Wednesday, February 26, 2020

கவிதை: வேற்றுலக வாசியுடனோர் உரையாடல் (1) - வ.ந.கிரிதரன் -



ஊர்துஞ்சும் நள்ளிரவு.
விரிவெளி பார்த்திருந்தேன்.
இரவுவான்!
புட்களற்ற மாநகரின் நள்ளிரவு
நத்துகள் ஒலியேதுமில்லை. ஆந்தைகளின் அலறல்கள் எங்கே?
வெளவால்கள்தம் சலசலப்புமில்லை.
வாகன இரைச்சல் மட்டும்
சிறிது தொலைவில்
சிறிய அளவில்.
உப்பரிகையின் மூலையில்
தூங்கும் மாடப்புறாக்களின்
அசைவுகள்
அவ்வப்போது கேட்கும் சூழல்.
விரிவெளியில் சுடரும் ஒளிச்சிதறல்கள்
பல்வகை எண்ணங்கள் நெஞ்சில்.
எங்கோ ஒரு கோடியில் இங்கு
நான்.
அங்கு
நீ!
எங்கே?
சாத்தியமுண்டா?

நானுண்டாயின் நிச்சயம் நீயுமுண்டே.
அசைக்க முடியாத நம்பிக்கை
எப்பொழுதுமுண்டு எனக்கு.
உன்னைச் சந்தித்தல்
ஆனால் (If) அல்ல
எப்போது (When) என்பதுதான்
இப்போதுள்ள நிலை.
அது புரியுமெனக்கு.
அவ்வளவு நம்பிக்கை உன்
இருப்பில்.
விரியும் காலவெளி
அடுக்குள்
எதிரே.
அப்போது கேட்டதந்தக்
குரல்.
எங்கிருந்து வருகின்றதோ
அந்தக் குரல்?
சுற்றுமுற்றும் பார்த்தேன்.
யாருமில்லை.
யாராகவிருக்கும்?
மீண்டுமந்தக் குரல்:
"நண்பா! உன்னால் என்னை வெளியில் எங்கும்
காணவே முடியாது. எங்கு நீ பார்க்கின்றாய்?
அங்கு பார்ப்பதைத் தவிர்.
பார்வையை இங்கு திருப்பு.
இங்கு பார்"
வெளியில் இல்லையா? பின் உள்ளேயா?
உள்ளே என்றால்
எங்கே உள்ளே?
குழப்பத்தில் சித்தம் குழம்ப
மீண்டுமந்தக் குரல்.
இப்பொழுது
அதன் இருப்பிடத்தை உணர முயற்சி செய்தேன்.
உண்மைதான்.
அது வெளியிலிருந்து  அல்ல.
உள்ளிருந்துதான் ஒலிக்கின்றது. ஆம்!
உள்ளிருந்துதான்.
அது மீண்டும் தொடர்ந்தது:
"நண்பா! நல்லது. நீ சரியான திசையில்
நோக்கத்தொடங்கி விட்டாய்."

மேலும் அது தொடர்ந்தது:
"ஆனால் உன் காலவெளியில்
உன்னால் ஒருபோதும் என்னைப்
பார்க்க முடியாது.
ஏன் தெரியுமா?
ஏனென்றால்
உன் காலவெளிப் பரிமாணங்கள்
நான்கு. நான்கு சுவர்களுக்குள் உன்
இருப்பு.
ஆயின் என் இருப்போ?
அது போல் நான்கு மடங்குச்
சுவர்களுக்குள். புரிகிறதா?
பரிமாணங்கள் பதினாறு.
உங்களால் ஒருபோதும் எங்களைக்
காணமுடியாது. ஆயினும்
உங்களை நாம் எப்போதும் கண்டு
கொண்டுதானுள்ளோம்.
உங்களைச்சுற்றி பல்வகை உயிர்கள்.
அவற்றின் வாழ்வில் நீங்கள் கவனம் கொள்வதுண்டா?
அவை தம்பாட்டில். நீங்கள் உங்கள்பாட்டில்.
அதுபோல்தான் இதுவும்.
புரிந்ததா?
இருந்தாலும் ஒன்று சொல்வேன்.
உன் சிந்தனையலைகளில் என்னால்
கலக்க முடியும். அது கூறும் தகவல்களை
என்னால் அறிய முடியும்.
அவ்விதமே இப்பொழுதும்
நானுன் சிந்தனையலைகளில்
கலந்துள்ளேன்.
உன்னுடன் உரையாடுவதும்
அவ்வகையில்தான்.
அதுதான் கூறினேன்
நண்பா! நான் வெளியில் அல்ல.
உன்னுள் உள்ளே என்று.
நல்லது நண்பா!
உனக்கு என்னிருப்பை அறிவிக்க
இவ்வழி தேர்ந்தேன். அறிவித்தேன்.
நான் சென்று வருகிறேன்.
அவ்வப்போது வருவேன். உன்னுடன்
அளவளாவுவேன். "

என்ன! எங்கே அந்த
அயலுலகவாசி?
என்னுள்ளிருந்து உரையாடிய
நீ எங்கே?
விரிகாலவெளிக்குள் அலைக்குள்
அலையானாயோ?
இதுவரை உன்னுடன் உரையாடியதை
எவ்விதம் விளக்குவேன் என்னவருக்கு?
அயலுலகவாசியே அதற்குமொரு வழி
கூறிச் சென்றிருக்கக் கூடாதா?
இருந்தாலும் உனக்கென் நன்றி.
எம்மைப்போல் உன்னைப்போல்
இன்னும் பலர் இங்கிருக்கக் கூடும்.
நீயோ நம் காலவெளிக்கூம்புக்கு
அப்பாலிருந்து பயணித்திருந்தாய்.
அவ்விதமிருந்தும் என்னுடன்
அளவளவாவிட அவாக் கொண்டாய்.
அது போதாதா எனக்கு இவ்விருப்பு
இங்கிருக்கும் வரையில்.
அதுபோதும். அதுபோதும்.
அகத்தில் விரிவு தந்தாய்.
அண்டம் பற்றிப் புரிதல் தந்தாய்.
அது போதும். அதுபோதும்.
அது போதும் அண்டவாசியே.

ngiri2704@rogers.com

No comments:

'எனது குழந்தைகள்' கவிதை பற்றி...

'புதுசு' சஞ்சிகையின் ஜூலை 1984 இதழில் வெளியான கவிதை இது. துஷ்யந்தன் எழுதியது. இந்தக் கவிதையை வாசித்தபோது குறிப்பாக 'யுத்தத் தாங்...

பிரபலமான பதிவுகள்