'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Friday, May 24, 2024
(மீள்பிரசுரம்) மோகத்தின் நிழல் - சுகுமாரன் -
'அம்மா வந்தாள்' ஒன்றைத் தவிர தி. ஜானகிராமன் எழுதிய பிற நாவல்கள் எல்லாமும் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்தவை. 'ஆனந்த விகடன்' போன்ற வெகுஜன இதழ்களிலும் 'கணையாழி' போன்ற சிறு பத்திரிகை களிலுமே அவை தொடராக வெளியாகியிருக்கின்றன. பிற்காலத்தில் வெகு ஜனப் பிரபலமுள்ள எழுத்தாளர்கள் உருவாக்கிய தொடர் கதை இலக்கணம் எதற்கும் தி.ஜாவின் நாவல்கள் உட்படாதவை. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வாசக எதிர்பார்ப்புக்காக ஏற்படுத்திய திடீர் திருப்பங்களோ சுவாரசியச் சிக்கல்களோ இல்லாமல் எழுதப்பட்டவை. எனவே தான் இந்த நாவல்களைத் தொடர்கதைகள் என்று சொல்லாமல், தொடர்கள் என்று குறிப்பிடுகிறேன்.தி.ஜானகிராமனின் மாஸ்டர் பீஸான 'மோக முள்'ளும் தொடராக வெளி வந்த நாவல்தான். 1955 - 56 ஆண்டுகளில் 'சுதேசமித்திரன்' நாளிதழின் வாரப் பதிப்பில் தொடராக வெளிவந்தது. ஜானகிராமனின் நாவல்களிலேயே அளவில் பெரிய நாவல் இது. மிக அதிகமான பாத்திரங்கள் கொண்ட நாவலும் இதுதான். அவரது நாவல்களில் அதிக அளவு வாசகர்களைப் பெற்றதும் இதுவாகவே இருக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் காரணம் அது பத்திரிகைத் தொடராக வெளிவந்ததுதான். ஆணின் விடலை மனப் பாங்குக்கு உகந்ததாக நாவலின் கதைப் போக்கு இருந்ததும் இன்னொரு காரணமாக இருக்கலாம். பதின் வயதில் தைக்கும் முள்ளின் நோவு காலம் கடந்தும் தீராத மோகமாகவே எஞ்சியிருக்கச் செய்யும் ரசவாதம் அதில் இருக்கிறது.
பதினேழாம் வயதில், கல்லூரிப் பருவத்தில் 'மோக முள்'ளை முதன் முதலாகப் படித்தேன். கல்லூரி நூலகத்தில் இரண்டு நாட்கள் அடைந்து கிடந்து எண்ணூறு பக்கங்களையும் படித்து முடித்தேன். அந்த வாசிப்பில் அடைந்த பரவசத்தின் புதுக் கருக்கு இன்றும் களிம்பேறாமல் மனதுக்குள் இருக்கிறது. அந்தப் பரவசத்தை ஜானகிராமனின் வார்த்தைகளிலேயே சொல்லலாம். ' காதல் செய்கிற இன்பம் அதில் இருந்தது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிபோதல், வேதனை எல்லாம் அதில் இருந்தன.'
இந்த எல்லா உணர்வுகளும் மையப் பாத்திரமான யமுனாவைச் சார்ந்தே இருந்தன. அது மனதும் உடலும் பெண்ணின் ரகசியத்தை அறிந்து கொள்ளத் தவித்துக் கொண்டிருந்த வயது. அந்தத் தவிப்பைச் சமன் செய்து கொள்ளவும் கற்பனைகளில் வாழவும் ஜானகிராமன் சித்தரித்த யமுனா உதவினாள். மெல்ல மெல்ல அந்தக் கற்பனைப் பாத்திரம் அசலானது என்றும் எங்கோ கண்ணுக்குத் தட்டுப்படும் தொலைவில் நடமாடிக் கொண்டிருக்கிறது என்றும் உயிர் பெற்றுக் கூடவே தொடர்ந்தது. ஆண் பாத்திரமான பாபுவை விட வயதில் மூத்தவள் யமுனா என்பது வெளிப் படையான சலுகையாகத் தெரிந்தது அந்த வயதுக்கு. சம வயதுப் பெண்களுடன் பேசத் தயக்கமும் துணிவின்மையும் கொண்டிருந்த மனதுக்கு பெரிய பெண்ணிடம் சகஜமாகப் பேசலாம் என்ற சுதந்திரத்தைக் கொடுத்தது. அந்த விபரீத சுதந்திரம் பாடத் திட்டத்திலேயே மகா அலுப்பூட்டும் பாடமான வேதியியலைக் கற்பிக்க வந்த தற்காலிகப் பேராசிரியையை யமுனாவாகக் கற்பனை செய்து ரசிக்கச் செய்தது. அவரை மட்டுமல்ல வேறு பல அக்காள்களையும் யமுனாவாக ஆக்கியது.
பாபுவின் பார்வையில்தான் தி.ஜானகிராமன் யமுனாவைச் சித்தரிக்கிறார். 'இவளிடம் ஏதோ அசாதாரணமான ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. அணுக முடியாத தொட முடியாத ஒரு முழுமை. பொலிவு. சந்தனக் கட்டையின் வழவழப்பு,நீண்ட விரல்கள் நீண்ட கைகள் நீண்ட பாதம்'. இது ஆராதனை சார்ந்த மனநிலை. அதையும் மீறிய ஒருத்தியாகவும் யமுனா காட்டப் படுகிறாள். 'இவளும் ஒரு கணத்தில் ஒளி மங்கிய முக்கால் இருளில் தனிமையின் கை மறையும் அந்தி மங்கலில் அன்பை மட்டும் ஆடையாக அணிந்து மயங்கத்தானே வேண்டும்' என்ற ஆண் தவிப்பின் இலக்காகக் காணும் மனநிலை. இந்த இரண்டு மனநிலைகளையும் மீறிய ஒருத்தியாக யமுனாவைப் பார்த்ததும் பார்க்கவைத்ததுமே நாவலின் வெற்றி. தன்னை விட இளையவனின் காதலை ஏற்றுக் கொள்கிறாள்; உடலையும் தருகிறாள். இது மட்டுமே யமுனா என்றால் அவளை மறந்து விடுவது சுலபம். ஆனால் 'இதுக்குத்தானே?’ என்ற முகத்தில் அறைகிற கேள்வியையும் கேட்டு அவனை உடலின்பத்தைக் கடந்த அனுபவத்தை நோக்கித் தள்ளி விடுகிறாள்; இசையில் தேர்ச்சிபெற அனுப்பி வைக்கிறாள். இந்த ஆளுமைத் திருப்பமே யமுனாவை மறக்க இயலாத பாத்திரமாக, இன்றும் என்னால் காதலிக்கப்படும் ஜீவனாக மாற்றுகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் யமுனாவுக்கு ஒவ்வொரு முகத்தையும் தோற்றத்தையும் கற்பனை செய்து வந்திருக்கிறேன். ஆனால் இப்போதும் அவள் மனதுக்குள் முக விவரங்கள் இல்லாத ஒருத்திதான். நாவலைப் புத்தக வடிவில் வாசித்ததால் எனது கற்பனைக்குத் தோதான முகத்தைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. இது தொடராக வந்த சமாச்சாரம் ஆச்சே? அப்படியானால் வெளிவந்த காலத்தில் யமுனாவின் தோற்றம் சித்தரிக்கப்பட்டிருக்குமில்லையா? என்று நாவலை முதன் முதலாகப் படித்து முடித்த காலத்தில் ஏக்கம் வந்தது. ஜானகிராமனின் நெருங்கிய நண்பரும் மோகமுள் நாவலில் ஒரு பாத்திரமாகவே இடம் பெறுபவருமான எழுத்தாளர் எம்.வி. வெங்கட் ராமிடம் விசாரித்தேன். அப்போது சிறிது காலம் அவர் எங்களூர் கோவையில் இருந்தார். வங்கி ஊழியரான மகனுடன் வசித்து வந்தார். அவரிடம் 'மோக முள்' வெளியான 'சுதேசமித்திரன்' இதழைப் பார்க்க முடியுமா என்று கேட்டேன். அவரிடம் ஓரிரு இதழ்கள் மட்டுமே இருந்தன. அதுவும் கும்பகோணத்தில் இருக்கிறது என்று கையை விரித்தார். ஏமாற்றமாக இருந்தது. அதை உணர்ந்த எம்.வி.வி. முடிந்தால் யாரையாவது விட்டு அதைக் கொண்டு வரச் செய்வதாகச் சொன்னார். சொன்னதுபோலச் செய்தார். சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் மோக முள் அத்தியாயங்கள் இடம் பெற்ற இரண்டு இதழ்களைப் பார்க்க முடிந்தது. ஆனால் என் தீயூழ். ஒரு அத்தியாயத்தில் பாபுவும் நண்பன் ராஜமும் ஆற்றங்கரையில் உட்கார்ந்திருக்கும் படம். இன்னொன்றில் ரங்கண்ணாவும் பாபுவும் இசைப்பயிற்சியில் ஈடு பட்டிருக்கும் படம். பார்த்ததும் மனது பொருமியது. ஆனால் மகிழ்ச்சி யாகவும் இருந்தது. என் யமுனா எனக்கு மட்டுமான யமுனாவாகவே இருக்கிறாள் என்ற ரகசிய சந்தோஷம்.
ஓவியர்கள் சித்தரிப்பை விட தி.ஜாவின் வார்த்தைச் சித்தரிப்பே மேலானது. அவரது எல்லாப் பெண்பாத்திரங்களும் அப்பழுக்கில்லாத அழகிகள். அதே சமயம் அகத் துணிவு கொண்டவர்கள். இந்து (அம்மா வந்தாள் ), பாலி ( மலர் மஞ்சம் ), அனசூயா, செங்கா ( உயிர்த்தேன்), அம்மணி ( மரப்பசு), குஞ்சம்மாள் ( செம்பருத்தி ) எல்லாரும் ஒரேபோன்ற உயிர்ப்பும் ஒளியும் கொண்டவர்கள்.அவர்களில் இன்னும் திடமானவள், இன்னும் பிரகாசமானவள் யமுனா. மனம் அப்படித்தான் நம்ப விரும்புகிறது; இல்லை, நம்புகிறது.
இந்தப் பாத்திரங்கள் அனைத்தும் ஆண்மைய நோக்கின் வெளிப்பாடுகளே. ஆண் மனம் தன்னை முழுமையாக்கிக் கொள்ள விரும்பும் பால்விழைவின் கற்பனைகள்தாம். ஆனால் ஜானகிராமன் இந்தப் பெண் பாத்திரங்களை ஆணுக்கு இணையாகவே உருவாக்க விரும்பியிருக் கிறார். சமயங்களில் ஆணுக்குச் சமமானவர்களாக; சில சமயம் ஆணை மீறியவர்களாக; இவர்களில் யமுனா மட்டுமே ஆணைத் தன்னைக் கடந்து செல்ல வலியுறுத்துகிறவளாக உருவாக்கப்பட்டிருக்கிறாள். அவள் விட்டு விலகாத மோகத்தின் நிழல்; ஆனாலும் தனியள். கதைப் பெண்களில் யமுனாவே என் நாயகியாக மாற அதுதான் காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
( அந்திமழை இதழில் வெளியான கட்டுரை)
நன்றி - வாழ்நிலம் வலைப்பதிவு -
ஓவியங்கள் - அமரர் பேராசிரியர் பசுபதியின் 'பசுபசுபதி' வலைப்பதிவிலிருந்து பெறப்பட்டவை. நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல்: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
இசை & குரல் - AI Suno ஓவியம் - AI நானொரு குதிரை வளர்ப்பாளன். நான் வியாபாரி அல்லன். நாணயமான குதிரை வளர்ப்பாளன். நான். என்னிடம் நல்ல குதிர...
பிரபலமான பதிவுகள்
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
No comments:
Post a Comment