Tuesday, February 4, 2020

வ.ந.கிரிதரனின் புகலிடக் கதைகள் (15): மனைவி!


- திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியான சிறுகதை. 'ஈழநாடு (கனடா) இதனை மீள்பிரசுரம் செய்திருந்தது. -

இரவு மணி பதினொன்றினை நெருங்கிக் கொண்டிருந்தது. யன்னலினூடி கட்டட முனிகள் தவமியற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஓட்டியற்ற ஓடமாகப் பிறை நிலவு. பலகணியில் அடைந்திருந்த புறாக்கள் சில அசைந்தன. அடுத்த அப்பார்ட்மென்ட்லிருந்த இதுவரை கத்திக் கத்தி யுத்தம் புரிந்து கொண்டிருந்த யமேய்க்கனும் அவனது வெள்ளைக் காதலியும் சற்று முன்னர் தான் சப்தமிழந்து ஓய்ந்து போனார்கள். மனோரஞ்சிதத்தின் நெஞ்சுப்புற்றிலிருந்து ஞாபகப் பாம்புகளெழுந்து படம்விரித்தாடின. முன்றிலில் சாய்வு நாற்காழியில் சாய்ந்திருக்கும் அப்பாவின் சாறத்தைக் கதிரையாக்கி அப்பாவுடன் சேர்ந்து அவளும் விரிந்து கிடக்கும் விண்ணின் அழகில் மனதொன்றிக் கிடப்பதிலெவ்வளவு சந்தோசம்! நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வான் அவளது நெஞ்சில எப்பொழுதுமேயொரு வித புதிர் கலந்த பிரமிப்பினை ஏற்படுத்தி விடும். அண்ணாந்து பார்க்கும் போது விரிந்து கிடக்கும் வெளியின் ஒரு பகுதியாக அந்தரத்தில் மிதந்து இயங்கும் இன்னொரு சுடராகத் தன்னையுணர்வாள். அச்சமயங்களில் இளகிக் கிடக்கும் மனது...நீண்ட பல வருடங்களிற்குப் பின்னால் வருகை தந்திருந்த நீண்ட வால் வெள்ளி பார்ப்பதற்காக அப்பாவுடன் ஒவ்வொரு நாள் அதிகாலையும் நேரத்துடன் எழுந்தது இப்பொழுதும் மனதினுள் பசுமையாகவிருக்கிறது.

'அப்பா! சரியான புத்தகப் பூச்சி. அப்பா! ஆறடி தாண்டிய ஆகிருதி. சிந்தனைக் கண்கள். குமிண் சிரிப்பு. நானறிய பார்த்து அப்பா வேலைக்கென்று வெளியே போனதில்லை. வேலைக்குப் போகாத அப்பா. எந்த நேரமும் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி கிரகாம் கிறீன், டால்ஸ்டாய், வூட் ஹவுஸ், கொன்ராட்,... ஆனந்த விகடன், கல்கி, கலைமகள்,...இதைத் தவிர வேறென்ன செய்தார்? அப்பாவிற்குக் கவலைகள் இருந்ததுண்டா? குடும்பம், குட்டியென்று...எல்லாமே அம்மாதான்.அதிகாலையெழும்பி, அடுக்களை அலுவல் முடித்து, பாடசாலை செல்லும் அம்மா போய்ப் பொழுதுபட வந்தால்.. அம்மா மீண்டும் அடுக்களைதான். அம்மா வரும்வரை அப்பா குட்டி போட்ட நாயாய் அலைவார். அப்பா ஏனப்படியிருந்தார்? அம்மா அதுபற்றி அலட்டிக் கொண்டது கிடையாது. ஏன் அப்பாவும் தான்.

தூங்க மாட்டேனென்று மனம் இன்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நினைவுகள் அவள் நெஞ்சில் ஒருவித ஏக்கத்தினைப் பால்யகாலம் பற்றியதொரு ஏக்கத்தினை ஏற்படுத்தின. கவலைகளற்ற சிட்டுக் குருவிகளாகச் சிறகடித்துக் கொண்டிருந்த அந்த நாட்கள். எப்பொழுது நினைத்தாலும் நெஞ்சினை இளக்கி விடும் அந்த நாட்கள். அப்படியே அப்பா, அம்மாவின் அரவணைப்பில் இருந்த்கு விட்டிருக்கக் கூடாதா? வாழ்வு அமைதியாகச் சென்று கொண்டிருந்த அந்தப் பால்ய காலத்துக் கணங்களின் இனிமை எங்கே? தொலைபேசி கணகணத்தது. சோபாவில் சாய்ந்திருந்தபடி தொலைக்காட்சியில் போய்க் கொண்டிருந்த தொலைக்காட்சித் தொடரொன்றை பார்த்தபடி பழைய நினைவுகளில் நனவிடை தோய்ந்தபடியிருந்த மனோரஞ்சிதம் 'யாராகவிருக்கும் இந்த நேரத்தில்' என எண்ணியவாளாக எழுந்து சென்று தொலைபேசியினை எடுத்து "ஹலோ" என்றாள்.

"ஹலோ ரஞ்சிதமா? நான் சந்திரன் கதைக்கிறேன்"

மனோரஞ்சிதத்திற்கு சிறிது திகைப்பாகவும் மகிழ்ச்சியாகவுமிருந்தது. ராமச்சந்திரன். அவளது முன்னாள் கணவன்.

"என்ன சந்திரன் இந்த நேரத்திலை.."

"ரஞ்சிதம், எனக்கு நாளக்கு வேலையில்லை. நீரும் நாளைக்கு வேலைக்குப் போகவில்லையென்று கூறியிருந்தனீர். எங்காவது ரெஸ்றாண்டிற்குப் போய் ஆறுதலாகக் கதைக்கலாமென்று பட்டது. என்ன சொல்லுகிறீர்?"

மனோரஞ்சிதத்திற்கும் போனாலென்னவென்று பட்டது.

"அதுசரி சந்திரன், இந்த நேரத்தில் எந்த ரெஸ்ராண்டிற்குப் போகலாம்..எல்லாரும் கடையைப் பூட்டுகிற நேரத்திலை.."

"அந்தக் கவலையை விடும். எனக்குத் தெரிந்த சீனனுடைய ரெஸ்ராண்டொன்று டவுண் டவுனிலையிருக்கு...சைனா டவுனிலை தான். அவன் விடிய விடிய திறந்திருப்பான்...அங்கு போகலாம்...என்ன சொல்லுறீர்?"

"எனக்கென்றால் சரி.. நீங்கள் இங்கு வந்து போக இன்னும் நேரம் சென்று விடுமே.."

"நான் உமது இடத்திற்குக் கிட்டத் தானிருந்து கதைக்கிறேன். இன்னும் பத்தே பத்து நிமிடங்களில் அங்கு வந்து விடுவேன். ரெடியாய் நில்லும்"

மனோரஞ்சிதம் அவன் வருவதற்குள் முகம் கழுவி தன்னைத் தயார் படுத்தத் தொடங்கினாள். 'இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே காலந் தள்ளுவது. இன்னும் இழுத்துக் கொண்டே போகாமல் இன்றைக்கே பேசி இதற்கொரு முடிவு கட்டினாலென்ன?' என்றொரு எண்ணமும் கூடவே எழுந்தது. அதே சமயம் ராமச்சந்திரனின் தன்னையே முதன்மைப் படுத்தி அவளை அடிக்கடி வருத்திய பழைய சம்பவங்களெல்லாம் ஞாபகத்திலெழுந்தன. எவ்வளவு தூரம் அவளை வார்த்தைகளாலேயே குற்றியிருப்பான். எதற்கெடுத்தாலும் அவள் மேல் சந்தேகம். அவள் நேரம் கழித்து வரும் சமயங்களெல்லாம் அவளை வார்த்தைகளால் எவ்வளவு தரம் வாட்டியிருப்பான்? சில சமயங்களில் 'தேவடியா' என்று கூடத் திட்டியிருக்கிறான். அவற்றுடன் ஒப்பிடும் பொழுது இவ்விதம் பிரிந்து சந்தித்து வாழ்வது கூட ஒரு விதத்தில் நன்றாகத் தானே இருக்கிறது. இப்படியே இருந்து விட்டாலென்ன?' பலவிதமான எண்ணங்கள் வளையமிடத் தன்னை அலங்கரிப்பதில் மனோரஞ்சிதம் ஈடுபட்டாள். ராமச்சந்திரன் கூறியமாதிரியே பத்து நிமிடங்களில் வந்து விட்டான். இருவரும் அவனது காரிலேயே டொராண்டோ நகரின் மத்தியிலமைந்திருந்த 'சீனநகர்' நோக்கிப் பயணமானார்கள். அவன் கூறிய படியே அந்தச் சீன உணவகத்தினுணவு வகைகள் சுவையாகவேயிருந்தன. அவன் 'பியர்' எடுத்து அருந்தத் தொடங்கினான்.

"என்ன சந்திரன்! பியர் குடித்தாலெப்படி கார் ஓடுவதாம்" என்று மனோரஞ்சிதம் கேட்டாள்.

"ரஞ்சிதம்! இன்று நீர் தான் டிரைவர். இப்படியொரு சந்தர்ப்பம் இனி எப்பொழுது வருமோ?"

நீண்ட நேரமாக உரையாடியபடி உணவினைச் சுவைக்கத் தொடங்கினார்கள்.

"ரஞ்சிதம், எனக்கென்றால் ஒரு யோசனை.."

"என்ன சந்திரன்.."

"நடந்தது நடந்து விட்டது. அவற்றைப் பழங்கனவாக மறந்து விட்டு ஏன் புது வாழ்க்கையை நாம் தொடங்கக் கூடாது?"

"அப்படியென்றால் ஏற்கனவே விட்ட பிழைகளை நாங்கள் இனியும் விடக் கூடாது. ஒருவரையொருவர் நன்கு புரிந்து மதித்து எந்தவிதச் சந்தேகமுமில்லாமல் வாழ்வதாகவிருந்தால் எனக்கு ஆட்சேபணைையில்லை. எதற்கும் இன்னுமொரு நாள் அவகாசம் தாருங்கள். நான் உங்களிற்கு எனது முடிவைச் சொல்லுகிறேன். என்ன சொல்லுகிறீர்கள் சந்திரன்?"

அவனுக்கும் அது சரியென்று பட்டது. ''ஆக்கப் பொறுத்தவன்  ஆறப் பொறுக்கக் கூடாதா?' ' அன்றிரவு அவர்கள் அவ்வுணவகத்திலிருந்து புறப்பட்ட பொழுது ராமச்சந்திரன் தன் நினைவிலேயே இல்லை. அளவிற்கதிகமான மகிழ்ச்சியில் அளவிற்கதிகமாக பியர் அருந்தி விட்டிருந்தான்.

"சந்திரன், இந்த நிலையில் உங்களைத் தனியே விட எனக்கு விருப்பமில்லை.. பேசாமல் என் அபார்ட்மென்றிலேயே இரவு தங்கி விடுங்கள்" என்று மனோரஞ்சிதமே கேட்ட பொழுது ராமச்சந்திரன் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். ராமச்சந்திரன் சோபா பெட்டில் படுத்துக் கொள்ள மனோரஞ்சிதம் தனது அறையில் படுத்துக் கொண்டாள். மறு நாள் ராமச்சந்திரனிற்கு முடிவு கூறுவதாகக் கூறியதை எண்ணியள், அது பற்றிய எண்ணங்களில் மூழ்கியவளாகவளாக நெடுநேரம் தூக்கம் வராமல் விழித்திருந்த மனோரஞ்சிதத்தை இறுதியில் தூக்கம் தழுவிக் கொண்டது. அதிகாலை மூன்று மணியிருக்கும். இன்னும் விடிந்திருக்கவில்லை. மனோரஞ்சிதத்திற்குத் தன் மேல் யாரோ படுத்திருப்பது போலொரு உணர்வு. மூச்சு முட்டியது. கனவேதாவதுதான் காண்கின்றோமோ என எண்ணியவளாக விழித்துக் கொண்டவளிற்குத் தூக்கி வாரிப் போட்டது. ராமச்சந்திரன் அவள் மேல் பரவியவனாக அவளைத் தழுவ முயன்று கொண்டிருந்தான்.

"என்ன சந்திரன்..உங்களிற்கென்ன பைத்தியமா..." என்று கத்தியவள் அவனைப் பிடித்துத் தள்ளி விட்டாள்.

அவன் இன்னும் வெறியில் தானிருந்தான். "என்னடி பத்தினி வேசமாய் போடுறாய்? நானென்ன வேறு ஆளா? உன் புருசன்டீ"

இவ்விதம் அவன் கூறவும் அவள் ஆத்திரம் அதிகரித்தது. இதை அவள் எதிர்பார்க்கவேயில்லை. எவ்வளவு இலகுவாக இயல்பாக ஆணவத்துடன் கூறினான் அவன்? இவன் திருந்தவே மாட்டானா? இவளுக்கும் அவனுக்குமிடையிலுள்ள தொடர்பென்ன? ஒரு காலத்தில் அவனுக்கு அவள் மனைவியாகவிருந்தாள். அவன் அவளுக்குக் கணவனாகவிருந்தான். ஆனால் அது ஒரு காலத்தில். தற்காலத்திலல்ல. அந்த ஒரு காலத்துறவைக் காரணமாக வைத்து இன்னும் இவன் இவளை அடக்கலாமென்று இயல்பாகவே இவன் எண்ணிக் கொண்டிருக்கின்றான். வெளியில் இவன் எவ்வளவு கதைத்தாலும் இவனது ஆழ்மனதிலுள்ள எண்ணம் தான் இப்பொழுது இந்தப் போதையில் வெளிப்படுகிறது. என்ன மனுசனிவன்?

"சந்திரன்! நாங்கள் ஒரு காலத்தில் புருசன் மனைவியாக இருந்தவர்கள் தான். அது பழைய கதை. இப்பொழுது எங்களுக்கிடையில் உள்ள தொடர்பு வெறும் நண்பர்களிற்கிடையிலான தொடர்பு மட்டும் தான். நல்ல காலம் இப்பொழுதாவது உங்களுடைய சுயரூபம் தெரிந்ததே. நீர் மாறியிருப்பீரென்று நினைத்தேன். ஆனால் இன்னும் நீர் மாறவேயில்லை. நாய் வாலை நிமிர்த்த முடியுமா? " மனோரஞ்சிதம் இவ்விதம் கத்தவும் ராமச்சந்திரன் சுயநிலைக்கு வந்தான். மனோரஞ்சிததை அவன் நன்கறிவான். இத்தகைய சமயங்களில் அவன் என்ன செய்ய வேண்டுமென்பதையும் உணர்வான்.

"ரஞ்சிதம்! என்னை மன்னிச்சுக் கொள்ளும். நான் செய்தது பிழைதான். அதுக்காக நீர் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள நான் தயார் தான். ஆண் பெண் உறவென்பது உடற் பசிக்கொரு தீனிதான். என்னுடைய நிலையை நினைச்சுப் பாரும். நான் நினைச்சிருந்தால் என் உடல் தேவைகளுக்காக இங்கு மிகவும் இலகுவாக இன்னொரு பெண்ணின் துணையை நாடியிருக்க முடியும். ஆனால் நான் செய்தேனா? நான் இங்கு என்னை நியாயப் படுத்த முனையவில்லை. நான் செய்தது சரியென்று கூறவில்லை. ஆனால் அதற்காக என் சுயரூபம் அது இதென்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் நான் நிச்சயமாக நீர் உணர்வீரென்று நினைக்கின்றேன். ஆனால் நாளைக்கு நீர் கூறப்போகின்ற பதிலுக்கு இந்தச் சம்பவமொரு காரணமாகவிருக்காதென்று நம்புகிறேன்"

இவ்விதம் கூறிய சந்திரன் படுக்கையிலிருந்தும் எழுந்து சட்டையை மாற்றியவனாகப் புறப்பட்டான். அவன் செல்வதையே பார்த்தபடி அமைதியாக மனோரஞ்சிதம் நின்றாள்.

நன்றி: திண்ணை, பதிவுகள்

No comments:

'பதிவுகள்.காம்': 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'

எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்  கொண்டு , 2000ஆம் ஆண்டிலிருந்து , 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத...

பிரபலமான பதிவுகள்