Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, November 16, 2022

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (8) - காலக்கப்பற் பயணமும் 'எதிர்காலச்சித்தன் பாடல்' கவிதையும்! - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் எட்டு -  காலக்கப்பற் பயணமும் 'எதிர்காலச்சித்தன் பாடல்'  கவிதையும்!

அந்த உலகம் எனக்குப் பலவிதங்களிலும் பிடித்த உலகம் என்பேன். என் மனத்தில் சஞ்சலங்கள் அலையடிக்கத்தொடங்குகையில், என் மனத்தில் சஞ்சலப்புயல்கள் வீசத்தொடங்குகையில், என் மனத்தின் அமைதி சீர்குலையத்தொடங்குகையில், நான் அந்த உலகை நோக்கிப் பயணமாகத் தொடங்குகின்றேன். அந்த உலகப்பயணம் தரும் திருப்தியை எனக்கு வேறெந்தப் பயணமும் தருவதில்லை. அந்த உலகில் நானும் காட்சிகள் அற்புதமானவை. பறவைகளைப் பற்றிய புரிதல்களை, அறிவியற் சாதனைகளை வெளிப்படுத்தும் அந்த உலகில் நான் எவ்வளவு நேரமானாலும் என்னை மறந்து பயணிப்பேன்.

அந்த உலகின் மிகச்சிறப்புகளிலொன்று காலக்கப்பல். அந்த உலகின் காலக்கப்பலைப்போல் இன்னுமொரு காலக்கப்பலை நான் வெறெங்கும் கண்டதில்லை. அந்தக் காலக்கப்பற் பயணத்துக்காகவே நான் அடிக்கடி அங்கு செல்வதுண்டு. அந்தக்கப்பலிலேறி ஆதியில் இங்கு ஆட்டம்போட்ட இராட்சதப்பறவைகள், மிருகங்களின் காலகட்டத்துக்கு என்னால் மிகவும் இலகுவாகச் சென்று விட முடிகின்றது. ஆனால் அக்காலக்கப்பல் என்னை அவற்றிடமிருந்து திறமையாக பாதுகாக்கவும் செய்கின்றது. என்னால் அம்மிருகங்கள்,பட்சிகளின் அபாயங்களைப்பற்றிய சிந்தனைகளை நீக்கி அங்கு அக்கப்பலில் பயணிக்க முடிகின்றது.என்னால் உலகின் மகா சர்வாதிகாரிகளின் ஆட்டங்களை , ஏற்படுத்திய பேரழிவுகளை அவர்களுக்கருகில் நின்று அவதானிக்க அக்கப்பல் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருகின்றது. கிளியோபட்ராவின் பேரழகில் எனை மறக்க முடிகின்றது. இராஜஇராஜ சோழனின் கப்பற் படையில் தென்கிழக்காசியாவை நோக்கி அல்லது இலங்கையை நோக்கிப் பயணிக்கவும் முடிகின்றது.

Tuesday, October 25, 2022

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (4) :மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ? - வ.ந.கிரிதரன் -



அத்தியாயம் நான்கு: மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?


'கண்ணம்மா' என்றேன். மனோரஞ்சிதம் பெருங்காதலுடன் திரும்பிப் பார்த்தாள். கண்ணம்மா என்று நான் அழைப்பதைப் பெரிதும் விரும்புபவள். அச்சமயங்களிலெல்லாம் பதிலுக்குக் 'கண்ணா' என்று என்னை அன்பூற மென்மையாக அழைப்பாள். அந்த அன்பு குழைந்த அவளது அழைப்பைக் கேட்பதற்காகவே அவளை நான் கண்ணம்மா என்று விளிப்பதுண்டு. என்னைப்பொறுத்தவரையில் இவ்விருப்புன் அற்புதமாக அவளை நான் காண்பதுண்டு. அவளற்ற இருப்பை கற்பனை செய்வதே எனக்கு மிகவும் சிரமமானது.

'என்ன கண்ணா மெளனமாகிவிட்டாய்?" என்றாள் அவள்.

'எல்லாம் நம் இருப்பு பற்றிய சிந்தனைதான் கண்ணம்மா"

'இருப்பு பற்றி.. வழக்கம்போல் தத்துவவிசாரம்தானா கண்ணா'

'கண்ணம்மா உனக்குத்தானே எனக்கு பாரதி பாடல்கள் பிடிக்குமென்று தெரியும். எனக்குப் பிடித்த அவரது பாட்டைக் கூறு பார்க்கலாம்."

'கண்ணை மூடிக்கொண்டு கூறுவேன் கண்ணா. 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே பாடல்தானே'

'சரியாகவே கூறினாய் கண்ணம்மா. நீ என் மனத்தை நன்றாகவே  புரிந்து வைத்திருக்கிறாயடி.'

'இந்தக்கவிதை எனக்கும் பிடித்தது கண்ணா. அதற்குக் காரணமே இருப்பு பற்றிய கவிஞரின் கேள்விகளே."

'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?  ஒரு விதத்தில் தர்க்கரீதியாகப் பார்க்கப்போனால் இதுகூடச் சரிதானென்று வாதிடலாம். இல்லையா கண்ணம்மா?'

Wednesday, May 20, 2020

பத்துநாட்கள் - பத்து திரைப்படங்கள் (1): - சத்யஜித் ரேயின் 'சாருலதா' - வ.ந.கிரிதரன் -


முகநூலில் பத்து நாட்களுக்குத் தொடர்ச்சியாகப் பத்து திரைப்படங்களை  பதிவிட்டு ஞாபகப்படுத்த வேண்டும் என்று நண்பர் பரதன் நவரத்தின் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையேற்று நாளொன்றுக்கு ஒவ்வொரு திரைப்படம் பற்றிய விபரங்களைப் பதிவு செய்து வருகையில் ஏன்  அத்திரைப்படங்களைப் பதிவுகள் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தக் கூடாது என்று தோன்றியது. இத்தருணத்தை இயக்குநர் சத்யஜித் ரேயின் திரைப்படங்களில் யு டியூப்பில் கிடைக்கும் அனைத்தையும் பார்ப்பதற்கு முடிவு செய்தேன். அவ்வகையில் முதலாவதாக அறிமுகம் செய்யும் திரைப்படம் அவரது 'சாருலதா' திரைப்படம்.

நல்லதொரு திரைப்படம் எவ்வகையில் அமைந்திருக்க வேண்டுமென்பதற்கு உதாரணங்களாக அமைபவை அவரது திரைப்படங்கள். திரைப்படமொன்றின் இயக்கம், கதை, ஒளிப்பதிவு, நடிப்பு , திரைக்கதை & இசை இவை யாவுமே எவ்விதம் அமைய வேண்டுமென்பதற்கு உதாரணங்களாக அமைபவை அவரது திரைப்படங்கள். பாத்திரங்களுகேற்ற சிறந்த , பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதுடன் அவர்களை எவ்விதம் இயக்க வேண்டுமென்பதை இன்றுள்ள இயக்குநர்கள், சினிமாத்துறைப் பல்வகைக் கலைஞர்களும் அறிந்துகொள்ள வேண்டும்.

Friday, March 13, 2020

காற்றினிலே வரும் கீதம்: "எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று"

"எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று   
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு   
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு  "
- கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவுக்குத் தேசிய விருது பெற்றுக்கொடுத்த இன்னுமொரு பாடல்.  ஒரு கவிஞரின் வரிகளுக்கு விருதுகளைப்பெற்றுக் கொடுப்பவை அவரது வரிகள் மட்டுமல்ல. அதனைப்பாடிய பாடகர்களின் குரல்கள், இசை, ஒளிப்பதிவு & நடிப்பு எல்லாமேதாம்.

இப்பாடலினை இருவர் பாடியிருந்தாலும் , பாடலின் அதிக பகுதியை எடுத்துக் கொண்டிருப்பவர் பாடகி சின்மயி. சின்மயி தற்போதுள்ள பாடகிகளில் மிகச்சிறந்த பாடகியாக நான் உணர்வதுண்டு. அதற்குக் காரணம் வரிகளை உள்வாங்கி, உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் குரல் அவருடையது. கேட்டுப்பாருங்கள். நெஞ்சைக் கிழித்துக்கொண்டு அதன ஆழத்துக்கே செல்லும் குரல் சின்மயினுடையது.

Wednesday, March 4, 2020

காலத்தால் அழியாத கானங்கள்: "பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர"

"பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்....
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்

ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே" -
கவிஞர் மேத்தா




அவ்வப்போது எழுத்தாளர்கள் திரையுலகையும் எட்டிப்பார்க்கத் தவறுவதில்லை; தடம் பதிக்கத்தவறுவதில்லை. கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணாத்துரை, சுஜாதா, ஜெயமோகன், பாலகுமாரன், விந்தன் என்று பலரைக்குறிப்பிடலாம். அவர்களில் கவிஞர் மேத்தாவும் ஒருவர். ரஜனிகாந்த்தின் 'வேலைக்காரன்' திரைப்படப்பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. 'உதயகீதம்' திரைப்படப்பாடலான இப்பாடலையும் அவர்தான் எழுதியிருக்கின்றார்.

காலத்தால் அழியாத கானங்கள்: "மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே"



இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் எனக்குக் காற்சட்டையும், சேர்ட்டுமாகப் பால்ய காலத்தில் வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டம் நினைவுக்கு வரும். உண்மையில் இப்பாடலை முதலில் கேட்டபோது நான் நண்பர்களுடன் வவுனியா நகரசபை மைதானத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில் பல்வேறு வழிகளில் திரும்புவது வழக்கம். அதிலொரு வழி நகரசபை மண்டபத்துக்குப் பின்புறமாக , புகையிரத இருப்புப்பாதைக்குமிடையில் மரங்கள் நிறைந்திருந்த பகுதியினை ஊடறுத்துச் சென்ற பாதை. அப்பாதை வழியாக காமினி வித்தியாயலயத்துக்கு முன்புறமாகச் சென்று கொண்டிருந்த மன்னார் வீதிக்கு வர முடியும்.

Sunday, February 9, 2020

நடிகர் நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) நினைவாக...

அண்மையில் தனது நூற்றி மூன்றாவது வயதில் மறைந்த நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) உலகச்சினிமாவில் முக்கியமானதோர் ஆளுமை. மூன்று தடவைகள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இவருக்குக் கிடைக்காத அவ்விருது இவரது மகன் மைக்கல் டக்ளசுக்குக் கிடைத்தது. ஆனால் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பின்னர் கிடைத்தது. இவர் இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகத்திறமை மிக்க நடிகர்களிலொருவர்.
இவரை நினைத்தாலே முதலில் நினைவுக்கு வருவது ஸ்டான்லி கூப்ரிக்கின் இயக்கத்தில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த ஸ்பார்ட்டகஸ் திரைப்படமே . அதில் அவர் ரோமானிய அடிமைகளிலொருவராக நடித்திருப்பார். அடுத்து ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் லஸ்ட் ஃபோர் லைஃப் (Lust for Life - வாழ்வுக்கான காமம்) .ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் அவர் அதற்காக ஆஸ்காரின் சிறந்த நடிகர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Monday, February 3, 2020

ஜூலியனோ ஜெம்மா (Giuliano Gemma)


இத்தாலியர்களால் உருவாக்கப்பட்ட வெஸ்டேர்ன் திரைப்படங்களை ஆரம்பத்தில் 'ஸ்பாகட்டி வெஸ்டேர்ன்' (Spaghetti Western ) என்று மேற்குலகம் எள்ளி நகையாடினாலும் அவற்றின் வெற்றி பின்னர் அவற்றையும் எள்ளி நகையாடிய மேற்குலகத்தை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டது. ஸ்பாகட்டி என்பது இத்தாலியர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமானது நமது தோசையைப்போல. கிளின்ட் ஈஸ்வூட் நடித்துப்புகழ்பெற்ற 'The Good, the Bad and the Ugly ' வெஸ்டேர்ன் திரைப்படமும் இத்தாலியர்களால் உருவாக்கப்பட்டதுதான். சேர்ஜியோ லியோனின் (Sergio Leone) இயக்கம், 'டோனினோ டெலி கொலி'யின் (Tonino Delli Colli) ஒளிப்பதிவு , 'எனியோ மோரிக்கோனின்' (Ennio Morricone) இசை நடிகர்களின் நடிப்பு இவையெல்லாம் சேர்ந்து இப்படத்தை வரலாற்றில் நிலைத்து நிற்க வைத்து விட்டதெனலாம்.

இவ்விதமாக இத்தாலியர்களால் உருவாக்கப்பட்ட வெஸ்டேர்ன் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர்களிலொருவர்தான் ஜூலியனோ ஜெம்மா (Giuliano Gemma). ஆரம்பத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்து வந்த இவருக்கு நடிப்புடன் கூடிய பாத்திரங்களை அளித்துப் பின்னாளில் இவர் புகழடையக் காரணமானவர் இயக்குநர் டுச்சியோடெஸ்சாரி (Duccio Tessari. இத்தாலியர்களால் உருவாக்கப்பட்ட பல வெஸ்டேர்ன் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் இவர். இவரது மகளான வேரா ஜெம்மாவும் நடிகையே.

அழியாத கோலங்கள்: ஜிம் பிறவுனின் 'எல் கொண்டர்'

பொதுவாக வெஸ்டேர்ன் திரைப்படங்களில் கறுப்பின நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பது குறைவு. ஆனால் அவ்விதமாக நடித்த நடிகர் ஒருவரின் திரைப்படத்தையும் என் பதின்ம வயதுகளில் (நான் பார்த்துக் குவித்த ஆங்கிலத் திரைப்படங்களில்) பார்த்திருக்கின்றேன். இவரது ஓரிரு திரைப்படங்களே அக்காலகட்டத்தில் வெளிவந்ததாக நினைவு. இவரது படங்களைப்பார்ப்பதற்கு இளைஞர்கள் முண்டியடிப்பார்கள். அந்த நடிகர்தான் ஜிம் பிறவுண். அந்தத்திரைப்படம் 'எல் கொன்டொர்' (El Condor). பாதுகாப்பான மண் கோட்டையொன்றில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தைக் கொள்ளையடிப்பதற்காக இவரும், எனக்கு மிகவும் பிடித்த இன்னுமொரு நடிகரான லீ வான் கிளீவ் (Lee Van Cleef) இணைந்து அமெரிக்க இந்தியர்களின் குழுவொன்றும் செல்வார்கள். கண்களைச் சுருக்கி, இதழ்க்கோடியில் இலேசாகச் சிரிப்பைத் தவழவிடும் லீ வான் கிளீவ்வின் நடிப்பு எப்பொழுதும் என்னை மிகவும் கவர்ந்ததொன்று. The Good The Bad and The Ugly திரைப்படத்தில் கெட்டவனாக (The Bad) நடித்திருப்பவர் இவரே. இவரது பல திரைப்படங்கள் அக்காலகட்டத்தில் யாழ்நகரில் திரையிடப்பட்டன. 'சபாட்டா (Sabata)' தொடர் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. 'அடியோஸ் சபாட்டா', 'ரிடேர்ன் ஆஃப் சபாட்டா' ஆகியவை நினைவில் நிழலாடுகின்றன.

கண்ணம்மாக் கவிதை: இருப்புப் பற்றியதோர் உரையாடல் கண்ணம்மாவுடன்! - வ.ந.கிரிதரன் -

காலவெளி பற்றிக் கதைப்பதென்றால், உன்னுடன் கதைப்பதென்றால் களி மிகும் கண்ணம்மா. கூர்ந்த கவனிப்பும், தெளிந்த கருத்துகளும், தேர்ந்த சொற்களும் உன்...

பிரபலமான பதிவுகள்