Friday, June 16, 2023

விரைவில் வெளியாகவுள்ள வ.ந.கிரிதரனின் நாவல்: நவீன விக்கிரமாதித்தன்

தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள எனது புதிய நாவல் 'நவீன விக்கிரமாதித்தன்'

 
 
 நாவலிலிருந்து ஓர் அத்தியாயம்
அத்தியாயம் நான்கு: மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?

'கண்ணம்மா' என்றேன். மனோரஞ்சிதம் பெருங்காதலுடன் திரும்பிப் பார்த்தாள். கண்ணம்மா என்று நான் அழைப்பதைப் பெரிதும் விரும்புபவள். அச்சமயங்களிலெல்லாம் பதிலுக்குக் 'கண்ணா' என்று என்னை அன்பூற மென்மையாக அழைப்பாள். அந்த அன்பு குழைந்த அவளது அழைப்பைக் கேட்பதற்காகவே அவளை நான் கண்ணம்மா என்று விளிப்பதுண்டு. என்னைப்பொறுத்தவரையில் இவ்விருப்புன் அற்புதமாக அவளை நான் காண்பதுண்டு. அவளற்ற இருப்பை கற்பனை செய்வதே எனக்கு மிகவும் சிரமமானது.

'என்ன கண்ணா மெளனமாகிவிட்டாய்?" என்றாள் அவள்.

'எல்லாம் நம் இருப்பு பற்றிய சிந்தனைதான் கண்ணம்மா"

'இருப்பு பற்றி.. வழக்கம்போல் தத்துவவிசாரம்தானா கண்ணா'

'கண்ணம்மா உனக்குத்தானே எனக்கு பாரதி பாடல்கள் பிடிக்குமென்று தெரியும். எனக்குப் பிடித்த அவரது பாட்டைக் கூறு பார்க்கலாம்."

'கண்ணை மூடிக்கொண்டு கூறுவேன் கண்ணா. 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே பாடல்தானே'

'சரியாகவே கூறினாய் கண்ணம்மா. நீ என் மனத்தை நன்றாகவே  புரிந்து வைத்திருக்கிறாயடி.'

'இந்தக்கவிதை எனக்கும் பிடித்தது கண்ணா. அதற்குக் காரணமே இருப்பு பற்றிய கவிஞரின் கேள்விகளே."

'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?  ஒரு விதத்தில் தர்க்கரீதியாகப் பார்க்கப்போனால் இதுகூடச் சரிதானென்று வாதிடலாம். இல்லையா கண்ணம்மா?'

"எப்படி கண்ணா? எமக்கு வெளியே விரிந்து கிடக்கின்றது நாம் காணும் இப்பிரபஞ்சம். இவ்வுலகம். இப்புற உலகு மாயை என்று எப்படிக் கூறுவது கண்ணா?'

"கண்ணம்மா, நாம் காணும் இந்த உலகம், இப்பிரபஞ்சம் , இவ்வழகிய இயற்கைக் காட்சிகள் இவையெல்லாமே இறுதியாக என் மூளையின் விளைவுகள் தானே. காட்சிகள் மூளையில் நிகழும் மின்னியற் செயற்பாடுகளின் மின்னியல் விளைவுகள் தாமே. மின்னியற்  துடிப்புகள் தாமே. இறுதி விளைவாக நாம் உணர்வது, அறிவது எல்லாமே மூளையின் செயற்பாடுகள் தாமே. இந்நிலையில் எப்படி நீ கண்ணம்மா இவையெல்லாம் மூளைக்கு வெளியில் உள்ளன என்று தீர்மானமாக எண்ண முடியும். நாம் பார்ப்பது , கேட்பது, உணர்வது, இருப்பது எல்லாமே மூளையில் செயற்பாடுகளே. எம் மூளைக்கு வெளியில் எவையுமே இல்லை. ஒருவகையில் அவ்வகையில் எல்லாமே மாயையோ என்றும் ஒருவர் வாதிடலாம். இல்லையா கண்ணம்மா?"

இதற்கு மனோரஞ்சிதம் எதுவிதப் பதிலெதனையும் கூறாமல் சிந்தனையில் சிறிது நேரம் மூழ்கியிருந்தாள்.

விரைவில் வெளிவரவுள்ள நூல்: வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்'

விரைவில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவரவுள்ள எனது கவிதைத்தொகுதி 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்'. காலச்சுவடு பதிப்பகத்தின் சிறப்பான வடிவமைப்பில் வெளியாகும் தொகுப்பு.


தொகுப்பிலுள்ள மூன்று கவிதைகள்

குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.

குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
வியாபாரியல்லன்.
நாணயமான குதிரை வளர்ப்பாளன்..
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
ஆனால் அவை நொண்டிக்குதிரைகளல்ல.
என்னிடமுள்ள குதிரைகள் அனைத்துமே
என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்பபதில்லை.
நான் நொண்டிக்குதிரைகளை வளர்ப்பவனோ,
விற்பவனோ அல்லன்.
இருந்தும் குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை
அதிகமாகிவிட்டது.
குதிரைத் திருடர்களே! கவனம்.
திருடிய குதிரைகளை வெகு சாமர்த்தியமாக
உங்கள் மந்தையில் கலந்து
விடுவதில் பலே கில்லாடிகள் நீங்கள்.
என்னிடம் நீங்கள் திருடிய அல்லது
திருடப் போகும் குதிரைகள்
நிச்சயம் நொண்டிக்குதிரைகளல்ல.
ஆனால் அவை நல்லவை.
வல்லவையும் கூடத்தான்.
ஆனால் அவை முரட்டுக் குதிரைகள்.
முட்டி மோதவும் தயங்காத
முரட்டுக் குதிரைகள்.

கண்ணம்மாக் கவிதை: இருப்புப் பற்றியதோர் உரையாடல் கண்ணம்மாவுடன்! - வ.ந.கிரிதரன் -

காலவெளி பற்றிக் கதைப்பதென்றால், உன்னுடன் கதைப்பதென்றால் களி மிகும் கண்ணம்மா. கூர்ந்த கவனிப்பும், தெளிந்த கருத்துகளும், தேர்ந்த சொற்களும் உன்...

பிரபலமான பதிவுகள்