Friday, June 26, 2026

முகநூல் தர்க்கம்: வெகுசன இலக்கியம்!


அண்மையில் என் முகநூல் பக்கத்தில் வெகுசன இலக்கியம் பற்றி என் முகநூல் நண்பர்களுடன் நடந்த தர்க்கத்தின் தொகுப்பிது. வாசியுங்கள்! உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


வெகுசன இலக்கியம்!

மானுடரின் வாசிப்புப் படிக்கட்டுகளில் வெகுசன இலக்கியமும் முக்கியமானதொரு படிக்கட்டு. சிறுவர் இலக்கியம் எவ்விதம் முக்கியமோ அவ்விதமே வெகுசன இலக்கியமும் முக்கியம். தீவிர இலக்கியத்துக்கு ஒருவரைக் கொண்டு செல்வதற்கு , ஒருவருக்கு வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அந்தப்பணியினை வெகுசன இலக்கியம் செய்கிறது. இக்குழுவில் நீங்கள் நீங்கள் வாசித்த வெகுசன படைப்புகள் பற்றி, அதாவது நாவல்கள், காமிக்ஸ், சிறுகதைகள், கவிதைகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், அபுனைவுகள் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.

Tamil Journalist:


இதுவுமொரு சிக்கலான விடயம்தான். வெகுசன இலக்கியம் வாசகனைத் தேடிச் சென்று மகிழ்விக்கிறது என்றால், தீவிர இலக்கியம் வாசகனைத் தன்பக்கம் இழுத்து அவனைச் சிந்திக்க வைக்குமென்கிற கணிப்பீடு என்பதெல்லாம் வெறும் அபத்தம் தோழரே

உடனே தமிழின் தீவிர இலக்கிய முன்னோடி புதுமைப்பித்தன் என்று ஆரம்பித்து உடனேயே தாங்கள் அறிந்த கசடுகளின் தலைவர்களை பட்டியலாக்கி மற்றவர்களை வணிக எழுத்தாளென்கிற மாய உலகம் இது..தீவிர இலக்கியம் மற்றும் வெகுசன இலக்கியம் ஆகிய இரண்டிற்குமான எல்லைக் கோடு மறைந்து, அனைத்துமே வணிகமயமாகிவிட்டது என்பதுதான் இங்கு நான் காண்கிற நிதர்சனம் தோழரே.

Navaratnam Giritharan:

Tamil Journalist ஒரு கேள்வி.. வாசிப்புப் படிக்கட்டில் சிறுவர் இலக்கியம் முக்கியமா இல்லையா? மேலும் எங்கும் 'வெகுசன இலக்கியம் வாசகனைத் தேடிச் சென்று மகிழ்விக்கிறது ' என்று என் பதிவில் கூறவில்லையே. வாசிப்புப் படிக்கட்டில் சிறுவர் இலக்கியம் போல் ஒரு காலகட்டத்தில் வெகுசன இலக்கியமும் ஒரு படிக்கட்டாக இருக்கிறது என்றுதான் கூறியிருக்கின்றேன். அப்படி இல்லையென்று நீங்கள் கூறினால் அது உங்கள் கருத்து. என் கருத்தல்ல.

Tamil Journalist:

இதில் நாம் உணர்ச்சிவசப்பட்டுச் சினப்பதற்கோ, கோபப்படுவதற்கோ எதுவுமில்லை தோழரே! ஏனெனில், இந்த இலக்கியங்களும், அவை பின்னி வைத்திருக்கிற 'இசங்களும்' நமக்கு அப்படித்தான் கற்பித்திருக்கின்றன; நம்மை அப்படித்தான் பழக்கியிருக்கின்றன.'

சிறுவர்களின் கற்பனைத் திறனை வளர்ப்பதும், உலகைப் பற்றிய ஆச்சரியத்தை உருவாக்குவதும், அதன் மூலம் அவர்களுக்கு நற்பண்புகளைக் கற்றுக்கொடுப்பதுமே சிறுவர் இலக்கியம்' என்று நாம் மேடைகளில் முழங்குகிறோம். ஆனால், நிதர்சனத்தில் நடப்பது என்ன? மாயாஜாலக் கதைகளுக்குள்ளும், பேய்க் கதைகளுக்குள்ளும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிக ரீதியான கார்ட்டூன்களிலும் Walt Disney போன்று ஆன்லைன் கேம்களுக்குள்ளும் சிறுவர்களை வலுக்கட்டாயமாகத் தள்ளிவிடுகிறோம். இதையா நாம் 'சிறுவர் இலக்கியம்' என்று அழைக்கப் போகிறோம்?

அடுத்ததாக, 'வெகுசன இலக்கியத்தின் முதன்மை நோக்கம் அன்றாட வாழ்க்கை அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கான பொழுதுபோக்கு மட்டுமே' என்கிறார்கள். அதற்கு மேலாக ஒருபடி மேலேறி , 'வெகுசன இலக்கியத்தைக் கற்றால் தான், ஒருவன் தீவிர இலக்கியம் என்னும் மோட்சத்தை அடைய முடியும்' என்பதன் பின்னணியில் ஒரு போலித்தனமான வாதத்தை முன்வைக்கிறார்கள். 'ஞானமடைந்தவன் மட்டுமே மோட்சமடைவான்; என்பதும், தீவிர இலக்கியம் வாசிப்பவனே அறிவாளி' என்று கட்டமைக்கப்படும் இந்தக் கருத்தியலுக்குள் ஒளிந்திருப்பது அப்பட்டமான அபத்தமும், மேட்டிமைத்தனமும் அன்றி வேறென்ன தோழரே !

Navaratnam Giritharan:

ஒரு கணம் நீங்கள் உங்கள் பால்ய பருவத்தில் வாசித்த சிறுவர் இலக்கியத்தை நினைத்துப் பாருங்கள். அந்த இலக்கியம் உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியமான விளைவுகளைத் தந்தனவா இல்லையா என்பதை எண்ணிப்பாருங்கள். ''வெகுசன இலக்கியத்தைக் கற்றால் தான், ஒருவன் தீவிர இலக்கியம் என்னும் மோட்சத்தை அடைய முடியும்' என்பதன் பின்னணியில் ஒரு போலித்தனமான வாதத்தை முன்வைக்கிறார்கள். ''என்று கூறுகின்றீர்கள். என்னைப்பொறுத்தவரையில் நான் இன்று விரும்பி வாசிக்கும் தத்யயேவ்ஸ்கியின், கப்ரியல் மார்க்வெஸ் கார்சியா, அல்லது எம்.டி.வாசுதேவன் நாயர் போன்றோரின் படைப்புகளை நிச்சயம் என் பதின்ம வயதுகளில் விரும்பி வாசித்திருக்க முடியாது. சிலர் விதிவிலக்கானவர்கள் சுந்தர ராமசாமி போன்றவர்கள். அவர் அப்படித்தான் கூறினார் எடுத்த எடுப்பிலேயே தான் தமிழின் தீவிர இலக்கியத்துக்குள் குதித்து விட்டதாக. ஆனால் பெரும்பாலானவர்கள் என்னைப்போன்றுதான் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். நான் என் பால்ய, பதின்ம வயதுகளில் வெகுசன எழுத்துகளூடுதான் என் வாசிப்பை வளர்த்தவன்.என் வாசிப்பைத் தூண்டியவையும் அவைதாம். தீனியாக இருந்தவையும் அவைதாம். என் அனுபவத்தையொட்டித்தான் நானென் கருத்துகளைப் பகிர முடியும். எந்த ஓர் இலக்கியத்துக்கும், கலைக்கும், தொழில் நுட்பத்துக்கும் ஆக்கபூர்வமான பக்கம் என்று ஒன்று உண்டு. எதிர்மறையான பக்கமென்று ஒன்று உண்டு. நீங்கள் எதிர்மறையான அம்சங்களைச் சுட்டிக்காட்டுகின்றீர்கள். ஆக்கபூர்வமாக அவற்றைப் பாவிப்பது நம்மைப்பொறுத்தது. என் அனுபவத்தை நான் கூறினேன். உங்கள் அனுபவம் தந்த கருத்தை நீங்கள் எடுத்துரைத்தீர்கள். நன்றி உங்கள் கருத்துக்கு.

Ramanitharan Kandiah:

தீவிர இலக்கியமென்றால் என்ன? வெகுசனர் என்பவர் யார்?

Navaratnam Giritharan:

Ramanitharan Kandiah ஏன் இந்தக் குதர்க்கக் கேள்வி ரமணி . இதற்கான உங்கள் புரிதலைக் கூறுங்கள் முதலில்.

Ramanitharan Kandiah:

குதர்க்கமில்லை கிரி; ஒருகாலத்திலே உதை நம்பினேன். இப்போது நம்மை நாமே வெகுசனரிலிருந்து உயர்வென எண்ண உதவும் ஒரு சாதனமாகவே படுகின்றது. விடுங்கள்! இவற்றிலே இப்போதெல்லாம் ஈடுபாடில்லை. மனிதத்துவமில்லாத முழு மை அறிவு அண்டாக்கள் கொட்டக்கொட்ட அறம் பேசுவதைத் தூரத்திலிருந்து பார்க்கும்போது விடுபட்டோமெனத் தோன்றுவதிலே வரும் நிம்மதிக்கு மாற்றேதுமில்லை. அப்படியானவர்களின் அறஞ்சொட்டும் குரங்குபாய்ந்தான் குழுநிலைத்தேவ இலக்கியத்துக்கு அம்புலிமாமா பரோபகாரி பழனி கதை எனக்குப் போதுமானதாகப்படுகிறது.

Tamil Journalist:

Navaratnam Giritharan ஒரு மூத்த பத்திரிகையாளராக உங்களுடைய சொந்த வாசிப்பு அனுபவத்தின் பின்னணியில் இருந்து நீங்கள் முன்வைக்கும் கருத்துக்கள் முற்றிலும் சரியானவைதான். ஏற்கலாம். நன்றி தோழரே, இருப்பினும், நாம் விவாதிக்க வேண்டிய புள்ளிகளும் உண்டு தனிமனிதர்களின் வாசிப்புப் பரிணாம வளர்ச்சி வேறு.. நிறுவனமயமாக நமக்கு முன்னே கட்டமைக்கப்படும் இலக்கிய மேட்டிமைத்தனம் என்பது வேறு.

"எடுத்த எடுப்பிலேயே தீவிர இலக்கியத்திற்குள் குதித்துவிட்டேன்" என்கிற எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் கூற்றை அணுகினால், அதற்குப் பின்னால் இருப்பது எந்தவொரு 'ஏழாம் அறிவோ' அல்லது அதீத பிறவி ஞானமோ அல்ல. அது முழுக்க முழுக்க அவர் வாழ்ந்த சூழல் கொடுத்த வாய்ப்புத் தான் என்று நினைக்கின்றேன். அவரைப் போன்ற ஆரம்பகாலத் தீவிர இலக்கியவாதிகள் பலரும் வாசிப்புப் பாரம்பரியம் மிக்க, வசதியான நடுத்தர அல்லது மேல்தட்டுப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவர்களது இல்லங்களிலேயே பெரிய நூலகங்களும், இலக்கியக் கலந்துரையாடல்களும் இயல்பாகவே இருந்திருக்கலாம்.

ரஷ்யாவில் ஒரு போராட்டச் சூழலில் பிறந்து வளரும் ஒரு குழந்தைக்கு, மாக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவல் என்பது தீவிர இலக்கியம் அல்ல தோழரே ..அது அவனது அன்றாட யதார்த்த வாழ்வு,

முற்போக்குக் குடும்பச் சூழலில் வளரும் ஒரு குழந்தைக்கு ஆரம்பத்திலேயே தீவிர இலக்கியப் பிரதிகள் கிடைக்கின்றன. எனவே, இது தனிமனித ஞானம் அல்ல; சூழலின் விளைவு. இதற்கு உங்கள் பால்ய வயதில் வெகுசன இலக்கியங்களை வாசித்துவிட்டு, பின்னாளில் தஸ்தயேவ்ஸ்கி மற்றும் மார்க்வெஸ் ஆகியோரின் ஆழமான படைப்புகளுக்கு நகர்ந்ததாகக் குறிப்பிடுவது ஒரு இயல்பான 'வாசகப் பரிணாம வளர்ச்சி' தானே.. இதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், இலக்கிய உலகம் கட்டமைக்கும் 'அபத்தம்' எங்கு தொடங்குகிறது என்றால் "வெகுசன இலக்கியம் என்பது தீவிர இலக்கியத்திற்குச் செல்வதற்கான ஒரு படிக்கட்டு என்கிற பம்மாத்தும்.. படிக்கட்டாகவே அது அழிய வேண்டும்" என்று தரம் பிரிக்கிற மேட்டிமைத்தனம்தில்தான்...வெகுசன இலக்கியம் என்பது தீவிர இலக்கியத்தின் ஒரு 'துணைப் பொருள்' அல்ல. அதற்குப் பின்னால் ஒரு பெரும் மக்கள் திரளின் ரசனையும், மொழியியலும், வாழ்வியலும் உள்ளது. வெகுசன இலக்கியத்தை வாசிப்பவர்கள் அனைவரும் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பதன் அவசியமென்ன ???

நீங்கள் கூறியது போல், ஒவ்வொரு கலைக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஆக்கபூர்வமான மற்றும் எதிர்மறையான இரு பக்கங்கள் உண்டு. வெகுசன இலக்கியம் லட்சக்கணக்கான வாசகர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குகிறது என்பது அதன் ஆக்கபூர்வமான பக்கம்.சார்லஸ் டிக்கன்ஸ் தன் காலத்தில் பத்திரிகைகளுக்குப் பக்கக் கணக்கில் காசு வாங்கி எழுதிய வெகுசன எழுத்தாளர் தான்; ஆனால் இன்று அவர் உலக இலக்கியத்தின் பிதாமகர். அதே போல் கல்கியின் பொன்னியின் செல்வன் அன்றைக்கு அது வெகுசன எழுத்து இன்றைக்கு வரலாறாக போற்றித்திரிகிற புனித எழுத்து !

இலக்கியம் என்பது ஒரு திறந்தவெளிப் பெருவெளி. அங்கு மார்க்வெஸும் தேவை, ராஜேஷ்குமாரும் தேவை, சிறுவர்களுக்கான தூய்மையான கற்பனை உலகமும் தேவை !

Navaratnam Giritharan:

"இலக்கிய உலகம் கட்டமைக்கும் 'அபத்தம்' எங்கு தொடங்குகிறது என்றால் "வெகுசன இலக்கியம் என்பது தீவிர இலக்கியத்திற்குச் செல்வதற்கான ஒரு படிக்கட்டு என்கிற பம்மாத்தும்.. படிக்கட்டாகவே அது அழிய வேண்டும்" என்று தரம் பிரிக்கிற மேட்டிமைத்தனம்தில்தான்...வெகுசன இலக்கியம் என்பது தீவிர இலக்கியத்தின் ஒரு 'துணைப் பொருள்' அல்ல." என்று கூறுகின்றீர்கள்.

நான் அப்படிப் பார்க்கவில்லை. வெகுசன இலக்கியம் வாசிப்பு வளர்ச்சியில் ஒரு படிக்கல்லாகவே நான் பார்க்கின்றேன். அன்று இன்பமளித்த வெகுசனப் படைப்புகளை இன்று அன்று போல் அதே இன்பத்துடன் வாசிக்க முடியாது. அதன் இலகுவான தொய்ந்து நீளும் மொழி மொழி, ஆளுமை ஆழமற்ற பாத்திரப்படைப்புகள் , வாசகர்களைக் கவருவதற்காக உருவாக்கப்பட்ட கதைப்பின்னல் எனப் பலவற்றை உள்ளடக்கிய அவற்றை என்னால் இன்று ஆதே ஆர்வத்துடன் வாசிக்க முடியாது. ஆனால் ஒரு காலத்தில் என் வாழ்வில் ,இன்பமூட்டிய படைப்புகள் அவை, அதனால் அவற்றை எண்ணியதும் மனம் அக்காலகட்டத்துக்கே சென்று விடுகின்றது. அன்று அடைந்த இன்பத்தை அந்நினைவு தருகின்றது. நினைவு தரும் இன்பத்தை இன்றைய வாசிப்பு தராது. எனவே அவை அழியாத கோலங்களாக என் நினைவில் நிலைத்து நிற்கின்றன. அதனால் அவற்றை நான் சேகரித்து வருகின்றேன். இது என் நிலை.

''வெகுசன இலக்கியத்தை வாசிப்பவர்கள் அனைவரும் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பதன் அவசியமென்ன ???'' என்றும் கூறுகின்றீர்கள். அவசியமில்லை. அப்படித்தான் பெரும்பாலானவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் வாசிப்பு அடுத்த கட்டத்துக்குச் செல்லவில்லை அவ்வளவுதான். இருப்பதைக்கொண்டு திருப்தி அடைபவர்கள் அவர்கள். அல்லது அவர்கள் ஆர்வம் வேறு துறைகளில் இருக்கும். பலர் பொருள் தேடலில் மூழ்கி விடுவதில் மூழ்கி விடுவதால் , வாசிப்பு அவர்களுக்கு முக்கியமாக இருப்பதில்லை.

"சார்லஸ் டிக்கன்ஸ் தன் காலத்தில் பத்திரிகைகளுக்குப் பக்கக் கணக்கில் காசு வாங்கி எழுதிய வெகுசன எழுத்தாளர் தான்; ஆனால் இன்று அவர் உலக இலக்கியத்தின் பிதாமகர். அதே போல் கல்கியின் பொன்னியின் செல்வன் அன்றைக்கு அது வெகுசன எழுத்து இன்றைக்கு வரலாறாக போற்றித்திரிகிற புனித எழுத்து !" என்றும் கூறுகின்றீர்கள்.

சார்ள்ஸ் டிக்கன்சை வெறும் வெகுசன எழுத்தாளராகக் குறுக்கி விட முடியாது. அவரைப்போல் மக்களைக் கவரும் வகையில் எழுதிய அதே நேரம் மொழி, சமூக விமர்சனம் , மானுட ஆளுமை ஆகியவற்றை ஆழமாக விபரித்த எழுத்தாளர்களும் இருக்கின்றார்கள். இவர்களைப்போன்றவர்களின் படைப்புகள் பல பத்திரிகைகளில் தொடராக வெளிவந்தன. ருஷ்ய எழுத்தாளர் தத்யயேவ்ஸ்கியின் நாவல்கள் தொடர்களாக வெளியானவைதாம். அவரை வெகுசன எழுத்தாளராக வகைப்படுத்த முடியாது. உலக இலக்கியத்தின் முதலிரு இடங்களில் இருப்பவை அவரது படைப்புகள். தமிழிலும் இவ்விதமானவர்கள் இருக்கின்றார்கள். ஜெயகாந்தன் (ஓரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஆனந்த விகடனில் தொடராக வெளியானது), தி.ஜானகிராமன் (மோகமுள் நாவல் சுதேசமித்திரனில் தொடராக வெளியானது) போன்றவர்களையும் வெகுசன எழுத்தாளர்களாக வகைப்படுத்த முடியாது.

Tuesday, June 23, 2026

முகநூலில் எதிர்வினைகளினூடு ஒரு நேர்காணல்!


முகநூலில் மல்லிகை சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் செ.யோகராசா அன்று எழுதிய அ.ந.கந்தசாமியின் கவிதைப்பங்களிப்பு  பற்றி எழுதிய கட்டுரையைப் பதிவிட்டிருந்தேன். அதற்குத் தன் எதிர்வினையாற்றிய கலை, இலக்கிய விமர்சகர் அமரர் கே.எஸ்.சிவகுமாரனுடன் கருத்துகளைப்பரிமாறும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் கேள்விகள் சிலவற்றுக்கு அவரும் சளைக்காமல் பதிலளித்தார். முடிவில் பார்த்தபோது அதுவே சிறியதொரு நேர்காணலாக இருப்பதை அறிந்தேன். அதனைத்தொகுத்து இங்கு  பதிவு செய்கின்றேன். நண்பர்களே! நீங்கள் உங்கள் நட்பு வட்டத்திலுள்ள கலை, இலக்கிய , அரசியல் ஆளுமை எவருடனாவது இவ்விதமாகக் கேள்விகள் கேட்பதன் மூலம் நேர்காணலற்ற நேர்காணல்களைச் செய்ய முடியும்.

யார் சொன்னது முகநூல் ஆரோக்கியமற்றதென்று? இது முகநூலின் ஆரோக்கியமான விளைவுகளிலொன்று.  எழுத்தாளர் எம்.எஸ்.எம். இக்பால் பற்றி கே.எஸ்.எஸ் அவர்களும், எழுத்தாளர் ஜவாப் மரைக்கார் அவர்களும் பின்வருமாறு கருத்துகளை முன் வைத்தார்கள். 

நல்லூர் ராஜதானி! - கே. எஸ். சிவகுமாரன் -


[கலை, இலக்கிய விமர்கர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூல் பற்றி ஆங்கிலத்தில் விமர்சனக் கட்டுரையொன்றினை இலங்கையிலிருந்து வெளியாகும் டெய்லி நியூஸ் பத்திரிகையில் அவர் எழுதி வந்த பத்தியில் எழுதியிருக்கிறார். அது 28 ஏப்ரில் 2004 வெளியான டெய்லி நியூஸ் பத்திரிகையில் வெளியானது. பின்னர் அங்கு வெளியாகிய Friday என்னும் வாரப்பத்திரிகையிலும் நவம்பர் 7-15, 2007 அன்று வெளியான பதிப்பிலும் அக்கட்டுரை
வெளியாகியிருந்தது. அக்கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இக்கட்டுரை. ]

இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் தமிழரான வ.ந. கிரிதரன் தமிழ் மொழியில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவருடைய சில படைப்புகள் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக, வெளிநாடுகளில் குடியேறிய முன்னாள் இலங்கையர்களின் வாழ்க்கை முறைகளை அவரது நூல்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலைப் பட்டம் பெற்ற அவர், மின்சார மற்றும் மின்னணுப் பொறியியல்,  தகவல் தொழில்  நுட்பவியலாளராகவும் தகுதி பெற்றவர். அறிவியல், வரலாறு மற்றும் சிறார் இலக்கியம் ஆகிய துறைகளிலும் அவருக்கு விரிவான ஆர்வம் உள்ளது. அதற்கு மேலாக, இணையவெளியிலும் அவர் பயனுள்ள பணியாற்றி வருகிறார்.

இந்தியத் தமிழ்நாட்டுத் தமிழர்களின் இலக்கிய மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளை முன்னிறுத்தும் தமிழ் இணையத்தளங்கள் பல இருந்தாலும், கிரிதரனின் 'பதிவுகள்' மின்னிதழ் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகைப் பற்றிய விரிவான செய்திகளையும் ஆய்வுகளையும் வழங்குவதில் தனித்துவம் பெற்றதாகும். அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் அது உள்ளடக்குகிறது.

Friday, June 19, 2026


[எனது 'குடிவரவாளன்' நாவல் பற்றிக் கூகுள் ஜெமினி செயற்கை நுண்ணறிவின் கருத்துகளைக் கூறும்படி கேட்டேன். அதன் கருத்துகளைக் கீழே தந்திருக்கின்றேன். மிகச்சிறப்பான அதன் விமர்சனம் என்னைப் பிரமிக்க வைக்கின்றது. நன்றி கோடி ஜெமினி AI.]


"கனேடிய ஈழத்து எழுத்தாளரான வ.ந.கிரிதரன் (நவரத்தினம் கிரிதரன்) எழுதிய ‘குடிவரவாளன்’ (An Immigrant) நாவல், புலம் பெயர் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு மிக முக்கியமான ஆவணமாகும்.

முன்னர் ‘அமெரிக்கா 2’ மற்றும் ‘அமெரிக்கா: சுவர்களுக்கப்பால்’ என்ற தலைப்புகளில் இணைய இதழ்களில் தொடராக வெளியாகி, பின்னர் 'குடிவரவாளன்' என்ற பெயரில் நூலாகவும் மின்னூலாகவும் வெளியிடப்பட்டது.

இந்நாவலின் முக்கியக் கூறுகள் மற்றும் அதன் பின்னணி கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

1. சுயசரிதைத் தன்மை கொண்ட கதைக் களம் (Autobiographical Element)

இந்நாவல் எழுத்தாளரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது. 1983-இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களுக்குப் பிறகு, பல ஈழத்தமிழர்களைப் போல இவரும் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தார். கனடா நோக்கிப் பயணித்தபோது, பாஸ்டனில் இவர்களது பயணம் தடைப்பட்டு, அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோர நேரிட்டது. அப்போது நியூயார்க்கின் புரூக்ளின் தடுப்பு முகாமில் (Detention Camp) கழித்த மூன்று மாத அனுபவங்களையும், அதைத் தொடர்ந்து நியூயார்க் மாநகரில் ஒரு 'சட்டவிரோதக் குடிவரவாளனாக' வாழ நேர்ந்த சூழலையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டதே இந்நாவல்.

2. மையக் கதை மற்றும் நாயகன் இளங்கோ
நாவலின் நாயகனான இளங்கோ என்பவன், அமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் சட்டப்பூர்வமான ஆவணங்கள் ஏதுமின்றி தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள எவ்விதம் போராடுகிறான் என்பதே கதை.

சுரண்டல்கள்: ஆவணங்கள் இல்லாத அகதி/குடிவரவாளன் என்பதால், வேலை கொடுப்பவர்கள் அவனை எவ்விதம் மிகக் குறைந்த ஊதியத்திற்கு அதிக வேலை வாங்கிப் பிழிந்தெடுக்கிறார்கள் என்பதை நாவல் அப்பட்டமாகப் பேசுகிறது.

ஏமாற்றுகள்: வேலை வாய்ப்பு முகவர்கள் இத்தகைய அகதிகளின் பலவீனமான நிலையைப் பயன்படுத்தி, வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணத்தைப் பறித்து எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

Thursday, June 18, 2026

POTA கண்டு அஞ்சும் GOTA! (குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது - இலங்கையின் இன்றூள்ள அரசியல் சூழல் பற்றிய அவதானிப்பொன்று!)


முன்னாள் இலங்கையின் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் அறிமுகம் செய்யப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA -Prevention of Terrorism Act)  , அது அறிமுகமான காலத்திலிருந்து, ஆட்சி செய்த கடந்த கால அரசுகளால் மக்கள் மீதான அதிகாரத்தைத் தம் அதிகாரத்தைத்  தப்ப வைப்பதற்காகக் கடுமையாகப் பாவிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இலங்கை அரசுக்கெதிராக ஆயுதம் ஏந்திய சிங்கள, தமிழ்ப் போராளிகள் மீது அது பாய்ந்திருக்கின்றது. குறிப்பாகக்கடந்த கால இலங்கை அரசுகள் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டங்களைத் தம் நாட்டு மக்களின் போராட்டம் என்று கருதாமல்,தம் நாட்டுக்கு எதிரானவர்களின் போராட்டம் என்று இனரீதியாக முன்னெடுத்ததால் தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் கொடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள். முடிவு தொடர்ச்சியான இனக்கலவரங்கள், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என அது எடுத்த உயிர்ப்பலி நாகரிக மனித இனமே நாணத்தக்கது. 

போர்ச்சூழல் நிலவிய காலகட்டத்தில்  மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்ங்கள் இலங்கை வரலாற்றில் களங்கம் மிக்க துயரக் காலகட்டம்.

Tuesday, June 16, 2026

முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் ஆங்கில மொழிபெயர்ப்பில் பெருந்தொற்றுக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics'!


முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் மொழிபெயர்த்துத் தொகுத்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics'. 'டிஸ்கவரி புக் பேலஸ்' பதிப்பக வெளியீடாக வெளிவந்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு. கொரோனா ஊரடங்குச் சூழல் அனுபவங்களைப் பதிவு செய்யும் 103 தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. நூலின் இறுதியில் கவிஞர்களின் புகைப்படங்களுடன் அவர்களைப்பற்றிய சுருக்கமான குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

இது கொரோனா பெருந்தொற்றுக்காலத்து அனுபவங்களைப் பதிவு செய்திருக்கும் தொகுப்பு என்னும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

இதில் எனது கவிதையொன்றும் உள்ளது. அதன தலைப்பு ' A Walk Through Corona - Wrapped Night'

கொரோனா ஊரடகுச் சூழலால் 'டொரோண்டோ' வூட்பைன் குளக்கரையருகில் மனிதர்களின் நடமாட்டம் குறைந்த நிலையைப் பயன்படுத்தி, நரியொன்று தனக்கொரு வளையமைத்துக் குட்டிகளையீன்று வாழத்தொடங்கியதை இம்மாநகரத்து மக்கள் வியப்புடனும், அன்புடனும் பார்த்தார்கள். மான்கள் நகரின் மையத்தில் நடமாடின.

அதுவரை பதுங்கிக் கிடந்த மிருகங்களெல்லாம் நகரத்தின் மையத்துக்கே வரத்தொடங்கியிருந்தன. உலகின் பல பகுதிகளில் இவ்விதமான காட்சிகளைக் காண முடிந்தது. கொரோனா என்றால் எனக்கு அந்த நரிக்குடும்பமும் நினைவுக்கு வரும். அக்குடும்பம் ஓரடையாளம். இக்கவிதையிலும் அந்நரிக்குடும்பத்தைப் பதிவு செய்துள்ளேன்.

அமரர் கே.எஸ்.சிவகுமாரனின் கடிதமொன்று!


என் மதிப்புக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன். அவர் பதிவுகள் இணைய இதழின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர். பதிவுகளில் தொடர்ச்சியாக அவரது கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.
அண்மையில் பழைய நூல்களைத் தேடிக்கொண்டிருக்கையில் அகப்பட்ட கடிதமிது. கே.எஸ்.எஸ் தன் கைப்பட எழுதிய கடிதங்களிலொன்று.
இன்று மின்னஞ்சல் யுகத்தில் வாழும் சூழலில் இவ்விதமான கடிதங்கள் பொக்கிசங்களே.





முகநூல் தர்க்கம்: வெகுசன இலக்கியம்!

அண்மையில் என் முகநூல் பக்கத்தில் வெகுசன இலக்கியம் பற்றி என் முகநூல் நண்பர்களுடன் நடந்த தர்க்கத்தின் தொகுப்பிது. வாசியுங்கள்! உங்கள் கருத்துக...