Saturday, February 22, 2020

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (18) : ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை

[ இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட 'அமெரிக்கா' தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட 'பனையும் பனியும்' சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது.]

முதலில் தாயகம் (கனடா) பத்திரிகையில் 'ஒரு மாட்டுப்பிரச்சினை' என்னும் தலைப்புடன் வெளியாகியது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பானது (லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) இலண்டலிலிருந்து வெளியாகும் 'தமிழ் டைம்ஸ்' ஆங்கில இதழில் வெளியாகியுள்ளது.]

ஞாயிற்றுக் கிழமையாதலால் 'றோட்டி'னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட்' 'சென்ற்கிளயர்' மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித 'டென்ஷ'னுமின்றிப் பின்னால் 'ஹோர்ன்' அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'ஹோர்ன்' அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. 'நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை' இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். 'நகரம் வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்' என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடனும் அவன் சிந்தித்துக் கொள்வான்.

'ஓல்ட்வெஸ்டன்' றோட்டைக் கடந்து 'கீல் இண்டர்செக்ச'னையும் கடந்து கார் விரைந்தது. இடப்புறத்தில் 'கனடாப்பக்கர்ஸி'ன் 'ஸ்லோட்டர்' ஹவுஸ்' பெரியதொரு இடத்தைப் பிடித்துப் படர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மாடுகளைத் துண்டு போடும் பெரியதொரு கசாப்புக்கூடம்.

பொன்னையா இயற்கையிலேயே சிறிது கருணை வாய்ந்தவன். ஏனைய உயிர்களின்மேல் அன்பு வைக்க நினைப்பவன். ஊரிலை இருக்கும் மட்டும் சுத்த சைவம்தான். இங்கு வந்ததும் கொஞ்சங்கொஞ்சமாக மாறி விட்டான். 'இங்கத்தைய கிளைமட்டிற்கு இதையும் சாப்பிடாட்டி மனுஷன் செத்துத் துலைக்க வேண்டியதுதான்'. திடீரென் ஊர்ந்து கொண்டிருந்த 'டிரபிக்' தடைப்பட்டது. பொன்னையா மணியைப் பார்த்தான். நேரம் பதினொன்றையும் தாண்டி விட்டிருந்தது. பஞ்சாப்காரன் பத்து மணிக்கே வரச்சொல்லியிருந்தான்.
பொன்னையாவிற்குத் தெரிந்த ஓரளவு நாணயமான கராஜ் அந்தப் பஞ்சாப்காரனின் கராஜ்தான். 'ஸ்டியரிங்'கில் மெல்லியதொரு உதறல் நேற்றிலிருந்து. அதனைக் காட்டத்தான் பொன்னையா விரைந்து கொண்டிருந்தான். 'நேரங் கெட்ட நேரத்திலை இதென்ன டிரபிக் புளக்..' இவ்விதம் எண்ணியபடி 'டிரபிக்' தடைப்பட்டதற்குக் காரணம் என்னவாகயிருக்குமென் எதிரே நோக்கினான்.

இதற்குள் 'றோட்'டுக் கரையில் சனங்கள் விடுப்பு விண்ணானம் பார்க்கக் கூடத்தொடங்கிட்டுதுகள். இந்த விஷயத்தில் எல்லா மனுஷருமே ஒன்றுதான். எதிரே அவன் பார்வையை மறைத்தபடி கனடா பக்கர்ஸிற்குச் சொந்தமான பெரிய 'ட்றக்'கொன்று நின்றதால் இவனால் ஒழுங்காகப் பார்க்க முடியவில்லை.

'றோட்'டுக் கரையில் விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்த சைனாக்காரனொருவனைப் பார்த்து ''ஏ..மேன் ..வட்ஸ் த மாட்டார்? வட்ஸ் கோயிங் ஓன்..." பலமாகக் கத்தினான்.

அதற்கு அந்தச் சைனாக்காரன் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ''பீவ்..எஸ்கேப்..ஸ்லோட்டர்.." என்றான்.

அருகிலிருந்த வெள்ளையனொருவன் சைனாக்காரனின் ஆங்கிலத்தைக் கேட்டுச் சிரித்தான். இவனுக்கும் சிரிப்பாகவிருந்தது. ஆனால் அந்த ஆங்கிலம் கூட விளங்கியது. மாடொன்று 'ஸ்லோட்டர் ஹவுஸ்'ஸிலிருந்து தப்பி வந்து விட்டது என்பதைத்தான் அந்த சைனாக்காரன் அவ்விதம் கூறினான் என்பதும் விளங்கியது.

மரணத்திலிருந்து தப்பிவந்த அந்த இனந்தெரியாத மாட்டின் மேல் ஒருவித பரிதாபம் தோன்றியது. அநுதாபம் படர்ந்தது. காரை வெட்டி 'றோட்'டுக்கரையோரம் நிறுத்தி விட்டு பொன்னையா காரை விட்டிறங்கி வேடிக்கை பார்க்கும் சனங்களில் ஒன்றானான். 'ஸ்ட்ரீட் கார்' செல்லும் இருப்புப் பாதையின் மேல் , சுற்றிவர வேடிக்கை பார்த்தபடி நிற்பவர்களைப்பார்த்து முறைத்தபடி அந்த மாடு நின்றது. அதன் கண்களில் மரண பயம் கவ்விக் கிடந்ததை இவன் உணர்ந்தான். அதைப் பார்க்கப் பாவமாயிருந்தது. பொன்னையாவிற்குக் கவலை தோன்றியது.

உருண்டு திரண்டு கொழுகொழுவென்று வாட்ட சாட்டமாக வளர்ந்திருந்தது. அருகில் சென்று பிடிக்க முனைந்த 'கனடா பக்கர்ஸ்' ஊழியர்களைப் பார்த்து முறைத்தது. முட்டுவது போல் பாசங்கு செய்து முரண்டு பிடித்தது. அருகில் ஒருவரையும் வரவிடாமல் தடுத்து வைப்பதில் ஓரளவு வெற்றி கண்டிருந்தது.

எவ்வளவு நேரத்திற்குத்தான் அதனால், அந்த ஐந்தறிவு உயிரினால், தாக்குப் பிடிக்க முடியும்? 'மட மாடே! மனிதனுடன் போட்டி போட்டு உன்னால் வெல்ல முடியுமா என்ன?'

திடீரென பொன்னையாவிற்குச் சிந்தையில் ஒரு எண்ணம் எழுந்தது.

'இந்த மாட்டின் மனநிலை என்னவாயிருக்கும்?' அருகிலுள்ள ஸ்லோட்டர் ஹவுஸிற்குள் வெட்டுப் படுவதற்காகக் காத்து நிற்கும் ஏனைய மாடுகளின் ஞாபகமும் எழுந்தது. 'இவ்விதம் தப்பிவர இந்த மாடு எவ்வளவு கஷ்ட்டப் பட்டிருக்கும்?'

'கிடைத்த சுதந்திரத்தின் நிரந்தரமற்ற தன்மையைப் பாவம் இந்த மாட்டால் உணரமுடியவில்லை..அதனால்தான் தன்னுயிரைக் காத்துக்கொள்ள கிடைத்த அற்ப சுதந்திரத்தைப் பாதுகாக்க இந்த மாடு வீராவேசத்துடன் முயல்கிறது..'

ஊரில் இருப்பவர்களின் நினைவுகளும் எழாமலில்லை...'இந்த மாட்டைப் போன்ற நிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர்?..அரைகுறையாகத் தப்பி மீண்டும் அகப்பட்டவர்கள்..தப்புவதற்கு முடியாமல் சமாதியாகிப் போனவர்கள்...'

மீண்டும் கவனம் மாட்டின் மேல் திரும்புகின்றது. இன்னமும் அது மூர்க்கத்துடன் தன்னை நெருங்குபவர்களை எதிர்த்து நிற்கின்றது. யாரும் நெருங்காத சமயங்களில் ஒருவித சோகம் கலந்த பாவத்துடன் அமைதியாக ஒருவித பயத்துடன் நிற்கிறது.

அதன் கண்களிருந்து மெல்ல மெல்ல இலேசாகக் கண்ணீர் வடிகிறது..எதை நினைத்து அழுகிறது? தன் பரிதாபகரமான நிலையை நினைத்தா?தன்னை சமாதியாக்குவதற்குக் கங்கணம் கட்டி நிற்கும் மனிதர்களால் தனக்கேற்பட்ட நிராதரவான நிலையை உணர்ந்தா? ஏன் அது அழுகிறது?

திடீரெனப் பொன்னையாவிற்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. 'ஏன் இந்த மாட்டிற்குரிய விலையைக் குடுத்து, இதன் உயிரைக் காப்பாற்றினாலென்ன? ஊரிலையென்றாலும் வீட்டு வளவிலை போய்க் கட்டி வைக்கலாம்...இங்கு எங்கு போய்க் கட்டி வைப்பது..? அப்பார்ட்மென்றிலையா..?அப்படித்தான் காப்பாற்றினாலும் இந்த ஒரு மாட்டைக் காப்பாற்றுவதால் மட்டும் இதன் நிலையில் இருக்கின்ற ஏனைய மாடுகளின் பிரச்சினை தீர்ந்து விடுமா..?'

இதற்கிடையில் யாரோ மாடு 'டிரபிக்'கிற்குத் தடையாயிருப்பதை பொலிஸிற்கு அறிவித்து விட்டார்கள் போலும்.. 'எமர்ஜன்ஸி பிளாஸிங் லைட்'டுடன் 'சைரன்' முழங்க பொலிஸ் காரொன்று விரைந்து வந்து இறங்கியது. இரு பொலிசார் இறங்கினார்கள். கயிரொன்றில் வளையம் செய்து சிறிது நேரம் முயற்சி செய்தார்கள். பலனில்லை. மாடு மிகவும் உறுதியாகவே எதிர்த்து நின்றது. இதற்கிடையில் விஷயத்தை மோப்பம் பிடித்துப் பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சிக்காரர்களென்று 'கமரா'க்களுடன் கூடி விட்டனர்.

மாடு தன்னுயிரைக் காப்பதற்கானதொரு போராட்டத்தில், ஜீவமரணப் போராட்டத்திலீடுபட்டிருக்கின்றது. இதை அடக்க, வேடிக்கை பார்க்க, படம் பிடிக்க ஒரு கூட்டம். ஒன்றிற்கும் செயல் பட முடியாத , இயலாத கூட்டம். தானும் அக்கூட்டத்தில் ஒருவன் என்பதை நினைக்கையில் பொன்னையாவிற்குத் தன்மேல் ஒருவித வெறுப்புக்கூடத் தோன்றியது.

தங்கள் முயற்சி சிறிது தோல்வியுற்றதைக்கண்ட பொலிஸார் தங்களிற்கு கூடிக் கதைத்தார்கள். இதற்குள் வீதியில் இரு திசைகளிலும் வாகனங்கள் பெருமளவில் முடங்கத் தொடங்கிவிட்டன.

தொலைவிலிருந்தவர்கள் போக்குவரத்து தடைப்பட்டதன் காரணத்தை அறியாத நிலையில் 'ஹோர்ன்'களை மாறிமாறி அடிக்கத் தொடங்கிவிட்டார்கள். நிலைமை கட்டுமீறுவதைப் பொலிஸார் உணர்ந்தார்கள்.

இறுதியில் மாட்டுப் பிரச்சினை ஒரு முடிவிற்கு வந்தது.

ஆறறிவுப் பிராணியின் முன்னால் சுதந்திர வேட்கை நசுக்கப் பட்ட நிலையில் 'ட்ரான்குலைசரா'ல் மயக்கப்பட்டு சாய்ந்த மாட்டைத் தூக்கிய கனடாப் பக்கர்ஸ் ஊழியர்கள் அதனை 'ஸ்லோட்டர் ஹவுஸி'ற்குள் கொண்டு சென்றார்கள்.

ஒருவழியாகப் போக்குவரத்துச் சீர்பட்டது. சனங்கள் ஒவ்வொருவராகக் கலையத் தொடங்கினார்கள்.

பஞ்சாப்காரன் திட்டப் போகின்றானென்ற நினைப்புடன் தன்காரில் பாய்ந்தேறினான் பொன்னையா. கூடவே அடிக்கடி மிருகங்களை வதைப்பதாகக்கூறி வழக்குப் போடும் 'ஹியுமேன் சொசைடி'யின் ஞாபகமும் வந்தது. சிரிப்பு வந்தது.

சிறிது போராடித் தோல்வியுற்ற மாட்டின் நிலைமை அநுதாபத்தை தந்தாலும் அதன் சுதந்திர வேட்கையும் அதற்காக அது போராடிய தீவிரமும் அதன் மேல் ஒருவித பக்தியை, பெருமிதத்தை ஏற்படுத்தியது. சொன்னால் நம்ப மாட்டீர்கள்! அன்றிலிருந்து பொன்னையா மீண்டும் முழுச் சைவமாகிவிட்டான்.

[இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட 'அமெரிக்கா' தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட 'பனையும் பனியும்' சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது.]

நன்றி: பதிவுகள் யூலை 2000; இதழ் 7. , திண்ணை,  தாயகம் (கனடா)

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்