Thursday, May 14, 2026

ஒரு தகவலுக்காக: தொன்மை மிகு நல்லை மூதூர்! - வ.ந.கிரிதரன் -


எழுநா இதழில் வெளியான கலாநிதி சிவா  தியாகராஜாவின் 'யாழ்ப்பாணப் பட்டினம்: பொங்கொலிநீர்ச் சிங்கைநகர் – பகுதி 1' என்னும் கட்டுரையில் நல்லூர் நகர் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண வைபவமாலையிலும், கைலாயமாலையிலும் ஆரியச் சக்கரவர்த்திகளின் தலைநகர் நல்லூர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் முற்பட்ட தமிழ் நூல்களிலோ சாசனங்களிலோ நல்லூரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. ஆகவே யாழ்ப்பாண மன்னர்களுடைய முதலாவது தலைநகர் சிங்கைநகர் என்றும் பதினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பெருமாள் நடத்திய படையெடுப்பிற்குப் பின்னரே இரண்டாவது தலைநகரான நல்லூர் அமைக்கப்பட்டது என்றும் கொள்ளவேண்டும். (ஞானப்பிரகாசர் 1928: பக் 106-107).
கலாநிதி சிவா தியாகராஜா

கலாநிதி சிவா தியாகராஜாவின் மேற்படி கூற்றிலிருந்து நல்லூர் பற்றி முற்பட்ட தமிழ் நூல்களிலோ சாசனங்களிலோ குறிப்புகள் எதுவும் இல்லை என்னும் கூற்று உண்மையா?  இதற்கான விடையைப் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் சிந்தனை இதழில் எழுதிய 'ஈழமும் இந்து மதமும் பொலனறுவைக் காலம் (1200 -1250)' என்னும் கட்டுரையில் காணலாம்.

ஈழமும் இந்து மதமும் பொலனறுவைக் காலம் என்னும் கட்டுரையில் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் நல்லூர் பற்றிக் கூறியிருக்கும் பின்வரும் விடயத்தைக் கலாநிதி சிவா தியாகராஜா அறிந்திருக்கவில்லையென்று கருதுகின்றேன். இல்லாவிட்டால் நல்லூரின் தொன்மைபற்றிய மேற்படி கருத்தைக் கூறியிருக்க மாட்டாரென்றும் கருதுகின்றேன்.

பேராசிரியர் சிற்றம்பலத்தின் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

'யாழ் மாவடத்தைப் பொறுத்தமட்டில் யாழ்ப்பாணக் கோட்டையில் கிடைத்துள்ள முதலாவது ராஜேந்திரனது கல்வெட்டு முக்கியம் வாய்ந்தது (K.Indrapala,K. 1971: 52-58). இக்கல்வெட்டுப் பூரணமான நிலையில் கிடைக்கப்பெறாவிட்டாலும்கூட இக்கல்வெட்டில் தானத்தை அளித்தவராக சாந்தன் காணப்படுகின்றான்.  நல்லூரிலமைந்துள்ள இந்துக் கோயிலுக்கு இவன் அளித் மிருககள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. ... யாழ்ப்பாண அரசு நல்லூரில் இராசதானி அமைக்க முன்பே நல்லூரில் ஒரு இந்து ஆலயம் இருந்தது என்பதும், இவ்வாலயம் சோழர் பாணியில் அமைந்திருந்தது என்பதும்  ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகவே காணப்படுகின்றது."


இத்தகவலை நான் எழுதி ஸ்நேகா/. மங்கை பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (1996) நூலிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். கலாநிதி சிவா தியாகராஜா எனது புத்தகத்தை அல்லது பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்தின் 'சிந்தனை'கட்டுரையினைப் படித்திருந்தால் அறிந்திருப்பார்.




No comments:

ஒரு தகவலுக்காக: தொன்மை மிகு நல்லை மூதூர்! - வ.ந.கிரிதரன் -

எழுநா இதழில் வெளியான கலாநிதி சிவா  தியாகராஜாவின் ' யாழ்ப்பாணப் பட்டினம்: பொங்கொலிநீர்ச் சிங்கைநகர் – பகுதி 1 ' என்னும் கட்டுரையில் ந...