Monday, February 19, 2018

இலக்கியம் ஒரு காலக் கண்ணாடி: ம.வே.திருஞானசம்பத்தப்பிள்ளையின் படைப்புகளை முன்வைத்துச்சில குறிப்புகள்... - வ.ந.கிரிதரன் -

- *'டொராண்டோ'வில் 22.10.17 அன்று நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் 'உலகம் பலவிதம்' தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வில் நான் ஆற்றிய உரை -

இலக்கியம் ஒரு காலக்கண்ணாடி என்றொரு கூற்றுள்ளது. உண்மை.  இலக்கியப்படைப்பொன்றினை ஆராய்ந்து பார்ப்போமாயின் பல்வேறு விடயங்களை அப்படைப்பினூடு அறிந்து கொள்ள முடியும். அப்படைப்பில் பாவிக்கப்பட்டுள்ள மொழியிலிருந்து அப்படைப்பின் காலகட்டத்தை ஆய்வொன்றின் மூலம் அறிவதற்குச் சாத்தியமுண்டு. உதாரணத்துக்குச் சங்க இலக்கியப்படைப்புகளை எடுத்துக்கொள்ளலாம். அவற்றினூடு பண்டைத்தமிழரின் வாழ்க்கை முறை, இருந்த நகர அமைப்பு, ஆட்சி முறை, நிலவிய மானுடரின் பல்வேறு விடயங்களைப் பற்றிய நம்பிக்கைகள் .. எனக்கூறிக்கொண்டே செல்லலாம். எனது இச்சிற்றுரையில் இலக்கியம் காலக்கண்ணாடி என்னும் அடிப்படையில் ம.வெ.திருஞானசம்பந்தப்பிள்ளை அவர்களின் படைப்புகளை உள்ளடக்கிய  'உலகம் பலவிதம்' நூலினை அணுகுவதாகும்.

அளவில் இந்நூல் பெரியது. நூலிலுள்ள அனைத்துப் படைப்புகளையும் குறுகிய காலத்தில் முழுமையாக வாசிப்பதென்பது சாத்தியமற்றதொன்று. ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் அடிப்படையில்  இந்நூலை அணுகலாம். அதுவும் கூட முழு நூலைப்பற்றிய இவ்விதமானதோர் அணுகுதலுக்குரிய மாதிரி அணுகலாகவிருக்கும் என்பதால், அது என் நம்பிக்கை என்பதால் அவ்விதமே இந்நூலை அணுகுவதற்கு முடிவு செய்து, அவ்வணுகுதலின் அடிப்படையில் இலக்கியம் காலக்கண்ணாடி என்னும் கூற்றிலுள்ள உண்மை பற்றி அறிதற்குச் சிறிது முயற்சி செய்வதே என் நோக்கம்.

இதற்காக நான் இத்தொகுப்பபிலுள்ள இரு நாவல்கள் மற்றும் ஆசிரியரின் பத்திகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றின் மீது என் கவனத்தைத்திருப்பப் போகின்றேன்.
1. மதமாற்றம்

அந்நியராட்சியின் கீழ் முக்கியமானதொரு விடயமாக மதமாற்றம் இருந்ததைக் காண முடிகின்றது. பாதிரிமார்கள் மக்களை மதம் மாற்றுவதில் தீவிர முனைப்புடன் செயற்பட்டதை அறிய முடிகின்றது. பல்வேறு ஆதாயங்களுக்காக மக்கள் மதம் மாறியதையும் , பலர் மதமாற்றத்துக்கெதிராகச் செயற்பட்டதையும் ம.வெ.தி.யின் புனைகதைகளிலிருந்து காணமுடிகின்றது. அவர் இந்துக்கல்லூரியின் ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியவர். இந்து சாதனம் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். இயல்பாகவே மதமாற்றம் என்பது அவரை மிகவும் பாதித்ததொரு விடயமாக இருந்திருக்கும். இருந்திருக்க வேண்டும். தன் எழுத்தை மதமாற்றத்துக்கெதிராக மக்களை விழிப்படைய வைப்பதற்கு அவர் பாவித்ததை அவரது புனைகதைகள் வெளிப்படுத்துகின்றன.

நூலின் முதலாவது ஆக்கம் அவரது 'ஓம் நான் சொல்லுகின்றேன்' பாகம் 1 என்றுள்ளது. ஆனால் படைப்பு முழுமையான குறுநாவலாகத் தென்படுகின்றது. முத்தன் முதலாளி முத்துக்குமாரசுவாமிப்பிள்ளையான முறை என்று உப தலைப்பு இடப்பட்டுள்ளது. முத்தன் என்னும் தந்தையைச் சிறுவயதில் இழந்த ஏழைசசிறுவன் தாயாருடன், திருகோணமலைக்குத் தோணியில் சென்று , யாழ்ப்பாண முதலாளியொருரின் கடையில் பணியாற்றி, நல்லபெயர் பெற்று, முத்து என்று அழைக்கப்பட்டுப் பின்னர் அம்முதலாளியின் மகளான தனலட்சுமியை மணம் முடித்து முத்துக்குமாரசுவாமிப்பிள்ளையான கதையினைக்கூறுவது. இக்கதையை மிகவும் அழகாகப்புனைந்துள்ள ஆசிரியரின் திறமையினை இக்கதைக்கு வைத்த தலைப்லிபிருந்து அறிந்துகொள்ளலாம். இக்கதையின் தலைப்பு 'ஓம் நான் சொல்லுகிறேன்'. முதலாளி முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை எவர் தம்மைம்கண்டு மரியாதை செய்யும்போதும் 'ஓம் நான் சொல்லுகின்றேன்' என்பார். பின்னர் வீட்டூக்கு சென்றதும் தமது பணப்பெட்டகத்தைத்  திறந்து ஏதோ முணுமுணுப்பார். இவர் இவ்விதம் செய்வதை மனைவி இடையிடையே கண்டாளாயினும் அதற்கான காரணத்தைக் கேட்கவில்லை. இவர் இவ்விதம் செய்வதை ஊர் முழுவதும் அறிந்திருந்தது. அவர்களும் தங்களுக்குள் இவர் ஏன் இவ்விதம் செய்கின்றார் என்பதற்கான காரணம் பற்றி முணுமுணுத்துக்கொள்வார்கள். ஆனால் இதற்கான காரணம் கதையின் முடிவில் உடைபடுகின்றது. ஒருமுறை இவரது முதலாளியே இதற்கான காரணத்தைக் கேட்டு விடுகின்றார். அப்போது முதலாளி முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை பின்வருமாறு கூறுவார்:

"இந்த மரியாதைகளும் உபசாரங்களும் எனக்கல்ல.  என்னிடத்திலுள்ள பணத்திற்குத்தான் என்பது புலப்பட்டது.  ஆனதினால் யார் யார் மரியாதை செய்கின்றார்களோ அப்படிச் செய்தவர்களுடைய  பெயர்களையெல்லாம் அவதானித்துக்கொண்டு . வீட்டிற்கு மீண்டவுடன் அங்கிருக்கும் பணப்பெட்டகத்தைத்திறந்து இன்னின்னார்  இன்றைக்கு உனக்கு மரியாதை செய்தார்கள்  என்று தனித்தனியவர்களுடைய  பெயர்களைப் பெட்டகத்திலிருக்கும் பணத்திற்குச் சொல்லிவிடுவேன்" [பக்கம் 26]

இதுதான் காரணம். இக்குறுநாவலில் வெளிப்படும் முக்கிய விடயங்கள் சிலவாகக் கீழுள்ளவற்றைக் குறிப்பிடுவேன்:

1. அந்நியமார்க்கப்பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் சைவப்பிள்ளைகள் மதம் மாறுவதைத்தடுப்பதற்காக வேலாயுதம்பிள்ளை என்னும் செல்வந்தர் சைவ ஆங்கில வித்தியாசாலையைத்தொடங்கி  ஏழைப்பிள்ளைகளிடத்தில் பணம் வாங்காமால் அவர்களுக்கு இலவசமாகவே கல்வியை வழங்கி வருபவர். அதனை நாவல் பின்வருமாறு வெளிப்படுத்தும்:

"சைவப்பிள்ளைகள்  அந்நிய மார்க்கப்பள்ளிக்கூடங்களிலே படித்துச் சமயாபிமானங்கெட்டு ஈற்றிலே சிலர் தம் மதத்தை விட்டு அந்நிய மதத்திற் சேர்வதைக்கண்டு மனம் பொறாராய் , தாமாகவே ஒரு சைவ ஆங்கிலப்பாடசாலையைத் தனியே தொடங்கி ஏழைப்பிள்ளைகளிடத்துக் கல்வி வேதனமு பெறாமல் நடாத்தி வருபவர்." [22, 23]

மதமாற்றம் அக்காலகட்டத்தில் அந்நிய மார்க்கப்பள்ளிகளில் (கிறிஸ்தவப்பாடசாலைகளில்) நடைபெற்றுள்ளதை இக்கதை வெளிப்படுத்துகின்றது.

இதுபோல் ம.வே.தி.யின் இன்னுமொரு நாவலான  'உலகம் பலவிதக் கதை' என்னும் உபதலைப்புடன் வெளியான 'கோபால- நேசரத்தினம்' நாவலும் மதமாற்றத்தையும், அதற்கெதிரான செயற்பாடுகளையும் வெளிப்படுத்தும் நாவலாக இருப்பதை அறிய முடிகின்றது. இந்நாவலின் மையக்கருத்தே மதமாற்றத்துகெதிராக மக்களை விழிப்படைய வைத்தலே என்பதை நாவலின் கதைப்பின்னலும், முடிவும் , இடையிடையே பாத்திரங்கள் நடத்தை, கூற்றுக்கள் வாயிலாக வெளிப்படும் கருத்துக்களும் வெளிப்படுத்துகின்றன.

கோபாலன் என்னும் சிறுவன் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவன். தாயார் பிட்டி விற்று அவனைப் படிக்க வைக்கின்றாள். அவனும் மிகவும் திறமையாகப் படித்து வருகின்றான். அவனை அவனைப் பாதிரியார் ஒருவரின் உதவியுடன் பாதிரிப்பள்ளிக்கூட மொன்றில் , அவளது குடும்பநிலை காரணமாக இலவசமாகப் படிப்பிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பாதிரியாரின் முக்கியமான நோக்கம் மிகவும் திறமைசாலியான அவனை எப்படியாவது கிறித்தவ மதத்துக்கு மாற்றுவதுதான். அதன் காரணமாகவே அவனுக்கு இலவசமாகப் படிப்பிக்க அவர் வசதிகள் செய்து கொடுக்கின்றார். இடையில் ஒரு சமயம் அவன் எட்டாம் வகுப்பு மாணவனாகவிருக்கும்போது பாதிரியார் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று 'எப்பொழுது மனந்திரும்புவது?' என்று கேட்கின்றார். அதன் அர்த்தம் அவன் எப்பொழுது மதம் மாறுவதென்று. அதனையுணர்ந்து அவன் தன் தாயாரிடம் சென்று அதனைத்தெரிவிக்கின்றான். அவளோ ஆசிரியர் இன்னுமொருமுறை பாதிரியார் அவ்விதம் கேட்டால் அவன் அங்கு சென்று படிக்கத்தேவையில்லை என்று கூறுகின்றாள். பின்னர் பாதிரியாரும் தான் இனிமேல் அவ்விதம் கேட்பதில்லை என்று உறுதி கூறியதன் அடிப்படையில் கோபாலன் அங்கு படிப்பைத் தொடர்கின்றான். பாதிரியாரின் மன மாற்றத்துக்குக் காரணம் விட்டுப்பிடிப்பதுதான். அவரிடம் அவ்விதமான மனமாற்றத்தை ஏற்படுத்திய அவருடன் பணியாற்றும் குட்டிப்போதகர் என்பவர் கோபாலனைத் தன் வீட்டில் தன் மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்கின்றார் காரணத்தோடுதான். அவருக்குப் பால்ய வயதில் திருமணம் செய்து விதவையான நேசரத்தினம் என்ற மகளும் இருக்கின்றாள். எப்படியாவது கோபாலனை அவளுக்கு மணம் செய்வித்து அவனை மதம் மாற்றி விடவேண்டுமென்பதுதான் அவரது திட்டம். இவ்விதம் செல்லும் கதை இறுதியில் கோபாலன் - நேசரத்தினத்தின் திருமணத்துடன் முடிகின்றது. அவளும் சைவ சமயத்துக்கு மனம் மாறுகின்றாள். பாதிரியார் எவ்வளவோ முயற்சிகள் செய்கின்றார் அவளை மதம் மாறாமலிருக்க. கிறித்தவ இளைஞனொருவனுக்கு அவளை மணம் முடிக்கப் பாடுபடுகின்றார். ஆனால் நேசரத்தினமோ பிடிவாதமாக இருந்து விடுவதால் அவரது முயற்சியும் தோற்று விடுகின்றது. இறுதியில் குட்டிப்போதகரையும் பாதிரியார் பணியிலிருந்து நீக்கி விடுகின்றார். காரணம்: அஞ்ஞானியை மணந்த அவளது பிள்ளையினால் அவர் அங்கு வேலை செய்ய முடியாது என்பதுதான். இதனால் மனமுடைந்த குட்டிப்போதகரும் மகனும் சைவ சமயத்தவர்களாக மீண்டும் மாறிவிடுகின்றார்கள். ஆம். இவர்கள் ஆரம்பத்தில் சைவ சமயத்தவர்களாக இருந்து மதம் மாறியவர்கள்தாம். இதுதான் நாவலின் முக்கியமான மையக் கருப்பொருள்.

இந்நாவலில் பாதிரியாரின் முயற்சிகள் எவ்வளவுதூரம் அக்காலகட்டத்தில் பாதிரிமார்கள் மக்களை மதமாற்றம் செய்வதில் மும்முரமாகவிருந்தார்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இந்நாவலில் பாதிரியார் நேசரத்தினத்திடம் அவள் அஞ்ஞானியான கோபாலனை மணந்தால் அவளது தந்தை வேலையை இழக்க நேரிடும் என்று கூட பயமுறுத்துகின்றார். உதாரணத்துக்கு சில பகுதிகளைப் பார்க்கலாம்.

" பாதிரி: (சிறிது நேரம் யோசித்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டு) நேசம், உம்மைச் சாத்தான் மெத்தவும் அணாப்பி விட்டான். அவனிலிருந்து உம்மை மீட்க முடியாமலிருக்கின்றது.  ஆனால் ஒன்று சொல்கின்றேன்,, அதை நன்றாய் மனசில் வைத்துக்கொள்ளும்; நீர் அஞ்ஞானியானால் உம்முடைய பிதா போதகராக வேலை பார்க்க முடியாது." [பக்கம்  67].

இந்துக்கல்லூரியொன்றின் ஆசிரியராக, இந்து சாதனம் பத்திரிகை ஆசிரியராக விளங்கியவர் நூலாசிரியர் ம.வே.தி அவர்கள். அவரைப் போதகர்களின் மதமாற்றும் செயற்பாடுகள் பலமாகப் பாதித்திருக்க வேண்டும். அதன் விளைவுதான் மதமாற்றத்துக்கெதிரான இந்த நாவல்.

2. பெண்களின் நிலை.

இன்னுமொரு விடயத்தையும் இந்நாவல் வெளிப்படுத்துகின்றது. அது பெண்களின் நிலை. குறிப்பாகக் கிறிஸ்த்தவப் பெண்களின் நிலை. நாவல் எழுதப்பட்ட காலகட்டத்தில் பால்ய விவாகமொன்றில் கணவனையிழந்து கைம்மை நிலையினை அடைந்தவள் நேசரத்தினம். நேசரத்தினம் - கோபாலன் காதல் , அவர்கள் பழகும் முறையெல்லாம் அக்காலகட்டத்தில் கிறித்தவப்பெண்கள் எவ்வளவுதூரம் முற்போக்காக இருந்தார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது. அறுபதுகளில் வெளியான வர்த்தக அம்சங்களை உள்ளடக்கிய திரைப்படங்களிலொன்றான 'ஒளிவிளக்கில்' நான்கு வயதில் திருமணம் செய்து விதவையான செளகார்ஜானகி வளர்ந்த நிலையில் காதல் உணர்வுகளால் பீடிக்கப்படும் நிலை வருகையில் அது தகாது என்று உணர்ச்சிப்பிளம்பாக வெடித்தெழுவதைக்காணலாம். அறுபதுகளில் வெளியான தமிழ்த்திரைப்படமொன்றில் வரும் கைம்மை நிலையினை அடைந்த பெண்ணின் நிலை இவ்வாறுதான் இருந்திருக்கின்றது. ஆனால் 1921அம் ஆண்டில் இந்து சாதனம் பத்திரிகையில் வெளியான இக்கதையில் வரும் நேசரத்தினத்தின் பாத்திரம் எவ்வளவு தூரம் கிறித்தவப்பெண்கள் முற்போக்காக  இருந்திருக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது. இது அந்நியராட்சியில் ஏற்பட்ட நன்மைகளிலொன்றாக நான் கருதுவேன். இங்கு நான் கிறித்தவப்பெண்களென்று குறிப்பிடுகின்றேன் என்று ஏன் குறிப்பிடுகின்றேன் என்று நீங்கள் கேட்கலாம். அதற்குக் காரணத்தை நாவலிலேயே வரும் நேசரத்தினத்தின் கூற்று வெளிபடுத்துகின்றது.

".. சைவர்களாகிய உங்களுடைய பெண்களுள் அநேகர் ஆடவர்களைக்கண்டால் வீட்டினுள் ஓடியொளிக்கும்  வழக்கமுடையவர்களாக இந்தக் காலத்திலும்  காணப்படுகின்றார்கள்.  நாங்கள் அப்படியோடி ஒளிப்பதில்லை" [பக்கம் 32]

3. அந்நியராட்சி ஏற்படுத்திய விளைவுகள்

அடுத்து ஆங்கிலேயரின் ஆட்சியினால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றங்களையும் ம.வே.தி.யின் எழுத்துக்கள் பதிவு செய்கின்றன. உதாரணமாக ஆங்கிலம் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதையும் , விளையாடுவதையும் தவிர வேறொன்றுமறியமாட்டார்கள். அதுபற்றி ம.வே.தி.யின் பத்தி எழுத்தொன்றில் கூறப்பட்டிருப்பதைப் பார்ப்போம்:

" ..கமத்தொழிலையேனும் ஏதுமொரு கைத்தொழிலினையும் கல்வி பயில்வதோடு விஷேசமாகப் பயின்றுகொள்ள வேண்டு மென்னும் ஆர்வத்தை இவர்களிடத்தில் காணோம். உலகத்தில் உண்ணவும் உடுக்கவும் உறங்கவும் ஆங்கிலம் பயிலவும் விளையாடவும் வாய்த்தால் உத்தியோகம் பார்க்கவுமே தாங்கள் திருவவதாரஞ் செய்ததாக நினைத்துக்கொண்டு இம்மாணவர் பேரிடர்ப்படுகின்றனர்..." [உலகம் பலவிதம்; 1922 நவம்பர் 23]

இவ்விதமாகக்குறிப்பிடும் மாணவர்களுக்கு சிகரட், பீடி, சுருட்டு லெமொனட் லொஸன்சர் ஊற்றுபேனா றிஸ்ட் கடிகாரம் பட்டுக் கைக்குட்டை பொடிப்பட்டை கறுவாப்பட்டை கடலை துவிச்சக்கர வண்டி முதலிய டாம்பீகத்துக்குரிய  பொருட்களாகிய இவற்றின் செலவிற்கும் பணங்கொடுத்து இப்பெற்றார் பெரும்பான்மையும் இலவு காத்த கிள்ளைபோல் அணாப்புண்டு போகின்றார்கள் என்றும் குறிப்பிடுகின்றார். [உலகம் பலவிதம்; 1922 நவம்பர் 23 & 24]

எம் காலத்திலிருந்ததை விட 1920 களில் ஆங்கிலேயரின் காலத்தில் மாணவர்களுக்கு சிகரட் போன்றவற்றை வாங்குவதற்குக் கூடப் பெற்றார் பணம் கொடுத்ததை அறிய முடிகின்றது. எம் காலத்தில் இவற்றையெல்லாம் மாணவர்கள் பெற்றார், ஆசிரியர்களுக்குத் தெரியாமல் ஒளித்துச் செய்தார்கள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தார்கள். இந்நிலையில் அக்காலத்து மாணவர்களின் மனநிலையும், செயல்களும் வியப்பை அளிக்கின்றன. அத்துடன் விளையாட்டுத் திடல்களுக்குச் செல்லும் மாணவர்கள் செய்யும் கூத்துக்களையும் ஆசிரியர் பட்டியலிடுகின்றார்:

" இனி இவர்கள் விளையாட்டு முன்றிலுக்குப் புறப்பட்டு விட்டால் கூட்டிலிருந்த புலி வெளியே புறப்பட்டுக் காட்டிற்குச் செல்வது போலிருக்கும். தெரு வீதியாற்செல்வோரிற் சிலரினுஞ் சிலரே இம்மாணவர்களின் பரிகாச வார்த்தைக்கு அகப்படாமல் செல்லுதல் முடியும். ஒரு கிழவன் வீதி வழியே போனால் அவனுக்கொரு பரிகாச வார்த்தை, மாட்டு வண்டி சென்றால் அதற்கொரு பரிகாச வார்த்தை,  யாரும் பெண்பாலார் அலட்சியமாகச் சென்றால் அதற்கொரு பரிகாச வார்த்தை,  புதிதாகத்  துவிச்சக்கர வண்டியோடு மொருவர்  ஒரு கிழவி மீது முட்டி  கிழவியை  வீழ்த்தி விட்டால் அதற்கு அடங்கா நகைப்பும், இடைவிடாக் கரகோசமும் செய்வர்.." இவ்விதம் பரிகாசம் செய்யும் மாணவர்களின் தேகநிலையை ம.வே.தி நகைச்சுவையாக விபரிப்பார்:

"இவர்கள் தேகவலிமையைச்  சொல்லுகிலோ  கீரைமரம் பிடுங்குவதற்கு ஏலப்பாட்டுப் பாடும் நிலையிலிருக்கின்றனர்" [உலகம் பலவிதம்; 1922 நவம்பர் 23 பக்கம் 93]

இதற்குரிய தீர்வாக ம.வே.தி கருதுவது ஆங்கிலக் கல்வியை ஒழித்துத் தமிழ்க் கல்வியில் கற்பிப்பதே. அதனையே அவரது பின்வரும் கூற்று வெளிப்படுத்துகின்றது: "எய்தவனிருக்க அம்பை  நோவதுபோல் இவர்களை நோவதாலும் குறை கூறுவதினாலும் ஆம்பயன் யாதுமில்லையாம். இவர்கட்கு விதேசியக் கல்வியையொழித்துத் தேசியக் கல்வியை யூட்ட வெண்டும்." [உலகம் பலவிதம்; 1922 நவம்பர் 23 பக்கம் 94]

மதமாற்றம், விதேசக் கல்வி முறையும் ஒழிக்கப்பட வேண்டுமென்பது ம.வே.தி.யின் நிலைப்பாடாக இருப்பதையும், தம் எழுத்தை அதற்காகவே அவர் பாவிப்பதையும் அறிய முடிகின்றது.

4. மதுப்பழக்க வழக்கங்கள்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த யாழ்ப்பாணப்பெருங்'குடி' மக்களின் குடிப்பழக்க வழக்கங்கள் பற்றி ம.வே. திருஞானசம்பந்தப் பிள்ளையின் 'உலகம் பலவிதம்' என்னும் தொகுப்பு நூலில் சுவையான தகவல்கள் பல காணப்படுகின்றன. ஒரு சமயம் யாழ்ப்பாணத்திலுள்ள கள்ளு, சாராயத்தவறணைகள்  பல அகற்றப்படுகின்றன. அது பற்றியும் அதற்கான காரணம் பற்றியும் ம.வே.தி. சுவையாக , வேடிக்கையாகக்கூறுவார்:

"யாழ்ப்பாணத்திலுள்ள கள்ளு, சாராயத்தவறணைகள் பல அகற்றப்படுகின்றன. இப்படிச் செய்வதனாலே மதுபானத்தாலே வருங் கேடும் பொருட்செலவும் விரைவில் நீங்கிவிடுதல் கூடுமென நம்மவர் எண்ணக்கூடும். ஆனால் விஷயம் அப்படியன்று. மேலைத்தேச மதுபானங்காளாகிய பிறண்டி, விஸ்க்கி முதலியன விற்கப்படுஞ் சாப்புகட்டு இப்பொழுதிருக்கும் மானம் வேறு எதற்கும் எவருக்கும் இல்லையெனலாம். கள்ளுக்குஞ் சாராயத்திற்கும் பிரதியாக ஜின் எனப்படும் ஒரு மதுபானம் புறப்பட்டிருக்கின்றது.  ஜின் வேண்டிய மட்டிற்குச் சாப்புகளில் இருப்பதால் மதுபானிகட்குப்ம் பணப்பஞ்சமன்றி மதுபானப் பஞ்சமில்லை"  [உலகம் பலவிதம்; 1922 டிசம்பர் 14; பக்கம் 97]

இவ்விதமாகக் கள்ளுத்தவறணைகள் அகற்றப்பட்டதால் மதுப்பிரியர்கள் சனிவாரத்திற் காலையிலும் மாலையிலும், ஏனைய வாரங்களில் மாலைக்காலத்திலும் பறங்கித்தெருவிலுள்ள குடிவகைச் சாப்புகளைத் தரிசனஞ் செய்து வருகின்றார்கள் என்பதையும் மேற்படி பத்தி எழுத்தின் மூலம் அறிய முடிகின்றது.  [உலகம் பலவிதம்; 1922 டிசம்பர் 7] இவ்விதமாகக் கள்ளு, சாராயத்திலிருந்து ஜின்னுக்கு மாறிய மதுபானப்பிரியர் ஒருவரின் கூற்றையும் ஆசிரியர் வேடிக்கையாகப் பதிவு செய்திருக்கின்றார்:

// "புளீச்சற் கள்ளையும், ஈரலையறுக்குஞ் சாராயத்தையும் விட்டு ஜின்னையல்லவோ குடிக்க வேண்டும். அது அதிகம் மஸ்து உள்ளதானாலும் குடிவகையல்ல. எல்லா வியாதிகளுக்கும் மருந்து தம்பீ. கொஞ்சம் விலை கூடத்தான். அதுக்கென்ன செய்கிறது" என்றார். அவருடன் இன்னுங் கொஞ்ச நேரந் தாமதித்துப் பேசினால் அவர் நம்மையும் மதுபானஞ் செய்யும்படி தூண்டி விடுவார் போலிருந்தமையினால் நான் சரி  அண்ணே போய் வாருமென்று சொல்லிக் கடத்தி விட்டேன் என ஒரு வித்தியாசாலை உபாத்தியாயர் கூறினார்."  //  [உலகம் பலவிதம்; 1922 டிசம்பர் 14 பக்கம் 97]

இதை வாசித்தபோது எனக்கு நித்தி கனகரத்தினத்தின் 'கள்ளுக்கடைப் பக்கம் போகாதே' பொப் பாடலில் வரும் 'விட்டமின் பி என்று வைத்தியரும் சொன்னதாலே விட்டேனொ கள்ளுக்குடியை நான்' என்னும் வரிகள்தாம் நினைவுக்கு வந்தன.

5. அந்நியர் ஆட்சியிலும் தமிழர், சிங்களவர்களுக்கிடையிலான பிரச்சினைகள்...

அந்நியர் ஆட்சியிலும் தமிழர், சிங்களவர்களுக்கிடையிலான பிரச்சினைகள் எவ்விதமிருந்தன என்பது பற்றிய தகவல்களையும் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் பத்தி எழுத்துகள் புலப்படுத்துகின்றன. உதாரணத்துக்கு ஒன்று சான்றினைக்குறிப்பிடுவேன்.

அரசியற் திருத்தமொன்று பற்றிய ஆவணமொன்றினை இலங்கைத்தமிழர்கள்  ஐரோப்பியர், பறங்கியர் மற்றும் முஸ்லீம் மக்களுடன் இணைந்து சிங்கள மக்களைத்தவிர்த்து அனுப்பி வைத்த விபரத்தைப் பற்றியது. அது பற்றிய ம.வே.தி.யின் பத்திக்குறிப்பு வருமாறு:

"..இவ்விலங்கையின் ஈடேற்றத்தின்பொருட்டு சிங்களர், தமிழர் என்னும் இரு சாதியாளரும் ஒத்துழைத்தாலே அநுகூலமுண்டாகுமென் எண்ணி  தமிழர்களாயுள்ளவர் சிங்களருடன் சில காலமாக ஐக்கியப்பட்டு உழைக்க முயன்றனர். ஆனால் சிங்களரோ அந்தச் சமையத்திலும்  சுயநயங் கருதுபவர்களாய் பிரிவினை காட்டி நின்றனர்.  சிங்களரியல்பை  மாற்றுவது அசாத்தியமெனக் கண்ட  தமிழர் அவர்களை விடுத்து ஐரோப்பியர், பறங்கியர் இஸ்லாமானவர் என்னுமிவர்களுடன் தாமுஞ் சேர்ந்து  தங்கள் சாதியின் சுயாதீனத்தின்பொருட்டு உழைக்கத்தொடங்கினர். இச்சிங்களரையொழிந்த ஏனைய சாதியார்களின் பிரதிநிதிகளும் சனத்தலைவர்களும்  இலங்கை அரசியற்றிருத்தத்தைக் குறித்து இலங்கை மந்திரிக்கு ஒரு விண்ணப்பம் சில மாசங்கட்டு முன் அனுப்பியிருந்தனர்" [உலகம் பலவிதம்; ஆகஸ்ட் 14, பக்கம் 86]

6. தொழில் நுட்பம் மற்றும் நகர அமைப்பு

அக்காலகட்டத்தில் நிலவிய போக்குவரத்து சம்பந்தமான தொழில் நுட்பம் பற்றியும் இந்நூலிலுள்ள ஆசிரியரின் உலகம் பலவிதம் பத்தி எழுத்தொன்றில் விபரிக்கப்பட்டுள்ளது.  . அது தார் றோட்டிற்குப் பதில் றப்பர் றோட் போடுவதைப் பற்றியது. அது பற்றிய குறிப்பு வருமாறு:

"கொழும்பு நகரசங்கத்தார் நகர எல்லைக்குட்பட்ட தெருக்களுக்குத் 'தார்' இடுவதைத்தவிர்த்து 'றப்பர்' போடுவதற்கு யோசிக்கின்றனர். 'டார்லிறோட்' எனப்படும் வெள்ளைமணல் என்னுமிடத்திலுள்ள தெருவிற்கு றப்பர் இட்டுப் பரீஷித்துப் பார்த்தவிடத்திலே தாரிலும் பார்க்க றப்பர் விசேடமானதென்றும், தெரு விரைவிலே தேய மாட்டா தென்றும் , வண்டிகள் சத்தமின்றிப் போக்குவரவு செய்யக்கூடுமென்றும் கண்டு பிடித்து விட்டார்கள். .." [உலகம் பலவிதம்; ஆகஸ்ட் 24, 1922; பக்கம் 87]

றப்பரைக் காங்கிரீட் அஸ்பால்ட் கலவையுடன் கலந்து வீதிகளை அமைப்பது அமெரிக்காவில் பீனிக்ஸ், அரிசோனாவில் அறுபதுகளில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டதாக இணையத்தில் கூகுள் தேடுதலில் அறிய முடிந்தது. பிரான்ஸ் உள்படப் பல நாடுகளில் றப்பர் கலந்த அஸ்பால்ட் - காங்ரீட் கலவையுடன் வீதிகள் அமைப்பது பற்றியும் தகவல்களைப் பெற முடிகின்றது. மேலும் இவ்விதமான றப்பர் வீதிகள் பல நன்மைகளையும் தருகின்றனவாம்: சத்தத்தைக் குறைக்கின்றன; நீண்ட காலம் நிலைத்து நிற்கின்றன; பாவித்த டயர்களிலிருந்து இதற்குத் தேவையான றப்பரைப்பெறுவதால் சூழலுக்கும் நல்லது. வீதிகளின் மேற்பரப்பில் உராய்வினை அதிகரிப்பதால் வாகனம் செலுத்துவதற்கும் நல்ல வீதி நிலைமையினைத் தருகின்றனவாம். .. ஆனால் இவ்விதமான தொழில் நுட்பம் இருபதுகளிலேயே பாவிக்கப்பட்டுப் பரீட்சிக்கப்பட்டதாக உலகம் பலவிதம் பத்தியெழுத்தில் பதியப்பட்டுள்ளதானது உண்மையில் என்னை வியப்படையே வைத்ததெனலாம். மான்ரியாலில் பாதாள ரயில்கள் றப்பர் தண்டவாளங்களில் ஓடுவதும், அவை சப்தமின்றி அமைதியாக ஓடுவதும் நினைவுக்கு வந்தன.

யாழ் மணிக்கூட்டுக் கோபுரம்யாழ் நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரம் பற்றியும் சுவையான தகவல்களை நூலாசிரியரின் பத்தி எழுத்துக்கள் பகர்கின்றன. பழுதாகிப்போன நிலையிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரம் பலருக்கு உதவியாகவிருந்ததையும், கைக்கடிகாரம் பாவனைக்கு வந்தபின்னர் அதனைப் பாவிப்பது குறைந்து போனது பற்றியும், பின்னர் அது திருத்தப்பட்ட விடயம் பற்றியும் மேற்படி பத்தி எழுத்துக்கள் எமக்கு எடுத்துரைக்கின்றன. [உலகம் பலவிதம்; ஆகஸ்ட் 17, 1922; பக்கம் 85]

"உலகம் பலவிதம்; செப்டம்பர்  14 " பத்தியில் பழுதாகியிருந்த மணிக்கூட்டுக் கோபுர மணிக்கூடு திருத்தப்பட்டு மீண்டும் இயங்குகின்ற விடயம்  தெரிய வருகின்றது. அதில் 'யாழ்ப்பாணச் சுகாதார சங்கத்தார் இது ஓடாமல் நிற்பதைக்கண்டு போலும் கத்தோலிக்கக் குருவர்க்கத்திற் சேர்ந்த ஒருவரைக்கொண்டு இதனைத்திருத்துவித்துப் பழையபடி  ஓடச்செய்திருக்கின்றனர்' என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எதற்காகச் சுகாதார சங்கத்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது? நகரசபையினர் என்றல்லவா குறிப்பிட்டிருக்க வேண்டும். நான் நினைத்தேன் ஆசிரியர் வேடிக்கையாக ஓடாமல் நோய்வாய்ப்பட்டிருந்த மணிக்கூட்டின் நோய் நீக்க உதவிய சங்கம் என்பதால் சுகாதார சங்கத்தார் என்று குறிப்பிட்டுள்ளாரோ என்று. ஆனால் மேலும் சில இடங்களில் இவ்வாறே சுகாதாரச் சங்கத்தார் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர் வேடிக்கையாக அல்ல உண்மையாகவே அவ்விதம் குறிப்பிடுகின்றார் என்பதை உணர முடிந்தது. நகரின் நன்மையைக் கருத்தில்கொண்டு இயங்குவதால் நகர சபையினர் அவ்வாறும் அன்று அழைக்கப்பட்டனரோ அல்லது ம.வே.தி.மட்டுமே அவ்வாறு அழைத்தாரோ என்பது ஆய்வுக்குரியது.

மேலும் இப்பத்தியில் கோபுரமானது ஏழாம் எட்வேர்ட் மன்னர் இளவரசராக இலங்கைக்கு விஜயம் செய்தபோது  1875ம் ஆண்டு அவரது விஜயத்துக்கான ஞாபகச்சின்னமாகக் கட்டப்பட்டதென்றும், அப்போது மணிக்கூடு வைக்கும் நோக்கம் இருந்திருக்கவில்லையென்றும், பின்னர் இலங்கையின் தேசாதிபதியாகவிருந்த  ஸேர் ஜேம்ஸ்லாங்டனே தமது உபயமாக மணிக்கூட்டினை வாங்கி இக்கோபுரத்தில் பொருத்தியவர் என்றும் மணிக்கூட்டுக்கோபுரம் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. [பக்கம் 138]

7.  வழக்கிலிருந்த சொற்றொடர்கள் மற்றும் பழமொழிகள்
இந்நாவல் வெளிப்படுத்தும் அக்காலகட்டத்தில் நிலவிய மதமாற்றம், கைம்மை நிலை போன்ற விடயங்களில் கவனம் செலுத்தினோம். இனிமேல் வேறு விடயங்களில் கவனத்தைத்திருப்புவோம்.

இந்நாவல் அக்காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பாவிக்கப்பட்டுள்ள பழமொழிகள் , சொற்தொடர்கள் பலவற்றைப் பட்டியலிடுகின்றது. அவற்றில் சிலவற்றை இன்னும் நாம் பாவித்தாலும் பலவற்றைப்பாவிப்பதில்லை. உதாரணத்துக்குச் சிலவற்றைப்பார்போம்.

"கெட்டார் தழையாரோ கேடொருக்கால் நீங்காதோ " [ஓம் நான் சொல்லுகின்றேன்; பக்கம் 21]
"நக்கினார் நாவெடார்" [ஓம் நான் சொல்லுகின்றேன்; பக்கம் 21]
"அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரங்காசு கொடுத்தாலும் மீண்டும் வரப்போவதில்லை" [ஓம் நான் சொல்லுகின்றேன்; பக்கம்21]
"உண்டானபோது கோடானு கோடி உறமுறையார் " [பக்கம் 22]
"ஒரு நேரச்சோறு தா. ஒரு சேலை தா" [கோபால - நேசரத்தினம்; பக்கம் 27]
"பாலன் பஞ்சம் பத்து வருடம்" [கோபால - நேசரத்தினம்; பக்கம் 27]
"காலம் போம். வார்த்தை நிற்கும் கண்டாய்" [கோபால - நேசரத்தினம்; பக்கம் 27]
"வடலி வளர்த்துக் கள்ளுக்குடிக்க நினைத்தவனைப்போல்" [கோபால - நேசரத்தினம்; பக்கம் 30]
"பலாக்காய்ப்பாலில் அகப்பட்ட ஈ" [கோபால - நேசரத்தினம்; பக்கம் 34]
"பஞ்சம் போம். பஞ்சத்திற் பட்ட வடுப்போகாது" [கோபால - நேசரத்தினம்; பக்கம் 37]
"நான் கம்பலபொதியை விட்டாலும் கம்பலபொதி என்னை விடுகிறதில்லை" [கோபால - நேசரத்தினம்; பக்கம் 44]
"ஆனையும் அறுகம் புல்லிலே தடக்குப்படக்கூடும்" [கோபால - நேசரத்தினம்; பக்கம் 44]
"செத்தையிற் கிடந்த ஆமையை மெத்தையிற் கொண்டுபோய் வைத்தாலும் அது செத்தையைத்தான் நாடும்" [கோபால - நேசரத்தினம்; பக்கம் 44]
"சத்துருவானாலும் தம் வீட்டிற்கு வந்தால் பெரியோர் அவனைச் சமாதானம் பண்ணுவார்கள்" [கோபால - நேசரத்தினம்; பக்கம் 45]
"கெட்ட மாடெல்லாம் கேப்பா புலத்திற்கு" [கோபால - நேசரத்தினம்; பக்கம் 46]
"கோழி தின்ற கள்ளனுங் கூட உலாவுகின்றான்" [கோபால - நேசரத்தினம்; பக்கம் 55]
"நீரடித்து நீர் விலகுவதல்ல" [கோபால - நேசரத்தினம்; பக்கம் 61]

இவ்விதம் கூறிக்கொண்டே செல்லலாம். ம.வே.தி.யின் படைப்புகளில் இவை போன்ற அக்கால் வழக்கிலிருந்த சொற் தொடர்களை, பழமொழிகளை நூற்றுக்கணக்கில் காணலாம். இவை பற்றித் தனியாகவே ஆய்வொன்றினைச் செய்யும் எண்ணிக்கையில் இவற்றின் எண்ணிக்கை ஆசிரியரின் பல்வேறு படைப்புகளிலுள்ளன.

இதுவரையில் இலக்கியம் ஒரு காலக்கண்ணாடி என்னும் அடிப்படையில் 'உலகம் பலவிதம்' நூலிலுள்ள படைப்புகள் சிலவற்றிலிருந்து சான்றுகளை எடுத்துரைத்தேன். இவை தவிர இன்னும் எத்தனையோ விடயங்களை அக்காலகட்டத்துச் சமூக, அரசியல், பொருளாதார நிலைகளை வெளிப்படுத்தும் விபரங்களை, அக்காலகட்டத்தில் நிலவிய போக்குவரத்து மற்றும் பாவிக்கப்பட்ட தொழில் நுட்பம் பற்றிய விபரங்களை, நகரின் முக்கிய கட்டடங்கள் போன்ற விபரங்களையென்று இந்நூலின் படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. அதனை வைத்துப் பட்டப்படிப்பு மாணவர்கள் ஆய்வுகள் செய்வதற்குரிய வளமாகத் திகழ்கின்றது இந்நூலின் படைப்புகள் எனலாம்.

ngiri2704@rogers.com

நன்றி: பதிவுகள்.காம்

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்