Thursday, December 28, 2023

அஞ்சலி: தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தலைவர் விஜயகாந்த் மறைவு!


தமிழ்த்திரையுலகில் எனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். தன்னைக் கறுப்பு எம்ஜிஆர் என்று அழைத்துக்கொள்வதில் மகிழும் விஜயகாந்த் உண்மையிலேயே திரையிலும், அரசியலிலும் எம்ஜிஆரின் வழியில் நடந்தவர். அதுவே அவரது திரையுலக, அரசியல் ஆதிக்கத்துக்கு முக்கிய காரணம்.
 
சிறிது தந்திரமாகத் தமிழக அரசியலில் அவர் நடந்திருந்தால் இன்றும் அவரது தேசிய முற்போக்குத் திராவிடக்  கழகம் முக்கியமான , வலு மிக்க கட்சியாக இருந்திருக்கும்.

Tuesday, December 26, 2023

திரையில் எழுத்தாளர் மிக்கெயில் ஷொலோகோவின் 'டொன் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது.'


ருஷ்ய எழுத்தாளர் மிக்கெயில் ஷொலோகோவ் அவரது முக்கிய நாவலான 'டொன் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது' (And Quiet Flows The Don) என்னும் நாவலுக்காக 1965ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவர். இந்நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு அ.லெ.நடராஜன் அவர்களால் செய்யப்பட்டு, நியு செஞ்சுரி புக்ஸ் ஹவுஸ் பதிப்பக வெளியீடாக 'டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது' என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது, ஆனால் இத்தமிழ் மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. நான்கு பாகங்களில் அமைந்துள்ள நாவலின் முதற் பகுதி  மட்டுமே. தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் மூல நூல் பற்றிய விரிவான தகவல்கள் இல்லை. மொழிபெயர்ப்பு ஆங்கிலத்திலிருந்தா அல்லது ருஷ்ய மொழியிலிருந்தா மொழிபெயர்க்கப்பட்டது போன்ற விபரங்கள் இல்லை. இதனால் இதனை வாசிப்பவர் இதனை மூல நாவலின் முழுமையான மொழிபெயர்ப்பாகக் கருதும் நிலை ஏற்படும்.

Saturday, December 23, 2023

ஒரு சந்திப்பு: எழுத்தாளர் மு.மேத்தாவுடன் , 'ஓவியா பதிப்பக' உரிமையாளர் வதிலைப்பிரபா!


ஓவியா பதிப்பக உரிமையாளரும், 'மகாகவி' சஞ்சிகையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருமான திரு.வதிலைப்பிரபா அவர்கள் கவிஞர் மு.மேத்தா அவர்களைச் சந்தித்து 'மகாகவி' சஞ்சிகை, ம. சேரனின்  "மூனு கோடு நோட்டு" (சென்ரியு கவிதைகள்) மற்றும் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எனது நாவலான 'நவீன விக்கிரமாதித்தன்' ஆகியவற்றைக் கொடுத்தது பற்றிய தகவலினை அனுப்பியிருந்தார். அவருக்கு என் நன்றி.  அக்காட்சிக்கான புகைப்படத்தினையும் அனுப்பியிருந்தார். அதனையே இங்கு காண்கின்றீர்கள்.

'நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்' வண்ணத்தில்..


அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இப்பாடலின் வரிகளைச் சிறப்பாகப் பாடி சமூக ஊடகங்களில் அனைவரையும் மகிழ்ச்சியிலாழ்த்தினார். அவருக்காக அவர் இரசித்து, மகிழ்ந்து பாடிய இப்பாடலின் முழு வடிவத்தையும் வண்ணத்தில் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

அமரர் ஜெயன் தேவா (மகாதேவா ஜெயக்குமரன்) நினைவாக..


நண்பர் ஜெயன் தேவா (மகாதேவா ஜெயக்குமரன்) மறைந்து ஆண்டு ஒன்று கடந்து விட்டது. ஜெயனை எனக்குப் பதிவுகள் இணைய இதழே அறிமுகம் செய்து வைத்தது. பின்னர் முகநூலில் நண்பராக அறிமுகமானார்.

அடிக்கடி அலைபேசியில் உரையாடா விட்டாலும் அவ்வப்போது உரையாடுவதுண்டு. நோயின் தாக்கத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கூட உரையாடுகையில் அது பற்றிக் குறைபட்டுக் கதைக்க மாட்டார். சமூக, அரசியல் விடயங்கள் பற்றியே உரையாடுவார்.  

அவரது தனிப்பட்ட வாழ்க்கை, கடந்த காலம் பற்றியெல்லாம் என்னுடன் அவர் உரையாடியதில்லை. ஆனால் அவர் விடுதலைப்புலிகளின்  மகளிர் அணியின் அரசியற் பிரிவின் தலைவியாகச் செயற்பட்ட தமிழினியின் இறுதிக்காலத்தில் அவரைத் திருமணம் செய்ததுடன் அவரது இலக்கிய முயற்சிகளுக்கு மிகுந்த ஆதரவாகச் செயற்பட்டார்.  அதனை அவரது வாழ்க்கையின் முக்கியமான , ஆரோக்கியமான விடயமாக நான் உணர்கின்றேன்.

Tuesday, December 19, 2023

முனைவர் செ.இராஜேஸ்வரியின் எம்ஜிஆர் பற்றிய நூல்கள்!


இவர் ஒரு மொழிபெயர்ப்பியலில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியை. இவர் முனைவர் செ.இராஜேஸ்வரி. மொழிபெயர்ப்பு, இதழியல், ஆய்வு, கற்பித்தல் எனப் பன்முக ஆளுமை மிக்க இவர் எம்ஜிஆரின் சினிமா, அரசியல் பற்றிய் ஆய்வுகளில் நாட்டம் மிக்கவர்.

எம்ஜிஆர் பற்றி விகடனில் தொடர் எழுதியவர். கனடாவிலிருந்து வெளிவரும் எழுத்தாளர் அகிலின் 'தமிழ் ஆதர்ஸ்.காம்' இணையத்தளத்தில் எழுதி வருபவர்.

இவரது நோக்கம் குறைந்தது 100 நூல்களையாவது எம்ஜிஆர் பற்றி எழுத வேண்டுமென்பது. இதுவரை பதினைந்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். மதுரையிலிருந்து சந்திரோதயம் என்னும் பதிப்பகம் வெளியிட்டு வருகின்றது.

இவரது எம்ஜிஆர் பற்றிய நூல்கள் இணையக் காப்பகத்தில் (Archive.org) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட முனைவர் வே.சீதாலட்சுமியின் 'தமிழ் நாவல்கள்' (அகர வரிசை)


உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட முனைவர் வே.சீதாலட்சுமியின் 'தமிழ் நாவல்கள்' (அகர வரிசை) முக்கியமானதோர் ஆவணம். இந்நூலில் 6298 நூலாக வெளிவந்த நாவல்களின் பெயர்ப்பட்டியலைத் தொகுத்திருக்கின்றார் முனைவர் வே.சீதாலட்சுமி.
 
இந்நூலில் எனக்குத்தெரிந்த ஒரு சில நாவல்களின் பெயர்களைத் தவிர நான் தேடிக்கொண்டிருக்கும் நாவல்கள் பலவற்றின் பெயர்களைக் காண முடிந்தது மகிழ்ச்சையைத் தந்தது.
 
உமாசந்திரனின் 'முழுநிலா', மாயாவியின் (எஸ். கே. இராமன்) மொழிபெயர்ப்பில்  வெளியான 'இளமைக்கனவு' (புகழ்பெற்ற அமெரிக்க நாவலான The Yearling' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. நாவலாசிரியர் Marjorie Kinnan Rawlings), கல்பனாவின் 'யுகசந்தி', மாயாவின் 'மூடுபனி' , ஜெகசிற்பியனின் 'மண்ணின் குரல்' போன்றவகை நான் தேடிக்கொண்டிருக்கும் நாவல்களில் அடங்குவன.
அக்காலகட்டத்தில் பல நாவல்களை எழுதியவர் எழுத்தாளர் பி.எம்.கண்ணன். இவரை இன்று தமிழ் இலக்கிய உலகு மறந்தேவிட்டதெனலாம். இவரது வெளியான நூல்களையெல்லாம் இத்தொகுப்பின் பட்டியலில் காணமுடிகின்றது.
 
மாயாவியின் மொழிபெயர்ப்பில் உருவான இளமைக்கனவு' நாவலை நாங்கள் அனைவருமே விரும்பி வாசித்தோம். கானகச்சூழலை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட சிறந்த நாவல். அப்பொழுது இயற்கை வளம் மலிந்த , கானகச்சூழலில் உறங்கிக்கிடக்கும் வவுனியாவில் வாழ்ந்து வந்ததால் இந்நாவலுடன் எங்களால் மிகவும் இலகுவாக மனதொன்றிட முடிந்திருக்கக் கூடும்.)
 
இவ்விதமான ஆவணங்கள் தமிழ் நாவல்கள் பற்றிய ஆய்வுகளுக்கு வழித்துணையாக இருப்பவை. அதனால் ஆரோக்கியமானவை..

Sunday, December 17, 2023

(பதிவுகள்.காம்) ஐம்பதுகளில் வெளியான வீரகேசரி பிரசுர நாவல் 'கே.வி.எஸ்.வாஸின் (ரஜனி) 'குந்தளப்பிரேமா' - வ.ந.கிரிதரன் -


'வீரகேசரி பிரசுர நாவல்கள் ஒரு பொது மதிப்பீடு' என்னும் அநுபந்தம் பேராசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்களால்  நா.சுப்பிரமணியம் என்னும் பெயரில் எழுதப்பட்டது. அப்பொழுது அவர் எம்.ஏ பட்டதாரி. யாழ்  பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பணியாற்றிக்கொண்டிருந்த காலகட்டம். வீரகேசரி ஐம்பதாவது நூற்பிரசுர விழாவில் அநுபந்தமாக வெளியிடப்பட்ட பிரசுரமிது. இப்பிரசுரத்தில் வீரகேசரி பிரசுரங்கள்  பற்றிப் பின்வருமாறு  குறிப்பிடப்பட்டிருந்தது:

"1972ஆம் ஆண்டில் தொடங்கிய வீரகேசரி பிரசுர முயற்சி ஆரம்பத்தில் ஆண்டொன்றுக்குச் சுமார் ஆறு பிரசுரங்களாகத் தொடங்கி, அதிகரித்து வந்து இப்பொழுது மூன்றாண்டுகளாக ஆண்டு ஒன்றுக்குப் பத்து நாவல்கள் என்ற அளவில் விரிவடைந்துள்ளது."

இவ்விதமே நானும் வீரகேசரி பிரசுரங்களும்  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, உள்ளூர் உற்பத்திக்கு முதன்மை கொடுக்கப்பட்டிருந்த சூழ்நிலை காரணமாக உருவாகின என்றே எண்ணியிருந்தேன். ஆனால் உண்மையில் அச்சூழலைப் பயன்படுத்தி வீரகேசரி பிரசுரங்கள்  அதிக அளவில் வெளிவந்திருந்தாலும் வீரகேசரி பிரசுரமாக 1951இலேயே நாவலொன்று வெளியாகியிருந்ததை அறிய முடிகின்றது.  அதனை எழுதியவர் எழுத்தாளர் கே.வி.எஸ்.வாஸ் (கும்பகோணம் வேதாந்தம் சீனிவாச ஐயங்கார்). நாவலின் பெயர் - குந்தளப்பிரேமா

Thursday, December 14, 2023

எனது படைப்புகளும் அவை பற்றிய ஆய்வுகளும்! - வ.ந.கிரிதரன் -

 


எனது படைப்புகள் பற்றி வெளியான ஆய்வுகள் பற்றி நானறிந்த தகவல்கள்  இவை. தமிழகம் , இலங்கையில பட்டப்படிப்பு மாணவர்களால், பேராசிரியர்களால் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை பற்றிய விபரங்கள் கீழேயுள்ளன. இவர்கள் அனைவருமே என் படைப்புகளூடு என்னைக் கண்டடைந்தவர்கள். நான் நேரில் அறிந்தவர்கள் அல்லர். படைப்புகள் தம் வாசகர்களைக் கண்டடையும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை மிக்கவன் நான். அவ்விதமான படைப்புகளே நின்று பிடிக்கும் என்பதிலும் நம்பிக்கை மிக்கவன் நான். 
 
நம்மவர்களில் ஒரு குறைபாடு. நாடறிந்தவர்களாகத் தாம் கருதும் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் தம் படைப்புகளைப் பற்றி அல்லது ஏனையவரின் படைப்புகளைப் பற்றிக் கூறவேண்டும். அவ்விதம் கூறினாலே அவை தரமானவை என்றொரு கருத்தோட்டமும் கொண்டவர்களாக அவர்கள் இருப்பதையே இவ்விதமான உளவியற் போக்கு எடுத்துக்காட்டுகின்றது. இது தவறான நிலைப்பாடு. அண்மையில் நடந்த எனது நூல்கள் பற்றிய நிகழ்வில் கூட தலைமை வகித்த எழுத்தாளர் பா.அ.ஜயகரன் தனது உரையில் 'எனது புகலிட அனுபவக் கதைகள் முக்கியமானவை. அவை பற்றிப் பலரும் எழுதுவதில்லை. அவர்களுக்குத் தான் கூறுவது என் கதைகளைப்பற்றி எழுதுங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இக்கூற்றுக்கான காரணமும் மேற்படி உளவியற் போக்கே. உண்மையில் எனது படைப்புகள் பற்றி , குறிப்பாகப் புகலிடப் படைப்புகள் பற்றி நிறையவே ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஆனால் அவர் கருதும் 'இலக்கிய மேதை'களின் எழுத்துகளில் அவை பற்றிக் காணவில்லையென்பதால் ஏற்பட்ட ஜயகரனது ஆதங்கமே அது. 

Tuesday, December 12, 2023

காதலர்தம் உணர்வுகளின் வெளிப்பாடு Ye Zulf Kaisi Hai!


அனில்தாவனும் ஜெயாபாதுரியும் நடித்த இத்திரைப்படப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. காரணம் மொழியல்ல. நடிப்பு. காதல்கொண்ட உள்ளங்களின்  உணர்வுகளை, செயல்களை மிகச்சிறப்பாகத் தம் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அனில்தாவனும், ஜெயாபாதுரியும். அடுத்த வீட்டு பெண்ணைப்போல் தோற்றமளிக்கும் எளிமையான தோற்றம் மிக்க ஜெயாபாதுரி சிறந்த நடிகைகளில் ஒருவர். பாத்திர உளவியலை உள் வாங்கி , உணர்வுகளை அளவாக வெளிப்படுத்தி நடிப்பதில் வல்லவர். காதலர்களின் உளவியலைத் தம் நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கும் இப்பாடல் என்னை மட்டுமல்ல கேட்பவர் அனைவரையும் கவர்வதில் வியப்புண்டோ?  https://www.youtube.com/watch?v=uVFd3T6Kcdo

மகாகவி பாரதியார் நினைவாக. ( பாரதியாரின் பிறந்ததினம் டிசம்பர் 11)


மகாகவி பாரதியார் என்னை மிகவும் கவர்ந்த தமிழ் எழுத்தாளர்களில் முதலிடத்தில் இருப்பவர். அவரது பிறந்ததினம்  டிசம்பர் 11. அதனையொட்டி ஏற்கனவே அவ்வப்போது முகநூலில் நான் எழுதிய பதிவுகள் சிலவற்றைத் தொகுத்திங்கே தருகின்றேன்.

1. மகாகவி பாரதியார் நினைவாக. ( பாரதியாரின் பிறந்ததினம் டிசம்பர் 11)

என்னை மிகவும் கவர்ந்த, பாதித்த இலக்கியவாதியென்றால் முதலில் நான் கருதுவது மகாகவி பாரதியாரைத்தான். முரண்பாடுகளற்ற மனிதர்கள் யாருளர். பாரதியிடமும் முரண்பாடுகளுள்ளனதாம். ஆனால் அவை அவரது அறிவுத் தாகமெடுத்த உள்ளத்தின் கேள்விகளின் பரிணாம வரலாற்றின் விளைவுகள்.  குறுகிய கால வாழ்வினுள் அவர் மானுட வாழ்வின் அனைத்து விடயங்களைப்பற்றியும் சிந்தித்தார். கேள்விகளையெழுப்பினார். அவற்றுக்குரிய விடைகளைத் தன் ஞானத்துக்கேற்ப அறிய முயற்சி செய்தார். இவற்றைத்தாம் அவரது எழுத்துகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

Sunday, December 10, 2023

(பதிவுகள்.காம்) ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - என்.கே.மகாலிங்கம் -


அண்மையில் நடந்த எனது மூன்று நூல்களின் வெளியீட்டில் வெளியான கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' நூலுக்கு எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் எழுதிய விமர்சனக் குறிப்பு. உடல் நிலை காரணமாக அவரால் அன்று அந்த நிகழ்வுக்கு வரமுடியவில்லை. அதுவரை எழுதி வைத்திருந்த குறிப்பினை அனுப்பியிருந்தார். அதனை நிகழ்வில் தலைமை வகித்த எழுத்தாளர் பா.அ.ஜயகரன் வாசித்தார். - வ.ந.கிரிதரன் -

ஒரு நகரத்து மனிதனின் பாடல் என்பது தான் இவர் இந்தத் தொகுதிக்கு வைத்த பெயர். ஆனால் எப்படியோ அது ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. (உண்மையில் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் பெயரில்தான் எழுதியிருந்தேன். காரணம் இக்கவிதை நகரமயமாதலால் ஏற்படும் சூழற் பாதுகாப்பு பற்றிய ஒருவனின் புலம்பல் என்பதால். - வ.ந.கிரிதரன் -)

இது இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. முதல் தொகுதி எழுக அதிமானுடா 1992 இல் வெளிவந்திருக்கிறது. அது எனக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை. ஆனால் எழுக அதிமானுடா என்பது எனக்கு பேர்ணாட் ஷா வின் மான் அன்ட் சுப்பர்மான் என்ற நாடகத்தையும் கடவுள் இறந்து விட்டார் என்று கூறிய பிரெடிரெக் நீட்ஷேயின் அதிமானிடனையும் நினைவுக்குக் கொண்டு வருகின்றன. அவை டாவினின் உயிர் பரிணாம வளர்ச்சியில் நிகழும் அடுத்த கட்டப் பாய்ச்சலாகவும் இருக்கலாம். அரவிந்தரின் பேரறிவு நிலையாகவும் இருக்கலாம்.

அஞ்சலி: 'ஆய்வுத் தேடல்' மிக்க பேராசிரியர் செ.யோகராசா மறைந்தார்!


பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் மறைந்துவிட்டதாக முகநூல் மூலம் அறிந்தேன். மிகவும் துயர் தரும் செய்தி. நான் மதிக்கும் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவர் இவர். இவரது இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் முக்கியத்துவம் மிக்கவை.

இவரை நான் சந்தித்ததில்லை. இவரது படைப்புகளூடு மட்டுமே அறிந்திருக்கின்றேன். எனது 'அமெரிக்கா' நாவல் தனிப்பதிப்பாக, இலங்கையில் 'மகுடம்' பதிப்பாக வெளியானபோது அதற்கு சிறப்பானதோர் அணிந்துரையினை எழுதியிருந்தார். அதனை எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருப்பேன்.

சென்னை வெள்ளம்: இயல்பு நிலை விரைவில் திரும்பட்டும்!



சென்னை மாநகர் மீண்டும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது. மனிதரின் சூழல் விரோத நடவடிக்கைகளால் உலகக் காலநிலை பெரிதும் மாறுதலடைந்துகொண்டு வருவதன் விளைவுதான் இத்தகைய காலநிலைச்சீர்கேடுகள்.

இவ்விதமான காலநிலைச் சீர்குலைவுகள் ஏற்படுகையில் அதிலிருந்து தப்பும் வழியில் மனிதர் தாம் வசிக்கும் நகரங்களை வைத்திருக்க வேண்டும். அமைக்க வேண்டும்.

(பதிவுகள்.காம்) அண்மையில் வெளியான வ.ந.கிரிதரனின் நூல்களைப் பற்றியதொரு சிறு குறிப்பு! - பரம்சோதி தயாநிதி -

 

- அண்மையில் வெளியான வ.ந.கிரிதரனின் நூல்களைப் பற்றிய தன் எண்ணங்களை அனுப்பி வைத்துள்ளார் கலை, இலக்கிய ஆர்வலரும், பொறியியலாளருமான  பரம்சோதி  தயாநிதி. -

நான் இலக்கியம் வாசிப்பது குறைவு. கிரிதரனின் புத்தக வெளியீட்டில் வாங்கிய புத்தகங்களின் பகுதிகளை சென்ற இரவுதான் வாசிக்க முடிந்தது. எனது மனதில் எழுந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் ”ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்” என்னும் புத்தகத்தில் உள்ள 9 கவிதைகளை வாசித்தேன். அப்பொழுதுதான் முதன் முதலாக கிரிதரனுக்குள்ளே இருக்கும் கவிஞனைக்கண்டேன். பலர் கவிதை என்ற பெயரில் எவையெல்லாமோ எழுதும்போது இக் கவிதைகள் தரம் மிகுந்தவையாகக் காணப்பட்டன.

எனினும் வாசித்த இரு கவிதைகள் எனக்கு விளங்கவில்லை. “குதிரைத் திருடர்களே …… “ என்ற கவிதையில் குதிரைகள் என்பது எதன் அடையாளம் (symbol) என்பது விளங்கவில்லை. ”ஆனை பார்த்தவர்” என்ற கவிதை குழப்பத்தை ஏற்படுத்தியது. “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” என்பதைத் தான் இக் கவிதையில் குழப்பமாகக் கூறுகிறாரா என்று சந்தேகம் வந்தது.

'டைம்' சஞ்சிகையின் நூற்றிலொருவர் எம்.சஞ்சயன்!


முனவைர் எம்.சஞ்சயன் (M. Sanjayan) 'சர்வதேசப் பேணுப்படுதல்' (Conservation International) என்னும் அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி. அமெரிக்காவில் வசிப்பவர்.  'பேணப்படுதல்' துறையில் அறிவியல் அறிஞரான இவர் எழுத்தாளரும் கூட. தொலைக்காட்சிகளில் இத்துறையில் செயற்படும் இவர் இயற்கையைப் பேணுவதன் மூலம் மானுடரின் வாழ்வை வளப்படுத்த வேண்டுமென்று செயற்படுபவர். இவரது கட்டுரைகள்  Science, Nature & Conservation Biology போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.  இவரது இயற்கையைப் பேணுதல் பற்றிய செயற்பாடுகளுக்காகவும், எழுத்துகளுக்காகவும் சர்வதேச ஊடகங்கள் பலவற்றின் கவனத்தை ஈர்த்திருப்பவர். 'சூழலியல் மற்றும் பரிணாம உயிரியல்' துறையில் . கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் ஓர் இலங்கைத் தமிழர்.  

அஞ்சலி: ரிவாட் அலாரீர் (Refaat Alareer)


பாலஸ்தீனக் கவிஞரும், காசாவிலுள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ரிவாட் அலாரீர் (Refaat Alareer) கடந்த புதன் இஸ்ரேல் காசா மீது நடத்திய குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து அவரது குடும்பத்தவர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இஸ்ரேலின் பலத்த குண்டுத்தாக்குதல்களுக்கு மத்தியிலும் கவிஞர் ரிவாட் அலாரீர் காசாவை விட்டு நீங்காமல் அங்கேயே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த இரங்கல்.

Saturday, December 2, 2023

ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலில் ஒரு காட்சி! - வ.ந.கிரிதரன் -


ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவல் 'ஒரு மனிதன்! ஒரு வீடு! ஒரு உலகம்!'. அதில் வரும் ஹென்றி மறக்க முடியாத மனிதன். மகத்தான மனிதன்.  விகடனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு , ஒரு உலகம்' தொடராக வெளிவந்த காலத்திலேயே விரும்பி வாசித்திருக்கின்றேன். அதனால் இவ்வோவியமொரு காலக்கப்பல். என்னை என் பால்ய பருவத்திற்கே காவிச்செல்லும் காலக்கப்பல்.

ஜெயகாந்தனின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இதுதான். இதில்வரும் ஹென்றி பாத்திரம் தி.ஜானகிராமனின் 'மோகமுள்' பாபு, யமுனா' போல் மனத்தை ஈர்த்த பாத்திரம். நாவலில் தகப்பனின் கிராமத்துக்கு வரும் ஹென்றியின் அனுபவங்கள் மறக்க முடியாதவை. தந்தையுடன் 'பப்பா என்றழைத்து நடத்தும் உரையாடல்களை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை. அவ்வுரையாடல்களை வாசிக்கையில் என் பால்ய காலத்தில் வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அப்பாவின் சாறத்தில் படுத்திருந்தபடி , அண்ணாந்து விண்ணைப்பார்த்தபடி  ,  எதிரே விரிந்திருக்கும் விண்ணில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களைப்பற்றி, கோடிழுக்கும் எரிநட்சத்திரங்களைப் பற்றி, அவ்வப்போது விரையும் செயற்கைக்கோள்களைப் பற்றி உரையாடிய தருணங்களை என் மனம் அசை மீட்டிப் பார்க்கும்.  ஒரு நாவலின் வெற்றி இது போன்ற வாசக அனுபவங்களில்தாம் உள்ளது.

கனடாவில் வெளியான முதலாவது நாவல் , கவிதைத்தொகுப்புகள் பற்றி...

அண்மையில் 'டொராண்டோ'வில் ஊடறு மற்றும் தேடகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையகா நிகழ்வினை நெறிப்படுத்திய எழுத்தாளர் பா.அ.ஜயகரன் சமூகச் செய...

பிரபலமான பதிவுகள்