Tuesday, February 4, 2020

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (11) : சுண்டெலிகள்!


- [முதலில் தாயகம் சஞ்சிகையில் (கனடா) வெளியான சிறுகதை. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் வெளியானது. தமிழகத்திலிருந்து ஸ்நேகா (தமிழகம்)- மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட 'அமெரிக்கா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. இது பற்றி எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்கள் தொகுப்புக்கான அணிந்துரையில் 'சுண்டெலி ஒன்றின் மூலம் உயிர்வாழ்வின் மனித அடித்தள இருத்தலியலின் தாற்பரியத்தைக் கூற முயன்றுள்ளார்.' என்று கூறியிருக்கின்றார்.] -

கரப்பான் தொல்லையைத் தாங்க முடியவில்லை. எல்லா வழிகளிலும் முயன்று பார்த்தாகி விட்டது. சீனாக்காரனின் 'சாக்' தொடக்கம் முயலாத வழிகளில்லை. வெற்றி கரப்பான் பூச்சிக்குத்தான். பேசாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு 'அப்பார்ட்மென்ற்' விட்டு 'அப்பார்ட்மென்ற்' மாறினால் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதைதான். கரப்பான் பூச்சிகளிற்குப் பதில் சுண்டெலிகளின் தொல்லை. கனடாவில் கட்டடங்கள்தான் உயர்ந்தனவே தவிர எலிகளல்ல. கொழுத்துக் கொழுத்து உருண்டு திரிந்த ஊர் எலிகளைப் பார்த்த எனக்கு இந்தச் சுண்டெலிகள் புதுமையாகத் தெரிந்தன. நாட்டுக்கு நாடு மண்ணிற்கு மண் உயிர்கள் பல்வேறு வடிவங்களில் உருமாறி வாழத்தான் செய்கின்றன.

சுண்டெலிகளின்பால் என் கவனம் திரும்பியதற்கு என் தர்மபத்தினியின் ஓயாத கரைச்சலும் புறுபுறுப்பும் இன்னுமொரு காரணம். குழந்தை வேறு ஆங்காங்கே ஓடித்திரியும் பூச்சிகளையும் சுண்டெலிகளையும் வியப்புத் ததும்பப் பார்ப்பதைக் கண்டதும் என்னவளிற்கு நெஞ்சைக் கலக்கத் தொடங்கி விட்டது. 'இஞ்சாருங்கோ.. உந்த சுண்டெலிகளை அடிச்சுத் துரத்தாட்டி ஒரு நிமிஷங் கூட என்னாலை இங்கேயிருக்கேலாது.. தவளுற குழந்தை இருக்கிற வீட்டிலை..' கனடா வந்து ஆறு மாதங்களிலேயே பலரிற்குத் தமிழ் மறந்து போய்விடுகின்றது. என் மனைவியோ கனடா வந்து ஆறு வருடங்கள் ஓடியும் இன்னும் சுத்தமான யாழ்ப்பாணத் தமிழில்தான் கதைத்து வருகின்றாள். தமிழ் மறந்தவர்களைப் பற்றிக் கூறினால் 'இதெல்லாம் சுத்தப் புலுடா,  பம்மாத்து,  சுத்துமாத்து' என்பாள். எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளலாம். இவளுடைய நச்சரிப்பையும் பொச்சரிப்பையும் தாங்க மட்டும் என்னால் முடியாது. சுண்டெலிகளிற்கு ஒரு முடிவு கட்டாமல் இவளும் விடமாட்டாள். முடிவாகச் சுண்டெலிகளை ஒரு கை பார்ப்பதற்கு முடிவு செய்தேன்.
சுண்டெலிகளை ஒரு வழிக்குக் கொண்டு வருவதற்கு முதல் படி சுண்டெலிகளைப் பற்றி அறிவது. சுண்டெலிகளின் பழக்க வழக்கங்கள் , நடமாட்டம் பற்றிய தகவல்களைப் பற்றிப் போதுமான தகவல்களை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகப் பெற முடியுமோ அவ்வளவிற்கு அவ்வளவு அவற்றை அடக்குவதும் இழகுவானதாக அமையக் கூடும். சுண்டெலிகளைப் பற்றி ஆரம்பத்தில் நாம் பெரிதாகக் கவனம் எடுக்கவில்லை. ஆனால் அரிசி, மாப் பைகளைப் பதம் பார்க்கத் தொடங்கிய போதுதான் விழித்துக் கொண்டோம். இப்படியே விட்டால் நிலைமை கட்டுக்கடங்காமல் போகலாம். மனைவியின் நச்சரிப்பிலும் பொச்சரிப்பிலும் நியாயமிருப்பதை உணரக் கூடியதாகவிருந்தது.

ஓரிரவு என் சகதர்மிணியும் குழந்தையும் படுக்கையில் விழுந்த பிறகு சுண்டெலிகளைப் பற்றி உளவு பார்ப்பதற்கு முடிவு செய்தேன்.புதிதாக வாங்கிய எலிப் பொறியினை வைப்பதற்குப் பொருத்தமான இடத்தினைத் தெரிவு செய்வதற்கு இந்த உளவு நடவடிக்கை உதவக் கூடும். அரிசி, மாப்பைகளைக் கொண்டுவந்து சாப்பாட்டு மேசையில் வைத்து விட்டு வந்து 'சோபா'வில் சாய்ந்தபடி, தொலைக்காட்சிப் பெட்டியைத் தட்டி விட்டேன். சுண்டெலிகளின் வரவை எதிர் பார்த்தபடி, ஆவலும் காவலுமாகக் காத்திருந்தேன். இடையிடையே 'டேவிட் லெட்டர்மா'னின் அறுவைகளையும் ரசித்தபடியிருந்தேன். நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. சுவர் மூலையில் மெல்லியதொரு சத்தம். காதுகளையும் கண்களையும் கூர்மையாக்கிக் கொண்டேன். சாப்பாட்டு மேசைக்கருகாமையில் போடப்பட்டிருந்த சோபாவின் அருகாகச் சிறியதொரு 'குறுணி' என்போமே அப்படியொரு தலை மெல்ல எட்டிப்பார்த்தது. சிறிய கருமணிக் கண்கள். குட்டி சுளகுக் காதுகள். ஒருகணம் எந்த அசைவையும் காணோம். அந்த நேரம் பார்த்துத்தானஇந்தப் பொல்லாத தும்மல் வந்து தொலைக்க வேண்டும். அடக்க முயன்றும் என்னையும் மீறி வெடித்து விட்டது. சுண்டெலியின் வேகத்தைப் பார்க்க வேண்டுமே! கடுகிப் பறந்தது. மறைந்தது என்று வேண்டுமானால் கூறலாம்.

சிறிது நேர அமைதிக்குப் பின்னர் பழையபடி அதே குட்டித்தலை. கருமணிக் கண்கள்.சுளகுக் காதுகள். இம்முறை வெகு அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். சமையலறைப் பகுதியில் வழக்கமானவிடத்தில் அரிசி, மாப்பைகளைத் தேடிப்பார்த்து விட்டுத்தான் அவற்றின் மணம் பிடித்துச் சாப்பாட்டு மேசைப்பக்கம் வந்து விட்டது போலும். எனக்குள் வினோதமானதொரு ஆசை உருவானது. மேசைக்குக் கதிரைகள் மூலம் ஏறாத வண்ணம் கதிரைகளைச் சற்றுத் தள்ளி ஏற்கனவே இழுத்து வைத்து விட்டிருந்தேன். எப்படி அந்தச் சுண்டெலி மேசையில் ஏற முயல்கிறதோ? இயலுமானவரையில் என் அசைவுகளைக் குறைத்துக் கொண்டு அதன் அசைவுகளையே அவதானித்துக் கொண்டிருந்தேன். சிறு அசைவு கூட அதனை உசார் படுத்தி விடுவதை ஏற்கனவே அவதானித்து விட்டிருந்தேன். சிறிது நேரம் அங்குமிங்குமாக அலைந்துதிரிந்து விட்டு மோப்பம் பிடித்தபடி மேசைக்குக் கீழ் வந்து விட்டது அந்தச் சுண்டெலி. சிறிது நேரம் அமைதியாகச் செவிகளை உசார் நிலையில் வைத்தபடி நின்றிருந்தது. பின்னர் அண்ணாந்து ஒருமுறை பார்த்தது. உணவு இருக்குமிடத்தை ஊகித்து விட்டது போலும். அறையினுள் சிணுங்கிய குழந்தையைத் தட்டிச் சீராட்டியபடி என் இல்லத்தரசி மெல்லப் புரண்டு படுப்பதின் அசைவை என்னால் உணரக் கூடியதாகவிருந்தது.

இந்தப் பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருமே தனது வாழ்நாளில் இயலுமானமட்டும் முயன்றுதான் பார்க்கின்றது சுண்டெலியைப் போல் ஏன் என்னைப் போல் என்றும் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். நாட்டில் பிரச்சினை மூண்டுவிட்டதென்று சொந்த மண்ணைவிட்டு வந்ததிலிருந்து இன்றுவரை எத்தனை வழிகளில் எத்தனை முயற்சிகள். ஒன்று சரி வந்தால் இன்னுமொரு முயற்சி. ஒன்று பிழைத்து விட்டாலும் இன்னுமொரு முயற்சி. எத்தனை அதிசயமான பிரமாண்டமான பிரபஞ்சம். புதிர்கள் நிறைந்த பிரபஞ்சம்.

இந்தச்சுண்டெலி இப்பொழுது மேசையின் வழவழப்பான உருக்குக் காலொன்றில் ஏறுவதற்கு மீண்டும் மீண்டும் முயன்று கொண்டிருந்தது. எப்படியும் மேசையின் மேலிருக்கின்ற உணவைஅடைந்துவிட வேண்டுமென்ற அவா பேரார்வம் அதனிடம் தொனிப்பது போல் தென்பட்டது. ஏறுவதும் விழுவதும், ஏறுவதும் விழுவதும், ஏறுவதும் விழுவதுமாக அந்தச் சுண்டெலி முயன்று கொண்டிருந்தது. சிலவேளை அது தன் முயற்சியில் வெற்றியடையலாம். அடையாமற் போகலாம். அதற்காக அது தன் முயற்சியைக் கைவிடும் வகையைச் சேர்ந்தது போல் தென்படவில்லை. இறுதி வெற்றி கிடைக்கும்வரை அல்லது களைத்துச் சோரும்வரை அது தன் முயற்சியைத் தொடரத்தான் போகின்றது. இந்தச் சின்னஞ்சிறு உயிரிற்குள்தான் எத்தனை நூதனமான வைராக்கியம்! முயற்சி! சுண்டெலிகளிற்கு ஒருவழி காணவேண்டுமென்று என்மனைவி நச்சரித்தது இலேசாக நினைவிற்கு வருகின்றது. எடீ விசரி! நம்மைப்போல்தானே இந்தச் சுண்டெலிக்கும் ஒரு குடும்பம் குழந்தையென்று சொந்த பந்தங்கள். இதை நம்பி எத்தனை உயிர்களோ? 'இது ஒரு எப்பன் சாப்பாட்டைத் தின்னுறதாலை எங்களிற்கென்ன குறையவாப் போகுது..?' நித்திரை கண்களைச் சுழற்றுகின்றது. அந்தச் சுண்டெலிமட்டும் தன் முயற்சியைக் கைவிட்டதாகத் தெரியவில்லை. அரைத் தூக்கத்திலும் அதன் சிறு அசைவுகள் கேட்கத்தான் செய்கின்றன.

நன்றி: தாயகம், திண்ணை, பதிவுகள்.

No comments:

'பதிவுகள்.காம்': 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'

எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்  கொண்டு , 2000ஆம் ஆண்டிலிருந்து , 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத...

பிரபலமான பதிவுகள்