- எழுத்தாளர் ஜெயகாந்தனின் இளமைத்தோற்றம். - |
எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த தினம் ஏப்ரில் 24.
எழுத்தாளர் ஜெயகாந்தன் என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை. வெகுசனப் படைப்புகளில் மூழ்கிக்கிடந்த பருவத்தில் வெகுசன ஊடகங்களினூடு, வித்தியாசமானவராக அறிமுகமாகி என்னைக் கவர்ந்தவர் ஜெயகாந்தன். இவர் பெயரை நான் முதன் முதலில் கேட்டது என் பெற்றோரின் உரையாடலொன்றின்போதுதான். அவர்கள் ஆனந்தவிகடனில் வெளியான இவரது 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன', 'கோகிலா என்ன செய்து விட்டாள்' போன்ற முத்திரைக்கதைகளாக வெளியான குறுநாவல்களைப்பற்றி உரையாடியபோதுதான் முதன் முதலில் இவரது பெயரை நான் அறிந்துகொண்டேன்.
ஜெயகாந்தனின் 'கைவிலங்கு' குறுநாவல் கல்கியில் வெளியானது. இதுவே பின்னர் 'காவல் தெய்வ'மாகத் திரைக்கு வந்தது. அதே பெயரில் ராணிமுத்து பிரசுரமாகவும் வெளியானது. எழுத்தாளர் சாவியை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'தினமணிக்கதிர்' ஜெயகாந்தனின் 'ஒரு பிடி சோறு' சிறுகதைத்தொகுப்பிலிருந்த சிறுகதைகள் பலவற்றை மீள்பிரசுரம் செய்தது. இவரது புகழ்பெற்ற 'டிரெடில்', 'பிணக்கு', 'ஒரு பிடி சோறு', 'ராசா வந்துட்டாரு' போன்ற சிறுகதைகளை அப்போதுதான் வாசித்தேன்.
- 'ஒரு மனிதன், ஒரு வீடு , ஒரு உலகம்' நாவலில் ஒரு காட்சி. ஓவியர் - கோபுலு - |
அவருக்குச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றுத்தந்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' கதிரில் முதலில் 'காலங்கள் மாறும்' என்னும் பெயரில் ஆரம்பமாகி பின்னர் 'சில நேரங்களில் சில மனிதர்களா'கத் தொடர்ந்தது. பின்னர் அதுவே 'கங்கை எங்கே போகின்றாள்' எனத்தொடர்ந்தது. கோபுலுவின் உயிர்த்துடிப்பான ஓவியங்களுடன் வெளியான நாவல்கள் அவை. அதில் வரும் ஹென்றி அற்புதமான மானுடன். மறக்க முடியாத மானுடன். அவனை உயிரோட்டமாக்கியவர் ஜெயகாந்தன் மட்டுமல்லர் ஓவியர் கோபுலுவும் கூடத்தான். அந்த ஒரு நாவல் போதும், அந்த ஒரு பாத்திரம் போதும் ஜெயகாந்தனை இலக்கிய உலகில் நிலைத்து நிற்க வைப்பதற்கு. ஹென்றிக்கு அடுத்து என்னைக் கவர்ந்த அவரது பாத்திரம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' கங்கா!
அக்காலகட்டத்தில்தான் ஜெயகாந்தனின் 'ரிஷி மூலம்' கதிரில் வெளியானது. மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கியது. இனிமேல் கதிரில் இதுபோன்ற கதைகளை வெளியிட மாட்டோமென்று ஆசிரியரை அறிவிக்கச் செய்த குறுநாவலது.
விகடனில் ஜெயகாந்தனின் மிகவும் புகழ்பெற்ற குறுநாவல்கள் பல வெளிவந்தன. 'யாருக்காக அழுதான்?", 'உன்னைப்போல் ஒருவன்', 'அக்கினிப் பிரவேசம்', 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன', 'கோகிலா என்ன செய்து விட்டாள்' போன்ற பல குறுநாவல்களை விகடன் பிரசுரித்தது. கூடவே பல முத்திரைச் சிறுகதைகளையும் பிரசுரித்தது. 'உன்னைப்போல் ஒருவ'னை அவர் திரைப்படமாகத் தயாரித்தார். வாங்க விநியோகஸ்தர்கள் இல்லாது போனாலும் விருது பெற்ற திரைப்படமது.
உண்மையில் வெகுசன இதழ்களான விகடன், கல்கி, தினமணிக்கதிர் ஆகியவை அவருக்குக் களமமைத்துக்கொடுத்தன என்பது வியப்புக்குரியது.
இவரது இறுதிக்காலப் படைப்புகள் பலவற்றை நான் வாசிக்கவில்லை. வாசித்தவையும் பெரிதாக என்னை ஈர்க்கவில்லை. ஜெயகாந்தன் என்றதும் என் நினைவில் வருபவை ஆரம்பத்தில் நான் வாசித்த படைப்புகள்தாம். மிகவும் பிடித்த நாவல் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'.
No comments:
Post a Comment