![]() |
இலங்கையில் வாழும் பறங்கி இன மக்களைப்பற்றிய தவகரனின் இந்தக் காணொளி என் கவனத்தை ஈர்த்தது. காணொளி இன்னும் சிறப்பாக ஆய்வுக் கண்ணோட்டத்துடன் , முற்கூட்டியே நன்கு தயாரிக்கப்பட்ட வினாக்களுடன் எடுக்கப்பட்டிருந்தால் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்., இருந்தாலும் பறங்கியர் சமூகம் பற்றிய காணொளி என்னும் வகையில் இக்காணொளிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. இது போன்ற காணொளிகள் அதிக அளவில் வெளிவர வேண்டும். எம்முடன் வாழும் ஏனைய இன மக்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு, புரிந்து கொள்வதற்கு இவை மிகவும் உதவியாகவிருக்கும்.
பொதுவாகப் பறங்கியர் இலங்கையை ஆட்சி செய்த ஐரோப்பியருக்கும் (போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் & ஆங்கிலேயர்) இலங்கையைச் சேர்ந்த மக்களுக்குமிடையில் ஏற்பட்ட கலப்புத்திருமணத்தின் விளைவாக உருவான சந்ததியினர். ஆங்கிலத்தில் Burger என்றழைக்கப்படுகின்றார்கள்.
இலங்கையில் 1956இல் சிங்கள மொழிச் சட்டம் ஏற்பட்டதைத்தொடர்ந்து அதிகமான பறங்கியர் ஆஸ்டிரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குச் சென்று விட்டார்கள். இன்னும் குறிப்பிட்ட அளவில் இலங்கையின் கிழக்கு மாகாணம், கொழும்பை உள்ளடக்கிய மேல் மாகாணம் போன்றவற்றில் வாழ்கின்றார்கள். கொழும்பில் உள்ள பறங்கியர் அதிகமானவர்கள் ஒல்லாந்தருக்கும் , இலங்கையர்களுக்கும் பிறந்ந்தவர்களின் வழித்தோன்றல்கள். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அதிகமானவர்கள் போர்த்துக்கேயருக்கும், இலங்கையருக்குமிடையில் பிறந்தவர்கள். கொழும்புப் பறங்கியர் பலரும் சிங்கள மொழியையும் , ஆங்கில மொழியையும் அதிகமாகப் பேசுபவர்கள். கிழக்கு மாகாணப் பறங்கியர்கள் தமிழை அதிகமாகப்பேசுபவர்கள். வீடுகளில் இன்னும் தங்கள் 'இலங்கைப் போர்த்துக்கேய மொழியான' கிரியோலைப் பேசுகின்றனர். இது போர்த்துக்கேய மொழியை அடிப்படையாகக்கொண்டு உருவான மொழியாகவிருக்க வேண்டும்.
இன்று பறங்கியர் பலரும் வாழும் இடங்களுக்கேற்பத் தமிழ், அல்லது சிங்கள மொழி பேசுபவர்களாக வாழ்கின்றார்கள். ஆண்களைப்பொறுத்தவரையில் அவர்கள்தம் குடும்பப்பெயர்கள் மாற்றமின்றித் தொடர்ந்து வரும் நிலையில், பறங்கிப் பெண்கள் தமிழர் , சிங்களவர் போன்றவர்களை மணக்கும்போது அவர்கள்தம் குடும்பப்பெயர்கள் மணமகனின் குடும்பப்பெயராக மாறிவிடுவதால், பரம்பரைக் குடும்பப் பெயரை இழந்து விடுகின்றனர். மேற்படி காணொளியில் குடும்பத்தலைவியான ஒரு பெண் தம் அடையாளத்தை இவ்விதம் இழந்து விடுவதைப்பற்றிய தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துவது அவதானிக்கத்தக்கது.
மேலும் பைலா என்னும் இசை வடிவம் போர்த்துக்கேயரால் இலங்கையருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இசை வடிவம். இந்தக் காணொளியிலுள்ள குடும்பத்தலைவர் ஒருவர் தன் மொழியிலான பாடலைப்பாடுகின்றார். அப்பாடலைக் கேட்டதும் நினைவுக்கு வந்த தமிழ்ச்சினிமாப் பாடல் - வீரத்திருமகன் திரைப்படத்தில் நடிகர் ஆனந்தன் பேண் வேடமிட்டு பாடும் புகழ்பெற்ற பாடலான வெற்றிலை போட்ட பத்தினிப் பொண்ணு சுத்துது முன்னாலே' பாடல்தான். இசை - மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் -ராமமூர்த்தி. மெல்லிசை மன்னர்கள் சுட்டி போர்த்துக்கேயரின் பைலாப் பாடல் அது.
இன்னும் இக்காணொளி மூலம் அறிந்த பறங்கியர் பற்றிய விடயங்கள்:
1. பெண்கள் சேலை அணிவதில்லை. சட்டை மட்டுமே அணிகின்றார்கள். (இந்தியாவின் ஆங்கிலோ இண்டியன் என்றழைக்கின்றார்கள். அவர்களும் இவ்விதம் சட்டை அணிவதால்தான் சட்டைக்காரிகள் என்றழைக்கப்பட்டார்கள். சட்டைக்காரி புகழ்பெற்ற , லட்சுமி , மோகனின் நடிப்பில் வெளியான மலையாளத்திரைப்படம்)
2. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் ஆண் ஒருவன் அங்கிலிருக்கும் எந்தப்பெண்ணுடனும் நடனமாட விரும்பினால் , அவளுக்கு முன் தலையைக் குனிந்து வணக்கம் தெரிவித்தால் போதும். அந்தப்பெண் திருமணமானவளோ, இல்லையோ அதை ஏற்றுக்கொண்டு அவனுடன் நடனமாடத்தான் வேண்டும். அது அவர்கள் கலாச்சார வழக்கங்களில் ஒன்று.
3. மொழியை, தம் அடையாளத்தை இழந்து வருவதால் ஏற்படும் ஆதங்கம். மேனாடுகளில் வாழும் எம்மவரின் தலைமுறை இன்னும் இரு நூறு ஆண்டுகள் கடந்த நிலையில் எப்படியிருப்பார்கள் என்று நினைத்துப்பார்க்க வைக்கும் ஆதங்கம் அது.
எனக்கு பறங்கியர் என்றதும் நினைவுக்கு வருவது யாழ்ப்பாணத்துப் பறங்கித்தெரு என்னும் பகுதியும், எம் பதின்ம வயதுகளில் எம் வயதையொத்த பறங்கிச் சிறுவனும்தான். அப்பறங்கிச் சிறுவன் கச்சேரிப்பக்கம் வாழும் சிறுவர்களுடன் சுற்றித்திரிந்தததால் , என் நண்பர்கள் வட்டத்தில் அவனுடன் பழகும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது. வடக்கில் தற்போது பறங்கியர்களின் முன்னோர்களின் அடையாளச் சின்னங்கள் பல இருக்கின்றன, ஆனால் பறங்கியர்கள் நாட்டின் ஏனைய பாகங்களில் வசிப்பதைப்போல் வசிக்கவில்லை.
கொழும்புப் பறங்கியர் பெரும்பாலும் கிறிஸ்த்தவச் சீர்திருத்தப் பிரிவினர். கிழக்கு மாகாணப் பறங்கியர் பெரும்பாலானவர்கள் ரோமன் கத்தோலிக்கப்பிரிவினர்.
தவகரனின் வீடியோ உட்பட மேலும் சில வீடியோக்களை முதலாவது 'கொமண்ட்'டில் இட்டிருக்கின்றேன்
பறங்கியர் - தவகரன் வீடியோ - https://www.youtube.com/watch?v=h3nYAFRH0ho&t=1325s
பறங்கியர் திருமணம் - https://www.youtube.com/watch?v=TNiqeMrhUIk
பறங்கியர் - இன்னுமொரு காணொளி - https://www.youtube.com/watch?v=bvILaBS5zCI
பறங்கியர் காணொளி 3 - https://www.youtube.com/watch?v=yA9rLtDkEdg
வெற்றிலை போட்ட பத்தினிப் பொண்ணு சுத்துது முன்னாலே - https://www.youtube.com/watch?v=3VAX91N3uJc

No comments:
Post a Comment