திருப்பதையே வெளிப்படுத்தும் தகவல்களைக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகின்றேன். 

இந்நூலைக் குறிப்பிட்டு, இந்நகர் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பகுதிகளில் கிடைக்கும் தகவல்களையும் மயூரநாதன் இந்நூலில் தெரியப்படுத்தியிருக்கின்றார். மயூரநாதன் இப்பகுதிகளில் குறிப்பிட்டுள்ள மேலதித்தகவல்கள் முக்கியமானவை.  நல்லூர் ராஜதானியின் மையத்தில் முத்திரைச் சந்தை இருந்தது, அதனை மையமாக வைத்து ராஜதானி நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் வகையில் கிழக்கு - மேற்கு, வடக்கு - தெற்கு வீதிகளால் பிரிக்கப்பட்டிருந்தது என்பது என் ஆய்வின் முடிவு. வேறு யாருமே இவ்விதம் நல்லூர் ராஜதானி  அமைந்திருந்தது என்று ஆய்வு மூலம் வந்தடைந்ததில்லை. மயூரநாதன் இப்பிரிவுகளைக் கவனத்திலெடுத்து அப்பகுதிகளை ஆராய்ந்துள்ளார்.

அடுத்தது ஒல்லாந்தரின் நிலப்படத்தை மட்டும் கவனத்தில் கொண்டு முடிவினை எடுக்காமல் அவர் தமிழரின் நகர அமைப்பு விதிகளையும் கவனத்திலெடுத்திருக்கலாம் என்றும் தோன்றியது. 
 இந்நூலின் பக்கத்தில் உள்ள படம் 11இல்  நல்லூர்க் காலத்தில் இருந்திருக்கக் கூடிய தற்கால வீதிகள் என்று குறிப்பிட்டு வெளியிட்டிருக்கும் நிலவரை படத்தில் (பக்கம் 79) நான் என் ஆய்வில் குறிப்பிடப்பட்டிருப்பது போல் வடக்கு, தெற்கு , கிழக்கு - மேற்காக வீதிகள் முத்திரைச் சந்தை அருகாகச் செல்வதைக் காண முடிகின்றது.  இவ்விதமான வீதி அமைப்பை எங்கிருந்து மயூரநாதன் பெற்றார் என்பதைக் குறிக்கவில்லை என்பதால் எனக்குச் சிறிது குழப்பம். அதனை அவர்தான் தெளிவு படுத்த வேண்டும்.

நூலின் அறிமுகக் குறிப்பொன்று பற்றி..

மேலும் நூலின் அறிமுகம் பகுதியில் மயூரநாதன் குறிப்பிட்டுள்ள ஒரு கருத்து பற்றியும் இங்கு சுட்டிக்காட்டலாம். அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

"யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிட்டுள்ள எல்லைக்கோயில்களின் அமைவிடங்களைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது நல்லூர் நகரம் முத்திரைச்சந்தையை மையமாகக் கொண்டதும், ஒரு கிலோ மீற்றர் ஆரை கொண்டதுமான  வட்டத்துக்குள் அடங்கி விடுவதைக் காணலாம்" (பக்கம்  40)

யாழ்ப்பாண வைபவமாலையில் எங்கும் நல்லூர் ராஜதானியின் அமைப்பு பற்றிக் குறிப்பிடப்படவில்லை. நகரின் நான்கு திக்குகளிலும் ஆலயங்கள் அமைக்கப்பட்ட தகவல்கள் கூறப்பட்டுள்ளன. முத்திரைச் சந்தை பற்றி எங்குமே குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. முத்திரைச் சந்தை பற்றி முதன் முதலாகப் போர்த்துக்கேயரின் குறிப்பொன்றில்தான் கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள நல்லூர் நகரத்தில் ஆலயங்கள்  அமைந்துள்ள இடங்களைப் பார்த்தால் அவை வேறான  இடங்களில் கட்டப்பட்டிருப்பதால் அவை முத்திரைச் சந்தையை மையமாகக்கொண்டிருக்கவில்லை. தற்போதுள்ள நல்லூர் நகரத்து ஆலயங்களை வைத்துப்பார்த்தால் எவ்வித ஒழுங்கும் தெரியாது. முதன் முறையாக ஒழுங்கற்றுக் கிடக்கும் நல்லூரில் , நல்லூர் ராஜதானியாகவிருந்தபோது முத்திரைச் சந்தையை மையமாக வைத்து நகர அமைப்பு சதுர வடிவில் அமைந்திருந்தது என்றும்,  அதனை ஊடறுத்துச் செல்லும் இரு பிரதான வீதிகளும் நகரின் கோட்டையைச சந்திக்கும் வாசல்கள் இருந்தன, அவற்றுக்குப் பாதுகாப்பாக ஆலயுங்கள் இருந்தன என்பது  எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வின் முடிவுகள். எனவே முத்திரைச் சந்தையை மையத்தைப் பற்றிக் கருத்துக் கூறும் எவரும் நிச்சயம் எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வினைக் குறிப்பிடுவது அவசியம். மேற்படி நூலின் அறிமுகம் பகுதியில் இடம்  பெற்றுள்ள மயூரநாதனின் கூற்று பின்வருமாறு இருந்திருந்தால் பொருத்தமாகவிருந்திருக்கும்:

"யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிட்டுள்ள எல்லைக்கோயில்களின் அமைவிடங்களைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, வ.ந.கிரிதரன் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வில் குறிப்பிடுவது போல் ,  நல்லூர் நகரம் முத்திரைச்சந்தையை மையமாகக் கொண்டதும், ஒரு கிலோ மீற்றர் ஆரை கொண்டதுமான  வட்டத்துக்குள் அடங்கி விடுவதைக் காணலாம்" 

அதே சமயம் இவ்விதம் குறிப்பிடுவது என் ஆய்வின் முடிவுகளைச் சுட்டிக்காட்டுவதாகவு, ஆமோதிப்பதாகவுமிருந்திருக்கும். ஏனென்றால் ஒழுங்கற்றுக் கிடக்கும் தற்கால நல்லூரிலிருந்து ஒழுங்கான நகர அமைப்பினைக்  கொண்டதாக நல்லூர் ராஜதானி விளங்கியது என்ப்துதான் என் ஆய்வின் பிரதானமான முடிவு. 

அதே சமயம் அறிமுகம் பகுதியில் இவ்விதம் கூறும் மயூரநாதன் என் நூலைக் குறிப்பிடுகையில் "முத்திரைச் சந்தை ஏறத்தாழ  இதன் மையத்தில் அமைந்துள்ளது.  எனினும், அக்கால நல்லூர்  ஒழுங்கான சதுர வடிவம் கொண்டது என்றோ,  அதன் சரியான மையத்திஒல் முத்திரைச் சந்தை  இருந்தது எனறோ  எடுத்துக்கொள்ள முடியாது. " என்று கூறுவது ஏன் என்பது சிறிது குழப்பத்தைத் தருகின்றது. அதை மயூரநாதனதான் விளக்க வேண்டும்.

ஒல்லாந்தர் காலத்துச் செமினரி மற்றும் நல்லூர் பெரிய முருகன் ஆலயம் பற்றி...

இந்நூலில் செம்மணிப் பகுதியில் மிகவும் விரிவாக ஒல்லாந்தர் காலத்தில் இருந்த செமினரி பற்றி மிகவும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார் மயூரநாதன். மிகவும் பெரிய அளவில் அமைந்திருந்த செமினரியில் செம்மணி  வீதிப்பக்கமாக அமைந்துள்ள பகுதியில் அக்காலத்தில் கிறிஸ்த்தவ ஆலயம் இருந்ததையும், வடக்குப் பகுதியில் யமுனாரி இணைந்திருப்பதையும் காண முடிகின்றது.  அக்கிறிஸ்தவ ஆலயமிருந்த பகுதியில்தான் தற்போதுள்ள பெரிய கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. 

இப்படம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. மயூரநாதன் இதனைத்  தேடி எடுத்து இந்நூலில் இணைத்திருப்பது பாராட்டுக்குரியது. அவரது தேடலில் ஆழத்தையும்  வெளிப்படுத்துகின்றது. அடுத்தது செமினரி பற்றியும், யமுனாரி பற்றியும், பழைய கந்தசாமி ஆலயம் பற்றியும் அவர் குறிப்பிடும் முக்கிய விடயங்கள் வருமாறு:

1. செமினரி மூன்றரை ஏக்கருக்குச் சற்று அதிகமான நிலப்பரப்பு மிக்கது.
2. வரைபடங்கள் நெதர்லாந்தின் தேசிய ஆவணக்காப்பகத்தில் உள்ளன.
3. செமினரிக் கட்டடம் அற்புதமானது என கட்டடளைத் தளபதி சுவார்டெக்ரூன் கூறியிருக்கின்றார் (17ஆம் நூற்றாண்டின் இறுதில் வாழ்ந்தவர்)
4. வரைபடத்தில் போதகரின் வீடு , தேவாலயம் , பாடசாலை 24 மாணவர்கள் படிக்க, ஒல்லாந்த ஆசிரியரின் வீடு, 200 மாணவர்களுக்கான் பொதுப்பாடசாலை என 5 கூறுகள் இருந்தன. 

பூங்காக்கள்  , குளிக்க நீர்த்தொட்டிகள் என நன்கு வடிவமைக்கப்பட்டிருந்த இச்செமினரி ஒல்லாந்தரின் கட்டடக்கலை, நில அமைப்பு வடிவமைப்புக் கலை ஆகியவற்றின் திறமையை வெளிப்படுத்துவன.

இச்செமினரியின் வடக்குப் பகுதியில் ப வடிவக் கேணியான யமுனாரி இணைக்கப்பட்டிருந்ததை தள வடிவமைப்புப்படம் புலப்படுத்துகின்றது. 

'தற்போது யமுனாரி , புனித யாக்கோபு தேவாலயத்தையும் அண்டி இருப்பதாகச் சொல்லப்படும் அத்திவார எச்சங்கள் மேற்படி செமினரியினுடையதாக இருக்கக்கூடும்' என்கின்றார் மயூரநாதன். 

'நல்லூர்க் காலத்தில் யமுனாரிக் கேணி இருந்திருந்தாலும் , அதைச் செமினரியின் பகுதியாகப் பயன்படுத்தியதால்  , செமினரியைக் கட்டியபோது திருத்தி மேம்படுத்தியிருப்பர் என்கின்றார். செமினரின் தளவரைபடத்தில் கேணி பகர வடிவாக இருக்கின்றது  (பக்கம்  218, படம் 63) ப வடிவின் இடையில் கேட்போர் கூடமும் உள்ளது.  கேட்போர் கூடத்தை நீக்கினால் ப வடிவம். கேட்போர் கூடத்தையும் உள்ளடக்கினால் செவ்வக வடிவம். இது பற்றி மயூரநாதன் 'முன்னர் செவ்வக வடிவாக இருந்த கேணி, ஒல்லாந்தர் காலத்தில்கேட்போர் கூடத்தையும் கட்டியதால் ப வடிவமாக மாறியிருக்கவும் வாய்ப்புண்டு' என்கின்றார். 

செமினரி வரை படமும், யமுனாரி பற்றிய மயூரநாதனின் கருத்துகளும் முக்கியமானவை, நூலின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாக நான் இனங்காண்பேன். அவரது தேடலையும் , ஆய்வுச் சிறப்பையும் வெளிப்படுத்தும் அம்சங்கள்.

செமினரியின் பெரிய அளவிலான வரைபடத்தை நோக்கும்போது எனக்கு ஏற்பட்ட எண்ணங்கள்:

என் நல்லூர் ராஜதானி ஆய்வில் , பாதிரியார் குறிப்பிட்டது போல் நல்லூர் முருகன் ஆலயம் இருந்த பகுதியிலேயே கிறிஸ்தவ ஆலயம் அமைக்கப்பட்டிருக்கின்றது. 

போர்த்திக்கேயரின் 1560 படையெடுப்பை விபரிக்கும் ஆவணங்களில் நல்லூர் முருகம் ஆலயம் பெரிய கோயில் என்று விபரிக்கப்பட்டுள்ளது. அதனை அவர்கள் பகோடா என்றழைத்தார்கள். அதே சமயம் கோயில்களை விட்டு மன்னன் வடக்கு அல்லது கிழக்காக ஓடினான் என்னும் போர்த்துக்கேயரின் கூற்றுக்களில் இருந்து நல்லூரில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்திருக்கலாம் என்பதையும் உணர முடிகின்றது என்பார் மயூரநாதன்.

எனக்கு என்ன தோன்றுகின்றது என்றால் யமுனாரிக்கு அருகில் இருக்கும் அத்திவாரச்சிதைவுகள் செமினரியினுடையதாக மட்டும் ஏன் இருக்க வேண்டும்? ஏன் பெரிய நல்லூர் முருகன் கோயிலினுடையதாகவும் இருக்கக் கூடாது? அந்தக் கோயில் பெரியது. மதில்களுடன் கூடிய பாதுகாப்பு மிக்கதாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் யாழ்ப்பாண இராச்சியத்தை 1619இல் வெற்றி கொண்டதும் தளபதி ஒலிவேறா முதலிரு ஆண்டுகள் நல்லூர் பெரிய கோயிலில் இருந்துதான் நாட்டை நிர்வாகித்து வந்தான் போலும்.  அதன் பின் அடிக்கடி தமிழரின் எதிர்த்தாக்குதல்கள் தஞ்சை மன்னன் உதவியுடன் நடைபெறவே , பாதுகாப்பு கருதி பண்ணைத்துறையில் அமைத்த கோட்டைக்குச் செல்கின்றான் என்பதையும் இந்நூல் எடுத்துக் காட்டுகின்றது.

மேலும் யமுனாரி பற்றிப் பின்வருமாறு யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடும்:

'.. முப்புடைக் கூபமும் உண்டாக்கி, அக்கூபத்தில்  யமுனாநதித்தீரத்தமும் அழைப்பித்துக் கலந்து  விட்டு.." (யாழ்ப்பாண வைபவமாலை, முதலியா குல. சபாநாதன் பதிப்பு, பக்கம் 26) 

இங்கு மயில்வாகனப்புலவர் யமுனாரி என்று கேணியை அழைக்கா விட்டாலும்,ம் அதில் இந்துக்களின் புனித நதிகளில் ஒன்றான யமுனா நதியின் தீர்த்தத்தை வரவழைத்துக் கலந்ததைக்  குறிப்பிடுகின்றார். ஏன்?  அது அருகில் இருந்த நல்லூர் முருகன் ஆலயத்தின் தீர்த்தக்கேணியாக இருந்திருக்கலாம் என்பதைத்தான் இத்தகவல் சுட்டிக்காட்டுகின்றது. மயில்வாகனப்புலவர் வாழ்ந்த பதினெட்டாம் நூற்றாண்டில் அக்கேணி புனிதக் கேணியாக விளங்கியிருக்கின்றது என்பதைத்தான் அவரது யமுனா நதித்தீர்த்தம் பற்றிய கூற்றும் வெளிப்படுத்துகின்றது. 

அண்மையில் யாழ் கோட்டைப் பகுதியில் நடந்த நவீனத்தொழில் நுட்பம் பாவித்து நடத்திய தொல்லியல் ஆய்வுகள் போல் ஏன் யமுனாரியை அண்டிய பகுதிகளிலும் நடத்தக் கூடாது. அதன் மூலம் பழைய நல்லூர் முருகன் கோயில்களின் , செமினரியின் அத்திவாரச் சிதைவுகளைக் காணக்கூடும்.

'சங்கிலித்தோப்பு' வாயில்  அல்லது கல்தோரண வாயில் பற்றி....

இந்த வாயில் பற்றியும் மயூரநாதனின் இந்நூலில்  விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை யாரும் சுட்டிக்காட்டாத முக்கிய விட்யமொன்றையும் மயூரநாதன் இவ்வாயில் பற்றிக் குறிப்பிடுகின்றார். அது முக்கியமானது. இவ்வாயிலானது ஒரு மாளிகையின் முகப்பு வாசலாக இருப்பதற்குச் சாத்தியமில்லை என்கின்றார்.   இதன் குறைந்த பருமன் இதனுடன் அகலமான மாளிகைச் சுவர்கள் பொருந்தி இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை அவர் முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டுகின்றார். இது பற்றிய நுணுக்கமான ஆய்வு அவசியம் என்றும் கூறுகின்றார்.  இது மாளிகையின் முகப்பாக அல்ல , .அங்கிருந்த மாளிகையொன்றின் வளவை அல்லது வீட்டுத் தோற்றத்தைச் சுற்றி அமைந்துள்ள மதிலில் இருந்த நுழை வாயிலாக இம்முகப்பு இருந்திருக்கலாம்  என்பதை ஊகிக்கலாம் என்கின்றார்.(பக்கம் 222).

அதே நேரம் இத்துடன் மயூரநாதன் இம்முகப்பு பற்றிய கருத்துகளை நிறுத்தி விட்டார். எனக்கு ஆச்சரியம் தந்த விடயம் என்னவென்றால், மயூரநாதன் குறிப்பிட்டுள்ள  மேற்படி ஒல்லாந்தர் காலத்து நல்லூர் வெளிப்படுத்தும் சில முக்கிய விடயங்களை எதற்காக அவர் இம்முகப்புடன் இணைத்துப் பார்க்கவில்லை என்பதுதான். இந்நூலின் 207 - 211 பக்கங்களில் அவர் முக்கியமான விடயமொன்றினை, ஒல்லாந்தரின் அப்பகுதி பற்றிய நிலப்படத்தின் அடிப்படையில் , சுட்டிக்காட்டியிருக்கின்றார். அதனைச் சுருக்கமாகப் பின்வருமாறு கூறலாம்:

ஒல்லாந்தரின் 1919ஆம் ஆண்டில் வரையப்பட்ட வலிகாமப் பிரிவில் காணப்படும் நல்லூர் பற்றிய நிலப்படங்களின் அடிப்படையில் தற்போது சங்கிலித்தோப்பு முகப்பு காணப்படும் பகுதியில் ஓர் அரசாங்கத்தோட்டம் அமைந்திருந்தது. (படம் 52, 53 & 54, பக்கம் 207, 208 & 209) ஒல்லாந்தர் காலத்தில் நல்லூர் ஒல்லாந்த அரச அதிகாரிகளின் குடும்பத்தவர்கள் செல்லும் சுற்றுலாத்தலமாக இருந்ததை அவர்கள் கால ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. அதனை மயூரநாதனும் இந்நூலில் பதிவு செய்திருக்கின்றார். இதனைச்சுட்டிக்காட்டும் மயூரநாதன் பின்வருமாறும் குறிப்பிடுவார்:

"ஒல்லாந்தர் காலத்தில், 1719 ஆம் ஆண்டைச் சேர்ந்த நிலப்படமொன்று இந்தத்தோட்டத்தைப் பெயர் குறித்துக் காட்டுகின்றது.... இது பருத்தித்துறை வீதி, செம்மணி வீதிச் சந்தியின் வடகிழக்கு மூலையில் அமைந்திருந்தது எனலாம். இந்தத்தோட்டத்தின் பருத்தித்துறை வீதியிலிருந்து ஒன்றும், இன்றைய செம்மணி வீதிப்பக்கம் இருந்து ஒன்றுமாக இரண்டு நுழை வாயில்கள் இருந்தன.  நிலப்படத்தில் உள்ள குறியீடுகளிலிருந்து இவாயில்களில் சங்கிலித்தோப்பு வளைவு போன்ற வளைவுகள் இருந்ததை அறியக்கூடியதாக உள்ளது. ... நிலப்படத்திலிருந்து , உள்ளே தோட்டத்தின் தெற்கு மதிலை அண்டி ஒரு கட்டடமும், மேற்கு மதிலிலிருந்து சற்றுத்தள்ளி  உட்புறமாக இன்னொரு கட்டடமும் இருந்ததை அறிய முடிகின்றது" (படம் 55,பக்கம் 210)

இதிலிருந்து தற்போது காணப்படும் முகப்பு மேற்படி அரச தோட்டத்தின் கிழக்குப் பகுதி நுழை வாயிலே சங்கிலியன் தோப்பு வாசல் என்று இன்று அழைக்கப்படும் வாயிலாக இருந்திருகக் வேண்டும். இதனை ஏன் தன் கவனத்தில் மயூரநாதன் எடுக்கவில்லை.  எடுத்திருந்தால் 'இது மாளிகையின் முகப்பாக அல்ல , .அங்கிருந்த மாளிகையொன்றின் வளவை அல்லது வீட்டுத் தோற்றத்தைச் சுற்றி அமைந்துள்ள மதிலில் இருந்த நுழை வாயில் என்பதை ஊகிக்கலாம் என்கின்றார் என்று கூறும் மயூரநாதன் (பக்கம் 222) மேற்படி அரச தோட்டத்தின் மதிலின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த மதிலில் உள்ள நுழைவு வாசல்தான் இந்தச் சங்கிலியன் தோப்பு முகப்பு என்று கூறியிருக்கலாமே! ஏன் கூறவில்லை. இது வியப்பைத்த்ருகின்றது.  

மேற்படி சங்கிலியன் தோப்பு வாசல் எதுவாகவிருக்கும் என்பதற்கான முக்கிய ஆதாரங்களாக அரச தோட்ட நிலப்படம்  இருக்கையில், இரண்டையும் இணைத்து எதற்காக மயூரநாதன் இறுதி முடிவை எடுக்கவில்லை! மயூரநாதனின் இந்நூல் அரச தோட்டம் பற்றிய முக்கிய தகவல்களை வழங்குகின்றது. அத்தகவல்களின் அடிப்படையில் தற்போது காணப்படும் சங்லியன் தோப்பு வாசல் ப்ற்றிய நல்லதொரு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுக்கு வந்திருகக வேண்டிய மயூரநாதன் எதற்காக அதனைத்  தவற விட்டார்?  நான் நினைக்கின்றேன், கிடைத்த தகவல்களை ஆவணப்படுத்திய மயூரநாதன் , மேற்படி தற்போதுள்ள சங்கிலித்தோப்பு வாசல் பற்றிய இறுதிக் கருத்துகளைக் கூறுகையில் கவலையீனமாக அவற்றைத்  தவறவிட்டு விட்டார் என்று. அப்படித்தவறி விட்டாலும், அவரது ஒல்லாந்தர் கால நிலப்படம் இந்தச் சங்லித்தோப்பு வாசல் பற்றிய நல்லதோர் ஊகத்துக்கு வலுச்சேர்க்கும் முக்கிய சான்றுகளில் ஒன்று.

மேலும் ஒல்லாந்தரின் நிலப்படத்திலிருந்து மேற்படி கிழக்கு வாசல் பருத்தித்துறை வீதியிலிருந்து கிழக்காக, உள்ளே இருப்பதால் அத்தோட்டத்தின் மாளிகையைச் சுற்றி அமைந்துள்ள மதில் கிழக்குப் பகுதியில் வீதியிலிருந்து சிறிது தள்ளி அமைந்திருகக் வேண்டும். தெற்குப் பகுதி வாசல் செம்மணி வீதியை அண்டி அமைந்திருப்பதையும் அறிந்து கொள்ள் முடிகின்றது. 

நல்லூரும் காடும் 

நல்லூர் ராஜதானி பற்றிக் குறிப்பிடுகையில் போர்த்துக்கேயரின் நல்லூர் மீதான படையெடுப்புகளையும், போர்வீரர்கள் கொழும்புத்துறை, பண்ணைத்துறையிலிரிந்து நல்லூர் நோக்கிச் சென்ற பாதைகளையும் விபரிக்கும் மயூரநாதன் இன்னுமொரு முக்கிய விடயத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றார். அது - பண்ணைத்துறை, கொழும்புத்துறைக்கும், தலைநகருக்குமிடையில் நீண்டு வியாபித்திருந்த சதுப்பு நிலம், காட்டுப் பகுதிதான் அவை. 

இக்காடு காரணமாக பண்ணைத்துறை , கொழும்புத்துறை நல்லூர் நகரின்  பகுதிகள் அல்ல என்று மயூரநாதன் வாதிடுகின்றார். ஏன் அப்படிப் பார்க்க வேண்டும்? யாழ்ப்பாண இராச்சியத்தின்  தலைநகர் நல்லூர், அது மதில்கள் , காவற் காடுகளால் பாதுகாக்கப்பட்டதலைநகரம், யாழ்ப்பாண இராச்சியத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்கள் கொழும்புத்துறை, யாழ்ப்பாணப் பட்டினம் (பண்ணைத்துறை),. இவ்விதம் பார்க்கும்போது குழப்பம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை.

இங்கு மயூரநாதன் நல்லூர் ராஜதானியின் முக்கிய பகுதிகளாக மேற்படி துறை முகப்பகுதிகளை உள்ளடக்கிய யாழ்ப்பாணப் நகர்ப் பகுதி இல்லையென்று குறிப்பிடுகின்றார். இத்தர்க்கம் மேலும் கூடுதலான தர்க்கத்தை வேண்டி நிற்பது. எனக்கென்றால் அக்காடு தலைநகரின் பாதுகாப்புக் காடு, பாதுகாப்பு அரணாகவே தென்படுகின்றது. துறைமுகங்களும் நகரின் பிரதான பகுதிகளாகவே தென்படுகின்றது. ஆனால் இத்தர்க்கம் மேலும் விவாதத்துக்குரியது.  

போர்த்துக்கேயர் , ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் காலத்துக் கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு!

இக்காலகட்டத்தில் யாழ்ப்பாண நகர அமைப்பை நிர்ணயித்த முக்கிய கூறுகளாகப் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் அரசியல் நிலைப்பாட்டைக் குறிப்பிடலாம். சமயம், பாதுகாப்பே நகர அமைப்பை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கினை ஆற்றின எனலாம். 

போர்த்துக்கேயர் அரசில் மதம் முக்கிய பங்கினை வகித்தது. கத்தோலிக்க மதம் தவிர ஏனைய மத வழிபாடுகள் தடை செய்யப்பட்டன. 1619இல் யாழ்ப்பாண இராச்சியத்தை வெற்றிகொண்ட தளபதி ஒலிவேறா  ஆரம்பத்தில் நல்லூர் பெரிய கோயிலைத் தன் இருப்பிடமாகக்கொண்டிருந்தான். பின்னர் அதன் பாதுகாப்பற்ற நிலையைக் கருத்தில்கொண்டு பண்ணைத்துறைப் பகுதியில்  புதுமை மாதா தேவாலயத்தை அமைத்து, பின்னர் அதனைச் சுற்றி நான்கு பக்கங்களுள்ள கோட்டையினை அமைத்து ஆட்சியினைத் தொடர்ந்தான்.

பாதுகாப்பு, நிர்வாகம் இரண்டுமே கோட்டையிலிருந்துதான் நடந்தன. ஒல்லாந்தர் காலத்திலும் இது தொடர்ந்தது. ஆங்கிலேயர் காலத்தில்தான் இந்நிலை மாறியது. ஆங்கிலேயர் கோட்டையைப் பாதுகாப்புக்காக மட்டும் பாவித்தனர். நிர்வாகத்தைக் கோட்டைக்கு வெளியே கொண்டு சென்றனர். இன்று நாம் காணும் யாழ்ப்பாண நகரின் கல்விக் கூடங்கள், நீதி மன்றங்கள், போக்குவரத்து வழிமுறைகள், யாழ் ஆஸ்பத்திரி  ஊள்ளூராடசி மன்றங்கள் எல்லாம் ஆங்கிலேயர் நாட்டிய வித்துக்களின் வளர்ச்சியே.

போர்த்தேயர் , ஒல்லாந்தர் காலத்தில் ஆட்சியாளர்களின் மதமே பிரதானமாக இருந்தது. ஏனைய மதங்கள் போர்த்துக்கேயர் காலத்தில் முற்றாகவும், ஒல்லாந்தர் காலத்தில் அதன் இறுதிக்காலம் வரையில் தடை செய்யப்பட்டிருந்தன. ஒல்லாந்தரின் இறுதிக்காலத்தில் மதச்சகிப்புத் தன்மை நிலவியது. அதன் காரணமாக நல்லூர் ஆலயம், வண்ணை சிவன் கோயில் போன்ற ஆலயங்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் மதம் அதன் முக்கியத்துவத்தை இழந்தது. அவர்கள் அரசியல், பாதுகாப்பு , வர்த்தகம் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினர், இதன் விளைவாக ஏனைய மத வழிபாடுகள் மீண்டும் ஆரம்பித்தன. இதன் விளைவாக நகரில் பன்மத வழிபாட்டு ஸ்தலங்களும் உருவாக்கப்பட்டன.

ஆங்கிலேயர் காலத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்திருப்பது மயூரநாதனின் ஆய்வுச் சிறப்பினை வெளிப்படுத்துவது, பின்வரும் காரணங்களுக்காக அவர் பிரித்திருந்தார்:

பிரித்தானியர் காலம் 1795  - 1833
பிரித்தானியர் காலம் 1833 -  1867
பிரித்தானியர் காலம் 1867 - 1896
பிரித்தானியர் காலம் 1896 - 1948

இந்நூலை கட்டடக்கலை மற்றும் நகர அமைப்புத் துறைகளில் பாண்டித்தியம் மிக்கவரான மயூரநாதன் எழுதியிருப்பது பல நன்மைகளைத்  தந்துள்ளது. ஏனைய வரலாற்று அறிஞர்களின் நூல்களில் காணப்படாத நன்மைகள் அவை. குறிப்பாகக் கட்டடக்கலை, நகர அமைப்பு பற்றிய துறைகளை இந்த அளவுக்கு விரிவாகத்  தந்த இலங்கை வரலாற்று நூல்கள் எவையுமில்லை என்றே குறிப்பிடுவேன்.

போர்த்துகேயரின் கட்டடக்கலையை பிரதிபலிக்கும் பிரதான கட்டடமான யாழ் கோட்டையின் பெரும்பகுதிகள் அழிக்கப்பட்டு விட்டன. அழித்துப்புதிதாக ஒல்லாந்தரின் ஐங்கோண, அம்புத்தலைக்கொத்தளங்களோடு கூடிய இன்று காணப்படும் கோட்டை கட்டப்பட்டது. உள்ளிருந்த போர்த்துக்கேயரின் புதுமை மாதா ஆலயமும் அழிக்கப்பட்டு , ஒல்லாந்தர் புதிய தேவாலயத்தைக் கட்டினர். இருந்தாலும் போர்த்துக்கேயர் கோட்டையின் மதில்கள் இரண்டையும் ஒல்லாந்தரின் கோட்டை உள் வாங்கிக் கட்டப்பட்டதையும் ,அம்மதில்களும் , அவற்றின் நடுவிலுள்ள , இன்றும் பீரங்கிகள் வைப்பதற்கான அரை வட்டப் பிதுக்கங்களும் வெளிப்படுத்துகின்றன.  இதனை மயூரநாதன் இந்நூலில் சுட்டிக்காட்டுகின்றார்.

யாழ்ப்பாணக் கோட்டை என்பது முக்கியமாக ஒல்லாந்தரின் இராணுவக் கட்டடக்கலையைச் சேர்ந்த ஒரு “Star Fort” (நட்சத்திர வடிவக் கோட்டை) ஆகும். இது ஐரோப்பியர்களின் பீரங்கி யுகப் பாதுகாப்பு முறைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.

இதன் கட்டடக்கலையின் முக்கிய அம்சங்கள்:

Pentagon / Star-shaped வடிவம்: கோட்டை ஐங்கோண நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டது. இதனால் எல்லாத் திசைகளிலும் பீரங்கி தாக்குதல் நடத்தவும் பாதுகாப்பு பெறவும் முடிந்தது.

Vauban-style Fortification: பிரெஞ்சு இராணுவப் பொறியியலாளர் Sébastien Vauban உருவாக்கிய கோட்டைக் கட்டமைப்புகளின் தாக்கம் இதில் காணப்படுகிறது. தடித்த ramparts (பாதுகாப்புச் சுவர்கள்), bastions (முனைமாடங்கள்), moat (அகழி) ஆகியவை இதன் சிறப்புகள்.

VOC Dutch Military Architecture: இது Dutch East India Company (VOC) பயன்படுத்திய கடற்படை–வர்த்தக பாதுகாப்பு கோட்டைகளின் ஓர் எடுத்துக்காட்டு. இந்தியப் பெருங்கடல் வர்த்தகப் பாதைகளை கண்காணிக்க இந்தக் கோட்டை முக்கியமானதாக இருந்தது.

Coral stone மற்றும் limestone பயன்பாடு: யாழ்ப்பாணப் பகுதியில் கிடைத்த coral stone மற்றும் limestone கொண்டு பல பகுதிகள் கட்டப்பட்டன.

இராணுவ,  நிர்வாக நகர அமைப்பு

கோட்டைக்குள்: ஆளுநர் மாளிகை, Kruys Church, ஆயுதக் கிடங்குகள், படைத்தளங்கள், நீதிமன்றம் போன்ற கட்டடங்கள் இருந்தன.

யாழ்ப்பாணக் கோட்டை, காலி கோட்டையைப் போல வர்த்தக நகரமாக அல்லாமல், பெரும்பாலும் இராணுவ மற்றும் நிர்வாகக் கோட்டையாகவே செயல்பட்டது. அதனால், இதன் கட்டடக்கலையைச் சுருக்கமாகச் சொன்னால்: “ஒல்லாந்தரின் Vauban-பாணி நட்சத்திர வடிவ இராணுவக் கட்டடக்கலை” அல்லது “Dutch Colonial Military Star-Fort Architecture” என்று கூறலாம்.

அதன் முக்கிய அம்சங்கள்:

கோட்டையைச் சுற்றி அகழி (moat) இருந்தது.

வெளியிலிருந்து கோட்டைக்குள் செல்ல ஒரே முக்கிய நுழைவாயில் மட்டுமே இருந்தது.

அந்த நுழைவாயிலுக்குச் செல்லும் பாதை நேராக அல்லாமல் சற்றுத் திருப்பங்களுடன் அமைக்கப்பட்டது; இதனால் எதிரி நேரடியாகத் தாக்க முடியாது.

அகழியைத் தாண்ட மரப்பாலம் அல்லது causeway போன்ற அமைப்பு இருந்தது. சில காலங்களில் drawbridge போன்ற உயர்த்தக்கூடிய பால அமைப்பும் இருந்திருக்கலாம் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.

நுழைவாயிலின் இருபுறங்களிலும் bastion-கள் அமைக்கப்பட்டிருந்ததால், உள்ளே வரும் பாதையை பீரங்கிகளாலும் துப்பாக்கிகளாலும் கட்டுப்படுத்த முடிந்தது.

ஒல்லாந்தர் கோட்டைக் கட்டடக்கலையில் “approach control” மிகவும் முக்கியம். அதாவது:

“எதிரி கோட்டைக்குள் நுழையும் முன் திறந்த வெளியில் கண்காணிக்கப்பட வேண்டும்.”

அதனால் பாதை குறுகலாக, பாதுகாப்பு கண்காணிப்புடன், அகழி மற்றும் rampart-களுக்கிடையில் அமைக்கப்பட்டது.

இன்றும் யாழ்ப்பாணக் கோட்டைக்கு செல்லும் பிரதான நுழைவுப் பாதையில் அகழி, causeway, பழைய வாயில் அமைப்பு போன்ற ஒல்லாந்தர் இராணுவக் கட்டடக்கலையின் அம்சங்கள் தென்படுகின்றன.

கோட்டைக்குள் இருந்த கட்டடங்கள் : யாழ்ப்பாணக் கோட்டைக்குள் ஒல்லாந்தர் காலத்தில் பல முக்கியமான நிர்வாக, இராணுவ, சமயக் கட்டடங்கள் இருந்தன. இது வெறும் பாதுகாப்புக் கோட்டை மட்டுமல்ல; ஒரு சிறிய “கோட்டை நகரம்” போல அமைந்திருந்தது.

கோட்டைக்குள் இருந்த முக்கிய கட்டடங்கள்: Governor’s House (ஆளுநர் மாளிகை), ஒல்லாந்து ஆளுநரின் நிர்வாக மையம். உயர்பதவி அதிகாரிகள் தங்கிய இடம்.

Kruys Church / Dutch Church - Dutch Reformed Church மரபைச் சேர்ந்த தேவாலயம். ஒல்லாந்தர் சமய மற்றும் சமூக வாழ்வின் மையம்.

Military Barracks (படைத்தளங்கள்) - படையினர் தங்கிய கட்டடங்கள். ஆயுதப் பயிற்சிக்கும் பயன்படுத்தப்பட்டது.

Gunpowder Magazine / Armoury - வெடிமருந்து மற்றும் ஆயுதக் கிடங்கு. மிகத் தடித்த சுவர்களுடன் கட்டப்பட்டது.

Prison / Guard Rooms - கைதிகள் மற்றும் காவல் படையினருக்கான இடங்கள்.

Storehouses / Warehouses - உணவு, வர்த்தகப் பொருட்கள், இராணுவப் பொருட்கள் சேமிப்பிடம்.

Hospital - படைவீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மருத்துவ வசதி.

Wells and Water Storage - முற்றுகை நேரங்களிலும் தண்ணீர் கிடைக்க கிணறுகள் அமைக்கப்பட்டன.

Parade Ground - படைத்துறை அணிவகுப்பு மற்றும் பயிற்சி மைதானம்.

Bastions and Ramparts - கோட்டையின் ஐந்து முனைகளிலும் பாதுகாப்பு bastion-கள்.

இந்த நிலப்படங்களில் பொதுவாக pentagon / star வடிவம், bastion அமைப்புகள், பிரதான வாயில், church, governor’s residence, parade ground, barracks போன்றவை குறிக்கப்பட்டிருக்கும்.

யாழ்ப்பாணக் கோட்டை, காலி கோட்டையைப் போல வர்த்தக நகரம் அல்ல; ஆனால் வட இலங்கையின் முக்கியமான இராணுவ–நிர்வாகத் தலைமையகமாக இருந்தது.

இவை இந்நூலின் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விடயங்கள்

கெவின் லின்ச்சின் நகரக் கோட்பாடும், 'யாழ்ப்பாண நகரத்து வளர்ச்சி வரலாறும்'!  

மேனாட்டு நகர அமைப்பு வல்லுநர்களில் ஒருவருமான Kevin Lynch நகர வடிவமைப்பு (Urban Design), நகரத் திட்டமிடல் (Urban Planning), சுற்றுச்சூழல் உளவியல் (Environmental Psychology) போன்ற துறைகளில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய அமெரிக்க நகர வடிவமைப்பாளரும் சிந்தனையாளரும் ஆவார். அவரின் மிகப் புகழ்பெற்ற நூல் The Image of the City ஆகும்.

இந்நூலில் அவர் முன்வைத்த நகரக் கோட்பாடுகள் இன்று வரை உலகளாவிய நகரத் திட்டமிடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கேவின் லின்ச்சின் அடிப்படைச் சிந்தனை ஒரு நகரம் என்பது வெறும் கட்டடங்களின் தொகுப்பு மட்டுமல்ல.  அந்நகரை மக்கள் எவ்வாறு: உணர்கிறார்கள், நினைவில் வைத்திருக்கிறார்கள், வழிசெல்கிறார்கள், மனத்தில் படிமமாக உருவாக்குகிறார்கள் என்பதே முக்கியம் என்று லின்ச் கருதினார். அவர் இதனை “Imageability” அல்லது “நகரப் படிமத் தன்மை” எனக் குறிப்பிட்டார். அதாவது: ஒரு நகரம் மக்களின் மனதில் தெளிவான காட்சிப் படிமமாக பதிய வேண்டுமெனும் கருத்தே அவரது கோட்பாட்டின் மையம்.

கெவின் லின்ச்சின் நகரக் கோட்பாட்டின் ஐந்து கூறுகள்:

1. பாதைகள் (Paths) - மக்கள் நகரத்தில் நகர்வதற்குப் பயன்படுத்தும் வழிகள். இவை நகரத்தின் முதன்மை இயக்க அமைப்பாகும். உதாரணமாக New York City நகரில் Broadway வீதி.

2. எல்லைகள் (Edges) - ஒரு பகுதியை மற்றொரு பகுதியிலிருந்து பிரிக்கும் விளிம்புகள். உதாரணங்கள்: ஆறுகள், கடற்கரைகள், மதில்கள், ரயில் பாதைகள், இவை நகரத்தின் பகுதிகளுக்கிடையேயான எல்லை உணர்வை உருவாக்குகின்றன.

3. மாவட்டங்கள் / பிரதேசங்கள் (Districts) - தனித்துவ அடையாளம் கொண்ட நகரப் பகுதிகள். உதாரணங்கள்: வர்த்தகப் பகுதி, கோவில் பகுதி, பழைய நகரம்,  குடியிருப்பு பகுதி, ஒரு மாவட்டத்துக்குள் நுழைந்தவுடன் அதன் தனித்துவத்தை மக்கள் உணர வேண்டும்.

4. மையங்கள் (Nodes) - மக்கள் கூடும் முக்கிய இடங்கள். உதாரணங்கள்: சந்திகள், பேருந்து நிலையங்கள், சந்தைகள், பொது மைதானங்கள், இவை நகரின் செயல்பாட்டு மையங்களாக அமைகின்றன.

5. அடையாளச் சின்னங்கள் (Landmarks) - மக்கள் வழிகாண பயன்படுத்தும் நினைவூட்டும் கட்டடங்கள் அல்லது இடங்கள். உதாரணங்கள்: கோபுரங்கள், கோவில்கள், மணிக்கூட்டுக் கோபுரங்கள், நினைவுச் சின்னங்கள்

மயூரநாதனின் இந்நூலில் பல்வேறு காலகட்டங்களில் இருந்த யாழ்ப்பாண நகரத்தின் பாதைகள், மையங்கள், எல்லைகள், அடையாளச் சின்னங்கள், பிரதேசங்கள் எல்லாம் விரிவாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றினூடு அக்காலகட்டங்களுக்குரிய யாழ்ப்பாண நகரத்தின் பிம்பங்கள்  மனக்கண்ணில் விரிகின்றன. 

யாழ்ப்பாணம் பற்றிய வரலாற்றறிஞர்களின் சந்தேகங்களும், புரிதல்களும்!

யாழ்ப்பாணம் தமிழர்களின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று. இருந்தாலும் இதன் சரித்திரம் பற்றிய கேள்விகளும்,, சந்தேகங்களும் இன்னும் வரலாற்று அறிஞர்களுக்கு உண்டு., யாழ்ப்பாணச் சரித்திரம் பற்றிய நூல்கள் பல வெளிவந்திருக்கின்றன.  இவற்றின் அடிப்படையில் பொதுவாக இந்நகர்பற்றிய வரலாற்றுத்  தகவல்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். இவை எனது நூலான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளவை:.கலாநிதி சி.க.சிற்றம்பலம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றவர்களின் கருத்துப்படி யாபாபட்டுன எனக் கூறுவது நல்லூரையே. "...யாழ்ப்பாணப் பட்டினம் (சிங்கள நூல்கள் யாபாபட்டுன எனக் கூறுவன) என்பதும் நல்லூரையே குறித்தது எனலாம்". ('யாழ்ப்பாண இராச்சியம்', கலாநிதி சி.க.சிற்றம்பலம்). மேலும் சுவாமி ஞானப்பிரகாசர், எஸ்.டபிள்யு.குமாரசுவாமி போன்றவர்களின் கருத்துப்படியும் சிங்களவர் நல்லூருக்கு வைத்த 'யாப்பநே', 'யாப்பா பட்டுநேயே' பின்னர் யாழ்ப்பாணமாக மருவியதென்பதையறியலாம்.:

 "..வண. ஞானப்பிரகாச சுவாமியவர்களும் இடப்பெயர் ஆசிரியராகிய திரு.எஸ்.டபிள்யு.குமாரசுவாமியவர்களும் யாழ்ப்பாடியின் கதை புனைந்துரையெனவும் இது போன்ற கதைகள் வையாபாடலிலும், தஷிண கைலாய புராணத்திலும் மலிந்து கிடக்கின்றனவெனக் கூறியதோடு, அந்தகக் கவி வீரராகவன் உண்மைச் சரிதையை யாழ்ப்பாடி தலையில் வைபவமாலைக்காரர் கட்டி வைத்தாரெனவும், அப்படியொருவன் இருக்கவுமில்லை, யாழ்ப்பாணம் பரிசிலாக ஒருவருக்குக் கொடுக்கப் படவில்லையெனவும், சிங்களவர் நல்லூருக்கு வைத்த 'யாப்பநே', 'யாப்பா பட்டுநே'யென்னும் பெயரே பிற்காலத்தில் யாழ்ப்பாணமென மருவியதெனவும், யாழ்ப்பாணன் கதையை எமது புலவர்கள் உருவகப்படுத்தி வைத்தார்களெனவுங் கூறுவர்.."('யாழ்ப்பாணச் சரித்திரம்', செ.இராசநாயகம்; பக்கம் 253).

முதலியார் இராசநாயகம் , கலாநிதி க.செ.நடராசா போன்றவர்களின் கருத்துகள் மேலுள்ள கருத்துக்கு முற்றுமெதிரானது. யாழ்ப்பாணப்பட்டினம் என்ற தமிழ்ப் பெயரின் சிங்களத் திரிபே 'யாப்பாபட்டுநே' என்பதே இவர்களது கருத்து. "...சிங்களப் புலவரொருவர் தங்காலையில் எழுதி வைத்த நூலில் கண்ட 'யாப்பாபட்டுநே'யென்னும் பெயரை யாழ்ப்பாணவாசிகள் எவ்விதமாயறிந்தமைத்துக் கொண்டனரென்பது ஆச்சரியம். 'யாப்பாபட்டுநே'க்கும், நல்லூருக்கும் கருத்துப் பொருத்தமிருந்தாலும் முந்திய பெயரை நல்லூருக்கிட்டு வழங்கவேண்டிய அவசியமில்லை. நல்லூரென முற்காலத்தில் தமிழர் சிங்கள நாட்டிலிட்டு வழங்கிய ஊர்ப்பெயர்களை இன்றும் அவ்வண்ணமே நல்லூரென அழைக்குஞ் சிங்களவர், யாழ்ப்பாணத்திலிருக்கும் நல்லூரென்னும் பெயரைச் சிங்களமாக மாற்றி வைத்தாரென்பது விந்தையே. யாழ்ப்பாணத்திலுள்ள சிங்களப் பெயருடைய ஊர்களையுங் காணிகளையுந் தமிழர்தமிழ்ப் பெயராக்காது விட்டது அதினும் விந்தையே. இனிப் 'பட்டுந' என்பது சிங்கள மொழியா? பட்டினமென்னுந் தமிழ் மொழியின் சிதைவென்பதைப் பள்ளிச் சிறுவருமறிவாரே. ஆகையால் யாழ்ப்பாணப் பட்டினம் என்னுந் தமிழ்ப் பெயரையே 'யாப்பாபட்டுநே'யென்ச் சிங்களவர் சிதைத்து வழங்கினர் என்பது தெளிவாகும்.."  (யாழ்ப்பாணச்சரித்திரம்'-முதலியார்.செ.இராசநாயகம்; பக்கம் 254).

இப்பிரச்சினைபற்றிய கலாநிதி க.செ.நடராசாவின் கருத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இவர் இது பற்றி நல்லதொரு விளக்கத்தைத் தந்துள்ளார். "....சிங்களப் பெயராகக் கருதப்பட்ட 'யாப்பாபட்டுன' என்பது 'யாபா' என்ற பதமும், 'பட்டுன' என்ற பதமும் இணைந்த சொற்கூட்டாகும். 'பட்டுன'வென்பது தமிழிலே பட்டினம் என்று வழங்கும் துறைமுக நகரத்தைக் குறிக்கும் சொல்லின் திரிபாகும். அச்சொல் தமிழிலேசங்ககால இலக்கியத் தொகுதிகளுள் ஒன்றான பத்துப்பாட்டில் பட்டினப்பாலை என்ற பாடலில் உபயோகிக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்துவுக்கு முற்பட்ட சிங்களச் சொல் என்று கொள்ள எள்ளளவும் இடமில்லை...   ..யாவா என்பது யாபா என மருவி வந்தது என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாயில்லை. அதனால் யாபா என்பது ஜாவா என்பதன் தமிழ் உருவம் என்று கருதமுடியாது. அன்றியும் அது ஜாவா என்பதன் சிங்கள வடிவமுமன்று. ஏனெனில் சிங்கள இலக்கியங்களில் ஜாவாவை யாபா என்று குறிப்பிடும் வழக்கம் என்றும் இருந்ததில்லை...அதனால் யாழ்ப்பாணப்பட்டினம் என்ற பெயரைக் கொண்டே சிங்களப் பெயரான 'பாப்பாபட்டுநெ' என்ற பெயர் புனையப்பட்டிருக்கிறது என்பதே பொருத்தமான முடிவாகும்."  ('யாழ்ப்பாணம் என்ற பெயரின் காரணங்கள்' - கலாநிதி.க.செ.நடராசா;' 'தமிழோசை' 11-11-1993).

மேற்படி கட்டுரையில் க.செ.நடராசா தந்து முடிவிற்காதாரமாக இன்னுமொரு காரணத்தையும் முன்வைக்கிறார். "..மேலும் ஊர்ப்பெயர்களை மற்றொரு மொழியிற் பெயர்த்து அவ்வூரவர்களால் உபயோகிக்கப்படும் வழக்கம் நடைமுறையில் இருப்பதில்லை. யாழ்ப்பாணத்து நல்லூரை அதன் சிங்கள மொழி பெயர்ப்பு என்று கருதப்படும் 'யாபனே' என்ற பதத்தால் வழங்காது ஏன் 'நல்லூருவ' என்று வழங்கி வழங்கி வருகின்றார்கள் என்பது விளங்கிக் கொள்ள முடியாததாகி விடும்... எனவே 'யாபனே' என்பது தமிழில் யாழ்ப்பாணம் என்று கூறும் பெயரின் சிங்களத் திரிபென்றே கொள்ள வேண்டும்..." ('தமிழோசை'; 11-11-1993).

மயில்வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை (முதலியார் குல.சபாநாதன் பதிப்பித்தது) அந்தகக் கவி வீரராகவனென்னும் யாழ்ப்பாணன் யாழ்பாடிப் பரிசு பெற்றதால் ஏற்பட்ட பெயரே யாழ்ப்பாணம் என எடுத்துச் சொல்லும். "..அக்காலத்திலே சோழ நாட்டிலிருந்து இரண்டு கண்ணுங் குருடனாகிய கவி வீரராகவன் என்னும் யாழ்ப்பாணன் செங்கடக நகரிலிருந்து அரசாட்சி செலுத்தும் வாலசிங்கமகராசன் பேரிற் பிரபந்தம் பாடிக்கொண்டு போய் யாழ் வாசித்துப் பாடினான். அரசன் அதைக் கேட்டு மிக்க சந்தோஷம் கொண்டு அவனுக்குப் பரிசிலாக இலங்கையின் வடதிசையிலுள்ள மணற்றிடல் என்னும் இந்நாட்டைக் கொடுத்தான். யாழ்ப்பாணன் இதற்கு யாழ்ப்பாணம் என்ற பெயரிட்டு..." ('யாழ்ப்பாண வைபவமாலை'; பக்கம் 25).

மயில்வாகனப் புலவர் கூறும் 'செங்கடகநக'ரென்பது சிங்கை நகரைக் குறிக்குமென்பதே  முதலியார் இராசநாயகத்தின் கருத்தாகும். "..சிங்கைநகர் என்னும் பெயரை மயில்வாகனப் புலவரோ அவருக்குப் பின் ஏடெழுதியவர் எவரோ, 'செங்கடகநகர்' என்று வைபவமாலையில் மாற்றி விட்டனர். உக்கிரசிங்கன் காலத்தில் 'செங்கடகநகர்' என்னும் நகர் கனவிலும் அறியப்படாததொன்று."  ('யாழ்ப்பாணச்சரித்திரம்'; பக்கம் 29).

"..பின்வந்த யாழ்ப்பாணத்தரசர் காலத்தில் எழுதப்பட்ட நூல்களிலெல்லாம் அவ்வரசர்கள் சிங்கை நகரிலிருந்து அரசாண்டார்களெனக் கூறியிருப்பதால், உக்கிரசிங்கன் தன்னிராசதானியைச் சிங்கைநகருக்கு மாற்றினானென்று கூறுவதே பொருத்தமுடைத்தாம். சிங்கை நகரே பிற்காலத்தில் 'செங்கடக நக'ரெனத் திரிந்திருக்க வேண்டும்" ('யாழ்ப்பாணச் சரித்திரம்'; பக்கம் 235).

'யாழ்ப்பாண சரித்திரம்' என்ற மற்றுமொரு நூலினைத் தந்த ஆசிரியர் ஆ.முத்துதம்பிப்பிள்ளை என்பவரின் கருத்துப்படி கி.மு.2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏலேலசிங்கனென்ற மன்னன் அந்தகனான யாழ்ப்பாடி என்பவனிற்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமே யாழ்ப்பாணம் என்பதாகும். அதற்காதாரமாக அவர் தனிப்பாடற் திரட்டில் கானப்படும் பின்வரும் பாடலைக் காட்டுவார்:

"..நரை கோட்டிளங்கன்று
நல்வளநாடு நயந்தளிப்பான்
விரையூட்டு தார்ப்புயன்வெற்
பீழமன்னனெ தேவிரும்பிக்
கரையோட்ட மாக மரக்கலம்
போட்டுனைக் காணவந்தாற்
திரை போட்டிருந்தனை யேலேல
சிங்க சிகாமணியே.."

இப்பாடலின் யாப்பைக் கொண்டு இது கி.பி.3 ஆம் நூற்றண்டிற்குப் பிற்பட்டதென்று க.செ.நடராசா கருதுவார். இலங்கையின் வடபுறத்துலிருந்து மணற்றிடரினைத் திருத்தி வளமாக்கியவன் விபீடணனிடம் யாழ்வாசிக்குமொருவனே என்பதை வையாபாடல் கூறும்.

ம.க.அந்தனிசிலும் யாழ்ப்பாணம் பற்றி  வீரகேசரியில் எழுதியுள்ளார். அதில் அவர் மூவகைப் பாணர்களில் ஒருவரான யாழ்ப்பாணர் வாழ்ந்த இடமே யாழ்ப்பாணமாயிற்று என்று சொல்வார். ",,தமிழருள் பழைய சாதியினரான பாணர் மூவகையினராவர். அவர்களுள் ஒரு பிரிவினரே யாழ்ப்பாணர் என்பதாம். தமிழரின் பழைய இசைக்கருவிகள் மூன்று. அவை யாழ்,குழல், முழவு என்பன. இவற்றில் யாழ் மீட்டிப் பாடிடும் பாணரே யாழ்ப்பாணர் என்ற பெயரைப் பெற்றனர். காலப்போக்கில் அது சாதிப்பெயராக மாறியது. எனவே யாழ்ப்பாணர் என்பது சாதிப்பெயராகும்....அவ்வாறு தமிழ்ப் பெருங்காப்பியங்களிலும் இலக்கியங்களிலும் சொல்லபப்ட்டிருக்கும் யாழ்ப்பாணர் என்னும் சாதியினரில் ஒரு பகுதியினர் இலங்கைத் தீவின் வடபகுதியில் வாழ்ந்த இடமே யாழ்ப்பாணம் என்ற பெயரைப் பெற்றது." ( 'வீரகேசரி; 9-12-1990).

இது பற்றி முதலியார் குலசபாநாதனும் கருத்துத்தெரிவித்துள்ளார். "..யாழ்ப்பாணம் எனும் பெயர் 15-ஆம் நூற்றாண்டுச் சிங்கள நூலிற்றான் முதன் முதற் காணப்படும். 14-ஆம் நூற்றாண்டிறுதியில் இருந்தவராகக் கருதப்படும் அருணகிரிநாதர் 'யாழ்ப்பாணாயன் பட்டின மருவிய பெருமாளே' எனக் குறிப்பிட்ட இடம் யாழ்ப்பாணத்தையே குறித்ததென்றும், அதனால் யாழ்ப்பாணம் எனும் பெயர் தமிழ்ப் பெயரெனவுங் கொள்வர் ஒரு சாரார். அருணகிரிநாதர் குறித்த இடம் எருக்கத்தம்புரியூர் என்பாருமுளர். எங்னனமாயினும், அருணகிரிநாதர் குறிப்பிட்ட தலம் ஈழநாட்டின் கண்ணதேயென்பது வலியுறின், யாழ்ப்பாணம் எனும் சொல் சிங்களப் பெரடியாகப் பிறந்ததெனுங் கொள்கை வலியிழந்துபடும்." [முதலியார் குலசபாநாதன் பதிப்பித்த 'யாழ்ப்பாண வைபவமாலை'; பக்கம் 24 , அடிக்குறிப்பு.

இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது பின்வரும் முடிவுக்கே வர முடிகிறது. நல்லூர் என்பதன் சிங்கள மொழிபெயர்ப்பான 'பாப்பாபட்டுநே' என்பதிலிருந்து வந்த பெயரே யாழ்ப்பானம் எனப்திலும் பார்க்க , யாழ்ப்பாணம் என்ற தூய தமிழ் சொல்லின் சிங்களத் திரிபே 'யாப்பாபட்டுநே' என்பதே பொருத்தமுடையதாகப் படுகின்றது. 'பாப்பாப் பட்டுநேக்கும் நல்லூருக்கும் கருத்துப் பொருத்தமிருந்தாலும், முந்திய பெயரை நல்லூருக்கிட்டு வழங்க வேண்டியதில்லை' என்ற முதலியார் இராசநாயகத்தின் கூற்றே ஏற்கக் கூடியதாகவிருக்கின்றது. மேலும் அவரே பிறிதோரிடத்தில் சுட்டிக் காட்டும் '..மேலும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டுக்கிடையே இத்துறையில் வந்திறங்கிய மேலைத்தேய முஸ்லீம் பிரயாணிகளும் 'ஜப்பா', 'ஸ¤ப்பா'வென அத்தொனிப்படவே கூறியிருக்கின்றனர்..."( 'யாழ்ப்பாணச் சரித்திரம்'; பக்கம் 255) என்ற கூற்றும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதே.

மேலும் கைலாயமாலையில் வரும் பின்வரும் பாடலும் யாழ்ப்பாணைத்தையும் நல்லூரையும் பிரித்துக் கூறுவதும் கவனிக்கத் தக்கது.

"..மார்ப்பனாம் புவனேகவாகு
நலமிகும் யாழ்ப்பாண நகரி
கட்டுவித்து, நல்லைக்குலவிய
கந்தவேட்குக் கோயிலும்
புரிவித்தானே..."

இவற்றிலிருந்து இறுதியாக நாம் வரக் கூடிய முடிவு இதுதான். நல்லூரும் சிங்கை நகரும் இரு வேறு வேறான இராஜதானிகள். இரு வேறான நகரங்கள். 'யாப்பாப்பட்டுநே'யென்பது யாழ்ப்பாணத்தின் சிங்களத் திரிபே. நல்லூரின் சிங்கள மொழிபெயர்ப்பான 'யாப்பாப்படுனே'யினின்றும் யாழ்ப்பாணம் என்னும் பெயர் வந்ததென்பது பொருத்தமற்றதாகவே படுகின்றது.

யாழ்ப்பாணப் பட்டினம் பற்றிப் பேசும் போர்த்துகேயரின் ஆவணமொன்று!

பதினாறாம் நூற்றாண்டுப் போர்த்துக்கேயரின் நூல்  'The Temporal And Spiritual Conquest  Of ceylon என்னும் நூலை  எழுதியிருப்பவர் Fernao De Queyroz. ஆங்கில மொழிபெயர்ப்பு - S.G.Perera. இந்நூலில்  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரமான  நல்லூரும் , யாழ்ப்பாணமும் வேறு வேறான நகர்கள் என்னும் உறுதி செய்யும் கூற்று  இந்நூலின் 27ஆம் அத்தியாயத்திலுள்ள 353ஆம் பக்கத்திலுள்ளது. 

".. ...... the other half a league from the city of Nelur, called patanao, where there was less danger,.. ." (The Temporal And Spiritual Conquest  of ceylon; பக்கம் 353)

மேற்படி அத்தியாயத்தின் தலைப்பு - Chapter 27  Other Successes of this war and the expedition of the Viceroy to Jafanapatao (Page 347)

பதினேழாம் நூற்றாண்டின்  ஆரம்பக் காலகட்டத்தில் நிகழ்ந்த , பதினாறாம் நூற்றாண்டில் நிகழ்ந்த போர்த்துகேயரின் யாழ்ப்பாணப் படையெடுப்புகள் பற்றியெல்லாம் இந்நூலில் விரிவாக விபரிக்கப்பட்டுள்ளன. பதினாறாம் நூற்றாண்டின் நிகழ்வுகள் ஏனைய போர்த்துகேயரின் குறிப்புகளின் அடிப்படையில் விபரிக்கப்பட்டுள்ளன. இக்குறிப்பின்படி  Nelur (நல்லூர் நகர்) நகரிலிருந்து அரை லீக் தொலைவிலுள்ள Patanao ( Jafanapatao - யாழ்ப்பாணப் பட்டினம்) என்பதை அறிய முடிகின்றது. இது முக்கியமான வரலாற்றுக் குறிப்பு. இதன்படி யாழ்ப்பாணப் பட்டினம் என்பது நல்லூர் நகரிலிருந்து அரை லீக் தொலைவிலுள்ள பட்டினம். யாழ்ப்பாணம் வேறு. நல்லூர் வேறு என்பதைத் தெளிவாக்கும் கூற்று இது.  போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்துக்கு வந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பட்டினம் இருந்திருக்கின்றது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டும் வரலாற்றுக் கூற்றாக இதனைக் கருதலாம். 

 2017 இல் யாழ்ப்பாணக் கோட்டையில் நடைபெற்ற அகழாய்வுகள்  யாழ்ப்பாணப்பட்டினத்தைப் பற்றிக் கூறுவதென்ன?

"2017 இல் யாழ்ப்பாணக் கோட்டையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தின் தொன்மை குறித்த பிரதிபலிப்புகள்" என்னும் தலைப்பில் எழுத்ப்பட்ட ஆங்கில ஆய்வுக்கட்டுரையை  சி.இ. டேவிஸ், பி. குணவர்தன, ஆர்.ஏ.இ. கொனிங்ஹாம், பி. புஷ்பரத்தினம், ஏ. ஸ்மிட், எம்.ஜே. மானுவல், எச். நாமல்கமுவ, ஜே. சேனநாயக்க & கே.ஜி.ஒய். பண்டார ஆகியோர் எழுதியிருக்கின்றனர். அதில் இவ்வகழ்வாய்வுகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது. (Recent Excavations and Survey at Jaffna Fort in 2017 and Reflections on the Antiquity of Indian Ocean Trade”
by C.E. Davis, P. Gunawardhana, R.A.E. Coningham, P. Pushparatnam, A. Schmidt, M.J. Manuel, H. Namalgamuwa, J. Senanayaka & K.G.Y. Bandara) 

ஆய்வின் நோக்கம் - “யாழ்ப்பாணக் கோட்டை பகுதி வெறும் போர்த்துக்கேயர்/ஒல்லாந்தர் கால கட்டட வரலாறா? அல்லது அதற்கு அடியில் இன்னும் தொன்மையான நாகரிக அடுக்குகள் உள்ளனவா?”

ஆய்வில் நவீன அறிவியல் முறைகள் பயன்படுத்தப்பட்டன:

(a) UAV / Drone Survey - வானிலிருந்து கோட்டைப் பகுதியின் நிலவடிவம் படமாக்கப்பட்டது. மேற்பரப்பின் அமைப்பு, புதைந்த கட்டட வடிவங்கள், நிலத்தடிப் பாதைகள் கண்டறியப்பட்டன.

(b) GPR – Ground Penetrating Radar - நிலத்தடியில் என்ன இருக்கிறது என்பதைத் தரையைக் கிழிக்காமல் காணும் ரேடார் முறை.

சதுர / செவ்வக கட்டட அமைப்புகள், புதைந்த சுவர்கள், பழைய தேவாலய கட்டடத் தடயங்கள் கண்டறியப்பட்டன.

c) Stratigraphic Excavation - அடுக்கு அடுக்காக மண் அகற்றிப் புரியப்பட்ட ஆய்வு. 

ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய சான்றுகள்:

அகழாய்வுகளில் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன:

ரூலெட்டட் வேர் (Rouletted Ware) - இது பொதுவாக கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த பானைப் பொருள் வகை. இது தென்னிந்தியா, இலங்கை, ரோமப் பேரரசு ஆகியவற்றுடன் இருந்த பழைய வணிகத் தொடர்புகளுக்குச் சான்றாகக் கருதப்படுகிறது.

கரும்-சிவப்பு மண் பானைகள் (Black and Red Ware) - சுமார் கி.மு. 1000 முதல் நிலவிய  பண்டைய தென்னாசிய நாகரிகங்களுடன் தொடர்புடையவை. 

ஆரம்ப இஸ்லாமிய களிமண் பானைகள் - அரபு வர்த்தகத் தொடர்புகளின் அடையாளங்கள். யாழ்ப்பாணம் இந்தியப் பெருங்கடல் இஸ்லாமிய வணிக வலையமைப்பிலும் இருந்தது.

சீனாவின் மிங் வம்சப் பீங்கான் பொருட்கள் - கிழக்காசிய வர்த்தக வலையமைப்புடன் யாழ்ப்பாணம் இணைந்திருந்ததை காட்டுகின்றன. காலகட்டம் -  14–16ம் நூற்றாண்டு.

யாழ்ப்பாணக் கோட்டை பகுதி, போர்த்துக்கேயர்/ஒல்லாந்தர் காலத்திற்கு முற்பட்டே மனித குடியேற்றம், வணிகம், கடல்சார் தொடர்புகள் கொண்ட இடமாக இருந்திருக்கின்றது. யாழ்ப்பாணம்  இந்தியப் பெருங்கடல் வர்த்தக வலையமைப்பின் முக்கிய மையமாக இருந்திருக்கின்றது.  தென்னிந்தியா, அரபு உலகம், தென்கிழக்காசியா, சீனா போன்ற பகுதிகளுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கின்றது.

தமிழர் வரலாற்றின் அடிப்படையில் இது இலங்கைத் தமிழர் வரலாற்றுக்கு வலிமையான தொல்லியல் ஆதாரமாக அமைகிறது. யாழ்ப்பாணத் தீபகற்பம் தொன்மையான நாகரிகத் தொடர்ச்சி கொண்ட நிலம் என்பதை இது வலுப்படுத்துகிறது. கடல் வழி வர்த்தகம், பண்பாட்டுப் பரிமாற்றம், நகரமயமாக்கல் போன்றவை மிகத் தொன்மையானவை என்பதை உணர்த்துகிறது.

மேற்படி அகழ்வாராய்ச்சி யாழ்ப்பாணப் பட்டினத்தின் தொன்மை பற்றி எடுத்துக்காட்டுகின்றது. காவிரிப்பூம்பட்டினம் போல் புகழ்பெற்ற துறை முக நகரே யாழ்ப்பாணப்பட்டினம் என்பதை எடுத்துக்காட்டும் முக்கியமான ஆய்வு இவ்வாய்வு. இது இலங்கைத் தமிழரின் வரலாற்றில் தெளிவை ஏற்படுத்தும் முக்கியமான சான்று. இவ்வகழ்வாய்வுகள் மேலும் தொடரப்பட வேண்டும். அவ்வாய்வுகள் மேலும் பல உண்மைகளை எடுத்துக்காட்டும். 

யாழ்ப்பாண நகரின் வளர்ச்சி வரலாறு (1621- 1948) நூலில் வரலாற்றறிஞரும், கட்டடக்கலைஞருமான் மயூரநாதன் பார்வையில் யாழ்ப்பாணப் பட்டினம்!

மயூரநாதன்  குடியேற்றவாதக் காலத்துக்கு முன்பிருந்த   யாழ்ப்பாணம் பற்றிப் பின்வருமாறு மேற்படி நூலில்  கூறுவார்: 

"யாழ்ப்பாணம் அல்லது அதையொத்த யாழ்ப்பாணயன்  பட்டினம் (தமிழ்நாட்டிலுள்ள திருமேணிக்குழிக் கல்வெட்டு) ,   யாப்பா பட்டுன  போன்ற பெயர்கள்  குடியேற்றவாதக் காலத்துக்கு  முன்பே புழக்கத்தில்  இருந்துள்ளன.  இப்பெயர்கள் எதைக் குறித்தன என்ற கேள்விக்குத் துல்லியமாக விடையளிக்கும் வகையிலான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. .. முந்திய காலங்களில்  இப்பெயர்கள் குறித்த இடம் அல்லது இடங்களைக் குறித்த போதிய தெளிவு இல்லை. ...அருணகிரிநாதர் திருப்புகழிலும்  இதே பெயர் வருகின்றது.  15 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியைச் சேர்ந்த கோகில சந்தேசய என்னும் சிங்களத் தூது நூலில் (* குயில் விடு தூது நூலில்) முதன் முதலாக யாப்பா பட்டுன என்னும் பெயர் உள்ளது.  இதைத்தொடர்ந்து பல்வேறு சிங்கள மூலங்களில் இப்பெயரைக் காண முடிகின்றது.....தமிழில் தற்போது புழங்கும் யாழ்ப்பாணம் என்னும் பெயரைக் கைலாயமாலை, வையாபாடல் ஆகிய ஐரோப்பியருக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணத்துத் தமிழ் நூல்களில் காணக்கூடியதாக உள்ளது.  வையாபாடல் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.  கைலாயமாலை இதற்கு முந்தையது எனவும், பிந்தியது எனவும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. மேலே எடுத்துக்காட்டிய மூலங்களில் யாழ்ப்பாணம் அல்லது அதையொத்த பெயர்கள் நாட்டையோ அதன் தலைநகரத்தையோ அல்லது இரண்டையுமே குறிப்பதற்குப் பயன்பட்டுள்ளன. கோகில சந்தேசய ஓரிடத்தில் யாப்பா பட்டுன நாடு  என நாடாகவும், இன்னோரிடத்தில் குபேரனுடைய நகரத்தைப் போன்ற யாப்பாப் பட்டுன  என நகரமாகவும் குறிப்பிடுகின்றது.  அத்துடன்  கோகில சந்தேசயவில் உள்ள யாப்பாப் பட்டுன குறித்த வர்ணனை, அது மிகையானதெனினும் ஒரு நகரத்தைக்குறிக்கின்றது.  பிற்காலத்தமிழ் மூலங்களும் யாழ்ப்பாணம் என்பதை இரண்டு விதமாகவும் குறிப்பிடுவதைக் காண முடிகின்றது.  பேராசிரியர் இந்திரபாலாவும் யாழ்ப்பாணம் என்னும் பெயர் நாட்டையும் அதன் தலைநகரத்தையும் குறிக்கப்பயன்பட்டிருக்கலாம் என்கின்றார். ....யாழ்ப்பாணயன் பட்டினம், யாப்பாப் பட்டுன போன்ற பழைய பெயர்களின் பகுதியாக , நகரத்தைக் குறிக்கும் பட்டினம் அல்லது அதையொத்த ஒரு சொல் இருப்பதால் இப்பெயர்கள் அவை தோன்றிய காலத்தில் நகரமொன்றைக் குறித்துப் பின்னர் நாட்டுக்கும் வழங்கின எனக்கொள்ளுதலே பொருத்தமாக இருக்கும்.  சமகாலத்தில் இலங்கையிலிருந்த கோட்டே  இராச்சியம், கண்டி இராச்சியம் ஆகியவற்றுக்கும் அவற்றின் தலைநகரங்களின் பெயர்களே  வழங்கின. எனவே ஒரு காலத்தில் யாழ்ப்பாணப் பட்டினம் அல்லது அதையொத்த  மேற்குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய ஒரு நகரம் இருந்தது என்று ஓரளவு உறுதியாகச் சொல்ல முடியும்."

குடியேற்றவாதக் கால யாழ்ப்பாணம் பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

"போர்த்துக்கேயர்  'ஜஃப்னாபட்டவ்' என்னும் பெயரைப் பயன்படுத்தினர். இலங்கைத் தீவில் உள்ளூர்த் தமிழ் மன்னர்களின் ஆட்சியின் கீழிருந்த ஆட்சிப்பகுதி முழுவதையும் அவர்கள் இப்பெயரால் அழைத்தனர். அக்காலத்தில் இருந்த ஒரு நகரத்தையோ குறிப்பிட்ட ஒரு இடத்தையோ இப்பெயரால் அவர்கள் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை.  நாட்டின் தலைநகரத்தை அவர்கள் எப்போதும் 'நல்லூர்' என்றே குறிப்பிட்டனர்.  'ஜஃப்னாப் பட்டவ்' ஒல்லாந்தரின் எழுத்துமூல ஆவணங்களில் 'ஜஃபனாபட்டம்' அல்லது 'ஜஃப்னாபட்டம்'  என்றும், சில நிலப்படங்களில் 'ஜஃப்பெனபட்ணம்' எனவும் வழங்கியது. ஆங்கிலேயர் காலத்தில் இது 'ஜஃப்னா' எனச் சுருங்கியது. ... "

மேலும் இப்பெயரைப் போர்த்துகேயர்  சிங்களப் பெயரான  'யாப்பா பட்டுன', தமிழ்ப்பெயர்களான 'யாழ்ப்பாணப் பட்டினம்', யாழ்ப்பாணயன் பட்டினம்'  போன்றவற்றிலிருந்து பெற்றிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டிருப்பார். மேலும் அவர் விரிவாகப் பட்டினம் என்னும் சொல் பற்றியும், அது துறைமுக நகரை மயமதம் குறிக்கும் என்பது பற்றியும் விரிவாக விபரித்திருப்பார். 

இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டும் மயூரநாதன் இறுதியில் குடியேற்றவாதத்துக்கு முன்பிருந்த யாழ்ப்பாணம் பற்றி வந்தடைந்திருக்கும்  இறுதிக்கருத்துகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

'யாழ்ப்பாண இராச்சியக் காலத்தில் யாழ்ப்பாணம் என்னும் பெயர் அங்கிருந்த ஏதோவொரு நகரத்தைக் குறித்தது எனச் சொல்வதற்கான நேரடிச் சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. '  இவ்விதம் குறிப்பிடும் மயூரநாதன் தொடர்ந்து முதலியார் இராசநாயகம், கைலையாமாலையில் சேர்க்கப்பட்டுள்ள தனிப்பாடல் ஆகியவற்றையும் சுட்டிக்காட்டுவார். 

'யாழ்ப்பாணப் பட்டினம் பிற்காலத்தில்  போர்த்துக்கேயரின் யாழ்ப்பாணநகரம் அமைந்த பண்ணைத்துறைப் பகுதியில் இருந்தது என்று 1970களின் தொடக்கத்திலேயே பேராசிரியர் இந்திரபாலா கருத்து வெளியிட்டிருந்தார். அண்மையில் கோட்டைப் பகுதியில் கிடைத்த அகழ்வாய்வுத் தகவல்கள் மேற்படி கருத்துக்கு வலுச்சேர்ப்பனவாக அமைந்துள்ளன.  இப்பகுதியில் மேலும் விரிவான அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டால் , இந்தக் கருதுகோளை உறுதி செய்வதற்கும் , நகரின் துல்லியமான அமைவிடத்தை அறிந்து கொள்வதற்கும்  தெளிவான சான்றுகள் கிடைக்கக்கூடும்.'  

இது மயூரநாதன் இவ்விடயத்தில் வந்திருக்கும் இறுதி நிலைப்பாடு.

யாழ்ப்பாணப் பட்டினம் அந்நியர் நாட்டில் அடியெடுத்து வைத்திருக்கும் வரையில் முக்கிய பட்டனமாகவே இருந்து வந்திருக்கின்றது என்பதையே அது பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும், அண்மையக் கோட்டை அகழ்வாய்வுகளும் புலப்படுத்துபவையாகவே எனக்குப் படுகின்றது. இவ்விதம் நோக்கும்போது பல யாழ்ப்பாணம் பற்றிய பல சந்தேகங்களுக்குத்  தர்க்கச்சிறப்புள்ள பதில்கள் கிடைக்கின்றன.

மேலும் மயூரநாதன் போர்த்துக்கேயரின் வரலாற்று ஆவணங்களிலிரிந்து யாழ் பண்ணைத்துறைக்கு அருகிலிருந்த முஸ்லிம் வணிகக் குடியிருப்புப் பற்றியும், முஸ்லிம் வணிகர்களின் பண்டசாலைகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார். அங்கிருந்த முஸ்லிம் வணிகக் குடியிருப்பைப்பற்றிக் குறிப்பிடுகையில் அதனை அகற்றிவிட்டே போர்த்துக்கேயர் தம் கோட்டையைக் கட்டியதாகவும் குறிப்பிடுகின்றார். அத்துடன் பண்ணைத்துறைக்கு அண்மையில் காங்கேசந்துறை வீதியை ஒட்டி தென்னிந்திய வணிகக் கணங்கள்  இருந்ததற்கான வரலாற்றுச் சாத்தியங்களையும் சுட்டிக் காட்டியிருக்கின்றார். இதுவும் முக்கியமான ஓர் உண்மையினை வெளிப்படுத்துகின்றது. எதற்காக முஸ்லிம் வணிகக் குடியிருப்பு, பண்டசாலைகள் எல்லாம் பண்ணைத்துறைப் பகுதியில் இருக்க வேண்டும்? யாழ்ப்பாணத்துறைமுக நகர் போர்த்துக்கேயர் வரும் வரையில் , நல்லூர் இராஜதானியின் இறுதிப்பகுதி வரையில் புகழ்பெற்ற , முக்கியத்துவம் மிக்க நகராக இருந்ததால்தானே. அந்நியர் ஆட்சியின் பின்னரே அது அவர்தம் பாதுகாப்பு கோட்டை காரணமாக அம்முக்கியத்துவத்தை இழந்திருக்க வேண்டும். இதனால்தான் யாழ்ப்பாணம் என்னும் பெயரையொட்டியே தமிழர் அரசு பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளிலும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

காவிரிப்பூம்பட்டினம் எவ்விதம் மிகவும் புகழ்பெற்ற துறைமுக நகராக விளங்கியதோ அவ்விதமே சங்க காலத்திலிருந்து புகழ்பெற்ற துறைமுக நகராக யாழ்ப்பாணப் பட்டினமும் விளங்கியிருக்க வேண்டும். சங்ககாலத்தில் புகழ்பெற்றிருந்த யாழ்ப்பாணப் பட்டினம் காலப்போக்கில் மாந்தைதன் புகழ்மிக்க துறை முக அந்தஸ்தினை இழந்திருந்தது போல் இழந்திருந்தாலும் முக்கியமான துறைமுக நகராக இருந்து  வந்திருக்கின்றது.  அதனால்தான் யாழ்ப்பாண இராச்சியத்தைப்பற்றிக் குறிப்பிடுகையில் யாழ்ப்பாணம் என்னும் பெயர் தொடர்ந்தும் பலராலும் பாவிக்கப்பட்டு வந்துள்ளது.  யாழ்ப்பாணம் என்னும் பெயர்தான் இந்தியக் கல்வெட்டுகளில், திருப்புகழில் பாவிக்கப்பட்டிருக்கின்றது.

போர்த்துக்கேயர் வந்தபோதும் வடக்கிலிருந்த தமிழர் இராச்சியத்தை  யாழ்ப்பாணப் பட்டினத்தின்  பெயரைப்பாவித்துத்தான் அழைத்தார்கள்.  ஏன்?  அப்போதும் யாழ்ப்பாணம்தான் முக்கிய நகராக, தமிழர் இராச்சியத்தை வெளிப்படுத்தும் பெயராக வழக்கில் இருந்திருக்கின்றது. அதனால்தான் அவர்கள் யாழ்ப்பாணப் பட்டனம் என்பதைத் தம் மொழியில் ஜாஃப்னா பட்டவ் எனக் கொச்சையாக உச்சரித்து அழைத்திருக்கின்றார்கள். 

ஒல்லாந்தரும் யாழ்ப்பாணப் பெயரைத்தான் பாவித்திருக்கின்றார்கள். கைலாயமாலையும் யாழ்ப்பாணம் என்று குறிப்பிட்டிருக்கின்றது. மயில்வாகனப்புலவரும் யாழ்ப்பாண வைபவமாலை என்றுதான் குறிப்பிட்டிருக்கின்றார். ஏன் நல்லூர் வைபவமாலை என்றோ அல்லது வேறு பெயரோ அச்சரித்திர நூலுக்குக் குறிப்பிடப்படவில்லை?

யாழ்ப்பாண வைபவமாலையை விடச் சபுமல் குமாரயா யாழ்ப்பாண வெற்றியைச் சிறப்பித்துப்பாடும் கோகில சந்தேசய அதன்  சமகால வரலாற்றைப் பற்றிக் கூறும் நூல். அதனால் நகரைப்பற்றிக் கூறும் தகவல்கள் ஓரளவு உண்மைக்குச் சமீபமானவையாக இருக்கும் சாத்தியங்கள் உண்டு. அதில் யாழ்ப்பாண நகரத்தை யாப்பா பட்டுன என்று விபரிக்கும் பகுதிகள் அந்நகரின் சிறப்பான  நகர அமைப்பை எடுத்துக்காட்டுகின்றன. குபேரபுரியுடன் ஒப்பிடுகின்றது.  இது யாழ்ப்பாணப் பட்டினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. 

மேலும் சபுமல் குமாரயா யாழ்ப்பாண அரசரை வென்றபோது தலைநகர் சிங்கைநகரில் இருந்தது. அது வல்லிபுரம் என்பது சுவாமி ஞானபிரகாசர், முதலியார் செ.இராசநாயகம் ஆகியோரின் கருத்து. இக்கட்டுரையாசிரியரின் கருத்தும் அதுவே.  அங்கு தலைநகர் போரில் அழிந்ததும் மீண்டுமொரு தலைநகரை நல்லூரில் அவனே உருவாக்கினான் என்பது முதலியார் செ.இராசநாயகம் போன்றோரின் கருத்து. இக்கட்டுரையாசிரியரின் கருத்தும் அதுவே. அந்நகரை மீண்டும் கைப்பற்றித் தமிழர் அரசு மீண்டும் உருவானபோது சிங்கைப்பரராசசெகரன் காலத்தில் அதன் நகரமைப்பு தமிழர்தம் நகரமைப்புக்கோட்பாடுகளுக்கமைய புனரமைக்கப்பட்டது. இது இன்று வரலாற்றறிஞர் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. சபுமல் குமாரயா யாழ்ப்பாண அரசை வென்ற காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பட்டினம் புகழ்பெற்ற துறைமுகப் பட்டினமாக இருந்திருக்கின்றது. அதனால்தான் யாழ்ப்பாண வெற்றியைக் குறிப்பிடும் கோகில சந்தேசய நூலும் யாப்பாப் பட்டுன என்று யாழ்ப்பாணப் பட்டினத்தைப் பற்றிப் புகழ் பாடுகின்றது. 

யாழ்ப்பாணப்பட்டினத்தின் புகழ் காரணமாகத்தான் அன்று யாழ்ப்பாண இராச்சியம் என்று தமிழர்களின் இராச்சியம் அழைக்கக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியமே அதிகமுண்டு. இன்றும் யாழ்ப்பாணம் என்னும் நகரின் வரலாற்று முக்கியத்துவம் காரணமாகத்தான் யாழ் மாவட்டம் என்று அப்பகுதி முழுவதும் யாழ்ப்பாணத்தின் பெயரை வைத்து அழைக்கப்படுகின்றது. அதுபோல்தான் அன்றும் யாழ்ப்பாணப்பட்டினத்தின் புகழ் முக்கியத்துவம் காரணமாகத்தான் அப்பகுதியில் ஆட்சியிலிருந்த இராச்சியத்தின் பெயரைக்குறிப்பிடுகையில் யாழ்ப்பாண இராச்சியம் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். மேலும் யாழ்ப்பாண இராச்சியத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த , சிலப்பதிகாரக் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய காவிரிப்பூம்பட்டினம் போன்ற துறைமுகப் பட்டினமாக யாழ்ப்பாணம் அந்நியரின் ஆதிக்கத்தில் யாழ்ப்பாணம் விழும் வரையில் இருந்திருக்கின்றது.  அதன் காரணாமாகத்தான் அந்நியராலும் யாழ்ப்பாணப்  பட்டினம் என்னும் பொருள்படும் 'ஜாஃப்னாப் பட்டவ்', ஜாஃப்னப் பட்டம்' போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கின்றது.  கோகில சந்தேசயவும் யாப்பாப் பட்டுன என அழைக்கின்றது. அதே சமயத்தின் யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகர்களாக கந்தரோடை, சிங்கைநகர் & நல்லூர் ஆகியவை இருந்திருக்கின்றன.   

மேலும் நல்லூர் தொன்மை மிக்க நகர். சோழர் காலத்துக் கல்வெட்டொன்று அதனை நல்லை மூதூர் என்றும் அங்கிருந்த முருகன் கோயில் பற்றியும் குறிப்பிடுகின்றது.  யாழ் கோட்டையில் எடுக்கப்பட்ட  , ராஜேந்திர சோழன் காலக்கல்வெட்டொன்றில் நல்லூரில் முருகன் ஆலயம் இருந்தது குறிப்பிடுவது பற்றி கலாநிதி இந்திரபாலா தனது  ஆய்வுக்கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் தமிழரின் தொன்மை மிகு நகர்களான நல்லூர், யாழ்ப்பாணப் பட்டினம் ஆகியவற்றின் பெயர்களை மாற்றிச் சிங்கை நகர் என்று வரலாற்றறிஞர்கள் சிலர் கருதுவதுபோல் கருதுவது இக்கட்டுரையாசிரியனுக்கு ஏற்புடையது அல்ல. 

பட்டினமும் ,பட்டணமும்

தமிழில் ஒரு சொற்பதங்கள் உள்ளன. ஒன்று பட்டினம்., அடுத்தது பட்டணம். பட்டினம் என்பது துறைமுக நகர். பட்டணம் என்பது பெரு நகர் அல்லது நகரம் ஆகியவற்றைக் குறிப்பது. போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை  'ஜஃப்னாபட்டவ், ஜஃப்னாப் பட்டம்  போன்ற சொற்பதங்களால் அழைத்தனர். ஒல்லாந்தர் பெரும்பாலும் ஜஃப்னாப் பட்ணம் என்னும் பெயரில் அழைத்தனர் என்பதை அவர்கள் காலத்து நிலவரைப்படங்கள் எடுத்துக்காட்டுகின்றன.  பட்ணம் என்பது பட்டணத்தின் திரிபாகவே இருப்பதற்கும்  சாத்தியங்கள் இருக்கின்றன. யாழ்ப்பாணம் புராதன காலத்தில் யாழ்ப்பாணப் பட்டினம் என்றே பெரும்பாலும் அழைக்கப்பட்டிருக்கலாம்.பின்னர் அது யாழ்ப்பாணப் பட்டணம் என்றழைக்கப்பட்டிருக்கலாம். 

இன்று யாழ்ப்பாணம் நகரம் தனியாகவும், அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதி யாழ்ப்பாண மாவட்டம் என்றழைக்கப்படுகின்றது. கொழும்பு நகர், கொழும்புப் பெருநகர், டொரோண்டோ நகர், டொரோண்டோப் பெருநகர் என்றழைப்பது போன்றது. அக்காலகத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் நிலவிய அரசு யாழ்ப்பாண அரசு என்றே அறியப்படுகின்றது. அரசு நிலவிய அனைத்துப் பகுதிகளும்  யாழ்ப்பாணப் பட்டணம் என்றழைக்கப்படிருப்பதற்கும் சாத்தியமுண்டு.  யாழ்ப்பாணப் பட்டணம் யாழ்ப்பாணப் பட்டினத்தையும், சிங்கை நகரான வல்லிபுரம், பழைய தலைநகரான கந்தரோடை, பிற்காலத்தலைநகரான நல்லூரையும் உள்ளடக்கியிருந்தது. 

அந்நியராதிக்கத்துக்குப் பிற்பட்ட யாழ்ப்பாண நகரத்தின் நகர  அமைப்பு போர்த்துக்கேயர் பண்ணைத்துறையில் கட்டிய கோட்டையை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டது. அந்நகரமைப்பு ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில் புனரமைப்பு செய்யப்பட்டு வந்துள்ளதை கட்டடக்கலைஞர்  இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாணநகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948) விரிவாகவே , ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கின்றது. அவ்வகையில் இந்நூல் வரலாற்றுச்சிறப்பு மிக்கதொரு நூல்.   493 பக்கங்களைக் கொண்ட இநந நூலை  குமரன், எழுநா,ஆதிரை  பதிப்பகங்கள்  இணைந்து வெளியிட்டுள்ளன. மிகுந்த உழைப்பின் அறுவடை இவ்வாய்வு நூல்.  அதற்காக நூலாசிரியர் மயூரநாதனுக்கும், வெளியிட்ட பதிப்பகங்களுக்கும் அதன் பின்னணியில் இருந்தவர்களுக்கும் நாம் அனைவரும் நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம்.   நூலைச் சிறப்பாக 'டொரோண்டோ'வில் வெளியிட  உதவியிருக்கின்றது ஓராயம் அமைப்பு. இதன் மூலம் முக்கியமானதொரு வரலாற்றுப் பங்களிப்பை அவ்வமைப்பு செய்திருக்கின்றது. விதந்தோதபப்ட வேண்டிய பங்களிப்பு.

உசாத்துணை நூல்கள்

 1. யாழ்ப்பாணச் சரித்திரம் - முதலியார் செ.இராசநாயகம்
2. யாழ்ப்பாணச்சரித்திரம் - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
3. கைலையமாலை
4. யாழ்ப்பாண வைபவமாலை
5. நல்லூர் இராஜதானி நகர அமைப்பு - வ.ந.கிரிதரன்
6. யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1821 - 1948) - கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன்
7. ம.க.அ அந்தனிசிலின் வீரகேசரிக் கட்டுரை  'யாழ்ப்பாணம் என்னும் பெயர் தோன்றியது எவ்வாறு? '
8. Recent Excavations and Survey at Jaffna Fort in 2017 and Reflections on the Antiquity of Indian Ocean Trade” by C.E. Davis, P. Gunawardhana, R.A.E. Coningham, P. Pushparatnam, A. Schmidt, M.J. Manuel, H. Namalgamuwa, J. Senanayaka & K.G.Y. Bandara) - 
9.ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி - கலாநிதி க.செ.நடராசா
10. யாழ்ப்பாண இராச்சியம் - கலாநிதி சி.க.சிற்றம்ப்பலம்

ngiri2704@rogers.com

No comments:

Post a Comment