Monday, April 15, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (4) - வ.ந.கிரிதரன்-

அத்தியாயம் நான்கு: பக்கத்து வீட்டுப் பெண்!


மறுநாள் நேரத்துடன் எழுந்து விட்டான் மாதவன். அன்று அவன் நாளை எவ்விதம் கழிக்க வேண்டுமென்று சில திட்டங்கள் வைத்திருந்தான். நண்பகல் வரையில் 'ஒன் லை'னில் வேலை தேடுவது. கல்வித் தகமைகளை இணையத்தில் அதிகரிக்க உதவும் பயிற்சிக் காணொளிகளை, கட்டுரைகளை ஆராய்வது எனத் திட்டமிட்டிருந்தான். தகவற் தொழில் நுட்பத்தில் அவனுக்கு இலவசமாகக் கிடைக்கும், அதே சமயம் பலரால் , நிறுவனங்களால் பாவிக்கப்படும் லினக்ஸ் 'ஒபரேட்டிங் சிஸ்டம்' பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வது எனத் தீர்மானித்திருந்தான். தகவல் தொழில் நுட்பத்துறையைப் பொறுத்தவரையில் ஒரு தொழில் நுட்பம் பற்றிய அறிவும், அனுபவமும் இருந்தால் அவை போதுமானவை அத்துறையில் வேலையொன்றைப் பெறுவதற்கு என்பது அவனது எண்ணம்.

அதே சமயம் அவனுக்கு ஒரு வலைப்பதிவையும் ஆரம்பிக்க வேண்டுமென்பது நீண்ட  காலத்து எண்ணம்.அது பற்றியும் இன்று முடிவொன்றினை எடுத்து, அதற்கான அத்திவாரத்தை இன்று உருவாக்க வேண்டுமென்றும் ஏற்கனவே தீர்மானித்திருந்தான். தன் பல்வகைப்பட்ட சிந்தனைகளையும் இணையத்தில் பதிவு செய்வதன் மூலம், வாசிப்பவற்றைப்பற்றிய மற்றும் பல்வகைப்பட்ட சொந்த அனுபவங்களையெல்லாம் அவ்வலைப்பதிவில் பதிவு செய்வதன் மூலம் மனப்பாரம் குறையும், சிந்தனைத்தெளிவு பிறக்கும், வாசிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். எழுத்தாற்றலும் அதிகரிக்கும். ஓர் எழுத்தாளனாவது அவனது முக்கிய எண்ணமாக இருக்கவில்லை. ஆனால் எழுவதுவதில் ஆர்வம் மிக்கவனாக அவனிருந்தான். அவ்வார்வத்துக்கு வடிகாலாக அவனது எழுத்துகள் இருக்குமென்றும் எண்ணிக்கொண்டான்.

வலைப்பதிவை , 'புளக்'கை 'புளக்கர்' தளத்தில் இலவசமாக உருவாக்கலாம். மேலும் பல 'புளக்கு'களை  இலவசமாக உருவாக்குவதற்குரிய இணையத்தளங்கள் இருந்தன.  ஆனால் அவனது முதலாவது தேர்வாக இருந்தது 'புளக்கர்' தளமே.

இவ்விதமான சிந்தனைகளுடன் நாளை ஆரம்பித்த வழக்கம் போல் 'டேஸ்டர்ஸ் சொய்ஸ்' கோப்பி ஒரு கப் தயாரித்தான். அவனுக்குக் காலையில் கோப்பி குடிக்காமல் நாளை ஆரம்பிக்கவே முடியாது. ஒரு நாளைக்குப் பல தடவைகள் கோப்பி குடிப்பான்.  கோப்பி குடிப்பது தவிர அவன் புகை பிடிப்பதில்லை. ஆடிக்கொரு தடவை, ஆவணிக்கொருதடவையென்று தவிர்க்க முடியாத நிகழ்வுகளில் விஸ்கி குடிப்பான். ஆனால் அதே சமயம் எப்பொழுதும் அவனிடம்  பிரெஞ்சு பிராண்டியின் ஒரு வகை இருக்கும். படுப்பதற்கு முதல் ஒரு கரண்டி பிரண்டி குடித்து விட்டுத் தூங்குவான். வெறிக்குக் குடிப்பதில்லை. மருந்தாகக் குடிப்பது அவன் வழக்கம்.

அன்றும் வழக்கம்போல்  ஒரு கப் கோப்பியுடன் , ஒரு கிண்ணத்தில் பாலும் சிறிதளவு தேனும் கலந்த  ஓட் மீல் சீரியலுடன் மேசைக் கணனிக்கு முன் வந்தமர்தான்.சிறிது நேரம் அவனது கவனம் வேலை தேடும் படலத்தில் ஈடுபட்டது. அதன் பின்னர் லினக்ஸ் இயங்கு தளத்தைத் தனது கணனியில் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டான். தனது 64 பிட் விண்டோஸ் ஒபரேட்டிங் சிஸ்டமில் வேர்ச்சுவர் பொக்ஸ் மென்பொருளை நிறுவி, அதில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சென்டோஸ் லினக்ஸை நிறுவினான். அதனை இணையத்தில் பாவிப்பதற்குரிய வகையில் நெட்வேர்க் சேவையினை இயங்கும் வகையில் கட்டமைத்தான். அவனுக்கு எப்பொழுதுமே வெப் சேர்வர் மீது ஆர்வமிருந்தது. லினக்ஸில் அப்பச்சி வெப் சேர்வர் இயங்கும் வகையில் அதன் சேவையினை நிறுவித் தயார் நிலையில் வைத்தான். ஒரு வழியாக அவனது லினக்ஸ் வெப் சேர்வருடன் கூடிய லினக்ஸ் செர்வர் தயார் நிலைக்கு வந்தது. இனி ஒவ்வொரு நாளும் அதில் அதற்குரிய கட்டளைகளுக்கான பயிற்சியினை எடுப்பது எனத் தீர்மானித்துக் கொண்டவனின் கவனம் அடுத்து அன்று அவன் செய்வதற்குத் தீர்மானித்திருந்த புளக் தயாரிப்பதில் திரும்பியது.

புளக்கர் தளத்துக்குச் சென்று தனது வலைப்பதிவுக்கான கணக்கினை உருவாக்கினான். என்ன பெயர் வைக்கலாமென்று சிறிது நேரம் சிந்தித்தான். அவனது இருப்பு  பற்றிய தேடலுடன் சம்பந்தமாக அப்பெயர் இருக்க வேண்டுமென்று விரும்பினான்.  அவ்விதம் பல பெயர்களைச் சிந்திக்கையில் காலவெளியுடன் சம்பந்தப்பட்டதாக அது இருந்தால் அது அவனைச் சிந்திக்க, எழுத ஊக்குவிக்கும் சாதனமாக அமையுமென்று கருதினான். இறுதியாகக் 'காலவெளிப் புதல்வன்' என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்தான். 'காலவெளிப் புதல்வன்' வலைப்பதிவு தயாராகிவிட்டது.

முதற் பதிவாக என்ன இடலாமென்று சிறிது நேரம் சிந்தனையை ஓட விட்டான்.  கவிதையொன்றினை எழுதுவதென்று தீர்மானித்தவனாக நோட் பேட்டைத் திறந்தான். ஒரு காலத்தில் குறிப்பேட்டில் எழுதியவன் பல ஆண்டுகளாகக் கணனியில் எழுதுகின்றான். குறிப்பேடு 1  என்னும் தலைப்பில் ஃபைலொன்றினை உருவாக்கிவிட்டுக் கவிதையைத் தட்டச்சு செய்யத் தொடங்கினான்:

காலவெளிப்புதல்வன் நான்.

காலவெளிப்புதல்வன் நான்.
காலவெளி பற்றிய சிந்தனை,
காலவெளி பற்றிய வாசிப்பு,
காலவெளி மீதான இரசிப்பு,
காலமெல்லாம் இவற்றில் மூழ்கிக்
கிடக்கும் காலவெளிப் புதல்வன்
நான்.
காலவெளிக்காட்சியென்பது
காணுமொரு மாயையா?
காணுமோர் உண்மையா?
காலவெளிப் புதல்வன் என் பிறப்பு,
ககனத்தில் என் இருப்பு,
நினைவுக்கோலங்களா?அன்றி
நிசங்கள்தாமா?
இங்கு நடக்கும் அனைத்து இயக்கங்களும்,
இருப்பு பற்றிய தோற்றங்களும்,
மின்சக்தியின் வடிவங்களல்லவா?
மின்சகதியோ சக்திவடிவான பொருள்தன்
மின்பிரதிபலிப்புகள் அன்றோ?
தொடமென்று தெரிவதெல்லாம்
திடமற்ற சக்தியின் விளையாட்டுகள்தாமே!
பொருளென்று மயங்குவதெல்லாம்
பொருளற்றுப் போவதென்ன!

காலவெளி பற்றி  , இருப்பு பற்றிச் சிந்தித்தால் மடை திறந்த வெள்ளமென அவனது சிந்தனை பெருக்கெடுத்தோடுவது வழக்கம். அன்றும் அவ்விதமே பெருக்கெடுத்தோடியது. மேலும் எழுதினான்:

காலவெளிப் புதல்வனிவன்
கருத்துகளின் பெட்டகமிது.
பெட்டகத்தை மேய்வீர்!
பேரின்பம் பெறுவீர்!

இவ்விதம் கவிதையை முடித்தபோது திருப்திகரமானதோர் உணர்வு மாதவனுக்கு ஏற்பட்டது.  அச்சமயம் முதல் நாள் கடிதங்கள் ஏதாவது வந்திருந்தனவா என்று போஸ்ட் பொக்சைப் பார்க்காதது நினைவுக்கு வந்தது. சென்று கடிதங்கள் ஏதாவது வந்திருக்கின்றனவா என்று பார்க்க முடிவு செய்தவனாகப்புறப்பட்டான். போஸ்ட பொக்ஸில் சில கடிதங்கள் இருந்தன. அவற்றை அள்ளிக்கொண்டு தன்னிருப்பிடம் வந்தான்.

அன்று அவன் மனம் பெரிதும் திருப்தியில் ஆழ்ந்திருந்தது. அன்று காலை செய்ய வேண்டியவற்றை அவன் ஒன்று விடாமல் செய்து முடித்திருந்தான். அடுத்த சில வாரங்கள் லினக்ஸ் இயங்குதளம், அதில் இயங்கும் அப்பச்சி வெப் சேர்வர் ஆகியவற்றில் போதிய அனுபவத்தையும் ,அறிவையும் பெற வேண்டும். ஏதாவது ஒரு சிறிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அத்துறையில் வெப் அட்மினிஸ்ரேட்டராக வேலையொன்றைத் தேட வேண்டும். அதுவே அவனது அடுத்த திட்டமாக இருந்தது.  இவ்விதம் உறுதியாகத் தீர்மானித்தபோது அவனது உள்ளத்தில் புத்துணர்ச்சி பெருக்கெடுத்தோடியது.

அடுத்து அவனது கவனம் எடுத்து வந்திருந்த கடிதங்கள் மேல் திரும்பியது. அதிலிருந்த ஒன்றைத்தவிர ஏனைய  கடிதங்கள் பல்வேறு நிறுவங்களின் , அரசியல்வாதிகளின் விளம்பரங்கள். அந்த ஒன்று மட்டும் ஏதோ கிரடிட் கார்ட் நிறுவனம் அனுப்பியதாகத் தென்பட்டது. விரல்களால் கடித மேலுறையினைத் தடவியபோது உள்ளே கார்ட் ஒன்று இருப்பதை  உணர்ந்தான். அவன் அண்மையில் எந்த ஒரு கிரடிட் கார்ட்டுக்கும் விண்ணப்பித்திருக்கவில்லையே! இது எப்படிச் சாத்தியம் என்றெண்ணியவனாக மீண்டுமொருதடவை  கடித்ததில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரியின்  மீது பார்வையைத் திருப்பினான். ஒரு கணம் திகைத்துப்போனான்.

அது அவனுக்குரிய கடிதமல்ல. அவனிருந்தது 203 இலக்க அப்பார்ட்மென்டில். அதில் குறிப்பிடப்பட்டிருந்ததோ 303. போஸ்ட்மன் தவறுதலால அவனது பொக்ஸில் போட்டுவிட்டுச் சென்றிருக்கின்றான். இவ்விதமான தவறுகள் அவ்வப்போது நடப்பதுண்டு.

பெயரைப் பார்த்தான்.

பானுமதி ராஜகோபாலன் என்றிருந்தது. இலங்கை அல்லது தமிழகப் பெண்ணாகவிருக்க வேண்டுமென்று தோன்றியது. கிரடிட் கார்ட்டைத் தாங்கி நிற்கும் தபால் என்பதால் உடனேயே அந்தப்பெண்ணிடம் கொண்டு சென்று கொடுப்பது நல்லதென்று பட்டது.  இவ்விதமான கடிதங்களைத் திருடுவதற்கென்றே ஒரு கூட்டமிருக்கின்றது.  அவ்விதம் நிகழாமலிருக்க வேண்டுமென்றால் உடனேயே கொண்டு சென்று கொடுப்பதே நல்லதென்று முடிவு செய்தவனாக அந்த முகவரியுள்ள மூன்றாவது தளத்துக்குச் சென்று கதவைத் தட்டினான்.

கதவில் அமைந்திருந்த சிறிய துவாரத்தினூடு யாரோ பார்ப்பதை உணர முடிந்தது.  சிறிது நேரத் தயக்கத்தைத் தொடர்ந்து கதவு திறந்தது.

எதிரே இருபது வயதுள்ள இளம்பெண், ஜீன்ஸ்சும் , சேர்ட்டும் அணிந்த தோற்றத்தில் நின்றிருந்தாள்.

[தொடரும்]

girinav@gmail.com




No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்