Monday, April 22, 2024

எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!


எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இன்று - ஏப்ரில் 22 - பிறந்தநாள்.  இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள். இலங்கைத் தமிழ்  இலக்கியத்தில், உலகத்தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர். சிறுகதை, கவிதை,நாவல் என இவரது இலக்கியப் பங்களிப்பு இருந்தாலும், முக்கியமான பங்களிப்பு இவரது சிறுகதைகளே என்பேன். இவரது சிறுகதைகள் பல தொகுப்புகளாக (மாற்றம் (1980), உலா (1992), சட்டநாதன் கதைகள் (1995), புதியவர்கள்- (2006),  முக்கூடல் - (2010), பொழிவு - (2016), தஞ்சம் (2018)) வெளியாகியுள்ளன.

இவரது கதைகளைப்பற்றி அமரர் கலை, இலக்கியத் திறனாய்வாளர் ஏ.ஜே.கனகரத்தினா 'மென்மையான உணர்வுகளை கலை நயத்தோடும் மனித நேயத்தோடும் வெளிப்படுத்துவதில் ஆசிரியர் வெற்றி பெறுவதால், ஈழத்துச் சிறுகதை உலகில் சட்டநாதன் தனது தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளார்' என்று கூறுவார்.

இவர் தனது கதைகளைப் பற்றி "எந்தப் புற நிகழ்வுமே என்னைப் பாதிக்கிறது. மனதைத்தொட்டு நெருடுகிறது. சில சமயங்களில் காயப்படுத்துகிறது. இந்த அனுபவங்களையெல்லாம் சிறைப்பிடிக்கும் எத்தனந்தான் எனது கதைகள். இறுக்கமான குடும்ப உறவுகளில், ஆணின் அதிகாரமுனை மழுங்க, பெண் தன்னைச் சுற்றிப் பிணைந்து கிடக்கும் தளைகளைத் தகர்த்து, விட்டு விடுதலையாவது எனது கதைகளில் இயல்பாகவே சாத்தியமாகிறது."  என்று கூறுவார்.

இக்கருத்துகள் எவ்வளவு தூரம் உண்மையென்பதை இவரது சிறுகதைகளை வாசித்தால் புரிந்து கொள்வீர்கள். நூலகம் இணையத்தளத்தில் இவரது நூல்கள் பல ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.  வாசித்துப் பாருங்கள்.

நூலகத்துக்கான இணைப்பு - https://www.noolaham.org/

க.சட்டநாதன் - உலா (சிறுகதைத்தொகுப்பு) - https://www.noolaham.net/project/03/253/253.pdf
க.சட்டநாதன் - மாற்றா (சிறுகதைத்தொகுப்பு) - https://noolaham.net/project/06/539/539.pdf

பெண் விடுதலை பற்றி எவ்விதப் பிரச்சாரமுமற்று இவர் பல கதைகள் எழுதியுள்ளார். பெண்ணியவாதிகள் என்று அறியப்படும் பெண் எழுத்தாளர்கள் எவரும் எழுத்தாளர் க.சட்டநாதனின் கதைகளைக் குறிப்பிட்டிருப்பதாக நான் அறியவில்லை. அப்படி யாரும் குறிப்பிட்டிருந்தால் அறியத்தாருங்கள்.

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்