Sunday, February 18, 2018

மீள்பிரசுரம் ('ஞானம்' சஞ்சிகை): வ.ந.கிரிதரன் நேர்காணல். கண்டவர்: கே.எஸ்.சுதாகர்

நேர்காணல்: - இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'ஞானம்' மாத சஞ்சிகையின் ஆகஸ்ட் 2017  & செப்டெம்பர் இதழ்களில் இதழில் வெளியான நேர்காணலிது . ஒரு பதிவுக்காக அது இங்கு மீள்பிரசுரமாகின்றது.  வ.ந.கிரிதரன் நேர்காணல் (மின்னஞ்சல்வழி). கண்டவர்: கே.எஸ்.சுதாகர்

- (வ.ந.கிரிதரன் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டிடடக்கலை பயின்றவர். இலங்கையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அதிகார சபை ஆகியவற்றில் பணிபுரிந்தவர். கனடாவிற்குப் புலம்பெயர்ந்த பின்னர் அங்கு இலத்திரனியல் பொறியியல் மற்றும் தகவல் தொழில்னுட்பத்துறையில் தகமைகள் பெற்றுள்ளார். சிறுகதை, கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி மற்றும் நாவல் என்ற துறைகளில் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். அத்துடன் 2000ஆம் ஆண்டிலிருந்து ‘பதிவுகள்’ (pathivukal - http://www.geotamil.com/)  என்னும் இணைய இதழையும் நடத்தி வருகின்றார். ‘’குடிவரவாளன்’ நாவல், ’அமெரிக்கா’ நாவல்/சிறுகதைகள் தொகுப்பு,, ‘மண்ணின் குரல்’ நான்கு நாவல்களின் தொகுப்பு , ’நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு’ , 'எழுக அதிமானுடா' (கவிதைத்தொகுப்பு) மற்றும் 'மண்ணின் குரல்' (நாவல் கட்டுரை மற்றும் கவிதைகளின் தொகுப்பு) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.) -

1. உங்கள் பெயரின் முதல் எழுத்துக்களான வ.ந என்பவை எதனைக் குறிக்கின்றன?

உண்மையைக் கூற வேண்டுமானால் நான் பால்யப் பருவத்தை வவுனியாவில் கழித்தேன். எனது ஆரம்பக் கல்வியை , ஏழாம் வகுப்பு வரை, வவுனியா மகா வித்தியாலயத்தில் மேற்கொண்டேன். எனது அம்மா , நவரத்தினம் டீச்சர், அங்கு ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அக்காலகட்டத்தில் எங்கள் வீடு முழுவதும் தமிழகத்தில்  வெளியான பத்திரிகை, சஞ்சிகைகளால் குவிந்து கிடந்தது. ஈழத்துப்பத்திரிகைகளான ஈழநாடு, சுதந்திரன் பத்திரிகைகளும் அவற்றில் அடங்கும். அப்பாவே என் பால்யகாலத்து வாசிப்புப் பழக்கத்துக்கு முக்கிய காரணம். எனக்கு எழுத வேண்டுமென்ற ஆர்வம் அதனாலேயே ஆரம்பமானது. வவுனியா குளங்கள் மலிந்த , இயற்கை வளம் மிக்க மண். நாங்கள் அப்பொழுது வசித்து வந்த குருமண்காடு பகுதி ஒற்றையடி பாதையுடன் கூடிய , வனப்பிரதேசம். பட்சிகளும், வானரங்களும் இன்னும் பல்வகைக் கானுயிர்களும் நிறைந்த பகுதி. அதன் காரணமாகவே ந.கிரிதரன், கிரிதரன் என்று மாணவப்பருவத்தில் எழுத்துலகில் காலடியெடுத்து வைத்த எனக்கு வன்னி மண்ணான வவுனியாவின் முதலெழுத்தை என் பெயருடன் சேர்க்க வேண்டுமென்ற ஆர்வமெழுந்தது. அதன் விளைவாகவே அக்காலகட்டத்தில் வ என்னும் எழுத்தை என் பெயரின் முன்னால் சேர்த்து எழுத ஆரம்பித்தேன். ந.என்பது என் தந்தையாரான நவரத்தினத்தைக் குறிக்கும். இதிலொரு ஆச்சரியம் என்னவென்றால் நான் பிறந்த இடம், என் தந்தையார் பிறந்த இடம் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை. அதன் முதல் எழுத்தும் வ. அந்த வகையிலும் வ.ந. என்பது பொருந்திப் போகின்றது. இருந்தாலும் வ என்னும் எழுத்தை நான் தேர்வு செய்ததற்குக் காரணம் வவுனியாவும் இயற்கை வளம் மலிந்த வன்னி மண்ணுமே. அப்பொழுது நான் நான் பிறந்த இடம் வண்ணார்பண்ணை என்பதற்காகத் தெரிவு செய்யவில்லை. ஏனென்றால் அப்பெயரில் எழுதத்தொடங்கியபோது நான் பதின்ம வயதினைக்கூட அடைந்திருக்கவில்லை. நான் அப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்த , எனக்கு மிகவும் பிடித்த வன்னி மண்ணான வவுனியா என்பதால், அதன் முதல் எழுத்தினை என் பெயரில் முன் சேர்க்க வேணடுமென்ற எண்ணமே எனக்கு அப்போதிருந்தது. ஆனால் அவ்விதம் தேர்வு செய்த வ நான் பிறந்த, என் தந்தையார் பிறந்த ஊரின் பெயரின் முதலெழுத்துடன் இணைந்து போனது தற்செயலானது.


2. மாணவப்பருவத்தில் இருந்தே நீங்கள் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டுள்ளீர்கள். அப்பொழுது, எங்கெல்லாம், எவைபற்றி எழுதியிருக்கின்றீர்கள்? உங்களை ஊக்குவித்து எழுதத் தூண்டியவர்கள் என்று அப்போது யாரேனும் இருந்திருக்கின்றார்களா?

முன்பே கூறியிருந்ததுபோல் என் பால்ய காலத்தில் எனக்கு வாசிப்பிலும், எழுதுவதிலும் ஆர்வம் ஏற்பட முக்கிய காரணம் என் பெற்றோர்தாம். குறிப்பாக என் தந்தையாரைக்குறிப்பிடுவேன். என் அப்பா வீட்டை நூல்களாலும், பத்திரிகை , சஞ்சிகைகளாலும் நிறைத்தார். விகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி, தினமணிக்கதிர், ராணி , அம்புலிமாமா, தினமணி, ஈழநாடு, சுதந்திரன் மற்றும் பொன்மலர் (காமிக்ஸ்), பால்கன் (காமிக்ஸ்), வெற்றிமணி என எம் வாசிப்புக்குத் தீனி போட நிறையவே இருந்தன. நானும் என் சகோதர, சகோதரிகளும் (தம்பி மற்றும் சகோதரிகள் மூவர்) அவற்றைப்போட்டிப் போட்டு வாசிப்போம். அறுபதுகளின் இறுதியில், எழுபதுகளின் ஆரம்பத்தில் அக்காலகட்டத்தில் வெளியான வெகுசனப் படைப்பாளிகளின் தொடர்களையெல்லாம் ஆர்வத்துடன் படித்திருக்கின்றேன். கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், வாண்டுமாமா, உமாசந்திரன் , லக்சுமி, மு.வரதராசன், ஜெயகாந்தன் , ஸ்ரீ. வேணுகோபாலன் , சாண்டில்யன், பி.வி.ஆர். ரா.கி.ரங்கராஜன்.... எனப் பலரின் படைப்புகளை அக்காலகட்டத்தில் தீவிர ஆர்வத்துடன் வாசித்திருக்கின்றேன். ஆனந்த விகடனில் வெளியான ஜெயகாந்தன் எழுதிய முத்திரைக்கதைகளைப்பற்றி அடிக்கடி அப்பாவும், அம்மாவும் விவாதிப்பார்கள். அதன் மூலம் ஜெயகாந்தன் படைப்புகள் மீதும் கவனம் திரும்பியது. தினமணிக்கதிர் ஜெயகாந்தனின் பல சிறுகதைகளை மீள் பிரசுரம் செய்ததுடன், சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலையும் தொடராக வெளியிட்டுள்ளது.  ரிஷிமூலத்தை அவ்வயதிலேயே வாசித்திருக்கின்றேன். மேலும் அம்மா பாடசாலை நூலகத்திலிருந்து மு.வரதராசனின் நாவல்கள் பலவற்றை இரவல் எடுத்து வருவார். அவற்றையெல்லாம் வாசித்திருக்கின்றேன். இவ்விதமாக நிலவிய சூழலே என் எழுத்தார்வத்துக்கும், வாசிப்பார்வத்துக்கும் முக்கிய காரணங்கள்.

இவற்றின் விளைவாக ஆரம்பத்தில் பாடசாலைக்கான அப்பியாசக் கொப்பிகளில் கதைகள், தொடர்கதைகள் எல்லாம் எழுதியிருக்கின்றேன். அப்பா அவற்றை வாசித்து உற்சாகமூட்டியிருக்கின்றார். ஒருமுறை அக்காலகட்டத்தில் எங்கள் வீட்டுக்கு அயல் வீட்டில் குடியிருந்த 'அன்ரி' ஒருவரும் அவற்றை வாசித்து அவற்றைப்பாராட்டியதும் எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தின.

இவ்வித ஆர்வங்களினால் எழுத ஆர்வம் மிகுந்த பத்திரிகைகளுக்கும் எழுத ஆர்வம் ஏற்பட்டது. அப்பொழுது ஈழநாடு வாரமலரில் மாணவர்களுக்கான சிறுவர் பகுதியொன்றும், 'மாணவர்மலர்' என்னும் பெயரிலென்று நினைக்கின்றேன்,  வெளியாகி வந்தது. கல்கி இதழிலும் சிறுவர் விருந்து என்னும் பகுதியை வாண்டுமாமா நடாத்தி வந்தார். ராணி சஞ்சிகையிலும் சிறுவர் பகுதியொன்று வெளியாகி வந்தது. அவற்றை ஆர்வமுடன் வாசிப்பேன். நான் ஆறாம் வகுப்பு மாணவனாக வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தபோது (1969)  ஈழநாடு மாணவர் மலரில் 'தீபாவளி இனித்தது' என்னும் தலைப்பில் கட்டுரைப்போட்டியொன்றினை நடாத்தினார்கள். அதற்கு ஆறாம் வகுப்பு மாணவனான நானும் 'தீபாவளி இனித்தது' என்று கட்டுரையொன்றினை அனுப்பியிருந்தேன். அப்போட்டியில் என் கட்டுரை தேர்வாகவில்லை. அதில் தேர்வாகிய கட்டுரையினை எழுதியிருந்தவர் தற்போது ஈழத்து இலக்கியச்சூழலில் அறியப்படும் கண.மகேஸ்வரன். அப்பொழுது அவர் உயர்தர மாணவராகவிருந்தார். ஆனால் என் கட்டுரை தேர்வாகாத போதிலும், ஈழநாடு மாணவர்மலரில் வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பு மாணவனான கிரிதரனின் கட்டுரை நன்றாகவிருந்தது என்று பாராட்டி , வாழ்த்தியிருந்த குறிப்பொன்றினையும் வெளியிட்டிருந்தார்கள். அந்தப்பாராட்டு என்னை மேலும் எழுத ஊக்குவித்தது என்பேன். அடுத்து 1970 தையில் வெளியான சுதந்திரன் பத்திரிகைக்குப்பொங்கல் கவிதையொன்றினை அனுப்பியிருந்தேன். 'பொங்கல் பொங்கல் பொங்கலாம். புதுவருடம் பொங்கலாம்' என்று ஆரம்பிக்கும் சிறுவர் பாடலொன்று. அதனைச் சுதந்திரன் பொங்கற் சிறப்பிதழில்  வெளியிட்டிருந்தது. அதுவே எழுத்தில் வெளியான எனது முதற் படைப்பு. அதன் பின்னர் ஈழநாடு மாணவர் மலருக்குப் படைப்புகள் அனுப்ப ஆரம்பித்தேன். மாணவர் மலரில் எனது சிறுவர் கவிதைகள், கட்டுரைகள் எல்லாம் வெளியாகியுள்ளன. அது பின்னர் என் பதின்ம வயதுகளில் யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி தொடர்ந்த காலகட்டத்திலும் தொடர்ந்தது. என் தந்தையாரின் பெயரிலும் சித்திரை வருடக் கவிதையொன்று எழுதி ஈழநாடுப்பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அக்காலத்தில் வெளியான வெற்றிமணி சிறுவர் சஞ்சிகையிலும் எனது குட்டி உருவகக் கதையொன்று 'மரங்கொத்தியும், மரப்புழுவும்' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. மேலும் ஓரிரண்டு கட்டுரைகள் வெற்றிமணியில் வெளியாகின.

நான் வவுனியா மகாவித்தியாலயத்தில் ஏழாம் வகுப்பு மாணவனாக இருந்த சமயம் , மட்டக்களப்பில் நடைபெற்ற அகில இலங்கைத்தமிழ்த்தின விழாக் கட்டுரைப்போட்டியில் பங்குபற்றி, அகில இலங்கையில் முதலாவதாக வந்து விருதினைப் பெற்றிருக்கின்றேன். மறக்க முடியாத மாணவப்பருவ அனுபவங்களில் அதுவுமொன்று.

- ஞானம் சஞ்சிகை -
பின்னர் யாழ்ப்பாணம் சென்று விட்டோம். அம்மா மாற்றலாகி அராலி இந்துக்கல்லூரிக்குச் சென்று விடவும் நாங்களும் அங்கு சென்றோம். ஆனால் நான் பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலிருந்த ஆச்சியின் வீட்டிலேயே தங்கி யாழ் இந்துக்கல்லூரிக்குச் செல்வது வழக்கம். அக்காலகட்டத்திலும் நான் எழுதுவது தொடர்ந்தது. என் முதலாவது சிறுகதையான 'சலனங்கள்' சிரித்திரன் சஞ்சிகையில் 1975இல் வெளியானது. சிரித்திரன் நடாத்திய அறிஞர் அ.ந.கந்தசாமி நினைவுச் சிறுகதைப்போட்டியில் பிரசுரத்துக்குத் தேர்வான சிறுகதைகளிலொன்றாக அச்சிறுகதை வெளியானது. பின்னர் 1975 -1979' காலகட்டத்தில் எனது நான்கு சிறுகதைகள் ஈழநாடு வாரமலரில் வெளிவந்துள்ளன. தினகரன் வாரமஞ்சரியில் 'ஆலமரத்தடியில் பிறந்த ஞானம்' என்னும் சிறுகதை பிரசுரமாகியுள்ளது.

இவை தவிர எனது கட்டுரைகள் சில நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றிய, பழைய கட்டடங்களைப் பாதுகாத்தல் பற்றிய கட்டுரைகளை ஈழநாடு வாரமலர் பிரசுரித்துள்ளது. வீரகேசரியும் 'கோப்பாய்க் கோட்டை' பற்றிய கட்டுரையினைப் பிரசுரித்துள்ளது. 1977 -1983 காலகட்டத்தில் ஈழநாடு, தினகரன், வீரகேசரி, ஈழமணி, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகள் 'புதுக்கவிதைகளை'த் தம் வாரவெளியீடுகளில் பல்வேறு பெயர்களில் வெளியிட்டு வந்தன. வீரகேசரி 'உரைவீச்சு' என்னும் பெயரில் வெளியிட்டு வந்தது. அவற்றில் வெளியான எனது கவிதைகள் நூறைத்தாண்டும்.

பின்னர் 1983 இனக்கலவரத்தைத்தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேற வந்தது. அதன் பின்னரே என் எழுத்துலகின் அடுத்த முக்கிய காலகட்டம் உருவாகியது. தொண்ணூறுகளில் வீரகேசரியில் வான் இயற்பியல் பற்றிய அறிவியற் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

சுருக்கமாகக்கூறப்போனால் என் எழுத்து , வாசிப்பு ஆர்வங்களுக்கு முக்கிய காரணம் என் தந்தையாரே என்பேன். அவரது வாசிப்புப் பழக்கத்தின் காரணமாக அவர் வாங்கிக் குவித்த பத்திரிகைகள், சஞ்சிகைகளே என் குழந்தைப்பருவத்தில் என் வாசிப்பனுபவத்தையும், எழுத வேண்டுமென்ற ஆர்வத்தையும் தூண்டின. அவரும் என் எழுத்துகளை வாசித்து உற்சாகப்படுத்துவார். எனவே அவரையே என்னை ஆரம்பத்தில் வாசிக்க, எழுதத்தூண்டியவராகக் குறிப்பிடுவேன். அடுத்து என் படைப்புகளை வெளியிட்டு ஊக்கப்படுத்திய ஈழநாடு , சுதந்திரன், வீரகேசரி, தினகரன், சிந்தாமணி,, ஈழமணி போன்ற பத்திரிகைகளையும், சிரித்திரன், கண்மணி (சிரித்திரன் வெளியிட்ட சிறுவர் சஞ்சிகை) மற்றும் வெற்றிமணி (சிறுவர் சஞ்சிகை) ஆகிய ஊடகங்களைக் குறிப்பிடுவேன். ஈழநாடு வாரமலர் ஆசிரியரான பெருமாள் அவர்களை எனக்கு நேரில் அறிமுகம் இல்லாவிட்டாலும், என் சிறுகதைகளை, கட்டுரைகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தியிருக்கின்றார். இச்சமயத்தில் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்களையும் குறிப்பிட வேண்டும். யாழ்ப்பாணத்திலிருந்து சிரித்திரன் வெளிவரும் காலகட்டத்தில், என் பதின்ம வயதுகளில் அவர் அறிமுகமானார். சந்திக்கும் நேரங்களிலெல்லாம் என் எழுத்தார்வத்தைச் சிலாகித்துப் பேசுவார். அவரையும் ஆரம்ப காலத்தில் என்னை ஊக்கியவர்களிலொருவராகக் குறிப்பிடுவேன்.

3. அப்போது வெளிவந்த சிறுவர் சஞ்சிகைகளுக்கும் (வெற்றிமணி, அம்புலிமாமா , சஞ்சீவி போன்றவை) இப்போது வருபவைக்கும் இடையே  எத்தகைய வேறுபாட்டை நீங்கள் காண்கின்றீர்கள்? இப்போது வெளிவரும் சிறுவர் சஞ்சிகைகள் பற்றிக் குறிப்பிட்டுக் கூறமுடியுமா?

அக்காலகட்டத்தில் நான் அம்புலிமாமா, கண்ணன் போன்ற சிறுவர் இதழ்களையே படித்திருக்கின்றேன். ஈழநாடு பத்திரிகையில் சிறுவர் பகுதி வரும். கல்கி இதழிலும் அவ்விதம் வந்துகொண்டிருந்தது.  ராணி சஞ்சிகையில் வரும் சிறுவர் பகுதியும் எம்மைக் கவர்ந்த ஒன்று. அடுத்தது காமிக்ஸ். ஆனால் இன்று கோகுலம், சுட்டி விகடன், அம்புலிமாமா போன்ற இதழ்கள் குழந்தைகளுக்காக வெளிவருகின்றன. கோகுலம் ஆங்கிலத்திலும் வெளிவருகின்றது. மேலும் இலங்கையிலும் வீரகேசரி போன்ற பிரதான பத்திரிகைகளின் வாரவெளியீடுகளில் முழுப்பக்கச் சிறுவர் பகுதிகள் வருவதை அவதானித்துள்ளேன். உண்மையில் என்னைப்பொறுத்தவரையில் அன்றிருந்ததைவிட இன்று சிறுவர்களுக்கான பகுதிகள் புதிய தொழில் நுட்பட்த்தில் இன்னும் சிறப்பாக வருவதாகவே உணர்கின்றேன். குழந்தைகளை எழுத்துத்துறையிலும், வாசிப்பிலும் ஈடுபடுத்துவதற்கு ஊடகங்கள் குழந்தைகளுக்கான விடயங்களையும், பகுதிகளையும் , சஞ்சிகைகளையும் வெளிக்கொணர வேண்டியதவசியம். அந்நிலை தொடர்ந்தும் இருந்து வருவது நம்பிக்கை அளிக்கின்றது.

4. உங்கள் எழுத்தின் ‘படிநிலை வளர்ச்சி’ எப்படி வந்திருக்கின்றது?

என் எழுத்தின் படிநிலை வளர்ச்சி என்பது என் வாசிப்பின் படிநிலை வளர்ச்சியின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது. குழந்தை இலக்கியம், வெகுசன இலக்கியம், சமுதாயப் பிரக்ஞை மிக்க கலைத்துவப் படைப்புகள், மொழிபெயர்ப்பு படைப்புகள், வேற்று நாட்டு இலக்கியப்படைப்புகள் என என் வாசிப்பனுபவம் என் வயதுடன் வளர்ந்தே வந்துள்ளது. வெகுசனப்படைப்புகளிலும் என்னை மிகவும் கவர்ந்தவை சமுதாயப்பிரக்ஞை மிக்க படைப்புகளே. மார்க்சியத் தத்துவத்தை அறிவதற்கு முன்னரே என் ஆர்வம் அவ்விதமே இருந்து வந்துள்ளது. ஆனால் முதன் முறையாக மார்க்சிய தத்துவ எழுத்துகள் அதுவரை இலக்கியம் பற்றி, கலைகள் பற்றி, அரசியல் பற்றி ஏன் இப்பிரபஞ்சம் பற்றியெல்லாம் என் சிந்தனையை விரிவு கொள்ள வைத்தன. அந்த வகையில் என்னை ஃபியதோர் தஸ்தயேவ்ஸ்கியின் (Fyodor Dostoyevsky)  'குற்றமும் தண்டனையும்' (Crime and Punishment) , லியோ டால்ஸ்டாயின் (Leo Tolstoy)  'புத்துயிர்ப்பு' (Resurrection) ஆகிய இரு நாவல்களும்  என்னை மிகவும் பாதித்தன. இருவரின் நாவல்களும் முடிவில் மதத்தையே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வாக வலியுறுத்தினாலும், அந்நாவல்கள்  விபரித்த மானுட வாழ்வனுபவங்களே வாசிப்பவரைப் பாதித்தன. பாதிக்கின்றன. என்னையும் அவ்விதமே பாதித்தன; பாதிக்கின்றன. அன்றிலிருந்து என் அபிமான எழுத்தார்களின் முதல் வரிசையில் தஸதயேவ்ஸ்கி, டால்ஸ்டாய் இருவரும் இருப்பார்கள். தஸ்தயேவ்ஸ்கியின் 'க்ரமசாவ் சகோதரர்கள்' (The Karamazov Brothers) , 'அசடன்' (The Idiot) மற்றும் டால்ஸ்டாயின் அன்னா கிரீனினா' (Anna Karenina) 'போரும் வாழ்வும்' (War and Peace) எனக்கு மிகவும் பிடித்தவை. இந்திய சாகித்திய அகாதமி வெளியிட்ட பல மொழிபெயர்ப்பு நாவல்களும் என் வாசிப்பனுபவத்தை, எழுத்தினைச் செம்மைப்படுத்தின என்பேன். அதீன் பந்த்யோபாத்யாய'வின் 'நீலகண்ட பறவையை தேடி' , தகழியின் 'ஏணிப்படிகள்', எஸ்.கே.பொற்றேகாட்டின் 'ஒரு கிராமத்தின் கதை'  , எம்.டி. வாசுதேவ நாயரின் 'காலம்' , சிவராம் காரந்தின் 'மண்ணும் மனிதரும்' , தகழி சிவசங்கரன்பிள்ளையின் 'தோட்டியின் மகன்' ஆகிய படைப்புகள் எனக்கு மிகவும் பிடித்தவை. தமிழில் ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்', மற்றும் தி.ஜா.வின் 'மோகமுள்', 'செம்பருத்தி'  மற்றும் கோகிலம் சுப்பையாவின் 'தூரத்துப்பச்சை' ஆகியவை எனக்குப் பிடித்த ஏனைய நாவல்களாகக் குறிப்பிடுவேன். இவ்வகையான நாவல்கள் என் வாசிப்பனுபவத்தை அடுத்த நிலைக்கு முன்னெடுத்துச் செல்ல உதவின. எழுத்தாற்றலையும் மேலும் வளர்த்தெடுக்கவும் உதவின எனலாம். எழுத்தின் படிநிலை வளர்ச்சி என்னும்போது என் வாசிப்பின் படிநிலை வளர்ச்சியையும் தவிர்க்க முடியாது.

அதே சமயம் எனக்கு மிகவும் பிடித்த அறிவியற் துறை வானியற்பியலே. இதற்குக் காரணம் என் தந்தையாரே. சிறு வயதில் வவுனியாவில் வசித்துவந்த காலகட்டத்தில் இரவுகளில் முற்றத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தபடி இரவு வானை, அங்கு சுடர் விடும் சுடர்க்கன்னிகளையெல்லாம் நீண்ட நேரமாக இரசித்தபடி , சிந்தனையிலீடுபட்டிருப்பார் அவர். அப்பொழுதெல்லாம் அவரது சாறத்தைத்தொட்டிலாக்கி அதில் படுத்திருந்தபடி நானும் இரவு வானை, நட்சத்திரங்களையெல்லாம் இரசித்தபடி தூங்கி விடுவேன். அப்பொழுதெல்லாம் அவ்வப்போது விண்ணைக்கோடிழுக்கும் எரி நட்சத்திரங்கள் பற்றியெல்லாம், செயற்கைக்கோள்களையெல்லாம் சுட்டிக்காட்டுவார். அவை பற்றி விபரிப்பார். மேலும் அக்காலகட்டத்தில் சிறிது காலம் நீண்ட வாள்வெள்ளியொன்று வானில் தோன்றி சிறிது காலம் நின்று மறைந்தது. அதனைக்காட்டுவதற்காக இரவுகளில் எம்மை எழுப்பிக் காட்டுவார். இவற்றால் எனக்கு வானியற்பியல் துறையில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது என்பேன். மேலும் யாழ் இந்துக்கல்ல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் யாழ் பொது சன நூலகம் என் நண்பனாக விளங்கியது. தமிழில் வெளியான பல நூல்களை அங்கு படித்திருக்கின்றேன். வானியல் சம்பந்தமான, இயற்பியல் சம்பந்தமான, உயிரியல் சம்பந்தமான என அறிவியற் துறையில் பல்வகைத்துறைகளையும் சேர்ந்த நூல்களை அங்குதான் நான் படித்தேன். மேலும் கலைக்கதிர் அறிவியற் சஞ்சிகையும் என் அறிவுப்பசிக்கு அக்காலத்தில் தீனி போட்ட சஞ்சிகையென்பேன். அவையெல்லாம் என் வாசிப்பு மற்றும் எழுத்தின் படிநிலை வளர்ச்சிக்கு உதவின.

சுருக்கமாகக் கூறின் என் அறிவுத்தேடல் வயதுடன் அதிகரித்து வந்ததற்கேற்ப , மானுட இருப்பு, இப்பிரபஞ்சம், மானுட சமுதாயம். மானுடரின் அரசியல் போன்ற பல விடயங்களில் என் புரிதலும் பரிணாம வளர்ச்சி அடைந்தே வந்திருக்கின்றது. ஒரு காலத்தில் உணர்ச்சி வெறியில் தேசியக்கண்ணோட்டத்துடன் பார்த்த அரசியலை இன்று மார்க்சியத்தெளிவின் பின்னணியில் வைத்துப்பார்க்கும் பக்குவம் ஏற்பட்டுள்ளது. இதனால் மானுட இருப்பு பற்றிய என் எண்ணங்களெல்லாம் நான் எழுதும் படைப்புகளில்  வெளிப்படவே செய்யும். இதனை என் படைப்புகளினூடு நீங்கள் பார்க்கலாம். என் அண்மைக்காலப்படைப்புகளையும் (சிறுகதைகளையும், நாவல்களையும்) ஆரம்பக்காலத்துப் படைப்புகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் என் சிந்தனை மாற்றத்தையும், அவற்றில் பாவித்த மொழியில் ஏற்பட்ட மாற்றத்தையும் அறிய முடியும். இந்தப்படிநிலை வளர்ச்சி என்பது மேலும் மேலும் பரிணாம வளர்ச்சி அடைந்துகொண்டே செல்லும்.

இருந்தாலும் எழுத்து நடையினைப்பொறுத்தவரையில் ஆற்றொழுக்குப்போன்றதொரு எழுத்து நடையே என் புனைகதைகளில் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன். அதே சமயம் மானுட இருப்பு பற்றிய என் புரிதல்களின் தெளிந்த பார்வையை அந்த நடை பிரதிபலிக்கவேண்டுமென்றும் விரும்புகின்றேன். மேலும் என் படைப்புகள் என் அனுபவங்களின் அடிப்படையில், அல்லது என் எண்ணங்களின் அடிப்படையில் இருப்பதையும் நீங்கள் வாசித்தால் அறிந்துகொள்வீர்கள். 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்', 'அமெரிக்கா', 'குடிவரவாளன்'  போன்ற படைப்புகளை வாசிக்கும்போது நீங்கள் இதனை உணர்ந்துகொள்வீர்கள். இவற்றில் ஆங்காங்கே என் மானுட இருப்பு பற்றிய என் எண்ணங்களை, என் அனுபவங்களைப்பிரதிபலிக்கும் பல பகுதிகள் இருப்பதை அறிந்துகொள்வீர்கள்.

இன்னுமொன்றினையும் இங்கு நான் குறிப்பிட வேண்டும். நான் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தபின்னரே மிக அதிகமாக எழுதியிருக்கின்றேன். தாயகம் (கனடா), தேடல்(கனடா), பொதிகை (கனடா), சுவடுகள் (நோர்வே), உயிர்நிழல் (பிரான்ஸ்) ஆகியவற்றில் என் படைப்புகள் வெளியாகியுள்ளன. கனடாவில் வெளிவந்த , வெளிவருகின்ற வைகறை, சுதந்திரன் மற்றும் சுதந்திரன் பத்திரிகைகள் என் சிறுகதைகள் பலவற்றை மீள்பிரசுரம் செய்திருக்கின்றன.

சுருக்கமாகக் கூறினால் என் எழுத்தின் படிநிலை வளர்ச்சி என்பது என் வாசிப்பனுபவம் மற்றும் வாழ்க்கை அனுபவம் ஆகியவற்றின் விளைவாக காலம் என் எண்ணங்களில் ஏற்படுத்திய பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாகவே பரிணாமமடைந்து வந்திருக்கின்றது.  குழந்தை இலக்கியம், வெகுசன இலக்கியம், தீவிர இலக்கியம் என்று என் எழுத்தும், வாசிப்பும் பரிணாம வளர்ச்சியடைந்து வந்துள்ளன. தொடர்ந்தும் பரிணாமமடைந்துகொண்டே செல்லும். என் எழுத்துகள் இப்பரிணாம வளர்ச்சியினைப் பிரதிபலிப்பவை. அவை கட்டுரைகளாகட்டும், கவிதைகளாகட்டும் அல்லது புனைவுகளாகட்டும் அவற்றில் இப்படிநிலைப் பரிணாம வளர்ச்சியினை நீங்கள் கண்டு கொள்ளலாம்.

5. நீங்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, அங்கு வெளியான ‘நுட்பம்’ சஞ்சிகையில் எழுதியிருக்கின்றீர்கள், பங்குபற்றியுள்ளீர்கள். அந்த அனுபவங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

அது ஒரு இன்பமான அனுபவம். நுட்பத்தின் இறுதியில் அனுபந்தம் என்றொரு பகுதியிருக்கும். அதில் அம்முறை சாதாரணத் தொழிலாளர்களையே நேர்காணல் கண்டு அவர்கள் எண்ணங்களையே பிரசுரித்திரிந்தோம். அதனைப்பாராட்டிக் கலாநிதி கைலாசபதி அவர்கள் சுருக்கமான கடிதமொன்றும் அனுப்பியிருந்தார். மறக்க முடியாதது. அக்கடிதத்தை இப்பொழுதும் வைத்திருக்கின்றேன். சுருக்கமாகக் கூறப்போனால், ஆக்கங்களைச் சேகரித்தல்  முக்கிய பிரச்சினைகளிலொன்றாக இருந்தது. அப்பொழுது யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக விளங்கிய முனைவர் மு. நித்தியானந்தன், யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மூர்த்தி போன்றோர் நுட்பம் சிறப்பாக வெளிவர , வடிவமைப்பிலும், ஆக்கச்சேகரிப்பிலும் உதவினார்கள்,. அப்பொழுது யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் படித்துக்கொண்டிருந்த என் பால்யகாலத்து நண்பர்களிலொருவரான ஆனந்தகுமாரும் பேராசிரியர் கைலாசபதியிடமிருந்து நுட்பத்துக்குக் கட்டுரையொன்றினைப் பெறுவதற்கு உதவியாகவிருந்தார். அதனையும் மறக்க முடியாது. அந்நுட்பம் இதழுக்குக் கட்டடக்கலைஞர் குணசிங்கம் அவர்கள் (அப்பொழுது அவர் அங்கு படித்துக்கொண்டிருந்தார்) அழகான அட்டைப்படமொன்றினையும் வரைந்து தந்திருந்தார். இவ்விதமாக நுட்பம் இதழாசிரியராக இருந்தது இலக்கியரீதியில் முக்கிய அனுபவத்தைத்தந்த அதே சமயம் பல இலக்கிய ஆளுமைகளுடன் தொடர்புகளையும் ஏற்படுத்தித்தந்தது. அந்த வகையில் நுட்பம் சஞ்சிகையினை மறக்க முடியாது.

6. உங்களின் பதிவுகள் சிலவற்றில், நீங்கள் அந்தக்காலங்களில் பல எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அப்போது நீங்கள் படித்த கல்கி, சாண்டில்யன், அகிலன், மு.வ போன்றோரின் படைப்புகளை இப்போது எப்படிப் பார்க்கின்றீர்கள்?

அவை அக்காலகட்டத்தில் என் வாசிப்பனுபத்தின் ஆரம்பக்காலகட்டத்தில் எனக்கு வாசிப்பில் இன்பத்தை ஊட்டின. வாசிப்பினை ஊக்கப்படுத்தின.  அதனால் அவை என் வாழ்வின் அக்காலத்துக்குரியா அழியாத கோலங்களாக நிலைத்து நிற்கின்றன. அவற்றை இப்பொழுது வாசிக்கும்பொழுது அதே இன்பத்தை நாம் அடைய முடியாது. இப்பொழுது என் வாசிப்பு அவற்றைக் கடந்து பல கட்டங்களுக்குச் சென்று விட்டதால் இப்பொழுது அவற்றை வாசிக்கும்பொழுது ஓரிரு பக்கங்களுக்கு மேல் வாசிக்க முடியாது. இப்பொழுது அவற்றை வாசிக்கும்பொழுது அவற்றின் எழுத்து நடை தொய்ந்திருப்பதைக் காண முடிகின்றது. நடையைச் சுருக்கிச் செம்மைப்படுத்துவதன் மூலம் அவற்றின் தரத்தை மேலும் அதிகரிக்க முடியும். இருந்தாலும் அவற்றைப்பார்க்கும்போதே நாம் அன்று அவற்றை வாசித்தபொழுது அடைந்த இன்பம் நினைவுக்கு வருகின்றது. அன்று குழந்தைகளாக எம் பெற்றோருடன் இருந்த , கழித்த பசுமையான காலம் நினைவுக்கு வருகின்றது. இதனால் அவை இப்பொழுதும் ஏதோ விதத்தில் இன்பத்தினைத் தருகின்றன. அதனால் அவற்றில் பலவற்றை ஒரு ஞாபகத்துக்காகத் தற்பொழுதும் சேகரித்து வைத்திருக்கின்றேன். அப்படைப்புகளில் பல பாத்திரப்படைப்புகளில், கதைப்பின்னல்களில் சிறந்திருந்ததாகவே நான் இப்பொழுதும் உணர்கின்றேன். அதனால்தான் குறிஞ்சி மலர் அரவிந்தன், பூரணி, பொன் விலங்கு சத்தியமூர்த்தி, மோகினி, பாவை விளக்கு தணிகாசலம் போன்ற பாத்திரங்கள் இன்னும் நினைவிலுள்ளன. அப்படைப்புகள் பலவற்றின் நடையினைச் செம்மைப்படுத்துவதன் மூலம் அவை தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்புகளாக விளங்கும் என்று நான் கருதுகின்றேன். இச்சமயம் எழுத்தாளர் தேவகாந்தன் நா.பார்த்தசாரதியின் 'மணிபல்லவம்' நாவலைத் தான் செம்மைப்படுத்தி வைத்துள்ளதாக ஒருமுறை குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகின்றது.

7. நீங்கள் சினிமா ரசனை உள்ளவர் என்பதை உங்கள் முகநூல் காட்டித் தருகின்றது. அதிலும் எம்.ஜி.ஆர் பற்றி உங்கள் ரசனை அபரிவிதமாக உள்ளது. கொஞ்சம் இதைப்பற்றிச் சொல்லுங்கள்.

என்னைப்பொறுத்தவரையில் பல்வேறு கருத்துகளை,உணர்வுகளை வெளிப்படுத்தும் இசை, பாடகர்களின் குரல், பாடல் வரிகள் ஆகியவற்றுக்காகச் சினிமாப்பாடல்கள் என்னைக் கவர்வன. உண்மையில் நான் அதிகமாகச் சினிமாப்படங்களைப்பார்த்தவனல்லன். சிறுவயதில் அறுபதுகளில் எம்ஜிஆரின் படங்களை அதிகமாகக் பார்த்த காரணத்தால் அவரின் திரைப்படங்கள் மூலமே நான் சினிமா பார்க்கத்தொடங்கியதன் காரணமாக என் பால்ய காலத்தின் என் விருப்பத்துக்குரிய நடிகராக எம்ஜிஆர் இருந்தார். அவ்விதம் என் நெஞ்சில் ஆழமாக எம்ஜிஆர் பதிந்ததற்கு முக்கிய காரணங்கள் அவரது வசீகரம் மிக்க முகராசி. அடுத்தது அவரது திரைப்படங்களில் வரும் ஆரோக்கியமான எண்ணங்களை வெளிப்படுத்தும் கருத்துள்ள பாடல்கள். அப்பாடல்களே எனக்கு எம்ஜிஆர் திரைப்படங்கள் பிடிக்கக் காரணம். அதுவும் குறிப்பாக அறுபதுகளில் , ஐம்பதுகளில் வெளியான அவரது திரைப்படங்கள். அவரின் இறுதிக்காலப்படங்கள் பலவற்றை நான் அதிகம் பார்க்கவில்லை. அவற்றிலுமுள்ள ஆரோக்கியமான எண்ணங்களை வெளிப்படுத்தும் பாடல்களை நான் இரசிப்பதுண்டு.

உளவியல் அறிஞர்தம் கோட்பாடுகளின்படி ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் ஒருவர் தனக்குத்தானே கூறிக்கொண்டு வருவாரானால் அக்கோட்பாடுகள் அம்மனிதரின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து அம்மனிதரின் வாழ்வை ஆரோக்கியப்பாதைக்குத் திருப்பும். உண்மையில் எம்ஜிஆரின் திரைப்படப்பாடல்கள் , ஆரோக்கியமான எண்ணங்களை வெளிப்படுத்தும் திரைப்படப்பாடல்கள், மீண்டும் மீண்டும் கேட்கும்பொழுது , கேட்பவர்கள் மனதில் ஆழமாகப்பதிந்து விடுகின்றன. இவ்வகையில் ஆரோக்கியமான விளைவினைக்கேட்பவருக்கு ஏற்படுத்துகின்றன. உண்மையில் எம்ஜிஆரின் இரசிகர்களான பாமர மக்கள் பலருக்கு நூல்கள் வாங்க, வாசிக்க எல்லாம் நேரம் , சந்தர்ப்பமில்லை. ஆனால் எம்ஜிஆரின் பாடல்களை அவர்கள் கேட்டார்கள். அவை அவர்களின் வாழ்க்கையில் நிச்சயம் ஆரோக்கியமான விளைவுகளை , சிந்தனைகளை ஏற்படுத்தியிருக்குமென்றே கருதுகின்றேன்.

இலக்கியத்திலுள்ளது போல் கலைகளிலொன்றான சினிமாவிலும் பல பிரிவுகள் உள்ளன. குழந்தைகளுக்கான படம், பக்திப்படம், அறிவியற்படம், பொழுதுபோக்கு வெகுசனத்திரைப்படம், கலைத்துவம் மிக்க திரைப்படம் என்று பிரிவுகள் பல. எம்ஜிஆரின் திரைப்படங்களைப் பொழுது போக்குப் படங்களில் வைத்துக்கணிப்பிட்டாலும், நல்ல கருத்துகளைப்போதித்ததால் அவை ஒருவிதத்தில் ஆரோக்கியமான பங்களிப்பினைச் செய்துள்ளன என்பது என் கருத்து.

8. தென்னிந்தியச் சஞ்சிகைகளில் வந்த உங்களின் படைப்புகள் பற்றிச் சொல்லுங்கள்.

கணையாழியிலேயே என் படைப்புகள் அதிகம் வெளியாகியுள்ளன. நான்கு கட்டுரைகளும் (இந்துக்களின் கட்டடக்கலை, சார்பியற் தத்துவம் , சூழற் பாதுகாப்பு மற்றும் ஆர்சர் சி.கிளார்க் பற்றிய) , சிறுகதையொன்றும் (சொந்தக்காரன், கணையாழிச்சிறப்பிதழ்)  வெளியாகியுள்ளன. சுபமங்களாவிலும் ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் புகழ்பெற்ற நாவலான Being There என்னும் நாவல் பற்றிய அறிமுகக்கட்டுரையொன்று வெளியாகியுள்ளது. விகடனின் பவள விழாக் காலத்தில் என் சிறுகதையொன்று குட்டிக்கதையாகி 3000 ரூபா பரிசு பெற்றுள்ளது. துளிர் என்னும் சிறுவர் சஞ்சிகையிலும் என் படைப்புகள் வெளிவந்திருந்ததாக அறிகின்றேன். ஆனால் அவற்றை நான் இன்னும் பார்க்கவில்லை. ஏனென்றால் அதன் அக்கால ஆசிரியர் வள்ளிதாசன் என்பவர் தொடர்புகொண்டு படைப்புகளைக் கேட்டு அனுப்பியிருந்தேன். வெளிவந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மலரினை அனுப்பவில்லை.  சுஜாதா அறக்கட்டளையும், ஆழி பப்ளிஷ்ர்ஸும் இணைந்து உலகளாவியரீதியில் நடாத்திய அறிவியற் சிறுகதைப்போட்டியில் என் சிறுகதையான 'நான் அவனில்லை' என்னும் அறிவியற் சிறுகதை வட அமெரிக்காவுக்கான சிறந்த கதையாகத் தேர்வு செய்யப்பட்டு ரூபா 5000 பரிது பெற்றுள்ளது. பரிசு பெற்ற அறிவியற் சிறுகதைகளைத் தொகுப்பாக ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்டிருந்தது. அதிலும் அக்கதை வெளியாகியுள்ளது. 'அம்ருதா' இதழிலும் ஆர்தர் சி . கிளார்க் பற்றி நான் எழுதிய கட்டுரையொன்று வெளியாகியுள்ளது. 'தாமரை' இதழும் புகலிடத்தமிழர் பற்றி நான் எழுதிய கட்டுரையொன்றினை வெளியிட்டுள்ளதாகக் 'கீற்று' இணைய இதழ் மூலம் அறிந்தேன். அக்கட்டுரையினைக் 'கீற்று' இணைய இதழ் அதனைக்குறிப்பிட்டே பிரசுரித்துள்ளது. தமிழகத்திலிருந்து வெளியான இணைய இதழ்கள் சிலவும் என் படைப்புகளை வெளியிட்டுள்ளன. அம்பலம், ஆறாம்திணை, மானசரோவர்.காம். கூடல், கீற்று போன்ற. தமிழகப்படைப்பாளிகளால் நடாத்தப்பெறும் திண்ணை இணைய இதழில் என் பல படைப்புகள் (சிறுகதைகள், கட்டுரைகள், நாவல், ஆய்வுத்தொடர் என) வெளியாகியுள்ளன. எழுத்தாளர் பென்னேஸ்வரனை ஆசிரியராகக்கொண்டு , புது தில்லியிலிருந்து வெளியான 'வடக்கு வாசல்' சஞ்சிகையின் இலக்கிய மலரொன்றில் 'பதிவுகள்' பற்றிய எனது நீண்ட கட்டுரையொன்று வெளியாகியுள்ளது. ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட 'தமிழ்க்கொடி 2006' ஆண்டு மலரிலும் 'கனடாத்தமிழர் வாழ்வும், வளமும்' என்ற என் கட்டுரையொன்று பிரசுரமாகியுள்ளது. அமரர் வெங்கட் சாமிநாதனின் இலக்கியப்பணியினை நினைவு கூருமுகமாக, அவர் வாழ்ந்த காலத்திலேயே வெளியான 'வெங்கட் சாமிநாதன் - வாதங்களும், விவாதங்களும்' தொகுப்ப்பிலும் என் கட்டுரையொன்று வெளியாகியுள்ளது. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியினைத் தந்த ஒன்று. ஏனென்றால் வெ.சா. அவர்கள் பதிவுகள் இணைய இதழ் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்த ஒருவர். அவரது மரணம் வரையில் அவர் பதிவுகள் இணைய இதழுக்குத் தனது படைப்புகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அண்மையில் கவிதா பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000)\ தொகுப்பிலும் கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது இரு கட்டுரைகள் (கட்டடக்கலை மற்றும் சார்பியற் தத்துவம் பற்றிய) வெளியாகியுள்ளன.

9. நீங்கள் எழுதிய அறிவியல் / அமானுஷ்ய சிறுகதைகள், புகலிட வாழ்வனுபவம் சார்ந்த படைப்புகள் பற்றிக் கூறுங்கள்.

எனக்கு அறிவியற் துறையில் மானுட இருப்பினை அறிந்து கொள்வதற்குரிய துறைகள் மிகவும் பிடிக்கும். உளவியல், உயிரியல், மானுட சமுதாயப்பொருளியல் மற்றும் வானியற்பியல் ஆகிய துறைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவற்றில் வானியற்பியல் எப்பொழுதும் என்னை மிகவும் கவர்ந்த துறை. என் சிந்தனையை விரிவு வைக்கும் துறை. இத்துறையில் ஸ்டீபன் ஹார்கிங்ஸ், பிரயன் கிறீன் மற்றும் மிஷியோ ககு போன்றொர் சாதாரண மக்களுக்குப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதிய வானியற்பியல் சம்பந்தமான அறிவியல் நூல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் யாவரும் சிறந்த அறிவியல் அறிஞர்கள். தாங்கள் அறிந்ததை, புரிந்துகொண்டதை, கண்டு பிடித்ததை எல்லாம் சாதாரண மக்களும் அறிந்துகொள்வது அவசியம் என்று கருதுபவர்கள். ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவம், குவாண்ட இயற்பியல் போன்ற துறைகளைப்பற்றி சாதாரண வாசகர்களும்  புரியும் வகையில் இவர்கள் எழுதினார்கள். பிரபஞ்சம் பற்றிய இவர்கள் பற்றிய கருதுகோள்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. குறிப்பாக மூன்று பரிமாணங்களுக்கும் அதிகமான பரிமாணங்களை உள்ளடக்கி உயிரினங்கள், இப்பிரபஞ்சம் அல்லது பிரபஞ்சங்கள் இருக்கக் கூடிய சாத்தியங்களைப்பற்றியெல்லாம் இவர்களின் நூல்கள் விபரித்தன.  இப்பல்பரிமாண உலகும், உயிர்களும் இருக்கக்கூடிய சாத்தியங்கள் எப்பொழுதும் எனக்கு மிகவும் வியப்பினைத் தந்த அதே சமயம் என் சிந்தனையையும் கேள்விகளுக்குள்ளாக்கி விரிவுபட வைத்தன. நான்  எழுதிய அறிவியற் சிறுகதைகளில் 'தேவதரிசனம்' மற்றும் 'நான் அவனில்லை' ஆகியவை  முப்பரிமாணங்களுக்கும் அதிகமான பரிமாணங்கள் இருக்கக்கூடிய சாத்தியங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. 'ஆத்மாவின் புத்துயிர்ப்பு' 'தொலைகாவுதல்' (Teleporting) என்னும் அடிப்படையில் ஆத்மா என்னும் தத்துவத்தையும் இணைத்துச் சிந்தித்ததன் விளைவாக உருவான சிறுகதை. இதுவரையில் நான் அதிகமான புனைகதைகளை அறிவியற் துறையில் எழுதியிருக்காவிட்டாலும், மூன்று அறிவியற் சிறுகதைகள் மற்றும் ஆறு அறிவியற் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியிருக்கின்றேன். எதிர்காலத்தில் இத்துறையில் மிக அதிகமாக எழுத வேண்டுமென்ற ஆர்வமுள்ளது. பிரதிலிபி இணையத்தளத்தில் அறிவியற் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பினை வாசிக்கும் வசதியுள்ளது. அதற்கான இணைய இணைப்பு: https://tamil.pratilipi.com/read?id=5092686858027008

10. ’பதிவுகள்’ இணையத்தளம் ஆரம்பித்ததன் நோக்கம் என்ன?

பதிவுகள் இணையத்தளத்தை நான் 2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆரம்பித்தேன்.  நான் ஆரம்பித்ததன் நோக்கம் என் படைப்புகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகவும், இணையத்தில் தமிழில் எழுதுவோரை ஊக்கப்படுத்துவதற்காகவுமே. ஆரம்பத்தில் என் படைப்புகள் சிலவற்றுடன் பல்வேறு விடயங்கள் பற்றிய என் கருத்துகளையும் எழுதி வந்தேன். மிகவும் சாதாரணமானதொரு இணையத்தளம். ஆனால் அதுவே பலரையும் கவர்ந்தது. ஆனந்தவிகடன் கூடத் தனது இதழொன்றில் பதிவுகளில் வெளியான மகாத்மா காந்தியின் பேரன் பற்றி எழுதிய கருத்தொன்றினை மீள்பிரசுரம் செய்திருந்தது. பதிவுகளுக்குப் பலர் தம் படைப்புகளையும் அனுப்பி வைக்கத்தொடங்கினார்கள். அவற்றையும் பிரசுரிக்க ஆரம்பித்தேன். பின்னர் பதிவுகளில் விவாதக்களத்தினையும் ஆரம்பித்தோம். தமிழகத்தின் முன்னணிப்படைப்பாளர்கள் பலர் கலந்துகொண்டார்கள். ஜெயமோகன், பாவண்ணன், ராஜநாயஹம், யமுனா ராஜேந்திரன், ஜெயபாரதன், வேதசகாயகுமார், வெங்கட்  சாமிநாதன் போன்ற தமிழ்க்கலை,இலக்கியத்துறையில் அறிமுகமானவர்கள் தொடக்கம் , புகலிடத்தமிழ் எழுத்தார்கள் பலர் மற்றும் அறிமுகமாகாத புதியவர்கள் வரையில் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி  வந்தார்கள். பதிவுகள் பலருக்குக் களம் அமைத்துக்கொடுத்திருக்கின்றது. அது திருப்தியைத்தருகின்றது. ஆரம்பத்தில் முரசு அஞ்சலில், பின் முரசு அஞ்சலின் திஸ்கி எழுத்துருவில் தற்போது ஒருங்குறி எழுத்துருவில் பதிவுகள் வெளியாகின்றது. உலகின் பல்வேறு பாகங்களிலுமிருந்து பதிவுகளுக்கு ஆர்வத்துடன் படைப்பகளை அனுப்புகின்றார்கள். பல்கலைக்கழகங்களிலிருந்து பேராசியர்கள் தொடக்கம் பட்டப்படிப்பு மாணவர்கள் வரையில் தம் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புகின்றார்கள். பதிவுகள் நானே எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றது. மகிழ்ச்சியைத்தருகின்றது. அதே சமயம் மிகுந்த உழைப்பினையும் வேண்டி நிற்கின்றது.

11. ஒரு எழுத்தாளர் சஞ்சிகை நடத்துவதற்கு (இணையம் ஆயினும் சரி) தமது நேரத்தை ஒதுக்குவதனால், அவர் தனது எழுதும் நிலையிலிருந்து விடுபட்டுப் போகின்றார் என்று சொல்வது பற்றி…

அது எழுத்தாளர் ஒவ்வொருவரையும் பொறுத்தது. எழுத்தாளர் ஒருவர் எப்பொழுதுமே எழுதிக்கொண்டிருப்பதில்லை. அவருக்கு வேறு பொழுது போக்குகள், குடும்பச்சுமைகள் இவற்றுக்கு மத்தியில்தான் எழுதுகின்றார்.  எனவே ஒருவர் நன்கு திட்டமிட்டால் , அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் இவ்விதமான பிரச்சினைகள் எழாது  அல்லது கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்துவதாக இருக்காது. மேலும் எழுத்தார்வம், வாசிப்பார்வம் உள்ள ஒருவர் எவ்விதமான தடைகளுக்க்கு மத்தியிலும் அவற்றுக்கென்று நேரத்தைக் கண்டுகொள்வார். என் அனுபவத்தின் அடிப்படையில் கூறுகின்றேன்.

12. ஓர் இணையத்தளத்தை நிர்வகிப்பது என்பது இலகுவான வேலை அல்ல. அது பல சவால்களைக் கொண்டது. தினமும் இணையத்தளத்தை புதுப்பித்தும் வருகின்றீர்களே! உங்கள் வேலைப் பணிகளுக்கிடையே எப்படி இது சாத்தியமாகின்றது?

அர்ப்பணிப்பும் , ஆர்வமுமே இணையத்தளத்தை நிர்வகிப்பதை ஓரளவுக்கு இலகுவாக்குகின்றன என்பேன். அப்படியிருந்தும் பதிவுகளுக்கு வரும் படைப்புகள் குவிந்திருப்பதால்  எல்லாவற்றையும் உடனுக்குடன் வாசித்துப் பிரசுரிப்பது சாத்தியமாவதில்லை. சவால்களுக்கு மத்தியிலும் என்னால் கடந்த பதினாறு வருடங்களாக 'பதிவுகள்' இணைய இதழினை நடாத்த முடிகிறதென்றால் அதற்குக் காரணம் ஆர்வமும், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும்தாம்.

13. பதிவுகள் இணையத்தளம் வாசகர் பரப்பில் முன்னணியில் இருப்பதாக அறிகின்றேன். உங்கள் இணையத்தளம் மற்றைய இணையத்தளங்களில் இருந்து எப்படி வேறுபடுகின்றது? இணையத்தளத்தை நடத்துவதில் ஏற்படும் சுவாரஸ்யமான அனுபவங்கள், இடர்ப்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்? இணையத்தளத்தை நடத்துவதற்கு ஏற்படும் பெரும் செலவை எப்படி ஈடு செய்கின்றீர்கள்?

இவ்விதமானதொரு இணையத்தளத்தை நடத்துவதானால் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவிகள் தேவைப்படும். தளத்தை நிர்வகிக்க 'வெப் மாஸ்ட்டர்', இதழின் படைப்புகளைப்பரிசீலித்து வெளியிட ஆசிரியர், இணையத்தளத்தை உருவாக்க இணையத்தளத்தை உருவாக்கக்கூடிய மென்பொருள வல்லுநர்கள் இவ்விதம் பலரின் உழைப்பு தேவைப்படும். அதற்கு மிகுந்த செலவேற்படும். ஆனால் இத்துறைகளில் எனக்குள்ள அனுபவம் ,அறிவு காரணமாக இவற்றை என்னால் நடத்த முடிகின்றது. இவை தவிர இணையத்தளத்தை நடத்துவதற்குரிய இணையத்தளச்சேவை வழங்கும் நிறுவனத்துக்கான மாதாந்த செலவினை ஏனைய செலவாகக் குறிப்பிடுவேன்.

'பதிவுகள்' இணையத்தளத்தில் ஆய்வு என்றொரு பிரிவு உள்ளது. அதில் பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்யும் பட்டப்படிப்பு மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை, பேராசிரியர்களின் ஆய்வுக்கட்டுரைகளை, எழுத்தாளர்களின் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றோம். இப்பகுதித் தமிழகப்பல்கலைக்கழகங்களில் மிகுந்த ஆதரவினைப் பெற்றுள்ளது. 'பதிவுகள்' இணைய இதழ்களில் தம் ஆய்வக்கட்டுரைகள் வெளியாவதை அவர்கள் விரும்புகின்றார்கள். 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகும் ஆய்வுகளைப் பல்கலைக்கழகங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன என்பதையே இது காட்டுகின்றது. இந்த 'ஆய்வு'ப்பகுதி முக்கியமான ஏனைய இணைய இதழ்களில் காணப்படாத பகுதிகளிலொன்று. அடுத்தது ஏனைய இணையத்தளங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியிலேயே புதிய ஆக்கங்களை வலையேற்றம் செய்கின்றன. ஆனால் 'பதிவுகள்' இணைய இதழ் ஆக்கங்கள் கிடைப்பதன் அடிப்படையில் வாசிக்கப்பட்டு, பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவை பிரசுரமாகின்றன. இவையெல்லாம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எனலாம்.

14. ஒருவர் தனது படைப்பை பத்திரிகை அல்லது சஞ்சிகைகளில் அதாவது என்றும் அழியாத ஊடகங்களில் வருவதையே விரும்புகின்றார். ஏனென்றால் சில இணையத்தளங்கள் இடையில் முறிந்துபோய் விடுகின்றன. அப்படியே அந்த இணையத்தளம் மீள உயிர்பெற்றாலும் பழைய படைப்புகளை அங்கே காண முடிவதில்லை. அப்படி ஒருவர் வேறு ஊடகங்களில் வந்த தனது படைப்பை மூலம் குறிப்பிட்டு இணையத்தளங்களுக்கு அனுப்புவது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இன்னுமொரு கேள்வி ஒருவர் தனது படைப்பை ஒரே நேரத்தில் பல இணையத்தளங்களுக்கு அனுப்புவது பற்றி என்ன சொல்கின்றீர்கள்?

நூலகம் இணையத்தளத்தில் இணையத் தளங்களை ஆவணப்படுத்துவது பற்றி ஆராய்ந்து வருகின்றனர். அது சாத்தியமாகும் பட்சத்தில்  இணைய இதழ்களில் வரும் படைப்புகளும் இணையத்தில் அழியாது நிலை நிற்கும் சாத்தியம் ஏற்படும். இவ்விதமாக இணையத்தளங்களைப்பாதுகாக்கும் வகையிலான தொழில்நுட்ப வசதிகள் ஏற்கனவே உள்ளன. அவற்றை நூலகம் போன்ற இணையத்தளங்கள் பாவிப்பது மிகுந்த பயன் தருவதாக அமையும். ஒருவர் தனது வேறு ஊடகங்களில் வெளியான படைப்புகளை இணைய இதழ்களுக்கு அனுப்புவதை நான் ஆதரிக்கின்றேன். ஆனால் மூலம் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. இணைய இதழ்கள் மீள்பிரசுரம் செய்ய விரும்பும் படைப்புகளை மட்டுமே மூலம் குறிப்பிட்டுப் பிரசுரிக்க வேண்டுமென்பது என் நிலைப்பாடு. ஏனைய படைப்புகளை நேரடியாக 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பினால் அவை பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும்போது  அவற்றை மூலம் குறிப்பிடாது பிரசுரிப்போம்.

15. நீங்கள் ஆங்கிலத்தில் எழுதிய படைப்புகள் எப்படி வரவேற்பைப் பெற்றுள்ளனவா?

நான் தமிழில் எழுதியதைப்போல் ஆங்கிலத்தில் அதிகமாக எழுதியவனல்லன். இதுவரையில் லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் குடிவரவாளன், அமெரிக்கா நாவல்கள், சில சிறுகதைகள், மற்றும் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு ஆகிய நூல்களும், சில சிறுகதைகளும் வெளியாகியுள்ளன. நான் ஆங்கிலத்தில் இதுவரை சுமார் 13 கவிதைகள் வரையில் எழுதியிருக்கின்றேன். அவற்றில் லங்கா கார்டியனில் ஆங்கிலக் கவிதைகளிரண்டு வெளியாகியுள்ளன. poemhunter.com  மற்றும் poemlist.com ஆகிய ஆங்கில இணையத்தளங்களில் என் ஆங்கிலக் கவிதைகள்  13 வரையில் பிரசுரமாகியுள்ளன. அவற்றில் சில 'யு டியூப்'பில் குரல் வடிவில் வெளிவந்திருப்பதையும் அறிந்திருக்கின்றேன். லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் வெளியான எனது 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' ஆங்கிலத்தில் 'A CO(W)UNTRY  ISSUE'  என்னும் தலைப்பில் வெளியானது. அதனை இணையத்தில் கண்ட அமெரிக்கப்பெண்மணியொருவர் ,Betsy Harrell (USA) என்று பெயர்,  வாசித்துப் பாராட்டிச் செம்மைப்படுத்தி அனுப்பியிருந்தார். மறக்க முடியாத அனுபவம். அதுபோல் ஒரு மா(நா)ட்டுப்பிரச்சினை என்னும் சிறுகதையின் மேற்படி ஆங்கில வடிவம் (லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில்) இலண்டனிலிருந்து வெளிவரும் ஆங்கில சஞ்சிகையான தமிழ் டைம்ஸ் மீள் பிரசுரம் செய்திருக்கின்றது. நல்லூர் இராஜதானியின் ஆங்கிலபிரதியினைப் பல ஆய்வாளர்கள் தம் ஆய்வுகளில் பாவித்துள்ளதை இணையத்தேடல்களில் கவனித்துள்ளேன். இவற்றைப்பற்றித் தற்போது எத்தகைய வரவேற்பினைப் பெற்றுள்ளன என்பதைக் கூற முடியாது. காலம் தான் கூறவேண்டும்.  மேலும் ஆங்கிலத்தில் நான் எழுதியவை மிகவும் குறைவு. நான் ஆங்கில வலைப்பூ இணையத்தளத்தினை 'Canadian Tamil Literature: Writer V.N.Giritharan's Corner' என்னும் பெயரில் வைத்துள்ளேன். அதற்கான இணையத்தள முகவரி: https://vngiritharan23.wordpress.com/  அங்கு என் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை, ஆங்கிலக்கவிதைகளை நீங்கள் வாசிக்கலாம்.

16. கனடாவில் வெளிவந்த முதல் தமிழ் நாவல், நீங்கள் எழுதிய ‘மண்ணின் குரல்’ என அறிகின்றேன். இது பற்றிச் சொல்லுங்கள்.

1984ஆம் ஆண்டு கனடா வந்தேன்.  அப்பொழுது மான்ரியாலில் கையெழுத்துப் பிரதியாக வெளியாகிக்கொன்டிருந்த 'புரட்சிப்பாதை' என்னும் சஞ்சிகையில் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் 'மண்ணின் குரல்' என்னும் சிறு நாவலொன்றினையும் எழுதியிருந்தேன். அதில் வெளிவந்த 'மண்ணின் குரல்' முடிவடைவதற்குள் அக்கையெழுத்துச் சஞ்சிகை நின்று போய்விட்டது. எனவே நாவலை முடித்து , 'புரட்சிப்பாதை' சஞ்சிகையில் வெளியான கவிதைகள், கட்டுரைகள் சிலவற்றையும் சேர்த்து 1987 தை மாதம் 'மண்ணின் குரல்' என்னும் சிறு தொகுப்பினை மங்கை பதிப்பகம் சார்பில் வெளியிட்டேன். அதுவே நான் அறிந்த வரையில் கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அதனைக் கனடாவில் இயங்கிக்கொண்டிருக்கும் றிப்ளக்ஸ் நிறுவனம் அச்சடித்துத் தந்தது. மேலும் அந்நூலை அன்றே கணினி மூலம் அச்சடித்து வெளியிட்டார்கள்.

17. நீங்கள் நியூயோர்க்கில் தடுப்புமுகாமில் இருந்ததை மையப்படுத்திச் சொல்லும் ‘அமெரிக்கா’ குறுநாவல், அதன் பின்னரான நியூயோர்க் மாநகரத்து வாழ்வை விபரிக்கும் ‘குடிவரவாளன்’ நாவல் இவை பற்றி சிறிது சொல்லுங்கள்.

1983 இனக்கலவரத்தைத்தொடர்ந்து கனடா நோக்கி அகதியாகச் செல்லும் வழியில் பாஸ்டன் நகரில் எம்மை ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டிய டெல்டா விமான நிறுவனம் ஏற்க மறுத்து விட்டது. அதன் காரணமாக அமெரிக்காவில் அகதிக்கோரிக்கையை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாங்கள் சட்டபூர்வமாகக் கனடா செல்லவிருந்த பயணிகள். எங்களுக்கு எட்டு மணி நேர 'ட்ரான்சிட் விசா' கூடத்தரப்பட்டிருந்த நிலையில், அகதிக்கோரிக்கையினை முன் வைத்த எம்மைச் சட்டவிரோதக் குடிவரவாளர்களாகக் கருதிய அமெரிக்க அரசு பாஸ்டனிலிருந்து எம்மை நியூயார்க் மாநகரிலுள்ள புரூக்லீன் நகரிலுள்ள தடுப்பு முகாமில் கொண்டு சென்று அடைத்து விட்டது. சுமார் மூன்று மாதங்கள் வரையில் எம்மை அடைத்து வைத்த அரசு தன் தவறினை உணர்ந்து சொந்தப்பிணையில் செல்ல அனுமதியளித்து விடுவித்தது. இந்த மூன்று மாதத்தடுப்பு முகாம் அனுபவங்களைப் பதிவு செய்வதன் அவசியத்தை உணர்ந்ததன் விளைவே எனது 'அமெரிக்கா' என்னும் சிறு நாவல். கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியானது. அக்காலகட்டத்தில் தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. பின்னரே அது தன் வடிவத்தை மாற்றிச் சஞ்சிகையாக வெளிவர ஆரம்பித்தது. இந்த வகையில் 'அமெரிக்கா' நாவல் பதிவு செய்யும் அனுபவம் முக்கியமானது என்று கருதுகின்றேன். 'அமெரிக்கா' தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக (மங்கை பதிப்பகம் - கனடா- வுடனிணைந்து ) , மேலும் சில  சிறுகதைகளையும் இணைத்து வெளியானது. மிகுந்த வரவேற்பினைப்பெற்ற தொகுதி அது.

அதன் பின்னர் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டதன் பின்னர் சுமார் மேலும் ஒன்பது மாதங்கள் வரையில் நியூயார்க் மாநகரில் சட்டவிரோதக் குடியானவனாக எவ்விதமான வேலை செய்வதற்குரிய சட்டபூர்வமான ஆவணங்களுமின்றி அலைந்து திரிந்தேன்.  அந்த அலைந்து திரிந்த அனுபவத்தைப் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் நீண்ட நாள்களாக எனக்கிருந்தது. அதன் விளைவே அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான 'குடிவரவாளன்' நாவலாகும். ஆரம்பத்தில் திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழ்களில் அமெரிக்கா - 11 என்று வெளியான நாவல் பின்னர் தன் பெயரைக் 'குடிவரவாளன்' என்று மாற்றிக்கொண்டது. இதுவும் இலங்கை அகதியொருவரின் நியூயார்க் மாநகர அனுபவத்தை வெளிப்படுத்துவதால், ஆவணப்படுத்துவதால் முக்கியமானது என்று கருதுகின்றேன்.

18. உங்களது படைப்புகளை பல்கலைக்கழக மாணவர்கள் தமது பட்டப்படிப்பிற்காக ஆய்வு செய்துள்ளதாக அறிகின்றேன். அதைப் பற்றிய விபரங்களை இங்கே தரமுடியுமா?

முனைவர் ர. தாரணி அவர்கள் பினவரும் ஆய்வுக்கட்டுரைகளைத் தமிழக ஆய்வரங்குகளில் சமர்ப்பித்துள்ளார்.
1. Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province – A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan
2. The Dark Night of the Soul: A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan (இவ்வாய்வுக் கட்டுரை  ‘Scholarly International Multidisciplinary Print Journal’ (January -February 2017) என்னும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.)
3. முனைவர் ர. தாரணி '‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' என்னும் விமர்சனக்கட்டுரையினையும் எழுதியுள்ளார். 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியுள்ளது.

ஏனைய ஆய்வுகள்:
4. வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர் ஞானசீலன் ஜெயசீலன் "The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora:A Reading of Selected Short Stories of V.N. Giridharan" என்னும் ஆய்வுக்கட்டுரையினைத் தமிழக ஆய்வரங்கொன்றில் சமர்ப்பித்திருக்கின்றார். இவ்வாய்வுக்கட்டுரை தமிழகத்தில் வெளிவரும் 'பனுவல்' என்னும் ஆய்விதழிலும் வெளியாகியுள்ளது.
5. 'வ.ந.கிரிதரனின் நாவல்களில் புலம்பெயர்வு இலக்கிய பதிவுகள்  என்னும் தலைப்பில்  இளமுனைவர் பட்ட ஆய்வேடானது, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் தமிழாய்வுத்துறை மாணவியாகிய அங்கம்மாள் என்பவரால், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டுள்ளது.
6. சென்னைப் பல்கலைக்கழகத்தில் 'Fractured Self: A Study of V.N. Giritharan’s Selected Short Storie' என்னும் தலைப்பில் எம்.துரைராஜ் என்பவர் தனது Master of Philosophy in English பட்டப்படிப்புக்காக ஆய்வு செய்துள்ளார்.
7. சிங்கப்பூர்க் கல்வி அமைச்சு தனது உயர்தரக்கல்வி பயிலும் மாணவர்களுக்கான தமிழ்ப்பாடத்திட்டத்தில் சுவடுகள் (நோர்வே) இதழில் வெளியான 'பொந்துப்பறவைகள்' என்னும் சிறுகதையைச் சேர்த்துள்ளது.

19.  ‘முகநூல் இலக்கியம்’ - இந்த முகநூலால் நீங்கள் அடைந்த இலக்கியம் சார்ந்த நன்மைகள்/தீமைகள் என்ன?
முகநூல் என்னைப்பொறுத்தவரையில் ஆரோக்கியமான விளைவுகளையே அதிகமாகத்தருவதாகக் கருதுபவன். எழுத்தாளர் ஒருவரின் பத்திரிகைகள், சஞ்சிகைகள்  ஆகியவற்றில் வெளியாகும் பத்தி எழுத்துகளைப் போன்றவையே 'முகநூற்  பதிவுகள்' என்பது என் கருத்து.  முகநூல் மிகவும் இலகுவாக அதிகமான வாசகர்களிடம் உங்கள் முகநூற் பதிவுகளைக் கொண்டு செல்கின்றது. மேலும் 'முகநூல்' நீங்கள் விரும்பும் கலை, இலக்கிய ஆளுமைகள் பலருடன் நட்பு பேணிட வழி வகுக்கின்றது.  அவர்களது எண்ணங்களை , உங்களது எண்ணங்களை ஒருவருடனொருவார் உடனுக்குடன் பகிர்ந்துகொள்வதைச் சாத்தியமாக்கியுள்ளது சமூக ஊடகமான 'முகநூல்'. மேலும் உடனுடன் தகவல்களை அறிய முடிகின்றது. அரசுகளால் மானுட உரிமை மீறல்களை ,முன்பு போல் மூடி மறைக்க முடியாது. இந்த விடயத்தில் முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் பணி போற்றுதற்குரியது. எந்தப்புதிய தொழில் நுட்பமும் ஆரோக்கியமான விளைவுகளையும், கூடவே எதிர்மறையான விளைவுகளையும் ஒருங்கே கொண்டிருக்கும். ஆறறிவு படைத்த மானுடர்களாகிய நாம்தாம் நல்லதைப்பிரித்து அல்லதைத்தவிர்க்க வேண்டும். இந்த வகையில் என்னைப்பொறுத்தவரையில் 'முகநூல்' போன்ற சமூக ஊடகங்களின் வரவை ஆரோக்கியமான வரவாகவே காண்கின்றேன்.

20. கனடாவில் ஆரம்பத்தில் வெளிவந்த கையெழுத்துப் பிரதிகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் இவை பற்றி…
கனடாவில் 84இல் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையாக வெளிவந்தது. சுமார் பதினைந்து இதழ்களுக்குள் வெளியாகியிருக்கலாம். கனடாவில் நான் எழுதிய படைப்புகள் முதலில் வெளிவந்தது அக்கையெழுத்துச் சஞ்சிகையில்தான். 86.87 காலகட்டத்தில் நான் 'குரல்' என்றொரு கையெழுத்துச் சஞ்சிகையினை நடாத்தியிருக்கின்றேன். மான்ரியால் நகரிலும் வேறு சில கையெழுத்துச் சஞ்சிகைகள் வெளிவந்துள்ளதாக அறிகின்றேன். அவை பற்றிய போதிய விபரங்கள் கைவசமில்லாததால் இத்தருணத்தில் விரிவான பதிலினைத் தர முடியவில்லை. இது பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டு, ஆவணப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று கருதுகின்றேன்.

21. எழுத்தாளர்களில் பலர், எழுதுவது ஒன்றாகவும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் நேர் முரணாகவும் உள்ளது. இவர்களை மனதில் வைத்துக் கொண்டு - ’படைப்பாளியைப் பாராதே, படைப்பைப் பார்’ என்ற கோசம் பற்றி உங்கள் கருத்து என்ன?

சமூக, அரசியற் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒருவர் எழுதும் படைப்புகளைப்பொறுத்தவரையில் அவர்களது வாழ்க்கையையும், எழுத்தையும் பிரித்துப்பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் தாம் செய்த தவறுகளை உணர்ந்து, தம்மைச் சத்தியசோதனை செய்து, அதன் விளைவாக எழுதுபவர்களாக இருப்பின் ஏற்றுக்கொள்ளலாம்.

மானுட வாழ்க்கையென்பது மானுடரின் ஆழ்மன, வெளிமன உணர்வுகளுக்கிடையிலான போராட்டமே.  ஆழ்மனத்து உணர்வுகளை எல்லாராலும் அடக்கிச் சாதிக்க முடிவதில்லை. இதனால்தான் பகுத்தறியும் வெளி மனம் தவறென்று கூறும் விடயங்கள் பலவற்றை, ஆழ்மனத்தூண்டுதல்களால் மானுடர்கள் பலர் புரிந்து விடுகின்றார்கள். இந்த நிலையினை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சூதாட்டத்துக்குத் தம்மை அடிமையாக்கியவர் எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி. அதற்காக அவரது நாவல்களின் மகத்துவத்தை நாம் மறக்க முடியுமா?

நான் வாசித்த பல படைப்புகளை அவற்றை எழுதியவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்தபின் வாசித்தவனல்லன். முதலில் ஒரு படைப்பு கூறும் பொருள், அதன் நடை, பாத்திரப்படைப்பு , கதைப்பின்னல், பாத்திரங்களுக்கிடையிலான உரையாடல் ,அது கூறும் பொருள் எனப் பலவற்றை உள்ளடக்கியது. கூறும் பொருள் மட்டுமே அப்படைப்பின் வெற்றியை அல்லது தரத்தை நிர்ணயிப்பதில்லை. இந்த வகையில் பொதுவாக எழுத்தாளர் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது குறை, நிறைகள் அவரது படைப்பொன்றினை வாசிப்பதற்குத் தடையாக இருப்பதில்லை; இருக்கக்கூடாது என்பேன்.

22. புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் சுயாதீனமாக எதையும் எழுதக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். அவர்களது போரியல் இலக்கியம் சார்ந்த படைப்புகள் பற்றி நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்?

யாரும் போரியல் சார்ந்த படைப்புகளை எழுதலாம். போரில் ஈடுபட்டவர்கள் மட்டுமே எழுத வேண்டுமென்பதில்லை. ஆனால் போரியல் வாழ்வனுபவம் அற்ற ஒருவர் அவ்விடயத்தில் போதிய ஆய்வுகள் செய்து அவற்றின் அடிப்படையில் எழுத வேண்டிய தேவை உள்ளது. ஆனால் அவ்வனுபவத்தினூடு வந்த ஒருவருக்கு அந்தப்பிரச்சினை இல்லை. மிகவும் இயல்பாக எவ்விதமான சான்றுகளும் தேவைப்படாத நிலையில் அவரால் எழுத முடியும். புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் சுயாதீனமாக எதையும் எழுதலாம் என்ற சூழலில் எழுதுவதற்கு  முடியும் என்பதால், அவர்களது போரியல் இலக்கியம் சார்ந்த அவர்களது படைப்புகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. எழுதப்படும் படைப்பின் தன்மை மட்டுமே அதன் தரத்தைத் தீர்மானிக்க முடியும்.

அதே சமயம் ஊரில சுயாதீனமாக எழுத முடியாத சூழலில் வாழும் ஒருவரும் கூடப் போரியல் இலக்கியத்தைப்படைக்க முடியும். உதாரணமாகக் குறியீடுகள் மூலம் அவ்விதமான புனைவகளைப் படைக்க முடியும். நான் என்ன கூற வருகின்றேனென்றால் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு குடும்பத்தின் கதையாகத் தென்படும் கதையானது இன்னுமோர் ஆழ்ந்த அர்த்தத்தில் இன்னுமொரு பொருளினைத்தர முடியும். ஒரு குடும்பம் என்பது ஒரு நாட்டின் அரசின் தவறுகளை விமர்சிப்பதாக அமையும் வகையில் இருக்கலாம்.

இவ்வகையான படைப்புகளில் , புகலிடத்தமிழ் எழுத்தாளர்கள்தம் படைப்புகளில், அண்மையில் வெளியான 'பார்த்தனீயம்' முக்கியமானதொரு படைப்பு. அதன் பாத்திரப்படைப்புகள் சிலவற்றில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் , இந்தியப்படைகளின் இலங்கைத்தமிழர்கள் மீதான அடக்குமுறைகளைப் பதிவு செய்தல் என்னும் அடிப்படையில் அது முக்கியமானது. சோபாசக்தி, சயந்தன், குணா கவியழகன் போன்றோரின் படைப்புகளிலும் போரியற் சூழல் விபரிக்கப்பட்டுள்ளது. தம் அனுபவங்களின் அடிப்படையில் அவர்கள் எழுதும் படைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை வரலாற்றினைப் பதிவு செய்கின்றன அல்லது ஆவணப்படுத்துகின்றன என்னும் வகையில்.
குணா கவியழகனின் படைப்புகள் போராட்ட காலத்து அனுபவங்களை, யுத்த முடிவுக்குப்பின்னரான தடுப்பு முகாம அனுபவங்களை ஆவணப்படுத்துகின்றன.

23. இலக்கிய உலகில் / வாசகர் பரப்பில் கவனம் பெறாத பல புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகள் அசுரகதியில் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுவது பற்றி?

தமிழ் இலக்கிய உலகு பல குழுக்களாகப் பிளவுண்ட நிலையில் எழுத்தாளர்கள் தற்போதுள்ள தொழில் நுட்ப வசதிகளின் அடிப்படையில் தம் படைப்புகளை மொழிமாற்றம் செய்து வெளியிடுவது வரவேற்கத்தக்கது. அவற்றில் நல்லவை நிலைக்கும். அல்லவை ஒதுங்கும் அல்லது மறையும்.

24. கனடாவில் பிறந்து வளர்ந்தவர்களின் தமிழ், இலக்கிய முயற்சிகள் எப்படி இருக்கின்றன?

பொதுவாக இங்கு பிறந்த குழந்தைகள் பலர் அதிகமாக ஆங்கிலத்திலேயே எழுதி வருகின்றார்கள். எதிர்காலத்தில் இவையே கனடியத்தமிழர் இலக்கியமாக நிற்கப்போவது யதார்த்தம். இப்பொழுதுதான் எழுதத்தொடங்கியிருக்கின்றார்கள். இன்னும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே சமயம் கனடாவில் மட்டுமல்ல ஏனைய நாடுகள் பலவற்றில் வாழும் புகலிடத்தமிழர்களின் குழந்தைகள் பலர் தாம் வாழும் நாடுகளின் மொழிகளில் எழுதத் தொடங்கியிருக்கின்றார்கள். சிலர் கவனத்துக்குள்ளாகிய எழுத்தாளர்களாகவும் வளர்ச்சியடைந்து வருகின்றார்கள். இவ்விதமாக எழுதும் இளையவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வுகள் செய்யப்படுவது அவசியம்.

ngiri2704@rogers.com

நன்றி: பதிவுகள்.காம்

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்