Friday, May 17, 2024

முள்ளிவாய்க்கால் கஞ்சி!


இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரும் மனித அழிவைத் தந்த யுத்தம் முடிவுக்கு வந்த தினம் மே 18. யுத்தம் முடிந்து பதினைந்து வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால் இதுவரை இந்த யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் ஆறவில்லை. யுத்தத்துக்குப் பிரதான காரனமாக அமைந்த இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிட்டவில்லை.  யுத்தக்குற்றங்களுக்குக் காரணமானவர்களின் மீதான சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காணாமல்போனவர்களுக்கான நீதி இன்னும் கிட்டவில்லை.  இன்றும் மக்களின் காணிகள் முற்றாக விடுபடாத நிலைதான் காணப்படுகின்றது. இவற்றுக்கான தீர்வு இனங்களுக்கான நல்லிணக்கத்துக்கு மிகவும் அடிப்படை.

அண்மையில் தமிழ்த் தேடியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் 'போர் முடிவடைந்து எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் 15 வருடங்கள் ஆகின்றன. ஆனால் போருக்கு வழிசமைத்த பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. நல்லிணக்கமும் பிறக்கவில்லை. தாம் இன்னும் வலியுடனேயே வாழ்கின்றனர் என்ற தகவலையும், தமக்கு அரசியல் தீர்வு அவசியம் என்ற செய்தியையுமே இந்த கஞ்சி சிரட்டை ஊடாக தமிழ் மக்கள் வழங்குகின்றனர்.' என்று கூறியிருந்தார். உண்மைதான். இலங்கையில் நிரந்தரமான சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்பட வேண்டுமானால் நிரந்தர அரசியல் தீர்வும், நல்லிணக்கச் செயற்பாடுகளும் அவசியம்.


இதே சமயம் முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைக்கையில் அக்காலகட்டத்தில் சிறியதொரு நிலப்பரப்பில் மக்கள் அடைந்த துயர் நினைவுக்கு வருகின்றது. பேரழிவுகள் நினைவுக்கு வருகின்றன. பதுங்கு குழிகள் நினைவுக்கு வருகின்றன.  காணாமல் போனவர்கள் பற்றிய நினைவுகள் படம் பிரிக்கின்றன. கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்களின்  (மக்கள், போராளிகள் உட்பட ) முகங்களில் கவிந்திருந்த சோக உணர்வுகள் நினைவுக்கு வருகின்றன. குண்டுகளைப் பொழிந்து பறந்த விமானங்கள் நினைவுக்கு வருகின்றன. அகதிகளாக நானாபக்கமும் சிதறியோடிக்கொண்டிருந்த மக்களின் தோற்றங்கள் நினைவுக்கு வருகின்றன.  நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்களின் நினைவுகள் நினைவுக்கு வருகின்றன. அதே சமயம் யுத்தத்தின் இறுதியில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் அனைத்துக்கும் காரணமான, பிரதான சூத்திரதாரியான முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை பின்னர் அவர் நாட்டுக்கு ஏற்படுத்திய பொருளாதார அழிவுகளுக்காக ஓட ஒட விரட்டிய காட்சிகளும் நினைவுக்கு வருகின்றன.

முள்ளிவாய்க்கால் கஞ்சி மிகவும் வலிமையான , முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த அனர்த்தங்களை வெளிப்படுத்தும் மிகவும் வலிமையானதொரு குறியீடு. மக்கள் அனைவர்தம் உள்ளங்களையும் தட்டியெழுப்பும் குறியீடு. அமைதியாக, அரசியல்ரீதியாகத் தம் பிரச்சினைகளுக்குத் தீர்வினை நாடி நிற்கும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் குறியீடு.


No comments:

வ.ந.கிரிதரன் - நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

எழுத்தாளர் மாலன் , இந்திய சாகித்திய அமைப்புக்காகத் தொகுத்த  'புவி எங்கும் தமிழ்க் கவிதை'த் தொகுப்பில் இடம் பெற்றுள்ள  எனது கவிதையான ...

பிரபலமான பதிவுகள்