Sunday, December 25, 2022

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (17) நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம்  (17) நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்!


"கண்ணம்மா, எதற்காக இங்கு வந்து பிறந்தோம்?"   திடீரென  நான் கேட்கவே   மனோரஞ்சிதம் சிறிது திடுக்கிட்டுப் போனாள்.

"என்ன கண்ணா? உனக்கு என்ன நடந்தது? ஏனிந்தக் கேள்வி? அதுவும் இந்தச் சமயத்தில்" என்று கேட்கவும் செய்தாள்.  அத்துடன் என் தோள்களைப் பிடித்துக் குலுக்கினாள்.

"கண்ணம்மா, எனக்கு அடிக்கடி வரும் கேள்விதான். இதிலொன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லையே. நீ இவ்விதம் திடுக்கிடுவதுதான் வியப்பைத் தருகிறதடீ"

"கண்ணா, சில விடயங்களில் கேள்வி கேட்கக் கூடாது. இருப்பின் இரகசியமும் அவற்றிலொன்று"

'கண்ணம்மா, எனக்கு அதில் உடன்பாடில்லை. கேள்வி கேட்பது பகுத்தறிவு படைத்த மனிதரின் பிரத்தியேக உரிமை. எப்பொழுதும் பாவிக்க வேண்டிய உரிமை. இருப்பிலொரு தெளிவினை அடைதற்கு இவ்விதமான கேள்விகள் அவசியமில்லையா கண்ணம்மா?"

Friday, December 16, 2022

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (16) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம்  (16) -   நவீன விக்கிரமாதித்தனின்  குறிப்பேட்டுப் பக்கங்கள் சில.

மனோரஞ்சிதம் எதனையெடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அவ்வாசிப்பில் தன்னை முழுமையாக  மூழ்கடிக்க வைத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அப்படியெதைத்தான் அவள் இவ்விதம் வாசித்துக்கொண்டிருக்கின்றாள் என்பதை அறியும் ஆவல் மேலிட்டது. மேலிட்ட ஆவலுடன் அவளை நெருங்கி அவள் வாசித்துக்கொண்டிருந்த நூலைப் பார்த்தேன். உண்மையில் அது நூலல்ல. ஒரு குறிப்பேடு. அது என் குறிப்பேடுகளிலொன்று.  அவ்வப்போது என் எண்ணங்களை எழுத்துகளாக  அக்குறிப்பேட்டில் பதிவு செய்வது என் பொழுது போக்குகளிலொன்று. கவிதைகளாக, கட்டுரைகளாக எனப் பல் வடிவங்களில் அவை இருக்கும். அக்குறிப்பேடுகளிலொன்றினைத்தான் அவளெடுத்டு வாசித்துக்கொண்டிருந்தாள்.

"கண்ணம்மா, ஒருத்தரின் குறிப்பேட்டை அவரது அனுமதியின்றி இன்னொருவர் வாசிப்பது தவறில்லையா?"

"கண்ணா, என் கண்ணனின்  குறிப்பேட்டை நான் வாசிக்காமல் வேறு யார் வாசிப்பது? உன் கண்ணம்மா வாசிப்பதில் தவறேதுமில்லை. பேசாமல் மனத்தைக் குழப்பிக்கொள்ளாதே கண்ணா."

சிறிது நேரம் வாசித்துவிட்டுக் கூறினாள்:

"கண்ணா இவையெல்லாம் உன் 'டீன் ஏஜ்' பருவத்தில் எழுதியவை. ஒவ்வொரு கவிதைக்கும், கட்டுரைக்கும் மேல் எழுதின திகதி, மாதம், ஆண்டைக் குறிப்பிட்டிருக்கிறாய்."

Sunday, December 11, 2022

ஆய்வுக்கையேட்டில் வ.ந.கிரிதரனின் An Immigrant நாவல் (குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு) !

 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முனைவர்பட்ட  ஆய்வுகள் சம்பந்தமாக உருவாக்கியிருந்த கையேடு ஒன்று  அண்மைய கூகுள் தேடுதலில் என்னைக் கவர்ந்தது. அதற்கான முகவரி: https://www.msuniv.ac.in/images/academic/PhD/English.pdf

பதினைந்து பக்கங்களைக் கொண்ட அக்கையேட்டின் பக்கம் பதின்மூன்றே என் கவனத்தை ஈர்த்த பக்கம். அது புகலிடக் கற்கைநெறிகளைப்பற்றியது. அது ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலிரு பகுதிகளில் புகலிடக்கற்கை நெறி பற்றிய கொள்கை விளக்கங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.  

வாழ்க நீ எம்மான்! - வ.ந.கிரிதரன் -


இன்று மகாகவி பாரதியாரின் பிறந்ததினம்.  என் பால்ய பருவத்தில் என்று என் தந்தையார் பாரதியாரின் முழுக்கவிதைகளும் அடங்கிய தொகுதியை வாங்கித் தந்தாரோ அன்று ஆரம்பித்த பிணைப்பு இன்றுவரை தொடர்கிறது. இவரது கவிதைத்தொகுப்பொன்று எப்பொழுதும் என் மேசையில் அருகில், கண்ணில் படும் தூரத்திலிருக்கும்.

சமுதாயம், அரசியல், தேசிய விடுதலை, வர்க்க விடுதலை, மானுட விடுதலை, இருப்பு பற்றிய தேடல்கள், காதல் போன்ற மானுட உணர்வுகள்,  இயற்கை , எழுத்து ,  பெண் உரிமை என்று அனைத்தைப் பற்றியும் இவர்  பாடியிருக்கின்றார். அவற்றிலுள்ள புலமை, எளிமை, அனுபவத்தெளிவு இவைதாம் என்னை இவர்பால் ஈர்த்ததற்குக் காரணம். இன்னுமொரு முக்கிய காரணம் - ஆரோக்கிய எண்ணங்களை  வெளிப்படும் வரிகள்.

தமிழ் இலக்கிய உலகில் என்னைப் பாதித்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் பாரதியார்.  தன் குறுகிய காலத்தில் இவர் சாதித்தவை ஏராளம். பிரமிக்க வைப்பவை.

எழுத்தாளராக, ஊடகவியலாளராக, பத்திரிகை ஆசிரியராக,  தேசிய , மானுட விடுதலைப்போராளியாக, தத்துவவாதியாக இவரது ஆளுமை பன்முகமானது.

அவர் நினைவாக எனக்குப் பிடித்த அவரது கவிதையொன்று - https://dheivegam.com/nirpathuve-nadapathuve-bharathiyar-kavithai/

ஒரு கடிதம்!

அண்மையில் தமிழகத்தில் அமெரிக்கன் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளராகவிருக்கும் க.ஆனந்தராஜன் அவர்கள் 'எனது 'குடிவரவாளன்' நாவலைப்பற்றி 'நவீனத் தமிழாய்வு; என்னும் பன்னாட்டுக் காலாண்டு ஆய்விதழில் எழுதிய ஆய்வுக்கட்டுரை பற்றி எழுதியிருந்தேன். அது பற்றி அவர் எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதிலவர் எனது 'அமெரிக்கா', 'குடிவரவாளன்' ஆகிய இரு நாவல்களை மையமாக வைத்துத் தான் முனைவர் பட்ட  ஆய்வு செய்வதாகவும், அமெரிக்கன் கல்லூரியில் எனது அமெரிக்கா நாவல் அமெரிக்கன்  கல்லூரியின் பாடத்திட்டத்திலும் உள்ளதாகவும் எழுதியிருந்தார்.  மகிழ்ச்சி தந்த விடயமிது. அவரது முனைவர் பட்ட ஆய்வு வெற்றியடைய வாழ்த்துகள்.

Friday, December 9, 2022

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (15) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம்  15 - கண்ணம்மா எழுதிய கவிதை!

 "கண்ணா, எனக்கொரு கேள்வி அவ்வப்போது நினைவில் வருவதுண்டு."

மனோரஞ்சிதம் இவ்விதம் ஒருமுறை திடீரென்று கூறவே அவளை வியப்புடன் பார்த்தேன்.

"கண்ணம்மா, அப்படியென்ன கேள்வி. அது எது பற்றிய கேள்வி?" என்றேன்.

"எல்லாம் எழுத்து பற்றியதுதான். "

"எழுத்து பற்றியதா? எந்த எழுத்து பற்றி நீ கூறுகிறாய் கண்ணம்மா?"

"கண்ணா, உன்னைப்போன்ற எழுத்தாளர்களின் எழுத்தைப் பற்றித்தான் கண்ணா? வேறென்ன எழுத்தைப்பற்றி நான் கேட்கப்போகின்றேன்?"

"அப்படியா கண்ணம்மா, சரி கேளடி என் கணமணி."

"எழுத்துக்குக் கட்டாயம் ஒரு நோக்கம் இருக்க வேண்டுமா? அல்லது அது தேவையில்லையா? கண்ணா?"

"கண்ணம்மா, நீ என்ன கேட்க வருகிறாய் என்பது புரிகிறது., கலை மக்களுக்காகவா அல்லது கலை கலைக்காகவா என்பதைத்தான் நீ எளிமையாக இப்படிக் கேட்கிறாய். காலம் காலமாக கலை, இலக்கிய உலகில் கேட்கப்படும், தர்க்கிக்கப்படும் கேள்விதான். இது பற்றி எப்பொழுதும் கருத்துகள் ஒன்றாக இருப்பதில்லை."

"இவ்விடயத்தில் உன் கருத்தென்ன கண்ணா? அதைச்சொல்  முதலில். எனக்கு உன் கருத்துத்தான் முக்கியம் கண்ணா."

'கண்ணம்மா, எனக்கு இவ்வளவுக்கு முக்கியத்துவம் தருவது மகிழ்ச்சியைத் தருகிறது. என்னைப்பொறுத்தவரையில் எழுத்துக்கு நிச்சயம் ஒரு நோக்கமிருக்க வேண்டும். நோக்கமற்ற எழுத்து வாசிப்பதற்கு சுவையாகவிருக்கக்கூடும்.  ஆனால் சமுதாயப் பயனற்றுப் போய்விடும். ஆனால் அந்த நோக்கம் அந்த எழுத்தின் எழுத்தின் கலைத்துவத்தைச் சீர்குலைத்து விடக்கூடாது என்பதும் என்னைப்பொறுத்த வரையில் மிகவும் முக்கியம்."

"சரி கண்ணா, இன்னுமொரு கேள்வி."

"என்ன கண்ணம்மா? என்ன புதுக்கேள்வி?"

"நோக்கம் ஒரு தீர்வினையும் கூற வேண்டுமா? அல்லது வாசகர்களே அதனை எழுத்திலிருந்து தீர்மானிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டுமா கண்ணா?"

Friday, December 2, 2022

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (14) - - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் 14   - யாதும் ஊரே! யாவரும் கேளிர்!


"கண்ணா என்ன மீண்டும் பலமான சிந்தனை?"

திரும்பிப்பார்க்கின்றேன். கேட்டவள் என் கண்ணம்மா, மனோரஞ்சிதம்.

"சங்ககாலப் புலவன் ஒருவனின் சிந்தனையைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தேன் கண்ணம்மா. அவனது அனுபவத்தெளிவு மிகுந்த சிந்தனையின் வீச்சு என்னை எப்போதும் கவருமொன்று. அன்று அவன் சிந்தித்ததை இன்றுள்ள மனிதர்கள் உணர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும், உலகம் எவ்விதம் ஒரு குடும்பம் போல் இன்பத்தில் மூழ்கி இனித்திருக்குமென்று எண்ணிகொண்டிருந்தேனடி. என் சிந்தனையை வழக்கம்போல் இடையில் வந்து குலைத்து விட்டாயடி என் செல்லமே."

"உன் சிந்தையில் எப்போதும் நானிருக்க வேண்டும் கண்ணா. எனக்குத் தெரியாமல் வேறு யாரும் இருக்கக் கூடாது கண்ணா."

"கண்ணம்மா, நீ எப்போதும் என் ஆழ்மனத்தில் குடியிருக்கின்றாய். அதிலிருந்து உன்னை நான் விடுவிக்கப் போவதேயில்லை. ஆனால் நான் சிந்திப்பது என் ஆழ்மனத்தாலல்லவே கண்ணம்மா."

"ஆழ்மனத்தில் நானிருக்கிறேன் என்கின்றாய். சிந்திப்பதோ அம்மனத்திலால் அல்ல என்கின்றாய். குழப்புகிறாயே கண்ணா."

"கண்ணம்மா, ஆழ்மனம் வேறு. சிந்திக்கும் புறமனம் , நனவு மனம் வேறு. புறமனத்தால் சிந்திக்கின்றேன்.ஆனால் ஆழ்மனத்தில் எப்போதும் போல் நீ நிறைந்திருக்கின்றாயடி"

'கண்ணா , உன் ஆழ்மனத்தில் மட்டுமல்ல, புறமனத்திலும் நான் தான் எப்போழுதும் நிறைந்திருக்க வேண்டும்." என்று செல்லமாகக் கட்டளையிட்டாள் என் கண்ணம்மா.

வான் பாயும் பட்டாணிச்சுப்புளியங்குளம் தந்த வான் பாய்தல் பற்றிய சிந்தனைகள்!

மாரியில் மழை பெய்து பட்டாணிச்சுப்புளியங்குளம் நிறைந்து வழிகையில் வான் பாயுமொலி இரவின் இருளை, அமைதியைத் துளைத்துக்கொண்டு கேட்கும். குருமண்காட...

பிரபலமான பதிவுகள்