'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Sunday, December 10, 2023
(பதிவுகள்.காம்) அண்மையில் வெளியான வ.ந.கிரிதரனின் நூல்களைப் பற்றியதொரு சிறு குறிப்பு! - பரம்சோதி தயாநிதி -
- அண்மையில் வெளியான வ.ந.கிரிதரனின் நூல்களைப் பற்றிய தன் எண்ணங்களை அனுப்பி வைத்துள்ளார் கலை, இலக்கிய ஆர்வலரும், பொறியியலாளருமான பரம்சோதி தயாநிதி. -
நான் இலக்கியம் வாசிப்பது குறைவு. கிரிதரனின் புத்தக வெளியீட்டில் வாங்கிய புத்தகங்களின் பகுதிகளை சென்ற இரவுதான் வாசிக்க முடிந்தது. எனது மனதில் எழுந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.
முதலில் ”ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்” என்னும் புத்தகத்தில் உள்ள 9 கவிதைகளை வாசித்தேன். அப்பொழுதுதான் முதன் முதலாக கிரிதரனுக்குள்ளே இருக்கும் கவிஞனைக்கண்டேன். பலர் கவிதை என்ற பெயரில் எவையெல்லாமோ எழுதும்போது இக் கவிதைகள் தரம் மிகுந்தவையாகக் காணப்பட்டன.
எனினும் வாசித்த இரு கவிதைகள் எனக்கு விளங்கவில்லை. “குதிரைத் திருடர்களே …… “ என்ற கவிதையில் குதிரைகள் என்பது எதன் அடையாளம் (symbol) என்பது விளங்கவில்லை. ”ஆனை பார்த்தவர்” என்ற கவிதை குழப்பத்தை ஏற்படுத்தியது. “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” என்பதைத் தான் இக் கவிதையில் குழப்பமாகக் கூறுகிறாரா என்று சந்தேகம் வந்தது.”நவீன விக்கிரமாதித்தனில்” எனும் நாவலின் முதல் இரு அத்தியாயங்களை மட்டுந்தான் இதுவரை வாசித்தேன். வித்தியாசமான முறையில் கதை செல்கிறது. விக்கிரமாதித்தனின் ஒரு கற்பனையா “மனோரஞ்சிதம்” என்ற சந்தேகம் ஏனோ வந்தது. முழுமையாகப் படிக்காமல் ”சந்தேகப்படுகிறேன்” என்று எழுதுவது சரியா என்று தெரியவில்லை.
விக்கிரமாதித்தன் மகா கவிஞரை ”இவர் மகா கவிஞரல்ல, மகா புலவர்” என்பது சுவாரஸ்யமாக இருந்தது. அதைப்பற்றிச் சிறிது சிந்தித்தபோது ”கவிஞர், புலவர் என்று இருமையாகப் பார்ப்பது சரியா ? இவர்கள் எல்லோருமே ஒரு “தொடர்ச்சி” யின் (continuum) இடையில் இருப்பவர்களல்லவா?” என்று தோன்றியது. ”கதை தானே அதில் உள்ள விக்கிரமாதித்தன் கதாபாத்திரம் அப்படி நினைத்தது” என்று என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டேன்.
கவிஞரின் “ என்ன பலமான சிந்தனை” ஐத் தொடர்ந்து நடந்த உரையாடலைப் பார்த்தபொழுது கவிஞரில் மாத்திரமல்ல விக்கிரமாதித்தனிலும் உள்ள புலவர்ப் பக்கம் வெளிப்பட்டது.
கடைசியாக, கட்டுரைகளில் முதலாவது கட்டுரையான “பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு”: அதில் “அல்லா”, “மகா சக்தி வாழ்த்து”, ”உலகத்தை நோக்கி வினவுதல்” என்பனவற்றில் பாரதியார் கருத்து முதல்வாதியாகவும் வேறு சிலவற்றில் பொருள் முதல்வாதியாகவும் தெரிவதாகக் கூறி அவை இரண்டுக்குமிடையிலான சமரசப் போக்கைக் கடைப்பிடிப்பதாக எழுதப்பட்டுள்ளது. அத்துடன் இதனைப் பாரதியாரின் வளர்சிப் படிக்கட்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கும் இக் கருத்து உடன்பாடே. எனினும் பாரதியாரை ஒருமைவாதியாகப் (monist) பார்ப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
பாரதியார் monist ஆக இருந்துகொண்டு மக்களின் சமய நம்பிக்கைகளுக்கு எதிராகப்போனால், சொல்லப்படும் நல்ல விஷயங்களையும் ஏற்க மாட்டார்கள் என்பதனால் அவர்களின் நம்பிக்கைக்கூடாகவே தாம் கூற விரும்பும் விஷயங்களைச் சொல்கிறார்; அதனால் முரண்பாடுகள் இருப்பது போல் தோன்றுகின்றன என எண்ணுகிறேன். மேலும் இந்து சமயத்திலும் monism அத்வைத வேதாந்த வடிவத்தில் இருப்பதால் இந்து மக்களில் ஒரு பகுதியினராவது அதனை ஏற்பது இலகுவாக இருக்கும்.
சில உதாரணங்கள்
*பாரதி-அறுபத்தாறு*
*மரணத்தை வெல்லும் வழி*
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்:
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்;
அன்னோர்கள் உரத்ததன்றிச் செய்கையில்லை
*அத்வைத நிலை* கண்டால் மரணமுண்டோ ?
*கடவுள் எங்கே இருக்கிறார்*?
சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல் லென்று ஹைரணியந்தான் உறுமிக் கேட்க,
நல்லதொரு மகன் சொல்வான்:-'தூணி லுள்ளான்
நாரா யணந்துரும்பி லுள்ளான்'என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை.
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை;
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை;
*அனைத்துமே தெய்வமென்றால்* அல்லலுண்டோ ?
Subscribe to:
Post Comments (Atom)
கனடாவில் வெளியான முதலாவது தமிழ்ச் சஞ்சிகை 'நிழல்'!
கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் பலர் போதிய ஆய்வின்றித் தவறான தகவல்களை உ ள்ளடக்கிக் கட்டுரைகளை எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது. கனடாவ...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
No comments:
Post a Comment