அண்மையில் 'டொராண்டோ'வில் ஊடறு மற்றும் தேடகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையகா நிகழ்வினை நெறிப்படுத்திய எழுத்தாளர் பா.அ.ஜயகரன் சமூகச் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான சுதா குமாரசாமியைப் பற்றி அறிமுகப்படுத்தும்போது 1988இல் வெளியான அவரது கவிதைத்தொகுப்பான 'முடிவில் ஓர் ஆரம்பம்' பற்றிக்குறிப்பிட்டார்.
அவ்விதம் குறிப்பிடுகையில் 'கனடாவில் வெளியான முதலாவது கவிதைத்தொகுப்பாக இருக்குமென்று தான் நினைப்பதாக' அவர் குறிப்பிட்டிருந்தார்.
கனடாவில் வெளியான முதலாவது கவிதைத்தொகுப்பாக அது இருக்கக் கூடும். சுதா குமாரசாமியின் 'முடிவில் ஓர் ஆரம்பம்' தொகுப்பிலுள்ள கவிதைகளின் எண்ணிக்கை 15. கவிதைகளை உள்ளடக்கி வெளியான முதலாவது தொகுப்பென்றால் அது ஜனவரி 4, 1987இல்
வெளியான எனது தொகுப்பான 'மண்ணின் குரல்' நூலே. அது கட்டுரைகள், சிறு நாவலான
மண்ணின் குரல் மற்றும் கவிதைகள் உள்ளடக்கி வெளியான தொகுப்பு. அது எனது
எட்டுக் கவிதைகளையும் உள்ளடக்கியுள்ளது. அவை:
'மண்ணின் குரல்' தொகுப்பிலுள்ள கவிதைகள்:
1. மாற்றமும் , ஏற்றமும்
2. அர்த்தமுண்டே..
3. விடிவிற்காய்..
4. புல்லின் கதை இது..
5. ஒரு காதலிக்கு...
6. மண்ணின் மைந்தர்கள்..
7. புதுமைப்பெண்
8. பொங்கட்டும்! பொங்கட்டும்!
இக்கவிதைகள் அனைத்தும் மான்ரியாலிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச்சஞ்சிகையில் வெளியானவை. பத்து அத்தியாயங்களை உள்ளடக்கிய 'மண்ணின் குரல்' நாவலும் அதே ' புரட்சிப்பாதை' கையெழுத்துச்சஞ்சிகையில்தான் வெளியானது.
கனடாவில் வெளியான முதலாவது கவிதைத்தொகுதி பற்றிப் பலருக்குத் தடுமாற்றம் இருப்பதை அறிய முடிகின்றது. முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் 'தமிழர் தகவல்' ஆண்டு மலரொன்றில் வெளியான 'கனடாவில் தமிழ் இலக்கியம்' என்னும் கட்டுரையில் "கவிதைத்தொகுதி என்ற வகையில் கனடாவில் வெளியிடப்பட்ட முதலாவது ஆக்கம் கவிஞர் சேரன் அவர்களுடைய 'எலும்புக் கூடுகளின் ஊர்வலம்' ஆகும். இது 1990இல் வெளிவந்தது" என்று குறிப்பிட்டிருந்தார். அக்கட்டுரையில் அவர் 'காலம்' செல்வம் போன்றவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அம்முடிவுக்கு வந்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
1990இல் 'எலும்புக் கூடுகளின் ஊர்வலம்' நூலை வெளியிட்டவர்கள் தேடகம் அமைப்பினர் 'தேடல் பதிப்பகம்' என்னும் பெயரில்.
இதுவரையில் நானறிந்த வரையில் கனடாவில் வெளியான முதலாவது தனிக் கவிதைத்தொகுப்பென்றால் அது சுதா குமாரசாமியின் 'முடிவில் ஓர் ஆரம்பம்'. கனடாவில் கவிதைகளையும் உள்ளடக்கி வெளியான முதலாவது தொகுப்பு நூலென்றால் அது எனது 'மண்ணின் குரல்' . அது 'மண்ணின் குரல்' சிறு நாவலையும் உள்ளடக்கியிருப்பதால் அதுவே கனடாவில் வெளியான முதலாவது நாவல் என்றும் நான் கருதுகின்றேன். இது தவறென்றால் சான்றுகளுடன் எனக்கு அறியத்தாருங்கள்.
மேலதிக விபரங்கள்:
1. மண்ணின் குரல் (நாவல், கவிதை & கட்டுரைத் தொகுப்பு) - வ.ந.கிரிதரன் . பதிப்பகம் - மங்கை பதிப்பகம் (கனடா)
2. கவிதைத்தொகுப்பு - 'முடிவில் ஓர் ஆரம்பம்' (1988) - சுதா குமாரசாமி - பதிப்பகம்: Tamil Progress Publications' (Montreal, Canada)
3. கவிதைத்தொகுப்பு: எலும்புக்கூடுகளின் ஊர்வலம் (1990) - சேரன் . வெளியீடு - தேடல் பதிப்பகம் (தேடகம்), கனடா
No comments:
Post a Comment