Pages

Monday, August 10, 2026

கவிதை: எனக்கு அனுமதி கிடைக்குமா? (May I be allowed ) ஆங்கிலத்தில் - சஞ்சீ குணதிலக (Sanjee Goonetilake) - தமிழில் - கவிஞர் பா.அகிலன்




சிங்களக் கவிஞர் சஞ்சீ  குணதிலகவின் May I be allowed  என்னும் ஆங்கிலக் கவிதையை அவரே தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை நண்பர் தனபாலசிங்கம் என்னுடன் பகிர்ந்திருந்தார்.  அதற்காக அவருக்கு நன்றி. மனித நேயம் உள்ள அனைவரையும் உலுக்க வைக்கும் செம்மணிப் புதைகுழி மனித எலும்புக்கூடுகள் இலங்கையின் கறை படிந்த பக்கங்களில் ஒன்று. உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகளுக்குக் கிடைத்தது போன்று இதற்கும் நீதி கிடைக்குமென்று எதிர்ப்பார்ப்போம். 

பள்ளிப் பையுடன் கொன்று புதைக்கப்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அவை.  அவை ஏற்படுத்திய உணர்வுகளைக் கவிதையாக்கியுள்ளார்  சஞ்சீ குணதிலக. அதனக் கவிஞர்  பா.அகிலன் தமிழாக்கம் செய்திருக்கின்றார். அதனையும் தனது பதிவுக்கான எதிர்வினைகளில் ஒன்றாகப்  பகிர்ந்திருந்தார் சஞ்சீ குணதிலக. அத்தமிழ் மொழிபெயர்ப்பையும், ஆங்கில மூலக் கவிதையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.  [டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி]

எனக்கு அனுமதி கிடைக்குமா? - சஞ்சீ குணதிலக 

பள்ளிப் பைகள் மற்றும் பொம்மைகளுடன்
 மண்ணில் புதைக்கப்பட்ட 
அந்தக் குழந்தைகளுக்காகத்
 தனிமையில் கண்ணீர் சிந்த 
எனக்கு அனுமதி கிடைக்குமா? 

அவர்களின் நினைவாகச்
 சடங்குகள் செய்ய 
எனக்கு அனுமதி கிடைக்குமா?

 அதன் மூலம், 
பொம்மைகளுடன் சேர்த்துத் 
தங்களை உயிருடன் புதைக்காத 
ஓரிடத்தில் 
அவர்கள் மறுபிறவி எடுக்கட்டும். 

அவர்களின் உறவினர்களுக்காகத் 
துயரப்பட 
எனக்கு அனுமதி கிடைக்குமா? 

அதன் மூலம், 
அவர்களின் ஆன்மாக்கள் 
ஏதேனும் ஒரு வகையில் 
அனுதாபத்தை உணரட்டும். 

அவர்களின் நினைவாகக் 
கவிதை எழுத 
எனக்கு அனுமதி கிடைக்குமா? 

அதன் மூலம், 
காற்றில் கலந்திருக்கும் 
அந்த ஆன்மாக்கள் 
என் துயரத்தை உணர்ந்து 
என்னை மன்னிக்கட்டும். 
மண்ணில் புதைக்கப்பட்ட 
அந்தக் குழந்தைகளைப் பற்றி 
உங்களைச் சிந்திக்க வைக்க 
எனக்கு அனுமதி கிடைக்குமா? 

அதன் மூலம், 
அந்த ஆன்மாக்களின் அருளால் 
நம் உறவினர்கள் அனைவரும் 
காப்பாற்றப்பட 
நாம் பிரார்த்திக்கலாம். 

இனம், பிறப்பு, சாதி மற்றும் 
பாலினம் ஆகியவற்றின் 
கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல்
 மற்ற மனிதர்கள் மீது
 உணர்வுபூர்வமான பற்று கொள்ள 
எனக்கு அனுமதி கிடைக்குமா? 

 9 ஆகஸ்ட் 2026.
ஆங்கில மூலம்:

May I be allowed by Sanjee Goonetilake 

May I be allowed to
weep privately for these children 
who were buried with their school bags and toys?
May I be allowed to
offer rituals in their memory 
so they will be born in a place that would not bury them alive with their toys?
May I be allowed to 
grieve on behalf their relatives 
so their spirits can feel some form of empathy?
May I be allowed to 
write poetry in their memory 
so that those spirits in the air can feel my sadness and forgive me?
May I be allowed to 
make you think of those buried children 
so we can pray for all our kith and kin to be saved by their spirits?
May I be allowed to 
have feelings for other humans 
without being conditioned by race, birth, caste and gender? 

9 August 2026.

No comments:

Post a Comment