எழுத்தாளர் வ.ந.கிரிதரன்

- வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் வ.ந.கிரிதரன், (நவரத்தினம் கிரிதரன்) பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் மற்றும் நாவல்கள்  ஆகியவற்றை ஆக்கியுள்ளார். பதிவுகள் இணைய இதழின் (http://www.pathivukal.com) ஆசிரியராகவிருந்து, 2000ஆம் ஆண்டிலிருந்து அதனை வெளியிட்டு வருகின்றார்.  இவர் இலங்கையின் யாழ்ப்பாண நகரிலுள்ள வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்டவர்.  ஆரம்ப கல்வியை வவுனியா மகாவித்தியாலத்தில் கற்றார். தொடர்ந்து யாழ் இந்துக் கல்லூரியிலும், மொறட்டுவாப் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றார். அங்கு கட்டிடக்கலையில் இளமானிப் பட்டம் பெற்றார். பின்னர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அதிகார சபை ஆகியவற்றில் பணிபுரிந்து, இலங்கை அரசியல் நிலை காரணமாகக் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தார். அங்கு மேலும் இலத்திரனியற் பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளிலும் தகமைகள் பெற்றுள்ளார்.

இவரின் படைப்புக்கள் தமிழகம் மற்றும் இலங்கையில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும்  இணைய இதழ்கள் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாக 'அமெரிக்கா' மற்றும் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆகிய நூல்களைத் தமிழகத்தில் வெளியிட்டுள்ளன. குமரன் பப்ளிஷர்ஸ் 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'வன்னி மண்', 'கணங்களும் குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பினை 'மண்ணின் குரல்' என்னும் பெயரில் வெளியிட்டுள்ளது. மங்கை பதிப்பகம் (கனடா) 'மண்ணின் குரல்' என்னும் நூலினை வெளியிட்டுள்ளது. கனடாவில் வெளியான முதல் தமிழ் நாவல் இதுவே. இவரது கவிதைகள் சில 'எழுக அதிமானுடா' என்னும் தலைப்பில் கனடாவில் வெளிவந்துள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் சட்டவிரோதக் குடிவரவாளனாக இவர் அலைந்து திரிந்த அனுபவத்தை வெளிப்படுத்தும் நாவலான 'குடிவரவாளன்' (பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் அமெரிக்கா என்னும் பெயரில் வெளியான நாவல் பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயருக்கு மாற்றமடைந்த நாவல்.) மின்னூலாக வெளியாகியுள்ளது. புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை உள்ளடக்கி வெளிவந்து பலரின் கவனத்தை ஈர்த்த 'பனியும் பனையும்' சிறுகதைத் தொகுப்பு இவரது 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை'  கதையினையும் உள்ளடக்கியுள்ளது. கணையாழியின் 'ஈழத்துச் சிறப்பிதழில்' இவரது 'சொந்தக்காரன்' சிறுகதை வெளிவந்துள்ளது. புது தில்லியிலிருந்து வெளிவரும் 'வடக்கு வாசல் ' இதழ் 2008இல் வெளியிட்ட இலக்கிய மலர், ஆழி பப்ளிஷர்ஸ் (தமிழகம்) வெளியிட்ட தமிழ்க்கொடி 2006 ஆண்டு மலர், காற்றுவெளி (இலண்டன்) வெளியிட்ட 'இலக்கியப் பூக்கள்' மற்றும் விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் அரை நூற்றாண்டு இலக்கியப் பணியைக் கெளரவிக்கும் முகமாக வெளியான 'வெங்கட் சாமிநாதன் வாதங்களும், விவாதங்களும்'  தொகுப்பு நூல் ஆகியவற்றில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 'ஞானம்' (இலங்கை) இலக்கிய சஞ்சிகையினால் வெளியிடப்பட்ட புலம்பெயர் தமிழ் இலக்கியத்தொகுப்பில் இவரது சிறுகதையான 'சாவித்திரி ஒரு ஶ்ரீலங்கன் அகதியின் குழந்தை' என்னும் சிறுகதையும் வெளியாகியுள்ளது.   

- வ.ந.கிரிதரன் -
தமிழ்நாடு மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இவரது சிறுகதைகள், நாவல்கள் பற்றிய ஆய்வுகள் வெளிவந்துள்ளன. சென்னைப்  பல்கலைக்கழகத்தில் இவரது படைப்புகளை முன்வைத்து M.Phil பட்டப்படிப்புக்காக ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது. இவரது படைப்புகளை  முன்வைத்துத் தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவரது முதலாவது  சிறுகதையான 'சலனங்கள்' அறிஞர் அ.ந.கந்தசாமி நினைவு தினச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளது. விகடன் பவளவிழாப் போட்டியில் 'பல்லிக்கூடம்' என்ற கதை ரூபா 3,000 பரிசினையும், சுஜாதா அறக்கட்டளையும், ஆழி பப்ளிஷர்ஸ்  இணைந்து நடாத்திய அறிவியல் சிறுகதைப் போட்டியில் இவரது 'நான் அவனில்லை' என்ற இவரது அறிவியற் சிறுகதை வட  அமெரிக்காவுக்குரிய சிறந்த அறிவியற் கதையாகத் தெரிவு செய்யப்பட்டு ரூபா 5,000 பரிசினையும் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவரது படைப்புகள் பதிவுகள், திண்ணை, ஆறாம் திணை, கீற்று, இசங்கமம், கூடல் ஆகிய ஆகிய இணைய இதழ்களிலும்,   ஈழநாடு, தினகரன், சிந்தாமணி, ஈழமணி, சுதந்திரன், தாயகம் (கனடா), வைகறை (கனடா), ஈழநாடு (கனடா) ஆகிய பத்திரிகைகளிலும், சிரித்திரன், கண்மணி, வெற்றிமணி , நுட்பம், ஜீவநதி, தேடல் (கன்டா), தாயகம் (கனடா), ஆனந்த விகடன், கணையாழி, அம்ருதா, சுபமங்களா, உயிர் நிழல் (பிரான்ஸ்), சுவடுகள் (நோர்வே), துளிர் (இந்தியா)  ஆகிய சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன. பல இணையத்தளங்கள், சஞ்சிகைகளில் மீள் பிரசுரமாகியுமுள்ளன. 

ngiri2704@rogers.com

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்