Tuesday, April 23, 2024

உலகப் புத்தக நாள்


இன்று, ஏப்ரில் 23,  உலகப்புத்தக நாள்.  என்னைப்பொறுத்தவரையில் வாசிப்பு என்பது என் மூச்சு போன்றது.  எனக்கு வாசிக்கத்தொடங்கியதிலிருந்து  ஒவ்வொரு நாளுமே புத்தகநாள்தான். எண்ணிப்பார்க்கின்றேன். வாசிப்பும், யோசிப்பும் அற்று ஒரு  நாள் கூடக் கழிந்ததில்லை.

ஆனால் வாசிப்புக்காக ஒரு நாளை ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. பெரும்பாலானவர்கள் வாசிப்பின் முக்கியத்துவம் தெரியாமல் , புரியாமல் வாழ்கின்றார்கள். அவர்களைப்போன்றவர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை உணர்த்த இது போன்ற நாளொன்று அவசியமானது.

மானுடர்கள் வாசிப்பின் அவசியத்தை உணரவேண்டும்.  வாசிப்பு எத்தகையாதகவுமிருக்கலாம், ஆனால் அது தேவையான ஒன்று. புனைவாகவிருக்கலாம், அபுனைவாகவிருக்கலாம், கவிதையாகவிருக்கலாம் , இவ்விதம் எத்துறை சார்ந்ததாகவுமிருக்கலாம். ஆனால் அது முக்கியமானது.

வாசிப்பு சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்கின்றது. வாசிப்பு இன்பத்தைத்தருகின்றது. வாசிப்பு இருப்புக்கோர் அர்த்தத்தைத் தருகின்றது.

எழுத்து ஒரு கலையாகவிருக்கலாம், தொழில்நுட்ப வழிகாட்டியாகவிருக்கலாம். ஆனால் அது முக்கியமானது.

புத்தகத்தின் வடிவம் எத்தகையதாகவுமிருக்கலாம். அது அச்சு வடிவிலிருக்கலாம். டிஜிட்டல் வடிவிலுமிருக்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சி அதன் வடிவத்தை மாற்றினாலும், புத்தகம் புத்தகம்தான்.
புத்தகங்களை எந்நாளும் வாசிப்போம்.  புத்துணர்வினை, இன்பத்தினை   அடைவோம். படைப்பாற்றலைப் பெருக்குவோம். சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்குவோம். சிந்தனைத் தெளிவை அடைவோம்.
புத்தகங்கள் எம் வழிகாட்டிகள் மட்டுமல்ல, ஆசிரியர்கள் மட்டுமல்ல, எம் தோழர்களும் கூடத்தான்.

இந்நாளில் நான் இதுவரை வாசித்த நூற்றுக்கணக்கான நூல்களை எண்ணிப்பார்க்கின்றேன். அவற்றுக்கு நான் தலை வணங்குகின்றேன். இதுவரை கால என் இருப்பில் என்னுடன் கூடப் பயணித்ததற்காக, என் வாழ்வில் ஓர் அர்த்தம் தந்ததற்காக.

இத்தருணத்தில் இந்நூல்களை எழுதிய எழுத்தாளர்களை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.  அவர்கள்  சமூக, பொருளாதார,அரசியல் சவால்களுக்கு மத்தியில் இயங்கியவர்கள். தம் சிந்தனைகளை மானுடர்களின் வளர்ச்சிக்காக, இன்பத்துக்காக எழுத்தில் வடித்து வைத்தவர்கள்.

****************************************************************

விக்கிபீடியாவிலிருந்து....

உலகப் புத்தக நாள்


உலகப் புத்தக நாள் (World Book Day) அல்லது உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.

யுனெஸ்கோ தீர்மானம்

பாரிஸ் நகரில் 1995 ஆகத்து 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு,

"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"

பங்குபற்றும் பிற அமைப்புக்கள்

யுனெஸ்கோவுடன் இணந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்புச் செய்கின்றன. பின்வரும் அமைப்புக்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

    நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு
    அனைத்துலகப் பதிப்பாளர் சங்கம் (International Publishers Association)
    உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள்

ஏப்ரல் 23 இன் முக்கியத்துவம்

உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 1616 ஆம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா (Inca Garcilaso de la Vega) ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.

இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை சென். ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

https://ta.wikipedia.org/s/8kxp

No comments:

எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் என்பதும் சார்பானது!

எழுத்தாளர் சுவிஸ் பா.ரவி தன் முகநூற் பதிவொன்றில் 'எழுத்தாளரைக் கொண்டாட வேண்டும் என சொல்லப்படுவதை எப்படி அணுகுவது என குழப்பமாக இருக்கிறது...

பிரபலமான பதிவுகள்