Monday, February 3, 2020

அழியாத கோலங்கள்: ஜிம் பிறவுனின் 'எல் கொண்டர்'

பொதுவாக வெஸ்டேர்ன் திரைப்படங்களில் கறுப்பின நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பது குறைவு. ஆனால் அவ்விதமாக நடித்த நடிகர் ஒருவரின் திரைப்படத்தையும் என் பதின்ம வயதுகளில் (நான் பார்த்துக் குவித்த ஆங்கிலத் திரைப்படங்களில்) பார்த்திருக்கின்றேன். இவரது ஓரிரு திரைப்படங்களே அக்காலகட்டத்தில் வெளிவந்ததாக நினைவு. இவரது படங்களைப்பார்ப்பதற்கு இளைஞர்கள் முண்டியடிப்பார்கள். அந்த நடிகர்தான் ஜிம் பிறவுண். அந்தத்திரைப்படம் 'எல் கொன்டொர்' (El Condor). பாதுகாப்பான மண் கோட்டையொன்றில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தைக் கொள்ளையடிப்பதற்காக இவரும், எனக்கு மிகவும் பிடித்த இன்னுமொரு நடிகரான லீ வான் கிளீவ் (Lee Van Cleef) இணைந்து அமெரிக்க இந்தியர்களின் குழுவொன்றும் செல்வார்கள். கண்களைச் சுருக்கி, இதழ்க்கோடியில் இலேசாகச் சிரிப்பைத் தவழவிடும் லீ வான் கிளீவ்வின் நடிப்பு எப்பொழுதும் என்னை மிகவும் கவர்ந்ததொன்று. The Good The Bad and The Ugly திரைப்படத்தில் கெட்டவனாக (The Bad) நடித்திருப்பவர் இவரே. இவரது பல திரைப்படங்கள் அக்காலகட்டத்தில் யாழ்நகரில் திரையிடப்பட்டன. 'சபாட்டா (Sabata)' தொடர் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. 'அடியோஸ் சபாட்டா', 'ரிடேர்ன் ஆஃப் சபாட்டா' ஆகியவை நினைவில் நிழலாடுகின்றன.

அக்கோட்டையினைப் பாதுகாக்கும் அதிகாரியாக 'பற்ரிக் ஒ''நீல்' (Patrick O'Neal) நடித்திருப்பார். அவரது மனைவியாகப் தொலைக்காட்சி நடிகையாகவிருந்து திரைப்பட நடிகையாகப் புகழ்பெற்ற மரியானா ஹில் (Marianna Hill) நடித்திருப்பார். இவரது தந்தையான ஃப்ராங் ஸ்வார்ஸ்கோஃப் (Frank Schwarzkopf) ஒரு கட்டடக்கலைஞர். போர்த்துக்கீசர். ஜோர்ஜ் புஷ் சீனியர் காலத்தில் ஈராக்குடன் நடந்த வளைகுடா யுத்தத்தில் அமெரிக்கா இராணுவத்தளபதியாக யுத்தத்தை வழி நடத்திய நோர்மன் ஸ்வார்ஸ்கோஃப்பின் மைத்துனர். இவர் தனது தாயாரின் குடும்பப்பெயரான ஹில் என்பதைத்தன் குடும்பப்பெயராக வரித்துக் கொண்டவர்.

எல் கொண்டரைப் பார்ப்பதற்கு இளைஞர்கள் துடித்துக்கொண்டிருந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று படத்தில் இவரால் கவரப்பட்ட ஜிம் பிறவுணும், இவரும் இணைந்து நடித்த காட்சிகளைப் பார்ப்பதற்காகத்தாம். :-)

 ஜிம் பிறவுணை ஒரு சாதாரண வெஸ்டேர்ன் திரைப்பட நடிகராக மட்டுமே அறிந்திருந்த நான் பின்னாளில் கனடா வந்த பின்பே அவர் மிகவும் புகழ்பெற்ற அமெரிக்க 'ஃபூட்போல்' விளையாட்டு வீரர் என்பதையும் அறிந்து கொண்டேன். இவரது முழுப்பெயர் ஜேம்ஸ் நதானியல் பிறவுண் (James Nathaniel Brown). 1957 - 1965 காலப்பகுதியில் அமெரிக்கத் தேசிய 'ஃபுட்போல்' குழுக்களில் ஒன்றான கிளீவ்லான்ட பிறவுண்ஸ் (Cleveland Browns) குழுவின் 'ஃபுல்பாக்' (fullback) ஆக விளையாடி விருதுகள் பல பெற்ற, சாதனைகள் பல புரிந்த சிறந்த விளையாட்டு வீரர். இவ்விளையாட்டில் மிகச்சிறந்த ஒருவராகக் கருதப்படுபவர். இப்புகழே அவர் திரைப்படங்களிலும் நடிக்க உதவியிருக்கிறது.

இத்திரைப்படத்துக்காகக் கட்டப்பட்ட கோட்டை பின்னர் மேலும் சில திரைப்படங்களில் ( the Barbarian & March or Die (1977)') பாவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

'எல் கொண்டர்; திரைப்படம் நினைவுக்கு வருகிறது. ஆனால் பார்த்த யாழ் திரையரங்கின் நினைவு உடனடியாக நினைவுக்கு வரவில்லை. பரதன் நினைவிருக்கிறதா?

No comments:

வ.ந.கிரிதரன் - நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

எழுத்தாளர் மாலன் , இந்திய சாகித்திய அமைப்புக்காகத் தொகுத்த  'புவி எங்கும் தமிழ்க் கவிதை'த் தொகுப்பில் இடம் பெற்றுள்ள  எனது கவிதையான ...

பிரபலமான பதிவுகள்