Tuesday, April 30, 2024
'மணிக்கொடி' தந்த ஜோதிர்லதா கிரிஜா!
கடந்த 18.04-2024 அன்று மறைந்த எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜாவின் முக்கியமான நாவல் 'மணிக்கொடி'. இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து கல்கியின் 'அலை ஓசை' , ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்' ஆகியவை ஏற்கனவே வெளியாகியுள்ளன. அவ்வரிசையில் வெளியான இன்னுமொரு நாவல்தான் ஜோதிர்லதா கிரிஜாவின் 'மணிக்கொடி'.
Sunday, April 28, 2024
காலத்தால் அழியாத கானம்: 'ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்..'
எஸ்.எஸ்.ஆர் & விஜயகுமாரி, கே.வி.மகாதேவன், கவிஞர் கண்ணதாசன் கூட்டணியிலுருவான இன்னுமொரு காலத்தால் அழியாத கானமிது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் 'சாரதா' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது இப்பாடல்.
காதலின் சிறப்பை, இயல்பை அற்புதமாகச் சித்திரித்திருக்கின்றார் கவிஞர். காதலின் பல்வேறு கூறுகளையும் (உறவு, உணர்வு, பிரிவு, நினைவு என) எழுத்தில் வடிப்பதென்றால் கவிஞருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.
https://www.youtube.com/watch?v=3bzUv0io7mE&list=RD3bzUv0io7mE&start_radio=1
Friday, April 26, 2024
கனடாவில் வெளியான முதலாவது நாவல் , கவிதைத்தொகுப்புகள் பற்றி...
Thursday, April 25, 2024
ஜெயகாந்தன் நினைவாக.......
| - எழுத்தாளர் ஜெயகாந்தனின் இளமைத்தோற்றம். - |
எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த தினம் ஏப்ரில் 24.
எழுத்தாளர் ஜெயகாந்தன் என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை. வெகுசனப் படைப்புகளில் மூழ்கிக்கிடந்த பருவத்தில் வெகுசன ஊடகங்களினூடு, வித்தியாசமானவராக அறிமுகமாகி என்னைக் கவர்ந்தவர் ஜெயகாந்தன். இவர் பெயரை நான் முதன் முதலில் கேட்டது என் பெற்றோரின் உரையாடலொன்றின்போதுதான். அவர்கள் ஆனந்தவிகடனில் வெளியான இவரது 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன', 'கோகிலா என்ன செய்து விட்டாள்' போன்ற முத்திரைக்கதைகளாக வெளியான குறுநாவல்களைப்பற்றி உரையாடியபோதுதான் முதன் முதலில் இவரது பெயரை நான் அறிந்துகொண்டேன்.
ஜெயகாந்தனின் 'கைவிலங்கு' குறுநாவல் கல்கியில் வெளியானது. இதுவே பின்னர் 'காவல் தெய்வ'மாகத் திரைக்கு வந்தது. அதே பெயரில் ராணிமுத்து பிரசுரமாகவும் வெளியானது. எழுத்தாளர் சாவியை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'தினமணிக்கதிர்' ஜெயகாந்தனின் 'ஒரு பிடி சோறு' சிறுகதைத்தொகுப்பிலிருந்த சிறுகதைகள் பலவற்றை மீள்பிரசுரம் செய்தது. இவரது புகழ்பெற்ற 'டிரெடில்', 'பிணக்கு', 'ஒரு பிடி சோறு', 'ராசா வந்துட்டாரு' போன்ற சிறுகதைகளை அப்போதுதான் வாசித்தேன்.
ஹெமிங்வேயின் 'கிழவனும் கடலும்'
ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் 'கிழவனும் கடலும்' (The Old Man and The Sea) உலக இலக்கியத்தில் முக்கியமான நாவல். இது ஒரு விரிந்து பரந்த நாவலல்ல. சிறியதொரு நாவல். இந்நாவல் ஹெமிங்வேயிற்கு புலியட்சர் பரிசைப் பெற்றுத்தந்தது. நோபல் பரிசினையும் பெற்றுத்தந்தது. ரொபின்சன் குரூசோ, மோபி டிக் போன்று கடலுடன் சம்பந்தப்பட்ட நாவல் மட்டுமல்ல , அவற்றைபோல் மானுட இருப்பின் குறியீடாக விளங்குமொரு நாவல்.
இந்நாவலில் வரும் சண்டியாகோக் கிழவன் மறக்க முடியாத பாத்திரம். இந்நாவல் முதுமையைப்பற்றிப் பேசுகிறது. நட்பைப் பற்றிப் பேசுகிறது. பாசத்தைப் பற்றிப் பேசுகிறது. சக உயிர்களைப்பற்றிப் பேசுகிறது. உயிர்களின் விடா முயற்சி பற்றிப் பேசுகிறது. இயற்கையைப்பற்றிப் பேசுகிறது. மானுட இருப்பு பற்றிப் பேசுகிறது.
ஹெமிங்வேயின் நடை சிறப்பு மிக்கது.ம் தனித்துவமானது. வாசகர்களைக் கட்டிப்போட்டு விடுவது.
ஒரு நாவலின் வெற்றிக்கு அதன் பக்கங்களின் எண்ணிக்கை காரணமல்ல என்பதை வெளிப்படுத்தும் சிறுநாவல் 'கிழவனும்,கடலும்).
Wednesday, April 24, 2024
வான் பாயும் பட்டாணிச்சுப்புளியங்குளம் தந்த வான் பாய்தல் பற்றிய சிந்தனைகள்!
மாரியில் மழை பெய்து பட்டாணிச்சுப்புளியங்குளம் நிறைந்து வழிகையில் வான் பாயுமொலி இரவின் இருளை, அமைதியைத் துளைத்துக்கொண்டு கேட்கும். குருமண்காட்டுப்பகுதி ஒற்றையடிப்பாதையுடன் கூடியதொரு பகுதி. சில வீடுகள் , நெசவு சாலை, பண்ணையுடன் கூடிய இயற்கை வளம் மலிந்த பகுதி. அப்பகுதியில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. படுக்கையில் படுத்திருந்தபடி வான் பாயும் ஒலி கேட்டுக்கொண்டிருப்பேன். விடிந்ததும் ஊரவர்கள் வான் பாயும் குளத்தைப் பார்க்கச் சென்று விடுவார்கள். நானும் சென்று பார்ப்பேன். வான் பாயுமிடத்தில் இரவெல்லாம் வெங்கணாந்திப்பாம்புகள் காத்திருந்து அவ்வழியால் சென்று விடும் விரால் மீன்களைப் பிடிக்குமாம் என்பார்கள். ஊரவர்கள் சிலரும் விரால்களைப் பிடிப்பார்கள்.
என் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த குளம் பட்டாணிச்சுப்புளியங்குளம். இக்குளம் நிறைந்து வான் பாயும் காட்சியும் அத்தகையதே.
தொடர் நாவல்: மனக்கண் (5) - சலனம் - அ.ந.கந்தசாமி -
பார்க்கப் போனால் மனித வாழ்க்கை எவ்வளவு அதிசயமானது? சில சமயம் மிகச் சிறிய சம்பவம் கூட நமது வாழ்க்கையை எவ்வளவு பெரிய அளவில் பாதித்து விடுகிறது? பத்மாவின் வாழ்க்கையிலே, பஸ் தரிப்பில் அவள் கொட்டாஞ்சேனை பஸ்ஸிற்காகக் காத்திருந்த அந்த இருபது முப்பது நிமிஷங்களில் ஒரு பெரிய நாடகமே நடந்து முடிந்துவிட்டது! சில சமயம் ஓடும் ரெயிலில் தற்செயலாக ஏற்படும் ஒரு சந்திப்பு, திருவிழாக் கூட்டத்தில் ஏற்படும் ஒரு பரிச்சயம், வீதியில் இரண்டு விநாடியில் நடந்து முடிந்துவிடும் ஒரு சம்பவம், சில போது வாழ்க்கையின் போக்கையே புதிய திசையில் திருப்பிவிட்டு விடுகிறது. உலகப் பெரியார் என்று போற்றப்படும் காந்தி அடிகளின் வாழ்க்கையில், அவர் தென்னாபிரிக்காவில் ஒரு ரெயில் பெட்டிக்குள் புகும்போது ஒரு வெள்ளை வெறியனால் தடை செய்யப்பட்டதால் ஏற்பட்ட சில நிமிஷ நேர நிகழ்ச்சி அவருக்கு ஏகாதிபத்தியத்தின் தன்மையை நன்குணர்த்தி, அவர் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியதோடு, ஒரு தேசத்தின், ஏன் ஒரு கண்டத்தின், அரசியல் போக்கையே முற்றாக மாற்றிவிடவில்லையா? ஆள்வோனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இருக்கும் தாரதம்மியத்தை அந்த ரெயில் பெட்டியில் அவர் அன்று அனுபவ ரீதியில் கண்டதுதான், அவரை ஆசியாவின் சார்பிலே சுதந்திர முழக்கம் செய்யும்படி ஊக்கியது!
சில நிமிஷ நேரங்களில் நடந்து முடிந்துவிட்ட ஒரு சிறிய சம்பவம் -- ஆனால் அதன் பலனோ மிக பெரியது. பஸ் தரிப்பில் எல்லோரையும் போல், பஸ்சுக்காகக் காத்துக்கிடக்கும் சலிப்பைப் போக்குவதற்காகப் பத்மாவும் தங்கமணியும் ஆரம்பித்த உரையாடல் இவ்வாறு தனது உள்ளத்தையே பிழிந்தெடுத்து வெம்ப வைக்கும் ஒரு பெரும் அதிர்ச்சி சம்பவமாக முடிவுறும் என்று பத்மாவால் எண்ணியிருக்க முடியுமா? தங்கமணி ஸ்ரீதரின் சமூக அந்தஸ்தைப் பற்றிக் கூறிய தகவல்கள், அதைத் தொடர்ந்து அங்கே வந்த ஸ்ரீதரின் கார் டிரைவர் கூறிய விவரம் - எல்லாம் சேர்ந்து பத்மாவின் உள்ளத்தை ஒரே கலக்காகக் கலக்கிவிட்டன.
பஸ்ஸில் ஏறி வசதியாக ஒரு ஜன்னலண்டை உட்கார்ந்து நண்பகலின் சூரிய வெளிச்சத்தில் வெண் புறாவின் ஒளி வீசும் சிறகுகளைப் போன்ற பளபளப்போடு வானத்தில் ஓடிக்கொண்டிருந்த முகில்களைப் பார்த்துக் கொண்டிருந்த பத்மாவின் உள்ளத்தில் “ஸ்ரீதர் ஏன் இப்படிப்பட்ட பொய்யை எனக்குச் சொல்ல வேண்டும்? ஏன் என்னை இவ்வாறு ஏமாற்ற வேண்டும்? இதில் ஏதோ பெரிய மோசடி இருக்கிறது. இவ்விஷயம் அப்பாவுக்குத் தெரிந்தால், அவர் என்ன நினைப்பார்?” என்பது ஒன்றன்பின்னொன்றாக வந்துக்கொண்டிருந்தன.
ஒருவனுக்குக் கவலை ஏற்பட்டால் அந்தக் கவலையின் அமுக்கத்திலிருந்து தனது மனதை விடுவித்துக்கொள்ள, அவன் எங்காவது ஒரு மூளையில் ஆறுதலாக உட்கார்ந்து கண்ணீர் கொட்டி அழுவதற்கு விரும்புகிறான். ஆனால் அதற்குக் கூட வசதியான இடம் கிடைக்க வேண்டுமே! அவ்வித வசதியான இடம் கிடைத்ததும் அவன் சந்தோஷத்துடன் அங்கே உட்கார்ந்துகொண்டு தன் துயரம் முற்றிலும் போகும் வரை கண்ணீர் விட்டு அமைதி காண்கிறான்.
Tuesday, April 23, 2024
தொடர் நாவல் : மனக்கண் (4): அத்தியாயம் நான்கு - தங்கமணி - அ.ந.கந்தசாமி -
4-ம் அத்தியாயம்: தங்கமணி
“வழமையான இடம்” என்று கடிதத்தில் குறிக்கப்பட்டிருந்த இடம் பல்கலைக் கழக நூல் நிலையத்துக்குச் சமீபமாக அமைந்திருந்த ஒரு நடை சாலையாகும். உயர்ந்து, தூண்களுடனும் சிமெந்துத் தரையுடனும் விளங்கிய அந்நடைசாலை மாணவர்கள் சந்தித்துப் பேச வாய்ப்பான இடமாயிருந்தது. அந்நடைசாலையின் ஒரு புறத்தில் மேல் வீட்டுக்குச் செல்லும் அகலமான படிக்கட்டுக்கு அருகாமையில் இரண்டு தூண்களுக்கு இடையிலிருந்த இடைவெளியே பத்மாவும் ஸ்ரீதரும் சந்திக்கும் 'வழமையான இடம்.' இந்த இடத்தைத் தெரிந்தெடுத்துப் பழக்கப்படுத்தியதில் ஸ்ரீதரைவிட பத்மாவுக்கே முக்கிய பங்குண்டு. எவரும் அதிகம் சந்தேகிக்காதபடி 'ஏதோ தற்செயலாகச் சந்தித்தவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்' என்று எண்ணக்கூடிய முறையில் ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்துப் பேசுவதற்கு இது போன்ற நல்ல இடம் கிடையாதென்பதே பத்மாவின் எண்ணம். ஒரு நாள் இக் கருத்தைப் பத்மா கூற, ஸ்ரீதரும் அதை ஏற்றுக் கொண்டு விட்டதால், அதுவே இப்பொழுது ஸ்ரீதரின் எண்ணமுமாகிவிட்டது. பார்க்கப் போனால், நல்ல விஷயத்தைக் கூட இருளில் மூலையில் தனித்திருந்து பேசினால் காண்பவர்களுக்குச் சந்தேகமேற்படுகிறது. ஆனால் அதே விஷயத்தை ஒளிவு மறைவில்லாத திறந்த இடத்தில் இருவர் பேசிக்கொண்டு நின்றால் அவ்வித ஐயப்பாடு ஏற்படுவதில்லை. மற்ற மாணவர்களோ ஆசிரியர்களோ தங்களைக் காதலர்கள் என்று சந்தேகிக்கக் கூடாதென்ற எண்ணத்தினாலேயே பத்மாவும் ஸ்ரீதரும் இந்த இடத்தைத் தெரிந்தெடுத்திருந்தார்கள். ஆனால் உண்மையிலேயே மற்றவர்கள் ஏமாறினார்களா என்பது வேறு விஷயம். ஓர் ஆணுக்கும் பெண்ணும் - சங்க மரபில் ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் - காதல் ஏற்பட்டதும் அவர்களுக்கு எவ்வளவு கள்ளப் புத்திகள் எல்லாம் தோன்றிவிடுகின்றன! தம்மிடையே இருக்கும் காதலை மறைக்க அவர்கள் எத்தனை உபாயங்களைக் கைக்கொள்கிறார்கள்? அதனால் தான் நமது முன்னோர் காதலைக் களவென்று அழைத்தார்கள். எவ்வளவு பொருத்தமான பெயர்!
மறக்க முடியாத ஆளுமையாளர் சத்தியமூர்த்தி மாஸ்டர்!
அராலி வடக்கில் வசித்த காலத்தில் எம் குடும்பத்துடன் நன்கு பழகியவர்களில் ஒருவர். ஆசிரியையான அம்மா மீது மிகுந்த மதிப்பையும், அன்பையும் வைத்திருந்தவர் இவர்.
ஆரம்பத்தில் கட்டுப்பெத்த தொழில் நுட்பக் கல்லூரியில் பொறியியல் கற்றவர். அதன் பின் அமெரிக்கா சென்று பட்டப்படிப்பை முடித்தவர். இவ்விதமே நான் அறிந்திருக்கின்றேன். ஊர் திரும்பியவர் ஆசிரியத் தொழிலை விரும்பி ஏற்று அதனையே தன் வாழ்க்கைத்தொழிலாகத் தொடர்ந்தார். சக மானுடர் மீது பேரன்பு கொண்டவர். அனைவரினதும் அன்பினையும் பெற்றவர்.
எனக்கு இவரைப்பற்றி நினைத்ததும் முதலில் நினைவுக்கு வருவது 1977 ஆம் ஆண்டின் நவம்பர் 30. அன்று ஶ்ரீதர் திரையரங்கில் நண்பர்களுடன் 'தாயைக் காத்த தனயன்' திரைப்படத்தை 'மாட்னி ஷோ'வாகப் பார்த்து மாலை வீடு திரும்பபோது இவர் எனக்காகக் காத்திருந்தார். நான் பஸ்ஸிலிருந்து இறங்கியபோது வந்த என்னை அரவணைத்தவாறு வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். அவ்விதம் செல்கையில் நான் அதிர்ச்சியடையாத வகையில் என் அப்பா இறந்த செய்தியினைத் தெரிவித்து என்னை ஆறுதல் படுத்தினார்.
உலகப் புத்தக நாள்
இன்று, ஏப்ரில் 23, உலகப்புத்தக நாள். என்னைப்பொறுத்தவரையில் வாசிப்பு என்பது என் மூச்சு போன்றது. எனக்கு வாசிக்கத்தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு நாளுமே புத்தகநாள்தான். எண்ணிப்பார்க்கின்றேன். வாசிப்பும், யோசிப்பும் அற்று ஒரு நாள் கூடக் கழிந்ததில்லை.
ஆனால் வாசிப்புக்காக ஒரு நாளை ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. பெரும்பாலானவர்கள் வாசிப்பின் முக்கியத்துவம் தெரியாமல் , புரியாமல் வாழ்கின்றார்கள். அவர்களைப்போன்றவர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை உணர்த்த இது போன்ற நாளொன்று அவசியமானது.
மானுடர்கள் வாசிப்பின் அவசியத்தை உணரவேண்டும். வாசிப்பு எத்தகையாதகவுமிருக்கலாம், ஆனால் அது தேவையான ஒன்று. புனைவாகவிருக்கலாம், அபுனைவாகவிருக்கலாம், கவிதையாகவிருக்கலாம் , இவ்விதம் எத்துறை சார்ந்ததாகவுமிருக்கலாம். ஆனால் அது முக்கியமானது.
வாசிப்பு சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்கின்றது. வாசிப்பு இன்பத்தைத்தருகின்றது. வாசிப்பு இருப்புக்கோர் அர்த்தத்தைத் தருகின்றது.
எழுத்து ஒரு கலையாகவிருக்கலாம், தொழில்நுட்ப வழிகாட்டியாகவிருக்கலாம். ஆனால் அது முக்கியமானது.
புத்தகத்தின் வடிவம் எத்தகையதாகவுமிருக்கலாம். அது அச்சு வடிவிலிருக்கலாம். டிஜிட்டல் வடிவிலுமிருக்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சி அதன் வடிவத்தை மாற்றினாலும், புத்தகம் புத்தகம்தான்.
புத்தகங்களை எந்நாளும் வாசிப்போம். புத்துணர்வினை, இன்பத்தினை அடைவோம். படைப்பாற்றலைப் பெருக்குவோம். சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்குவோம். சிந்தனைத் தெளிவை அடைவோம்.
புத்தகங்கள் எம் வழிகாட்டிகள் மட்டுமல்ல, ஆசிரியர்கள் மட்டுமல்ல, எம் தோழர்களும் கூடத்தான்.
இந்நாளில் நான் இதுவரை வாசித்த நூற்றுக்கணக்கான நூல்களை எண்ணிப்பார்க்கின்றேன். அவற்றுக்கு நான் தலை வணங்குகின்றேன். இதுவரை கால என் இருப்பில் என்னுடன் கூடப் பயணித்ததற்காக, என் வாழ்வில் ஓர் அர்த்தம் தந்ததற்காக.
இத்தருணத்தில் இந்நூல்களை எழுதிய எழுத்தாளர்களை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். அவர்கள் சமூக, பொருளாதார,அரசியல் சவால்களுக்கு மத்தியில் இயங்கியவர்கள். தம் சிந்தனைகளை மானுடர்களின் வளர்ச்சிக்காக, இன்பத்துக்காக எழுத்தில் வடித்து வைத்தவர்கள்.
Monday, April 22, 2024
எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இன்று - ஏப்ரில் 22 - பிறந்தநாள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில், உலகத்தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர். சிறுகதை, கவிதை,நாவல் என இவரது இலக்கியப் பங்களிப்பு இருந்தாலும், முக்கியமான பங்களிப்பு இவரது சிறுகதைகளே என்பேன். இவரது சிறுகதைகள் பல தொகுப்புகளாக (மாற்றம் (1980), உலா (1992), சட்டநாதன் கதைகள் (1995), புதியவர்கள்- (2006), முக்கூடல் - (2010), பொழிவு - (2016), தஞ்சம் (2018)) வெளியாகியுள்ளன.
இவரது கதைகளைப்பற்றி அமரர் கலை, இலக்கியத் திறனாய்வாளர் ஏ.ஜே.கனகரத்தினா 'மென்மையான உணர்வுகளை கலை நயத்தோடும் மனித நேயத்தோடும் வெளிப்படுத்துவதில் ஆசிரியர் வெற்றி பெறுவதால், ஈழத்துச் சிறுகதை உலகில் சட்டநாதன் தனது தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளார்' என்று கூறுவார்.
Sunday, April 21, 2024
எம்ஜிஆரின் 'என் தங்கை'
Friday, April 19, 2024
எம்ஜிஆருக்கு இளவயதில் அரசியல் போதித்தவர் என்.எஸ்.கே!
Wednesday, April 17, 2024
Infowhiz Systems's Services: domain registration, hosting, web design, online security, and email!
இன்ஃபோவிஷ் சிஸ்டம்ஸ் (Infowhiz Systems) domain registration, hosting, web design, online security, and email ஆகிய சேவைகளை நியாயமான விலையில் வழங்குகின்றது. அதன் சேவைகளைப் பாவியுங்கள்! பயனடையுங்கள்!
https://www.infowhizsystems.com/
Tuesday, April 9, 2024
சூரிய கிரகணமும் எம் அந்தர இருப்பும்!
நேற்று நடந்த சூரிய கிரகணம் தற்போதுள்ள சூழலில் மனித வாழ்நாளில் ஒரே தடவையே பார்க்கக் கூடியதொரு வானியல் நிகழ்வு. எதிர்காலத்தில் மருத்துத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மானுட வாழ்வைப் பல நூறு வருடங்களுக்கு அதிகரிக்குமென்பது அறிவியல் அறிஞர்களின் நம்பிக்கை. அதுவரை இது முக்கியமானதொரு மானுட வாழ்நாளில் பார்க்க வேண்டியதொரு வானியல் நிகழ்வு.
கணத்துக்குக் கணம் விரிந்துகொண்டிருக்கும் பெரு வெளியில் , பெரு வேகத்துடன் விரைந்து கொண்டிருக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகியவற்றின் அந்தர இருப்பையும், அதில் இருக்கும் எம் இருப்பையும் புரிய வைத்த, உணர வைத்த அற்புதமானதொரு நிகழ்வு. எமது இருப்பு எவ்வளவு ஆச்சரியமானது. நாமிருக்கும் பூமி விரையும் வேகம் எமக்குத் தெரிவதில்லை. அதை நாம் உணர்வதில்லை. ஆனால் வானில், நம்மைச்சுற்றி எல்லாமே இயங்கிக்கொண்டுதானுள்ளன. ஒரு கணமேனும் ஓய்வற்ற ஓயாத இயக்கங்களுக்குள் இயங்கிக்கொண்டிருக்கினறோம். எல்லாமே ஓய்வற்று இயங்கிக்கொண்டிருக்கின்றன.
இவ்விதமான நிகழ்வுகள் எமக்கு இப்பிரபஞ்சத்தில் எம் இருப்பைப் புரிய வைக்கின்றன. எம்மைப்பற்றிச் சிந்திக்க வைக்கின்றன. இவை பற்றியெல்லாம் சிந்தித்தால், உணர்ந்தால் கணத்துக்குக் கணம் இப்பூமியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இரத்தக்களரிகள், போர்கள், மனித உரிமை மீறல்கள், குற்றச் செயல்களையெல்லாம் நாம் புரிவோமா?
அவ்வகையில் முக்கியமானதொரு வான் நிகழ்வு, அற்புதமானதொரு நிகழ்வு. பிரபஞ்சத்தின் நேர்த்தியை, வடிவமைப்பைப் புரிய வைக்கும் சிறு துளியென்றாலும் அச்சிறு துளிக்குள் பொதிந்து கிடக்கின்றது மானுட சிந்தனைத் தேடலுக்கான விடையொன்றின் சிறு துளி.
Wednesday, April 3, 2024
காங்கிரஸ் நூலகமும், 'வேர்ல்கட்' (Worldcat) இணையத்தளமும், அவற்றின் பயனுள்ள சேவைகளும்! - வ.ந.கிரிதரன்
Tuesday, April 2, 2024
ஜெகசிற்பியனின் 'மண்ணின் குரல்'. வினோபா பாவேயின் பூதான இயக்கத்தூண்டுதலால் வெளியான முதலாவது தமிழ் நாவல்! - வ.ந.கிரிதரன் -
-எழுத்தாளர் ஜெகசிற்பியன் -
எழுத்தாளர் ஜெகசிற்பியனின் நாவலான 'மண்ணின் குரல்' பற்றி நான் அறிந்தது தற்செயலானது. என் பால்யப் பருவத்தில் கல்கியில் தொடராக வெளியான் சமூக நாவல்களான கிளிஞ்சல் கோபுரம், ஜீவ கீதம், காணக்கிடைக்காத தங்கம், சரித்திர நாவல்களான 'பத்தினிக்கோட்டம்' , மற்றும் 'நந்திவர்மன் காதலி' (ராணி முத்து) மூலம் எனக்கு அறிமுகமானவர். ஆனால் இந்த நாவலான 'மண்ணின் குரல்' கல்கியில் வெளிவராத நாவல். மலேசியாவிலிருந்து வெளியான 'தமிழ் நேசன்' பத்திரிகையில் வெளியான தொடர் நாவல்.
Monday, April 1, 2024
புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’ - வ.ந.கிரிதரன் -
எழுநா சஞ்சிகையின் ஏப்ரில் 2024 இதழில் வெளியான எனது கட்டுரை புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’
காஞ்சிரமோடை என்னும் இப்பகுதியை நான் அறியக் காரணமாகவிருந்தது எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று நடத்திய காந்தியத்தின் ‘நாவலர் பண்ணைத் தன்னார்வத் திட்டம்’ ஆகும். நாவலர் பண்ணையில் மலையகத்திலிருந்து 77 இனக்கலவரத்தில் அகதிகளாக வந்திருந்த மக்களைக் காந்தியம் அமைப்பு குடியேற்றியிருந்தது. நாவலர் பண்ணைக்கும், மருதோடைக்குமிடையில் அமைந்திருக்கும் காஞ்சிரமோடை என்னும் பகுதி அப்போது காடாகவிருந்தது. மருதோடை வரை மட்டுமே பஸ் செல்லும். அங்கிருந்து பண்ணைக்கு மூன்று மைல்கள் வரையில் நடக்க வேண்டும். பண்ணைவாசிகள் அங்கிருந்து நடந்தே பண்ணைக்குச் செல்ல வேண்டும். இத்தூரத்தைக் குறைப்பதற்காக காஞ்சிரமோடைக் காட்டினூடு பாதை அமைப்பதும் அத் தன்னார்வத் திட்டத்தின் ஓரம்சம். அத்திட்டத்தின் மூலம் அப் பண்ணைவாசிகளின் பயணம் இலகுவானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும் என்று தீர்மானிக்கப்பட்டது.
காந்தியம் அமைப்பின் நாவலர் பண்ணையின் முக்கிய காரணங்களில் ஒன்று எல்லைப் பகுதியைப் பாதுகாப்பது. அத்திட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றவர்களில் நானுமொருவன். அப்பொழுது நான் என் படிப்பை முடித்து வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது அப்பகுதி மக்கள் அக்காட்டுப் பகுதியைக் ‘காஞ்சிரமொட்டை’ என்றே அழைத்தார்கள். ஆனால் அதன் உண்மையான பெயர் காஞ்சிரமோடை. பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியம்’ நூலின் முன்னுரை அப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தை விரிவாகவே எடுத்துரைக்கின்றது.
இச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி பற்றி பேராசிரியர் புஷ்பரட்ணம் போன்றோர் ஏதாவது ஆய்வுகள் செய்திருக்கின்றார்களா அல்லது அது பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்களா என்பது தெரியவில்லை. முக்கியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் ஒன்றான இப்பகுதி இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை எடுத்துக்காட்டும் பகுதி என்பதால் ஆய்வுகளை வேண்டி நிற்கும் பகுதிகளில் ஒன்று.
பல்துறை ஆளுமையாளரான எழுத்தாளர் தமயந்தி சைமனைக் கெளரவித்தது நோர்வேயின் நாதாந்தம் பல்கலை மன்றம்!
எழுத்தாளர் தமயந்தி சைமன் பல்துறை ஆளுமையாளரான எழுத்தாளர் தமயந்தி சைமனைக் கெளரவித்தது நோர்வேயின் நாதாந்தம் பல்கலை மன்றம்! எழுத்து (கவிதை, சிற...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...














