Sunday, February 9, 2020

நடிகர் நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) நினைவாக...

அண்மையில் தனது நூற்றி மூன்றாவது வயதில் மறைந்த நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) உலகச்சினிமாவில் முக்கியமானதோர் ஆளுமை. மூன்று தடவைகள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இவருக்குக் கிடைக்காத அவ்விருது இவரது மகன் மைக்கல் டக்ளசுக்குக் கிடைத்தது. ஆனால் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பின்னர் கிடைத்தது. இவர் இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகத்திறமை மிக்க நடிகர்களிலொருவர்.
இவரை நினைத்தாலே முதலில் நினைவுக்கு வருவது ஸ்டான்லி கூப்ரிக்கின் இயக்கத்தில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த ஸ்பார்ட்டகஸ் திரைப்படமே . அதில் அவர் ரோமானிய அடிமைகளிலொருவராக நடித்திருப்பார். அடுத்து ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் லஸ்ட் ஃபோர் லைஃப் (Lust for Life - வாழ்வுக்கான காமம்) .ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் அவர் அதற்காக ஆஸ்காரின் சிறந்த நடிகர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ருஷ்யாவிலிருந்து , உலகம் போரில் மூழ்கியிருந்த காலகட்டத்தில் அமெரிக்காவுக்கு வந்த யூதக் குடிவரவாளர்கள் இவரது பெற்றோர். இரண்டாவது உலக யுத்தக் காலகட்டத்தில் அமெரிக்கக் கடற்படையிலிணைந்து பணியாற்றினார். பின்னர் நாடக மேடை நடிகராக நடித்துத் திரையுலகுக்குள் நுழைந்தார். சிறுவயதில் குடும்பப் பாரத்தைச் சுமப்பவதற்காகப் பல்வேறு வேலைகளைச் செய்தார். பின்னர் வளர்ந்து திரைப்பட நடிகரானதும் , தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். இவரது புகழ்பெற்ற திரைப்படமான ஸ்பார்ட்டகஸ் திரைப்படத்தை அக்காலகட்டத்தில் யாரும் அறிந்திராத ஸ்டான்லி கூப்ரிக்கின் இயக்கத்தில் தயாரித்தது இவரது நிறுவனமான 'பிரியானா புரடக்ஸன்ஸ்' (Bryna Productions) நிறுவனமே என்பதும் குறிப்பிடத்தக்கது.


கென் கேசி (Ken Kesey) எழுதிய நாவலான One Flew Over the Cuckoo's Nest (குயில் கூட்டுக்கு மேலால் பறந்த ஒன்று) ஜாக் நிக்கல்சனின் நடிப்பில் திரைப்படமாக வெளியாவதற்கு முன்னர் அதில் நடிகராக அதே வேடத்தில் நடித்தவர் இவர். அதற்கான உரிமையினைப்பெற்றவர், அதில் நடிக்காமல் அதைத் தன் மைக்கல் டக்ளஸிடம் கொடுத்துவிட அவர் ஜாக் நிக்கல்சனை வைத்துத்தயாரித்து வெளியிட்டார். ஆஸ்கார் விருதுகளை அள்ளிச்சென்ற திரைப்படம் அது. அதில் நடிக்காதற்காகப் பின்னர் கேர்க் டக்ளஸ் வருந்தியதாக எங்கோ வாசித்த ஞாபகம். ஆனால் எனக்கு இவர் அறிமுகமானது ஒரு 'வெஸ்டேர்ன்' திரைப்படம் மூலம். இன்னும் என் மனத்தில் அழியாத கோலமாக நிலைத்து நிற்கும் திரைப்படம் அது. அதுதான் There was a crooked man (அங்கிருந்த நேர்மையற்ற மனிதனொருவன்) . அதில் அவர் செல்வந்தர் ஒருவரிடமிருந்து அரை மில்லியன் டாலர்கள் கொள்ளையடிப்பார். அக்கொள்ளையில் ஈடுபட்டவர்களில் அவரைத் தவிர மற்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு விடுகின்றார்கள். இவர் பணத்தைப் பெண்களின் உள்ளாடைக்குள் முடிந்து, பாம்புப் புற்றொன்றில் போட்டு விடுவார். பின்னர் இவர் கொள்ளையடித்த செல்வந்தரால் காட்டிக் கொடுக்கப்பட்டு அரிசோனாவிலுள்ள பாலைநிலமொன்றின் நடுவிலுள்ள சிறைக்கூடத்தில் அடைக்கப்படுகின்றார். அவரைச் சிறைப்பிடிக்கும் சிறையதிகாரியாக ஆரம்பத்தில் ஹென்றி ஃபொன்டா வருவார் (பின்னர் ஏற்கனவே இருந்த சிறை வார்டனாக வருவார்). சிறையிலிருந்த வார்டனுக்கு ஹேர்க் டக்ளஷின் பணத்தைப் பங்கு போடவேண்டுமென்று ஆசை. அதற்காக அவர் ஹேர்க் டக்ளசுடன் திட்டமிடுகையிலேயே சுட்டுக்கொல்லப்படுகின்றார். அதன் பின்னர் புதிய வார்டனாக வருகின்றார் ஹென்றி ஃபொன்டா. பின்னர் சிறையை உடைத்து ஹேர்க் டக்ளஸ் தப்பிச் சென்று பாம்புப் புற்றிலிருந்து பண முடிப்பை எடுத்து, மகிழ்ச்சியுடன் திறக்கையில் எதிர்பாராத வகையில் அதற்குள்ளிருந்த பாம்பு பாய்ந்து இவரைக் கொத்திவிடவே இறந்து போகின்றார். இவரைப் பின்தொடர்ந்து வரும் வார்டன் ஹென்றி ஃபொன்டா இவரது உடலையும், பண முடிப்பையும் எடுத்துக்கொண்டு சிறைச்சாலைக்குச் செல்கின்றார். சென்றவர் ஹேர்க் டக்ளசின் உடலைப் போட்டுவிட்டு, பணமுடிப்புடன் மெக்சிக்கோவுக்குத் தப்பிச்செல்கிறார். ஹேர்க் டகள்சின் பாம்புப் புற்றுக்குள்ளிருந்த பண முடிப்பை எடுக்கும் போது எதிர்பாராத விதமாக அதனுள்ளிருந்த பாம்பு பாய்ந்து கொத்தும் கட்டத்தில் திரையரங்கு அதிர்ச்சியில் ஆழ்ந்துவிடும். அந்தக் கட்டம்தான் எப்பொழுதும் இந்தப் படத்தைப் பற்றி எண்ணுகையில் நினைவுக்கு வரும்.. மறக்க முடியாத திரைப்படம் அது.

கேர்க் டக்ளசின் மரணம் அவரைப்பற்றிய நினைவுகளையும், 'There was a crooked man' திரைப்படம் பற்றிய நினைவுகளையும் மீள ஏற்படுத்திவிட்டதெனலாம். சில நடிகர்களைப்பொறுத்தவரை அவர்களது உடல் வசீகரம் காரணமாக அவர்கள் நடித்த திரைப்படங்கள் எவற்றையும் பார்க்காது விட்டால்கூட நினைவில் நிற்பார்கள். கேர்க் டக்லஸ் அவ்வகையான நடிகர்களிலொருவர். அவரது திரைப்படங்களைப்பார்க்காத காலகட்டத்திலேயே அவரது 'ஸ்பார்ட்ட்கஸ்' திரைப்பட விளம்பரங்களைப்பார்த்தும், அவை பற்றிய விமர்சனங்களைப் படித்தும், அவரது உருவப்புகைப்படங்களைப்பார்த்தும் என்னைக்கவர்ந்த நடிகர்களிலொருவராக அவர் விளங்கினார். அந்தக் கண்களும், அந்தப் புன்னகையும், உடல் வாகும் என்னை மிகவும் கவர்ந்தவை.

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்