Sunday, December 10, 2023

சென்னை வெள்ளம்: இயல்பு நிலை விரைவில் திரும்பட்டும்!



சென்னை மாநகர் மீண்டும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது. மனிதரின் சூழல் விரோத நடவடிக்கைகளால் உலகக் காலநிலை பெரிதும் மாறுதலடைந்துகொண்டு வருவதன் விளைவுதான் இத்தகைய காலநிலைச்சீர்கேடுகள்.

இவ்விதமான காலநிலைச் சீர்குலைவுகள் ஏற்படுகையில் அதிலிருந்து தப்பும் வழியில் மனிதர் தாம் வசிக்கும் நகரங்களை வைத்திருக்க வேண்டும். அமைக்க வேண்டும்.ஒரு காலத்தில் குகைகளில் வாழ்ந்த மனிதர் காலநிலையிலையிருந்து தப்புவதற்காக, பாதுகாப்புக்காக நகரங்களை, இருப்பிடங்களை அமைத்தனர். இன்றைய மனிதர் தாம் ஏற்படுத்திய காலநிலைச் சீர்குலைவுகளிலிருந்து தப்புவதற்காக மீண்டும் தம் நகர் அமைப்பு, இருப்பிட அமைப்பு போன்றவற்றை அமைப்பதில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.

பொருளியல்ரீதியிலான ஆசை கண்ணை மூடிவிட்டதன் விளைவுதான் நகரங்களின் சீர்குலைந்த வடிகால் அமைப்புகள். இருக்கும் கொஞ்ச நிலத்தையும் கைப்பற்றும் ஆசை அளவுக்கு மீறி, இருக்கும் நீர்நிலைகளை மூடி அவ்விடங்களில் கட்டடக்காட்டினை எழுப்புவதும், 'காங்ரீட்'டால் நகரத்தின் நிலத்தை மூடிவிடுவதும் நகரமொன்றுக்கு இருக்க வேண்டிய வடிகால்களின் எண்ணிக்கையைக் குறைத்து விட்டன.

அண்மைக்காலத்தில் இரண்டாவது தடவையாக இவ்விதமான வெள்ளத்தால் நகர் மூடிக்கிடக்கின்றது. இனியாவது தொலைநோக்கில் சிந்தித்து அரசியல்வாதிகள், நகர் அமைப்பு நிபுணர்கள், விதிகளை அமுல்படுத்தும் நகர் அமைப்பு அதிகாரிகள் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இப்பெருவெள்ளம் எடுத்துக்காட்டுகின்றது.

இப்பெருவெள்ளத்தின் பாதிப்பு முற்றிலும் நீங்கி, இதன் பாதிப்பால் பெரும் சிரமங்களை அனுபவிக்கும் அனைவரும், முகநூல் நண்பர்கள் அனைவர்தம் இடர்களும் நீங்கி, சூழல் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டுவோம்.

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்