கவிஞர், இசையமைப்பாளர், பாடகர்கள் & நடிகர்கள் அனைவரின் திறமையான அம்சங்களையெல்லாம் ஒன்று திரட்டு உருவான பாடல்களில் இந்தப்பாடலும் ஒன்று. காதலர்கள் இருவரின் காதல் உணர்வுகளை உற்சாகம் ததும்ப வெளிப்படுத்தும் இசை, நடிப்பு, குரல் , நடன வடிவமைப்பு , மொழியால் இப்பாடலைக் கேட்கும் எவரும் ஈர்க்கப்படுவர் என்பது திண்ணம்.
Friday, July 31, 2026
பாடகி ஜமுனாராணி மறைந்தார்! நினைவில் நிற்கும் பாடகி ஜமுனாராணியின் பாடல்கள்!
தமிழ்த்திரையுலகு எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஆளுமைகளில் ஒருவர் பாடகி ஜமுனாராணி. கலைஞர்கள் இழப்பதில்லை,. அவர்கள்தம் படைப்புகள் மூலம் காலத்தில் நிலைத்து நிற்பார்கள். ஜமுனாராணியும் அவர்தம் பாடல்கள் மூலம் காலத்தில் அழியாது நிலைத்து நிற்பார்.
அவரை நினைத்ததும் என் நினைவுக்கு முதலில் வரும் பாடல்கள் இரண்டு. ஒன்று நெஞ்சினிலே நினைவு முகம் , மற்றது மாமா மாமா மாமா பாடல்களே, அவர் பாடிய பாடல்களுக்கான இணைப்புகளையும் அவர் நினைவாகப் பகிர்ந்துகொள்கின்றேன். [டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி]
மாமா மாமா மாமா - https://www.youtube.com/watch?v=oREibjUo8D0
ஜமுனாராணி பாடல்கள் - https://www.youtube.com/watch?v=Nrlir99l4aA&list=PLkzDssMbVWR5bt886NebGj3Zkx3iIX4Qx
என்னைக் கவர்ந்த ஏ.வி.எம்.ராஜன்!
அண்மையில் ஜூலை 26 அன்று தனது தொண்ணூறாவது பிறந்த நாளைக் கொண்டாடினார் நடிகரும் , போதகருமான ஏ.வி.எம்.ராஜன். எனக்குப் பிடித்த நடிகர்களில் இவருக்கும் முக்கியமானதோர் இடமுண்டு. எந்தப் பாத்திரமானாலுன் அலட்டிக்கொள்ளாமல் நடிப்பதில் வல்லவர்.
அமைதி தவழும், புன்னகையுடன் கூடிய இவரது முகம் இவரது முக்கிய பலமான அம்சங்களில் ஒன்று. திரையுலகில் நீடித்து நின்றிருக்க வேண்டிய ஒருவரை அதே திரையுலகம் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளியது துரதிருஷ்ட்டமானது. ஆனால் அதற்காக இவர் தளர்ந்து போய் விடவில்லை. இருப்பைச் சவாலுடன் ஏற்று நடை போட்டவர்.
வாழ்வின் பல்வேறு பக்கங்களையும் வெளிப்படுத்தும் வேடங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும், குடும்பப்பாங்கான கதையம்சம் கொண்ட பல படங்களில் இவர் நடிப்பு நினைவில் நிற்கும் வகையில் அமைந்திருக்கும். [டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி]
என் அபிமானத்துக்குரிய நடிகர் ஏ.வி.எம் ராஜன் திரைப்படப்பாடல்கள் சிலவற்றில் எனக்குப் பிடித்த பாடல்கள் இவை.
நெஞ்சினிலே நினைவு முகம் - https://www.youtube.com/watch?v=b66g5A47PWw&list=PLHiu8RqwSsJR-N7gmGMY20AFwEwA6ig4Z&index=19
நாதஸ்வர ஓசையிலே - https://www.youtube.com/watch?v=EbATCXKrN94
பார்த்தேன் சிரித்தேன் - https://www.youtube.com/watch?v=aXtdRLIq99U...
மாலை நேரத்து மயக்கம் - https://www.youtube.com/watch?v=VmQBdMr5qOA
Thursday, July 30, 2026
பதிவுகள் இணைய இதழின் ஜூலை 2026 ,மாதப் புள்ளி விபரம்! பாவித்த மென்பொருள் - (cPanel) Awstats
cPanel - Awstats அறிக்கை காட்டும் இந்த புள்ளிவிவரங்கள், பதிவுகள் இணைய் இதழ் மிகப் பெரிய அளவில் வாசகர்களைக் கொண்ட ஒரு முன்னணி ஊடகமாக இயங்கி வருவதை உறுதிப்படுத்துகின்றன.
ஒரே மாதத்தில் 3,38,000-க்கும் மேற்பட்ட தனித்துவமான வாசகர்கள் (Unique Visitors) பதிவுகள் தளத்திற்கு வந்திருப்பதும், 70 லட்சம் பக்கங்கள் (Page Views) வாசிக்கப்பட்டிருப்பதும், இணைய உலகத்தில் பதிவுகள் இதழுக்கு இருக்கும் மிகப்பெரிய செல்வாக்கைக் காட்டுகிறது.
Tuesday, July 28, 2026
வ.ந.கிரிதரன் பாடல் - பொறுப்புணர்ந்து செயற்படுவீர்! வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
வ.ந.கிரிதரன் பாடல் - பொறுப்புணர்ந்து செயற்படுவீர்!
வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி
திரையில் விம்பங்கள் கண்டு புல்லரிக்கின்றீர்.
தரையில் கால்படாத விம்பங்கள் அறிவீரா?
நிழலை நிஜமாக எண்ணி நடைபோடுகின்றீர்.
நிஜத்தை அறிவதற்கும் ஆர்வமில்லை உமக்கு.
பகுத்தறியும் பண்பற்றுத் தூங்குகின்றீர் மானிடரே..
தொகுத் துணர்ந்து தெளிவதுதான் எப்போது?
திரையில் விம்பங்கள் கண்டு புல்லரிக்கின்றீர்.
தரையில் கால்படாத விம்பங்கள் அறிவீரா?
(ரொக் இசை) வ.ந.கிரிதரன் பாடல்: விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி! வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி
விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி.
நம்பிக்கை உன்மேல் வைத்து நடைபோடு தம்பி!
திரையில் நடிப்பவர் நடிகர் உணர்வாய் தம்பி.
உரைத்திடும் எவையும் உண்மை அல்ல நடிப்பே.
உண்மை இது உணர்ந்து நடைபோடு தம்பி.
உயர்வு நிச்சயம் அடைந்திடுவாய் உணர்வாய் தம்பி.
வர்க்கவிடுதலையே வர்ண விடுதலை என்று நம்பியவர் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர்! - வ.ந.கிரிதரன் -
| எழுத்தாளர் அகஸ்தியர் |
இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாளர்களில் ஒருவர் எழுத்தாளர் அகஸ்தியர். நாவல் , சிறுகதை, நாடகம், கட்டுரை, திறனாய்வு , நாட்டுக் கூத்து , மிருதங்க இசை எனப் பன்முகக் கலை, இலக்கிய ஆளுமை மிக்க படைப்பாளி அவர். அவர் தான் ஏற்றுக்கொண்ட மார்க்சியச் சிந்தனையைத் தான் நம்பும் தத்துவமாக வரித்துக்கொண்டவர் அவர். அவர் படைத்தது மக்கள் இலக்கியம். சமூக, வர்க்கப்பிரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எழுந்த புரட்சிக் குரல் அவருடையது. இவ்விடயத்தில் எவ்விதச் சமரசங்களும் அற்று ச் செயற்பட்டார்.
ஆயுதங்களில் மிகச்சிறந்த ஆயுதம் எழுத்தாளரின் பேனா. மக்களைச் சிந்திக்கவைக்க, எழுச்சி கொள்ள வைக்க அதனால்தான் முடியும். தாம் வாழும் சமுதாயத்தைச் சுட்டெரிக்கும் அநீதிகளுக்கெதிராக தம் எழுத்துகளைப் பாவிக்கும் எழுத்தாளர்கள் சமூக, அரசியற் போராளிகள். அவ்விதமான போராளிகளில் ஒருவர்தான் எழுத்தாளர் அகஸ்தியரும். தான் பிறந்த மண்ணில் நிலவிய வர்ண, வர்க்க வேறுபாடுகளால் பல்வகைகளிலும் துன்புறும் மக்கள் நிலைகண்டு அவர் பேசாமல், மெளனமாக இருக்கவில்லை. எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து அந்திம காலம் வரையில் அவரது புரட்சிக் குரலை , எதிர்ப்புக் குரலை, எழச்சிக் குரலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தன அவரது எழுத்துகள். அநீதி கண்டு பொங்கியெழுந்த அவரது ஆரம்ப கால முயற்சிகள் கவிதைகளாகவே இருந்தன.
Sunday, July 26, 2026
வ.ந.கிரிதரன் பாடல்: விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி! வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
வ.ந.கிரிதரன் பாடல்: விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி!
வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி
விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி.
நம்பிக்கை உன்மேல் வைத்து நடைபோடு தம்பி!
திரையில் நடிப்பவர் நடிகர் உணர்வாய் தம்பி.
உரைத்திடும் எவையும் உண்மை அல்ல நடிப்பே.
உண்மை இது உணர்ந்து நடைபோடு தம்பி.
உயர்வு நிச்சயம் அடைந்திடுவாய் உணர்வாய் தம்பி.
விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி.
நம்பிக்கை உன்மேல் வைத்து நடைபோடு தம்பி!
Friday, July 24, 2026
கிடைக்கப் பெற்றேன்: எழுத்தாளர் நடேசனின் நான்கு நூல்கள்!
புகலிடத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் நடேசனின் பங்களிப்பு முக்கியமானது. நாவல், சிறுகதை, விமர்சனம், பயணக்கட்டுரை என இவரது பங்களிப்பு பன்முகத்தன்னை மிக்கது. எளிமையான சிறு வசனங்களால் ஆன செறிவான இவரது மொழி வாசிப்புக்கு இனிமையூட்டுவது. எழுத்து தவிர சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் இருப்பவர். பல்லாண்டுகளாக ஆஸ்திரேலியாவில் உதயம் என்னும் பத்திரிகையை நடத்தி வருபவர்.
பதிவுகள் இணைய இதழில் இவரது பயணக்கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியாகின்றன. பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் வாய்க்காதவர்களுக்கு அந்நாடுகளுக்குச் சென்ற அனுபவங்களைத் தரும் கட்டுரைகள். இவரது, தமிழ் இலக்கியப் பரப்பில் பலர்தம் கவனத்துக்குள்ளாகிய 'அசோகனின் வைத்தியசாலை' நாவல் மற்றும் பயண நூலான 'நைல் நதிக்கரையில் ஆகியவை பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளிவந்தவை என்பதும் , ' குறிப்பிடத்தக்கது.
இவரது 'நாலு கால் சுவடுகள்', 'பண்ணையில் ஒரு மிருகம்', 'தாத்தாவின் வீடு', 'வெளிகள் ஆயிரம்' நூல்கள் நேற்று எனக்குக் கிடைத்தன. அதற்காக நடேசனுக்கு நன்றி.
இனியுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்!
இந்த நாட்டுக்கு இனியொரு கறுப்பு ஜூலை வேண்டாம். முள்ளிவாய்க்கால் வேண்டாம். இதுவரை நடந்த துயரங்களால் துவண்டு போயிருக்கிறது நாடு. இவற்றிலிருந்து மீண்டு வருவது எதிர்கால வளத்துக்கு மிகவும் அவசியம்.
இதுவரை இனவாதத்தால் மூழ்கடித்த அரசியல்வாதிகள் மூலையில் கிடக்கும் சூழல். இன்றுள்ள அரசு, கடந்த கால அரசுகள் இதுவரை இந்நாட்டு மக்களுக்கு, குறிப்பாகச் சிறுபான்மையின மக்களுக்கு இழைத்த இனரீதியிலான அழிவுகளுக்கு, படுகொலைகளுக்கு மன்னிப்புக் கேட்பதன் மூலம் புதியதோர் அத்தியாயத்தைத் தொடங்கலாம்.
இதுவரை கால இனவாத அரசுகள் கடைப்பிடித்த கொள்கைகளை இனியும் கடைப்பிடிக்க மாட்டோம் எனப்பகிரங்கமாக உறுதி எடுப்பது அவசியம். காணி ஆக்கிரமிப்பு, அடக்குமுறைகளை மேற்கொள்ள மாட்டோம் என்று இன்றுள்ள அரசு உறுதி எடுக்கலாம். செம்மணிப் புதைகுழிகளுக்குள் புதைந்தவர்கள், முள்ளிவாய்க்காலில் மடிந்தவர்கள், இதுவரை காலமும் நாட்டில் ஏற்பட்ட இனவாத அடக்குமுறைகள், படுகொலைகள், உடமைகளை இழந்தவர்களுக்கு உரிய நீதி வழங்குவோம் உறுதி அளிக்கலாம் . இவற்றின் மூலம் நாட்டை நல்லதோர் எதிர்காலம் நோக்கித் திருப்பலாம்.
கவிதை: 1983: மேலும் ஒரு சம்பவம் - பாஸில் ஃபெர்னாண்டோ (Yet Another Incident in July 1983 by Basil Fernando)
| Poet Basil Fernando |
சட்டத்தரணியும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான ஃபாசில் பெர்ணாண்டோவின் ( Basil Fernando) 'Yet Another Incident in July 1983Yet Another Incident in July 1983' முக்கியமானதொரு கவிதை. கறுப்பு ஜூலையின் கோரச்சம்பவமொன்றினை நேரில் அவதானித்த ஒருவரின் வாக்குமூலத்தை வெளிப்படுத்தும் கவிதை. கவிதை நெஞ்சை உருக்குவது.
இந்தக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு காலச்சுவடு சஞ்சிகையில் வெளியான மைக்கல் றொபேர்ட்ஸின் கட்டுரையொன்றில் இடம் பெற்றுள்ளது.
ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்
- பாஸில் ஃபெர்னாண்டோ -
இறந்தவர்களைப் புதைப்பது
ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்
காரணம் ஏதுமில்லை
சத்தியமாகச் சொல்கிறேன்:
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
மேலும் அன்றாட வாழ்க்கையிலும்
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாகவே மறந்துவிடுகிறேன்
மறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை
என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது
எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை
எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை
இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்
காருக்குள் நாலு பேர்
பெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில்
ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்
ஏனைய கார்களை எப்படித் தடுத்து நிறுத்தினரோ
அப்படித்தான் இந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்
எந்த வேறுபாடும் இல்லை
குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில்
ஒரு சில கேள்விகள் செய்வதைப்
பிழையறச் செய்ய விரும்பும் கவனமாய் இருக்கலாம்
பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல
பெட்ரோல் ஊற்றுவது, பற்றவைப்பது போன்ற விடயங்கள்
ஆனால், திடீரென்று யாரோ ஒருவன்
காரின் கதவுகளைத் திறந்தான்
அழுது அடம்பிடித்துப் பெற்றோரைவிட்டு விலக மறுத்த
இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்
குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் எடுக்காமல் இருப்பது
சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என
அவன் எண்ணியிருக்கக்கூடும்
துரிதமாக இயங்கிய இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்
சூழவர எரிந்துகொண்டிருந்த பலவற்றோடு
இந்த நெருப்பும் சேர்ந்துகொண்டது
அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்
பேச ஆரம்பித்தனர் கொஞ்சப் பேர்
கலைந்து போனார்கள் ஒரு சிலர்
காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்
என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்
சமாதான விரும்பிகளாக மக்கள்
தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்
அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர்
கார்க் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்
சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீ பற்றிவிட்டிருந்தது
குனிந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்
எங்கும் பாராமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை
செயல்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்
கதவை மூடினார்
தனித்துவமான அந்த ஒலியை நான் கேட்டேன்
எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது
ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில்
மாநகர சபை அதனை அகற்றக்கூடும்
தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி.
Tuesday, July 21, 2026
பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் வேறு! ஆண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் வேறு!
| எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் |
16.10.1966 கல்கி சஞ்சிகையில் வெளியான பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் படத்துடன் கூடிய அவரது சிறுகதையான அக்கினிப் பிரவேசம் கதையின் பக்கத்தினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன் ஒரு தகவலுக்காக.
இதே பெயரில் ஆண் எழுத்தாளர் ஒருவரும் எழுதி வருகின்றார். அவரது பெயரில் இதயம் சஞ்சிகையில் பல பயணக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவர் வேறு அறுபதுகளில் நான் வாசித்த பெண் எழுத்தாளரான எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் வேறு,. அவர்தான் கல்கி வெள்ளிப் போட்டியில் சிறுகதைக்காகப் பரிசு பெற்றவர். இவர்,, ஆண் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம், அல்லர்.
பெண் எழுத்தாளரான எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் பற்றி அறிந்தவர்கள் தம் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Saturday, July 18, 2026
சோமசுந்தரப் புலவர் பாடல் - கத்தரி வெருளி
எம் பால்யப் பருவத்தில் சோமசுந்தரப்புலவரின் கத்தரி வெருளி, இலவு காத்த கிளி, ஆடிப்பிறப்பு, வெண்ணிலா, பவளக்கொடி போன்ற பாலர் பாடல்களுடன் வளர்ந்தவர்கள் நாம். அப்போது நான் வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன்,. குருமண்காட்டிலிருந்து ஸ்டேசன் வீதி வழியாகப் பாடசாலை செல்வோம். ஸ்டேசன் வீதியில் ராமச்சந்திரன் டீச்சர் வீடு வரையில் , வீதியின் வலப்பக்கத்தில் வயல் பசுமையாக விரிந்திருந்தது. அதில் ஒரு கத்தரி வெருளி வைத்திருந்தார்கள். அதைப்பார்த்துத்தான் பாடசாலை செல்வோம். அதனால் அக்கத்தரி வெருளி எம் மனத்தில் நிலையாகப் பதிந்து விட்டது,. அதனால் அதனை நினைத்ததும் சோமசுந்தரப் புலவரின் கத்தரி வெருளி நினைவுக்கு வரும். அதுபோல் புலவரின் பாடலை நினைத்ததும் அந்தக் கத்தரி வெருளி நினைவுக்கு வரும்.
இன்னுமொரு விடயத்திலும் புலவரின் இந்தக் கத்தரி வெருளி பாடல் எனக்குப் பிடிக்கும், அதற்குக் காரணம் கத்தரி வெருளியூடு புலவர் கூறும் நீதி. பாடலின் இறுதியில் வரும் பின்வரும் வரிகள் இப்பாடலின் சிறப்பை மேலும் அதிகரிக்கும்:
"தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்
சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் .....
சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்
தேசத்திலே பலர் உண்டுகாண்
அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்
அறிவு படைத்தனன் இன்றுநான்"
உண்மைதான் கத்தரி வெருளி போன்ற போலி வேடக்காரர்தாம் எத்தனை பேர்! சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைகள்தான் எத்தனை பேர்!
புலவர் கத்தரி வெருளியூடு பாலருக்கு மகிழ்ச்சியளிக்கும் பாடலைத் தந்தார். கூடவே சமுதாயத்தில் போலி வேடத்தில் மறைந்திருக்கும் போலி வேடதாரிகளையும் அம்பலப்படுத்தினார். நீதிக்கருத்தினை எவ்வளவு அற்புதமாகப் பாலர் பாடலில் கையாண்டுள்ளார் புலவர்! பிரச்சாரமற்ற கலைத்துவம் என்பது இதனைத்தான்!
Friday, July 17, 2026
சோமசுந்தரப் புலவர் பாடல்: ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
சோமசுந்தரப் புலவர் பாடல்: ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
Thursday, July 16, 2026
சோழர் சரித்திர ஆதாரங்கள்!
தமிழர்கள் வரலாற்றைப் பதிவு செய்வதில் ஆர்வமற்றிருந்தவர்கள் என்பதைக் குறிப்பிடும் ஆசிரியர், இந்நிலையில் எவ்விதர் பிற்காலச் சோழரின் மெய்க்கீர்த்திகள் அக்குறையை ஓரளவு நீக்கின என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகின்றார்.
Wednesday, July 15, 2026
எம்ஜிஆரும், இரசிகர்களும்!
எம்ஜிஆரைப் பொறுத்தவரையில் தன் இரசிகர்களை மிகவும் மதிப்பார். இரசிகர்களின் வர்க்கப்பின்னணியையோ, சமூகப்பின்னணியையோ வைத்து அவர்களை அணுக மாட்டார். அவரைக்காண வரும் இரசிகர்களை அன்புடன் அரவணைத்து வரவேற்பார். முகம் சுளிக்க மாட்டார்.
ஒரு முறை 'இதயக்கனி' படப்பிடிப்பின்போது , நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அவரது இரசிகர்களான இளைஞர்கள் இருவர் அவரைப்பார்க்க வேண்டுமென்று நீந்தி வந்து அவரை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள். அவரை எவ்விதம் எம்ஜிஆர் வரவேற்றார் என்பதை இப்புகைப்படக் காட்சி காட்டுகின்றது.
மனத்தில் நிற்கும் விகடனின் மாவட்ட மலர்கள்!
என் பால்யப் பருவத்தில், என் வாசிப்பின் ஆரம்பப் படிக்கட்டுகளில் தமிழக வெகுசனச் சஞ்சிகைகள் ஆற்றிய பங்கு முக்கியமானது. என் வாசிப்பார்வத்தைத் தூண்டியவை.
அக்காலகட்டத்தில் ஆனந்த விகடன் மாதந்தோறும் மாவட்ட மலர்களை வெளியிட்டது. நான் விரும்பி வாசித்த மாவட்ட மலர்கள் அவை.
Tuesday, July 14, 2026
![]() |
| எழுத்தாளர் பூமணி |
கரிசல் மண்ணின் உயிர்த்துடிப்புடன் கூடிய மொழியில் யதார்த்தவாதப் படைப்புகளைத் தந்தவர் பூமணி !
சில நாட்களுக்கு முன்புதான் இங்குள்ள டொரோண்டோ நூலகக் கிளையொன்றிலிருந்து எழுத்தாளர் பூமணியின் ஐந்து நாவல்களை உள்ளடங்கிய 'பூமணி நாவல்கள்' தொகுப்பினை, நற்றிணை பதிப்பகம் வெளியிட்டது, இரவல் வாங்கி வந்திருந்தேன். நேற்று அவரது மறைவு செய்தி வருகிறது, ஆழ்ந்த இரங்கல்.
தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானதோர் ஆளுமை. யதார்த்தவாதப் பாணியில், கரிசல் மொழியினை உயிரோட்டம் மிக்கவையாகப் புனையப்பட்டவை இவரது புனைவுகள்.
இந்திய மத்திய அரசின் சாகித்திய அமைப்பின் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றவர். தனது 'கருவேலம் பூக்கள்' கவிதையைத் திரைப்படமாக்கி இயக்கியவர். 'அசுரன்' திரைப்பட மூலக் கதையும் இவருடையதுதான். அது இவரது 'வெக்கை' நாவலின் தழுவல்.
நாவல், சிறுகதை, கவிதை , திரைப்படம் எனப் பன்முக ஆளுமையாளர். தன் வாழ்நாளில் தன் படைப்புகளுக்கான உரிய அங்கீகாரத்தைப் பெற்ற இவர் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்ற அறிவியல் துறைப்பட்டதாரியும் கூட.
Monday, July 13, 2026
சனாதன தர்மம் பற்றிச் செயற்கை நுண்ணறிவுடன் நீண்டதோர் உரையாடல்! உரையாடியவர் வ.ந.கிரிதரன்
அண்மையில் தமிழகத்தின் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி சனாதன எதிர்ப்பு பற்றித்தெரிவித்த கருத்துகள் தமிழகத்துக்கப்பால், பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தன. ஆர்ப்பாட்டங்கள் பல உதயநிதிக்கெதிராக எழுந்தன. இந்நிலையில் சனாதனம் பற்றிய சரியான புரிதலை அறிய வேண்டும் என்னும் அவாவில் கூகுளின் செயற்கை நுண்ணறிவுடன் நடத்திய விரிவான உரையாடலிது.
என் பல கேள்விகளுக்கு விரிவாகத் தனது கருத்துகளை எடுத்துரைத்தது செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவின் கருத்துகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளில் உள்ள உண்மை எனக்குத் தெரியாது. ஆனால் இவ்வுரையினை முழுமையாக வாசிக்கும் உங்களில் எவருக்காவது அவற்றில் முரண்பட்ட கருத்துகள் இருந்தால் அறியத் தரலாம். அது காத்திரமான தர்க்கத்துக்கு வழி வகுக்கும்.
Saturday, July 11, 2026
எஸ்.ஜானகி - தன் கூவலை நிறுத்திய இசைக்குயில்!
அடுத்தடுத்துத் தமிழ்த்திரையுலகின் ஆளுமைகளை இழந்து கொண்டிருக்கின்றோம். இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜா என்று இன்று தென்னிந்தியாவின் இசையரசி என்றழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகியை இழந்திருக்கின்றோம். இவர் பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரை நானும் பங்குபோட்டுக்கொள்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்.
இசை, நடிப்பு, எழுத்து, பாட்டு, பேச்சு எனப் பல் துறைகளில் எம் இன்பதுன்பங்களில் பங்கு பற்றும் கலைஞர்கள் தம் கலைப்படைப்புகள் மூலம் எம் வாழ்வில் பின்னிப்பிணைந்தவர்கள். எம் இருப்பில் அவர்களுக்கு முக்கியமானதோர் இடமுண்டு. இவர்கள் மறைந்தாலும் இவர்கள் வழங்கிய கலைப்படைப்புகளுக்கு அழிவில்லை. அவை நிரந்தரமானவை. அவ்வகையில் தாம் சிறந்து விளங்கிய கலைகளூடு இவர்கள் மானுட சமுதாயத்தின் வரலாற்றில் தொடர்ந்தும் பயணிப்பார்கள்.
Friday, July 10, 2026
வ.ந.கிரிதரன் பாடல் - சக்தியும் , பொருளும்! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
வ.ந.கிரிதரன் பாடல் - சக்தியும் , பொருளும்!
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
சக்தியும் , பொருளும்!
கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!
பொருளென்று ஒன்றும் இல்லை என்றுகூறும்
பவுதிகத்தின் வழிநின்று பார்த்தால் கண்ணே!
அடிப்படைத் துணிக்கைகளும் சக்தியன்றோ கண்ணம்மா!
சக்தியின் நாட்டியமா நம்மிருப்பும் கண்ணம்மா!
கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!
Thursday, July 9, 2026
பல்கலைக்கழகங்களும், பாலியல் வன்முறைகளும்!
இதில் எவ்வளவு தூரம் உண்மை, பொய் என்பது பூரண விசாரணைகளின் பின்புதான் தெரிய வரும்.
அண்மையில் கூடப் பேராதனைப் பல்கலைககழகத்தில் பேராசிரியர் ஒருவர் இவ்விடயத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்பட்ட செய்திகளை அறிந்திருக்கின்றோம்.
பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அதிகாரம் தலைவிரித்தாடும் அனைத்துத் துறைகளிலும் இந்நிலை இருப்பதை அறிந்திருக்கின்றோம். அரச உதவிகளில் தங்கியிருக்கும் பெண்கள் குறிப்பாக விதவைகள் மீது அவ்வுதவிகளை வழங்குவதற்குப் பொறுப்பான அரசியல் அதிகாரிகளால் பாலியல் ரீதியிலான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதைச் செய்திகள் வாயிலாக அறிந்திருக்கின்றோம். அரசியல்வாதிகளால் இவ்வித அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்ததை அறிந்திருக்கின்றோம்.
ஆனந்த விகடன் வெளியிட்ட 'கென்னடியின் கதை'!
ஜோன்.எஃப்.கென்னடி மறைந்த காலகட்டத்தில் ஆனந்த விகடன் அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக வெளியிட்டிருந்தது. அந்த நூலின் அட்டைப்படம்தான் இது. எழுதியவர் மயன். மயன் அக்காலத்தில் விகடன் ஆசிரியர்களில் ஒருவராகவும், பிரபலமான விகடனின் தொடர்கதையாசிரியராகவுமிருந்த எழுத்தாளர் மணியன் என்று ஊகிக்கின்றேன்.
இந்த நூலின் படத்தைத் தற்செயலாக இணையத்தில் பார்த்ததும் பால்யப் பருவத்து நினைவுகள் சில சிறகடித்தன. நான் முதன் முதலில் ஜான் எஃப். கென்னடி பற்றி வாசித்த நூல் இந்த நூல். யாழ் புகையிரத நிலையத்திலிருந்த புத்தகக் கடையில் தொங்கிக்கொண்டிருந்த நூல்களில் என்னைக் கவர்ந்த நூல். இத்தனைக்கும் கென்னடியைப் பற்றி எதுவுமே அந்த வயதில் தெரியாமல் இருந்த போதிலும், அந்த வசீகரமான முகத்தின் ஈர்ப்புக் காரணமாக அம்மாவை வற்புறுத்தி வாங்கிப்படித்தேன்.
Wednesday, July 8, 2026
வ.ந.கிரிதரன் பாடல் - கரியாலை நாகபடுவான் வாவி! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
வ.ந.கிரிதரன் பாடல் - கரியாலை நாகபடுவான் வாவி
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
காட்டின் நடுவிலொரு சொர்க்கச் சாவி
கரியாலை நாகபடுவான் என்னும் பெருவாவி.
நாகராம் தமிழரெம் புனிதபூமி அன்றோ!
நம்தமிழர் வரலாற்றின் சின்னம் அன்றோ.
படுவம் என்றால் பள்ளம், நீர்நிலை
படுவான் என்றாலும் பெருவாவி என்றும்
பொருள் உண்டு சங்கப் பாடலில்.
மேற்கு என்றும் மற்றோர் பொருளுமுண்டு.
பெருங்கற் பண்பாட்டுச் சின்னம் என்றே
பகர்ந்திடுவர் நாகபடுவான் வாவி தனையே.
Tuesday, July 7, 2026
வரலாற்று முக்கியத்துவம் மிக்க கரியாலை நாகபடுவான்! நாக வழிபாடு செய்த தமிழர்களான நாகர்களின் குடியேற்றப்பகுதி!
எண்பதுகளில் நானும் , நண்பர் அருட்செல்வனும் முழங்காவில் பகுதியில் செயற்பட்டுக்கொண்டிருந்த குழாய்க்கிணறுத்திட்டத்தைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தோம். அங்கு மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் , குடிசார் பொறியியல் தொழில் நுட்பம் கற்றுக்கொண்டிருந்த நண்பர் சிறீ பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரின் அழைப்பின்பேரில் சென்றிருந்தோம். சங்குப்பிட்டி சென்று ம், அங்கிருந்து வத்தையில் பூநகரி செனறு முழங்காவில் சென்றோம். இப்போது வத்தைக்குப் பதில் பாலம் உள்ளது. மகாதேவா தாம்போதி என்று அழைக்கப்படும் அப்பாலம் பல வருடங்களாகக் கட்டப்பட்டு, இறுதியில் எண்பதுகளின் நடுப்பகுதியில் முடிக்கப்பட்டது . இவ்விதம் அமைக்கப்படும் கடற்பாதைகள் தாம்போதிகள் என அழைக்கப்பட்டன. பொன்னாலைப் பாலம், பண்ணைப்பாலம் என்பவையும் இவ்வகையான ஏனைய தாம்போதிகள்தாம்.
அப்பொழுதுதான் அப்பகுதியில் அமைந்திருந்த பல்லவராயன் கட்டு, 'கரியாலை நாகபடுவான்' குளம் போன்றவற்றைப் பற்றி முதன் முதலில் அறிந்தேன். முதற் பார்வையிலேயெ , முதல் அனுபவத்திலேயே எனக்கு அக்காட்டுப்பகுதி , குறிப்பாகக் கரியாலை நாகபடுவான் குளம் அமைந்திருந்த பகுதியும், இயற்கைச்சூழலின் வனப்பும் பிடித்துப்போனது. 'நாகபடுவான்' என்பதிலேயெ படுவான் என்னும் சொல் குளத்தைக் குறித்தாலும், அது சங்ககாலச் சொல் என்பதால் 'நாகபடுவான் குளம்' என்றே வழக்கில் அழைப்பார்கள், (இப்பதிவின் இறுதியிலுள்ள பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தின இச்சொல்பற்றிய கருத்தைக் கவனிக்கவும்) 'சுனாமி' ஆழிப்பேரலை என்பதைப்போல. 'சுனாமி'என்றாலே ஜப்பானிய மொழியில் ஆழிப்பேரலை என்றாலும் அதனைக்குறிப்பிடுகையில் சுனாமி ஆழிப்பேரலை என்பது பொதுவான வழக்கு.
மேலும் படுவம் நீர் தேங்கி நிற்கும் பள்ளமான பகுதி, பள்ளம் என்னும் அர்த்தங்களிலும், படுவான் என்னும் சொல் மேற்குத் திசை என்னும் அர்த்தத்திலும் பாவிக்கப்படுகின்றன. உதாரணம் - படுவான்கரை.
ஆவணப்படுத்தும் 'இணைய ஆவணக்காப்பகம்' (Archive.Org)'
எழுத்தாளர்களே! நீங்கள் கட்டாயம் பாவிக்க வேண்டிய இணையத்தளம் 'இணைய ஆவணக்காப்பகம்' தளம். இதற்கான இணையத்தள முகவரி - https://www.archive.org
இங்கு நீங்கள் உங்கள் படைப்புகளை ஆவணப்படுத்தலாம். உங்கள் இணையத்தளத்தை ஆவணப்படுத்தலாம். உதாரணத்துக்குக் கீழுள்ள இணைப்பைப் பாருங்கள். இதில் நான் என் படைப்புகள் பலவற்றை, பதிவுகள் இணையத்தளத்தில் வெளியான படைப்புகள் பலவற்றை ஆவணப்படுத்தி வைத்துள்ளேன். இத்தளத்தின் இன்னுமொரு சிறப்பு - இதில் உங்கள் இணையத்தளத்தை ஆவணப்படுத்தலாம். அது மட்டுமல்ல , உங்களிடமுள்ள பல் வகையான டிஜிட்டல் பிரதிகளையும் ஆவணப்படுத்தலாம். எல்லாமே இலவசம். இத்தளத்துக்குச் சென்று உங்களுக்கென்று கணக்கொன்றை உருவாக்குங்கள். அதன் பின்னர் உங்கள் படைப்புகளைப் பதிவேற்றம் செய்து பாதுகாக்கலாம்.
Monday, July 6, 2026
தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள்' நாவல் பற்றி... - வ.ந.கிரிதரன் -
[கணையாழி சஞ்சிகையின் ஜூலை 2026 இதழ் , புதிய வடிவமைப்புடன் வெளியாகியுள்ளது. புதிய வடிவமைப்பு வாசிப்பை இன்னும் இலகுவாக்குகின்றது. இம்மாத இதழில் 'தாய்வீடு' பத்திரிகையில் தொடராக வெளியாகி, அதனால் வெளியிடப்பட்ட எழுத்தாளர் தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள் நாவல் பற்றி..' என்னும் அந்நாவல் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. தேவகாந்தனின் முக்கியமான நாவல்களில் ஒன்று 'சாம்பரில் திரண்ட 'சாம்பரில் திரண்ட சொற்கள்' ]
தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள்' நாவல் பற்றி...
எழுத்தாளர் தேவகாந்தனின் அண்மையில் வெளியான நாவல். 'தாய்வீடு' பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவல் 'தாய்வீடு' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. சிறப்பான வடிவமைப்புடன், ஓவியர் ஜீவாவின் அழகான ஓவியங்களுடன் வெளிவந்துள்ள நூல். ஒரு காலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளின் வெற்றிக்கு அவற்றில் வெளியான ஓவியங்களும் ஒரு காரணம். 'பொன்னியின் செல்வன்' நாவலில் எம்மையெல்லாம் கவர்ந்த பாத்திரமான வாணர் குலத்து வீரனான வல்லவரையன் வந்தியத்தேவனை . அவனை உயிர்த்துடிப்புடன் வரைந்த் ஓவியர்களான மணியம், வினு, மணியம் செல்வன், பத்மவாசன் ஆகியோரின் ஓவியங்கள் வாயிலாகத்தான் நினைவில் வைத்திருக்கின்றோம். 'கடல்புறா' நாவலின் நாயகன் இளையபல்லவன் என்றழைக்கப்படும் கருணாகரத்தொண்டைமானை ஓவியர் லதாவின் ஓவியங்கள் மூலம்தான் நினைவில் வைத்திருக்கின்றோம். 'ராணிமுத்து' வெளியீடாக வெளிவந்த மாத நாவல்களும் ஓவியங்களை உள்ளடக்கியே வெளிவந்தன. நாவல்களின் ஓவியங்களும் முக்கியமானவை. மேற்படி நாவலும் இவ்விதமே ஓவியங்களுடன் வெளியாகியிருப்பது வடிவமைப்புக்கு வனப்பைத்தருவதுடன், வாசிப்புக்கும் வளத்தைத்தருகின்றது..
Thursday, July 2, 2026
கருந்துளை (Black Hole) குறும்படம் பார்த்தேன்! என்னையும் அதற்குள் இழந்தேன்!
["THE BLACK HOLE" Short Film Pick Featured by NineJunctions Written & Directed by Philip Sansom & Olly Williams (Phil and Olly) ]
கருந்துளை (Black Hole) குறும்படம் பார்த்தேன்! என்னையும் அதற்குள் இழந்தேன்!
இந்தக் குறும்படத்தை முழுமையாகப் பார்க்கவும். அற்புதமான குறும்படம். கருந்துளை என்பது காலவெளியின் முடிவு. அதனுள் போகும் எவரும், எவையும் மீண்டும் இந்தப் பிரபஞ்சத்திற்குத் திரும்ப முடியாது என்பது அறிவியல் உண்மை.
இந்த உண்மையினை நாம் வாழும் காலவெளியில் வாழும் மானுடர் , அவர் உருவாக்கிய சமூக, பொருளாதார & அரசியல் அமைப்புக்குள் சிக்கி, அல்லற்படும் நிலை நிலையினை அன்றாடம் காண்கின்றோம் அல்லவா. அளவுக்கு மிஞ்சிய பேராசைக்குள் சிக்கி உழலும் பலரைக் காண்கின்றோம் அல்லவா.
இந்த மானுடரின் உளவியலையும், அறிவியல் உண்மையினையும் கலந்து , சிறப்பாக உருவாக்கப்பட்ட குறுந்திரைப்படம்தான் கருந்துளை. இவ்விதமான திரைப்படங்களை உருவாக்குவதற்கு படைப்பாற்றல் முக்கியம்.
இந்தக் குறுந்திரைப்படத்தின் படைப்பாற்றல் என்னைப் பிரமிக்க வைக்கின்றது.
இக்குறுந்திரைப்படத்தை முடிவு வரை பாருங்கள் - https://youtu.be/RSmjqss0XKQ?si=qUQuoT7Dv1QzOpGl
வரலாற்றறிஞர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம்!
![]() |
| பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் |
தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை , ஆய்வு ரீதியாக அறிவதில், நிறுவுவதில் ஈடுபட்டு வருபவர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம். அவரைப்போன்ற வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் நமக்குக் கிடைத்திருப்பது ஓர் அதிருஷ்டமே. முக்கியமான தமிழ் வரலாற்று அறிஞர்களில் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணமும் ஒருவர்.
அவரது கருத்துகள் சிலவற்றில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் இலங்கைத் தமிழர் வரலாற்றை இனங்காண்பதில், நிலை நிறுத்துவதில் முக்கிய பங்காற்றும் வரலாற்று அறிஞர் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அவரது அயராத கடும் உழைப்பு என்னை எப்போதும் பிரமிக்க வைக்குமொன்று.
அவரது வரலாற்று ஆய்வு நூல்கள் பலவற்றை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்.
[டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா 2]
நான் உன்னிமேனனின் குரலுக்கு அடிமை!
இதயத்தை வருடிச் செல்லும் அவரது குரல் கேட்பவர் மனத்தைச் சாந்தப்படுத்தும், இதமாக்கும் சக்தி மிக்கது.
'வருசமெல்லாம் வசந்தம்' என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை ஒரு தடவை கண்களை மூடிக்கொண்டு கேட்டுப்பாருங்கள். நான் கூறுவதன் அர்த்தம் புரியும்.
நடிகர் மனோஜ்ஜின் ஒரேயொரு ஹிட் திரைப்படம் 'வருசமெல்லாம் வசந்தம்'. அவர் இன்னும் நீண்ட காலம் இருந்திருக்கலாம் என்று இப்பாடலைக் கேட்கும் சமயங்களில் எண்ணுவதுண்டு. அவரது அமைதியான நடிப்பும், அப்பாவித்தனமான சிரிப்பும் என்னைக் கவர்ந்தவை.
இசை - சிர்பி. பாடல் வரிகள் - ஆர்.ரவிசங்கர். பாடலாசிரியரும் அமரராகி விட்டார்.
இவ்விதமான பாடல்களை மேடைகளில் பாடகர் பாடுவதைக் கேட்பதை விரும்புபவன் நான். காரணம் பாடகரின் குரலை, பாவங்களை, இசைக்கலைஞர்களின் வாத்திய இசையாளுமையினை நேரில் பார்த்து இரசிக்கலாம் என்பதுதான்.
ஒரு முறை நேர்காணலொன்றில் , இயக்குநர் விக்கிரமன் என்று நினைக்கின்றேன், கூறியிருந்தார் 'உன்னிமேனனின் பாடல்களைத் தொலைதூரக் கார்ப்பயணங்களில் கேட்டுச் செல்வதாக. ஆம்! பயணங்களை இனிமையானதாக்கும் குரல் இனிமை உன்னி மேனனின் குரலினிமை என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. இப்பாடலைக் கேட்கும் ஒவ்வொரு தடவையும் நான் பல தடவைகள் மீண்டும் மீண்டும் கேட்பதுண்டு.
பாடலைக் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=AUu3BOFUsCQ
[டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா 2}
Wednesday, July 1, 2026
கனடாவில் ஊடகவியலாளர் நந்தன வீரரத்னவின் 'கறுப்பு ஜூலை' நூல் வெளியீடு!
![]() |
| ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன |
அண்மையில் ஸ்கார்பரோ,கனடாவில் ஊடகவியலாளர் நந்தன வீரரத்னவின் 'கறுப்பு ஜூலை' என்னும் சிங்கள நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு (சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், அரசியல் ஆய்வாளருமான செல்லையா மனோரஞ்சனால் செய்யப்பட்டது) பற்றிய கலந்துரையாடல் 'கனேடிய இலங்கை மன்ற'த்திm ஏற்பாட்டில் நடைபெற்றது. சமூக, அரசியற் செயற்பாட்டாளர் லோ.மதியழகன் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் பேச்சாளர்களாக சமூக,ம் அரசியற் செயற்பாட்டாளர் சிவா முருகுப்பிள்ளை, ஊடகவியலாளர் வடிவேல் தேவராஜ், அரசியல் ஆய்வாளர் மனோரஞ்சன் செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்குச் செல்ல விரும்பியிருந்தேன். இறுதியில் தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்ல முடியவில்லை.ஆனால் அந்தக் குறையினைத் 'தடயத்தார்' கிருபா கந்தையா தீர்த்து வைத்தார். அந்நிகழ்வைக் காணொளியாகப் பதிவு செய்து, தனது 'தடயத்தார்' யு டியூப் சானலில் பகிருந்திருந்தார். அவருக்கு என் நன்றி. இவ்விதம் இங்கு நடைபெறும் சமூக,கலை, இலக்கிய & அரசியல் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி வரும் அவர்தம் பணி போற்றுதற்குரியது.
அந்நிகழ்வின் ஆரம்பத்தில் நூலாசிரியர் நந்தன வீரரத்ன மெய்நிகர் வழியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் உரையினைத் தமிழில் வழங்கினார் மனோரஞ்சன் செல்லையா. நந்தன வீரரத்தினவின் உரை பற்றிய எனது கருத்துகளே இப்பதிவு.
Subscribe to:
Posts (Atom)
வ.ந.கிரிதரன் பாடல்: சமூக,ஊடகப் போராளிகளே! ஒரு வேண்டுகோள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.
வ.ந.கிரிதரன் பாடல்: சமூக,ஊடகப் போராளிகளே! ஒரு வேண்டுகோள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - கூகுள் ந...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...








.png)