Sunday, May 27, 2018

லக்பிமா.காம்: கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு ! 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு! - - கத்யானா அமரசிங்ஹ | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது, 'மந்திரி மனை' என அழைக்கப்படுகிறது. தென்னிந்திய வீடுகளின் கட்டடக்கலையும், ஐரோப்பிய வீடுகளின் கட்டடக்கலையும் ஒருங்கே அமைந்திருந்த அந்த அரண்மனையை முதன்முதலாகக் கண்டபோது, இலங்கையின் தென்பகுதியில் காணக்கூடிய மழையும், வெயிலும், காலமும் பொலிவிழக்கச் செய்திருக்கும் பழங்கால, பாழடைந்த ‘வளவ்வ’ எனப்படும் பாரம்பரிய வீடுகளை அது நினைவுபடுத்திற்று. யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அந்த அரண்மனையானது, போர்த்துக்கேயர்களின் வருகையோடு ஆரம்பித்த காலனித்துவ யுகத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த மந்திரியொருவரின் இல்லமாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. அவ்வாறே யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர்கள் கைப்பற்ற முன்பு இம் மந்திரி மனை அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் யாழ்ப்பாண மன்னரொருவரின் அரண்மனையும் இருந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

முதன்முறையாக 'மந்திரி மனை'யைக் கண்ட எனது உள்ளத்தில் யாழ்ப்பாண வரலாறு குறித்த பல தரப்பட்ட எண்ணங்கள் கேள்வியெழுப்பின. எனினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கே இருந்திருக்கக் கூடிய தமிழ் மன்னரொருவரின் ராஜதானியைக் குறித்து கற்பனை செய்து பார்ப்பதைத் தவிர, அதைக் குறித்து மேலதிக விபரங்களைத் தேடிப் பெற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பில்லை என்பதனால் அந்தக் கற்பனைகளும் கூட தோன்றிய இடத்திலேயே மரித்து விடவும் வாய்ப்பிருந்தது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி ராஜதானிகள் குறித்து நாங்கள் பலதரப்பட்ட வரலாறுகளைப் படித்திருந்த போதிலும், ஆயிரக்கணக்கான வருடங்கள் யாழ்ப்பாணத்தில் நிலவியிருந்த ராஜதானிகளின் அமைவிடங்கள் மற்றும் வரலாறு குறித்த விரிவான குறிப்பொன்றை எங்கிருந்து தேடிப் படிப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

எனினும் அதற்கு சில வாரங்களின் பின்னர், ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’' எனும் ஆய்வு நூலொன்று எனக்குக் கிட்டியதானது, கோடையில் துவண்டிருக்கும் ஒருவர் மீது அகாலத்தில் பெய்த மழை போன்றிருந்தது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கட்டடவியல் பட்டதாரியும், தமிழ் எழுத்தாளருமான நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்) எழுதிய இந்த ஆய்வு நூலானது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த  யாழ்ப்பாண ராஜதானி நகர அமைப்பு  குறித்து எழுதப்பட்ட முதல் அறிவியல் ரீதியான ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட அந் நூலானது, இந்திய எழுத்தாளர்களில் ஒருவரான லதா ராமகிருஷ்ணனால்  ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நான் வாசித்தது ஆங்கில மொழிபெயர்ப்புப் பிரதியாகும்.
எனக்கு முதன்முதலாக கிரிதரன் அறிமுகமாவது ஒரு கவிஞராகவும், சிறுகதை மற்றும் நாவல் எழுத்தாளராகவும்தான். அதற்கும் மேலதிகமாக உலகம் முழுவதும் தமிழ் வாசகர்களிடையே பிரபலமான வலைத்தளமாகவுள்ள ‘பதிவுகள்’ இணைய இதழாசிரியர் அவர். ஆயிரக்கணக்கான வருடங்களாக யாழ்ப்பாணத்தில் திகழ்ந்த ராஜதானிகளின் வரலாறுகள் குறித்தும், அதன் இறுதி ராஜதானியாகக் கருதப்படும் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு  குறித்தும் மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை, பல வருடங்கள் பாடுபட்டு ஆய்வுகள் செய்து அவர் எழுதியிருக்கும் இச் சிறந்த ஆய்வு நூலிலிருந்து அறிந்து கொண்டேன்.

ஹெமிங்வேயின் 'கிழவனும் கடலும்'

ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் ' கிழவனும் கடலும் ' (The Old Man and The Sea) உலக இலக்கியத்தில் முக்கியமான நாவல். இது ஒரு விரிந்து பரந்த நாவல...

பிரபலமான பதிவுகள்