Saturday, October 6, 2018

கவிதைத்தொகுப்பு: எதிர்காலச்சித்தன் பாடல்! - அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள். -

அறிமுகம்: கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு!   - வ.ந.கிரிதரன் -

ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது' என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது

[மறுமலர்ச்சிக் குழுவினரால் வெளியிடப்பட்ட சஞ்சிகையே 'மறுமலர்ச்சி' சஞ்சிகை. இச்சஞ்சிகையில் எழுதிய படைப்பாளிகளையே மறுமலர்ச்சி எழுத்தாளர்களாகக் காணும் போக்கொன்று செங்கை ஆழியானுட்பட இன்று இலக்கிய விமர்சனங்கள், ஆய்வுகள் செய்ய விரும்பும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினைச் சார்ந்த செல்லத்துரை சுதர்ஸன் போன்றவர்கள் மத்தியில் நிலவுவதாகத் தெரிகிறது. இது ஒரு பிழையான அணுகுமுறை. மறுமலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கி, அதில் பாடுபட்டவர்களின் படைப்புகள் யாவும் மறுமலர்ச்சிப் படைப்புகளாகத்தான் கருதப்பட வேண்டும். உண்மையில் மறுமலர்ச்சிச் சிறுகதைகள், அல்லது மறுமலர்ச்சிக் கவிதைகள், அல்லது மறுமலர்ச்சிப் படைப்புகள் , மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும்போது அது மறுமலர்ச்சி சஞ்சிகையில் எழுதிய எழுத்தாளர்களை மட்டும் குறிக்கவில்லை.  அது மறுமலர்ச்சி காலகட்டப் படைப்பாளிகளையும் குறிப்பிடுகிறது. அந்த 'மறுமலர்ச்சி' இதழினை வெளியிட்ட மறுமலர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியவர்களின் படைப்புகளையும் குறிக்கிறது. இதுவே சரியான நிலைப்பாடாகவிருக்க முடியும் என்பதென் கருத்து. செங்கை ஆழியான, செல்லத்துரை சுதர்ஸன் போன்றோர் இந்த விடயத்தில் கருத்துச் செலுத்த வேண்டுமென்பதென் அவா. சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா, எம். ஏ. நுஃமான் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்' என்னும் நூலில் ஈழத்துக் கவிதையுலகின் மறுமலர்ச்சிக் கட்ட காலம் பற்றிக் குறிப்பிடும்போது அ.ந.கந்தசாமி, மகாகவி, நாவற்குழியூர் நடராசன் ஆகியோரை மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் முக்கியமான கவிஞர்களாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் கவீந்த்திரன் என்னும் புனைபெயரிலும் எழுதிய அறிஞர் அ.ந.கநதசாமியை ஈழத்தின் தமிழ்க் கவிதையில் முதலாவதாக இடதுசாரிச் சிந்தனையினை அறிமுகப்படுத்திய படைப்பாளியாகவும் குறிப்பிடுவர்.இவ்விதம் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றியே குறிப்பிடப்படவேண்டுமே தவிர 'மறுமலர்ச்சி' சஞ்சிகையின் படைப்புகளை மட்டும் மையமாக வைத்து மறுமலர்ச்சிக் காலகட்டத்தை எடை போடக்கூடாது. அவ்விதமான போக்கு ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய பிழையான பிம்பத்தினைத் தந்துவிடும் அபாயமுண்டு. ]

அ.ந.க. ஒரு செயல் வீரர். ஏனையவர்களைப் போல் வாயளவில் நின்று விட்டவரல்லர். தான் நம்பிய கொள்கைகளுக்காக இறுதிவரை பாடுபட்டவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்களிலொருவர். மேற்படி சங்கத்தின் கீதமாகவும் இவரது கவிதையே விளங்குகின்றது. அவரது கவிதைகளின் கருப்பொருட்களாகத் தீண்டாமை, தோட்டத்தொழிலாளர் இழிநிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள், சமுதாயச் சீரமைப்பு, இயற்கை, காதல், தத்துவம், வர்க்க விடுதலை, பிடித்த ஆளுமைகள் போன்றவை விளங்குகின்றன. இவரது கவிதைகள் தமிழமுது, தேன்மொழி, ஈழகேசரி, வசந்தம், வீரகேசரி, பாரதி, தினகரன், ம்ல்லிகை, நோக்கு, இளவேனில், சுதந்திரன், ஸ்ரீலங்கா போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன [அ.ந.க.வின் கவிதைகள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அவர் பங்கு பற்றிய கவியரங்குகள் பற்றிய விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளப்படவேண்டியதவசியம்.].

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (5) - வ.ந.கிரிதரன்-

அத்தியாயம் ஐந்து:   இருப்பின்  புதிரொன்றும் , நங்கையுடனான சந்திப்பும்! "நான் மாதவன். யுனிட் 203இல் வசிப்பவன்.  போஸ்ட்மன் தவறுதலாக உங்கள...

பிரபலமான பதிவுகள்