![]() |
- அ.ந.கந்தசாமி - |
கொழும்பில் எனது 'மதமாற்றம்' நாடகம் நான்காவது முறை அரங்கேறியிருக்கிறது. அரங்கேற்றியவர் பிரபல சிறுகதையாசிரியர் காவலூர் இராசதுரை. டைரக்ஷன் லடீஸ் வீரமணி. நடித்தவர்களில் தான் தோன்றிக் கவிராயரென்று புகழ் படைத்த சில்லையூர் செல்வராசன், ஞானாஞ்சலி, தோத்திரமாலை போன்ற பல நூல்களை எழுதிய நவீன உவமைக் கதாசிரியர் முத்தையா இரத்தினம் என்பவர்கள் இவர்களில் சிலர்.
நல்ல முறையில் அரங்கேற்றுவதன் மூலம், தமிழ் நாடகத்துக்குப் புத்துணர்ச்சியும் புதுமலர்ச்சியும் கொடுக்க முடியும் என்று நம்பியவர்கள் இவர்கள். இலங்கையில் சிங்கள ஆங்கில நாடகங்களுக்குத் தரத்தில் குறைவில்லாத தமிழ் நாடகங்களைத் தயாரித்து அளிக்க வேண்டுமென்று துடித்தவர்கள். ஆகவே இப்போது விமர்சகனின் முன்னுள்ள ஒரே கேள்வி இதில் இவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார்கள் என்பதுதான்.
நாடகம் எழுதுவது, ரேடியோவில் விமர்சனம் செய்வது, நாடக இயல் பற்றி நான் ஆராய்வது-பேசுவது ஆகிய யாவற்றிலும் நான் சிறிது காலமாகவே ஈடுபட்டு வந்திருக்கிறேன். ஆனால் இவை யாவற்றிலும் பார்க்க நான் செய்து வந்த முக்கியமான வேலை நாடகங்களைப் பார்ப்பதாகும். இதில் நான் எவருக்கும் சளைத்தவனல்ல. தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரையில் கலாநிதி சு.வித்தியானந்தனின் 'கர்ணன் போர்' தொடக்கம் லடீஸ் வீரமணியின் 'சலோமியின் சபதம்' வரை அனேகமானவற்றை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கில நாடகங்களில் பெர்னாட்ஷாவின் 'மில்லியனரெஸ்' ('கோடிஸ்வரி') தொடக்கம் ஆர்தர் மில்லரின் 'டெத் ஒவ் ஏ சேல்ஸ்மேன்' ('விற்பனையாளனின் மரணம்') அனேக நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். சிங்கள நாடகங்களில் தயானந்த குணவர்த்த்னாவின் 'நரிபேனா' தொடக்கம் சுகத பால டி சில்வாவின் 'ஹரிம படு ஹயக் ' வரை பல நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன்.