Monday, February 3, 2020

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (9): கட்டடக் கூட்டு முயல்கள்


- இச்சிறுகதை தேடல் (கனடா) சஞ்சிகையில் முதலில் வெளியானது. பின்னர் பதிவுகள் & திண்ணை இணைய இதழ்களில் வெளியாகியது. -

நீண்ட நாட்களின் பின்னால் நண்பன் இருப்பிடம் சென்றிருந்தேன். ஓங்கி உயர்ந்திருந்த கட்டடக் காட்டு மரமொன்றின் உச்சியில் அமைந்திருந்தது அவனது கூடு. டொராண்டோவின் மத்தியில் அமைந்துள்ள இந்தக் கட்டட மரத்திற்கு ஒரு பெருமையுண்டு. இரண்டு வயது முதிர்ந்த ஆண் தமிழர்களும், ஒரு நடுத்தர வயதுத் தமிழ்ப் பெண்ணும் பல்கணியிலிருந்து பாய்ந்து தமது வாழ்வினை முடித்துக் கொண்ட பெருமை இதற்குண்டு. அண்மைக் காலமாகவே இத்தகைய தற்கொலைகள் இங்கு அதிகரிக்கத் தான் தொடங்கி விட்டிருந்தன. இவ்வளவு வசதிகள் இருந்தும் இவர்கள் ஏனிவ்விதம் தற்கொலை செய்து கொள்கின்றார்களோ?

நண்பன் இன்னுமொரு பிரமச்சாரி. வழக்கமாக ஒவ்வொரு முறை அவனது இருப்பிடம் செல்லும் போதெல்லாம் ஏதாவதொரு மாற்றத்தை அவனது உறைவிடத்தில் அவதானிக்கக் கூடியதாகவிருக்கும். இம்முறையும் அவ்வகையிலொரு மாற்றம். நண்பன் ஒரு கூட்டினுள் இரு முயல்கள் வளர்க்கத் தொடங்கியிருந்தான்.

"என்னவிது புதுப் பழக்கம். எத்தனை நாட்களாக இது.."வென்றேன்.

"இரண்டு மாதங்களாகத் தான்" என்றான்.

"இவற்றை எங்கு போய் பிடித்தாய்?"

"நான் வேலை செய்கிற 'ரெஸ்ட்டோரண்ட்' மானேஜரின் முயல்களிவை?"
"உனக்கு அன்பளிப்பாகத் தந்து விட்டானா?"

"அப்படியொன்றுமில்லை. அவனிற்கு இவை அலுத்துப் போய் விட்டன. கறியாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தான். நான் காப்பாற்றிக் கொண்டு வந்துவிட்டேன்.. விலை கொடுத்துத் தான்.."

"நல்லதொரு ஜீவகாருண்யவாதி"

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பார்க்கப் பாவமாகவிருந்தது. அவ்வளவுதான். வீணான அர்த்தங்களைப் போய்த் தேடாதே"

அப்பொழுதுதான் ஒன்றினை அவதானித்தேன். அந்தச் சிறு முயற் கூட்டினுள் இடையில் ஒரு கார்ட்போர்ட் மட்டையினால் தடுப்புப் போட்டு அம்முயல்களிரண்டினையும் அவன் பிரித்து வைத்திருந்தான். அதிசயமாகவிருந்தது.

"எதற்காக இப்படிச் செய்திருக்கிறாய்? முயல்கள் பாவமில்லையா?" என்றேன்.
"பாவம் தான். ஆனால் அவை செய்கிற அநியாயத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை. அதனால் தான் அப்படிச் செய்து விட்டேன்."

'என்ன பெரிய அநியாயத்தை அவை செய்திருக்க முடியும்?'

"நீ சொல்வது புரியவில்லையே?" யென்றேன்.

"புரியாமலிருப்பதே நல்லது" என்றான்.

"பார்க்கப் பாவமாயிருக்குதடா" வென்றேன்.

"அப்படித் தானிருக்கும். அந்தத் தடுப்பினை எடுத்து விடுகிறேன் என்று வையேன். மறு நிமிடமே அவை ஒன்றையொன்று தழுவிக் கும்மாளமடிக்கத் தொடங்கி விடும்." என்றான்.

அவை கும்மாளமடித்தால் இவனிற்கென்ன? நண்பனிற்கு இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை. ஒருவேளை முயல்களின் காமக் களியாட்டங்கள் இவனிற்கு வெறுப்பினைத் தருகின்றதோ?

"அவை கும்மாளமடித்தால் நல்லது தானே?"யென்றேன்.

"உனக்கு விசயம் தெரிந்தால் நீயும் நான் செய்வது தான் சரியென்று கூறுவாய்"

"அப்படியென்ன விசயம். சொல்லித் தொலையடா."

"டேய் மச்சான். இவையிரண்டும் ஆண் முயல்களடா"

இப்பொழுது விசயம் முழுவதும் விளங்கியது. நண்பன் ஆண் முயல்களிரண்டினையும் கூட்டினுள் போட்டு அடைத்து வைத்திருக்கின்றான். அவையோ இயற்கையின் தேவையினை இருப்பதைக் கொண்டு பூர்த்தி செய்ய முயற்சி செய்திருக்கின்றன. நண்பன் பிரித்து வைத்து விட்டான். எப்பொழுதோ வாசித்திருந்த 'டெஸ்ட்மண்ட் மொரிஸ்'இன் நூலொன்றில் நகரத்து மனிதரைப் பற்றி வாசித்தது நினைவிற்கு வந்தது. கூட்டில் அடைத்து வைக்கப் பட்ட மிருகங்கள் எவ்விதம் இயற்கைக்கு மாறாகத் தமது நடத்தைகளை மாற்றிக் கொள்கின்றனவோ அவ்விதமே காங்கிரீட் கூடுகளிற்குள் அடைத்து வைக்கப் பட்டுள்ள நகரத்து மனிதரும் தமது நடத்தைகளை மாற்றிக் கொள்கின்றனர் என்று வாசித்ததாக ஞாபகம். கூட்டினுள் இருந்த முயல்களைப் பார்த்தேன். பரிதாபத்திற்குரிய ஜீவன்கள். அவையிரண்டும் ஒன்றையொன்று பார்ப்பதும் தடுப்பினைச் சுரண்டுவதுமாகவிருந்தன.

"நீ வேண்டுமானால் ஒன்று செய்திருக்கலாம்"

"என்ன?" நண்பன் என்னை நோக்கினான்.

"பேசாமல் உன்னுடைய 'ரெஸ்ட்டோரண்ட்' மானேஜரையே இவற்றைக் கறியாக்க விட்டிருக்கலாம். இல்லையென்றால் 'ஹியூமேன் சொசைட்டி'யிடம் கொண்டு போய் விட்டிருக்கலாம். பார்க்கச் சகிக்கவில்லை"யென்றேன்.

"நீ சொல்வதும் ஒரு விதத்தில், சரிதான். ஆனால் அவற்றின் மீதான பாசம் என்னைக் கட்டிப் போட்டு விட்டது."

"உன்னுடைய பாசத்திற்காக அவற்றை வருத்துவதிலென்ன நியாயம்?"
நண்பன் மெளனமாகவிருந்தான்.

"குறைந்தது நாள் முழுக்க அசையக் கூட முடியாதவாறுள்ள இடத்தில் இவற்றை இப்படியே வைத்திருக்காமல் பேசாமல் திறந்து விட்டு விடு. அப்பாற்மெண்ட்டிற்குள்ளாவது அவை ஓடித் திரியலாமல்லவா?"
"நீ சொல்லுவதும் சரிதான்" என்றான்.

நீண்ட நேரமாக நண்பனுடன் உரையாடி, நண்பன் தயாரித்துத் தந்த உணவினையும் உண்டு விட்டு எனது இருப்பிடம் திரும்பிய போது நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. "இவ்வளவு நேரமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள். கொஞ்சமாவது குடும்பம் பிள்ளைகளென்று கவனமேதாவதுண்டா? பொறுப்பென்பது உங்களிற்குக் கொஞ்சம் கூட இல்லை" இவ்விதம் எனது சகதர்மிணியிடம் திட்டு வாங்கிக் கொண்டு படுக்கையில் சாய்ந்த போது தொலைபேசி அலறியது.

'இந்த நேரத்தில் யாராகவிருக்கும்'

அழைத்தது நண்பன் தான்.

"என்னடா மச்சான். இந்த நேரத்திலை"

"நீ சொன்னமாதிரியே கூட்டைத் திறந்து விட்டேன்."

"நல்ல விசயமொன்று செய்திருக்கிறாய்"

"ஆனால்...முயல்களிரண்டும் பல்கணியிலிருந்து பாய்ந்து விட்டன மச்சான்."
நண்பனின் குரலில் ஒருவித விம்மலுடன் கூடிய கவலை தொனித்தது.

நன்றி: திண்ணை, பதிவுகள், தேடல்

No comments:

வ.ந.கிரிதரன் - நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

எழுத்தாளர் மாலன் , இந்திய சாகித்திய அமைப்புக்காகத் தொகுத்த  'புவி எங்கும் தமிழ்க் கவிதை'த் தொகுப்பில் இடம் பெற்றுள்ள  எனது கவிதையான ...

பிரபலமான பதிவுகள்