- நா.பார்த்தசாரதி - |
பாத்திரப்படைப்பு, மொழி ஆகியவற்றுக்காக அவரது படைப்புகளை நான் என் பதின்ம வயதுகளில் விரும்பி வாசித்திருக்கின்றேன். அவரது படைப்புகளில் வரும் மாந்தர்களெல்லாரும் , சாதாரண மானிடர்களை விட ஒரு படி மேலானவர்கள்; இலட்சிய நோக்கு மிக்கவர்கள்; குறிஞ்சி மலர், பொன் விலங்கு நாவல்களில் வரும் அரவிந்தன், பூரணி, சத்தியமூர்த்தி போன்றவர்கள். இது பற்றி அவரிடமே ஒருவர் கேள்வி கேட்டிருந்தபோது அதற்கு அவர் அவ்விதமான பாத்திரங்களை வைத்து எழுதுவதிலென்ன தவறு என்று கேட்டதை எங்கோ வாசித்திருக்கின்றேன்.
அவரது நாவல்கள் அதிகமானவற்றில் முடிவு அவலச்சுவையிலிருக்கும். [ இவரைப்போன்ற இன்னுமொருவர் அக்காலகட்டத்தில் கொடி கட்டிப்பறந்த எழுத்தாளர் ஜெகசிற்பியன். அவரது படைப்புகளும் பெரும்பாலும் துன்பத்திலேயே முடிவுறும்.]
எழுத்தாளர் நா.பா.வும் நல்ல கவிஞர்களிலொருவர். மணிவண்ணன் என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். அப்பெயரிலேயே ஆரம்பத்தில் கல்கியில் நாவல்களையும் படைத்து புகழடைந்தவவர் அவர்.
அவரது நாவலான குறிஞ்சி மலரில் நாயகனான அரவிந்தன் அவ்வப்போது தன் மனதிற்குகந்த நாயகியான பூரணியைப்பற்றி எழுதிய கவிதை வரிகள் ஆங்காங்கே நாவலில் வரும். அவரது படைப்புகளை விரும்பி வாசித்த காலகட்டத்தில் இவ்விதமாக குறிஞ்சி மலர் நாவலில் ஆங்காங்கே காணப்படும் அரவிந்தனின் கவிதை வரிகளையும் விரும்பி வாசித்ததை இப்பொழுதும் நினைத்துப்பார்க்கின்றேன்.
குறிஞ்சி மலர் நாவலில் நாயகி பூரணி பற்றி நாயகன் அரவிந்தன் எழுதிய கவிதைகள் நயம் மிக்கவை; சுவை மிக்கவை. கீழுள்ள வரிகளை வாசித்துப்பாருங்கள். புரிந்து கொள்வீர்கள்.
பொன்காட்டும் நிறம்காட்டிப்
பூக்காட்டும் விழிகாட்டிப்
பண்காட்டும் மொழிகாட்டிப்
பையவே நடைகாட்டி
மின்காட்டும் இடைகாட்டி
முகில்காட்டும் குழல்காட்டி
நன்பாட்டுப்பொருள்நயம்போல்
நகைக்கின்றாய் நகைக்கின்றாய்
பண்பாட்டுப் பெருமையெலாம்
பயன்காட்டி நகைக்கின்றாய்.
நிலவைப் பிடித்துச் - சிறு
கறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதிந்த முகம்,
நினைவைப் பதித்து - மன
அலைகள் நிறைத்துச்- சிறு
நளினம் தெளித்த விழி.
தரளம் மிடைந்து - ஒளி
தவழக் குடைந்து - இரு
பவளம் பதித்த இதழ்
முகிலைப் பிடித்துச் சிறு
நெளியைக் கடைந்து - இரு
செவியில் திரிந்த குழல்
அமுதம் கடைந்து - சுவை
அளவிற் கலந்து - மதன்
நுகரப் படைத்த் எழில்.
[குறிஞ்சி மலர் நாவலில் வரும் அரவிந்தனின் வரிகள்]
"நிலவைப் பிடித்துச் - சிறு
கறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதிந்த முகம்,"
நிலவுக்குக்கூட களங்கமுண்டு. ஆனால் பூரணியென்ற நிலவோ களங்கமற்ற நிலவு! அற்புதமான கற்பனை.
* மேலும் சில குறிப்புகள்....
'மணிபல்லவம்' என்னும் இவரது சரித்திர நாவலும் தமிழில் வெளிவந்த சரித்திர நாவல்களில் முக்கிய நாவல்களிலொன்றாக நான் கருதுகின்றேன். அதற்குக்காரணம் சிலப்பதிகாரம் எவ்விதம் சங்க காலத்து மாந்தரை மையமாக வைத்துப் புனையப்பட்டதோ அவ்விதமே இச்சரித்திர நாவலும் சங்க காலத்து மானுடர்களை பாத்திரங்களாகக்கொண்டு புனையப்பட்ட வரலாற்றுப்புதினம்.
இப்புதினத்தினூடு சங்க காலத்து மானுடர் வாழ்ந்த சமூகம் பற்றி, அக்காலகட்டத்தே அமைந்திருந்த நகரங்களின் அமைப்பு முறை பற்றியெல்லாம் அறிந்து கொள்ள முடியும்.
எழுத்தாளர் தேவகாந்தனுக்கு மிகவும் பிடித்த நா.பா.வின் படைப்புகளில் 'மணிபல்லவம்' முதன்மையானது. அடிக்கடி அவர் இந்நாவலைச் சிலாகித்துப்பேசுவதுண்டு.
நன்றி: பதிவுகள்.காம்
ngiri2704@rogers.com
No comments:
Post a Comment