Thursday, February 22, 2018

அழியாத கோலங்கள்: பூங்குழலி - அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்? - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் புனைவதிலும் வல்லவர்கள். அது மட்டுமல்ல இருவருமே தம் நாவல்களில் வரும் பாத்திரங்களுக்கேற்பக் கவிதைகள் எழுதி, தம் நாவல்களில் இணைப்பதில் வல்லவர்கள். கல்கி தன் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஓடக்காரப்பெண் பூங்குழலியின் உணர்வுகளை மையமாக வைத்துக் கவிதையொன்று எழுதியிருப்பார். அந்தக் கவிதை ஒரு முறை வாசித்தாலும் வாசிப்பவர் நெஞ்சினை விட்டு அகலாத தன்மை மிக்கது.

'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?' என்னும் அவரது கவிதையானது ஓடக்காரப்பெண் பூங்குழலியின் சோகம் ததும்பிய நிலையினைத்தெரிவிப்பது. பொன்னியின் செல்வன் நாவலில் வரும் அந்தக்கட்டத்தினையும், அந்தக்கவிதை வரிகளையும் என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. ஒரு படைப்பானது இது போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிச்சிறந்து விளங்குகின்றது.

அந்தப்பாடலும், அது பற்றி நாவலில் வரும் கல்கியின் வர்ணனையையும் இங்கு, தற்போது நீங்கள் வாசிக்கலாம். அது கீழே:
- "பூங்குழலிு படகில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு பாடினாள். அவளுடைய கானத்தைக் கேட்பதற்காகவே கடலும் அலை அடங்கி ஓய்ந்திருந்தது போலும்! அதற்காகவே காற்றும் வீசி அடிக்காமல் மெள்ள மெள்ளத் தவழ்ந்து வந்தது போலும்! தூரத்தில் தெரிந்த காட்டு மரங்களும் இலை அசையாமல் நின்று அவளுடைய கானத்தைக் கவனமாகக் கேட்டன போலும்! வானமும், பூமியும் அந்தக் கானத்தைக் கேட்டு மதிமயங்கி அசைவற்று நின்றன போலும்! கதிரவன் கூட அந்தக் கானத்தை முன்னிட்டே மூலைக் கடலை அடைந்து முழுகி மறையாமல் தயங்கி நிற்கின்றான் போலும்.

தேனில் குழைத்து, வானில் மிதந்து வந்த அப்பாடலைச் சற்றுச் செவி கொடுத்துச் கேட்கலாம்.

"அலைகடலும் ஓய்ந்திருக்க
அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில்
நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?
காட்டினில் வாழ் பறவைகளும்
கூடுகளைத் தேடினவே!
வேட்டுவரும் வில்லியரும்
வீடு நோக்கி ஏகுவரே

வானகமும் நானிலமும்
மோனமதில் ஆழ்ந்திருக்க
மான்விழியாள் பெண்ணொருத்தி
மனத்தில் புயல் அடிப்பதுமேன்?
வாரிதியும் அடங்கி நிற்கும்
மாருதமும் தவழ்ந்து வரும்
காரிகையாள் உளந்தனிலே
காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?"

அந்த இளமங்கையின் உள்ளத்தில் அப்படி என்ன சோகம் குடி கொண்டிருக்குமோ, தெரியாது! அவளுடைய தீங்குரலில் அப்படி என்ன இன்ப வேதனை கலந்திருக்குமோ, தெரியாது! அல்லது அப்பாடலில் சொற்களோடு ஒருவேளை கண்ணீரைக் கலந்துதான் பாடலை அமைத்துவிட்டார்களோ, அதுவும் நாம் அறியோம். ஆனால் அந்தப் பாடலை அவள் பாடுவதைக் கேட்கும் போது நமக்கு நெஞ்சம் விம்மி வெடித்து விடுவது போன்ற உணர்ச்சி ஏனோ உண்டாகிறது." -

அண்மையில் வானதி பதிப்பக வெளிவந்த 'கல்கி பாடல்கள்' நூல் அவரது பாடல்கள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 'கல்கி பாடல்கள்' நூலில் கவிதையின் முழு வரிகளுமுள்ளன. ஆனால் கல்கி பொன்னியின் செல்வன் நாவலில் அவர் பாடலின் சில வரிகளையே அவ்வப்போது பாவித்திருப்பதாக நினைவு. அந் நூலிலுள்ள பாடலின் முழு வரிகளும் கீழே:

"அலைகடலும் ஓய்ந்திருக்க
அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில்
நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?

காட்டினில் வாழ் பறவைகளும்
கூடுகளைத் தேடினவே.
வேட்டுவரும் வில்லியரும்
வீடு நோக்கி ஏகுவரே.

வானகமும் நானிலமும்
மோனமதில் ஆழ்ந்திருக்க
மான்விழியாள் பெண்ணொருத்தி
மனத்தில் புயல் அடிப்பதுமேன்?

வாரிதியும் அடங்கி நிற்கும்
மாருதமும் தவழ்ந்து வரும்
காரிகையாள் உளந்தனிலே
காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?

அலை கடல் கொந்தளிக்கையிலே
அகக் கடல்தான் களிப்பது மேன்?
நிலமகளும் துடிக்கையிலே
நெஞ்சக்ந் தான் துள்ளுவதேன்.

இடிஇடித்து எண் திசையும்
வெடி படும் இவ் வேளையிலே
நடனக் கலை வல்லவர்போல்
நாட்டியந்தான் ஆடுவதேன்.

'மீரா' திரைப்படத்தில் எம்.எஸ்.சுப்புலக்சுமி பாடுவதாக வரும் புகழ் பெற்ற பாடல் 'காற்றினிலே வரும் கீதம்'. இதனை எழுதியவர் கல்கி. ஆனால் திரைப்படத்தில் அவரது பெயர் இடம் பெற்றிருக்கவில்லை.

ngiri2704@rogers.com

நன்றி: பதிவுகள்.காம்

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்