Tuesday, February 4, 2020

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (10) : பொந்துப்பறவைகள்!




சோபாவில் படுத்திருந்தபடி டி.வியைப் பார்த்துக்கொண்டிருந்தான். கடந்த நான்கு மணித்தியாலங்களாக வலி அதிகமாகிநடக்கமுடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தான். ஆஸ்பிரினை ஒழுங்காக எடுத்துவந்தால் இரவு வலிகுறைந்துவிடும். இதுமட்டும் பொறுமையாக யிருக்க வேண்டும். இத்தகைய சமயங்களில் அவனுக்கு ஊரிலிருக்கும் அம்மாவின் ஞாபகம் வந்துவிடும். அவனை அப்படி இப்படி அசைய விடமாட்டாள். வெந்நீரால் மூட்டுகளுக்கு ஒத்தடம் கொடுத்து விடு வாள். அவளுக்கு எப்பொழுதுமே அவனென்றால் செல்லம்தான்.

இத்தகைய சமயங்களில் அத்தகைய ஆறுதலும் வேண்டித்தான் இருக்கிறது. அதையெல்லாம் இங்கு எதிர்பார்க்க முடியாது. அவன் தனித்து இந்த பச்சிலர் அப்பார்ட்மெண்டில் வாழ்கிறான். காங்கிரீட் காட்டினுள் ஒரு பொந்து வாழ்க்கை. அவனிற்கு எதிர்ப்புறமாகவுள்ள பொந்தில் ஆங்கிலக் குடும்பம், இடப்புறம் ஒரு சீனக்குடும்பம். வலப்புறமாக. ஒரு யமேக்கன், 'இந்த யமேய்கன் கறுவல்களை யெல்லாம் அடித்துக்கலைக்கவேண்டும். குடியும் பெட்டையும் மருந்தும் இருந்தால் இதுகிற்குக் காணும் ஒழுங்காக உழைத்துப் படித்து வாழ இதுகளாலை முடியாது. களவெடுக்கிறதும் சுட்டுத்திரியிறதும். சீ.' இதுமுருகேசனின் கறுப்பினத்தவர்களைப் பற்றிகுறிப்பாக யமேய்க்கன் நாட்டுக் கறுப்பின மக்களைப்பற்றி எண்ணப்போக்கு. இவ்விதம் முத்திரை குத்தும் பழக்கம் அவனது தொட்டிற்பழக்கம் சுடுகாடுவரை போகாமல் விடாது. தொப்பி பிரட்டிகள், மோட்டுச் சிங்களவன் என்ற கருதுகோள்களின் பரிணாம வளர்ச்சி.

 நேரம் சென்றுகொண்டிருந்தது.

எத்தனை நேரம்தான் டி.வியைப் பார்த்துக் கொண்டிருப்பது. அலுத்துவிட்டது. டி. வி. சத்தமே எரிச்சலையும் தலையிடியையும் தரத் தொடங்கியது. டி.வியை நிற்பாட்டினான்.

நோய்வருமட்டும் நோயற்றவாழ்வின் அருமை தெரிவதில்லை. இத்தகைய சமயங்களில்தான் தெரிந்துவிடுகிறது. இனி ஒழுங்காக உடம்பைக் கவனித்துக் கொள்ளவேண்டும். சாப்பாட்டைச் சரியாக நேரத்திற்கு எடுக்க வேண்டும்.
இந்தச்சமயம் பார்த்து பயர் 'அலார்ம்' அடிக்கத் தொடங்கியது. இந்த 'அலார்ம்' அடிப்பதே இங்கு ஒரு முக்கியமான பிரச்சினை.

எல்லாமிந்த கறுவல்களின்ற சேட்டைதான். விளையாட்டுக்கு அடித்துவிட்டு 'பயர்பிரிகாட்' ஒடித்திரிவதைப் பார்ப்பதில் இவங்களிற் கொரு திரில்.
இவ்விதமாக முருகேசன் எண்ணினான். வழக்கமாக அலாம் அடித்துவிட்டு சிறிது நேரத்திலே ஒய்ந்து விடும். ஆனால் இம்முறை ஒய்வதாகத் தெரியவில்லை. விடாமல் அடித்துக்கொண்டே இருந்தது.

வெளியில் மனிதர்கள் ஒடித்திரியும் நடமாட்டம் அதிகரித்தது. ஏதோ ஒரு புளோரில் இருந்து பெண்கள் சிலரின் கூக்குரல் கேட்டது. முருகேசன் சிறிது கலவரமடைந்தான்.

வெளியில் பயர்பிரிகாட்டின் சைரன் பலமாக ஒலிக்கத் தொடங்கியது.
ஏதோ உண்மையாகவே நடந்திருக்க வேண்டும்போல் முதன்முறையாக முருகேசன் உணர்ந்தான். இன்னும் 'அலார்ம்' விடாமல் அடித்துக் கொண்டே இருந்தது.
முருகேசன் எழும்புவதற்கு முயன்றான். மூட்டு பலமாக வலித்தது. அசைய முடியவில்லை. இலேசானமணமொன்று மூக்கைத்துளைத்தது. எங்கோ, ஏதோ எரியும் வாசனை. முருகேசனின் கலவரம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த இக்கட்டிலிருந்து எப்படித்தப்புவது? 'கடவுளே! எப்படியாவது என்னைக் காப்பாற்றிவிடு' பொதுவாக முருகேசனுக்கு கடவுள்நம்பிக்கை அதிகமில்லை; ஆனால் இத்தகைய சமயங்களில்தான் கடவுள் நம்பிக்கை அதிகமாகி விடுகின்றது. எரியும் வாசனையைத் தொடர்ந்து பல்கனிப் பக்கமாக இலேசான புகை பரவிக் கொண்டிருந்தது தெரிந்தது. வெளியில் ஒடிக்கொண்டிருந்த மனிதநடமாட்டம் குறைந்து மெல்ல மெல்ல ஓய்ந்துபோய் விட்டது. எல்லோரும் ஒடிப்போய் விட்டார்கள். முருகேசன் தனித்துப் போய் விட்டான். இப்படியே முடிந்துவிட வேண்டியதா? எப்படி தானிருப்பதை வெளியில் தெரியப்படுத்துவது? முருகேசனுக்கு ஒரு வழியும் தென்படவில்லை. ஊர்நினைவு உடனடியாக எழுந்தது. ஆவலும் எதிர்பார்ப்புமாக அம்மா, அக்கா, தங்கச்சிமார், தம்பி. 'ஒரு லைப் இன்சூரன்ஸ் கூட எடுத்து வைத்திருக்கவில்லையே. எடுத்திருந்தாலாவது கொஞ்சக் காசாவது அவர்களுக்குக் கிடைக்கும்'முருகேசன் முடிவைநோக்கித்தன்னைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபட்டான். 'வருவது வரட்டும் எதிர்கொள்ள வேண்டியதுதான். 'புகையின்காரம் அதிகரிக்கத் தொடங்கியது. கண்கள் எரியத் தொடங்கின. தொண்டை செருமத் தொடங்கியது. இறுதிமுறை யாக எழும்புவதற்கு முடிவுசெய்தான். முடியவில்லை. முயற்சியைக் கைவிட்டவனாக சோபாவில் ஆயாசத்துடன் சாய்ந்தான்.
இந்தச் சமயம் பார்த்து கதவு பலமாகத் தட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்த பலமான குதல். 'எனிபொடி இன்?'

அந்தக் குரல் அவனுக்கு நன்கு விளங்கியது. பக்கத்து வீட்டு யமேக்கனின் குரல். பலமுறை அந்தக் குரலை இவன் கேட்டிருக்கிறான்.
முருகேசனுக்கு தென்பு மீண்டும் அதிகரித்தது. கடவுள்தான் யமேக்கனின் உருவில் வந்ததாகப் பட்டது. பதிலிற்குப் பலமாக இவன் கத்தினான்.

"ஐ ஆம் கியர் ஐ ஆம் கியர். ஐகனட் வோக்மான். காவிங் ஜாயின்ட் ப்ராப்ளம்.' யமேக்கனுக்குஇவனது உச்சரிப்புசரியாக விளங்கவில்லை. பலமாக மீண்டும் கதவைத்தட்டினான்.

'ஒப்பின் யுவர் டோர் மான்: குயிக் குயீக் பில்டிங் இஸ் இன் பிளேம்ஸ்," முருகேசன் மீண்டும் பலமாகக் கத்தினான்.

'பிரேக் த டோர். பிரேக் த டோர் ' யமேக்கனுக்கு இவன் ஏதோ இக்கட்டில் இருப்பது விளங்கியது. பலமாக கதவை மோதினான். அவனுடைய உருக்கு உடம்பு வலிமைக்குமுன்னால் கதவுஈடுகொடுக்க முடியவில்லை. உள்ளே உடைத்து வந்தவனைப் பார்த்து

'ஐ கான்ட் வோக் மான்' என்றபடி தன் கால் மூட்டைக் காட்டினான் முருகேசன். வெளியில் புகையின் செறிவு அதிகரிக்கத் தொடங்கியது. உள் நடைபாதையிலும் புகை பரவத் தொடங்கியது. யமேக்கன் கொஞ்சமும் தாமதிக்கவில்லை. முருகேசனை அலாக்காகத் தூக்கியவனாக வெளியேறினான்.

'ஏ மான் யு லுக் ஸ்கின்னி, பட் டூ ஹெவி மன்' என்று அந்தச் சமயத்திலும் ஜோக் அடித்துவிட்டுப் பலமாகச் சிரிக்கவும் அந்த யமேக்கன் தவறவில்லை. முருகேசனுக்கு அதிசயமாகவிருந்தது. அவன் முதல் முதலாக கறுப்பர்களைப் பற்றிய தன் கணிப்பீட்டை மாற்றியது அன்றுதான். அந்த மாற்றம் கூடச் சுயநலத்தால் விளைந்ததொன்றாக இருந்ததையெண்ணி முருகேசன் உண்மையிலேயே வெட்கித்துப் போனான்.

நன்றி: சுவடுகள் (நோர்வே) , திண்ணை & பதிவுகள்

No comments:

காலத்தால் அழியாத கானம்: 'ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்..'

எஸ்.எஸ்.ஆர் & விஜயகுமாரி, கே.வி.மகாதேவன், கவிஞர் கண்ணதாசன் கூட்டணியிலுருவான இன்னுமொரு காலத்தால் அழியாத கானமிது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ...

பிரபலமான பதிவுகள்