'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' என்னும் நூலை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது அவருடன் இறுதிவரை பணி புரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான த.பிச்சாண்டி எழுதியிருக்கின்றார். எம்ஜிஆரினுடனான தன் அனுபவங்களை அந்நூலில் அவர் பகிர்ந்திருக்கின்றார். இந்நூல் பற்றி அந்தமழை.காம் தளத்தில் வெளியாகியுள்ள மதிமலர் என்பவரின் நூல் அறிமுகக் குறிப்பு என் கவனத்தை ஈர்த்தது. எம்ஜிஆர் என்னும் மனிதரின், முதல்வரின் மனிதாபிமானம் மிக்க ஆளுமையை வெளிப்படுத்தும் அறிமுகம். நூலை முழுமையாக வாசிக்கும் ஆர்வத்தைத்தரும் அறிமுகம்.
இந்நூலுக்கு இம்முறை தமிழ் இலக்கியத்தோட்டம் வழங்கும் அல்- புனைவுக்கான இயல் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்திமழை.காம் தளத்தில் வெளியான நூல் அறிமுகக் குறிப்பினை இங்கு பகிர்ந்துள்ளேன்.
நூல்: எனக்குள் மணக்கும் எம்ஜிஆர் நினைவுகள், த.பிச்சாண்டி இ.ஆ.ப(ப.நி), பிவி பதிப்பகம், கலைஞர் கருணாநிதி நகர், சென்னை-78. கைபேசி: 9884980760 விலை ரூ 860.
************************************************************************************************
(அந்திமழை.காம்) நூல் அறிமுகம்: என்ன செய்தார் எம்.ஜி.ஆர்.? எனக்குள் மணக்கும் எம்ஜிஆர் நினைவுகள்! - மதிமலர் -திண்டுக்கல் மாவட்டத்தில் 1977-இல் நில உச்சவரம்பு அலுவலராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார் அந்த இளம் அதிகாரி. அச்சமயம் அங்கே குடகனாற்றில் வெள்ளம் வந்து ஏராளமான பேர் இறந்துவிட்டனர். எக்கச் சக்க சேதம்.

முதலமைச்சர் வந்து பார்வையிடும் வழியில் ஓர் இடத்தை நிர்வகிக்கும் வேலைதான் அந்த அதிகாரிக்கு. முதலமைச்சர் கையால் சேலைகள் வழங்கலாம் என விரும்பி உள்ளூர் பிரமுகர் ஒருவர் சேலைகளை அடுக்கி வைக்க, அவரை இவர் அனுமதிக்க மறுத்துவிட்டார். முதல்வரின் பயணத் திட்டத்தில் இது இடம் பெறவில்லை. உடைந்த அணையைப் பார்த்துவிட்டு, இந்த இடத்துக்கு வருகையில் பெரும் பெண்கள் கூட்டம் கூடிவிட்டது. அங்கே இறங்கும் திட்டம் இல்லை என்றாலும் மகளிர்கூட்டத்தைப் பார்த்து இறங்கினார் அவர். எங்களுக்கு சேலை கொடுக்கும் திட்டத்தை இவர் நிறுத்திவிட்டார் என இளம் அதிகாரி மீது அங்கிருந்த பெண்கள் புகார் கூறினர். முதலமைச்சர் இவரை முறைத்தார். நாளைக்கு மதுரைக்கு வந்து என்னைப் பாருங்க. எனக்கு கெட்ட பேர் வாங்கித்தருவதற்காகவே இருக்கீங்களா? என்றவாறு அவர் புறப்பட்டார். உடன் வந்திருந்த மாவட்ட கலெக்டரும் மூத்த அதிகாரிகளும் உனக்கு தண்ணியில்லா காடுதான் என்று சொன்னார்கள்.