Showing posts with label எழுத்தாளர் வ.ந.கிரிதரன். Show all posts
Showing posts with label எழுத்தாளர் வ.ந.கிரிதரன். Show all posts

Sunday, August 2, 2026

ஏ தாழ்ந்த தமிழகமே!


திமுகவின் மும்மூர்த்திகள்

திமுகவின் உதயத்தை  தமிழகத்தின் பொற்காலமாக நான் கருதுவேன். சமநீதி, சம உரிமை, பகுத்தறிவும், சுயமரியாதை இவற்றின் அடிப்படையில் , தமிழகத்தின் மக்களை எழுத்து, திரைப்படம், உரை மூலம் தட்டியெழுப்பியது திமுக. அறிஞர் அண்ணா தனது ஆங்கில, தமிழ்ப்புலமையினால் ஆணித்தரமான , தர்க்கச்சிறப்புள்ள உரைகளை ஆற்றினார். தனது எழுத்துகள் மூலம் மக்களை எழுச்சி கொள்ள வைத்தார். கலைஞர் கருணாநிதி தனது எழுத்தால், உரையால் மக்களைத் தட்டியெழுப்பினார். பராசக்தி போன்ற திரைப்படங்கள் ஆற்றிய சமுதாயப் பங்களிப்பை அவ்வளவு எளிதாக ஒதுக்கி விட முடியாது. அதே சமயம் எம்ஜிஆர் தனது திரைப்படங்கள் மூலம் திமுகவை மக்கள் மத்தியில் பதிய வைத்தார், அவர் படங்களில் இடம் பெறும் கறுப்பு சிவப்பு நிறங்கள், உதய சூரியன், அண்ணாவின் உருவப்பட்ம், திமுகவின் கொள்கையை வெளிப்படுத்தும் வசனங்கள் , பாடல்கள் , அத்துடன் தனது அரசியற் செயற்பாடுகள் மூலம் அவர் முக்கிய பங்காற்றினார். இவர்கள் மூவரையும் திமுகவின் மும்மூர்த்திகல் என்பேன். இவர்கள் அனைவரையும்  இவ்விதம் செயற்பட வைத்ததற்குக் காரணம் தந்தை பெரியாரின் சமூக, அரசியற் பங்களிப்பே என்பதையும் தவிர்க்க முடியாது.

Saturday, August 1, 2026

பதிவுகள் இணைய இதழ்: 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'!


பதிவுகள் இணைய இதழ்: 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'!


எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு , 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன், 2000ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்.காம்'. கதை, கட்டுரை, கவிதை, நாவல், ஆய்வு எனப் பல்வேறு பிரிவுகளில் ஆக்கங்களை இவ்விதழில் வாசிக்கலாம். பதிவுகள் இணைய இதழைப் பின்வரும் இணையத்தள முகவரிகளில் வாசிக்கலாம்:

1. http://www.geotamil.com
2. http://www.pathivukal.com
3. http://www.pathivugal.com

உங்கள் ஆக்கங்களையும், ஆக்கபூர்வமான கருத்துகளையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள்: ngiri2704@rogers.com / editor@pathivukal.com

Tuesday, July 28, 2026

வர்க்கவிடுதலையே வர்ண விடுதலை என்று நம்பியவர் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர்! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் அகஸ்தியர்

இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாளர்களில் ஒருவர் எழுத்தாளர் அகஸ்தியர்.  நாவல் , சிறுகதை, நாடகம், கட்டுரை, திறனாய்வு , நாட்டுக் கூத்து , மிருதங்க இசை எனப் பன்முகக் கலை, இலக்கிய  ஆளுமை மிக்க படைப்பாளி  அவர். அவர் தான் ஏற்றுக்கொண்ட  மார்க்சியச் சிந்தனையைத் தான் நம்பும் தத்துவமாக வரித்துக்கொண்டவர் அவர். அவர் படைத்தது மக்கள் இலக்கியம். சமூக, வர்க்கப்பிரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எழுந்த புரட்சிக் குரல் அவருடையது.  இவ்விடயத்தில் எவ்விதச் சமரசங்களும் அற்று ச் செயற்பட்டார்.  

ஆயுதங்களில் மிகச்சிறந்த ஆயுதம் எழுத்தாளரின் பேனா.  மக்களைச் சிந்திக்கவைக்க, எழுச்சி கொள்ள வைக்க அதனால்தான் முடியும். தாம் வாழும் சமுதாயத்தைச் சுட்டெரிக்கும் அநீதிகளுக்கெதிராக தம் எழுத்துகளைப் பாவிக்கும் எழுத்தாளர்கள் சமூக, அரசியற் போராளிகள். அவ்விதமான போராளிகளில் ஒருவர்தான் எழுத்தாளர் அகஸ்தியரும்.  தான் பிறந்த மண்ணில் நிலவிய வர்ண, வர்க்க வேறுபாடுகளால் பல்வகைகளிலும் துன்புறும் மக்கள் நிலைகண்டு அவர் பேசாமல், மெளனமாக இருக்கவில்லை. எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து  அந்திம காலம் வரையில் அவரது புரட்சிக் குரலை , எதிர்ப்புக் குரலை, எழச்சிக் குரலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தன அவரது எழுத்துகள். அநீதி கண்டு பொங்கியெழுந்த அவரது ஆரம்ப கால முயற்சிகள் கவிதைகளாகவே இருந்தன. 

Friday, July 24, 2026

கிடைக்கப் பெற்றேன்: எழுத்தாளர் நடேசனின் நான்கு நூல்கள்!


புகலிடத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் நடேசனின் பங்களிப்பு முக்கியமானது. நாவல், சிறுகதை, விமர்சனம், பயணக்கட்டுரை என இவரது பங்களிப்பு பன்முகத்தன்னை மிக்கது. எளிமையான சிறு வசனங்களால் ஆன செறிவான இவரது மொழி வாசிப்புக்கு இனிமையூட்டுவது. எழுத்து தவிர சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் இருப்பவர். பல்லாண்டுகளாக ஆஸ்திரேலியாவில் உதயம் என்னும் பத்திரிகையை நடத்தி வருபவர். 

பதிவுகள்  இணைய இதழில் இவரது பயணக்கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியாகின்றன. பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் வாய்க்காதவர்களுக்கு அந்நாடுகளுக்குச் சென்ற அனுபவங்களைத் தரும் கட்டுரைகள். இவரது, தமிழ் இலக்கியப் பரப்பில் பலர்தம் கவனத்துக்குள்ளாகிய 'அசோகனின் வைத்தியசாலை' நாவல் மற்றும் பயண நூலான 'நைல் நதிக்கரையில் ஆகியவை  பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளிவந்தவை என்பதும் , ' குறிப்பிடத்தக்கது.

இவரது 'நாலு கால் சுவடுகள்', 'பண்ணையில் ஒரு மிருகம்', 'தாத்தாவின் வீடு',  'வெளிகள் ஆயிரம்' நூல்கள் நேற்று எனக்குக் கிடைத்தன. அதற்காக நடேசனுக்கு நன்றி.

இனியுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்!


இலஙகை அழகான எழில் மிகு தீவு! பெளத்த, இந்து, முஸ்லிம், மலே எனப் பல்லின மக்களும் வாழும் இந்து சமுத்திரத்தின் சொர்க்கம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவு. கடல் வளம், நில வளம், இயற்கை வளம் மிக்கதொரு நாடு.
இந்த நாட்டுக்கு இனியொரு கறுப்பு ஜூலை வேண்டாம். முள்ளிவாய்க்கால் வேண்டாம். இதுவரை நடந்த துயரங்களால் துவண்டு போயிருக்கிறது நாடு. இவற்றிலிருந்து மீண்டு வருவது எதிர்கால வளத்துக்கு மிகவும் அவசியம்.
இதுவரை இனவாதத்தால் மூழ்கடித்த அரசியல்வாதிகள் மூலையில் கிடக்கும் சூழல். இன்றுள்ள அரசு, கடந்த கால அரசுகள் இதுவரை இந்நாட்டு மக்களுக்கு, குறிப்பாகச் சிறுபான்மையின மக்களுக்கு இழைத்த இனரீதியிலான அழிவுகளுக்கு, படுகொலைகளுக்கு மன்னிப்புக் கேட்பதன் மூலம் புதியதோர் அத்தியாயத்தைத் தொடங்கலாம்.
இதுவரை கால இனவாத அரசுகள் கடைப்பிடித்த கொள்கைகளை இனியும் கடைப்பிடிக்க மாட்டோம் எனப்பகிரங்கமாக உறுதி எடுப்பது அவசியம். காணி ஆக்கிரமிப்பு, அடக்குமுறைகளை மேற்கொள்ள மாட்டோம் என்று இன்றுள்ள அரசு உறுதி எடுக்கலாம். செம்மணிப் புதைகுழிகளுக்குள் புதைந்தவர்கள், முள்ளிவாய்க்காலில் மடிந்தவர்கள், இதுவரை காலமும் நாட்டில் ஏற்பட்ட இனவாத அடக்குமுறைகள், படுகொலைகள், உடமைகளை இழந்தவர்களுக்கு உரிய நீதி வழங்குவோம் உறுதி அளிக்கலாம் . இவற்றின் மூலம் நாட்டை நல்லதோர் எதிர்காலம் நோக்கித் திருப்பலாம்.

Tuesday, July 21, 2026

பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் வேறு! ஆண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் வேறு!


பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்

எழுத்தாளர்
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
அறுபதுகளில் ,எழுபதுகளில் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கியவர். இவரது சிறுகதைகள் கல்கியில் சிறப்புச் சிறுகதைகளாக வெளிவந்துள்ளன. இவரது நாவலான 'பொன் மாலைப்பொழுது 'தினமணிக்கதிரில் அறுபதுகளின் இறுதியில் அல்லது எழுபதுகளின் ஆரம்பத்தில் வெளியானது. எனக்கு மிகவும் பிடித்த நாவலாக அப்போது இருந்தது. அதில் வரும் நடுத்தர வயது சோமு இன்னும் நினைவில் நிற்கின்றார்.

16.10.1966 கல்கி சஞ்சிகையில் வெளியான பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் படத்துடன் கூடிய அவரது சிறுகதையான அக்கினிப் பிரவேசம் கதையின் பக்கத்தினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன் ஒரு தகவலுக்காக.

இதே பெயரில் ஆண் எழுத்தாளர் ஒருவரும் எழுதி வருகின்றார். அவரது பெயரில் இதயம் சஞ்சிகையில் பல பயணக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவர் வேறு அறுபதுகளில் நான் வாசித்த பெண் எழுத்தாளரான எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் வேறு,. அவர்தான் கல்கி வெள்ளிப் போட்டியில் சிறுகதைக்காகப் பரிசு பெற்றவர். இவர்,, ஆண் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம், அல்லர்.
பெண் எழுத்தாளரான எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் பற்றி அறிந்தவர்கள் தம் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Wednesday, July 15, 2026

மனத்தில் நிற்கும் விகடனின் மாவட்ட மலர்கள்!



என் பால்யப் பருவத்தில், என் வாசிப்பின் ஆரம்பப் படிக்கட்டுகளில் தமிழக வெகுசனச் சஞ்சிகைகள் ஆற்றிய பங்கு முக்கியமானது. என் வாசிப்பார்வத்தைத் தூண்டியவை.

அக்காலகட்டத்தில் ஆனந்த விகடன் மாதந்தோறும் மாவட்ட மலர்களை வெளியிட்டது. நான் விரும்பி வாசித்த மாவட்ட மலர்கள் அவை.

எழுத்தாளர் சேவற்கொடியோனின் 'பேசும் பொற் சித்திரமே'


எழுத்தாளர் சேவற்கொடியோனின் 'பேசும் பொற் சித்திரமே' அக்காலகட்டத்தில் நான் விரும்பி வாசித்த விகடன்  தொடர்கதை.  கணவர், மனைவியர்க்கிடையில் ஏற்படும் சந்தேகத்தின் பாதிப்புகளை விவரிக்கும் தொடர்கதை. ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியாகிய தொடர்நாவல்.

Tuesday, July 14, 2026

எழுத்தாளர் பூமணி 

கரிசல் மண்ணின் உயிர்த்துடிப்புடன் கூடிய மொழியில் யதார்த்தவாதப் படைப்புகளைத் தந்தவர் பூமணி !

சில நாட்களுக்கு முன்புதான் இங்குள்ள டொரோண்டோ நூலகக் கிளையொன்றிலிருந்து எழுத்தாளர் பூமணியின் ஐந்து நாவல்களை உள்ளடங்கிய 'பூமணி நாவல்கள்'  தொகுப்பினை, நற்றிணை பதிப்பகம் வெளியிட்டது, இரவல் வாங்கி வந்திருந்தேன். நேற்று அவரது மறைவு செய்தி வருகிறது, ஆழ்ந்த இரங்கல்.

தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானதோர் ஆளுமை. யதார்த்தவாதப் பாணியில், கரிசல் மொழியினை உயிரோட்டம் மிக்கவையாகப் புனையப்பட்டவை இவரது புனைவுகள். 

இந்திய மத்திய அரசின் சாகித்திய அமைப்பின் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றவர். தனது 'கருவேலம் பூக்கள்' கவிதையைத் திரைப்படமாக்கி இயக்கியவர். 'அசுரன்' திரைப்பட மூலக் கதையும் இவருடையதுதான். அது இவரது 'வெக்கை' நாவலின் தழுவல்.

நாவல், சிறுகதை, கவிதை , திரைப்படம் எனப் பன்முக ஆளுமையாளர். தன் வாழ்நாளில் தன் படைப்புகளுக்கான உரிய அங்கீகாரத்தைப் பெற்ற இவர் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்ற அறிவியல் துறைப்பட்டதாரியும் கூட.

Thursday, July 9, 2026

பல்கலைக்கழகங்களும், பாலியல் வன்முறைகளும்!


அண்மைக்காலமாகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களால் புரியப்படும் பாலியல் வன்முறைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துச் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.
இதில் எவ்வளவு தூரம் உண்மை, பொய் என்பது பூரண விசாரணைகளின் பின்புதான் தெரிய வரும்.

 அண்மையில் கூடப் பேராதனைப் பல்கலைககழகத்தில் பேராசிரியர் ஒருவர் இவ்விடயத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்பட்ட செய்திகளை அறிந்திருக்கின்றோம்.

பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அதிகாரம் தலைவிரித்தாடும் அனைத்துத் துறைகளிலும் இந்நிலை இருப்பதை அறிந்திருக்கின்றோம். அரச உதவிகளில் தங்கியிருக்கும் பெண்கள் குறிப்பாக விதவைகள் மீது அவ்வுதவிகளை வழங்குவதற்குப் பொறுப்பான அரசியல் அதிகாரிகளால் பாலியல் ரீதியிலான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதைச் செய்திகள் வாயிலாக அறிந்திருக்கின்றோம். அரசியல்வாதிகளால் இவ்வித அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்ததை அறிந்திருக்கின்றோம். 

ஆனந்த விகடன் வெளியிட்ட 'கென்னடியின் கதை'!


ஜோன்.எஃப்.கென்னடி மறைந்த காலகட்டத்தில் ஆனந்த விகடன் அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக வெளியிட்டிருந்தது. அந்த நூலின் அட்டைப்படம்தான் இது. எழுதியவர் மயன். மயன் அக்காலத்தில் விகடன் ஆசிரியர்களில் ஒருவராகவும், பிரபலமான விகடனின்  தொடர்கதையாசிரியராகவுமிருந்த எழுத்தாளர்  மணியன் என்று ஊகிக்கின்றேன்.

இந்த  நூலின் படத்தைத் தற்செயலாக இணையத்தில் பார்த்ததும் பால்யப் பருவத்து நினைவுகள் சில சிறகடித்தன.  நான் முதன் முதலில் ஜான் எஃப். கென்னடி பற்றி வாசித்த நூல் இந்த நூல். யாழ் புகையிரத நிலையத்திலிருந்த புத்தகக் கடையில் தொங்கிக்கொண்டிருந்த நூல்களில்  என்னைக் கவர்ந்த நூல்.  இத்தனைக்கும் கென்னடியைப் பற்றி எதுவுமே அந்த வயதில் தெரியாமல் இருந்த போதிலும், அந்த வசீகரமான முகத்தின் ஈர்ப்புக் காரணமாக அம்மாவை வற்புறுத்தி வாங்கிப்படித்தேன். 

Tuesday, July 7, 2026

ஆவணப்படுத்தும் 'இணைய ஆவணக்காப்பகம்' (Archive.Org)'


எழுத்தாளர்களே! நீங்கள் கட்டாயம் பாவிக்க வேண்டிய இணையத்தளம் 'இணைய ஆவணக்காப்பகம்' தளம். இதற்கான இணையத்தள முகவரி - https://www.archive.org

இங்கு நீங்கள் உங்கள்  படைப்புகளை ஆவணப்படுத்தலாம். உங்கள் இணையத்தளத்தை ஆவணப்படுத்தலாம்.  உதாரணத்துக்குக் கீழுள்ள இணைப்பைப் பாருங்கள். இதில் நான் என் படைப்புகள் பலவற்றை, பதிவுகள் இணையத்தளத்தில் வெளியான படைப்புகள் பலவற்றை ஆவணப்படுத்தி வைத்துள்ளேன். இத்தளத்தின் இன்னுமொரு சிறப்பு - இதில் உங்கள் இணையத்தளத்தை ஆவணப்படுத்தலாம். அது  மட்டுமல்ல , உங்களிடமுள்ள பல் வகையான டிஜிட்டல் பிரதிகளையும் ஆவணப்படுத்தலாம். எல்லாமே இலவசம். இத்தளத்துக்குச் சென்று உங்களுக்கென்று கணக்கொன்றை உருவாக்குங்கள். அதன் பின்னர் உங்கள் படைப்புகளைப் பதிவேற்றம் செய்து பாதுகாக்கலாம். 

Monday, July 6, 2026

தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள்' நாவல் பற்றி... - வ.ந.கிரிதரன் -


[கணையாழி சஞ்சிகையின் ஜூலை 2026 இதழ் , புதிய வடிவமைப்புடன் வெளியாகியுள்ளது. புதிய வடிவமைப்பு வாசிப்பை இன்னும் இலகுவாக்குகின்றது.
இம்மாத இதழில் 'தாய்வீடு' பத்திரிகையில் தொடராக வெளியாகி, அதனால் வெளியிடப்பட்ட எழுத்தாளர் தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள் நாவல் பற்றி..' என்னும் அந்நாவல் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. தேவகாந்தனின் முக்கியமான நாவல்களில் ஒன்று 'சாம்பரில் திரண்ட 'சாம்பரில் திரண்ட சொற்கள்' ] 

தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள்' நாவல் பற்றி...

எழுத்தாளர் தேவகாந்தனின் அண்மையில் வெளியான நாவல்.  'தாய்வீடு' பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவல் 'தாய்வீடு' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. சிறப்பான வடிவமைப்புடன், ஓவியர் ஜீவாவின் அழகான ஓவியங்களுடன் வெளிவந்துள்ள நூல். ஒரு காலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான  தொடர்கதைகளின் வெற்றிக்கு அவற்றில் வெளியான ஓவியங்களும் ஒரு காரணம். 'பொன்னியின் செல்வன்' நாவலில் எம்மையெல்லாம் கவர்ந்த பாத்திரமான  வாணர் குலத்து வீரனான வல்லவரையன் வந்தியத்தேவனை .  அவனை உயிர்த்துடிப்புடன் வரைந்த் ஓவியர்களான மணியம், வினு, மணியம் செல்வன், பத்மவாசன் ஆகியோரின் ஓவியங்கள் வாயிலாகத்தான்  நினைவில் வைத்திருக்கின்றோம்.  'கடல்புறா' நாவலின் நாயகன் இளையபல்லவன் என்றழைக்கப்படும் கருணாகரத்தொண்டைமானை ஓவியர் லதாவின் ஓவியங்கள் மூலம்தான் நினைவில் வைத்திருக்கின்றோம்.  'ராணிமுத்து' வெளியீடாக வெளிவந்த மாத நாவல்களும் ஓவியங்களை உள்ளடக்கியே வெளிவந்தன. நாவல்களின் ஓவியங்களும் முக்கியமானவை. மேற்படி நாவலும் இவ்விதமே ஓவியங்களுடன் வெளியாகியிருப்பது வடிவமைப்புக்கு வனப்பைத்தருவதுடன், வாசிப்புக்கும் வளத்தைத்தருகின்றது..

Tuesday, June 30, 2026

பறத்தலை நிறுத்திய வானம்பாடி: கவிஞர் புவியரசு மறைந்தார்!

கவிஞர்  புவியரசு!

வானம்பாடி கவிதை இயக்கத்தின் பிதாமகன் என அழைக்கப்படுபவரும், கவிஞரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான கவிஞர் புவியரசு அவர்கள் தனது தொண்ணூற்றாறாவது வயதில் மறைந்த செய்தியினை அறிந்தேன். மூப்பின் காரணமாக மறைந்த மார்க்சியவாதியான கவிஞர் புவியரசுவின் மறைவு  தவிர்க்க முடியாதது என்றாலும் பேரிழப்பே. அவர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

அவர் நினைவாக , முகநூலில் கலை,இலக்கிய விமர்சகரும், கவிஞருமான இந்திரன் அவர்கள் பகிர்ந்திருந்த கவியரசர் புவியரசு பற்றிய ஆவணத்திரைப்படத்துக்கான இணைய இணைப்பை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன் - https://youtu.be/voUc3CTs4lI

அத்துடன்  கவிஞர் புவியரசு பற்றிய விக்கிபீடியாக் குறிப்பையும், கவிஞரின் மொழிபெயர்ப்பில் வெளியான கரமசோவ் சகோதரர்கள் பற்றி நான் முன்பு எழுதியிருந்த குறிப்பினையும் பகிர்ந்து கொள்கின்றேன்.

வெகுசன இலக்கியம்: உமாசந்திரனின் முழுநிலா!


எழுத்தாளர் உமாசந்திரனின் முள்ளும் மலரும் நாவலைப் பலரும் அறிந்திருப்பர். அது கல்கி சஞ்சிகையின் வெள்ளி விழா நாவல் போட்டியில் முதற் பரிசு பெற்ற நாவல். அத்துடன் ரஜனிகாந்த் நடிப்பில், மகேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படமும் கூட.
அவரது இன்னுமொரு நாவல் எனக்கு மிகவும் பிடித்த நாவல். என் பால்யப் பருவத்து வாசிப்பில் அதற்கும் முக்கிய இடமுண்டு. அது ஆனந்த விகடனில் தொடராக வெளியான 'முழு நிலா' நாவல். ஓவியர் கோபுலுவின் மனத்தை ஈர்க்கும் ஓவியங்களுடன் வெளியான நாவல் , அது வெளிவந்த காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த தொடர்கதைகளில் ஒன்று.
அதில் வரும் உப்பிலி, நளினா, தாமு பாத்திரங்கள் மறக்க முடியாத பாத்திரங்கள்.

முழுநிலா நாவலின் சில பக்கங்களை இங்கு காண்கின்றீர்கள்.  

Tuesday, June 23, 2026

முகநூலில் எதிர்வினைகளினூடு ஒரு நேர்காணல்!


முகநூலில் மல்லிகை சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் செ.யோகராசா அன்று எழுதிய அ.ந.கந்தசாமியின் கவிதைப்பங்களிப்பு  பற்றி எழுதிய கட்டுரையைப் பதிவிட்டிருந்தேன். அதற்குத் தன் எதிர்வினையாற்றிய கலை, இலக்கிய விமர்சகர் அமரர் கே.எஸ்.சிவகுமாரனுடன் கருத்துகளைப்பரிமாறும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் கேள்விகள் சிலவற்றுக்கு அவரும் சளைக்காமல் பதிலளித்தார். முடிவில் பார்த்தபோது அதுவே சிறியதொரு நேர்காணலாக இருப்பதை அறிந்தேன். அதனைத்தொகுத்து இங்கு  பதிவு செய்கின்றேன். நண்பர்களே! நீங்கள் உங்கள் நட்பு வட்டத்திலுள்ள கலை, இலக்கிய , அரசியல் ஆளுமை எவருடனாவது இவ்விதமாகக் கேள்விகள் கேட்பதன் மூலம் நேர்காணலற்ற நேர்காணல்களைச் செய்ய முடியும்.

யார் சொன்னது முகநூல் ஆரோக்கியமற்றதென்று? இது முகநூலின் ஆரோக்கியமான விளைவுகளிலொன்று.  எழுத்தாளர் எம்.எஸ்.எம். இக்பால் பற்றி கே.எஸ்.எஸ் அவர்களும், எழுத்தாளர் ஜவாப் மரைக்கார் அவர்களும் பின்வருமாறு கருத்துகளை முன் வைத்தார்கள். 

Tuesday, June 16, 2026

அமரர் கே.எஸ்.சிவகுமாரனின் கடிதமொன்று!


என் மதிப்புக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன். அவர் பதிவுகள் இணைய இதழின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர். பதிவுகளில் தொடர்ச்சியாக அவரது கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.
அண்மையில் பழைய நூல்களைத் தேடிக்கொண்டிருக்கையில் அகப்பட்ட கடிதமிது. கே.எஸ்.எஸ் தன் கைப்பட எழுதிய கடிதங்களிலொன்று.
இன்று மின்னஞ்சல் யுகத்தில் வாழும் சூழலில் இவ்விதமான கடிதங்கள் பொக்கிசங்களே.





Tuesday, June 9, 2026

கலாமோகனின் 'காதல் கதைகளும், சில காதலிகளும்' சிறுகதை பற்றி.....

 எழுத்தாளர் க.கலாமோகன் 

கடந்தவாரம் ஸ்கார்பரோவில் நடைபெற்ற 'துவாரம்'  சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டில் உரையாற்றியவர்கள் தொகுப்பிலுள்ள 'காதல் கதைகளும், சில காதலிகளும்' சிறுகதை ப்ற்றிக் கூறிய கருத்துகளைக் கேட்டபோது  அவர்களில் எவருமே அக்கதையைச் சரியான கோணத்தில் புரிந்து கொண்டார்களா என்றொரு கேள்வி என் மனத்தில் எழந்தது. 

அந்தக் கதை காதல் கதைகள் எழுதும் வயோதிப் எழுத்தாளர் ஒருவர் பற்றிய கதை சொல்லியின் விபரிப்பு. அதன்படி அக்கதை பற்றி உரையாடியவர்கள் அவ்வயோதிப எழுத்தாளின் பல்வேறு காதலிகளைப்பற்றியும், இவ்விதமான சமூகப் பிறழ்வுகள் அன்றாடம் நடப்பவைதாம் என்றும், ஆனால் அவை பொதுவாகச் சமூகம் அறியாதவகையில் மறைக்கப்பட்டு விடுகின்றன என்றும் குறிப்பிட்டார்கள். ஆனால் உண்மையில் அந்தக் கதை என்ன கூறுகின்றது? அவ்வெழுத்தாளரின் காதலிகளைப் பற்றி யார் கூறுகின்றார்கள்? அவற்றில் உள்ள உண்மைத் தன்மை என்ன? இவை போன்ற விபரங்களை அவர்கள் அச்சிறுகதையூடு  ஆராய்ந்தார்களா? இவை பற்றிய கட்டுடைப்புகளே இச்சிறு பதிவு.

Sunday, June 7, 2026

''மஞ்சு வந்து , கொஞ்சுகின்ற மலை அழகு! (மேற்குத் தொடர்ச்சி மலை)'' - எழுத்தாளர் ஶ்ரீராம் விக்னேஷ்!


''மஞ்சு வந்து , கொஞ்சுகின்ற மலை அழகு! (மேற்குத் தொடர்ச்சி மலை)'' என்று குறிப்பிட்டு,  என் பால்யப் பருவத்து நண்பரும், ஶ்ரீராம் விக்னேஷ் என்னும் பெயரில் தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்டவருமான நண்பர் வவுனியா விக்கி இவ்வழகிய மேகங்களில் தாலாட்டில் மெய்ம்மறந்திருக்கும் மேற்குத்  தொடர்ச்சி மலையினை தன் அலைபேசிக் கமராவுக்குள் அகப்படுத்தி  அனுப்பியிருந்தார்.

நெஞ்சைக் கொள்ளும் இயற்கையின் வனப்பில் நானும் மெய்ம்மறந்தேன். விக்கி சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட.  அதனை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் இவை. 

எழுத்தாளர் ஶ்ரீராம் விக்னேஷ் (வவுனியா விக்கி) -


இன்று நண்பருக்குப் பிறந்தநாளும் கூட. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விக்கி. இயற்கையின் தாலாட்டில் , மேகங்களின் அரவணைப்பில் தன்னை மெய்ம்மறந்து கிடக்கும் மலைத்தொடரின் அழகில் எம்மையும் மெய்ம்மறக்க வைத்ததற்கு நன்றியும் கூட.

மேற்குத்தொடர் மலையின் ஒரு பகுதியான கொடைக்கானல் எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் 'பொன் விலங்கு' நாவலை நினைவூட்டுகின்றது. உண்மையில் நாவலில் அவர் கொடைக்கானல் என்னும் பெயரைப் பாவித்திருக்க மாட்டார், மல்லிக்கைப்பந்தல் என்றே குறிப்பிட்டிருப்பார். ஆனால் அதனை அவர் கொடைக்கானலுக்காகவே பாவித்திருக்க வேண்டுமென்று உணர்வதுண்டு. ஏனென்றால் மல்லிக்கைப்பந்தலும் மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ள நகரம். 

விசுவநாதன் டீச்சர் (திருமதி தவமணி விசுவநாதன்) மறைவு!


யாழ்  இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் ஆசிரியையும், முன்னாள் யாழ் மேயர் திரு.இராசா விசுவநாதனின் மனைவியுமான விசுவநாதன் டீச்சர் மறைந்ததாக வாட்ஸ் அப்பில் என் சகோதரிகளில் ஒருவர் தகவல் அனுப்பியிருந்தார்.

விசுவநாதன் டீச்சர் அம்மாவின் (நவரத்தினம் டீச்சர்) சிநேகிதிகளில் என் நினைவுக்கு உடனடியாக வரும் இருவரில் ஒருவர். மற்றவர் முன்னாள் யாழ்  இந்த மகளிர் கல்லூரி அதிபரான   இராமநாதன் டீச்சர்.

என் அப்பாவின் மறைவின்போது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள வந்திருந்தார். அம்மாவுடன் அழுதபடி நின்ற தோற்றம் மனக்கண்ணில் தெரிகிறது. 

அம்மாவின் பால்யப் பருவத்திலிருந்து பின்னர் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையாக எனத்  தொடர்ந்த நட்பு தொடர்ந்து நீடித்தது. 

வ.ந.கிரிதரன் பாடல்: சமூக,ஊடகப் போராளிகளே! ஒரு வேண்டுகோள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.

வ.ந.கிரிதரன் பாடல்: சமூக,ஊடகப் போராளிகளே! ஒரு வேண்டுகோள்!  வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.   டிஜிட்டல் ஓவியம் - கூகுள் ந...