Sunday, June 2, 2019

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஒன்று (1 - 10)

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'

['பாரதி கருத்துமுதல்வாதியா? பொருள்முதல்வாதியா?' என்னும் தலைப்பில் , அவனது 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையினை முன்வைத்துக் கட்டுரையொன்றினை மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ் சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையில் எழுதியிருக்கின்றேன். 1981 அல்லது 1982ஆம் ஆண்டு வெளிவந்ததாகவிருக்க வேண்டும். அப்பொழுது அதன் ஆசிரியராகவிருந்தவர் பொறியியலாளர் பிரேமச்சந்திரன். எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரனை நான் முதன் முதலில் அறிந்துகொள்ளக் காரணமாகவிருந்ததும் அக்கட்டுரையே. 'நுட்பத்தில்' வெளிவந்த அக்கட்டுரையினை வாசித்துவிட்டு என்னுடன் தொடர்புகொண்டார். அதன் பின்னர் அக்கட்டுரை கைவசமில்லாத காரணத்தால் மீண்டும் 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு' என்னும் தலைப்பில் 'டொராண்டோ'வில் வெளிவந்த 'தாயகம்' (சஞ்சிகை/ பத்திரிகை)யில் எழுதினேன். பின்னர் அக்கட்டுரை 'பதிவுகள்' இணைய இதழிலும், 'திண்ணை' இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது. அக்கட்டுரையினை எழுத்தாளர் (சீர்காழி) தாஜ் தனது வலைப்பதிவான 'தமிழ்ப்பூக்க'ளிலும் மீள்பிரசுரம் செய்து அது பற்றிய தனது கருத்தினையும் பதிவு செய்திருக்கின்றார். பாரதியின் பிறந்த நாளையொட்டி (டிசம்பர் 11) அக்கட்டுரை மீண்டும் பதிவுகளில் பாரதியின் நினைவுக்காகவும், ஒரு பதிவுக்காகவும் பிரசுரமாகின்றது. - வ.ந.கி]  தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சரியானதொரு தீர்வில்லை. 'இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள்,இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை' என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் 'கருத்து முதல்வாதிகள்'. இவர்கள் 'சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது' என்றும், 'இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு' என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல 'இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே' என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் 'பொருள் முதல்வாதம்' எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் 'பொருள்முதல்வாதிகள்' எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி 'ஆன்மா நிலையானது, அழிவற்றது என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே'. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் 'அப்படி எதுவுமில்லை' என்கின்றார்கள். 'இவ்வியற்கையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களே உயிரினங்கள் உருவாகக் காரணம்' என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியை ஆராய்வோமாகில் அவனும் இந்தப் பிரச்சினையை அசட்டை செய்து விடவில்லை என்பதைக் கண்டு கொள்ளலாம். பாரதியின் கீழுள்ள கவிதை வரிகள் அவனை ஒரு கருத்து முதல்வாதியாகக் காட்டுகின்றன. 'அல்லா' என்ற கவிதையில் பாரதி பின்வருமாறு பாடுகின்றான்:

"..பல்லாயிரம் பல்லாயிரம் கோடியண்டங்கள்
எல்லாத்திசையிலுமோரெல்லையில்லா
வெளிவானிலே நில்லாது சுழன்றோட
நியமஞ் செய்தருள் நாயகன்.."

'மகாசக்தி வாழ்த்து' என்னும் கவிதையில் அவன் கூறுவதோ?

"..விண்டுரைக்க அரிய அரியதாய்
விரிந்த வானவெளியென நின்றனை.
அண்ட கோடிகள் வானிலமைத்தனை
அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை.
மண்டலத்தை அணு அணுவாக்கினால்
வருவதெத்தனை யோசனை கொண்ட
தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே!
நினைக் காளியென்றேத்துவேன்.."

மேலுள்ள பாடல் வரிகள், மற்றும் பாரதியின் அனேக தெய்வப் பாடல்கள் கூறுவதென்ன? இந்த உலகம், இந்தப் பிரபஞ்சம் யாவற்றையும் ஆக்கியது ஒரு சக்தி , அதுவே கடவுள் என்பதையல்லவா? ஆனால் இவ்விதம் இயற்கைக்கு வேறாக ஒரு கடவுளைப் படைக்கும் கருத்து முதல்வாதியாக விளங்கும் பாரதியால் , கண்ணெதிரே தெரியும் காட்சிகளை, அவற்றின் உண்மையினைக் கருத்து முதல்வாதிகளைப் போல் மாயை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை. பொருள் உண்மையென்ற பொருள்முதல்வாதத்தினையும் மறுத்து விட முடியவில்லை. பாரதியின் 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்ற கவிதையினைப் பார்த்தால்....

"..நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே
நீங்களெல்லாம் சொப்பனம் தானோ?
பலதோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே! இளவெயிலே! மரச்செறிவே!
நீங்களெல்லாம் கானலின் நீரோ?
வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்தழிந்தே போனதினால்
நானுமோர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்ற ஒரு நினைவும்
காட்சியென்ற பல நினைவும்
கோலமும் பொய்களோ?
அங்கு குணங்களும் பொய்களோ?.."

இவ்விதமாகக் 'காண்பவை , கருதுபவை ' யாவுமே பொய்யோ எனக் கருத்து முதல்வாதிகளைப் போல் வினவும் பாரதியார் மேழுள்ள கவிதையின் இறுதியில் பின்வருமாறு முடிக்கின்றார்.

"..சோலையிலே மரங்களெல்லாம்
தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?
இதைச் சொல்லொடு சேர்ப்பீரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம்
விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதி கண்டோம்.
காண்பதல்லால் உறுதியில்லை.
காண்பது சக்தியாம்.
இந்தக் காட்சி நித்தியமாம்..."

ஆரம்பத்தில் கருத்து முதல்வாதிகளைப் போல் வினவிய பாரதி , இறுதியில் பொருள் முதல்வாதியாக முடிக்கின்றான்.அதனால் தான் கருத்து முதல்வாதிகளைப் போல் 'காண்பதெல்லாம் மாயை'யென்று முடிக்காமல் 'காண்பது சக்தியாம். இந்தக் காட்சி நித்தியமாம்' என்று முடிக்கின்றான். இவ்விதமாக பாரதி தனிக் கருத்து முதல்வாதியாகவும் இல்லாமல், தனிப்பொருள்முதல்வாதியாகவுமில்லாமல் , கருத்து முதல்வாதத்திற்கும் பொருள் முதல்வாதத்திற்குமிடையில் ஒருவித இணக்கமான போக்கினை, சமரசப் போக்கினைக் கைக்கொள்பவனாகக் காணப்படுகின்றான்.

உண்மையில் பாரதி 'அல்லா', 'மகாசக்தி வாழ்த்து' மற்றும் பல பக்திப் பாடல்களின் அடிப்ப்டையில் கருத்துமுதல்வாதியாகத் தென்பட்டாலும், 'உலகத்தை வினவுதல்' என்ற கவிதையினூடாக நோக்கும் போது மேலே கூறப்பட்டதைப் போல் இருவிதமான தத்துவவியற் போக்குகளுக்குமிடையில் ஒரு சமரசம் செய்பவனாகவே தென்படுகின்றான். உண்மையில் பாரதியிடம் காணப்படும் இத்தகைய முரண்பாடுகளெல்லாம் அவனது ஆர்வமிக்க, உலகை அறியும் நோக்கு மிக்க மனப் போக்குகளின் வளர்ச்சியின் வெளிப்பாடுகளே. இத்தகைய போக்கினையே அவனது 'சுயசரிதை' என்ற கவிதையின் பின்வரும் வரிகளும் புலப்படுத்துகின்றன.

"..மாயை பொய்யென
முற்றிலும் கண்டனன்.
மற்றுமிந்த பிரமத்தினியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்.
தன்னுடை அறிவினுக்கு
புலப்படலின்றியே தேய மீதெவரோ
சொலுஞ் சொல்லினைச்
செம்மையென்று மனத்திடை கொள்வதாம்
தீய பக்தியியற்கை வாய்ந்திலேன்.
சிறுது காலம் பொறுத்தினுங் காண்பமே.."

மாயை பொய்யெனக் கூறும் பாரதி, 'பிரமத்தின் இயல்பினை அறிய இன்னும் அருள் பெறவில்லை' என்று கூறும் பாரதி,அறிவிற்கு புலப்படாத எவற்றையும் நம்பும் தன்மையில்லாத பாரதி, அத்தகைய அறிவு நிலையினை அடையும் வரை பொறுப்பேன்' என்கின்றான். இவ்விதமாக பாரதியின் அறிவுத் தாகமெடுத்து அலையும் மனதில் ஏற்பட்ட தர்க்கப் போராட்டத்தின் விளைவுகளே அவனது மேற்கூறப்பட்ட முரண்பாடுகளே தவிர வேறல்ல. இத்தகைய முரண்பாடுகள் அவனது மாபெரும் மேதைமையின் வளர்ச்சிப் படிக்கட்டுக்களே.

நன்றி: பதிவுகள்காம், திண்னை.காம், தமிழ்ப்பூக்கள், தாயகம்


2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!

'போர்க்காலம் - தோழிகளின் உரையாடல்' என்னும் தலைப்பில் அண்மையில் மறைந்த தமிழினி ஜெயக்குமாரனின் கவிதைகள் அடங்கிய தொகுப்பொன்றினை, அவரது கணவர் திரு.ஜெயக்குமாரனின் உதவியுடன், சிவகாமி ஞாபகார்த்த நிறுவகம் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தத்தொகுப்புக்கு வ.ந.கிரிதரன் எழுதிய முன்னுரையினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். - பதிவுகள் -

தமிழினி விடுதலைப்புலிகளின்  மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். அத்துடன் இராணுவத்தாக்குதல்களிலும் பங்கு பற்றியவர். யுத்தத்தின் பின்னர் சிறிது காலம் சிறை வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர். அதன் பின்னர் அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியத்தில் தன் பங்களிப்பினை ஆற்றத்தொடங்கியிருந்தார். தமிழினி எழுதுவதில் திறமை மிக்கவர். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்துக் கவிதைகள், சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். 'பதிவுகள்' இணைய இதழுக்கும் அவர் தன் படைப்புகளை அவ்வப்போது அனுப்புவார். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்து இன்னும் பல படைப்புகளைத்தருவார் என்றெண்ணியிருந்த சமயத்தில் அவரது மறைவுச்செய்தி வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உண்மையில் ஈழத்துத்தமிழ் இலக்கிய வானில் கணப்பொழுதில் ஒளி தந்து மறையும் மின்னலைப்போல் , தன் குறுகிய வாழ்வினுள் ஒளிர்ந்து மறைந்தவர் தமிழினி. இவரது படைப்புகள் குறைவாக இருந்தபோதிலும், அவை நூலுருப்பெற வேண்டியதவசியம். தமிழினியின் கவிதைகளைத்தொகுத்து சிறு தொகுப்பாக வெளிக்கொணர முனைந்திருக்கும் அவரது கணவர் திரு.ஜெயக்குமாரனின் இந்த முயற்சியானது மிகவும் பாராட்டுதற்குரியதும், பயனுள்ளதுமாகும். முக்கியமானதொரு தொகுப்பாக விளங்கப்போகும் தொகுப்பிது என்றும் கூறலாம்.

தமிழினி அண்மைக்காலமாகத்தான் எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்தினாரா? உண்மையில் அவர் கடந்த காலத்திலும் பல்வேறு பெயர்களில் அவர் எழுதியிருப்பதை அவரே ஒருமுறை தன் முகநூலில் பகிர்ந்திருக்கின்றார். அவரது 'மழைக்கால் இரவு' சிறுகதையின் வரிகளிலிருந்து 'யுத்தம்' என்றொரு கவிதையினை உருவாக்கிப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்திருந்தேன். அது பற்றித் தன் முகநூலில் கருத்துத்தெரிவித்திருந்தபோது தன் கடந்த காலத்து இலக்கிய முயற்சிகளைப்பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

"‘மழைக்கால இரவு’ என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதையிலிருந்து அர்த்தம்பொதிந்த அருமையான கவிதையொன்றினை கிரிதரன் நவரத்னம் யாத்திருக்கிறார். உண்மையில் பாடசாலை நாட்களிலிருந்தே எனக்கு கதை எழுதுவது விருப்பமானது. கடந்த காலங்களிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய கதைகளை வெவ்வேறு பெயர்களில் எழுதியிருக்கிறேன். இப்போது அவை பதிவாக இல்லை. எப்படியிருப்பினும் ஒரு அடை மழைக்கால இரவில் நடந்த யுத்தம் பற்றிய கதையை ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்தது மட்டுமன்றி, சிறந்த விமர்சனத்தையும் முன் வைத்த அவரது இலக்கிய பற்றுக்கும் சேவைக்கும், புதிய படைப்பாளிகளை உருவாக்குவதில் காட்டும் ஆர்வத்திற்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றி."

இதிலிருந்து அவர் தனது பாடசாலைக்காலத்திலிருந்தே எழுதுவதில் ஆர்வம் காட்டி வந்திருப்பதை அறிய முடிகின்றது. ஆனால் அவர் தான் கதைகள் சிலவற்றையே எழுதியிருந்ததாகக்குறிப்பிட்டிருக்கின்றார். கவிதைகள் எதனையும் முன்னர் எழுதியதாகக் குறிப்பிடவில்லை. இத்தகைய சூழலில் அண்மைக்காலமாக அவர் எழுதிய கவிதைகளையே அவரது கவிதைகளாகக்கொள்வதில் தவறேதுமிருப்பதாக நான் கருதவில்லை. அவற்றின் அடிப்படையில் அவரது இக்கவிதைத்தொகுப்பில் உள்ளடங்கியிருக்கும் அவரது கவிதைகளைப்பற்றி சிறிது சிந்திப்பதே என் நோக்கம்.

தமிழினியின் கவிதைகள் பல்வேறு விடயங்களுக்காக குறிப்பாக ஆயுதம் தாங்கிப்போராடிய ஒரு பெண் போராளியின் அனுபவங்களின் , சிந்தனைகளின் வெளிப்பாடுகள் என்னும் வகையில்  முக்கியத்துவம் பெறுகின்றன. இக்கவிதைகள் கடந்த காலப்போர்க்கால அனுபவங்களை, சக போராளிகளுடனான அனுபவங்களை, போருக்குப் பிந்திய அனுபவங்களை விபரிக்கும் ஆவணங்களாக விளங்குவதால் முக்கியத்துவம் பெறுகின்றன. இக்கவிதைகள் தற்காலச் சூழலிலிருந்து கொண்டு , கடந்த கால போராட்ட நிகழ்வுகளைச் சுயபரிசோதனைக்குள்ளாக்குவதால் முக்கியம் பெறுகின்றன. இந்தக்கவிதைகள் அவற்றில் பாவிக்கப்பட்டிருக்கும் படிமங்களுக்காகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

தமிழினியின் கவிதைகளில் முக்கியமான கவிதையாக நான் கருதுவது  'அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்.... ' என்னும் கவிதையினைத்தான். இந்தக் கவிதையினைத்தன் முகநூலில் பதிவு செய்திருந்த தமிழினி கவிதைக்கு எந்தவிதத்தலைப்புமில்லாமலேதான் பிரசுரித்திருந்தார். இது பற்றிய குறிப்பினை எழுதிப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்தபோது இக்கவிதைக்கு 'அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்.... ' என்று தலைப்பினையிட்டிருந்தேன். கவிதை அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்து .நிகழ்வுகளை விபரிக்கின்றது யுத்தத்தின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறது. கவிதையின் ஆரம்பம் நன்றாக வந்திருக்கின்றது. கவிதையின் முதல் பகுதியே முழுக்கவிதையினதும் கூறு பொருளை நிர்ணயித்து விடுகிறது.

'போருக்குப் புதல்வரைத் தந்த
தாயாக வானம்
அழுது கொண்டேயிருந்தது'

என்று ஆரம்பமாகின்றது. அம்பகாமப்பெருங்காட்டில் யுத்தம் நடைபெறும் மழை பொழியும் இரவு. மழையை வானத்தாயின் அழுகையாக உவமையாக்கியிருக்கின்றார் கவிஞர்.  வானத்தாய் ஏன் அழுகின்றாள்? போருக்குத்தன் புதல்வர்களைத்தந்து விட்டதற்காகத்தான் அழுகின்றாள். யுத்தம் நடைபெறும் சமயம் கானகம் வெடியோசையால் அதிர்வுறுகின்றது. அவ்வதிர்வினால் ,மருண்ட யானைக்கூட்டங்கள் குடி பெயர்ந்தலைகின்றன. இடம் விட்டு இடம் மாறி நகரும் இருண்ட மேகங்களும் வெடியதிர்வுகளால் குடி பெயர்ந்தலையும் யானைக்கூட்டங்களாகக் கவிஞருக்குத்தென்படுகின்றன. இங்கு யானைக்கூட்டங்களின் இடப்பெயர்வினை வெறும் உவமையாகவும் கருதலாம். அத்துடன் உண்மையாகவே அவ்விதம் நடைபெறும் யுத்தத்தினால் யானைக்கூட்டங்கள் இடம் பெறுவதாகவும், அவ்விதமாக அவை இடம் பெயர்வதைப்போல் இடம் பெயரும் மேகக்கூட்டங்கள் உள்ளதாகவும் கவிஞர் கருதுவதாகவும் கருதலாம். மழை பொழியும் யுத்தம் நடக்கும் இருண்ட இரவு அச்சத்தினைத்தருவது. அந்த இரவானது அம்பகாமப்பெருங்காட்டில் நடைபெறும் யுத்தத்தின் கோரத்தை வெளிப்படுத்துவது. ஏற்கனவே அந்த இரவானது பகலை விழுங்கித்தீர்த்திருக்கின்றது. இருந்தும் அதன் பசி அடங்கவில்லை. யுத்தத்தின் பேரொலியானது பகலை விழுங்கித்தீர்த்த இரவின் கர்ஜனையாகப் பயமுறுத்துகிறது கவிஞரை. மேலும் 'காதலுறச் செய்யும் / கானகத்தின் வனப்பை / கடைவாயில் செருகிய / வெற்றிலைக் குதப்பலாக / சப்பிக்கொண்டிருந்தது / 'யுத்தம்.

கவிதையின் இந்த முதற் பகுதியினைப்படிக்கும்போதே சங்ககாலக்கவிதையொன்றின் தாக்கம் பலமாகவே இருப்பதை உணர முடிகின்றது. சங்கக்கவிதைகளில் இயற்கையாக மையமாக வைத்தே, ஐம்பெருந்திணைகளை மையமாக வைத்தே கவிதைகள் பின்னப்பட்டிருக்கும். அவ்விதமானதோர் உணர்வே மேற்படி கவிதையின் ஆரம்பப்பகுதியை வாசிக்கும்போதெழுகின்றது.  அம்பகாமப்பெருங்காட்டை மையமாக வைத்தே கவிதை பின்னப்பட்டிருக்கின்றது.

மேலும் தமிழினியின் மொழி அவரது எழுத்தாற்றலை வெளிப்படுத்துகிறது. மரபுக்கவிதையின் அம்சங்களான எதுகை, மோனை போன்றவற்றையும் சீர்களில் அளவாகப்பாவித்திருக்கின்றார். உதாரணத்துக்கு மோனைகளாக போருக்கு / புதல்வரை, தந்த / தாயாக, பகலை / பயங்கரமாயிருந்தது, பெருங்காட்டின் / போர்க்களத்தில் போன்றவற்றைக்குறிப்பிடலாம். எதுகைகளாக வெடியதிர்வுகளின் / குடி பெயர்ந்தலையும், இருண்ட / மருண்டு போன்றவற்றைக்குறிப்பிடலாம். இவையெல்லாம் சேர்ந்துதான் கவிதை வரிகளைக் கவித்துவமுள்ளவையாக மாற்றுகின்றன.

அடுத்துவரும் வரிகள் கவிதையின் முக்கியமான வரிகள். அவை:

மீளாப் பயணம் சென்ற தோழி
விடைபெறக் கை பற்றி
திணித்துச் சென்ற கடதாசி
செய்தி சொன்னது..
காலமாவதற்காக காத்திருக்கும்
அம்மாவின் ஆத்மா
கடைக் குட்டியவளின்
கையாலே ஒரு துளி
உயிர்த் தண்ணிக்காகத்
துடிக்கிறதாம்.

போராளியான தோழியோ போர்க்களத்தில் மீளாப்பயணம் சென்று விட்டாள். அதற்கு முன்னர் அவள் விடைபெறுகையில் தன் தோழியான கவிஞரிடம் கடிதமொன்றினைத்தந்து விட்டே செல்கின்றாள். மரணப்படுக்கையில் கிடக்கும் அவளது தோழியின் தாயாரைப்பற்றிய கடிதமது. அத்தாயின் கடைக்குட்டியான மீளாப்பயணம் சென்றுவிட்ட தோழியின் கையால் ஒரு துளித்தண்ணீருக்காகத்துடிக்கிறது அந்தத்தாயின் மனது. அதனைத்தான் விபரிக்கின்றது அந்தக்கடிதம். அந்தத்துளித்தண்ணீரைக் கவிஞர் 'உயிர்த்தண்ணி' என்று கூறுகின்றார். ஏனென்றால் உயிர் போகக்கிடக்கும் அந்தத்தாயின் உயிர் அதற்காகவே, அந்தத்துளித்தண்ணீருக்காகவே துடிப்பதால்.'உயிர்த்தண்ணி'யாகின்றது.

போருக்குத்தன் புதல்வியைத்தந்த அன்னை அவள். இவளைப்போன்ற அன்னையர் பலர். அவர்களைப்பற்றித்தான் கவிதை கூறப்போகின்றது என்பதற்காகவே போலும் ஆரம்பத்திலேயே கவிஞர் 'போருக்குப் புதல்வரைத் தந்த / தாயாக வானம் /அழுது கொண்டேயிருந்தது' என்று குறிப்பாகக்கூறினார்போலும். இவ்விதமாகக்கவிதையின் பிரதான கூறுபொருளினை ஆரம்பத்திலேயே குறிப்பாகக்கவிதை கூறி நிற்பதால் அதுவே கவிதையின் சிறப்புமிகு அம்சங்களிலொன்றாக ஆகிவிடுகின்றது. அதற்குப்பின்னரான கவிதையின் பகுதிகள் கவிஞரின் தோழியின் இழப்பு ஏற்படுத்திய உணர்வுகளை, போர் பற்றிய கவிஞரின் விமர்சனத்தை எடுத்தியம்புகின்றன.

தமிழினியின் இன்னுமொரு முக்கியமான கவிதை 'நஸ்ரியா'. தமிழினியின் முகநூல் பக்கத்தில் வெளியான  'நஸ்ரியா' என்னுமிந்தக் கவிதைக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அகதிகளாக முஸ்லீம் மக்கள் யாழ் மாவ்வட்டத்திலிருந்து வெளியேறியதைப் பதிவு செய்கிறது. அதே சமயம் அவ்விதமான வெளியேற்றத்துக்குக் காரணமான அமைப்பின் முன்னாள் போராளியொருவரின் இன்றைய மனநிலையினையும், அன்று அகதியாகச்சென்ற முஸ்லீம் சமூகத்தின் வாரிசுகளிலொருவரின் எண்ணங்களையும், இருவருக்கிடையிலான மானுட நேயம் மிக்க நட்பினையும்  பதிவு செய்கின்றது. அந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் இலங்கையின் சிறுபான்மையின மக்களனைவரும் ஒன்றிணைந்து தம் உரிமைகளுக்காகப் போராட வேண்டிய இன்றுள்ள சூழலில், கடந்த கால வரலாற்றின் கசப்பான பக்கங்கள் தலையிட்டு அவ்விதமான ஒற்றுமையினைக் குலைத்து விடும் அபாயமுள்ளதொரு சூழலில்,சிறுபான்மையின மக்கள் மத்தியில் புரிதுணர்வினையும், நல்லெண்ணத்தினையும் ஏற்படுத்துவதற்கு எழுத்தாளர்களின் இதுபோன்ற தம் மீதான சுய பரிசோதனை மிக்க  படைப்புகளின் முக்கியத்துவமும் அதிகரிக்கின்றது.

இக்கவிதையில் எனக்குபிடித்த சில வரிகள் வருமாறு:

"மூளையின் மடிப்புகளில்
கேள்விப் பாம்புகள்
நெளிந்து நெளிந்து
பதில்களைத் தேடிப்
பசியோடு துடிக்கின்றன"

'கேள்விப்பாம்புகள்' நல்லதொரு உருவகத்திலுருவான படிமம். 'நினைவு ஆணிகள்' இன்னுமொரு சிறந்த உருவகத்திலுருவான படிமம்.

கவிதை பின்வருமாறு முடிகின்றது.

"நீரடித்து
நீர் விலகாதெனில்
உன்னையும்
என்னையும்
எப்படி விலக்கலாம்?"

நீரானது ஒன்றுடனொன்று அடிபட்டுச் சென்றாலும் ஒன்றாகக் கலந்து விடுகிறது. நீரினைப் பிரிக்க முடியாது. அது போன்றதுதான் நம்மிருவருக்குமிடையிலான நட்பும், உறவும். யாராலும் பிரிக்கப்பட முடியாதது என்று முடிகிறது கவிதை. கவிஞரின் படைப்புச் சிறப்பினை வெளிப்படுத்தும் வரிகள்.

தமிழினியின் குறுங்கவிதையொன்று  துளி -01 என்னும் தலைப்பில் அவரது முகநூலில் வெளியாகியுள்ளது. . கவிதை இதுதான்:

காலநதிக்கரையில்
எஞ்சிக்கிடக்கிறது
இத்துப்போனவொரு வாழ்க்கை.
இடைவிடாது கொட்டிக்கொண்டிருக்கும்
விசத்தேள்களாக நினைவுகள்
குடைவதால் நெஞ்சினில்
நீங்காத மரணவலி.
"சாகத்தானே போனதுகள்.
சாகாமல் ஏன் வந்ததுகள்."
குறுக்குக்கேள்விகளால்
கூண்டுக்குள்ளேயே
பிணமாகிக்கனக்கிறது
போராடப்போன மனம்.

இதுதான் அந்தக்குறுங்கவிதை. கடந்த கால நினைவுகள் வாட்டும் மனநிலையினை,  யுத்தம் மெளனிக்கப்பட்டதற்குப்பின்னர் முன்னாள் போராளிகளைப்புறக்கணிக்கும் சமூகத்தின் மனநிலை ஏற்படுத்தும் வலியினை இவையெல்லாம் கவிஞரை வேதனைப்படுத்துகிறது. நீங்காத மரண வலியாக வாட்டுகிறது. அந்த வலியினை வெளிப்படுத்தும் வார்த்தைகள்: நினைவுகள் விசத்தேள்களாக்கொட்டுகின்றன. போராடப்புறப்பட்ட மனது பிணமாகிக்கனக்கிறது.

கவிதையென்பது உணர்வின் வெளிப்பாடு. ஆழமனத்தில் குடிகொண்டிருக்கும் வேதனை வார்த்தைகளில் வெளிப்படுகிறது. கவிதையில் உண்மை இருப்பதால் சுடுகிறது. வலி தெரிகிறது. கூடவே மானுடரின் சுயநலமும் தெரிகிறது.  போராடப்புறப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் தம் கடந்த கால அனுபவங்களைப்பல்வேறு வழிகளில் பதிவு செய்து வருகின்றார்கள். தமிழினி இங்கு தன் நிகழ்கால அனுபவத்தைக் கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

ஈழத்துத்தமிழ் இலக்கியத்திலிருந்து வெளியான முக்கியமான கவிதைகளிலொன்றாகத் தமிழினியின் இந்தக் குறுங்கவிதையும் இடம் பெறப்போகின்றது. அதற்குக்காரணம் அது கூறும் பொருள். ஒரு முன்னாள் போராளியின், சமூகத்தால் அவமதிப்புக்குள்ளாகியிருக்கும் இன்றைய மனநிலையினை, அதனாலேற்படும் வேதனையினைப் பதிவு செய்திருப்பதால் இக்கவிதையின் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது.

கவிதையில் சொற்களும் அழகாக வந்து விழுந்திருக்கின்றன. கொட்டும் நினைவுகளை விசத்தேள்களுக்கு உவமையாக்கியிருப்பது நன்கு பொருந்துகிறது. விசத்தேள் நினைவுகளென்று உருவகித்திருந்தாலும் சொற் சிக்கனம் மிகுந்து படிமத்தில் இன்னும் சிறப்புற்றிருக்கும். இந்தக் கவிதைக்குத் தமிழினி தலைப்பினை வைக்கவில்லை. துளி -01 என்று மட்டுமே வைத்திருக்கின்றார். கவிதையின் தலைப்பாகப் போராடப்போன மனது என்று வைக்கலாமென்று படுகின்றது. அண்மையில் நான் வாசித்த கவிதைகளில் என் மனதினைப்பாதித்த கவிதைகளில் இதுவுமொன்றென்பேன்.

'கட்டைகளை நெருக்கி பக்கவாட்டில் அடுக்கி விட்டது போல்' படுத்திருக்கும் கைதிகளின் நிலையினை, இரவிலும் கண்ணைப்பறிக்கும் ஒளிவெள்ளத்தில் தூங்க வேண்டிய நிலையினை, போதைக்கடிமையாகிய பெண் கைதிகளுடன் வாழ வேண்டிய நிலையினை, உணவுக்காக, குளிப்பதற்காகச் சிறையினுள் அடையும் சிரமங்களை விபரிக்கும் கவிதை 'வெலிக்கடைச்சிறை'. ஒருவகையில் சிறை வாழ்க்கையினைப் படம் பிடிக்கும் ஆவணக்கவிதையாக இதனைக்கருதலாம். இந்தக்கவிதை பின்வருமாறு முடிவுறுகிறது:

கை வீசி நடக்கிறது
காலம்.
அதன் கால்களில் ஒட்டிய துகள்களாய்
மனித வாழ்க்கை-
ஒட்டுவதும், உதிர்வதுமாய்.

தமிழினியின் படிமங்கள் சிறப்பானவை. படைப்புத்திறன் மிக்கவை. இங்கு கை வீசி நடக்கும் காலம், கால்களையும், கைகளையும் கொண்டவொரு உயிராக மனதில் விரிகிறது. மனித வாழ்க்கையோ அதன் கால்களில் ஒட்டிய துகள்களா ஒட்டுவதும், உதிர்வதுமாக இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் காலமோ கைகளை வீசி நடந்து கொண்டிருக்கின்றது.

காலத்தின் பல்வகைப்பண்புகளைத் தன் வாழ்க்கையினூடு விபரிக்கும் கவிதை 'போரடிக்கும்  கருவி'. இந்தக்கவிதையினை வாசிப்பவர்களுக்கு முதல் எழும் கேள்வி இங்கு தமிழினி குறிப்பிடும் போரடிக்கும் கருவி என்பதுதான் என்ன? நான் நேரடியான அறுவடை செய்யப்பட்ட நெற்பயிரிலிருந்து நெல்லினை பிரித்து எடுப்பதற்காகக் காளை மாடுகளைக்கொண்டு அல்லது உழவு இயந்திரங்களைக்கொண்டு மிதிப்பார்கள். ஒரு காலத்தில் தமிழர்கள் ஆனை கொண்டு போரடித்ததாக வரலாறுண்டு. இக்கவிதையில் தமிழினி தன்னையொரு போரடிக்கும் கருவியாகக்காண்கின்றார். காலமானது ஒரு சமயம் மெளனமாகவிருக்கச்செய்கிறது. இன்னுமொரு சமயம் பகைக்கச்செய்கிறது. பிறிதொரு சமயமோ சிநேகிக்கச்செய்கிறது. இங்கு தமிழினியின் வாழ்க்கையின் அடிப்படையில் பகைக்க என்பது இரு இனங்களுக்குமிடையில் நிலவிய பகை காரணமாக வெடித்த போராட்டத்தினையும், சிநேகிக்க என்பது சமாதான முயற்சிகளை, யுத்த நிறுத்தங்கள் போன்றவற்றையும், மெளனமாக இருக்க என்பது யுத்தம் முடிவுற்ற பின்னர், சிறை வைக்கப்பட்டு விடுதலையான பின்னர் மெளனமாகவிருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட அவரது நிலையினையும் குறிப்பாகக் குறிப்பதாகக் கருதலாம். போரடிக்கும் கருவியானது எவ்விதம் நெல்லினையும், தாளினையும் பிரித்தெடுக்கின்றதோ, அவ்விதமே காலமும் தன்னை அவ்விதமானதொரு கருவியாக வைத்து, பல்வகைக்காலச்சூழல்களையும் எதிர்கொள்வதற்கு அவற்றை நேர்த்தியாகக் கையாண்டு, நகர்த்திச்செல்கிறது. போரடிக்கும் கருவி நெல்லையும் , தாளினையும் பிரிக்கிறது. இங்கு இருப்பில் எதிர்படும் பல்வகைக்காலத்தின் நிலைகளையும் ஆரோக்கியமாக எதிர்கொள்வதற்கு தான் தான் அவற்றின் தன்மையினை உணர்ந்து, அவற்றின் விளைவாக உருவாகும் நன்மை, தீமைகளைப்பிரித்துணர்ந்து நடைபயின்றிட வேண்டும். இந்தக் காரணத்தினால்தான் தன்னைக் காலம் ஒரு போரடிக்கும் கருவியாகப் பாவிக்கின்றது என்கின்றார் கவிஞர். காலமானது மானுடரைப்போரடிக்கும் கருவிகளாக வைத்து, இருப்புப் பயிர் விளைச்சலை எதிர்கொள்கின்றது என்பதுதான் கவிஞரின் எண்ணமாக இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. இங்கும் போரடிக்கும் கருவு ஒரு படிமம். காலத்தின் கைகளில் இயங்கும் மானுடர் பற்றிய வித்தியாசமானதொரு படிமம்.

காலம் , வெளி எல்லாமே சார்ப்பானது என்றார் ஐன்ஸ்டைன் தனது புகழ்பெற்ற சார்பியல் கோட்பாடுகளில்.  தமிழினியின் 'உத்தரிக்கும் இரவு' கவிதையும் காலத்தின் சார்புத்தன்மையினை இன்னுமோர் கோணத்தில் வெளிப்படுத்துகிறது. ஆறுதலாக, ஆடி, ஆடி நகர்ந்து செல்லும் சரக்கு ரயிலாக நீண்டு செல்கிறது இரவு. இரவினை ஆடி, ஆடி, ஊர்ந்து செல்லும் சரக்கு ரயிலாகக் கவிஞர் உணருகின்றார். நல்லதொரு படிமம்.

"கடைசிக் கையிருப்பும்
முடிந்து போன
அந்தரிப்பில்
மூட மறுக்கின்றன
உறக்கமற்ற விழிகள்"

தூங்க முடியாமல் உறக்கமற்றுத்தவிக்கின்றன விழிகள். ஏன்? கடைசிக் கையிருப்பும் முடிந்து போன அந்தரிப்பில் உறக்கமற்றுத் தவிக்கின்றன விழிகள். முடிந்து போன கடைசிக் கையிருப்பாக , முடிந்து போன ஆயுதப்போரினையும் ஒரு விதத்தில் கருதலாம் தானே. எல்லாமே முடிவுற்ற நிலையிலும், ஒரு வித நப்பாசையில் தீர்ந்து போன சக்கரை டப்பாவைப் பிறாண்டுவதுபோல், இன்னும் மீதமிருக்கும் கனவுகளை பிறாண்டுகிறது தவித்த மனது. இவ்விதமான இறந்த கால நினைவுகள் புழுக்களாக மூளையினைத்தின்னுகின்றன, இவ்விதமான தூக்கமற்ற இரவுகளைக்கடப்பதே பெரும் பாடாகவிருக்கிறது கவிஞருக்கு. இவ்விதமான நினைவுகளால் ஓரிரவைக் கடப்பது கூட, ஒரு மாமாங்கத்தினைக் கடப்பதுபோல் வலிக்கிறது.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான பின்னர் முன்னாள் போராளிகள் பலரின் மனநிலையும் இவ்விதமாகத்தானிருக்கும்.

இன்னுமொரு தமிழினியின் கவிதையினையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகவிருக்குமென எண்ணுகின்றேன். அதனை அவர் கவிதையாக எழுதியிருக்கவில்லை. அவரது 'மழைக்கால இரவு' என்னும் சிறுகதையில் அவர் பாவித்திருந்த கவித்தும் மிக்க வரிகளைத்தனியாகப்பிரித்தெடுத்து 'யுத்தம்' என்பதை விபரிக்கும் நல்லதொரு கவிதையாக அவ்வரிகள் விளங்குகின்றன என்று 'பதிவுகள்' இணைய இதழில் எழுதியிருந்தேன். அதனை அவர் தனது முகநூலில் குறிப்பிட்டு "‘மழைக்கால இரவு’ என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதையிலிருந்து அர்த்தம்பொதிந்த அருமையான கவிதையொன்றினை கிரிதரன் நவரத்னம் யாத்திருக்கிறார்." என்று எழுதியிருந்தார். அந்த வகையில் அதனையும் தமிழினியின் நல்லதொரு 'யுத்தம்' பற்றிய கவிதையாக நான் காணுகின்றேன்.

இந்தச்சிறுகதையின் இறுதியில் வரும் வரிகள் அழகானதொரு கவிதையாக அமைந்திருக்கின்றன. 'பசியடங்காத பூதம்' போல் மீண்டும் பயங்கரமாக வாயைப்பிளந்து கொண்டது யுத்தம். உவமையில் வெளிப்படும் நல்லதொரு படிமம் இது. எவ்வளவு பேரைக்கொன்றொழித்தும் யுத்தமென்ற பூதத்தின் பசி அடங்கவில்லை. கண் முன்னால் நிணமும், குருதியும் கடை வாயில் ஒழுகக்காட்சிதரும் பூதமாக யுத்தம் விசுவரூபமெடுத்து நிற்கிறது.

கரு மேகங்கள் சூழ்ந்த வானம்
இருள்மூடிக் கிடந்தது.
நசநச வென்று வெறுக்கும்படியாக
மழை பெய்து கொண்டேயிருந்தது,
இடை வெளியில்லாமல் காது கிழியும்படி
பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன.
நிணமும் குருதியும் கடைவாயில்
வழிய வழிய
பசியடங்காத பூதம்போல மீண்டும்
பயங்கரமாக வாயைப்
பிளந்து கொண்டது
யுத்தம்.

மேலுள்ள வரிகளுடன் சிறுகதையின் மேலும் சிறுகதையின் சில வரிகளையும் சேர்த்து விட்டால் யுத்தம் என்றொரு முழுமையான கவிதை கிடைக்கின்றது.

யுத்தம்!

போரில் ஈடுபட்டு மரித்துப்
போன
இராணுவத்தினரதும், போராளிகளினதும்
சடலங்கள் ஒன்றன் மேலொன்றாக புரண்டு
கிடந்ததை என் கண்களால் கண்டேன்.
பகைமை, விரோதம், கொலைவெறி
இவைகளெதுவுமே
அப்போது அந்த முகங்களில்
தென்படவில்லை.
உயிர் போகும் தருணத்தின்
கடைசி வலி மட்டும்
அந்த முகங்களில் எஞ்சியிருந்தது
கரு மேகங்கள் சூழ்ந்த வானம்
இருள்மூடிக் கிடந்தது.
நசநச வென்று வெறுக்கும்படியாக
மழை பெய்து கொண்டேயிருந்தது,
இடை வெளியில்லாமல் காது கிழியும்படி
பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன.
நிணமும் குருதியும் கடைவாயில்
வழிய வழிய
பசியடங்காத பூதம்போல மீண்டும்
பயங்கரமாக வாயைப்
பிளந்து கொண்டது
யுத்தம்.

இக்கவிதை யுத்தத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் அதே சமயத்தில் கவிஞரின் மானுட நேயத்தினையும் வெளிப்படுத்துகிறது.  போரில் மரித்துப்போன இராணுவத்தினரின், போராளிகளின் சடலங்கள் ஒன்றின் மேலொன்றாகப் புரண்டு கிடப்பதைக்கவிஞர் பார்க்கின்றார். அச்சமயம் அவருக்கு பகைமை, விரோதம், கொலைவெறி இவைகளெதனையுமே அப்போது அம்முகங்களில் காண முடியவில்லை. உயிர் போகும் தருணத்தின்
கடைசி வலியினை மட்டுமே அம்முகங்களில் காண முடிகிறது. சிறிது நேரத்துக்கு முன்பு ஒருவருக்கொருவர் பகைமை உணர்வுடன் மோதி உயிர் விட்டவர்கள் அவர்கள். ஆனால் மடிந்த அவர்தம் முகங்களில் அவை எவற்றையுமே காண முடியவில்லை. இவ்விதம் கூறுவதற்குக் கவிஞரைத்தூண்டிய மானுட நேயம் சிறப்புக்குரியது.

இவ்விதமாகத் தமிழினியின் கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தவிர்க்க முடியாதவை. தமிழினியின் போராட்ட அனுபவங்களை, ஆழ்ந்த வாசிப்பினை, ஆழமான சிந்தனையினை வெளிப்படுத்தும் கவிதைகளின் முக்கியமான இன்னுமொரு சிறப்பு: அவரோ ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். அத்துடன் இராணுவத்தாக்குதல்களிலும் பங்கு பற்றியவர். இருந்தும் அவரது கவிதைகள் பிரச்சார வாடையற்று சிறந்து விளங்குகின்றன. யுத்த களத்து நிலைமைகளை விபரிக்கையில், சக போராளிகளின் உளவியலை, போர்ச்செயற்பாடுகளை விபரிக்கையில், பொருத்தமான படிமங்களுடன், சிறப்பான மொழியுடன் அவற்றைப் பிரச்சார வாடையெதுவுமற்று விபரித்திருக்கின்றார். இதனால்தான் அவரது கவிதைகள் இலக்கியச்சிறப்பு மிக்கவையாக விளங்குகின்றன

3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?

- இன்று , நவம்பர் 13, 2016, டொராண்டோவில் தமிழர் வகைதுறைவள நிலைய ஆதரவில் நடைபெற்ற தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் வெளியீடு மற்றும் கலந்துரையாடலில் நான் ஆற்றிய உரையின் முழு வடிவம். - வ.ந.கி ]

தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' சுயசரிதை பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பினாலும், தமிழர் இலக்கிய உலகில் முக்கியமானதொரு நூலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இதனது சிங்கள மொழிபெயர்ப்பும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.

தமிழினியின் சுய விமர்சனம் பற்றிக்குறிப்பிடுகையில் தேசம் ஜெயபாலன் 'இது கூர்வாளல்ல. மொட்டை வாள்' என்று குறிப்பிட்டிருப்பார். அண்மையில் தமிழினியின் கணவர்ஜெயக்குமரனுடனான நேர்காணலொன்றில்தான் இவ்விதம் குறிப்பிட்டிருக்கின்றார். மேலோட்டமாகப் பார்த்தால் தமிழினியின் இயக்கம் பற்றிய விமர்சனங்கள் காரமாக இல்லாதிருப்பதுபோல் தென்பட்டாலும், சிறிது ஊன்றிக்கவனித்தால் மிகவும் கடுமையான விமர்சனங்கள் அவை என்பது தெரியவரும். ஆனால் அவர் முட்டி மோதிக்கொண்டு மோதும் விமர்சனத்தை இங்கு வைக்கவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவரைத் தனிப்பட்டரீதியில் விமர்சிக்கவில்லை. அதனால் ஜெயபாலன் அவ்விதம் நினைத்திருக்கக்கூடும். ஆனால் தமிழினி விமர்சனத்தை முன் வைக்கும்போது கோட்பாட்டு ரீதியில் முன் வைக்கின்றார். விடுதலைப்புலிகள் என்னும் அமைப்பு பின்பற்றிய கொள்கைகள் அடிப்படையில் அவற்றை விமர்சிக்கின்றார். அந்த அமைப்பில் போராடி, இறுதியில் நிராதரவாகக் கைவிடப்பட்டு, இராணுவத்திடம் சரணடைந்து,  சிறைவாழ்க்கை, தடுப்புமுகாம் வாழ்க்கை, புனர்வாழ்வு என்று பல படிகளினூடு சென்று மீண்டும் சமூகத்திற்குள் வருகின்றார். அவ்விதம் வந்தவரைச் சமூகம் எதிர்கொண்ட முறை அதிர்ச்சியூட்டுகின்றது. இந்நிலையில்  அவரது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் தமிழினி என்னும் முன்னாள் பெண் போராளியொருவருக்கு மனம் திறந்த நிலையில் நடந்தவற்றை ஆராய்ந்து முடிவுக்கு வருவதற்குப் பூரண உரிமையுண்டு. அவரது கருத்துகளை ஏற்கலாம். ஏற்காமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு அவர் தான் நினைத்தவாறு கருத்துகள் கூற உரிமையுள்ளது என்பதை ஏற்கவேண்டும்.

இச்சுயசரிதையில் தான் ஏன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையின் கீழ் ஆயுதம் தாங்கிப்போராடப்புறப்பட்டேன் என்பதிலிருந்து , 2009இல் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், அதன் பின்னரான அவரது தடுப்புமுகாம் அனுபவங்களின் பின்னர், சிறை வாழ்வின் பின்னர் அவர் தன் கடந்த கால வாழ்க்கையினை மீளாய்வு செய்தது வரை தோன்றிய உணர்வுகளை அவர் விபரித்திருக்கின்றார். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது இச்சுயசரிதை. அதே சமயம் தமிழினியின் எழுத்தாற்றல் இப்பிரதியை இலக்கியச்சிறப்புமிக்கதொரு பிரதியாகவும் உருமாற்றியிருக்கின்றது.

சுருக்கமாகக் கூறுவதானால் இந்நூலைப் பலவேறு கோணங்களில் வாசகர் ஒருவர் அணுகலாம்.

1. ஒரு நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் சூழல் காரணமாக ஒரு போராளி ஏன் உருவாகின்றார் என்பதற்கான உளவியல் காரணங்களை விபரிப்பதால் இந்நூல் அப்போராளியின் வாக்குமூலமாக முக்கியத்துவம் பெறுகின்றது. ஆரம்பத்தில் கல்வி கற்று சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்த தமிழினியை இராணுவத்தினரின் எறிகணைத்தாக்குதல்கள், இந்தியப்படையினரின் தாக்குதல்கள், போரில் மரணத்தைத்தழுவிக்கொண்ட ஆண், பெண் போராளிகளின் நிலை, ,,இவையெல்லாம் அவரது மனதைப்படிப்படியாக மாற்றுவதை நூல் விபரிக்கின்றது. பாடசாலையில் படிக்கும்போது புலிகளின் மாணவர் அமைப்பில் இணைந்து செயற்படுகின்றார். ஒரு கட்டத்தில் அவர் இவ்விதம் நினைக்கின்றார்:

"ஆண், பெண் வேறுபாடில்லாமல் தினசரி நூற்றுக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் தமதுயிரைக் கொடுத்துக்கொண்டிருந்த சூழ்நிலையில் வெறும் பார்வையாளராக இருப்பது எனது மனதில் பெரும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.  தொடர்ந்தும் படிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகுமென நான் நினைக்கவில்லை.... ஒரு குடும்பத்தில் ஒருவராவது போராடச்சென்றால்தான் அடுத்த சகோதரர்களாவது நிம்மதியாக வாழ முடியும் என நம்பத் தொடங்கினேன்." (பக்கம் 31)

இவ்விதமாக மாணவியொருத்தி எவ்விதம் ஆயுதம் தாங்கிய பெண் போராளியாகப் பரிணாமம் அடைகின்றார் என்பதை விளக்குமொரு வாக்குமூலமாக இந்நூலினைக் குறிப்பிடலாம்.

2. தமிழினி என்னும் தமிழீழ விடுதலைப்புலி அமைப்பைச்சேர்ந்த போராளியொருவரின் சுயசரிதை என்பதால் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நூலில் தமிழினி தன் குடும்பம், பள்ளி வாழ்க்கை, தான் பிறந்த நகரம் எவ்விதம் போர்ச்சூழல் மிக்க நகராக மாறுகின்றது என்பது பற்றிய விபரங்கள், தன் இயக்க வாழ்க்கை, இயக்கத்தில் தனது அரசியல் மற்றும் ஆயுதப்போராளியாக செயற்பட்டமை  பற்றிய விபரங்கள், வெற்றிகரமான விடுதலைப்புலிகளின் போர்களில் ஈடுபட்ட தனது வரலாறு, யுத்தத்தின் இறுதிக்காலத்தில் இயக்கத்தின் நிலை, மக்களின் நிலை, தனது அனுபவங்கள் எனப் பல்விதமான அனுபவங்கள், யுத்தத்தின் பின்னரான தடுப்பு முகாம், மற்றும் புனர்வாழ்வு முகாம் ஆகியவற்றில் அவரது அனுபவங்கள் என தன் வாழ்வின் முக்கிய விடயங்கள் அனைத்தையும் விபரித்திருக்கின்றார். அதிக பக்கங்களை உடைய பெரிய நூல் என்றில்லாவிட்டாலும், அத்தியாயம் ஒவ்வொன்றுமே விரிவான தகவல்களை உள்ளடக்கியுள்ளன. அவசரப்பட்டுச் சுருக்கமாக விடயங்கள் விபரிக்கப்படவில்லை. அந்த வகையில் கட்டுக்கோப்பானதொரு சுயசரிதையாக இந்நூல் விளங்குகின்றது. அந்த வகையிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

3. விடுதலைப்புலிகளின் முக்கிமான உறுப்பினராக இருந்தவர் தமிழினி. அந்த வகையில் அவர் தன் இயக்க அனுபவங்களை விமர்சனத்துக்குள்ளாகியிருக்கின்றார். அது முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவே இந்நூலின் முக்கியமான சிறப்புக்குக் காரணம். இவ்வளவு விரிவாக விடுதலைப்புலி அமைப்பைச்சேர்ந்த முக்கியமான தலைவர்கள் வேறு யாரும் தம் இயக்கத்தைப்பற்றிச் சுய விமர்சனம் செய்ததில்லை. பலர் எழுதியிருக்கின்றார்கள். அவையெல்லாம் இயக்கத்தின் வீரவரலாற்றைக்கூறும் பிரச்சாரங்கள். அல்லது சுய விமர்சனம் தவிர்ந்த இயக்கத்தின் வெற்றியை மட்டுமே முன்னிலைப்படுத்தும் படைப்புகள்.

இந்நூலில் புலிகள் அமைப்பு பற்றித் தமிழினி வைத்துள்ள சுய விமர்சனத்தில் முக்கியமானவையாக நான் கருதுவது:

A அமைப்பு முழுவதும் தலைமையை மையமாக வைத்துக் கட்டமைக்கப்பட்டுள்ளதை அவர் கேள்விக்குட்படுத்துகின்றார். ஆரம்பத்தில் ஏனைய இயக்கப் போராளிகளைப்போல் அவரும் ஒரு தலைமை என்னும் அடிப்படையில்தான் இயங்குகின்றார். ஆனால் அதுவே பின்னர் பேரழிவுகளுக்குக் காரணமாக விளங்கும்போது அவரால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அரசியற்துறைச்செயலாளராக விளங்கிய தமிழ்ச்செல்வன் இறுதி வரையில் தலைவர் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார் என்னும் நம்பிக்கையுடன் இருந்ததை தமிழினி நினைவு கூர்கின்றார். பொட்டம்மான் கூட இறுதி யுத்தக்காலத்தில் கூடத் தலைவர் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார் என்றுதான் போராளிகளுக்குக் கூறுகின்றார்.

எல்லாம் தலைவரே என்பது பற்றிக்குறிப்பிடுகையில் 'எத்தனையோ நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து ஒரு போராட்டத்தை முப்பது வருடத்திற்கும் மேலாக பெரும் படைபலத்துடன் கட்டி வளர்த்தவர் என்ற பிரமிப்போடுதான் என்னைப்போன்ற பல்லாயிரக்கணக்கான போராளிகளும், மக்களும் தலைவரைப் பார்த்தோம்......  தலைவர் எடுத்த முடிவுகள் பல சந்தர்ப்பங்களில் விமர்சனத்துக்குள்ளாகும் போதும், அவர் மக்களின் நலனுக்காகவும் , நாட்டின் விடுதலைக்காகவும்தான் இப்படியான முடிவுகளை எடுக்கிறார் எனவும், தலைவர்  ஒரு முடிவு எடுத்தால் அதில் நிச்சயமாக  ஒரு நியாயம் இருக்கும் எனவும் ஒவ்வொரு போராளியும் எவ்வித ஐயப்பாடுமின்றி நம்பினோம்.. தலைவர்  எடுக்கும் முடிவுகளை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ தெய்வக்குற்றம் இழைப்பதற்குச் சமமானதாக இயக்கத்தினுள்ளே கருதப்பட்டது. இந்தப்போக்கின் வளர்ச்சியே இயக்கத்தின் உள்ளேயான விவாதத்தையும் விமர்சனத்தையும் இல்லாதொழித்து அதன் மிக அவலகரமான முடிவுக்கும் வழி வகுத்தது.  எல்லாம் அவர்தான் எனக்கொண்டாடியது மட்டுமில்லாமல் இறுதித்தோல்விக்கும் அவரே காரணம் என்ற குற்றத்தையும் வரலாறு அவர் மீது சுமத்தி நிற்க வேண்டியதாயிற்று..' (பக்கம்  164)

இது பற்றி இன்னுமோரிடத்தில் 'எத்தனையோ இலட்சம் பேருடைய இரத்தமும் கண்ணீரும் இயக்கத்தினுடைய வளர்ச்சிக்கு நீர் பாய்ச்சியிருக்கிறது. அப்படியிருக்கையில் விடுதலைப்புலிகள் இயக்கமும், தமிழ் மக்களுக்கான ஆயுதப்போராட்டமும் தனியொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நின்றதும், அவருடைய விருப்பு வெறுப்புகளுக்கேற்ற தீர்மானங்களின்படியே வழிநடத்தப்பட்டதும் எத்தகைய மோசமான இன அழிவை ஏற்படுத்தியிருந்தது' (பக்கம் 206) என்று கடுமையாகச் சாடியிருப்பார்.

இவ்விதமான அவரது சாடல்களெல்லாம் தனிப்பட்ட மனிதர் மீதான சாடல்களல்ல. தான் சார்ந்த அமைப்பு மீதான, அதன் கட்டமைப்பு மீதான சாடல்களே.

இயக்கத்தின் உச்சக்கட்ட காலகட்டத்தில் 'இயக்கத்தின் நடவடிக்கைகளிலும், தீர்மானங்களிலும் இருந்த சரி பிழைகளை இனங்கண்டு கொள்ளவோ அல்லது அவற்றைச் சீர்துக்கிப் பார்த்து எமது நிலைப்பாடுகளை மாற்றியமைப்பதோ இயக்கத்துக்குள் கற்பனையிலும் நடக்க முடியாத ஒரு காரியமாக இருந்தது. 'மேலும்  கள முனையில்  நாளாந்தம் எந்தக் கேள்விகளும் கேட்காது  எமது சக போராளிகள் தமதுயிரை அர்ப்பணித்துக்கொண்டிருந்தார்கள்.  அந்தத்தியாகங்களுக்கு  முன்னால்  வேறு எதுவுமே  எழுந்து நிற்க முடியாதிருந்தது.  வீரமரணம் அடையும் வரை விடுதலை இயக்கத்தின் விசுவாசமிக்க போராளியாகக் கடமையாற்ற வேண்டும் என்ப்தைத்தவிர  எனது சிந்தனைகளில் வேறு எதுவுமே தென்படவில்லை' (பக்கம் 53 & 54) என்று தமிழினி கூறுவது அக்காலகட்ட  யதார்த்த நிலையினை வெளிப்படுத்தும்.

B முகாம் செயற்பாடுகளை அவர் கேள்விக்குட்படுத்துகின்றார். இயக்கம் பற்றிய சுய விமர்சனங்களில் ஒன்று சில பயிற்சி முகாம்களில் நடைபெற்ற அத்துமீறல்கள் பற்றிக்குறிப்பிட்டிருக்கின்றார். இவரது நெருங்கிய தோழியான சாம்பவி தனது பயிற்சி முகாம் அனுபவங்களைக் கூறியிருக்கின்றார். அதுபற்றிக்குறிப்பிடும் தமிழினி

"குறுகிய மனப்பாங்கும் , வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும், அதிகாரமும் போய்ச்சேரும்போது எத்தகைய அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப்பயிற்சி முகாமின் ஒரு சில ஆசிரியர்கள் உதாரணமாக இருந்தனர். அரசியல் போராளிகளாகப் பணியாற்றிய பின்னர் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக வந்தார்கள் என்ற காரணத்துக்காக வயது வித்தியாசமின்றி அங்கே கொடூரமான முறையில் பயிற்சி பெறுவோர் நடத்தப்பட்டிருந்தனர். இரத்தக் காயங்கள் ஏற்படுமளவுக்கு அடியுதைகளும், மனதை நோகடிக்கும் குரூரமான  வார்த்தைகளும்  , தனிப்பட்ட பழிவாங்கல்களும் என அந்த மகளிர் பயிற்சி முகாமில் அரங்கேறிய  சம்பவங்கள் ஒட்டுமொத்தமான பெண் போராளிகளுக்கும் மிகத்தவறான முன்னுதாரணங்களாக இருந்தன" (பக்கம்  58 & 59)

ஆனால் எவ்வகையான சித்திரவதைகள் அவை எனத் தமிழினி நூலில் விரிவாக எடுத்துரைக்கவிலை.

C. முஸ்லீம் மக்களைக்கட்டாயமாக வெளியேற்றியது பற்றித் தமிழினி இவ்விதம் கூறுகின்றார்:

'மிகவும் சராசரியான வாழ்க்கைத்தரத்தைக்கொண்டிருந்த அந்த மக்களைச்சந்தித்தபொழுது  என் மனதில் மிகுந்த குற்றவுணர்ச்சி ஏற்பட்டது.  அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட  எமது இயக்கம்  இந்த அப்பாவி மக்களின் வாழ்வுரிமையை அடக்குமுறைக்குள்ளாக்கியதன்  நியாயத்தை எனது இதயத்தால் ஏற்றுக்கொள்ல முடியாமலிருந்தது.' (பக்கம்  66)

D. 1996இல் இராணுவத்தினர் வடமராட்சியைக் கைப்பற்றி வலிகாமத்தை முழுமையாகக் கைப்பற்றும் நடவடிக்கையை மேற்கொண்டபோது இயக்கத்தின் கட்டளைக்கேற்ப   அனைத்து மக்களும் வன்னி நோக்கி இடம்பெயர்ந்ததைப் பற்றிக் கூறும்போது 'சில மணி நேரத்திற்குள்  ஏறக்குறைய ஐந்து இலட்சம் மக்கள் நாவற்குழி பாலத்தைக் கடந்த நிகழ்வை எப்படிப் பதிவு செய்தாலும்  புரிய வைக்க முடியாத மனித அவலம் என்றே கூறவேண்டும்.' என்று கூறியிருப்பார்.

E கிழக்கு மாகாணத்தளபதியான கருணா அம்மானின் பிரிவினைத்தொடர்ந்து  இயக்கத்திற்குள் நடந்த சகோதர யுத்தத்தைப்பற்றிக்குறிப்பிடுகையில் தமிழினி 'கிழக்கு மாகாணப்போராளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் என்ற பெயரில் இயக்கத்திற்குள் அனைவரும் வெறுக்கத்தக்க ஒரு கொடூரமான சகோதர யுத்தம் முன்னெடுக்கப்பட்டது.  பல வருட காலமாக என்னுடன் பழகிய பல போராளிகள் இரு தரப்பிலும் உயிரிழந்து போயிருந்தனர்.' (பக்கம் 162) என்று கூறுவார்.

F. இயக்கத்தின் இன்னுமொரு விடயத்தையும் தமிழினி விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார் இந்நூலில். அது இயக்கத்தின் கட்டாய ஆட்சேர்ப்பு. 'இயக்கத்திற்கும் மக்களுக்குமிடையே அதிக முரண்பாடுகளை ஏற்படுத்திய இன்னொரு விடயம் இயக்கத்திற்கான கட்டாய ஆட்சேர்ப்பு' என்பார் அவர். (பக்கம்  166) சமாதானக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் ஆட்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகச் செயற்படுத்தப்பட்ட 'கட்டாய ஆட்சேர்ப்பு' போராளிகளுக்கிடையிலும் விமர்சனங்களை, முரண்பாடுகளை ஏற்படுத்தியதாகவும் தமிழினி குறிப்பிடுகின்றார் (பக்கம் 180). அத்துடன் 'தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத்தவறான முடிவுகளில் முக்கியமானது கட்டாய ஆட்சேர்ப்பு என்பது என் நிலைப்பாடு. இந்தக் காரியத்தில் சூழ்நிலைக் கைதிகளாகப் பல போராளிகளும் , பொறுப்பாளர்களும் மன விருப்பின்றியே செயற்பட்டுக்கொண்டிருந்தனர்' (பக்கம்  181)என்றும் தமிழினி கூறுவார். இந்த விடயத்தில் இவரது முரண்பட்ட நிலை காரணமாக அரசியல் துறை மகளிர் பொறுப்பாளராக இன்னொரு பெண் போராளி நியமிக்கப்பட்டதாகவும் தனது நூலில் தமிழினி குறிப்பிடுகின்றார்.

G. விடுதலைப்புலிகள் அமைப்பு அது பெற்ற வெற்றிகளின் காரணமாகத்தன்னை ஓர் அரச இயந்திரமாக விசாலித்துக்கொண்டது அதன் வளர்ச்சியைத் தடைசெய்ததாகவும் தமிழினி கருதுவதை நூலின் வாயிலாக அறிய முடிகின்றது. 'ஓர் அரச இயந்திரம்போல் தன்னை விசாலித்துக்கொண்டதனால் இயக்கத்தின் கூடுதலான மூளைப்பலம் நிர்வாகச்சிக்கலில் வீணே சிதறடிக்கப்பட்டது....... பல திறமையான போராளிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு நிர்வாகச்சிக்கல்களில் தமது நேரத்தையும் திறமையையும் வீணடித்துக்கொண்டிருந்தனர்'(பக்கம் 182) என்று கூறுவது அதனையே புலப்படுத்துகின்றது.

H இராணுவரீதியில் சாதனைகளைப் படைத்த இயக்கத்தால் சமாதான காலகட்டத்தில் அரசியல்ரீதியில் வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை என்பதும் தமிழினியின் நிலைப்பாடு. அதுபற்றி அவர் 'யுத்தகளத்தில் பல வெற்றிகளைக் குவித்த தலைவர் சமாதானச் சூழ்நிலையில் அரசியல் ராஜதந்திர நுணுக்கங்களைத் துணிச்சலுடன் பயன்படுத்தித் தமிழர்களுக்கு உறுதியான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளும் நிலைய நோக்கி முன்னேற முடியாமல் திணறினார்' என்பார் (பக்கம் 168).

'ஆயிரமாயிரம் உயிர்களின் அர்ப்பணிப்பு வீண்போகாதபடி கனிந்து வந்த அரசியல் சூழ்நிலைகளைத் தலைவர் பயன்படுத்தி மக்களுக்கு ஒரு நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவார் என அனைத்துப்போராளிகளையும் போல் நானும் உறுதியாக நம்பினேன்.  இறுதிப் போருக்கான முடிவைத் தலைமை எடுத்தபோது , எனது சிறிதான அறிவுக்கெட்டிய வகையில் அது ஒரு சரியான முடிவாகப்படவேயில்லை.' (பக்கம் 218)

நூலின் முன்னுரையில் அவர் இவ்விதம் கூறுவார்: "போராட்டத்தை முழுவதுமாக தன்னகப்படுத்திக்கொண்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். போராட்டத்தின் இறுதி இருபது வருடங்கள் நானும் ஒரு சாட்சியாகப் போருக்குள்ளே வாழ்ந்திருக்கிறேன்.  போராளிகளான நாங்கள் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றத்தவறி விட்டோம்.  கையிலெடுத்த ஆயுதங்களைக் பாதுகாத்துக்கொள்வதற்காக எமது அரசியல் இலட்சியத்தைத் தோற்கடித்து விட்டோம்." (பக்கம் 7)

அதே நேரம் மக்களுக்கும் புலிகளின் போரியல் வெற்றிகளில் இருந்த நம்பிக்கை அவர்களது அரசியலில் இருக்கவில்லை என்பதும் தமிழினியின் நிலைப்பாடு. 'புலிகளின் போரியல் வெற்றிகளில் மக்களுக்கிருந்த  பிரமிப்பான நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் தூர நோக்குடனான புலிகளின் அரசியல் செயற்பாடுகளில்  எப்போதுமே இருந்ததில்லை. (பக்கம் 15)

I. நூலில் தமிழினி பெண் விடுதலை பற்றிய அவரது சுய விமர்சனமும் முக்கியமானது. பின்வரும் அவரது கூற்றுகள் நியாயமான கூற்றுகள்.

* :" எனது பாடசாலைக் காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தனிப்பெரும் விடுதலை இயக்கமாகப் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தது. மகளிர் படையணிகள் கள முனைகளில் வீர, தீரச் சாதனைகளையும் , உயிர் அர்ப்பணிப்புகளையும் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். நான் இயக்கத்தில் இணைந்து கொண்டமைக்குப் பொதுவான போராட்டச்சூழ்நிலைகளே காரணமாக இருந்த போதிலும், ஒரு பெண் என்ற நிலையில் எனது குடும்பத்தினதும், என்னைச்சூழ்ந்திருந்த சமூகத்தினதும், பெண் சார்ந்த கருத்து நிலையை உடைத்து ஒரு புரட்சி செய்யக்கூடிய சந்தர்ப்பமாகவும் அதைக்கருதினேன். நான் இயக்கத்தில் இணைந்த பள்ளிப்பருவத்தில் ஒரு வேகமும், துடிப்பும் என்னிடம் இருந்ததே தவிர , அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் நிலைமைகள் மற்றும் சமூகம் பற்றிய எவ்விதமான புரிதலும் எனக்கிருக்கவில்லை." ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 73)

*  "பெண்கள்  ஆயுதப்பயிற்சி பெற்றபோது, அவர்களால் தமது உடல் வலிமையை நிரூபிக்கக்கூடியதாக இருந்த போதிலும், அவர்களுடைய அடிப்படைச்சிந்தனைகளில் எந்தளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருந்தது என்பது கேள்விக்குரியதாயிருந்தது.   குடும்பம் என்ற அமைப்புக்குள்ளிருந்து  வெளியே வந்து, இயக்கம் என்ற அமைப்பிற்குள் புகுந்து கொண்ட  புலிப்பெண்கள் அனைவருமே புரட்சிகரமான  புதிய சிந்தனை மாற்றத்திற்கு உட்பட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. எவ்வாறு  ஒரு கட்டுக்கோப்பான குடும்பப்பெண்ணாக  வீட்டில் வளர்க்கப்பட்டோமோ, அதேபோலக் கடினமான இராணுவப்பயிற்சிகளைப்பெற்ற, கட்டுக்கோப்பான மகளிர் படையணிப்போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம். " ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 75 & 76)

*  "பெண்களிடையே சுதந்திரமான ஒரு மனோபாவத்தை வளர்ப்பதற்குரிய தீர்க்கமான கொள்கைத்திட்டங்கள் எவையும் எங்களிடமிருக்கவில்லை.  பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்து ஆயுதமேந்துவதன் மூலம், சமூகத்தையே நாம் மாற்றி விடலாம் எனக்கனவு கண்டோம். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், பெண் போராளிகள் ஆயுதமேந்திப் போராடியதால், போர்க்களத்தின் பல வெற்றிகளுக்குக் காரணகர்த்தாக்களாக இருக்க முடிந்ததே தவிர, சமூகத்தில் பெண்கள் சார்ந்த கருத்தமைவில் எவ்விதமான மாற்றங்களையும் எங்களால் ஏற்படுத்திவிட முடியவில்லை. தமிழ் சமூகத்தில் பெண்களின் விடுதலைக்கான பாய்ச்சல் வளர்ச்சியானது ஆயுதப் பெண்களின் பிம்பமாகவே தொடங்கி ஆயுதப் போராட்டத்தின் தோல்வியுடனே அது முடிந்தும் போனது." ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 76)

* "பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுப்பதன் மூலமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்று  கருத்துகளை நான் கூறியிருக்கிறேன். ஆனாலும், ஆயுதப்போராட்டத்தோடு சமாந்தரமான நிலையில் சமூக மாற்றத்திற்கான வேலைத்திட்டங்களும்முன்னெடுக்கப்பட்டன என்று கூறுவதற்கில்லை." (('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 77)

* "அரசியல்துறை மகளிர் பிரிவினுடைய பணிகளாக சமூகத்தில் பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்களின் வாழ்கைத்தரத்தை மேம்படுத்துவதும், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை இனங்கண்டு அவர்களுக்கான புனர்வாழ்வளிப்பதும், இன்னும் பரந்துபட்ட ரீதியில் சமூக மாற்றத்துக்காக உழைப்பதும், என்பனவாகவே இருந்தன. இதன் அடிப்படையில்தான் அரசியல் மகளிர் பிரிவின் வேலைத்திட்ட அலகுகளும் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் நடைமுறையில் சாத்தியமானது என்னவோ இயக்கத்திற்கு புதிய போராளிகளை இணைப்பதும், பெண்களுக்கென குறிப்பிட்ட சில வேலைகளை மாத்திரம் செய்ய முடிந்ததுமேயாகும். ஏனெனில் இயக்கத்தின் முழுக்கவனமும் ,  மொத்த வளங்களும் யுத்தத்தில் ஈட்டப்பட வேண்டிய வெற்றியை நோக்கியே திருப்பபட்டிருந்தன்" ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 77)

4. இந்த நூலில் பெண்கள் பற்றிய சமூகம் மீதான விமர்சனத்தையும் மிகவும் காத்திரமாக வைத்திருக்கின்றார். 'அந்த அர்ப்பணிப்பின் அனுகூலங்களை அனுபவிக்கச் சித்தமாயிருக்கும் சமூகம் அவளின் போராட்டத்திற்குப் பின்னரான வாழ்வை கொச்சைப்படுத்தியே பார்க்கிறது. பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் உடல்களை விளம்பரப்படுத்தி, அரசியல் பிழைப்பு நடத்துகிறது.  போராடத்தில் பங்குபற்றி, உயிர் மீண்ட பெண்கள் அனைவருமே மானமிழந்து போய்த்தான் வந்திருக்கிறார்கள் என்ற கருத்துகளைப் பரப்புவது எத்தனை மோசமான இழிசெயல்?'

5.  இந்நூலின் இன்னுமொரு முக்கிய சிறப்பு இந்நூல் பல விடயங்களை ஆவணப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப்புலிகளின் அரசியல், போர்ச்செயற்பாடுகளை ஆவணப்படுத்தியிருக்கின்றது. புலிகளின் வன்னிப்போர்கள் பலவற்றை நூல் ஆவணப்படுத்தியிருக்கின்றது. குறிப்பாகப் பூநகரிச்சமரான தவளைப்பாய்ச்சல் பற்றி விரிவாகவே ஆவணப்படுத்தியிருக்கின்றார். முள்ளிவாய்க்காலில் போரின் இறுதிக்காலத்து அனுபவங்களை நூல் ஆவணப்படுத்தியிருக்கின்றது. போரின் பின்னரான தடுப்பு முகாம் , வெலிக்கடைச்சிறை வாழ்வு மற்றும் பூந்தோட்டத்துப் புனர்வாழ்வு வாழ்க்கை ஆகியவற்றை நூல் ஆவணப்படுத்தியிருக்கின்றது.

நூலின் ஆரம்பத்தில் தமிழினி அமைப்பில் சேர்ந்தபொழுது , ஆயுதப்பயிற்சி எடுப்பதற்கு முன்னர்  தான் ஆற்றிய அரசியல் பணிகளைப்பற்றி விரிவாகவே குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு விதத்தில் அவரது இயக்க அரசியல் பணிகள் என்னை ஆச்சரியத்திலாழ்த்தின என்றே கூறுவேன். பொதுவாகப்புலிகள் என்றால் ஆயுதப்பித்துப்பிடித்தவர்கள் என்றே மாற்றுக்கருத்துள்ள அனைவராலும் விமர்சிக்கப்படுபவர்கள். மக்களைப்பற்றி அவர்கள் எண்ணுவதில்லை என்றே விமர்சிக்கப்படுபவர்கள். ஆனால் இந்நூலில் தமிழினி குறிப்பிட்டுள்ள அரசியற் செயற்பாடுகள், அவரது அச்செயற்பாடுகள் பற்றிய சிந்தனைகள், விமர்சனங்கள் எல்லாம் புலிகளின் மக்களுடனான அரசியல் நடவடிக்கைகளை விபரிக்கின்றன.

நூலில் பூநகரி முகாம் மீதான 'தவளைப்பாய்ச்சல்' பற்றி விரிவாகவே விபரிக்கப்பட்டுள்ளது. அதற்காகப் போராளிகள் சுமார் ஒரு வருடமாக எடுத்த பயிற்சி பற்றியெல்லாம் விபரிக்கப்பட்டுள்ளது. பூநகரிச்சமர் பற்றி நூலிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகின்றேன்:

"1993 இறுதிப் பகுதியில் அச்சுவேலிப்பகுதியில் வல்லை வெளியோடு சேர்ந்திருந்த கடல் நீரேரியில் ஒரு மாதிரி இராணுவ தளம் அமைக்கப்பட்டு எமது அணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அது எந்த இராணுவத்தளத்தின் மாதிரி வடிவம் என்பது அபோது தான் எங்களுக்குப் புரிந்தது. நான் முதன் முதலாகப் பங்கெடுத்த தாக்குதல் பூநகரி இராணுவ முகாம் மீதானதாகும்." (பக்கம் 55; இலங்கைப்பதிப்பு)

" இத்தாக்குதல் நடவடிக்கைக்காக  விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு வருடத்திற்கும் மேலான தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்தது.. வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலிருந்து தாக்குதல் பயிற்சி பெற்ற  ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளைக்கொண்ட  தாக்குதலணிகள்  இந்தச் சமரில்  ஈடுபடுத்தப்பட்டன." (பக்கம் 56)

இந்தச் சமருக்குத் 'தவளைப்பாய்ச்சல்' என்று விடுதலைப்புலிகள் பெயர் வைத்திருக்கின்றார்கள். அவ்விதமான பெயரை அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணம் சுவாரசியமானது. அது பற்றித் தமிழினி பின்வருமாறு விபரிப்பார்:

"புலிகளின் தாக்குதல் வரலாற்றிலேயே முதல் தடவையாக ஒரு இராணுவ- கடற்படைக்கூட்டுப் படைத்தளம் மீது நடாத்தப்பட்ட ஈரூடகத் தாக்குதல் இதுவாகும். இதனால் இந்நடவடிக்கைக்கு 'ஒப்பரேசன் தவளை' என இயக்கம் பெயர் சூட்டியிருந்தது." (பக்கம் 56)

தவளையானது நீரிலும், நிலத்திலும் வாழும் வல்லமை மிக்கது. மேற்படி தாக்குதலும் நீரிலும், நிலத்திலுமுள்ள படைகள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல். விடுதலைப்புலிகள் நீரிலும், நிலத்திலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடாத்தும் வல்லமை மிக்கவர்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட பெயர்தான் 'தவளைப்பாய்ச்சல்'.

மேற்படி சமரானது புலிகளின் புலனாய்வுத்துறைப்பொறுப்பாளர்  பொட்டு அம்மானின் மேற்பார்வையில் பயிற்சி கொடுக்கப்பட்டு நடாத்தப்பட்ட சமரென்று நூலில் தமிழினி விபரிப்பார்.

இந்தச்சமரில் ஈடுபட்ட போராளிகள் உணர்வுகளையும் தமிழினி பதிவு செய்திருக்கின்றார்.

"பல போராளிகள் தமது குடும்பத்தவர்களுக்கு தமது இறுதி மடல்களையும் எழுதிக்கொண்டிருந்தனர். எனது நெருங்கிய பல நண்பிகளும் இத்தாக்குதலில் பங்கு பங்கெடுத்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள், நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், உயிர் மீதான உத்தரவாதமின்மை, வெளிப்படுத்தமுடியாத விரக்தி என நிச்சயிக்கப்பட்ட யுத்தமொன்றில்  பங்குபற்றும் போராளிகளின் இறுதிக்கணங்களில் அவர்களுடைய கண்களில் தேங்கியிருக்கும் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிந்த எவராலும் மீண்டுமொரு யுத்தத்தைப்பற்றி பேசவோ அல்லது நினைத்துப்பார்க்கவோ முடியாது." (பக்கம் 57)

இந்த யுத்தத்தில் பெரிய வெற்றிகளை இயக்கம் அடைகின்றது. இயக்க வரலாற்றில் முதல் தடவையாக இராணுவத்தினரின் 'யுத்த டாங்கி' ஒன்று கைப்பற்றப்படுகின்றது. இது பற்றியெல்லாம் விபரிக்கும் நூலில் தமிழினி இச்சமரில் இழந்த தனது தோழிகள் பற்றியும் விபரித்திருக்கின்றார். அவர்களது காதல் போன்ற அந்தரங்க உணர்வுகளை, நெஞ்சினைத்தொடும் வகையில் அவர்களது இழப்பை விபரித்திருப்பார். குறிப்பாக சாம்பவி பற்றிய அவரது விபரிப்பைக் கூறலாம்.

"வயல் வெளிகளுக்கூடாக நானும் சாம்பவியும் தவழ்ந்தபடி முன்னேறிக்கொண்டிருந்தோம். மழை தொடர்ந்து பெய்து கொண்டேயிருந்ததால் வெள்ளம் தேங்கிக் கிடந்தது. தூரத்தே உயரமான நிலை ஒன்றிலிருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த இராணுவத்தின் குறிபார்த்துச்சுடுபவனின் இலக்குத் தவறாத ரவைகள் அந்த வயல்வெளியில் பல போராளிகளின் உயிர்களைக்குடித்துக்கொண்டிருந்தன.  சிறிதாகக் கூடத்தலையை நிமிர்த்திப்பார்க்க முடியாத நிலையில் சேற்று வயல்களுக்கூடாக நாம் தவழ்ந்து கொண்டிருந்தோம்.  எனது பக்கவாட்டில் ஊர்ந்துகொண்டிருந்த சாம்பவியிடமிருந்து  திடீரென 'ஹக்' என வினோதமான சத்தம் கேட்டது.  திரும்பிப்பார்த்தேன்.  அவளது முகம் சேற்றுக்குள் புதைந்துபோய்க்கிடந்தது.  நான் அவளது தலையை நிமிர்த்திப்பார்த்தபோது கடைவாயில் இரத்தம் கசிந்துகொண்டிருந்தது." (பக்கம் 59).

இச்சமரில் பலியாகிய இன்னுமொரு தோழியான தாமரை பற்றியும் நூலில் விபரிக்கப்பட்டுள்ளது.

"'நீ யாரை நினைப்பாய் தாமரை?' அவளின் வழமையான சோக விழிகள் ஒரு தடவை மின்னியது. காய்ந்து போயிருந்த உதடுகளில் மெல்லிய புன்னகை நெளிந்தது. 'நான் விரும்பியிருந்தவரைத்தான் நினைப்பேன்.' அவள் சொன்ன பெயர் எனக்கு ஞாபகமில்லை. ஆனால் அவளுக்குள் ஆழப்புதைந்து கிடந்த காதலின் இரகசியக் காயத்தை அப்போதுதான் எனக்குத் திறந்து காட்டியிருந்தாள். ஏதோ ஒரு யுத்தத்தில் அவளுடைய போராளிக்காதலன் ஏற்கனவே உயிரிழந்திருந்தான்."

இவ்விதமாகப் போராளிகளின் உணர்வுகளைத் தமிழினி இந்நூலில் பதிவு செய்திருக்கின்றார். இவ்விதமான விபரிப்பு, போரொன்றில் நேரடியாகப்பங்குபற்றிய அவரது அனுபவத்தைச் சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கின்றதென்பேன்.

5. மிகவும் புகழ்பெற்ற ஆன்ஃப்ராங்கின் நாட்குறிப்பு என்னும் நூல் யூதச்சிறுமியொருத்தியின் இரண்டாம் உலக மகாயுத்தக்காலத்து அனுபவங்களை விபரிக்கும் சிறப்பு மிக்க ஆவணம் என்பதுடன் அந்நாட் குறிப்பில் அவர் பாவித்துள்ள எழுத்திச்சிறப்பு இலக்கியச்சிறப்பு மிக்கதாக விளங்குவாதல் உலக இலக்கியங்களிலொன்றாக அது கருதப்படுகின்றது. அந்நூலில் அவர் தன் உணர்வுகளை அந்நாட்குறிப்பினைத்தோழியாக்கி அதனுடன் விபரித்திருப்பார். அதுவே அந்நாட்குறிப்பினை இலக்கியச்சிறப்பு மிக்கதாக விளங்குவதற்காக முக்கிய காரணம். அது போன்றே தமிழினியின் இந்நூலும் வெறும் விபரங்களை மட்டுமே தருமொரு நூலல்ல. அவர் தன் உணர்வுகளை தன் வாழ்வின் சம்பவங்களை விபரிக்கையில் வெளிப்படுத்தியிருப்பார். அவரது எழுத்துச்சிறப்பு, சில இடங்களில் வெளிப்படும் கவித்துவமான மொழிச்சிறப்பு ஆகியன காரணமாக இந்நூலானது இலக்கியச்சிறப்பு மிக்கதொரு பிரதியாகவும் விளங்குகின்றது. கவித்துவமான மொழிச்சிறப்பு என்று நான் கூறுவதற்கு முக்கிய காரணம் அவர் பாவித்துள்ள படிமச்சிறப்பு, இயற்கை பற்றிய விபரிப்பு போன்றவைதாம்.

6. இந்நூலின் முக்கியமான இன்னுமொரு சிறப்பாக நான் கருதுவது அவரது எழுத்தில் விரவிக்கிடக்கும் மானுட நேயம்.

பிரச்சாரமற்ற, அனுபவத்தின் வெளிப்பாடாக, மானுட நேயம் மிக்கதாக விளங்கிய அவரது எழுத்து என்னைக் கவர்ந்தது. போர்க்களக்காட்சிகளை அவர் விபரித்திருந்த விதம் நெஞ்சைத்தொடுவதாக, இலக்கியச்சிறப்பு மிக்கதாக விளங்கியது கண்டு மகிழ்ச்சியே ஏற்பட்டது. இந்த யுத்தம் பின்னர் யுத்தம் பற்றிய புரிதல்களையும் தமிழினிக்கு அளிக்கிறது. அது பற்றியும் நூல் விபரிக்கின்றது.

"போர்க்களத்தில்  கண்ட இன்னொரு மறக்க முடியாத காட்சியும் எனது ஆழ்மனதில் பதிந்துபோன சித்திரமாகி விட்டிருந்தது.  இராணுவத்தினரினதும், விடுதலைப்புலிகளினதும் உயிரற்ற உடல்கள் மழைத்தண்ணீரில் ஊறிப்போய், ஆங்காங்கே விறைத்துக்கிடந்தன.  அவர்கள் உடல்களிலிருந்து வடிந்திருந்த சிவப்புக் குருதி மழை நீரில் கரைந்து தண்ணீரோடு கலந்து ஓடிக்கொண்டிருந்தது.  சற்று நேரத்திற்கு முன்புவரை தீராப் பகையுணர்ச்சியோடு எதிரும் புதிருமாக நின்று போரிட்டவர்கள் நிலத்தில் சடலங்களாக சிதறிக்கிடந்த காட்சி ஒரு தாயின் மடியில் உறக்கத்தில் புரண்டு கிடக்கும் குழந்தைகளையே நினைவுபடுத்தியது.  எல்லா வேறுபாடுகளும், முரண்பாடுகளும், பகைமைகளும் அர்த்தமிழந்து போகும் இடமும் போர்க்களம்தான் என்பதை முழுமையாக உணரக்கூடிய அறிவு உண்மையாகவே அப்போது எனக்கிருக்கவில்லை" (பக்கம் 60).

இந்தச் சுய விமர்சனத்தால் அவர் வந்தடையும் முடிவுதானென்ன? இதற்கான விடையினை அவர் நூலின் ஆரம்பத்தில் 'தொடர்ந்து போராடுவேன்' என்னும் குறிப்பில் குறிப்பிடுவார்.

'எனது மாணவப்பருவத்தில் நான் சார்ந்த சமூகத்திற்கு ஏதாவது நன்மையான செயலை ஆற்ற வேண்டுமென்ற பெரு விருப்போடுதான் ஒரு போராளியாக மாறினேன்.  எனது வாழ்வின் இறுதி மூச்சு வரை ஒரு போராளியாகவே இருந்து மக்களுக்கு உதவ விரும்புகின்றேன். ஆயுதம் ஏந்துவதன் மூலமோ அல்லது பழிக்குப் பழி வாங்குதலின் மூலமாகவோ எனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் உலகத்திற்கும் எந்த நன்மைகளையும் நாம் செய்து விட முடியாது என்பதை அனுபவத்தின் பாடங்கள் கற்றுத்தந்து விட்டன. அமைதியும் சமாதானமுமே எந்தவொரு சமூகத்தினதும் வளர்ச்சிக்கான இயல்பான சாத்தியப்பாட்டை உருவாக்கும். அந்த வகையில் எனது இறுதிக்காலம் வரை எனது சமூகத்திலும் நாட்டிலும் மட்டுமல்ல உலகத்தின் அமைதிக்காகவும் சமாதானத்திற்காகவும் எனது போராட்டம் தொடரும்.'

தான் கூறியபடியே அவரது இறுதிவரை போராடியே அவர் மறைந்திருக்கின்றார். அவரது இந்தக் கூர்வாள் கூறும் விடயத்தைப்பொறுத்தவரையில் கூரிய வாள்தான். தேசம் ஜெயபாலன் கூறுவது போல் மொட்டை வாளல்ல ஆனால் யாரையும் காயப்படுத்தாத கூர் வாள். வாசிப்பவர் நெஞ்சங்களைச் சிந்திக்க வைக்கும் கூர்வாள் இது. இதுவரை காலமும் நடைபெற்ற ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தைக் குறிப்பாக விடுதலைப்புலிகளின் சுய விமர்சனம் செய்யும் கூர்வாள். மேலும் தர்க்கச்சிறப்புள்ள விமர்சனங்கள் கூர்மையானவை. இந்நூலின் சுய விமர்சனமும் அத்தகையதே. ஆனால் இந்நூலுக்கு 'ஒரு கூர்வாளின் நிழலில்' என்று பெயர் வைத்ததற்குக் காரணம் இது கூறும் விமர்சனம் கூர்வாளைப்போன்றதால் என்பதல்ல. இந்நூல் விமர்சிப்பது அவர் இணைந்து இயங்கிய மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய இயக்கமொன்றினை. அதனை விமர்சிப்பதால் அது கூர்வாளின் நிழலிலிருந்து செய்யும் விமர்சனம் என்னும் அர்த்தத்தைத்தருமென்பதாக இருக்கக் கூடும். அல்லது இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டு தான் சார்ந்திருந்த இயக்கத்தையும், இலங்கை அரசின் அடக்குமுறைகளையும் விமர்சிக்கின்றார். அவ்விதம் கடுமையான சட்டங்களைப்பிரயோகிக்கத்தயங்காத இலங்கை அரசின் அதிகாரத்தின் கீழிருந்துகொண்டு அதனை விமர்சிப்பதால் இந்தப்பெயரை வைத்திருக்கக் கூடும்.

இந்த நூல் கூறாத பல விடயங்களுள்ளன. ஆனால் அதற்காக இதன் முக்கியத்துவம் ஒருபோதுமே குறைந்துபோய் விடப்போவதில்லை. முதல் முறையாக விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களிலொருவராக விளங்கிய ஒருவர் தன்னை, தான் சார்ந்திருந்த இயக்கத்தை சுய விமர்சனத்துக்குள்ளாக்கியிருக்கின்றார். அது வரவேற்கத்தக்கது. சுய விமர்சனங்கள் எப்பொழுதுமே ஆரோக்கியமானவை. எதிர்காலத்தில் சரியான பாதையில் நடப்பதற்கு வழிகோலுபவை. அதுவே இந்நூலின் முக்கியத்துவமும் கூட.

4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!

[எழுத்தாளர் முல்லை அமுதனின் காற்றுவெளி அமைப்பினால் வெளியிடப்பட்ட 'இலக்கியப் பூக்கள்  (பகுதி ஒன்று; 2009) ' நூலில் வெளியான கட்டுரையின் மூல வடிவம். பதிவுகளில் ஏற்கனவே பிரசுரமான கட்டுரையிது. தற்பொழுது ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது.]

அறிஞர் அ.ந.கந்தசாமி பல்துறை விற்பன்னராகவிருந்தவர். இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் சிறுகதை, நாவல்,நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, கவிதை எனச் சகல பிரிவுகளிலும் கொடி கட்டிப் பறந்தவர். ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப்படுபவர். தனக்குப் பின்னால் ஓர் எழுத்தாளப் பரம்பரையையே உருவாக்கிச் சென்றவர். செயல் வீரர் கூட. நாற்பதுகளில் வில்லூன்றி மயான சாதிப் படுகொலை பற்றி முதற்தடவையாகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த கவிஞன். புதுமைப் பித்தன் போன்றவர்களை மீண்டும் இனம் கண்டது போல் அ.ந.க.வையும் மீண்டும் விரிவாக இனம் காண்பது ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு முக்கியம். தான் வாழ்ந்த மிகவும் குறுகிய காலத்தில் சமூகத்திற்காக, மொழிக்காக அ.ந.க ஆற்றிய பங்களிப்பு வியப்பிற்குரியது. அ.ந.க தான் வாழ்ந்த காலத்தில் பல இளம் படைப்பாளிகளைப் பாதித்தவர். பலர் உருவாகக் காரணமாகவிருந்தவர். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரையில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு அளப்பரியது. அவரது பன்முகப் பார்வைகளையும் வெளிக்கொணரும் வரையில் படைப்புகள் நூலுருப் பெறவேண்டிய தேவையுள்ளது. அ.ந.கவின் படைப்புகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு நூல்களாக வெளிவரவேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல அந்த மகத்தான எழுத்துக் கலைஞனின் தன்னலமற்ற , இலட்சிய வேட்கை மிக்க இலக்கியப்பணிக்கு நாம் செய்யும் கைமாறுமாகும். இதுவரையில் அவரது இரு படைப்புகள் மாத்திரமே நூலுருப் பெற்றுள்ளன. அதுவும் அவரது இறுதிக் காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த 'வெற்றியின் இரகசியங்கள்'. அடுத்தது 'மதமாற்றம்' மதமாற்றம் கூடத் தனிப்பட்ட ஒருவரின் நிதியுதவியின் மூலம் தேசிய கலை இலக்கியப் பேரவையின் பெயரில் வெளிவந்ததொரு நூல்.

அ.ந.கந்தசாமியின் ஆரம்ப வாழ்க்கை பற்றிய தகவல்கள்...

அ.ந.க.வின் வாழ்நாள் பாரதியின் வாழ்நாளைப் போலக் குறுகியது. பாரதி 39 வருடங்களே வாழ்ந்திருந்தார். 8-8-1924 பிறந்த அ.ந.க. 44 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். பெப்ருவரி 14, 1968 அன்று மறைந்தார். அ.ந.கவின் தந்தையாரான நடராஜா யாழ் வண்ணார்பண்ணையில் வாழ்ந்திருந்தவர். யாழ் சிறைச்சாலையில் வைத்திய அதிகாரியாக விளங்கியவர். தாயார் பெயர்: கெளரியம்மா. ஒரு சகோதரர்: நவரத்தினம். சகோதரி: தையல்நாயகி. நடராஜா பல சொத்துக்களின் அதிபதியாக விளங்கியவர். அ.ந.கவுக்கு ஐந்து வயதாயுள்ளபோது தந்தை இறந்து விட்டார். தாயாரும் தந்தை இறந்து 41ஆம் நாள் இறந்து விட்டார். குழந்தைகள் மூவரையும் நீதிமன்றம் சட்டரீதியான பாதுகாவலர் ஒருவர் பொறுப்பில் விட்டது. [உண்மையில் கொழும்பிலிருந்த உறவினரொருவர் மூன்று குழந்தைகளையும் தன் பாதுகாப்பில் எடுத்துச் சென்றதாகவும், அ.ந.க.வின் பாட்டி நீதிமன்ற உதவியின் மூலம் தன்வசம் எடுத்துக் கொண்டதாகவும் அறியப்படுகிறது.] இந்தச் சொத்துக்கள் பல பாதுகாவலர், அதற்குப் பொறுப்பான சட்டத்தரணி ஆகியோரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக அறிகின்றோம். [ அ.ந.க. தனது கல்வியை மேலும் தொடர முடியாமல் போனதற்கு இது முக்கிய காரணம். அல்லாவிடில் அ.ந.க. நிச்சயமொரு கலாநிதியாகக் கூட வந்திருப்பார். இந்நிலையில் குறுகிய காலத்தில் அவர் நிறைய நூல்களைக் கற்று, இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்ததோடு, செயல்வீரராகவும் விளங்கியது அவரது ஆற்றலைத்தான் காட்டுகிறது. அதனால்தான் அவர் வாழ்ந்த காலத்திலேயே அறிஞர் அ.ந.கந்தசாமியென அனைவராலும் அழைக்கப்பட்டார்.] இச்சமயத்தில் ஆரம்பக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் கற்ற அ.ந.க. சிறிதுகாலம் அளவெட்டி சென்று உறவினர் சிலருடன் வாழ்ந்து வந்தார். அளவெட்டியிலிருந்த காலத்தில் அ.ந.க. தனது கல்வியினைத் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் தொடர்ந்தார். பின்னர் மீண்டும் யாழ் இந்துக் கல்லூரியில் எஸ்.எஸ்.எல்.சி கல்வி கற்று பின்னர் கொழும்பு சென்றார்.

அ.ந.க. பதினாலு வயதிலிருந்தே எழுதத் தொடங்கி விட்டார். ஈழகேசரி சிறுவர் பகுதியில் எழுத ஆரம்பித்தார். அச்சமயம் ஈழகேசரி நடத்திய பேச்சு, கதை, கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். கதைப்போட்டியில் முதற்பரிசும் பெற்றுள்ளதாக அறிகின்றோம்.

மறுமலர்ச்சிக் குழுவின் உருவாக்கத்துக்குரிய முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவர் அ.ந.க.. ஏனையவர்கள்: தி.ச.வரதராசன், பஞ்சாட்சர சர்மா, நாவற்குழியூர் நடராசன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றத்துக்கு முக்கியமானவர்களிலொருவர் அ.ந.க. அதன் சங்கக் கீதத்தை இயற்றியவரும் அவரே. மறுமலர்ச்சிக் காலகட்டம் என்னும் பொழுது 'மறுமலர்ச்சி' என்னும் சஞ்சிகையின் காலகட்டத்தை மட்டும் கருதுவது தவறு. மறுமலர்ச்சி அமைப்பினரால் வெளியிடப்பட்ட சஞ்சிகையே 'மறுமலர்ச்சி' சஞ்சிகை என்பதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். அ.ந.கந்தசாமி மறுமலர்ச்சி சஞ்சிகையில் சிறுகதைகள் எழுதாவிட்டாலும் 'மறுமலர்ச்சி' அமைப்பு உருவாவதற்குரிய முக்கிய காரணகர்த்தாக்களிலொருவர்.இந்த வகையில் அ.ந.க.வை மறுமலர்ச்சி எழுத்தாளரென்று கூறுவதில் எந்தவிதத் தவறுமில்லை.

அ.ந.க சிறிதுகாலம் கொழும்பு கறுவாக்காட்டுப் பகுதியில் மணமுடித்து வாழ்ந்திருந்ததாக அறிகின்றோம். இவரது குடும்பவாழ்க்கை நீடிக்கவில்லை. திருமணத்தில் ஏற்பட்ட ஆள்மாறாட்டமே இதற்குக் காரணம். பார்த்த பெண் ஒருத்தி. மணந்ததோ அவரது சகோதரியை. இதனால் தான் போலும் அ.ந.க.வின் பல படைப்புகளில் ஆள்மாறாட்டமுள்ள சம்பவங்கள் காணப்படுகின்றன.

சிறுவயதிலேயே வீட்டை விட்டுத் தனியாகக் கொழும்பு சென்ற அ.ந.க பட்டதாரியல்லர். ஆனால் கலாநிதிகள் தமது நூல்களை அவருக்கு அர்ப்பணிக்குமளவுக்குப் புலமை வாய்ந்தவர். கலாநிதி கைலாசபதி தனது 'ஓப்பியல் இலக்கியம்' என்னும் நூலினை அறிஞர் அ.ந.கந்தசாமிக்கு அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரதியைப் போல் அ.ந.க.வும் தனது குறுகிய காலகட்ட வாழ்வில் சாதித்த சாதனைகள் அளப்பரியன. சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம், உளவியல், சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்புச் செய்தவர் அ.ந.க. தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவர்.

அ.ந.கந்தசாமியின் சிறுகதைகள்....

அறிஞர் அ.ந.கந்தசாமி சுமார் 60 சிறுகதைகளாவது எழுதியிருப்பாரென அறியக் கிடக்கின்றது. இவற்றில் உதவி வந்தது (பாரதி இதழ்) , வழிகாட்டி ( பாரதி இதழ்) , .இரத்த உறவு (பாரதி) , .புதுப் புனல் ( உதயம் மலரில்) , .நாயினும் கடையர் ( வீரகேசரி) , .காளிமுத்து இலங்கை வந்த கதை ( தேசாபிமானி) , .பாதாள மோகினி (சுதந்திரன்) , .நள்ளிரவு (சுதந்திரன்) , .ஐந்தாவது சந்திப்பு ( சுதந்திரன்) , .பரிசு ( சுதந்திரன்) , குருட்டு வாழ்க்கை .,.உலகப் பிரவேசம் , .ஸ்ரீதனம் , .பிக்பொக்கட் , சாகும் உரிமை , கொலைகாரன் , சாவுமணி போன்றவை பற்றிய தகவல்களையே பெற முடிந்தது. இவற்றிலும் ஒரு சிலவற்றையே பெற முடிந்தது. ஏனையவை ஆங்காங்கே பத்திரிகை, சஞ்சிகைகளில் சிதறிக் கிடக்கின்றன. இவற்றில் எத்தனை காலத்தால் அழியுண்டு போயினவோ நாமறியோம். இந்நிலையில் இயலுமானவரையில் அவை சேகரிக்கப்பட வேண்டும். ஆவணப் படுத்தப்பட வேண்டும்.

இவரது சிறுகதைகள் பற்றித் தனது 'ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மணிகள்' நூலில் அண்மையில் மறைந்த எழுத்தாளர் செம்பியன் செல்வன் 'இரத்த உறவு (மறுமலர்ச்சி), நாயிலும் படையர் (வீரகேசரி), காளிமுத்து இலங்கை வந்த கதை (தேசாபிமானி) பாதாள மோகினி, நள்ளிரவு, ஐந்தாவது சந்திப்பு (சுதந்திரன்), பரிசு, குருட்டுவாழ்க்கை, உலகப்பிரவேசம், ஸ்ரீதனம், பிக்பொக்கட், சாகும் உரிமை, கொலைகாரன், உதவிவந்தது, வழிகாட்டி ஆகிய கதைகளை அ.ந.க. தனது நல்ல கதைகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.  இரத்தஉறவு, ஐந்தாவது சந்திப்பு, நாயிலும் கடையர், - ஆகிய கதைகள் இவருக்குப் பெரும் புகழீட்டிக் கொடுத்தன. முதலிரு கதைகளும் சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டு புகழ்பெற்றவை. தேயிலைத் தோட்டவாழ்வு பற்றிய நாயிலும் கடையர் - மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதை என பல்வேறு ஈழத்து விமர்சகர்களால் பாராட்டப்பட்டதொன்று.... அத்துடன் வாழ்வின் உயிர் நாடியான சமூகப்பிரச்சினையான இவற்றைப் பொருளாகக் கொண்டு இவரின் கதைகள் எழுந்தன. சமூக ஆராய்வின்போது எழும் முடிவுகள் - தத்துவஞானிக்குத் தத்துவங்களாகவும், எழுத்தாளனுக்கு கதைகளாகவும் வெளியாகின்றன. உண்மையில் சிறந்த எழுத்துக்கள் வாழ்வின் நடப்பியல்பில் பிறப்பன அல்ல. அவ்வியல்புகளின் ஆராய்வின் முடிவிலேயே பிறக்கின்றன என்பதற்கு இவரின் கதைகள் சிறந்த உதாரணங்களாகும்' என்று கூறுவது கவனிக்கத் தக்கது.

அ.ந.கந்தசாமியின் கவிதைகள்..

கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே என்னும் புனைபெயர்களிலும் எழுதிக் குவித்தவர். மரபுக் கவிதை எழுதுவதில் மிகுந்த பாண்டித்தியம் மிக்கவர் அ.ந.க. ஆனால் இவரது மரபுக்கவிதைகள் ஏனைய பண்டிதர்களின் மரபுக்கவிதைகளைப் போன்றவையல்ல. துள்ளு தமிழ் கொஞ்சுபவை.அன்றொருநாள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வள்ளிப்பிள்ளை என்பவரின் பிரேதத்தை நகரசபைக்குச் சொந்தமான வில்லூன்றிமயானத்தில் புதைப்பதற்காகத் தலைமை தாங்கிச் சென்ற ஆரியகுளத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட நிகழ்வை இவரது 'வில்லூன்றி மயானம்' என்னும் கவிதை சாடுகிறது. இச்சம்பவம் நிகழ்ந்த காலத்தில் ஏனைய கவிஞர்கள், எழுத்தாளர்களெல்லாம் அதனை விமர்சிக்கப் பயந்திருந்த நிலையில் அறிஞர் அ.ந.க அதனை வன்மையாகக் கண்டித்தார். தீண்டாமைக்கெதிராக வெடித்திட்ட புரட்சித்தீயாக அதனைக் கண்டார்.

'சிறுகதையைப் போலவே, கவிதைத் துறையிலும் இவர் வெற்றியீட்டினார். 'எதிர்காலச் சித்தன் பாட்டு', துறவியும் குஷ்டரோகியும், சத்திய தரிசனம் என்பன சிறந்தவை' என்பார் எழுத்தாளர் செம்பியன் செல்வன். இவரது ஆரம்பக் கவிதைகளிலொன்றான 'சிந்தனையும், மின்னொளியும்'  நல்லதொரு கவிதை. 'ஈழத்துச் சாகித்திய அமைப்பின் இலக்கிய நிகழ்வொன்றில் பாடப்பட்ட இவரது ‘கடவுள் - என்சோரநாயகன்' என்ற கவிதையைக் கேட்ட, தென் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை ‘ ஒரு நூற்றாண்டிற்கு ஒருமுறைதான் இப்படிப் பட்ட நல்ல கவிதை தோன்றும்’ என்று கூறியதாக அநதனி ஜீவா, செம்பியன் செல்வன் போன்ற பல எழுத்தாளர்கள் தமது கட்டுரைகளில், ஆய்வு நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். எழுத்தாளர் காவலூர் ராஜதுரையும் அ.ந.க.பற்றியத் தினகரனில் எழுதிய கட்டுரையில் "சாகித்திய மண்டலத்தின் 'பா ஓதல்' கவி அரங்கிலும் கந்தசாமியின் குரல் ஒலித்தது. 'கடவுள் என் சோர நாயகன்' என்னும் தலைப்பில் அவர் ஓதிய பா, அவரே குறிப்பிட்டதுபோல, தமிழுக்கே புதியது. 'நாயகனாகவும், நாயகியாகவும், குழந்தையாகவும் மற்றும் பலவாறாகவும் கடவுளைத் தமிழ்க் கவிஞர் பலர் பாவித்திருக்கின்றார்கள். ஆனால் எவராவது சோர நாயகனாகப் பாவித்ததிண்டோ?' என்றார் கந்தசாமி" என்று குறிப்பிட்டுள்ளார். இவையெல்லாம் அ.ந.க ஈழத்துக் கவிதையுலகில் தவிர்க்கப்படாத முக்கிய படைப்பாளியென்பதை உறுதி செய்யும்.

அ.ந.க.வின் நாவல், நாடக முயற்சிகள்....

அ.ந.க.வின் ஒரேயொரு நாவல் 'மனக்கண்' தினகரனில் 1967இல் தொடராக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றது. இதன காரணமாகவே பின்னர் அ.ந.க.வின் உற்ற நண்பர்களிலொருவரான சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தினரால் ஒலிபரப்பப் பட்டது. பதிவுகள் இணைய இதழிலும் இந்நாவல் அண்மையில் தொடராக வெளிவந்திருந்தது. (ஆயினும் இந்நாவலின் அத்தியாயம் முப்பதினைக் கண்டெடுக்க முடியவில்லை. இந்த அத்தியாயமில்லாமலே பதிவுகள் இணைய இதழில் மேற்படி நாவல் வெளிவந்தது..) இந்த நாவல் முடிந்தபொழுது அ.ந.க. தனது முடிவுரையினை 'நாவல்' பற்றியதொரு நல்லதொரு ஆய்வுக்கட்டுரையாக வடித்துள்ளார். அதிலவர் மனக்கண் பற்றிய தனது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தவிர அ.ந.க. தனது இறுதிக்காலத்தில் 'களனி வெள்ளம்' என்னுமொரு நாவலினையும் தோட்டத்தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதிக் கொண்டிருந்ததாகவும், அவர் இறந்ததும் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்த அப்பிரதி 1983 கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறிகின்றோம். செ.கணேசலிங்கன் அ.ந.க.வின் இறுதிக் காலத்தில் அவரைப் பராமரித்தவர்களிலொருவர். அதுபற்றித் தனது குமரன் சஞ்சிகையில் அ.ந.க.வின் இறுதிக்காலம் பற்றிய தொடர் கட்டுரையொன்றினையும் எழுதியுள்ளது குறிப்பிடத் தக்கது.

அ.ந.க. தாஜ்மகால் பற்றிய 'கடைசி ஆசை' , 'அமர வாழ்வு' போன்ற குறுநாடகங்கள் சில எழுதியுள்ளதாக அறிகின்றோம். ஆயினும் 1967இல் கொழும்பில் நான்கு தடவைகள் மேடையேற்றப்பட்டுப் பலத்த வாதப்பிரதிவாதங்களை ஈழத்து இலக்கிய உலகில் எழுப்பிய 'மதமாற்றம்' என்னும் நாடகம் அவரது காத்திரமான பங்களிப்பினை என்றும் வெளிப்படுத்தி நிற்கும். இந்நாடகம் கலாநிதி கைலாசபதி அவர்களை மிகவும் கவர்ந்த நாடகங்களிலொன்று. அது பற்றி அவர் 'இதுவே தமிழில் இதுவரை எழுதப்பட்ட நாடகங்களில் ஆகச்சிறந்தது’ என்று குறிப்பிட்டுள்ளது இதனைப் புலப்படுத்தும். இது பற்றி அ.ந.கந்தசாமியே விமர்சனக் கட்டுரையொன்றினை இலங்கையிலிருந்து வெளிவந்த 'ராதா' என்னும் பத்திரிகையில் எழுதியுள்ளார்.

எழுத்தாளர் அந்தனி ஜீவா தினகரனில் அ.ந.க. பற்றி எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்; என்னும் தொடரில் 'எதிர்காலத்தில் ஈழத்து நாடகத்தைப் பற்றி விமர்சகர்கள் விமர்சிக்கும் பொழுது அ.ந.க.வின் மதமாற்றத்தை மைல்கல்லாக வைத்துத் தான் கணக்கிடுவார்கள்' என்று குறிப்பிடுவது மிகையான கூற்றல்ல. இது பற்றிய விமர்சனக்கட்டுரையொன்றினை ஆங்கில ஏடான 'ட்ரிபியூ'னில் இலங்கையின் பிரபல இலக்கியத் திறனாய்வாளர்களிலொருவரான கே.எஸ்.சிவகுமாரனும் எழுதியிருக்கின்றார்.மேற்படி அ.ந.க.வின் நாடகத்தைப் பற்றிய தனது 'டெய்லி மிரர்' விமர்சனத்தில் அ.ந.க.வின் நாடகத் திறமையினை ஆங்கில அறிஞர் பெர்னாட்ஷாவோடு ஒப்பிட்டு விமர்சித்திருப்பது அ.ந.க.வின் நாடகப் புலமையினை வெளிப்படுத்தும்.

அ.ந.கவும் உளவியலும்...

"வெற்றியின் இரகசியங்கள்" என்ற அ.ந.கந்தசாமியின் உளவியல் நூலினைப் பாரி பதிப்பகத்தினர் தமிழகத்தில் வெளியிட்டுள்ளனர். மேற்படி நூலில் பல்வேறு உளவியற் கோடுபாடுகள் பற்றியெல்லாம், அவற்றை வாழ்வின் வெற்றிக்கு எவ்வகையில் பாவிக்கலாம் என்பது பற்றியெல்லாம் தனக்கேயுரிய துள்ளுதமிழ் நடையில் அ.ந.க. விபரித்திருப்பார்.

அ.ந.க.வின் மொழிபெயர்ப்பு முயற்சிகள்.....

1943இலிருந்து 1953வரை இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார். அச்சமயம் பல ஆங்கில நூல்களைப் பணிநிமித்தம் மொழிபெயர்த்துள்ளார். (அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் கட்டுரையில் அ.ந.க இலங்கை அரச தகவற் துறையில் 12, 13 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றதாகக் குறிப்பிடுவார். தகவற்துறையில் பணிபுரிந்த் காலகட்டத்தில் தகவற்துறையினால் வெளியிடப்பட்ட 'ஸ்ரீலங்கா' இதழாசிரியராகவும் அ.ந.க.வே விளங்கினார்). அதன் பின்னர் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். தனியார் நிறுவனங்களுக்கு ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கும் பணியினையும் செய்து வந்தார். ஒப்சேவரில் புரூவ் ரீடராகவும் சில காலம் வேலை பார்த்துள்ளார். வீரகேசரி ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக விளங்கிய அ.ந.க தேசாபிமானி பத்திரிகையின் ஆரம்பகால ஆசிரியர்களில் ஒருவர். பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அக்காலகட்டத்தில் சுதந்திரன் பத்திரிகையில் சேர்ந்து அதன் ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார். ஆங்கிலப் பத்திரிகையான டிரிபியூனில் சிலகாலம் பணியாற்றினார். அச்சமயம் நிறைய திருக்குறள் பற்றிய ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். எமிலி சோலாவின் 'நானா' (நாவல்) , பெர்ட்ராண்ட் ரசலின் 'யூத அராபிய உறவுகள்', 'பொம்மை மாநகர்' என்னும் சீன நாவல், ஓ ஹென்றியின் சிறுகதைகள் மற்றும் பல படைப்புகளை மொழிபெயர்த்தவரிவர். இவையெல்லாம் சேகரிக்கப்பட வேண்டும். இவற்றை வைத்திருக்கும் படைப்பாளிகள் இவை பற்றிய தகவல்களை எமக்கு அறியத் தந்தால் நன்றியுடையவர்களாகவிருப்போம்.

எமிலிசோலாவின் நாவலான 'நானா'வைச் சுதந்திரனில் மொழிபெயர்த்து அ.ந.க. வெளியிட்டபோது அது பெரும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியதை சுதந்திரனில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடிதங்களிலிருந்து அறியமுடிகின்றது. அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் 'நானா' சுதந்திரனில் 21-10-51தொடக்கம் -28-8-1952 வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. முதலாவது அத்தியாயம் 'முதலிரவு' என்னும் தலைப்பிலும், பத்தொன்பதாவது அத்தியாயம் 'போலிஸ்' என்னும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன. பத்தொன்பதாவது அத்தியாயம் , தொடரும் அல்லது முற்றும் என்பவையின்றி, ஓசையின்றி முடிந்துள்ளதைப் பார்க்கும்போது ' நானா' நாவல் அத்துடன் முடிவு பெற்றுள்ளதா அல்லது நடுவழியில் வாதப்பிரதிவாதங்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதா என்பதை மூல நூல் பார்த்துத்தான், நாவலை வாசித்துப் பார்த்துத்தான் முடிவு செய்யவேண்டும். நாவல் வெளிவந்தபோது வெளிவந்த வாசகர் கடிதங்களிலிருந்து பெரும்பாலான வாசகர்களை நானா அடிமையாக்கி விட்டாளென்றுதான் தெரிகின்றது. எதிர்த்தவர்கள் கூட அ.ந.க.வின் மொழிபெயர்ப்பினைப் பெரிதும் பாராட்டியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. நாவலை அ.ந.க தனக்கேயுரிய அந்தத் துள்ளுதமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார். நாவல் காரணமாகச் சுதந்திரனின் விற்பனை அதிகரித்துள்ளதையும், நானாவை வாசிப்பதில் வாசகர்களுக்கேற்பட்ட போட்டி நானா வெளிவந்த சுதந்திரனின் பக்கங்களைக் களவாடுவதில் முடிந்துள்ளதையும் அறிய முடிகிறது. . மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா 'நானா' பற்றி சுதந்திரனுக்கு எழுதிய வாசகர் கடிதமொன்றில் '"நானா" கதை சுதந்திரனில் வெளிவரத்தொடங்கிய பின்பு மார்க்கெட்டில் சுதந்திரன் பத்திரிகைக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலர் கடைகளுக்குச் சென்று பத்திரிகை கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றுள்ளதை நான் கண்ணாரக் கண்டேன். அதனால் பலர் சேர்ந்து ஒரு பத்திரிகையை வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏறபட்டுள்ளது. தமிழாக்கம் அபாரம்' என்று தனது கருத்தினைப் பதிவு செய்திருக்கின்றார். இலங்கையிலிருந்தும் மட்டுமல்ல தமிழகத்திலிருந்தும் பலர் 'நானா' பற்றிய தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதுபோல் பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் அ.ந.கந்தசாமி எழுதிய 'கண்ணகி பாத்திரம் பெண்மையின் சிறப்பைக் காட்டுகிறதா? பெண்ணடிமையின் சிகரம் என்பதே சாலப் பொருந்தும்' என்னும் கட்டுரையும் பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளதை அன்றைய சுதந்திரன் இதழின் பக்கங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

அ.ந.க. என்றொரு விமர்சகர்....

சிறுகதை, கவிதைகள், நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு என்றெல்லாம் எழுத்தில் கால் பதித்த அ.ந.க. பல்வேறு அரிய இலக்கியக் கட்டுரைகளை, விமர்சனக் கட்டுரைகளை, நூல் மதிப்புரைகள் மற்றும் சினிமா பற்றிய விமர்சனக் கட்டுரைகள்,தேசிய இலக்கியம், கவிதை, நாடகத் தமிழ், சிலப்பதிகாரம்' என்றெல்லாம் பல்வேறு விடயங்கள் பற்றி  எழுதிய படைப்புகள் பல்வேறு சிற்றிதழ்கள், பத்திரிகைகளிலெல்லாம் வெளிவந்திருக்கின்றன. வெண்பா பற்றிய தொடர் கட்டுரைகளை வீரகேசரியில் எழுதியுள்ளதாகவும் அறிகின்றோம். இதனால் அ.ந.க.வை ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய விமர்சகர்களிலொருவராகவும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் இவர் சுதந்திரனில் எழுதிய சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் தமிழகத்திலும், இலங்கையிலும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பின. பெரியாரின் குடியரசு பத்திரிகையிலும் இவற்றில் சில மீள்பிரசுரம் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை பெற்ற அ.ந.க. ஆங்கிலத்திலும் சிலப்பதிகாரம், திருக்குறள், கெளடில்யரின் அர்த்தசாத்திரம் பற்றியெல்லாம் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை டிரிபியூன் போன்ற ஆங்கில சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

அ.ந.க.வும் சிறுவர் இலக்கியமும்!

சிறுவர் இலக்கியத் துறையில் அ.ந.க தன் பால்ய காலத்தில் ஈழகேசரி மாணவர் மலரில் எழுதியுள்ளதாக அறிகின்றோம். இவையும் சேகரிக்கப்பட வேண்டுமெனக் கருதுகின்றோம். இது தவிர 'சங்கீதப் பிசாசு' என்றொரு சிறுவர் நாவலொன்றினையும் அ.ந.க எழுதியுள்ளார். எழுபதுகளின் இறுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்தால் வெளியிடப்பட்ட 'கண்மணி' என்னும் சிறுவர் சஞ்சிகையில் அந்நாவலின் சில அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. பின்னர் 'கண்மணி' நின்று விடவே அந்நாவலும் குறையுடன் நின்று விட்டது. அந்நாவல் முதன் முதலில் 'சிரித்திரனில்' வெளிவந்ததாகச் சிரித்திரன் ஆசிரியர் அவருடனான உரையாடலொன்றின்போது குறிப்பிட்டதாகவொரு நினைவு. இது பற்றிய தேடலினையும் தொடங்க வேண்டும்.

அ.ந.க.வின் உரைநடை...

அ.ந.க என்னும் கிணறினைத் தோண்டத் தோண்டப் பெருகிவரும் இலக்கிய ஊற்று எம்மைப் பெரிதும் பிரமிக்க வைக்கின்றது. அவருக்குப் பெருமை சேர்க்குமின்னுமொரு விடயம் அவரது அந்தத் துள்ளுதமிழ் உரைநடை. இது பற்றிய செம்பியன் செல்வனின் 'ஈழத்தமிழ்ச் சிறுகதை மணிகள்' "இவரின் படைப்புக்களின் வெற்றிகளுக்கு இவரின் உரை நடையும் முக்கிய காரணம் எனலாம். எளிய வாக்கியங்களாக கருத்துக்களை வெளியிட்டார். அக் கருத்துக்களை உவமை, உருவகச் சொல்லாட்சிகளினால் அழகுபடுத்தியும், கம்பீரத் தொனியேற்றியும், எல்லாருக்கும் புரியும்வண்ணம் மக்கள் முன் வைத்தார். இப் பண்பு சிறுகதைகளில் மட்டுமல்லாது, ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும், கொள்கை விளக்கக் கட்டுரைகளிலும் எல்லாரையும் வசீகரிக்கும் வண்ணம் அழகழகான, ஆழமான, எளிய உவமை உருவங்களை அமைத்து எழுதுவார். சாதாரணமாக ஒரு சிறு கட்டுரையிற் கூட குறைந்தது பத்தோ பதினைந்து உவமை உருவங்களைக் காணலாம்." என்று குறிப்பிடும்.

வானொலியில் அ.ந.க....

இலங்கை வானொலியின் "கலைக்கோல" நிகழ்ச்சியிலும் மாதந்தோறும் அ.ந.க. வின் விமரிசனங்கள், "உலக நாடகாசிரியர்கள்" பற்றிய அறிமுகவுரைகள் ஒலிபரப்பப்பட்டதாகவும் அறிகின்றோம். அவரது இறுதிப் படைப்பாக 'மொழிபெயர்ப்பு நாடக'மொன்று ஒலி பரப்பப்பட்டதாகவும் அறிகின்றோம். அ.ந.க.வின் வானொலி முயற்சிகளைப் பற்றி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திலும் இவர் பற்றிய தேடலினைத் தொடர வேண்டிய தேவையினை இது வலியுறுத்தும்.

இவை தவிர பேச்சுக் கலையிலும் வல்லவர் அ.ந.க. அத்துடன் பல கவியரங்குகளிலும் பங்கு பற்றிய அன்றைய காலத்து இலக்கிய வானில் நட்சத்திரமாக மின்னியவர் அ.ந.க என்பதைத்தான் அவர் பற்றிய கட்டுரைகள், நூல்கள் தெரிவிக்கின்றன.

செயல் வீரர் அ.ந.க!

அ.ந.க. எழுதியதுடன் மட்டும நின்று விட்டவரல்லர். செயல் வீரரும் கூட. தான் கொண்ட கொள்கைகளுக்காக இறுதி இறுதி வரையில் போராடியவர். 'வீரகேசரியில் பணிபுரிந்தபோது, இவரின் கடமை, எழுத்துடன் மட்டும் நின்றுவிடாது. செயல் முறையிலும் தீவிரமடைந்தது. வீரகேசரியில் முதன் முதலாகத் தொழிற் சங்கம் ஒன்றினைத் தாபித்து தொழிலாளர் உரிமைக்காகப் பாடுபட்டவர்' என்று தனது ''ஈழத்துச் சிறுகதை மணிகள்' நூலில் குறிப்பிடுவார் எழுத்தாளர் செம்பியன் செல்வன. இது பற்றிய அந்தனி ஜீவாவின் 'சாகாத இலக்கியத்தின் சரித்திரன் நாயகன்' ''வீரகேசரி' ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அச்சகத் தொழிலாளர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் நொந்தார். அவர்களின் நலனில் அக்கறை கொண்டார். பொதுவுடமைக் கருத்துகளில் ஊறிப்போயிருந்த அ.ந.க. அச்சகத் தொழிலாளர்களுக்காகப் போராடத் தயங்கவில்லை. அதனால் அச்சக முதலாளிகளின் வெறுப்பினைச் சம்பாதித்துக் கொண்டார். அதனால் வீரகேசரியிலிருந்து விலக்கப் பட்டார்." என்று பதிவு செய்யும்.

மேற்படி கட்டுரையில் அந்தனி ஜீவா அ.ந.க.வின் மார்க்சிய ஈடுபாடு பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவார்:

"பின்பு கம்யூனிஸ்ட் கட்சி முழுநேர ஊழியரானார். கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்ப் பத்திரிகையான 'தேசாபிமானி'யின் முதலாவது ஆரம்பகால ஆசிரியர் அ.ந.கந்தசாமியே. 'தேசாபிமானி'யின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். அப்பத்திரிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், அரசியற் கட்டுரைகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன. கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டி என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற டிராம் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற உழைத்தவர்களில் முக்கியமான ஒருவராக அ.ந.கந்தசாமி கணிக்கப் படுகின்றார். தொழிற்சங்க ஈடுபாடு கொண்ட காலங்களில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்து அமர இலக்கியங்களைச் சிருஷ்டித்துள்ளார். கம்யூனிஸ்ட கட்சிக்குள் நடந்த போராட்டத்தின் காரணமாக அ.ந.கந்தசாமியும் அவரைச் சார்ந்த ஏழெட்டுப் பேரும் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.".

அ.ந.க.வின் இலக்கியக் கோட்பாடுகள்!

"'மக்கள் இலக்கியம்' என்ற கருத்தும் 'சோஷலிஸ்ட் யதார்த்தம்' என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன" எனத் தனது பிரசித்தி பெற்ற 'நான் ஏன் எழுதுகிறேன்' என்னும் கட்டுரையில் குறிப்பிடும் அ.ந.க. பின்வருமாறு தான் எழுதுவதன் நோக்கம் பற்றி விபரிப்பார்:

"எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.

மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில் ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். "இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கபலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்.

பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை....உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்."

'தேசாபிமானி'யில் வெளிவந்த மேற்படி கட்டுரை எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. அ.ந.க மறைந்தபொழுது அவரது மேற்படி கட்டுரையினைப் பிரசுரித்த தேசாபிமானி 'போர்ச்சுவாலை அமரச் சுடராகியது' என்றொரு ஆசிரியத் தலையங்கத்தினையும் வரைந்து தனது அஞ்சலியினைச் செலுத்தியது.

இவையெல்லாம் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் அறிஞர் அ.ந.க.வின் அளப்பரிய பங்களிப்பினைத் தெளிவாக விளக்கி நிற்கின்றன. இன்று அ.ந.க பற்றிக் குறிப்பிடும் ஒரு சில எழுத்தாளர்கள் அவரது பன்முக ஆற்றலின் பின்னணியில் அவரை ஆய்வு செய்ய மறந்து சில சமயங்களில் மேலோட்டமாகக் கருத்துகளைத் தெரிவிப்பது அவர்களது அறியாமையின் விளைவே. அ.ந.க.  பற்றிய போதிய ஆய்வுகளின்றி அவர் பற்றிய கருத்துகளைத் தெரிவிப்பதை தவிர்த்து விடுவது நல்லது. அ.ந.க. "ஈழத்தமிழிலக்கிய உலகின் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு மற்றையோரால் மறுக்கவோ மறைக்கவோ முடியாதளவிற்கு சிறந்த தொண்டாற்றினார். நவீன தமிழ்க்கலை வடிவங்களாக உருவகித்த சிறுகதை, நாவல், விமர்சனம், மொழி பெயர்ப்பு என்பனவற்றுடன் நாடகம், கவிதை ஆகிய துறைகளையும் - புத்தாற்றல் நிரம்பிய ஆக்ரோஷ வேகத்துடன் சமூகச் சீர்கேடுகளைக் கெல்லி எறியவும், ‘புதியதோர் உலகு’ அமைக்கவும் ஏற்றகருவிகளாக்கினார்" என்று குறிப்பிடும் செம்பியன் செல்வன் "இவரைப்பற்றிய உண்மையான மதிப்பீடு பல் துறைகளையும் தழுவியதாகவிருந்தாலன்றி முழுமையடையா"வென்று குறிப்பிடுவதை மேற்படி அரைகுறை ஆய்வாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் இது பற்றிய தனது வேதனையினை "அ.ந. கந்தசாமி சுமார் நாற்பது சிறுகதைகள் வரையே எழுதியிருப்பார் என அவரின் நெருங்கிய இலக்கிய நண்பர்களால் அறியவருகின்றது. அவை யாவும் ஆங்காங்கே அவர் பணியாற்றிய பத்திரிகைகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் சிதறிக்கிடக்கின்றன. அவரது சிறுகதைகள் இன்றுவரை தொகுப்பாக வெளிவராதிருப்பது விந்தையான வேதனையே, அவரால் உற்சாகப் படுத்தப்பட்டும் உயர்த்தப்பட்டும் உருவாக்கப்பட்ட இலக்கியவாணர்கள் எத்தனையோ பேர் இன்று ஈழத்தமிழிலக்கிய உலகில் மட்டுமல்லாது சமூக நிலையிலும் உயர்நிலை பெற்று விளங்குகின்றனர். அவர்களோ அன்றிப் பிற பதிப்பங்களோ, அ.ந. கந்தசாமியின் படைப்புக்களை நூலுருவில் கொணர முயலவேண்டும். அவர் தன் ஆயுட்காலம் முழுவதும் தொடர்பு கொண்டிருந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமாவது இவ்விடயத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தவேண்டும்" என்றும் வெளிப்படுத்துவார்.

அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த 'தமிழமுது' என்னுமோர் சிற்றிதழின் ஆசிரியரான சரவணையூர் மணிசேகரன் தனது 'அ.ந.க.வும் அவர் சிருஷ்டிகளும்' என்னும் ஆசிரியத் தலையங்கத்தில் "அவர் சாகும்போதும் இலக்கியப் பெருமூச்சு விட்டுத்தான் இறந்தார். அவரைச் சந்திக்கப் போனால் எந்த நேரமும் எங்களோடு பேசிக்கொள்வது தமிழ் இலக்கியம்தான். அவர் தமிழ் இலக்கியத்துக்காக தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் அர்ப்பணித்தார்.... ஏ குளிகைகளே! சமூகத்துக்காக அவர் சிருஷ்டித்தவர். அவர் சிருஷ்டிகளை புத்தக உருவில் கொண்டுவர முயற்சிக்காத இந்த நன்றி கெட்ட சமூகம் போலவா நீ அவர் உயிரைப் பிடித்து வைக்காது துரோகம் செய்து விட்டாய்? 'தமிழமுது' அழுகின்றாள். அவள் கண்களில் நீர் துளிக்கின்றது. அவர் படத்தை (அமரர் அ.ந.கந்தசாமி) முகப்பில் தாங்கியபின்புதான் அவள் மனம் கொஞ்சம் சாந்தியடைகின்றது." என்று சாடியிருப்பார்.

இவ்விதம் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்குப் பல்துறைகளில் அரிய பங்காற்றிய அறிஞர் அ.ந.க.வின் படைப்புகளை இனியாவது இன்றைய தமிழ் உலகு வெளிக்கொணர முயற்சிகள் செய்ய வேண்டும். ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் அவரது படைப்புகளைச் சேகரிக்க உதவினாலே அதுவேயொரு மிகப்பெரிய சேவையாகவிருக்கும்.

நன்றி: பதிவுகள் ஏப்ரில் 2009 இதழ் 112

5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!

[இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட 'வாதங்களும், விவாதங்களும்' நூலுக்காக எழுதப்பட்டது. நூலினை பா.அகிலன், எழுத்தாளர் திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோர் தொகுத்துள்ளார்கள். ]  -  'நான் எழுத்தாளனோ, விமர்சகனோ இல்லை' என்று ஆரம்பத்திலிருந்தே பிரகடனப்படுத்தி வருகின்றேன்" (விவாதங்கள் சர்ச்சைகள்,  பக்கம்263) என்று தன்னைப்பற்றி வெங்கட் சாமிநாதன் கூறிக்கொண்டாலும் இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற கலையின் பல்வேறு துறைகளிலும் ஆழமான, காத்திரமான பங்களிப்பினைச் செய்த கலை விமர்சகர் இவரென்பது மறுக்கமுடியாதவுண்மை மட்டுமல்ல நன்றியுடன் விதந்துரைக்கப்பட வேண்டியதுமாகும். 1960இல் 'எழுத்து' இதழில் வெளியான 'பாலையும், வாழையும்' கட்டுரையின் மூலம் எழுத்துலகிற்குக் காலடியெடுத்து வைத்த வெ.சா.வின் க்லைத்துறைக்கான பங்களிப்பு ஐம்பதாண்டுகளை அடைந்திருக்கிறது. இந்த ஐம்பதாண்டுக் காலகட்டத்தில் 'சாமிநாதனது பேனா வரிகள் புலிக்குத் தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது என்றபடி சகலதையும் பதம் பார்க்கும்' என்னும் சி.சு.செல்லப்பாவின் கூற்றின்படி அனைவரையும் பதம் பார்த்துத்தான் வந்திருக்கிறது. ஒரு சில வேளைகளில் உக்கிரமாகவும் இருந்திருக்கிறது. ஒரு படைப்பாளியின் படைப்பினை ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கி அதன் நிறைகளை மட்டுமல்லாது குறைகளையும் எந்தவிதத் தயக்கங்களுமின்றி வெளிப்படுத்தும் வெ.சா. சில சமயங்களில் அவரது விமர்சனங்களை முன்னுரைகளென்ற பெயரில் கேட்கும் சிலருக்கு நேரிடையாகவே மறுத்துமிருக்கின்றார். தனக்குச் சரியென்று பட்டதை, எந்தவிதத் தயக்கங்களுமின்றி, எந்தவித பயன்களையும் எதிர்பார்க்காதநிலையில் , துணிச்சலுடன் எடுத்துரைக்கும் வெ.சா..வின் போக்கு வெ.சா.வுக்கேயுரிய சிறப்பியல்புகளிலொன்று.


 அறுபதுகளில், எழுபதுகளில் கோலோச்சிக் கொண்டிருந்த முற்போக்கிலக்கியப் படைப்புகளைக் காரமாக விமர்சித்தவர் வெ.சா. அதன் காரணமாக, 'கலை சமுதாயத்திற்கே' என்னும் முற்போக்கணியினரை, அவர்தம் கலைப்படைப்புகளின் தன்மையினைத் தன அறிவிற்கேற்ப , தர்க்கரீதியாக விமர்சித்த காரணத்தினால் வெ.சா.வைக் 'கலை கலைக்காகவே' என்று வாதிடும், 'அழகியலுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கு'மொரு' அழகியல் உபாசகராகவும், சமுதாயப் பிரக்ஞையற்றவொருவராகவும் ஓரங்கட்டிவிடவும் சிலர் தலைப்பட்டனர். அவரை முக்கியமான விமர்சகராக ஏற்றுக் கொண்டு அதே சமயம் அவர் அறிவுத்தளத்தையொரு பொருட்டாகவே கருதியதில்லையென்றும், அவரது மொழி விமர்சனத்திற்குரிய தர்க்க மொழியல்லவென்றும் கூறித் தமது மேலாவிலாசத்தைக் காட்டும் முனைப்புகளும் நடைபெறாமலில்லை. வேறு சில இளம் படைப்பாளிகளோ அவரை ஞான சூனியமென்றும், அயோக்கியனென்றும் கூட வசை பாடினர். இவை பலவற்றுக்கு அவர் தன் பாணியில் பதிலிறுத்துள்ளார். அத்தகைய அவரது பதில்களில் சிலரைச் சீண்டியுமிருக்கிறார். தனது எழுத்தினைப் பற்றிக் குறிப்பிடும்போது 'எல்லாமே தனி மனிதனாகவும், இந்தச் சமுதாயத்தில் ஓர் அங்கமாகவும், என் உணர்வுகளைத் தாக்கிய, சுற்றிச் சமூகத்தில் நடக்கும் அருவருப்பான நடப்புகளைப் பற்றிய என் எதிர்வினைகள்' ('விவாதமேடைச் சர்ச்சைகள்'; பக்கம் 4- முன்னுரையில்) என்று குறிப்பிடும் இவரது எண்ணங்களின் தர்க்கச் சிறப்பும், பரந்த வாசிப்புடன் கூடிய அறிவும் பிரமிக்க வைப்பன.. கலாநிதி கைலாசபதியின் 'தமிழ் நாவல் இலக்கியம்' பற்றிய இவரது 'மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல்' என்னும் விரிவான ஆய்வுக் கட்டுரை, 'பேராசிரியர் நா.வானமாலையின் ஆராய்ச்சி விநோதங்கள்' போன்ற கட்டுரைகளும் அவற்றிற்கான எம்.ஏ.நுஃமான் போன்றவர்களின் எதிர்வினைககளும் தமிழ் இலக்கியத் துறைக்கு வளம் சேர்ப்பன. இவர்கள் விவாதங்களில் முரண்பட்டிருந்த போதிலும், அவை தர்க்கச் சிறப்பு மிக்கவை. ஆழமானவை. சிந்தனையினைத் தூண்டுவன. இவர்கள் தங்களது விமர்சனங்கள் தமது தனிப்பட்ட வாழ்வினுள் குறுக்கிட விடாது பார்த்துக் கொண்டனர். வல்லிக்கண்ணனை விமர்சிக்கும் அதே சமயம் சாகித்திய அகாடமி விருது தானாக அவரைத் தேடி வந்தததை மனம் திறந்து பாராட்டுவார். ஜெயகாந்தன் போன்றவர்கள் ஏற்கனவே சாகித்திய அகாடமி விருதுகள் பெற்றவர்களைவிட மேற்படி விருதினைப் பெறுவதற்கு உரித்துடையவர்களென்று தன் கருத்தினை உரத்து எடுத்துரைக்கும் வெ.சா. மறுநிமிடமே தினமணிக்கதிரில் அவரது 'ரிஷி மூலம்' போன்ற கதைகளை இனி பிரசுரிக்க மாட்டொமென்ற அறிவிப்பும் வந்தபின்னரும் தொடர்ந்தும் அவ்விதழில் தன் தொடர்கதைகளை எழுதிய அவரது சந்தர்ப்பவாதத்தினைக் கேள்விக்குட்படுத்துவார். சி.சு.செல்லப்பாவின் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர். அதற்காக அவரைக் கடுமையாக விமர்சிக்கவும் தயங்க மாட்டார். இவ்விதமாகச் சுற்றிவர நிலவிய எதிர்ப்புகளின் மத்தியில், கடந்த ஐம்பதாண்டு காலமாகத் தனித்துத் துணிச்சலாகத தனது கருத்துகளைக் கூறுவதற்குத் தயங்காமல் வாழ்ந்து வருபவர். , உண்மையில் வெ.சா.வின் கலை பற்றிய பார்வை மற்றும் அவரது தர்க்கச் சிறப்பும், பரந்த அறிவும் அடங்கிய இருப்பு பற்றிய தத்துவவியற் பார்வை இவற்றின் மூலம் அவரை இனங்காண்பதே பொருத்தமானது. எந்தவிதப் பயன்களினதும் எதிர்பார்ப்பின்றித் தனது பங்களிப்பினை வழங்கிய வெ.சா.வின் பங்களிப்பு எந்தவிதக் காழ்ப்புணர்ச்சிகளுமற்று, அவரது படைப்புகளினூடு அறியப்பட வேண்டும்; வெளிப்படுத்தப்பட வேண்டுமென்பதும் இக்கட்டுரையின் இன்னுமொரு நோக்கமாகும்.

வெ.சா.வும் கலை பற்றிய அவர்தம் பார்வையும்:

'நம் உணர்வுகளும், பார்வையும்தான் நம் அனுபவ உலகைத் தருகின்றன. அவைதாம் கலைகளாகின்றன' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்'; பக்கம் 36) `'சித்திரமாகட்டும், இலக்கியமாகட்டும் சிற்பங்களாகட்டும் அது ஒரு தனிமனிதக் கலைஞனும் சமூகமும் கொண்ட உறவாடலின் பதிவு' (கலை உலகில் ஒரு சஞ்சாரம்'; க்0) அதே சமயம் 'கலைஞரின் மன உந்துதல்களுக்கேற்ப, அக்காலத்துச் சூழ்நிலைகளுக்கேற்ப, மீறியே ஆக வேண்டிய சுய, சமூக நிர்ப்பந்தங்களுக்கேற்ப, தானறிந்தோ அறியாமலோ, மரபுகள் மீறப்படுகின்றன' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்': பக்கம் 39) என்று குறிப்ப்டும் வெ.சா. 'சமூக மாற்றங்களோ' அல்லது கலைப்படைப்பு மனதிலேற்படுத்தும் விளைவாக உருவாகும் மாற்றங்களோ முன்கூட்டியே விதிகளால் தீர்மானிக்கப்பட்டுப் பெற முடியாது' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்'; பக்கம் 40) என்கின்றார். சூத்திரங்களுக்குள் கலையினை அடைப்பதை அவர் பலமாகவே எதிர்க்கின்றார். இந்த விடயத்திற்காகத்தான் அவர் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் (மார்க்சியத் தத்துவத்துடனல்ல), முற்போக்கணியினருடன் முரண்படுகின்றார். அடித்தளமாக விளங்கும் சமூக-பொருளாதார அமைப்புகளே இலக்கியம், தத்துவம், அரசியல் போன்றவற்றினை உள்ளடக்கிய மேல் கட்டுமானத்தை உருவாக்குகின்றனவென்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 'நம் தத்துவ சரித்திரத்தின் பல சிந்தனைகளை, மனித வரலாற்றின் நிகழ்ச்சிகளில் பலவற்றை அவற்றின் சமுதாய- பொருளாதார அமைப்பின் விளைவாகக் காணலாம். அப்படியில்லாதவை அநேகமுண்டு. அதுபோல சமூக- பொருளாதார அமைப்புகளைத் தத்துவ சிந்தனைகளின் விளைவாகவும் காணமுடியும். இவை ஒன்றை ஒன்று பாதிக்கின்றன. பாதிக்காமலே அமைதியாகக் கூட்டு வாழ்க்கை நடத்துவதும் உண்டு. எது நிரந்தரமான அடித்தளம், எது நிரந்தரமான மேல் கட்டுமானம் என்று சொலவ்து முடியாது. இது ஒரு முடிவற்ற சுழல். எதை ஆரம்பம், எதை முடிவு என்று சொல்வது? முடிவற்றுப் பிரவாகிக்கும் சரித்திர கதியின் ஒரு கால கட்டத்தை வேண்டுமானால் மடையிட்டுத் தடுத்து, ஒன்றை ஆரம்பம் என்றும் பின்னையதை முடிவு என்றும் சொல்லலாம். அதைச் சொல்ல வசதியாகக் கட்டிய மடை , அதன் உணமையைப் பொய்ப்பித்து விடுகிறது. மடையை நீக்கிவிட்டால், விளைவு என்று சொல்லப்பட்ட பின்னையது அடுத்த கதியில் ஆரம்பமாகக் காட்சியளிக்கும்' ('விவாதங்கள் சர்ச்சைகள்'; பக்கம் 41). இவ்விதம் வெ.சா. கூறுவதைப் பார்த்து அவரையொரு மார்க்சியத்தைக் கண்மூடித்தனமாக எதிர்த்துக் குரல்கொடுத்தவராகக் கருத முடியாது. அப்படியிருந்தால் 'மார்க்சின் முடிவுகள், மனித சிந்தனை வளத்திற்கு அளித்த பங்கு உண்மையிலேயே அதிகம்தான்' ('விவாதங்கள், சர்ச்சைகள்'; பக்கம் 88) என்று அவரால் கூறியிருக்க முடியாது. பல முற்போக்குப் படைப்புகளையெல்லாம் ஆரோக்கியமாக விமர்சித்திருக்க முடியாது. வெ.சா. மார்க்சியத்தை ஆழ்ந்து கற்றவர். அதனை அவரது கட்டுரைகளில் அவ்வப்போது வெளிப்படுத்தியிருக்கின்றார். அவ்விதம் மார்க்சியத்தைக் கற்றபின்தான் அதனை மீறிச் சிந்திக்குமொரு எதிர்ப்பாளராகத் தன்னை அடையாளப்படுத்த அவரால் முடிகிறது. நம் உணர்வுகளாலும், பார்வையினாலும் பெறப்படும் அனுபவ உலகிலிருந்து உருவாகும் கலைகளை விதிகளுக்குள் கட்டுப்படுத்திவிட முடியாதென்பதே வெ.சா.வின் பார்வை. இதனை நன்கு விளங்கிக் கொண்டால் முரண்பாடுகள் பற்றிய விதிகளை விபரிக்கும் மார்க்சியக் கோட்பாடுகளுக்கமைய வெ.சா.வின் பார்வையும் தவிர்க்கமுடியாததொரு முரண் என்று உள்வாங்கி விளங்கிக் கொண்டிருந்தால் இரு சாராருமே இத்தகைய மோதல்களை,  ,முரண்பாடுகளை ஆரோக்கியமானவைகளாகக் கருத முடியும். வெ.சா. ஒரு போதுமே மார்க்சியத்தின் மூலவர்களான கார்ல் மார்க்சையோ அல்லது எங்கெல்சையோ தரக்குறைவாக மதிப்பிட்டவரல்லர். 'மார்க்ஸினதும், எங்கெல்ஸினதும் சிந்தனைகள் அவர்களது காலத்துக்குரியன. அவர்களையும் மீறி உலகமும், சிந்தனை நிலைகளும் சென்றுவிட்டன' என்பது அவர் கருத்து. இதனால்தான் அவர் '... அவர்களது மேதைமையையோ, புரட்சிகரமான சிந்தனைகளையோ குறை கூறுவதாகாது. அவர்கள் காலத்தில் அவர்களின் எதிராளிகளின் கருத்து நிலையை அறிந்து அதற்கு எதிராக வாதாடியவர்கள். அவர்கள் காலம் மாறி விட்டது. கருத்து நிலைகள் மாறி விட்டன. மார்க்ஸ்-எங்கெல்ஸின் வாதங்கள் இன்று நமக்கு உதவுவதில்லை.' இவ்விதம் கூறும் வெ.சா. லெனினோ, ஸ்டாலினோ மார்க்ஸ்- எங்கெல்ஸின் கருத்துகளை அவர்கள் அளித்த ரூபத்தில் ஏற்றுக்கொள்ள்வில்லை. இன்றைய சோவியத் ரஷ்யாவும் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. மா-ஸே-துங்கும் ஏற்றுக்கொள்ளவில்லை' ('விவாதங்கள், சர்ச்சைகள்'; பக்கம் 80) என்பார். உண்மையில் வெ.சா. மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் தத்துவங்களைக் குப்பைக் கூடைக்குள் போடுங்களென்று கூறவில்லை. காலத்திற்கேற்ப அவை மாறவேண்டுமென்றுதான் வற்புறுத்துகின்றார். அதிலவருக்கு எந்தவித முரண்பாடுமில்லை என்பதைத்தான் அவரது கீழ்வரும் கூற்று புலப்படுத்துகின்றது:

'19-11ம் நூற்றாண்டில் முதலாளித்துவ வர்க்கம் இருந்த திசையைச் சரியாகக் கணித்துத்தான் மார்க்ஸும் எங்கெல்ஸும் தங்கள் சித்தாந்த பீரங்கிகளைக் குறிபார்த்துக் கொடுத்துள்ளார்கள். முதலாளித்துவம் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டது. அதற்கேற்ப உங்கள் பீரங்கிகளின் குறியையும் மாற்றிக்கொள்ள நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மார்க்ஸும் எங்கெல்ஸும் குறிவைத்துக் கொடுத்த இடத்தையே சுட்டுக்கொண்டிருப்பதால்தான் உலகம் முழுதும், எங்கிலும் இருக்கும் முதலாளித்துவத்தை நீங்கள் எதுவும் செய்ய முடியவில்லை' (விவாதங்கள் சர்ச்சைகள்; பக்கம் 80)

அத்துடன் அவர் கீழ்வருமாறும் கூறுவார்: ' மார்க்சையும், எங்கெல்சையும் ஒவ்வொருவரும் கற்க வேண்டும். அது அவசியம். கற்று, ஜீரணித்து, அவர்கள் சித்தாந்தத்தை நம் System-இல் ஒன்று கலக்கச் செய்ய வேண்டும். ஜீரணமாகாது மாந்தம் ஏற்பட்டுவிடக் கூடாது' என்கின்றார். இது எதனைக் காட்டுகிறதென்றால் வெ.சா. மார்க்சியத்தின் எதிர்ப்பாரல்லர்; ஆனால் அத்தத்துவத்தைக் கற்று, உள்வாங்கி, அது ஜீரணித்துப் பெறும் சக்தியில் அடுத்த வளர்ச்சிக்குச் செல்ல வேண்டுமென்ற கருத்துடையவர் என்பதையல்லவா? மேலுள்ள கூற்றின் இறுதியில் அவர் 'கம்யூனிஸ்டுகள் எல்லோருக்கும் மாந்தம் ஏற்பட்டுவிட்டது' என்பார். அவ்விதம் அவர் கூறுவது கம்யூனிஸ்ட் கட்சியினரைத்தான். எனவே கம்யூனிஸ்ட் கட்சியினரோ அல்லது முற்போக்குப் படைப்பாளிகளோ வரிந்து கட்டிக் கொண்டு வெ.சா.வின் மேல் குற்றச்சாட்டுகளை வீசுவதற்குப் பதில், தங்களுக்கு ஏன் மாந்தமெற்படவில்லையென்பதை வெ.சா.வுக்குப் புரிய வைத்தாலே போதுமானது. அதனைத்தான் அவரும் எதிர்பார்க்கின்றாரென்பதைத்தான் அவரது கட்டுரைகள், கூற்றுகள் புலப்படுத்துகின்றன. மார்க்ஸியம் பற்றி, கலையின் அம்சங்கள் பற்றியெல்லாம் வெ.சா. என்னுமொரு மனிதருக்கு அவரது கற்றுக் கேட்டு, உணர்ந்த அறிவிற்கேற்ப சரியென்று படக்கூடிய கருத்துகளுள்ளன. அந்தக் கருத்துகள் மாற்றுக் கருத்துகளாக இருக்கின்றன என்பதனால் அவற்றைக் கொச்சைப்படுத்திச் சேற்றை வாரித்தூற்றுவதில் அர்த்தமெதுவுமில்லை. கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான தர்க்கத்தின் மூலமே அது சாத்தியம். எவ்விதம் வெ.சா.வுக்கு மார்க்ஸிய கோட்பாடுகளில் ஈடுபாடுள்ள ஓவியர் தாமோதரனின் ஓவியங்களைக் கலைத்துவமிக்க படைப்புகளாகக் காண முடிகிறதோ? அந்தப் பக்குவம் நல்லதொரு ஆரோக்கியமானதொரு பண்பு. அதனால்தான் அவரால் தாமோதரன் போன்றவர்களுடன் மார்க்சியம் பற்றியெல்லாம் ஆரோக்கியமான விவாதங்களை நடாத்த முடியுமென்று கூற முடிகிறது. தன் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் வெ.சா. அவர்கள் 'என் கருத்துநிலை என்ன என்று தெரிந்து, புரிந்து, ஒப்புக் கொண்டு பின் என்னுடன் வாதிட வாருங்கள்' (விவாதங்கள் சர்ச்சைகள்; பக்கம் 80) என்று கூறுவதைப் போல் அவரது கருத்துகளைப் பற்றி விவாதிக்க விளைபவர்கள் அவர் கூறுவதைப் படித்து, புரிந்து, ('ஒப்புக் கொண்டு' என்று அவர் கூறுவதை என்னால் ஏற்க முடியாது. ஒப்புக் கொண்டால் பின் எதற்கு விவாதம்? - கட்டுரையாளர்) அவருடன் வாதிட முனைவதே சரியானதாகப்படுகிறது. மேலும் வெ.சா. மாக்ஸிய கோட்பாடுகளைச் சூத்திரங்களாக்கி , அவற்றிற்கியைய படைக்கப்படும் படைப்புகள் கலைத்தன்மையினை இழந்து விடுகின்றனவென்று கருதினாலும், கம்யூனிஸ்டுகள் ஆட்சியிலிருக்கும் நாடுகளிலிருந்து உண்மையான கலைப்படைப்புகள் வெளிவராதென்று கருதியவரல்லர். அவ்விதம் வந்தபொழுது அவற்றைக் குறிப்பிடவும் மறந்தவரல்லர். 'இன்னமும் குறிப்பாக, மிலாஸ் போர்மன் என்ற பெயரைக் கவனித்தீர்களானால் இன்னுமொன்று விளங்கும். மிலாஸ் போர்மன், கம்யூனிஸ்டுகள் அரசு செலுத்தும் செக்கோஸ்லோவேகியாவிலிருந்து வந்தவர். அங்கு இருந்தவரின் அவரது படைப்புகள் , கலைப்படைப்புகளாக இருந்தன. காரணம் கம்யூனிஸ ஆட்சி அல்ல. அங்கு இருந்த திரைப்பட உள்வட்டச சூழல், கலைப் பண்புகொண்ட சூழல். ஆகவே அங்கு இருந்தவரை அவர் படைத்தவற்றின் கலைப்பண்புகளைக்கண்டு, கலையாக அவற்றை ஏற்றுக் கொண்டோம். அமெரிக்கா வந்ததும் அமெரிக்க திரைப்பட உள்வட்டச் சூழலின் வியாபாரப் போக்கு, அவரது கலையைக் கொன்றுவிட்டது.' (விவாதங்கள் சர்ச்சைகள்; பக்கம் 73)

ஆகச் சுருக்கமாகக் கூறப்போனால் 'நம் உணர்வுகளும், பார்வையும்தான் நம் அனுபவ உலகைத் தருகின்றன. அவைதாம் கலைகளாகின்றன' என்றும் , அவ்விதமான கலைப்படைப்புகள் கோட்பாடுகளின் சூத்திரங்களாகி, வெறும் பிரச்சாரங்களாக மாறுதல் கூடாதென்றும், ஆயினும் நல்லதொரு கலைப்படைப்பு உருவாவதென்பது அது எந்தச் சமுதாயத்தில் உருவாகின்றதோ அங்கு நிலவும் கலைப்பண்புகொண்ட உள்வட்டச் சூழல்களிலேயே தங்கியிருக்கிறதென்றும் வெ.சா. கருதுவதாகக் கருதலாம். அதனைத்தான் அவரது படைப்புகளும் வெளிக்காட்டி நிற்கின்றன.

வெ.சா.வும் இருப்பு பற்றிய தத்துவவியல் பற்றிய அவரது பார்வையும்!..
'நா.வானமாமலையின் ஆராய்ச்சி விநோதங்கள்' என்றொரு கட்டுரையினைப் பேராசிரியர் நா.வானமாமலை தனது 'ஆராய்ச்சி' என்னும் காலாண்டுப் பத்திரிகையில் பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள்முதல்வாதக் கருத்துகள் பற்றியதாக எழுதியதற்குப் பதிலடியாக வெ.சா. எழுதியிருந்தார். பேராசிரியர் கைலாசபதியின் 'தமிழ் நாவல் இலக்கியம்' என்னும் நூலிற்குப் பதில் விமர்சனமாக வெ.சா. 'மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்' என்றொரு நீண்ட கட்டுரையினை , 'நடை' சஞ்சிகையில் தொடராக எழுதியிருந்தார். வெ.சா.வின் நீண்ட அக்கட்டுரைக்கு எதிரொலியாக நீண்டதொரு கட்டுரையொன்றினைப் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் எழுதியிருந்தார். அது பின்னர் அவரது 'மார்க்சியத் திறனாய்வும், இலக்கியமும்' என்னும் நூலிலும் சேர்க்கப்பட்டிருந்தது. அதிலவர் வெ.சா. தனது 'நா.வானமாமலையின் ஆராய்ச்சி விநோதங்கள்' என்றொரு கட்டுரையில் 'நான் கருத்து முதல்வாதியா? பொருள் முதல்வாதியா? இரண்டும்தான். இரண்டும் இல்லைதான்' என்று குறிப்பிட்டிருப்பார். அதனைத் தனது கட்டுரையில் நுஃமான் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:"'நான் கருத்துமுதல்வாதியா? பொருள் முதல்வாதியா? இரண்டும்தான். இரண்டும் இல்லைதான்' என்று சாமிநாதன் கூறுவது எவ்வளவு பேதமை, தத்துவ சித்தாந்தங்கள் எல்லாம் சாராம்சத்தில் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்ற இரண்டு பிரிவுக்குள் ஏதோ ஒன்றுள் அடங்கும் என்பதும், சாமிநாதன் திட்டவட்டமாகக் கருத்துமுதல்வாதச் சிந்தனையாளன் என்பதும் தத்துவ விசாரத்தைப் பொறுத்தவரை இதுவும் அல்லாத அதுவும் இல்லாத 'அலி' பிறவிகள் இல்லை என்பதும் வெளிப்படையான உண்மைகள்' ('மார்க்சியமும், இலக்கியத் திறனாய்வும்' பக்கம் 126)

வெ.சா. தனது கட்டுரையில் மேற்படி முடிவுக்கு வரமுன்னர் விளக்கமாகக் குறிப்பிடும் விபரங்களை மறைத்துவிட்டு அல்லது தவறுதலாகத் தவறவிட்டு நுஃமான் மேற்படி கருத்தினைக் கூறியிருக்கிறாரென்று தெரிகின்றது. இப்பொழுது வெ.சா. கூறியுள்ள முழு விபரத்தையும் பார்ப்போம்:

"நான் நாஸ்திகன். கடவுளை நம்புகிறவனில்லை.(உண்மையான தெய்வ பக்தி உள்ளவர்களை மதிப்பவன. நாம் காணும் பொருட்களெல்லாம் மாயை என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவை நமக்கு அளிக்கும் தோற்றம், அப்பொருட்களின் உண்மை அல்ல. இத் தோற்றம் நம்மைச் சார்ந்த , நம்புலன்களைச் சார்ந்த கருத்து. அந்த உண்மையை அதன் முழுமையில் நாம் அறிய முடியுமா என்பது சந்தேகமே. உண்மையை அறிவது அறிவினால் மட்டும் சாத்தியமில்லை. புலன்களை, தர்க்க அறிவை மீறிய உள்ளொளி மூல உண்மையைக் காண்பதும் சாத்தியமே. விஞ்ஞானமும், சுற்றமும் அவற்றின் சாத்தியங்களில் எல்லை வரம்புகள் கொண்டவை. இப்போதைய அதன் எல்லைகள் நாளை அகன்று செல்லலாம்ம். ஆனால் அதற்கும் அப்பால், அப்பால் என்று உண்மை எட்டாதே அகன்று சென்று கொண்டிருக்கிறது. உள்ளொளி மூலம் பெற்றது உண்மைதானா என்பதை அறிய , பின்னர் தர்க்க அறிவும், விஞ்ஞானமும்தான் துணைபுரிய வேண்டும்.... புலன்கள் சிந்தனைக்கு வழி வகுக்கின்றன. புலன்கள் மூலம்தான் சிந்தனை சாத்தியமாகிறது முதலில். சிந்தனை மட்டுமல்ல. பல்வேறு மனநிலைகளும் கூடத்தான். ஆனால் ஒரு கட்டத்தில் அவை புலன்களை மீறி ஜீவிக்க ஆரம்பிக்கின்றன. அதே போல் இதற்கு எதிராக மாற்றுப் பிரவாகம் உண்டு. சிந்தனையும் மனநிலைகளும் புலன்களின் இயக்கத்திற்கும் காரணமாகின்றன.' (விவாதங்கள், சர்ச்சைகள்; பக்கம் 40)

இவ்விதமாகக் குறிப்பிட்டுவிட்டுத்தான் வெ.சா. 'நான் கருத்து முதல்வாதியா? பொருள் முதல்வாதியா? இரண்டும்தான். இரண்டும் இல்லைதான்' என்று குறிப்பிடுகின்றார். நுஃமான் இவற்றையும் ஆழ்ந்து கவனித்திருந்தால் "'நான் கருத்துமுதல்வாதியா? பொருள் முதல்வாதியா? இரண்டும்தான். இரண்டும் இல்லைதான்' என்று சாமிநாதன் கூறுவது எவ்வளவு பேதமை" என்று கூறியிருந்திருக்க மாட்டார். இப்பொழுது மீண்டுமொருமுறை வெ.சா.வின் கூற்றினை கூர்ந்து புரிந்து கொள்ள முயல்வோம். 'நான் நாஸ்திகன். கடவுளை நம்புகிறவனில்லை.(உண்மையான தெய்வ பக்தி உள்ளவர்களை மதிப்பவன. நாம் காணும் பொருட்களெல்லாம் மாயை என்று நான் நினைக்கவில்லை' என்று கூறும்பொழுது வெ.சா. ஒரு பொருள்முதல்வாதியாகத் தென்படுகின்றார். இப்பிரபஞ்சத்தை ஆக்கியவர் அதனிலும் வேறான இன்னொருவரான கடவுள் என்பதை அவர் ஏற்கவில்லை. அவ்விதம் அவர் ஏற்றிருந்தால், காணும் பொருளெல்லாம் மாயை என்பதை அவர் ஏற்றிருந்தால் நிச்சயம் அவர் ஒரு கருத்துமுதல்வாதியாகத்தான் தென்பட்டிருப்பார். ஆனால் அதே சமயம் காண்பவற்றையெல்லாம் மாயையென்றும் நான் கருதவில்லையென்கின்றார். அவ்விதமாயின் அவர் காண்பவற்றை உண்மையென நம்பும் பொருள்முதல்வாதியா என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அவர் 'ஆனால் அவை நமக்கு அளிக்கும் தோற்றம், அப்பொருட்களின் உண்மை அல்ல. இத் தோற்றம் நம்மைச் சார்ந்த , நம்புலன்களைச் சார்ந்த கருத்து. அந்த உண்மையை அதன் முழுமையில் நாம் அறிய முடியுமா என்பது சந்தேகமே.' என்றும் கூறுகின்றார். ஆழ்ந்து நோக்கினால் இதுவும் சரிதான். நாம் காண்பது , உணர்வது, கேட்பது, மணப்பது, சுவைப்பது எல்லாமே புலன்களின் மூலம் ஒருவரது மூளைக்குள் சென்று அங்கு அதன் செயற்பாடுகள் மூலம் விளங்கிக்கொள்ளுமொரு செயற்பாடுதான். அப்படியென்றால் நாம் காணும் எல்லாமே, அனைத்துமே நம் மூளையின்னுள்ளிருந்து உருவாகுமொன்றா? அப்படியாயின் அதற்கும் வெளியில் உண்மையொன்றென்று ஒன்று உண்டா? அதனால்தான் 'நாம் காணும் பொருட்களெல்லாம் மாயை என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவை நமக்கு அளிக்கும் தோற்றம், அப்பொருட்களின் உண்மை அல்ல. இத் தோற்றம் நம்மைச் சார்ந்த , நம்புலன்களைச் சார்ந்த கருத்து. அந்த உண்மையை அதன் முழுமையில் நாம் அறிய முடியுமா என்பது சந்தேகமே' என்று வெ.சா. சந்தேகத்தைக் கிளப்பும்போது அது நியாயமாகவே படுகிறது. ஏனெனில் புலன்களின் செய்றபாடுகளின் மூலம் மூளையில் உருவாகும் இப்பிரபஞ்சம் பற்றிய விம்பமானது தர்க்கரீதியாகப் பார்ப்போமானால் உண்மையா என்று கூட எமக்குத் தெரியாது. ஏனெனில் எல்லாமே புலன்களைச் சார்ந்திருப்பதால் அவற்றை மீறியோர் உண்மையிருக்க முடியுமென்பதை நிரூபிக்கவே முடியாது. வெ.சா.வும் இவ்விதம் சிந்தித்திருக்கின்றார். அதனால்தான்'நம்புலன்களைச் சார்ந்த கருத்து. அந்த உண்மையை அதன் முழுமையில் நாம் அறிய முடியுமா என்பது சந்தேகமே. உண்மையை அறிவது அறிவினால் மட்டும் சாத்தியமில்லை' என்று அவரால் கூறிட முடிகிறது. இதனால்தான் கடவுளென்றொரு மேலானதொரு சக்தி இல்லையென்று நம்பும் விடயத்திலும், எல்லாமே மாயை அல்ல என்பதை நம்பும் விடயத்திலும் பொருள்முதல்வாதியாகத் தென்படும் அவர் 'ஆனால் அவை நமக்கு அளிக்கும் தோற்றம், அப்பொருட்களின் உண்மை அல்ல. இத் தோற்றம் நம்மைச் சார்ந்த , நம்புலன்களைச் சார்ந்த கருத்து. அந்த உண்மையை அதன் முழுமையில் நாம் அறிய முடியுமா என்பது சந்தேகமே.' என்று கூறும்பொழுது காண்பதையே உண்மையென்று அடித்துக் கூறுமொரு பொருள்முதல்வாதியாக அவரைக் காண முடியவில்லை. பொருள்முதல்வாதியாக மட்டுமவர் இருந்திருந்தால் புலன்களுக்கு அப்பாலும் பொருள்மயப்பட்டதொரு உலகம் இருக்கிறதென்பதில் அவருக்குச் சந்தேகம் வந்திருக்கக் கூடாது. ஆக அவர் ஒரு சமயம் பொருள்முதல்வாதியாகத் தென்படுகின்றார். அடுத்த கணமே 'ஆனால் அவை நமக்கு அளிக்கும் தோற்றம், அப்பொருட்களின் உண்மை அல்ல.' என்று கூறும்பொழுது அவ்விதம் இல்லாமலும் இருக்கின்றார். ஆயினும் அடுத்துவரும் அவரது கூற்றுகளான 'புலன்களை, தர்க்க அறிவை மீறிய உள்ளொளி மூல உண்மையைக் காண்பதும் சாத்தியமே.' என்பதும், 'புலன்கள் சிந்தனைக்கு வழி வகுக்கின்றன. புலன்கள் மூல்ம்தான் சிந்தனை சாத்தியமாகிறது முதலில். சிந்தனை மட்டுமல்ல. பல்வேறு மனநிலைகளும் கூடத்தான். ஆனால் ஒரு கட்டத்தில் அவை புலன்களை மீறி ஜீவிக்க ஆரம்பிக்கின்றன. அதே போல் இதற்கு எதிராக மாற்றுப் பிரவாகம் உண்டு. சிந்தனையும் மனநிலைகளும் புலன்களின் இயக்கத்திற்கும் காரணமாகின்றன' அவரை ஒருவிததில் கருத்துமுதல்வாதியாகக் காட்டுகின்றன. ஏனெனில் உள்ளொளியென்று அவர் கூறுவது புலன்களை மீறியது. அதே போல் 'சிந்தனை மட்டுமல்ல. பல்வேறு மனநிலைகளும் கூடத்தான். ஆனால் ஒரு கட்டத்தில் அவை புலன்களை மீறி ஜீவிக்க ஆரம்பிக்கின்றன' என்று கூறும்பொழுது அக்கூற்றும் அவரையொரு கருத்துமுதல்வாதியாக்கக் காட்டுகின்றன. புலன்களை மீறுமொரு சக்தியாக இங்கு சிந்தனை அதாவது கருத்து குறிப்பிட்ப்படுகின்றது. இது , அதாவது பொருளை மீறியதொரு சக்தி என்னும் நிலைப்பாடு, கருத்து முதல்வாதிகளினுடையது. இங்கு கருத்துமுதல்வாதியாகக் காணப்படும் வெ.சா. 'நான் நாஸ்திகன். கடவுளை நம்புகிறவனில்லை' என்னும் போதும், 'நாம் காணும் பொருட்களெல்லாம் மாயை என்று நான் நினைக்கவில்லை' என்று குறிப்பிடும்போதும் கருத்துமுதல்வாதியாகத் தென்படவில்லை. ஆக அவர் தன்னைப்பற்றிக் குறிப்பிட்ட 'நான் கருத்து முதல்வாதியா? பொருள் முதல்வாதியா? இரண்டும்தான். இரண்டும் இல்லைதான்' என்னும் கூற்றுச் சரியானதுதான். இப்பொழுது இன்னுமொரு கேள்வி எழுகின்றது. அப்படியாயின் வெ.சா.வின் அவ்விதமான கூற்றுக்கள் நுஃமான் கூறுவது போல் 'பேதமை'யானதுதானா? 'தத்துவ விசாரத்தைப் பொறுத்தவரை இதுவும் அல்லாத அதுவும் இல்லாத 'அலி' பிறவிகள் இல்லை என்பதும் வெளிப்படையான உண்மை:' என்பதும் சரியான நிலைப்பாடுதானா?' ஏதாவதொரு நிலைப்பாடொன்றினை எடுக்க வேண்டுமென்பது கட்டாயம்தானா? இச்சமயத்தில் மகாகவி பாரதியையும் சிறிது நினைவு கூர்தல் பொருத்தமானதே. பாரதியின் மிகவும் புகழ்பெற்ற கவிதையொன்றுண்டு. அது 'நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானா? பல தோற்ற மயக்கங்களோ? என்று தொடங்கும் கவிதை. அதன் முழு வடிவம் கீழே:

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.

மேற்படி கவிதையில் ஆரம்பத்தில் பாரதி 'நிற்பது, நடப்பது, பறப்பது ஆகிய உயிரினங்களெல்லாம் வெறும் சொற்பனந்தானா? வெறும் பல்தோற்ற மயக்கங்கள் மட்டும்தானா?' என்று வினா எழுப்புவான். அவ்விதம் எழுப்பியவன் தொடர்ந்தும் 'வானகம், இளவெயில், மரங்களெல்லாம் வெறும் கானல்தானா? காட்சிப் பிழைதானா? சென்றவையெல்லாம் கனவு போல் சென்று மறைந்ததனால் தான் வாழும் இந்த உலகும், ஏன் தானுமே கனவுதானோ?' என்றும் சிந்தனையைத் தட்டிவிடுவான். இறுதியில் 'சோலையிலுள்ள மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால், அதனைப் பொய்யென்று சொல்லலாமோ?' என்றெதிர்க் கேள்வியெழுப்பி இறுதியில் 'வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமா? ஆகக் காண்பதுவே உறுதி கண்டோம். காண்பதைத்தவிர எதுவும் உண்மையில்லை' என்று கூறுவான். இந்த விடயத்தில் பாரதி ஒரு பொருள்முதல்வாதியாகத் தெரிவான். இந்த விடயத்தில் அவன் கருத்துமுதல்வாதியல்லன். ஆனால் அடுத்தவரியிலே 'காண்பது சக்தியாம். இந்தக் காட்சி நித்தியமாம்' என்னும்போது அவன் குறிப்பிடும் சக்தி என்பது என்ன என்றொரு கேள்வி எழுகிறது. அவன் கண் முன்னால் காணப்படும் பொருளுலகைத் தவிர வேறொரு சக்தியுள்ளதா? அவ்விதமான சக்தியும் பொருளும் ஒன்றென்று கூறுகின்றானா? அதாவது அந்தச் சக்தியானது தனித்தும், பொருளாகவும் ஒரே சமயத்தில் சமயங்கள் கூறுவதுபோல் உருவமாகவும், அருவமாகவும், அரு-உருவமாகவும் உள்ளதொன்றா என்றொரு கேள்வியும் எழுகிறது. அவ்விதம் அவன் கூறுவானாயின் பொருள் தவிர்ந்த இன்னொரு சக்தியும் உண்டென்ற அர்த்தத்தில் அவன் கருத்துமுதல்வாதியாகவும் கருதப்படவேண்டும். அந்த அர்த்ததில் அவன் பொருள்முதல்வாதியல்லனென்றும் கருதலாம். தொடர்ந்து அவனது இன்னொரு கவிதையான 'அல்லா' என்றொரு கவிதையில் 'பல்லாயிரம் பல்லாயிரம் கோடியண்டங்கள்/ எல்லாத் திசையிலுமோ ரெல்லையில்லா வெளிவானிலே/ நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்' என்று 'கூறுவதைக் கவனிக்கும்போது அவன் நம் முன்னால் விரிந்திருக்கும் பொருள் உலகைப் படைத்தது அதனினும் வேறானதொரு சக்தியென்பதை நம்புமொருவனாகத் தென்படுவான். இவ்விதமே 'அறிவே தெய்வம்' என்றொரு கவிதையில் 'உள்ளத னைத்திலு முள்ளொளி யாகி/ யொளிர்ந்திடு மான்மாவே - இங்குக்/ கொள்ளற்கரிய பிரமமென் றேமறை/கூவுதல் கேளீரோ?' என்றும் 'ஒன்றுபிரம முள்ளதுண்மை யஃதுன்/ உணஎவெனக் கொள்வாயே' என்றும் கூறுகையில் கருத்துமுதல்வாதியாகவும் தென்படுவான். ஆக மகாகவி பாரதியையும் ஒருவிதத்தில் கருத்துமுதல்வாதியாகவும், பொருள்முதல்வாதியாகவும், மறுபுறத்தில் கருத்து முதல்வாதியல்லாதவனாகவும், பொருள்முதல்வாதி அல்லாதவனாகவும் வெ.சா. தன்னைப் பற்றிக் குறிப்பிடுவதைப் போல குறிப்பிடலாம். இந்த விடயத்தில் பாரதியை நோக்கியும் அவனது மேற்படி கவிதையின் பொருளையிட்டு நுஃமான் கூறுவது போல் அது 'பேதமை'யானதுதானா? தத்துவ விசாரத்தைப் பொறுத்தவரை இதுவும் அல்லாத அதுவும் இல்லாத அலி பிறவிகள் இல்லை என்பதும் வெளிப்படையான உண்மை:' என்பதும் சரியான நிலைப்பாடுதானா என்ற தர்க்கச்சிறப்பு மிக்க கேள்வியொன்றினை எழுப்பலாம். உண்மையில் பாரதியின் மேற்படி நிலைக்குக் காரணம் அவனது பேதமையல்ல. அறிவுத் தாகமெடுத்து அலையும் அவனது உள்ளத்தில் அதன் விளைவாக எழுந்த கேள்விகளின் விளைவேயெனபது வெள்ளிடைமலை. மேற்படி முரண்பட்ட நிலை போன்ற பலவற்றை அவனது படைப்புகளில் ஒருவரால் கண்டு பிடிக்க முடியும். அவையெல்லாம் அவனது மேதமையின் வளர்ச்சிப் படிக்கட்டுகள்தான். பாரதியின் மேற்படி கவிதையைப் போன்றதுதான் வெ.சா.வின் மேற்படி கட்டுரையும் அதிலவர் வந்தடையும் 'நான் கருத்து முதல்வாதியா? பொருள் முதல்வாதியா? இரண்டும்தான். இரண்டும் இல்லைதான்' என்னும் முடிவும். உண்மையில் மேற்படி அவரது நிலையும் பாரதியைப் போல் அறிவுத்தாகமெடுத்து அலையும் அவரது நிலையினைத்தான் குறிக்கிறதென்று கொள்வதுதான் சரியான நிலைப்பாடாகவிருக்க முடியும்.

பொதுவாக மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து வெ.சா. பற்றி நாம் வரக் கூடிய முடிவுகளில் முக்கியமானவையாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

1. வெ.சா. எதிர்ப்பது மார்க்சியத்தையல்ல. அதன் கட்சி அரசியலைத்தான். அது கலைகளில் போடும் கட்டுப்பாடுகளைத்தான். அத்தகைய கட்டுப்பாடுகள் கலைப்படைப்புகளின் கலைத்துவமற்றதாக்கி வெறும் பிரச்சாரமாக்கி விடுமென்று கருதுவதனால்தான் அவர் அத்தகைய கட்சிக் குறுக்கீட்டை அவர் எதிர்க்கின்றார். இது அவரது கருத்து. எல்லோரும் ஒரே கருத்தைத்தான் வைத்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் சிந்தனையாற்றல், தேடல், அறிவு, சூழல், கிடைக்கும் அனுபவம் போன்றவற்றிற்கேற்ப ஒவ்வொருவிதமான முடிவு அல்லது கருத்து இருக்கும். இருக்கலாம். அது இயல்பானதொன்றுதான். அதை மறுக்க விரும்பினால் ஆரோக்கியமாக விவாதிக்கலாம். அதுவே சரியான நாகரிகமடைந்த் மனிதரின் நிலைப்பாடாகவிருக்க முடியும்.

2. வெ.சா. மார்க்ச், எங்கெல்ஸ் மீதும் அவர்களது கோட்பாடுகள் மீதும் நன்கு மதிப்பு வைத்திருப்பவர். ஆனால் அவை உருவான காலகட்டத்திற்குரியவை. இன்று நிலவும் சமுதாயப் பொருளியற் சூழலுக்கேற்ப அவற்றிலும் மாறுதல்கள் செய்யப்பட வேண்டுமென்பதையும் அவ்ர் வலியுறுத்துபவர்.

3. பாரதியைப்போல் வெ.சா.வும் மூடநம்பிக்கைகளை வெறுப்பவர். அதனால்தான் தன்னையொரு நாஸ்த்திகவாதியென்று அவரால் குறிப்பிட முடிகிறது.

4. இருப்பைப்பற்றி பாரதியைப் போன்று தத்துவத் தேடல் மிக்கவர். பேராசிரியர் நா.வானமாலையின் கட்டுரைக்கு எதிர்ப்பாக அவர் எழுதிய கட்டுரைகள் அதனைத்தான் எடுத்தியம்புகின்றன. கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் பற்றிய அவரது எண்ணங்கள் அதற்கு நல்ல உதாரணங்களாகவுள்ளன.

ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடியான் அறிஞர் அ.ந.கந்தசாமி இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் கால் பதித்தவர். அவர் 'ஈழத்து சிருஷ்டி இலக்கியத்துக்கு குழி தோன்றும் முயற்சி' என்னும் கட்டுரையில் ('தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும்'- தொகுப்பு: சுபைர் இளங்கீரன்; சவுத் ஏசியன் புக்ஸ் பதிப்பகம்; மே 1993) ஈழத்திலும் தென்னகத்திலும் சிருஷ்டி இலக்கியத்துறையில் ஈடுபட்டுத் தமிழுக்குப் பயனுள்ள சேவை செய்து வருபவர்களாக கலை கலைக்காகவே என்று கலைப் பிரக்ஞையுடன் இலக்கிய சிருஷ்டியில் ஈடுபட்டுள்ளவர்கள் (க.நா.சு தொடக்கம் கனக செந்திநாதன் வரையிலானவர்கள்), கலை ஒரு பொழுது போக்குச் சாதனம் என்ற கருத்துடையவர்கள் (கல்கி, நாடோடி தொடக்கம் யாழ்ப்பாணத்துத் தேவன் வரையிலானவர்கள்), மற்றும் கலையை ஒரு சமுதாய சக்தியாக, கலையை ஓர் ஆயுதமாகக் கருதுபவர்கள் (சிதமபர ரகுநாதன் தொடக்கம் டானியல் வரையிலானவர்கள்) ஆகிய மூன்று பிரிவினர்களைக் குறிப்பிடுவார். பின்னர் அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் அவர் 'இந்த மூன்று பிரிவினருக்குள்ளேயும் பலவிதமான கருத்து வேறுபாடுகள் உண்டு. அவற்றுள் சில ஆழமான தத்துவப் பிரச்சினைகள் என்பதையும் நாம் பூசி மெழுக விரும்பவில்லை. இருந்தபோதிலும் இந்த மூன்று சாராருக்கும் இடையில் ஒரு முக்கியமான பொதுத்தன்மையும் இழையோடிக் கொண்டிருக்கிறது என்பதை நான் இங்கு வற்புறுத்த விரும்புகிறேன். அந்தப் பொதுத்தன்மை என்னவென்றால் தமிழ் வளர்கிறது, தமிழை எம்மால் வளர்க்க முடியும், தமிழ் காலத்துக்கேற்ப மாறுதல் அடைந்து செல்லவல்லது என்பது போன்ற எண்ணங்களில் இவர்களுக்குள்ள அசையாத ஈடுபாடாகும். இந்த நம்பிக்கைகளை தரும் மனோ ஆரோக்கியம்தான் இவர்களை சிருஷ்டி இலக்கியத்துறையில் உற்சாகத்தோடு இறங்கச் செய்கிறது' ('தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும்' ;பக்கம் 36)

அ.ந.க.வின் இத்தகைய மனநிலை ஆரோக்கியமானது. அவரொரு மார்க்சியவாதியாகவிருந்தபோதிலும் இவ்விதமாக ஏனைய இலக்கியப் போக்குள்ளவர்களின் பங்களிப்புகளையும் அங்கீகரிக்க முடிகிறது. இத்தகையதொரு மனோபாவம் தமிழ் இலக்கிய மற்றும் கலைத்துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு அவசியம். இவர்களுக்கிடையில் பல்வேறு முரண்பாடுகள் மற்றும் தத்துவச் சிக்கல்களிருந்த போதிலும் இவர்கள் அனைவருமே ஆரோக்கியமான பங்களிப்பினைத் தமிழ் கலை, இலக்கியத் துறைக்கு வழங்கியவர்கள். வழங்குபவர்கள். இந்த நிலையில் வெங்கட் சாமிநாதன், கலாநிதி கைலாசபதி , பேராசிரியர் நா.வானமாமலை போன்றோரின் வாதங்களெல்லாம் , முரண்பாடுகளெல்லாம் தமிழ்க் கலை, இலக்கியத் துறைகளை வளம்படுத்தின; வாசகர்களின் சிந்தனைக் குதிரைகளைத் தட்டி விட்டன. இதே சமயம் வெங்கட் சாமிநாதனின் பங்களிப்பானது இன்னுமொரு வகையிலும் மிகவும் முக்கியமானது. கடந்த ஐம்பது வருடங்களாகத் தாங்கிப் பிடிக்க எந்தவிதமான கட்சியோ, ஸ்தாபனமோ (முற்போக்கிலக்கியக்காரர்களுக்குள்ளது போன்று) இல்லாததொரு நிலையில், தன்னந்தனியாகத் தன் பரந்த வாசிப்பு, கலைகள் பற்றிய விரிவான புரிந்துணர்வு, இரசனை மற்றும், தேடல் மிக்க சிந்தனையின் விளைவாகத் தன் கருத்துகளைத் துணிச்சலுடன் எடுத்தியம்பி வந்தவர். யாருக்குமே அடிபணிந்தவரல்லர். சரியென்று பட்டதை நேருக்கு நேராகவே அடித்துக் கூறும் ஆற்றல் மிக்கவர். ஆளுக்காள் துதிபாடி வட்டங்களை உருவாக்கி, ஒருவரையொருவர் துதிபாடித் தம்மிருப்பை நிலைநாட்டிட முனையுமொரு சூழலில், தன் அறிவை மட்டுமே மூலதனமாக்கி, எந்தவித விளைவுகளையும், பயன்களையும் எதிர்பார்க்காமல் , தனக்குச் சரியென்று பட்டதை வெளிப்படுத்தி வந்தவர்; வருகின்றவர். திரு வெ.சா.வின் பங்களிப்பு தமிழ்க் கலை இலக்கியத்துறையில் என்றென்றும் நன்றியுடன் நினைவுக்கூரப்படுமொரு பங்களிப்பென்று துணிந்து கூறலாம்.. .

உசாத்துணை நூல்கள்:
1. 'கலை உலகில் ஒரு சஞ்சாரம்' - வெ.சாமிநாதன் (சந்தியா பதிப்பகம்; 2004)
2. 'விவாதங்கள் சர்ச்சைகள்' - வெ.சாமிநாதன் (அமுதசுரபி பதிப்ப்கம்; டிசம்பர் 2003)
3. 'அகமும் புறமும்' - தொகுப்பு: சோலைச் சுந்தரப்பெருமாள் (நிவேதிதா பதிப்பகம்; 2008)
4. 'மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்'- எம்.ஏ.நுஃமான்( அன்னம் பதிப்பகம்; சிசம்பர் 1987)
5. 'இன்னும் சில ஆளுமைகள்' - வெ.சாமிநாதன் (எனி இந்தியன் பதிப்பகம்; டிசம்பர் 2006)
6. 'புதுசும் கொஞ்சம் பழசுமாக..' - வெ.சாமிநாதன் (கிழக்கு பதிப்பகம்; ஜூன் 2995)
7. பாரதியார் கவிதைகள் (மணிவாசகர் பதிப்பகம்; பெப்ருவரி 2000)
8. 'தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும்' -தொகுப்பு- சுபர் இளங்கீரன் ( சவுத் ஏசியன் புக்ஸ்; மே 1993)
9. 'தமிழ் நாவல் இலக்கியம்'- பேராசிரியர் கைலாசபதி (குமரன் பப்ளிஷர்ஸ்; ஏப்ரல் 1999)

நன்றி: பதிவுகள் மார்ச் 2011; இதழ் 135


6. அ.ந.க.வின் 'மனக்கண்'

அறிமுகம்

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியெனக் கருதப்படுபவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், விமர்சனம், நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஈடுபட்டு ஆழமாகத் தன் தடத்தினைப் பதித்தவரிவர். இவர் எழுதிய ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. இந்த 'மனக்கண்' நாவல் பற்றிய எனது விமர்சனக் குறிப்புகளே இவை. எனக்குத் தெரிந்த வரையில் அ.ந.க.வின் 'மனக்கண்' நாவல் பற்றி வெளிவந்த விரிவான, முதலாவதான,   விமர்சனக் கட்டுரை இதுவாகத்தானிருக்கும். அந்த வகையில் இக்கட்டுரைக்கொரு முக்கியத்துவமுண்டு. இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று: நமது விமர்சகர்களுக்கு நூலாக வெளிவந்த நூல்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதிப்பழக்கம். இன்னுமொரு காரணம் பெரும்பாலான விமர்சகர்களுக்குத் தேடுதல் மிகவும் குறைவு. தமக்கு அனுப்பி வைக்கப்படும் நூல்களுக்கு மட்டுமே அவர்களது கவனம் திரும்பும். அவ்விதம் கிடைக்கும் நூல்களைத் தம் புலமையினை வெளிப்படுத்துவதற்குத் தொட்டுக்கொள்ளப்படும் ஊறுகாயைப்போல் பாவித்துக்க்கொள்வார்கள்.  மிகச்சிலர்தாம் நூலாக வெளிவராத பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளுக்கும் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள்.இவர்களை உண்மையில் பாராட்டத்தான் வேண்டும். [ தனது இறுதிக்காலத்தில் இவர் மலையகத்தமிழர்களை மையமாக வைத்து கழனி வெள்ளம் என்றொரு நாவலினை எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாவல்  எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், அது 1983 இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறியப்படுகிறது]. 'மனக்கண்' ஈழத்திலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூன் 29, 1967 வரையில் தொடராக வெளிவந்து இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர்களின் ஆதரவினைப் பெற்றதொரு நாவல். இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று அ.ந.க நாவலில் வரும் பாத்திரங்களுகிடையிலான உரையாடல்களில் பேச்சுத்தமிழைக் கையாளுவதற்குப் பதில் , பல்வேறு பகுதிகளிலுமிருந்து வாசிக்கும் அனைவருக்கும் புரியவேண்டுமென்பதற்காகச் 'சரளமான ஒரு செந்தமிழ் நடையினைப்' பாவித்திருப்பதுதான்.

இது பற்றி அ.ந.க. நாவலின் முடிவுரையில் பின்வருமாறு கூறியிருக்கின்றார்: "

நடை என்பது ஒருவனின் உடையைப் போல. சாமுவேல் பட்லர் என்ற ஆங்கில எழுத்தாளர் எந்தக் கலையிலுமே “ஸ்டைல்” (Style) அல்லது “நடை” என்பது நாகரிகமான உடையைப் போல இருக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். அது பார்ப்பவர்களின் கவனத்தை மிக மிகக் குறைவாக ஈர்க்க வேண்டுமென்பது அவரது கருத்து. அநாவசியமான “ஜிகினா” வேலைப்பாடுகள் உள்ள உடை கூத்து மேடைக்கோ, வீதியில் வெற்றிலை விற்பனை செய்பவனுக்கோ தான் பொருத்தம். ஸ்டீபன் ஸ்பெண்டர் இதனை இன்னும் அழுத்தமாகக் கூறியிருக்கிறார். ஆகச் சிறந்த எழுத்தாளர்களுக்கு நடையே இல்லையாம். எடுத்த இவ்விஷயத்தை எவ்விதம் சொன்னால் தெளிவும் விளக்கமும் ஏற்படுகிறதோ அவ்விதம் சொல்லிச் செல்வதை விட்டு செயற்கையான மேனிமினுக்கு வேலைகளை மேற்கொள்வதைப் பண்பும் முதிர்ச்சியும் பெற்ற எழுத்தாளர்கள் இன்று முற்றாக ஒதுக்கி வருகிறார்கள். இயற்கைக்கு மாறான செயற்கை நடைகளை வருவித்துக் கொண்டு எழுதுபவர்கள் சொந்த மயிருக்குப் பதிலாக டோப்பா கட்டிக் கொண்டவர்களை ஞாபகமூட்டுகிறார்கள். சிரில் சொனோலி (Cyril Chonolly) என்ற ஆங்கில விமர்சகர் இயற்கையான நடையில் எழுதுபவர்களை “அவர்கள் சொந்த மயிருடன் விளங்குபவர்” என்று பாராட்டுகிறார். வீதியில் யாராவது இயற்கைக்கு மாறாக ராஜ நடை போட்டு நடந்தால் நாம் அதைப் பார்த்துச் சிரிக்கிறோமல்லவா? இலக்கியத்திலும் இதே நிலைதான். மனக்கண்”ணை நேரிய ஒரு நடையிலேயே நான் எழுதியிருக்கிறேன். நான் வாசகர்களுக்குக் கூற வந்த பொருளின் தெளிவே என் குறிக்கோள். அதனால் தான் பாத்திரங்களின் பேச்சிற் கூட ஒவ்வொரு பிரதேசத்தினருக்கே விளங்கக் கூடிய பிரதேச வழக்குகளை மிகவும் குறைத்து பொதுவாகத் தமிழர் எல்லோருக்குமே விளங்கக் கூடிய சரளமான ஒரு செந்தமிழ் நடையை நான் கையாள முயன்றிருக்கிறேன். இதனால் தான் இக்கதை யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் மலை நாட்டிலும் ஏக காலத்தில் வாசகர்களின் பேராதரவைப் பெற்றது."

அ.ந.க. வாசிப்பு அனுபவமும், எழுத்தனுபவமும் அதிகம் வாய்க்கப்பெற்றவர். இந்த நாவலை மிகவும் சிந்தித்து, திட்டமிட்டு, கதைப்பின்னலைச் சுவையாகப் பின்னிப் படைத்துள்ளார். மேற்படி முடிவுரையில் வரும் அவரது பின்வரும் கூற்று அ.ந.க.வின் நாவல் பற்றிய புரிந்துணர்வினையும், அப்புரிந்துணர்வின் விளைவாகவே அவர் இந்நாவலினைப் படைத்துள்ளார் என்பதையும்தான்:

"நாவலிலே நாம் எதிர்பார்ப்பது சுழல்கள் நிறைந்த ஒரு கதை; உயிருள்ள பாத்திரங்கள்; கண் முன்னே காட்சிகளை எழுப்பும் வர்ணனைகள் என்பனவாம். கதை இயற்கையாக நடப்பது போல் இருக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் அந்த இயற்கை சட்டமிடப்பட்ட ஒரு படம் போல் ஓர் எல்லைக் கோடும் அழுத்தமும் பெற்றிருக்க வேண்டும். இன்னும் எந்தக் கதையுமே மனிதனிடத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஓர் இரக்க உணர்ச்சியைத் தூண்டல் வேண்டும். இதில்தான் ஒரு நாவலின் வெற்றியே தங்கியிருக்கிறதென்று சொல்லலாம். உண்மையில் மனித உணர்ச்சிகளில் இரக்கமே மிகவும் சிறந்ததென்றும் அதுவே ஒருவனது உள்ளத்தைப் பயன்படுத்தி அவனை நாகரிகனாக்குகிறதென்றும் கூறலாம். டேனிஸ் சேனாரட் (Denis Sanarat) என்ற அறிஞர் நாவலின் இத்தன்மையைப் பற்றிப் பேசுகையில் “காதலர்களின் நெஞ்சுடைவைப் பற்றி வாசிக்கும் வாசகன் தன் கண்ணில் நீர் பெருக்கிறானே, அது தான் நாவலாசிரியன் தன் உழைப்புக்குப் பெறும் பெரும் பரிசாகும்” என்று கூறுகிறார். ஷேக்ஸ்பியருக்குப் பின்னால் பாத்திர சிருஷ்டியின் பரப்பிலே ஆங்கில மொழி கண்ட மகாமேதை என்று கருதப்படும் சார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens)  பெற்ற வெற்றிக்கு, அவர் கதைகளில் இவ்வித இரக்க உணர்ச்சி விஞ்சியிருப்பதே காரணம், டிக்கென்ஸின் கதைகளில் இரண்டு பண்புகள் தலை தூக்கி நிற்கின்றன. ஒன்று அனுதாப உணர்ச்சி, மற்றது உற்சாகமூட்டும் நகைச்சுவை. உண்மையில் மனித வாழ்க்கைக்கே மதிப்பும் இன்பமும் நல்குவன இவ்விரு பண்புகளுமே. விக்டர் ஹியூகோவின் “ஏழை படும் பாடு”ம் இவ்விரு பேருணர்ச்சிகளையுமே பிரதிபலிக்கிறது. “மனக்கண்”ணைப் பொறுத்த வரையில் நாவல் பற்றிய மேற்கூறிய பிரக்ஞையுடனேயே நான் அதனை எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்குச் சுவையான  ஒரு கதையைச் சொல்ல வேண்டும்; அது அவர்கள் அனுதாபத்தையும் இரக்க உணர்ச்சியையும் தூண்ட வேண்டும்; அதே நேரத்தில் முடிந்த இடங்களில் வாழ்க்கையில் பிடிப்பைத் தரும் நகைச்சுவை, வேடிக்கை போன்ற உணர்ச்சிகளுக்கும் இடமிருக்க வேண்டும்; சூழ்நிலை வர்ணனையையும் பாத்திர அமைப்பும் சிறந்து விளங்க வேண்டும்; கதைக்கு இடக்கரில்லாது வரும் அறிவுக்கு விருந்தான விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்பன போன்ற நோக்கங்கள் இந்நாவலை எழுதும்போது என்னை உந்திக் கொண்டேயிருந்தன. இன்னும் உலகப் பெரும் நாவலாசிரியர்களான டிக்கென்ஸ், டால்ஸ்டாய், சோலா, டொஸ்டோவ்ஸ்கி, கல்கி, தாகூர், விகடர் ஹியூகோ போலத் தெட்டத் தெளிந்து ஒரு வசன நடையில் அதைக் கூற வேண்டுமென்றும் நான் ஆசைப்பட்டேன். இன்று தமிழில் ஒரு சிலர் - முக்கியமாகக் கதாசிரியர் சிலர் இயற்கைக்கு மாறான சிக்கலான ஒரு தமிழ் நடையை வலிந்து மேற்கொண்டு எழுதுவதை நாம் பார்க்கிறோம். இப்படி யாராவது எழுத முயலும்போது அவர்கள் வசன நடை முன்னுக்கு வந்து பொருள் பின்னுக்குப் போய்விடுகிறது."

அ.ந.க.வின் கிடைக்கக்கூடிய ஒரேயொரு நாவல் என்னும் வகையில் இந்த நாவல் நூலாக்கம் பெறுவது அவசியம். இந்த நாவலின் முப்பதாவது அத்தியாயம் இன்னும் கிடைக்காததால் அந்த முயற்சியும் இழுபட்டுக்கொண்டு செல்கின்றது. விரைவில் அந்த விடுபட்ட அத்தியாயம் கிடைக்குமென்று எதிர்பார்ப்போம்.  தொடர்கதையாக வெளிவந்தாலும் அ.ந.க.வின் இந்நாவலின் சிறப்பு தொடர்கதையாக வெளிவந்ததால் எந்தவிதத்திலும் குறைந்து போய்விடப்போவதில்லை. உலகப்புகழ்பெற்ற நாவலாசிரியர்களின் பல புகழ்பெற்ற படைப்புகள் அவ்விதம் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் தொடர்களாக வெளிவந்தவைதாம். இந்த நாவல் தொடராக வெளிவந்ததன் பின்னர் இலங்கை வானொலியில் புகழ்பெற்ற 'தணியாத தாகம்' வானொலி நாடகத்தைத் தொடர்ந்து , சில்லையூர் செல்வராசன் தம்பதியினரால் வானொலி நாடகமாகவும் உருவாக்கப்பட்டு, வெளியாகிப் பெரும் வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நாவல் எனக்குப் பிடித்துப்போனதற்குக் காரணமானவைகளாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்:

1. சுவையான , சிந்தையைக் கவரும் கதைப்பின்னல்.
2. குறை , நிறைகளுடன் யதார்த்தபூர்வமாகப் படைக்கப்பட்ட பாத்திரங்கள்.
3. நாவலின் நடையும், ஆங்காங்கே  ஆசிரியரின் புலமையினை வெளிப்படுத்தும் வகையில் பரவிக்கிடக்கும் தகவல்களும்..
4. நாவல் கூறும் பொருள்.


1. நாவலின் கதைப்பின்னல்:

நாவல் கூறும் கதை இதுதான்: ஶ்ரீதர் இலங்கையின் பெரும் பணக்காரர்களிலொருவரான சிவநேசர் / பாக்கியம் தம்பதியினரின் ஒரே மகன். கொழும்பில் அவர்களுக்குச் சொந்தமான 'கிஷ்கிந்தா' மாளிகையில் தங்கி, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவன். அவனது அறை நண்பனாகத் தங்கியிருப்பவன் சுரேஷ். 'கொழும்புப் பல்கலைகழகத்தில் மருத்துவ பீடத்தில் படிப்பவன். சுரேஷின் படிப்புக்கு உதவி செய்பவர் அவனது மாமா. இதற்குக் காரணம் தனது மகளை 'டாக்டர்' சுரேஷுக்கு மணமுடித்து வைப்பதென்ற எண்ணம்தான். இதற்கிடையில் நாடகங்களில் நடிப்பதில் ஆர்வமுள்ள ஶ்ரீதருக்கும் அவனுடன் கல்வி பயிலும் சக மாணவியான பத்மாவுக்குமிடையில் காதல் ஏற்படுகிறது. பத்மா மிகவும் அழகானவள். அவளது தந்தையான பரமானந்தரும் வாத்தியாரே.

பத்மாவுக்கும் , ஶ்ரீதருக்குமிடையில் காதல் முகிழ்க்கிறது. ஏற்கனவே அவன் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்தவென்பதால் அவனுடன் பழகுவதற்கே சக மாணவர்கள் தயக்கம் கொள்வார்கள். இந்நிலையில் சாதாரண ஆசிரியர் ஒருவரின் மகளான பத்மாவை மணப்பதற்கு முடிவு செய்கின்றான் ஶ்ரீதர். தான் மிகவும் புகழ்பெற்ற தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவென்று கூறி விட்டால் எங்கே பத்மா தன்னை நிராகரித்து விடுவாளோ என்று பயந்த ஶ்ரீதர் தன் குடும்பப்பெருமையினை மறைத்து அவளுடன் பழகுகின்றான். இதற்கிடையில் ஶ்ரீதரின் கிராமத்தில் வசிக்கும் தங்மணி என்பவள் பத்மாவும், ஶ்ரீதரும் காதலர்களாகத் திரிவதைக் கண்டு பொறாமை கொண்டு சிவநேசருக்கு ஒரு மொட்டைக் கடிதமொன்றினை எழுதி விடுகின்றாள்.

ஶ்ரீதரின் தந்தையான சிவநேசரோ சாதி, அந்தஸ்து பார்க்கும் மனிதர். தன் அந்தஸ்துக்குகந்த மணப்பெண்ணாக தன்னையொத்த பணக்காரரான கந்தப்பரின் மகளான டாக்டர் அமுதாவை ஶ்ரீதருக்குக் கட்டி வைக்கத்திட்டமிடுகின்றார். ஊர் வரும் ஶ்ரீதருக்கு திடீரென்றேற்பட்ட கண் நோய் காரணமாக இரு கண்களின் பார்வையும் போய் விடுகின்றது. அவனது பார்வை போய் விட்டதையறிந்த அம்பலவாணர் தன் மகளை ஶ்ரீதருக்குக் கொடுப்பது என்றிருந்த முடிவினை மாற்றி விடுகின்றார். ஏற்கனவே தனக்கு ஶ்ரீதர் பொய் கூறிவிட்டதால் சிறிது ஆத்திரமுற்றிருந்த பத்மாவும் அவனை நிராகரித்து , கட்டழகான கமலநாதன் என்பவனைத் திருமணம் செய்ய விரும்புகின்றாள்.

இதற்கிடையில் இரு கண்களினதும் பார்வையை இழந்த ஶ்ரீதர் பத்மாவை நினத்து ஏங்கி , வருந்துகின்றான். மகனின் வேதனையைத் தாங்காத சிவநேசரின் மனம் மாறுகின்றது. பத்மாவின் வீட்டுக்குச் செல்லும் சிவநேசரிடம் குருடான ஶ்ரீதரை மணமுடித்துத் தனது வாழ்க்கையைச் சிதைக்க முடியாதென்று கூறி அவரை மறுத்துத் திருப்பி அனுப்பி விடுகின்றாள் பத்மா. பத்மாவின் பதிலினக் கூறினால் ஶ்ரீதர் மிகவும் மனம் வருந்துவானெயென்று நினைத்து என்ன செய்வதென்று யோசிக்கின்றார். இதற்கிடையில் கிளார்க்கர் நன்னித்தம்பியாயின் மகளான சுசீலா ஶ்ரீதரின் நிலையினை உணர்ந்து அவனைத் திருமணம் செய்வதற்கும், பத்மாவின் மேல் கொண்ட காதலால் துயரத்திலாழ்ந்திருக்கும் ஶ்ரீதர் முன் பத்மாவாக நடிப்பதற்கும் சம்மதிக்கின்றாள். அவளை உண்மையாகவே பத்மாவாகக் கருதிவிடும் ஶ்ரீதருக்கும், சுசீலாவுக்குமிடையில் தோன்றிய உறவின் விளைவினால் அவர்களுக்கு ஆண்குழந்தையொன்றும் பிறந்து விடுகின்றது. முரளி என்பது அவன் பெயர்.

இதற்கிடையில் கண் வைத்திய நிபுணரொருவரின் உதவியால் பார்வையைபெறும் ஶ்ரீதர் தனக்கு நேர்ந்த ஆள்மாறாட்ட அனுபவத்தைக் கண்டு, தான் வெறுக்கும் சுசீலாவுடன் தொடர்ந்தும் வாழ்வேண்டுமென்றால் தன் பார்வை இருக்கும் மட்டும் அது முடியாது என்று 'தன் கண்களைக் குத்தி மீண்டும் அந்தகனாகி விடுகின்றான். ஆரம்பத்தில் சுசீலவை வெறுக்கும் ஶ்ரீதர் பின்னர் உண்மை நிலை அறிந்து, பத்மா குருடனான தன்னை மணமுடிக்க மறுத்ததையும், அவளிடம் மகனை மணக்கும்படி கேட்டு அவமானப்பட்ட தன் பெற்றோருக்கேற்பட்ட அனுபவத்தையும் அறிந்து அவளை விரும்பத் தொடங்குகின்றான். சிவநேசரோ இறுதியில் தன்னை அழித்துத் தன் கண்களை அந்தகனான மகனுக்கு வழங்கி அவனுக்குப் புது வாழ்வினைக் கொடுக்கின்றார்.

இதுதான் நாவலின் பிரதான கதைச்சுருக்கம். ஆனால் இந்தக் கதையினைச் சுவையாக, தொய்வில்லாமல், தன் ஆழ்ந்த புலமையின் மூலம் அ.ந.க படைத்திருக்கின்றார் என்பதை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்வார்கள். இந்த நாவலில் மேலும் பல உப பாத்திரங்களாகப் பலர் வருகின்றார்கள்.

நாவல் முழுவதும் அ.ந.க.வின் மேனாட்டு மற்றும் கீழ்நாட்டு இலக்கியங்கள் மீதிருந்த புலமையின் விளைவினைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்துகொள்ள முடிகிறது.

ஶ்ரீதர் திறமையான ஓவியன், அத்துடன் நல்லதோர் நடிகனுமாவான். புகழ்பெற்ற கிரேக்க நாடகாசிரியனான சோபாகிளிஸ்ஸுன் புகழ்பெற்ற நாடகமான எடிப்பஸ் நாடகத்தைத் தமிழில் எழுதி, எடிப்பஸ் பாத்திரத்திலும் மிகவும் சிறப்பாக நடிக்கின்றான். நாடகத்தில் வரும் எடிப்பஸ் தந்தையென்று தெரியாது தந்தையைக் கொன்று, தாயென்று தெரியாது அவளையும் மணந்து பிள்ளைகளையும் பெற்றுக்கொள்கின்றான். பின் உண்மை தெரிய வரவே தன் கண்களைக் குத்தித் தன்னைக் குருடாக்கிக்கொள்கின்றான். இந்த நாடகம் முதலில் கொழும்பு பல்கலைக்கழகத்திலும், இரண்டாவது தடவை யாழ் இந்துக் கல்லூரியிலும் நடைபெறுவதாகச் சம்பவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனா. சோபாகிளிஸின் எடிப்பஸ் நாடகத்தின் மூலம் அ.ந.க நாவலின் நாயகனான ஶ்ரீதருக்கு ஏற்படவிருக்கும் நிலையினைக் குறிப்பாகக் கூறி விடுகின்றாரென்றுதான் கூற வேண்டும். எடிப்பஸ் போலவே ஶ்ரீதரும் இழந்த பார்வை பெற்றதும், தனக்குத் தன் காதலியென்ற பெயரில் இன்னொருத்தியைக் கட்டி வைத்துள்ளார்கள் என்பதை அறிந்து, தன்னிரு கண்களையும் குத்தி மீண்டும் குருடனாகி விடுகின்றான். எடிப்பஸ் நாடகத்துக்கும் , மனக்கண் நாவலுக்குமிடையிலுள்ள முக்கியமான ஒற்றுமை ஆள் மாறாட்டத்தின் விளைவாகவே இருவரும் தம் கண்களைக் குத்திக் குருடாகி விடுகின்றார்கள். எடிப்பஸ்ஸுக்கும் தன் தந்தை, தாய் யார் என்ற உண்மை நிலை தெரியாத நிலையில் அவனை மீறிச் சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. ஶ்ரீதரின் வாழ்விலும் அவன் குருடனாகிய நிலையில் அவன் அறியாத நிலையில் அவன் வாழ்விலும் ஆள் மாறாட்டம் நிகழ்து சுசீலாவைப் பத்மா என்று கூறி அவனுக்குத் திருமணம் செய்து வைத்து விடுகின்றார்கள்.

இவ்விதமாகச் செல்லும் நாவலை ஆறுதலாகப் படித்துச் சுவைக்க வேண்டும். அவ்விதம் சுவைத்தால்தான் நாவல் முழுவதும் அ.ந.க எடுத்தாண்ட உதாரணங்கள், அவரது தமிழ் மற்றும் மேனாட்டு இலக்கியங்கள்பால் உள்ள புலமை ஆகியவற்றை உணர்ந்திட முடியும்.

2. குறை , நிறைகளுடன் யதார்த்தபூர்வமாகப் படைக்கப்பட்ட பாத்திரங்கள்.

மனக்கண் நாவலில் அ.ந.க.வின் பாத்திரப்படைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இந்நாவலில் வரும் மாந்தர்கள் குறை, நிறைகளுடன் படைக்கப்பட்டிருகின்றார்கள். செல்வந்தனின் மகனாக வரும் ஶ்ரீதருக்கும், மிகவும் சாதாரண நிலையிலிருக்கும் பத்மாவுக்குமிடையில் காதல் அரும்புகிறது. ஆரம்பத்தில் தான் செல்வந்தரான சிவநேசரின் மகன் என்பதை மறைத்து விடுகின்றான். பின்பு உண்மை தெரிந்து விடுகின்றது. இவ்விதமாக அவனுடன் காதல் வயப்பட்டிருக்கும் சமயத்திலேயே பத்மாவின் கமலநாதன் மீதான சலனங்களை அவ்வப்போது வெளிப்படுத்தும் வகையில் சம்பவங்கள் மற்றும் அவளது உணர்வுகளை அ.ந.க. விபரித்திருக்கின்றார். உதாரணத்துக்கு பின்வரும் சம்பவத்தைக் கூறலாம். காதலன் ஶ்ரீதருடன் தெகிவளை மிருககாட்சிச்சாலைக்குச் சென்று திரும்புகையில், அவன் அவளைத் தனது காரில் கொண்டுவந்து இறக்குகின்றான். அப்போது அவள் மோட்டார் சைக்கிளில் செல்லும் கமலநாதனைக் காண்கின்றாள். அதனை ஆசிரியர் இவ்விதம் விபரித்திருப்பார்:

"ஆனால் காரிலிருந்து இறங்கியதும் பத்மா கண்ட காட்சி! கமலநாதன் தனது மோட்டார் சைக்கிளில் இறுக்கமான கறுப்புக் காற்சட்டையணிந்து கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந்து சென்று கொண்டிருந்தான். அவன் கண்களை “கொகிள்ஸ்” என்னும் மோட்டார் சைக்கிளில் செல்லுபவர்கள் அணியும் புகைக் கண்ணாடி அலங்கரித்தது. உதடுகளை வழக்கம் போல் அவனது கவர்ச்சிகரமான அரும்பு மீசை அலங்கரித்தது. ஆளில்லாது வெறிச்சென்றிருந்த மோட்டார் சைக்கிளின் பின்னாசனம் - ஐயோ வீணாகிறதே என்ற உணர்ச்சி பத்மாவுக்குத் தன்னையறியாமலேயே ஏற்பட்டது. மேலும் என்ன தான் முயன்ற போதிலும் கமலநாதனின் பின்னழகை இரசிக்காதிருக்கவும் அவளால் முடியவில்லை! "

இது போல் மேலும் பல சந்தர்ப்பங்களில் பத்மாவின் ஆளுமை விபரிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் சென்ற ஶ்ரீதரிடமிருந்து எந்தவிதத் தகவல்களும் வராத நிலையில் அவளது கவனம் கமலநாதன்பக்கம் திரும்புகிறது. அவள் கமலநாதனுடன் நடன விருந்தில் கலந்துகொள்கின்றாள். உவைன் அருந்துகின்றாள். அவனுடன் அணைத்தபடி அவனது மோட்டார் சைக்கிளில் செல்கின்றாள். இது போல் செல்வச் செருக்கு மிக்கவராக வரும் சிவநேசர் பின்னர் மகனுக்காக எல்லாவற்றையும் விட்டு கீழிறங்கி வருகின்றார். இறுதியில் தன்னையே அழித்து அவனுக்குப் பார்வையைக் கொடுத்துத் தியாகபுருஷராகி விடுகின்றார். ஶ்ரீதரின் நண்பனாக வரும் டாக்டர் சுரேஷ் மிகவும் முற்போக்கான இளைஞன். ஆனால் அவனால்கூட தன்னை, தன் படிப்புக்காக மாப்பிள்ளையாக விலைக்கு வாங்கும் மாமனாரிடமிருந்து விடுபட்டோட முடியவில்லை. ஶ்ரீதருடனான உரையாடலொன்றில் அவன் "“மச்சானை மண முடிக்க வேண்டும். அத்தை மகளைக் கட்ட வேண்டும் என்பது என்று நேற்று விதிக்கப்பட்ட சட்டமா என்ன? அச்சட்டத்துக்கு அடங்கி நடக்க வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். பார்த்தாயா ஸ்ரீதர் இன்னொரு விசேஷத்தை? எண்ணத்தால் நான் புரட்சிக்காரன். ஆனால் செயலால் உன்னை விட அதிகமாகச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கும் நல்ல பிரஜை நான்”  என்று கூறுவது அவனது ஆளுமையினை வெளிப்படுத்தி நிற்கிறது. .இவ்விதம் நாவலில் வரும் பாத்திரங்கள் குறை, நிறைகளுடன் மனதில் நிற்கும்படியாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. இது ஆசிரியர் பாத்திரப்படைப்பிலீட்டிய வெற்றியாகவே கொள்ளலாம்.

3. நாவலின் நடையும், ஆங்காங்கே  ஆசிரியரின் புலமையினை வெளிப்படுத்தும் வகையில் பரவிக்கிடக்கும் தகவல்களும்..

27-ம் அத்தியாயம்: ஈடிப்பஸ் நாடகம்பொதுவாகவே அ.ந.க.வின் நடை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது நடையினைத் துள்ளு தமிழ் நடை என்று வர்ணிப்பார்கள். அவரது நடையில் அவரது புலமையினை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு தகவல்களும் நிறைந்திருக்கும். உதாரணத்துக்குக் கீழுள்ள எடுத்துக்காட்டுகளினைக்குறிப்பிடலாம்:

1. *விஷயத்தை ஒளிவு மறைவில்லாத திறந்த இடத்தில் இருவர் பேசிக்கொண்டு நின்றால் அவ்வித ஐயப்பாடு ஏற்படுவதில்லை. மற்ற மாணவர்களோ ஆசிரியர்களோ தங்களைக் காதலர்கள் என்று சந்தேகிக்கக் கூடாதென்ற எண்ணத்தினாலேயே பத்மாவும் ஸ்ரீதரும் இந்த இடத்தைத் தெரிந்தெடுத்திருந்தார்கள். ஆனால் உண்மையிலேயே மற்றவர்கள் ஏமாறினார்களா என்பது வேறு விஷயம். ஓர் ஆணுக்கும் பெண்ணும் - சங்க மரபில் ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் - காதல் ஏற்பட்டதும் அவர்களுக்கு எவ்வளவு கள்ளப் புத்திகள் எல்லாம் தோன்றிவிடுகின்றன! தம்மிடையே இருக்கும் காதலை மறைக்க அவர்கள் எத்தனை உபாயங்களைக் கைக்கொள்கிறார்கள்? அதனால் தான் நமது முன்னோர் காதலைக் களவென்று அழைத்தார்கள். எவ்வளவு பொருத்தமான பெயர்!"

2. "நாடகம், தேபேஸ் நாட்டு மன்னனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லுவது, எடிப்பஸ் தந்தையைத் தந்தையென்றறியாது தன் கரத்தாலேயே கொன்றுவிடுகிறான். பின் தாயைத் தாயென்று தெரியாது பெண்டாளுகிறான். அவளைத் தனது பட்டத்து மகிஷியாகவும் ஏற்றுக் கொள்ளுகிறான். தாய்க்கும் மகனுக்கும் குழந்தைகளும் பிறந்துவிடுகின்றன! இந்நிலையில் சில சந்தர்ப்ப சூழல்களால் அவனுக்கு உண்மைகள் வெளியாகின்றன. என்ன செய்வான், எடிப்பஸ். தாயைப் பெண்டாண்ட பாதகன் தானென்று தெரிந்ததும் நெருப்பை மிதித்தவன் போல் நெஞ்சடைத்து கதறுகிறான் எடிப்பஸ்!

தந்தையைக் கொன்றவன் நான்!
தாயின் கணவன் நான்!
என் பிள்ளைகள் எனக்குத் தம்பிமாராகிவிட்டார்கள்!
எடிப்பசுக்கு இதை விட  வரை வேறென்ன வேண்டும்!  வேறென்ன வேண்டும்!

உலகமே அதிரும்படியாக இவ்வசனங்களை முழங்குகிறான் ஸ்ரீதர். இந்தக் கட்டத்தில் அவனது நடிப்பு எல்லோரையும் கவர்ந்துவிட்டது. ஆனால் அடுத்த கட்டமோ மயிர்க் கூச்செரியச் செய்தது. ‘எடிப்பஸ் மன்னன் மேடையின் நடுவே மின் விளக்கின் வட்ட ஒளியில் வந்து நிற்கிறான். ஆவேசங் கொண்டு அலறுகிறான். பின்னணியில் கூட்டு வாத்தியங்களும் அவனோடு சேர்ந்து பயங்கரமாக அலறுகின்றன. இசையின் அலறலுக்குத் தக்கபடி தன் ஈட்டியால் தன் கண்களை மீண்டும் மீண்டும் பல தடவை குத்துகிறான் அவன். கண்களிலிருந்து இரத்தம் பீறிடுகிறது. கன்னங்களில் கொட்டுகிறது செந்நீர்! கண்ணிழந்து கபோதியாய் நிற்கிறான் காவலன்......இந்தக் கட்டத்தில் ஸ்ரீதர் நடிப்பின் உச்சத்தை அடைந்து விடுகிறான். சபையோர் நடு நடுங்கிப் போய் விட்டார்கள். பட்டாசு போல் கைதட்டல் வெடிக்கிறது!

3. சில சமயம் அந்தகர்களைப் பற்றிய பெரும் கவிஞர்களின் கவிதைகள் அவன் நினவுக்கு வரும். அவற்றை அம்மாவுக்குச் சொல்லிக் காட்டுவான். முக்கியமாக இடையிலே குருடாகிய ஆங்கிலக் கவிஞர் மில்டனின் கவிதைகளை அவன் அடிக்கடி சொல்ல ஆரம்பித்தான்.

ஆண்டுதோறும் பருவங்கள்
அழையாதிங்கே ஓடி வரும்
ஈண்டிவ்விதமாம் மாற்றங்கள்

பகலுமில்லை இரவுமிலை
படுவான் எழுவான் காட்சியிலை
திகழும் மலரின் அழகில்லை
தெரியும் வசந்தக் காட்சியிலை

ஆடு மாடு மந்தைகளில்
அழகும் காணேன் - மனிதர்களின்
பீடு மிக்க முகங்காணேன்
பெருகும் இருளில்
வீற்றிருந்தேன்.

அறிவுப் புலனின் கதவொன்று
அடியோ டடைத்து முடிற்றே!
துருவிப் பார்க்கும் என் கண்கள்
தூர்ந்தே பார்வை மறந்தனவே.

சில சமயங்களில் அவன் அம்மாவிடம் இது பகலா இரவா? என்று கேட்பான். கேட்டுவிட்டு

"நண்பகலின் பேரொளியில்
நானிருட்டில் வாழுகிறேன்
சூரியனை ராகுவிங்கு
சூழ்ந்ததுவே ஆனால் அச்
சூரியர்க்கு மீட்சியுண்டு
சுடர் விழிக்கோ மீட்சியிலை
நித்தியமாம் கிரகணமென்
நேத்திரத்தைப் பிடித்ததுவே"

என்று பாடுவான்.

4. சுரேஷ், “ஸ்ரீதர்! பணம் என்பது இவ்வுலகில் ஒருவரிடமிருந்து ஒருவர் இனாமாகப் பெறும் பொருளல்ல. அதனால் கொடுப்பவனை விட வாங்குபவன் தன் கணிப்பிலேயே இழிந்த மனிதனாகி விடுகிறான். இவ்வுலகில் ஒருவனுக்கு அதை விடப்  பெரிய நஷ்டம் வேறென்ன? பணத்தை ஒவ்வொருவனும் தானே முயன்று சம்பாதிக்க வேண்டுமென்பதே உலக நியதி. சங்க நூலொன்றில் கூட இது பற்றி ஒரு பாட்டிருக்கிறது. நீ கேள்விப்பட்டதுண்டா?” என்று கேட்டான்.

ஸ்ரீதர் “இல்லை” என்று தலையாட்டினான்.

சுரேஷ் பாட்டை ஓதிக் காட்டினான்.

“ஈ என இரத்தல்
இழிந்தன்று அதன் எதிர்
ஈயேன் என்றல்
அதனினும் இழிந்தன்று
கொள் எனக் கொடுத்தல்
உயர்ந்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல்
அதனினும் உயர்ந்தன்று”

“புறநானூற்”றில் வரும் இப்பாட்டின் பொருள் என்ன  தெரியுமா? தருவாய் என்று கேட்டல் இழிந்தது. அதற்குத் தர மாட்டேன் என்று பதில் கூறுதல் அதனினும் இழிந்தது. இதனைப் பெற்றுக்கொள் என்று வாரிக் கொடுத்தல் உயர்ந்தது. ஆனால் அதை வேண்டாமென்று மறுத்தல் அதனினும் உயர்ந்தது. அதாவது ஈ என்று இரத்தல் கூடாது. கொள் என்று தந்தாலும் வாங்கக் கூடாது. தனக்கு வேண்டிய பொருளைத் தானே ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதே பொருள்” என்று பாட்டை ஓதிப் பயனும் கூறினான் சுரேஷ்.


5. ஸ்ரீதர் பத்மாவிடம் திடீரென “அதோ நாங்கள் பார்க்க வந்த ஜோடி!” என்றான் அமைதியாக.

பத்மா அவன் சுட்டிய திசையை நோக்கினாள். அங்கே ஒரு பெரிய இரும்புக் கூட்டுள்  ஒரு குரங்கு இன்னொரு குரங்குக்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தது.

“பேனெடுக்கும் குரங்கு தான் டி.எம். ராஜ். பேனெடுக்கப்படும் குரங்கு அதன் காதலி டி.எம். ராணி!” என்றான் ஸ்ரீதர்.

“உங்களுக்கு எப்பொழுதும் பெயர் மாறாட்டம்தானே? சிவநேசர் சின்னப்பா ஆன மாதிரி” என்றாள் பத்மா குறும்பாக.

ஸ்ரீதர், “இந்த விஷயத்தில் நான் பொய் சொல்லவில்லை. உண்மைதான் சொன்னேன். ஆண் குரங்கின் பெயர் தெகிவளை மர்க்கட ராஜ். பெண் குரங்கின் பெயர் தெகிவளை மர்க்கட ராணி. மர்க்கடமென்றால் குரங்கு. தெரிந்ததா மட்டிப் பெண்ணே?” என்றான்.

இதற்கிடையில் காதலன் குரங்கு அவர்களைப் பார்த்து விட்டது. காதலியின் தலைப் பேனொன்றை எடுத்து வாயிற்  போட்டு மென்று கொண்டே அவர்களைப் பார்த்துப் பல்லை இளித்து மூக்கைச் சொறிந்தது குரங்கு!

6. வள்ளியாச்சி அதிகாரைக் கடைக் கண்னால் பார்த்துவிட்டுச் சிரித்தாள். "அதை ஏன் இப்போது ஞாபகமூட்டுகிறீர்கள்? அப்படியானால் வாருங்கள். நாங்களும் ஜோடியாக தண்ணீரில் இறங்குவோம்"

அம்பலவாணருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. புன்னகை செய்து கொண்டே கம்ப ராமாயணத்திலிருந்து நீர் விளையாட்டைப் பற்றிய ஒரு பாட்டை எடுத்து விட்டார்.

"தாளையே கமலத்தாளின் மார்புறத் தழுவுவாரும்
தோளையே பற்றி வெற்றித் திருவெனத் தோன்றுவாரும்
பாளையே விரிந்ததென்னப் பாந்தநீர் உந்துவாரும்
வாளைமீன் உகள அஞ்சி மைந்தரைத் தழுவுவாரும்"

என்று இப்படிப் போகிறது பாட்டு. பொருளென்ன தெரியமா? சில பெண்கள் தமது தலைவர்களின் மார்பைத் தழுவுகிறார்களாம். இன்னும் சிலர் தோள்களைத் தழுவுகிறார்கள். மற்றும் சிலர் தண்ணீரைக் கமுகம் பாளை போல் விரியும்படி எற்றி விளையாடுகிறார்கள். ஒரு சில பெண்கள் வாளை மீன்களைக் கண்டு பயந்து தம் காதலரைக் கட்டிக் கொள்கிறார்களாம். தோளையே பற்றி வெற்றித் திருவெனத் தோன்றுவாரும்- என்பது இப்பொழுது நீ கண்ட காட்சியைத் தான். அதாவது அந்தப் பெட்டை ஸ்ரீதரின் தோளைப் பிடித்துக் கொண்டு ஆடிய ஆட்டத்தைத் தான் குறிக்கிறது. தோளைப் பற்றிக் கொண்டு இலட்சுமி போல் தோன்றினார்களாம். பல பெண்கள், நீர் விளையாட்டின் போது, நீர் விளையாட்டுப் படலத்தில் வருகிறது. கம்பர் பாடியிருக்கிறார்" என்று பேசிக் கொண்டே போனார் அதிகார்.

7. படிப்பாளியாகிய சிவநேசருக்கு எந்த நிலையிலும் தாம் படித்தறிந்த விஷயங்கள் ஞாபகம் வராமல் இருப்பதில்லை. பத்மாவைப் பலாத்காரமாகத் தூக்கி வந்து ஸ்ரீதருக்குத் திருமணம் செய்து வைத்து விடுவோமா என்று நினைத்த அவருக்கு, அர்த்தசாஸ்திரத்தில் கெளடில்யன் கூறியுள்ள எழுவகைத் திருமணங்களும் ஞாபகம் வந்தன. இவற்றில் ஒன்று இராட்சத திருமணம். பலாத்காரமாக ஒரு பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம் செய்யும் இதனைக் கூடக் கெளடில்யன் ஒப்புக் கொள்ளுகிறான். இத்திருமணத்தின் முடிவாகச் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் திருப்தி ஏற்படுமாயின் அது அங்கீகரிக்கத்தக்கதே என்பது அவரது தீர்ப்பு.

இவ்விதமாக நாவல் முழுவதும் அ.ந.க. அறிவுக்கு விருந்தாகும், சிந்தனையைத் தூண்டும் விடயங்களை, தகவல்களை அள்ளி வழங்கிச் செல்கின்றார். இவை நாவலின் கதையோட்டத்துடன், பாத்திரப்படைப்புடனொன்றி வாசகர்களுக்கு இன்பமூட்டிச் செல்கின்றன.  இது பற்றி அ.ந.க. நாவலின் முடிவுரையில் பின்வருமாறு கூறுவார்:

"டால்ஸ்டாய் போன்ற பெரு நாவலாசிரியர்களில் சிலர் அறிவூட்டலும் நாவலின் பணி என்று கருதினார்கள். அதனால் தான் யுத்த விவரங்களையும், சரித்திர விவரங்களையும் மிகவும் அதிகமாக விளக்கும் அத்தியாயங்களை “யுத்தமும் சமாதானமும்” என்னும் நூலில் டால்ஸ்டாய் சேர்த்திருக்கிறார். விக்டர் ஹியூகோவின் “ஏழை படும் பாட்டி”ல் பாரிஸ் சாக்கடை பற்றிய செய்திகள் விரிவாகச் சேர்க்கப்பட்டுப்பதும் இக் காரணத்தினாலே தான். சுருங்கச் சொன்னால் பார காவியம் செய்யும் கவிஞனும் காத்திரமான நாவலை எழுதும் நாவலாசிரியனும் கதை சொல்லிச் செல்கையில் வழியில் தென்படும் எந்த விஷயத்தையும் பற்றிப் பூரணமான விளக்கம் கொடுக்காமல் மேலே செல்வதில்லை.  ஆனால் இவ்வித விளக்கம் கொடுக்க ஒருவன் கதை கட்டும் ஆற்றல் பெற்றவனாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. பல விஷயங்களையும் தெரிந்து ஓர் அறிஞனாகவும் விளங்க வேண்டியிருக்கிறது. ஒருவனுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு நூலறிவும், அனுபவ அறிவும் சமுதாய அறிவும், இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்த விளக்கங்களை அவன் திறம்படச் செய்து கொண்டு போகலாம்"

அ.ந.க அறிஞர் அ.ந.க என்று அவரது பன்முகப் புலமை காரணமாக அழைக்கப்பட்டவர். அவரது பன்முகப் புலமை காரணமாக அவரால் இலக்கிய விடயங்களை நாவலில் சூழலுக்கேற்ற வகையில் பொருத்தமாகப் பாவிக்க முடிகின்றது. அ.ந.க.வின் மனக்கண் நாவலை எழுதப்பட்ட காலகட்டத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அதன் சிறப்பு நன்கு விளங்கும்.


4. நாவல் கூறும் பொருள்.

7-ம் அத்தியாயம் ஸ்ரீதர் மோசக்காரனல்லன்!அ.ந.க.வின் மனக்கண் நாவலைப் படித்தபொழுது எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இந்த நாவலின் மூலம் அ.ந.க. எதனைக் கூற வருகின்றார்? அவரோ ஈழத்துத் தமிழ் முற்போக்கிலக்கியத்தின் முன்னோடி. மார்க்சியத்தத்துவத்தின்பால் ஈடுபாடு மிக்கவர். வர்க்க விடுதலையினை வலியுறுத்துபவர். இந்த நாவல் அவரது நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளதா என்று சிறிது சிந்தித்துப் பார்த்தேன். அவ்விதம் பார்க்கும்பொழுது நாவல் பிரச்சாரத்தின் சாயல் நாவலின் கலைத்துவச் சிறப்பினை மறைத்துவிடாத வகையில் படைக்கப்பட்டுள்ளதை அறிய முடிந்தது. டால்ஸ்டாய், தத்யயேவ்ஸ்கி போன்றவர்கள் முறையே 'புத்துயிர்ப்பு', 'குற்றமும் தண்டனையும்' போன்ற நாவல்களின் இறுதியில் மதப் பிரச்சாரத்தை மதமே மானுடத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பதை வெளிப்படையாகவே வலியுறுத்தி முடித்திருப்பார்கள். ஆனால் அதற்காக அப்படைப்புகளின் படைப்புத்திறன் சற்றும் குறைந்துபோய்விடுவதில்லை. மனக்கண் நாவலிலும் ஆங்காங்கே அ.ந.க.வின் முற்போக்கு எண்ணங்கள் தலைகாட்டாமலில்லை. ஒரு முறை பணம் பற்றி டாக்டர் சுரேஷும் , ஶ்ரீதரும் உரையாடுகையி, பினவருமாறு உரையாடுவார்கள்:

இன்னுமோரிடத்தில் ஶ்ரீதரும், அவனது தந்தையான சிவநேசரும் பின்வருமாறு உரையாடுவார்கள்:

“எனக்கு அமுதாவைக் கல்யாணம் செய்ய இஷ்டமில்லை.”

“ஏன்?”

“நான் கொழும்பில் வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்யத் தீர்மானித்து விட்டேன்.”

“அம்மா சொன்னாள். ஆனால் அந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.”

“ஏன் அப்பா, அவள் மிகவும் நல்லவள். நீங்கள் கொழும்புக்கு வந்தால் அவளை நான் கிஷ்கிந்தாவுக்கு அழைத்துக் கொண்டு வருகிறேன். உங்களுக்கு மிகவும் பிடிக்குமப்பா.”

“கல்யாணப் பெண் நல்லவளா அல்லவா என்பதல்ல முக்கியம் ஸ்ரீதர். உனது நிலைக்கு ஏற்ப பெண்ணை நீ கட்ட வேண்டும். அமுதாவும் நல்லவள்தான். அத்துடன் சகல விதத்திலும் எங்கள் குடும்ப அந்தஸ்துக்கு ஏற்றவள் அவள்.”

“எனக்கு இந்த அந்தஸ்து என்பதில் நம்பிக்கையே இல்லை. ஏன், நீங்கள் கூட “எமது சமுதாயப் பிரச்சினைகள்” என்ற நூலில் கலப்புத் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்று எழுதியிருக்கிறீர்களல்லவா?” பத்மாவின் தகப்பனார் பரமானந்தர் கூட அந்த நூலின் பிரதி ஒன்றை வைத்திருக்கிறார். அந்த நூலைப் படித்ததன் காரணமாக அவர் இந்தத் திருமணத்திற்குக் கட்டாயம் உங்கள் ஆசி கிடைக்குமென்று நம்புகிறார், அப்பா.”

சிவநேசர் ஒரு கணம் மெளனமானார். எதிர்பாராத இவ்வார்த்தைகள் அவரை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டன. இருந்தும் சமாளித்துக் கொண்டு, உண்மைதான். ஒரு காலத்தில் அக்கொள்கைகளை நான் நம்பியதுண்டுதான். ஆனால் அவை கூடச் சாதாரண பொதுமக்கள் தம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் கூறிய ஆலோசனைகளேயல்லாமல் என்னையோ உன்னையோ போன்றவர்களுக்குக் கூறப்பட்ட ஆலோசனைகளேயல்ல. பரம்பரைச் செல்வாக்குடன் உள்ள நாம் உண்மையில் ஆட்சி செய்யப் பிறந்தவர்கள். அப்படிப்பட்ட எங்களுக்கு நீ சொல்லும் வாத்தியார் போன்றவர்களுடன் எந்தவிதமான உறவும் இவ்வுலகில் சாத்தியமில்லை” என்றார்.

"இதை நீங்கள் மனதார நம்பிக் கூறுகிறீர்களா? என்னைப் பொறுத்தவரையில் நான் மனித சமத்துவத்தை நம்புகிறேன். மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள். இதில் அந்தஸ்துக் கூடியவர் குறைத்தவர் என்று யாருமே இல்லை.”

“நீ எனக்குப் பரிசாகக் கொண்டு வந்தாயே நீட்சேயின் நூல்கள்? - அந்த நீட்சே மனிதர்கள் சமமென்ற கொள்கையை அங்கீகரிக்கவில்லை. உலகில் ஒருவர் ஆளவும் மற்றும் சிலர் அவர்களுக்குப் பணி செய்யவும் பிறந்திருக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் இதுவரை நான் கண்டவர்களெல்லாம் ஆளப் பிறந்தவர்கள் தான். நீயும் ஆளப் பிறந்தவன் தான். உன்னைப் பார்த்தவர்கள் உன் தோற்றத்தைக் கொண்டே அதைப் பளிச்சென்று சொல்லிவிடுவார்கள். நீ ஆள வேண்டுமென்ற விருப்பத்தில் நான் தான் உன் ஆசைக்குத் தடையாய் நிற்கிறேன். நீட்சே கருத்துகள் மட்டுமல்ல, இந்துக்களின் மனுதர்மம் கூட அந்த அடிப்படையில் தான் எழுந்தது. ஆளப்பிறந்தவனை அன்று ஷைத்திரியன் என்றார்கள். இன்று அவனுக்கு அவ்விதம் பெயரளிக்கப்படாவிட்டாலும், ஆளப் பிறந்தவன் தன் நடவடிக்கைகள் மூலம் தான் யார் எனபதைக் காட்டி விடுகிறான். என்னைப் பொறுத்தவரையில் உலகில் சமத்துவம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது இயற்கைக்கு விநோதமான கொள்கை.”

"எப்படி?”

“இயற்கையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சமத்துவமாயிருப்பதை நீ எப்போதாவது கண்டிருக்கிறாயா? ஒரு மனிதன் குட்டை, மற்றவன் நெட்டை, ஒரு மனிதன் நூற்றைம்பது இறாத்தல், மற்றவன் நூற்றைம்பத்தைந்து இறாத்தல், ஒருவன் சிவப்பு, மற்றவன் கறுப்பு, ஒருவன் புத்திசாலி, மற்றவன் மடையன். உலகில் ஒருவருக்கொருவர் சமமான மனிதர் இல்லவே இல்லை. சமத்துவம் பேசுவபர்கள் உண்மையில் பொய் பேசுகிறார்கள்.”

சிவநேசர் தமது அந்தஸ்து வெறிக்கு ஒரு தத்துவ உருவமே கொடுத்து விட்டதைக் கண்டு ஸ்ரீதர் திகைத்தான். “நீட்சேயின் புத்தகங்களை நீங்கள் வாசிப்பது இதற்குத் தானா” என்றான் அவன்.

“தத்துவ தரிசர்களில் நீட்சே ஒருவன் தான் உண்மையை அப்படியே எடுத்துக் கூறியவன்.”

ஒரு கட்டத்தில் தாயுடன் உரையாடும் ஶ்ரீதரின் மனநிலை பின்வருமாறு சித்திரிக்கப்பட்டிருக்கும்:

"ஸ்ரீதர் "அவர்தான் என்ன செய்வார்? பணக்காரன் ஏழை என்று பார்க்கும் உலகத்தில் இந்த அந்தஸ்து என்ற பிரச்சினை இருக்கத்தான் இருக்கும். ஆனால் இவ்வுலகில் எல்லோருமே பனக்காரராகவோ ஏழைகளாகவோ இருந்துவிட்டால் பிரச்சினை ஒழிந்துவிடும். பண விஷயத்தில் எல்லோருமே சமமாக இருக்க வேண்டுமென்று சுரேஷ் சொல்லுவான். அவன் அறிவாளி. அவன் சொல்வது சரி போலத்தான் தெரிகிறது" என்றான்."

இவற்றின் மூலம் அ.ந.க குறிப்பாக என்னதான் கூற விரும்புகின்றார்? பணம், சாதி, அந்தஸ்து என்று மிகவும் ஆடம்பரமாகத் திரிந்தவர் சிவநேசர். தனது அந்தஸ்துக்கேற்ற வகையில் சுழிபுரம் கந்தப்பரின் மகளைத் தனது மகனான ஶ்ரீதருக்கு மணம் முடித்து வைக்கவேண்டுமென்பது அவரது அவா. அப்படிப்பட்டவர் பின் இதனது அந்தஸ்து  , கர்வத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஶ்ரீதருக்கு, அவன் குருடானயதும், அவன் மேல் வைத்த தூய அன்பினால்,  பத்மாவைப் பெண் கேட்டு வந்து அவமானமடைகின்றார். இறுதியாக அவர் புரியும் தியாயம் , இதுவரையில் வேறெந்த தமிழ் நாவலிலும் நான் வாசித்ததில்லை.

இவ்விதமாக சாதிமானான சிவநேசர் இறுதியில் மனம் மாறி, தனது மகன் மீண்டும் பார்வையினைப் பெறுவதற்காக தன்னையே அழித்து, கண்களைத் தானமாக்குகின்றார். இந்த நாவலினைக் கூர்ந்து வாசிப்பவர்கள், அவதானிப்பவர்கள் ஒன்றினைப் புரிந்துகொள்வார்கள். சிவநேசர்  தீண்டமைப் பேய், வர்க்கப்பேய் போன்றவையின் ஆதிக்கத்தில் இயங்கும் நம் மானுட வாழ்வின் குறியீடாகத்தான் விளங்குகின்றார். இவை நீங்குவதற்குச் சமுதாயத்தில் நிலவும் வர்க்க வித்தியாசங்கள்மறைய வேண்டும். சிவநேசரின் மனமாற்றமும், தியாகம் மிக்க முடிவும் வர்க்கமற்ற சமுதாயமொன்றின் உதயத்தைத்தான் கட்டியம் கூறி வரவேற்கின்றன.

அதனால்தான் நாவல் பின்வருமாறு முடிகிறது:

"அமராவதி’யில் ஏற்பட்ட இன்னொரு மாற்றம் அதன் பெரிய மதில்கள் சிறிய கைப்பிடிச் சுவர்களாகிவிட்டதாகும். வீதியில், செல்லும் பாதசாரிகளுக்குக் கூட ‘அமராவதி’யின் அகன்ற விறாந்தைகள் இப்பொழுது நன்கு தெரிந்தன. வாசலின் பெரிய இரும்பு ‘கேட்டு’களுகுப் பதிலாக சிறிய மர ‘கேட்டு’கள் போடப்பட்டன. மாறி வரும் சமுதாயத்தின் புதிய எண்ணங்களின் சின்னமாக அவை காட்சியளித்தன. இன்னும் வாசலிலே காக்கி உடையோடு காணப்பட்ட அந்த வாசல் காவலாளியையும் இப்பொழுது அங்கே காணோம். ஸ்ரீதர் தன் படிப்பை முடிக்க, சுசீலாவோடும், முரளியோடும் சீக்கிரமே கொழும்பு போனான். சுரேஷோ பாக்கியத்துக்குத் துணையாக ‘அமராவதி’யில் தங்கி வைத்தியத்தோடு சமுதாய சேவையையும் மேற்கொண்டான். ஸ்ரீதரும் தன் படிப்பை முடித்துக் கொண்டதும் சமுதாய அரசியல் சேவைகளில் ஈடுபடப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறான். இதை எல்லோரும் வரவேற்றார்களென்றாலும் சுரேஷே மிக அதிகமாக வரவேற்றான் என்பதைக் கூறவேண்டியதில்லையவா?"

டாக்டர் சுரேஷ் தனது மருத்துவப்பணியுடன், சமுதாய சேவையினையும் ஆற்றுகின்றான். ஶ்ரீதரும் இதுபோல் தன் படிப்பு முடிந்ததும் சமுதாய அரசியல் சேவைகளில் ஈடுபடப்போவதாகத் திட்டமிட்டிருக்கின்றான். பெரிய இரும்புக் கேட்டுகளுடன் வெளியுலகிலிருந்து பிரிந்திருந்த அமராவதி இல்லத்தின் பெரிய மதில்கள் சிறியவையாக மாறி விட்டன. அவை மாறிவரும் சமுதாயத்தின் ஆரோக்கியமான புதிய மாற்றங்களின் சின்னமாகக் காட்சியளிக்கின்றன.

தனது சமுதாய , அரசியல் நோக்கங்களைப் பாத்திரங்களினூடு வெளிப்படுத்தி, நாவலின் நிகழ்வுகளை அழகாகப் பின்னி,  பிரச்சாரமறறு, வாசகர்களுக்குச் சுவை மிக்க நல்லதொரு நாவலினைப்படைத்துள்ளார் அ.ந.க.. அதிலவர் வெற்றியும் அடைந்துள்ளார்.

முடிவாக....
அ.ந.கந்தசாமிஒரு வாசகருக்கு எழுத்தாளரொருவரின் படைப்புகள் நடை, கதை, வர்ணனை, தகவல்கள், கதாபாத்திரங்கள்.. என இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காகப் பிடித்துப்போகின்றன. எனக்கு அ.ந.க.வின் நடையும், எழுத்தில் விரவிக்கிடக்கும் அறிவுத் தெளிவும் மிகவும் பிடித்த விடயங்கள். அவர் இலக்கியத்தின் பல் துறைகளிலும், நாடகம், நாவல், கவிதை, சிறுகதை, உளவியல் மற்றும் விமர்சனக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என படைப்புகளை வழங்கியுள்ளார். தனது குறுகிய வாழ்நாளில் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்ல, உலகத் தமிழ் இலக்கிய உலகமும் நிச்சயம் பெருமைப்படத்தக்க , நன்றியுடன் நினைவு கூரத்தக்க பங்களிப்பு. அந்தப் பங்களிப்புகளுக்காக அவர் எதனை எதிர்பார்த்தார்? தன் படைப்புகள் ஏதோ ஒரு விடயத்திலாவது பயனுள்ளதாகவிருக்கவேண்டுமென விரும்பியதைத்தவிர வேறெதனையும் அவர் எதிர்பார்க்கவில்லை.  அவரது படைப்புகளைபெற்றுக்கொண்டவர்கள் நாம். நாம்தாம் அவரது படைப்புகளை இயலுமானவரையில் நவ ஊடகங்களில் வெளியிட்டு மேலும் பலரைச் சென்றடையச் செய்ய வேண்டும். இந்த கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகப் 'பதிவுகள்' இணைய இதழ் ஆற்றிவரும் பங்களிப்பு முக்கியமானது. இன்று ஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில் மட்டுமல்ல, உலகத் தமிழ் இலக்கியப் பரப்பில் அ.ந.க.வும் அவரது படைப்புகளும் அறிமுகமாகப் 'பதிவுகள்' காரணமாக இருந்திருக்கின்றது. பலர் தமது ஆய்வுகளில் அ.ந.க.வை மேற்கோள் காட்டும்போது 'பதிவுகள்' இணைய இதழினை  மேற்கோள் காட்டும் அளவுக்கு அ.ந.க அவை மீள் அறிமுகம் செய்வதில் 'பதிவுகள்' ஆற்றிய பங்கிருக்கின்றது. இந்தச் சமயத்தில் எழுத்தாளர் அந்தனி ஜீவாவையும் இத்தருணத்தில் நன்றியுடன் நாம் நினைத்துக்கொள்ள வேண்டும். பலர் அவ்வப்போது அ.ந.க பற்றிய கட்டுரைகள் எழுதியிருந்தாலும் அந்தனி ஜீவாதான் முதலில் அ.ந.க.வின் பன்முகப்பட்ட இலக்கிய மற்றும் அரசியல் பங்களிப்பு பற்றி, விரிவாக 'தினகரன்' பத்திரிகையில் 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தொடர் கட்டுரையினை எழுதி அ.ந.க.வின் பன்முக இலக்கியப் பங்களிப்பினை என் போன்றவர்களுக்கு  அறிமுகப்படுத்தினார். {அத்துடன் 'அ.ந.க ஒரு சகாப்தம்' என்ற நூலினையும் அண்மையில் வெளியிட்டிருக்கின்றார்}.  அதன் பின்னர்தான் அ.ந.க.வின் படைப்புகளைத் தேடிப்பிடித்து வாசிக்கத் தொடங்கினேன். சில்லையூர் செல்வராசன், ஈழத்து முற்போக்குக் கூடாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் போன்றோரிடமிருந்து அவரது படைப்புகளைப் பெற்றுக்கொண்டேன். இலங்கைச் சுவடிகள் திணைக்களத்திடமிருந்து 'மனக்கண்' நாவலினைப் பெற்றுக்கொண்டேன்.  எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்து 'வெற்றியின் இரகசியங்கள்' நூலினைப் பெற்றுக்கொண்டேன். இவற்றையெல்லாம் அக்காலகட்டத்தில் கொழும்பில் வசித்த என் தம்பி பாலமுரளி பெற்று அனுப்பி வைத்தார்.  மேலும் சில படைப்புகளை (நாநா - மொழிபெயர்ப்பு நாவல், சுதந்திரனில் வெளிவந்த கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் ஆகியவற்றை) 'பதிவுகள்' மூலம் தொடர்புகொண்ட மயூரன் (கொழும்பு) சுவடிகள் திணைக்களத்திலிருந்தும், திருமதி கமலினி செல்வராசனிடமிருந்தும் பெற்று அனுப்பி வைத்தார். இவர்கள் அனைவரையும் பதிவுகள் நன்றியுடன் நினைவு கூருகின்றது. அ.ந.க.வின் படைப்புகளை நாடிய 'பதிவுகள்' இணைய இதழின் தேடல் தொடர்கிறது. அ.ந.க.வின் படைப்புகளை வைத்திருப்பவர்கள் 'பதிவுகள்' இணைய இதழுடன் தொடர்புகொள்ளலாம். தொடர்ப்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com


7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு

[சிங்கை நகர் வன்னிப் பகுதியில் இருந்ததாக கலாநிதி குணராசா , கலாநிதி புஷ்பரட்ணம் ஆகியோர் கருதுவார்கள். ஆனால் சிங்கை நகர் வல்லுபுரத்திலேயே இருந்திருக்க வேண்டுமென்பதுதான் இக்கட்டுரையாளரின் கருத்து. நல்லூர் இராஜதானி நகர அமைப்பு ஆய்வின் இரண்டாம் பதிப்பு நூலாக வெளிவரும்போது இந்தக் கட்டுரையும் உள்ளடக்கியே வெளிவரும். இக்கட்டுரை ஏற்கனவே திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்தது. இப்பொழுது மீள்பிரசுரமாக வெளிவருகிறது ஒரு பதிவுக்காக.. - வ.ந.கி -] சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார்.

கலாநிதி புஷ்பரட்ணமோ கலாநிதி குணராசாவின் நூல்களை தனது சிங்கை நகர் வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காகக் குறிப்பிடுவார். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையிலும் கூட சிங்கை நகர் என்னும் பெயர் வந்ததற்கான காரணம், மற்றும் சிங்கை நகரின் தோற்றத்திற்கான காலகட்டம் ஆகியவற்றில் மாறுபட்ட குழப்பகரமான கருத்துகளே நிலவுகின்றன. இக்கட்டுரையில் இவர்களிருவரினதும் சிங்கைநகர் பற்றிய கருதுகோள்களில் காணப்படும் வலுவிழந்த தன்மைபற்றி சிறிது ஆராய்வோம். பின்னுமோர் சமயம் இது பற்றி மேலும் விரிவாக ஆய்வோம். கலாநிதி புஷ்பரட்ணத்தின் தர்க்கத்தில் காணப்படும் முரண்பாடுகள் சிங்கை நகர் பற்றிய சுவாமி ஞானப்பிரகாசர் மற்றும் முதலியார் செ.இராசநாயகம் ஆகியோரின் சிங்கைநகர் பற்றிய கருதுகோட்களுக்கே வலுசேர்ப்பதாக அமைகின்றன என்பது அடியேனின் நிலைப்பாடு.

சிங்கை நகர் பற்றிய கலாநிதி குணராசா பின்வருமாறு கூறுவார்: "... உக்கிரசிங்கன் புதிய தலைநகர் ஒன்றினைத் தன் இராச்சியத்தில் உருவாக்க விரும்பி வன்னிப் பிரதேசத்தில் திக் விஜயம் ஒன்றினை மேற்கொண்டான். அவன் வன்னி மார்க்கமாகச் செல்லுகையில் வன்னியர்கள் ஏழுபேரும் எதிர்கொண்டு வந்து வன்னி நாடுகளைத் திறை கொடுத்து ஆள உத்தரவு கேட்டார்கள். உக்கிரசிங்கன் அதற்குச் சம்மதித்தான். அப்பிரதேசத்தில் அவன் உருவாக்கிக் கொண்ட தலைநகர் சிங்கை நகராகும்..." (நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை'- க.குணராசா; பக்கம் 59).

வன்னியர்கள் வாழ்ந்த பகுதி அடங்காப்பற்று என அழைக்கப்பட்டது. இதற்குரிய முக்கிய காரணங்களிலொன்று வன்னிச் சிற்றரசர்கள் பலதடவைகள் யாழ்மன்னர்களுட்பட ஏனைய மன்னர்களுக்கு அடங்காமல் வாழ்ந்தவர்கள் என்னும் கூற்று. சில சமயங்களில் யாழ்மன்னர்களுக்கெதிராகக் கலகங்களையும் தூண்டி விட்டுள்ளதை யாழ்ப்பாண வைபவமாலை (யாழ்ப்பாணவைபவமாலை, முதலியார் குலசபாநாதன் பதிப்பு; பக்கம் 37-40) விபரிக்கும். மேலும் பழைய வரலாற்று நூல்களில் பூநகரி, பல்லவராயன் கட்டு போன்ற வன்னிப் பகுதிகளை 'வெளிநாடு' (யாழ்ப்பாணவைபவமாலை: பக்கம் 29) என்றுதான் அழைத்துள்ளார்கள். இவ்விதமான வெளிநாடொன்றிற்கு, அதிலும் அதிக அளவில் எதிர்ப்புச் சூழல் நிலவியதொரு இடத்துக்கு எதற்காக இராஜதானி கதிரைமலையிலிருந்து மாற்றப்பட்டது?

"...சிங்கை நகர் என்ற பெயர் கலிங்கநாட்டு நகரங்களுள் ஒன்றாகிய ஸிங்கபுரத்தின் தொடர்புடைய பெயர் என்று கொள்ள இடமுண்டு.... சிங்கை நகர் என்ற பெயர், முதன் முதல் கதிரைமலையிலிருந்து தலைநகரை வேறிடத்திற்கு மாற்றிப் புதிய தலைநகர் ஒன்றினை உருவாக்கிய உக்கிரசிங்கனின் பெயரைத் தாங்கி சிங்க(ன்) நகர் என விளங்கியிருந்தது எனக் கொள்வதே சாலப் பொருத்தமானது." (நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை'- க.குணராசா; பக்கம் 59) என்பார் க.குணராசா. இதுபற்றிய கலாநிதி புஷ்பரட்ணத்தின் கருதுகோள் வேறானது. அவர் சோழரே சிங்கைநகரென்னும் பெயர் ஏற்படக் காரணமென்பார்: " ...இப்பெயர் ஒற்றுமை கூடக் கலிங்கநாட்டுச் சிங்கபுரத்தொடர்பால் நேரடியாக வட இலங்கைக்கு வந்ததெனக் கூறுவதைவிடத் தமிழகத்துடனான தொடர்பால் வந்ததெனக் கூறுவதே பொருத்தமாகத் தோன்றுகிறது. ஏனெனில் தமிழகத்திலும் இப்பெயர் நீண்டகாலமாகப் புழக்கத்திலிருந்து வந்துள்ளது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் சந்திராதித்ய காலச் செப்பேடு சிங்கபுர என்ற இடத்தில் இவன் அமைத்த ஆலயம் பற்றிக் கூறுகிறது....... அதே போல வட இலங்கையை வெற்றி கொண்ட முதலாம் பராந்தக சோழன் கால இரு நகரங்கள் சிங்கபுரம், சிங்கபுரநாடு என்ற பெயரைப் பெற்றிருந்தன. அத்துடன் கொங்கு மண்டலத்திலுள்ள காங்கேயநாடு சோழர் ஆட்சியின்போது சிங்கை என்ற இன்னொரு பெயரையும் பெற்றிருத்தது. இச்சிங்கை நாட்டு வேளாளத் தலைவர்களுக்கு சோழர்கள் இட்ட மறுபெயர் சிங்கைப் பல்லவராயர் என்பதாகும். இவர்கள் சோழருடன் இணைந்து இலங்கை நாட்டுடனான அரசியலிலும், படையெடுப்புக்களிலும், வர்த்தகத்திலும் ஈடுபட்டதற்குப் பல சான்றுகள் உண்டு.." (நூல்: தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு - ப.புஷ்பரட்ணம்; பக்கம் 183)

முதலியார் இராசநாயகம் 'கோட்டகம' கல்வெட்டில் 'பொங்கொலி நீர்ச் சிங்கை நகராரியன்' எனக் குறிப்பிட்டிருப்பதைக் காரணம் காட்டி அதற்குரிய பிரதேசமாக வல்லிபுரமே அவ்விதமான துறைமுகப் பொலிவுள்ள நகரென்று கருதுவார். ஆனால் கலாநிதி க.குணராசாவோ இது பற்றிப் பின்வருமாறு கூறுவார்: "....யாழ்ப்பாணக் கடனீரேரி அன்று பொங்கு கடலாகவே விளங்கியது....." (நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை'- க.குணராசா; பக்கம் 60) பதினான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த சம்பவத்தைக் கூறுவது கோட்டகம கல்வெட்டு. இக்காலகட்டத்தில் கலாநிதி க.குணராசா குறிப்பிடுவது போல் யாழ்ப்பாணக் கடனீரேரி பொங்கு கடலாக இருந்ததா என்பது சந்தேகத்திற்குரியது. இதற்குப் பல நூறு வருடங்களுக்கு முன்னரே மாந்தை கூடத் தன் முக்கியத்துவத்தினை இழந்து விட்டது. பொங்கு கடலாகவிருந்த யாழ்ப்பாணக் கடனீரேரி மிக விரைவாக அதன் இன்றைய நிலைக்கு மாறி விட்டதா?

இவ்விடத்தில் முதலியார் இராசநாயகத்தின் இவ்விடயம் சம்பந்தமான கருதுகோள்களை ஆராய்வதும் பயனுள்ளதே. இவரது 'யாழ்ப்பாணச் சரித்திரம்' பண்டைய யாழ்ப்பாணம் பற்றி விபரித்தபடியே தொடங்குவது குறிப்பிடத்தக்கது. அதில் பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளது:"இப்போது குடாநாடாக விருக்கும் யாழ்ப்பாணம், முன்னொரு காலத்தில் அதாவது கிறிஸ்துவுக்கு அநேக ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே, இரண்டு தீவுகளாகவிருந்தது. மேற்கே நாகதீவம், மணிநாகதீவம், மணிபுரம், மணிபல்லவம் என்னும் நாமங்களால் வழங்கபப்பட்ட பெருந்தீவும், கிழக்கே எருமைத் முல்லைத்தீவு, எருமைதீவு என்று பெயர்பெற்ற சிறுதீவும் ஆக இரு பிரிவாக இருத்தது. காலந்தோறும் பூகம்பங்களினாலும், பிரளயங்களினாலும் அழிக்கப்பட்டு, மேற்கே ஒன்றாயிருந்த பெருந்தீவகம் பலதீவுகளாகப் பிரிக்கப்பட்டது. காரைதீவு, வேலணை, மண்டைதீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு முதலிய தீவுகளும், வலிகாமமும் அப்பெருந்தீவகத்தின்பகுதிகளேயாம். அவ்வாறே கிழக்கே ஒன்றாகவிருந்த சிறுதீவகம் களப்புக் கடலால் வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளியென்னும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. பண்ணைக்கடல், பூநகரிக்கடல், யானையிறவுக்கடல் என்னுங் களப்புக்கடல்கள் முன்னே வங்காளக்குடாக்கடலுடன் சேர்ந்து, ஆழமும் அகலமும் உள்ளனவாயிருந்தன; அன்றியும் மேலைத்தேசங்களிலும், சீனம் முதலிய கீழைத்தேசங்களிலுமிருந்து போக்குவரவு செய்யுங் கப்பல்களுக்குப் பெரும் வழியாகவும், சோளகம் வாடைக்காற்றுக்கள் தொடங்குங் காலங்களில் உண்டாகும் புயல்களுக்கு, அக்கப்பல்களின் ஒதுக்கிடமும் உறைவிடமுமாகவும் இருந்தன" ('யாழ்ப்பாணச்சரித்திரம்'; பக்கம்1-2). இவ்விதமாகவிருந்த நிலை காலப்போக்கில் மாறி யாழ்ப்பாணக்குடாநாடு உருவாகியதற்குக் காரணங்களாக வங்காளக்குடாக்கடலின் அலைகளால் ஒதுக்கப்படும் மணற்றிரளினையும், வடக்கில் முருகைக்கற்பூச்சினால் உண்டாக்கப்படும் கற்பாறைகளையும், தெற்கிலிருந்து சோளகக்காற்றினால் கொண்டுவரப்படும் மணலினையும் சுட்டிக் காட்டுவார் முதலியார் இராசநாயகம்.

மேலும் இவரது ஆய்வின்படி கி.மு முதலாம் நூற்றாண்டிலிருந்து , கி.பி..மூன்றாம் நூற்றண்டுவரையில் மாதோட்டம் புகழ்மிக்க துறைமுகமாகவிருந்தது. கிரேக்கர், ரோமர் மற்றும் அராபியர்கள் எனப்பலர் மாதோட்டத்துறைமுகத்து தமது கீழைத்தேய வியாபாரநிமித்தம் வந்து போயினர். மன்னாரிலும் ,மாதோட்டத்திலுங் காணப்படும் பெருக்குமரங்கள் அராபியர்களால் கொண்டுவரப்பட்டவையே என்பது இவரது கருத்து. மாதோட்டம் பற்றி யாழ்ப்பான இராச்சியம் பின்வருமாறு விபரிக்கும்: "அக்காலத்தில் இலங்கையின் பிரசித்த துறைமுகம் மாதோட்டம் என்னும் பெருந்துறையே. அதைப் பிரதான துறைமுகமாகக் கொண்டு வங்காளக்குடாக்கடலுக்கூடாய்க் கீழைத்தேசங்களுக்குப் போகும் மரக்கலங்களும், சீன தேசத்திலிருந்து வரும் மரக்கலங்களும் யானையிறவுக்கடலுக்கூடாகப் போக்குவரவு செய்வதுண்டு" (யாழ்ப்பாணச்சரித்திரம்'; பக்கம் 19). அக்காலகட்டத்தில் நாவாந்துறை, பூநகரி மற்றும் கல்முனை ஆகியனவும் துறைமுகங்களாக விளங்கியதாகவும், நாவாந்துறையிலிருந்து வழுக்கியாற்றின் வழியே தலைநகராயிருந்த கதிரைமலைக்கு சங்கடம் என்னுந் தோணிகளில் வியாபாரப்பண்டங்கள் ஏற்றி செல்லப்பட்டனவென்றும், இதனாலேயே நாவாந்துறைக்கு சங்கடநாவாந்துறையென்னும் பெயர் இப்பொழுதும் வழங்கிவருவதாகவும் இராசநாயகம் அவர்கள் மேலும் கருதுவார். இவ்விதமாகப் புகழ்பெற்று விளங்கிய மாதோட்டம் 'மண்ணேறிட்டிருந்தபடியால் துறை உபயோகம் அருகி, ஒன்பதாம் நூற்றாண்டளவில் கப்பல்கள் அத்துறைக்கு வருதல் முற்றாக ஒழிந்து, அதன் பின் முஸ்லீம்கள் வரத்தொடங்கிய காலத்தில் அவர்கள் நூல்களில் 'கலா'வென்றழைக்கப்பட்ட ஊராத்துறை முக்கியத்துவம் பெற்றதென்று கருதுவார் இராசநாயகம் அவர்கள்.

சி.பத்மநாதனின் மாந்தை பற்றிய கருத்தும் இத்தகையதே. 'சோழராட்சிக்குப் பிற்பட்ட காலத்தில் மாந்தை நகரம் வீழ்ச்சியுற்றது. பதினோராம் நூற்றாண்டின்பின் மாந்தைத் துறைமுகத்திற்குத் தூரதேசங்களிலிருந்து ஆழ்கடல் வழிச் செல்லும் பெருங்கப்பல்கள் வந்திருந்தமைக்குச் சான்றுகளில்லை. ஆழ்கடல் வழியான வாணிபத்தில் ஒரு பிரதானதொடர்பு நிலையம் என்ற நிலையினை இழந்தமையால் மாந்தையில் நகர வாழ்க்கை சீரழிந்தது. கி.பி.1050 ஆம் ஆண்டிற்குப் பிறபட்ட சாசனங்களிலும் இலக்கியங்களிலும் மாந்தையிலுள்ள வணிகரைப்பற்றியோ அங்கிருந்த கட்டட அமைப்புகளைப்பற்றியோ குறிப்புக்கள் காணப்படவில்லை' என்பார் அவர் (கட்டுரை: 'இலங்கை தமிழ வணிகக் கணங்களும் நகரஙக்ளும்'- சி.பத்மநாதன்; 'சிந்தனை' ஆடி 1984 இதழிலில்). கி.மு காலத்திலிருந்தே வங்காளக்கடலினூடு தூர நாடுகளுக்குச் செல்லும் கப்பல்கள் யானையிறவுக் கடலினூடு மாந்தை துறைமுகம் வழியாகப் பயணிக்க முடிந்ததால் அந்நகர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவிருந்தது. காலப்போக்கில் யானையிறவுக் கடல் மண்மேடிட்டுத் தூர்ந்ததால் அது தடைபடவே காலப்போக்கில் மாந்தை தன் முக்கியத்துவத்தினை இழந்தது.

இதேசமயம் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இபின் பதூத்தா என்னும் முஸ்லீம் பயணி ஆரிய மன்னனை இலங்கையின் சுல்தானெனவும், பல கப்பல்களுடன் விளங்கிய கடற்படையினை அவன் வைத்திருந்தது பற்றியும் தெரிவித்திருக்கின்றான். இத்தகைய மன்னனின் சிங்கை நகர் அமைந்திருக்கக் கூடிய இடம் வல்லிபுரம் போன்றதொரு பகுதியாக இருந்திருப்பதற்கே அதிகமான சாத்தியங்களுள்ளன.

இத்தகையதொரு நிலைமையில் க.குணராசா அவர்கள் 'யாழ்ப்பாணக் கடனீரேரி அன்று பொங்கு கடலாகவே விளங்கியது' என்று பொதுவாகக் கூறுவது பொருத்தமற்றதாகவே படுகிறது. கோட்டகம் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள 'பொங்கொலி நீர்சிங்கைநகர்' பூநகரியினை அண்டிய வன்னி மாவட்டத்தில் இருப்பதை வலியுறுத்துவதற்காக அவ்விதம் கூறினார் போலும். அவர் கூறுவது உண்மையானால் கடந்த எட்டு நூற்றாண்டுகளுக்குள் பொங்கு கடலாக விளங்கிய யாழ்ப்பாணக் கடனீரேரி தூர்ந்து இன்றைய நிலையினை அடைந்திருக்க வேண்டும்.

மேலும் யாழ்பாடி பற்றிய யாழ்ப்பாண வைபவமாலையின் கூற்றினைக் குறிப்பிடும் கலாநிதி க.குணராசா பின்வருமாறு குறிப்பிடுவார்: "...கண்தெரியாத ஒரு யாழ்ப்பாடிக்கு இசைக்குப் பரிசாகத் தனது இராச்சியத்திற்கு வடக்கே இருந்து ஒரு மணல் வெளியே தமிழ்மன்னன் ஒருவன் பரிசளித்ததாகக் கூறும் இச்சம்பவத்தின் உண்மை பொய் எவ்வளவு என்பதை ஆராய்வதைவிடுத்து மணல் வெளியாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணம் வடக்கேயிருந்தது என்றால், அதைப் பரிசாகத் தந்த மன்னன் இருந்தவிடம் தென்நிலப்பரப்பாக இருந்தது என்பது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதே.." ((நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை'- க.குணராசா; பக்கம் 62). இது பற்றிய கலாநிதி ப.புஷ்பரட்ணத்தின் கூற்றும் இத்தகையதே.

"... இதில் சிங்கை நகருக்கு வடக்கிலுள்ள நாடு மணற்றிடர் எனக் கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் என்னும் பெயர் 15ஆம் நூற்றாண்டில் ஏற்படும்வரை இதும்மணற்றி, மணவை, மணற்றிடர் என அழைக்கப்பட்டதற்கு ஆதாரங்களுண்டு....... இதில் வடக்காகவுள்ள இப்பிராந்தியத்தை சிங்கையில் இருந்து ஆட்சிபுரிந்த மன்னன் யாழ்ப்பாணனுக்கு வழங்கினான் எனக் கூறுவதிலிருந்து யாழ்ப்பாணத்திற்குத் தெற்காக சிங்கையிருந்தது தெரிகிறது. இங்கே யாழ்ப்பாணத்திற்குத் தெற்காக வன்னிப் பிராந்தியமே இருப்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளத்தக்கது..." (நூல்:'தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு'- ப.புஷ்பரட்ணம்; பக்கம்: 168). உண்மையில் இவர்களிருவரும் கூறும் யாழ்ப்பாண வைபவமாலையில் ".... அரசன் அதைக்கேட்டு மிகுந்த சந்தோசம் கொண்டு அவனுக்குப் பரிசிலாக இலங்கையின் வட திசையிலுள்ள மணற்றிடர் என்னும் நாட்டைக் கொடுத்தான்.."(நூல்: 'யாழ்ப்பாண வைபவமாலை' - மயில்வாகனப்புலவர், முதலியார் குலசபாநாதன் பதிப்பு; பக்கம்:24) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.. சிங்கை நகருக்கு வடக்கிலுள்ள நாடு மணற்றிடரென்று கூறப்படவில்லையே. 'இலங்கையின் வட திசையிலுள்ள மணற்றிடர்' என்றுதானே கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வடதிசையில்தானே யாழ்ப்பாணமுள்ளது. இதிலென்ன ஆச்சரியம்? சிங்கை நகரிலிருந்து ஆண்ட மன்னன் இலங்கையின் வடக்கிலுள்ள மணற்றிடரென்பதை ஏன் கலாநிதி குணராசாவும், கலாநிதி புஷ்பரட்ணமும் சிங்கை நகருக்கு வடக்கிலென்று வலிந்து பொருள்கண்டார்கள்? இலங்கை என யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிடப்படுவதை கலாநிதி குணராசாவும், கலாநிதி புஷ்பரட்ணமும் சிங்கைநகரினைக் குறிப்பதாகக் கருதுகின்றார்களா? ஏன்?

இவற்றையெல்லாம் பார்க்கும்போது சிங்கைநகர் பூநகரிப்பகுதியில் இருந்திருக்கலாமென்று ப.புஷ்பரட்ணம் மற்றும் க.குணராசா ஆகியோர் கருதுவது காத்திரமான வாதமாகப் படவில்லை. மேலும் யாழ்பாடி கதையினை ஆதாரம் காட்டும் அவர்கள் அதில் யாழ்ப்பாணத்தை (மணற்றிடர்) சிங்கை நகருக்கு வடக்கிலுள்ளதொரு நகராக வலிந்து பொருள்கண்ட விதமும் எப்படியாவது தங்களது 'சிங்கை நகர் பூநகரிப் பகுதியிலிருந்துள்ளதென்ற' கருத்தினை எப்படியாவது நிறைவேற்றவே அவர்கள் முனைந்துள்ளார்களோவென்ற ஐயத்தினை ஏற்படுத்துகிறது. மேலும் ப.புஷ்பரட்ணம் அவர்கள் தனது சிங்கை நகர் பற்றிய கருத்தினை நிறுவுவதற்காக பூநகரிப்பகுதியில் கிடைக்கப்பெறும் கட்டடப்பகுதிகள், நாணயங்கள் மற்றும் இடப்பெயர்களையும் துணைக்கழைப்பார். ஆனால் இவையெல்லாம் அப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தினை வலுப்படுத்துகின்றனவேயல்லாமல் அங்கொரு இராஜதானி இருந்திருப்பதற்கான உறுதியான சான்றுகளாகக் கருதமுடியாது. வரலாற்றில் கி.மு.காலகட்டத்திலிருந்தே முக்கியத்துவம் பெற்றிருந்த பூநகரிப்பகுதியில் அரசர்கள், சிற்றரசர்கள், வணிகக்கணங்கள் மற்றும் படைத்தலைவர்களுக்கெல்லாம் மாளிகைகள், வியாபாரநிலையங்கள், மற்றும் அரசமுக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் இருந்திருப்பது இயல்பே. அத்தகைய பகுதியில் இதன் காரணமாகப் பெருமளவில் நாணயங்கள் கிடைக்கப்படுவதும், அரச முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்கள் நிலவுவதும் பெரிதான ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. இவற்றைக் கண்டுவிட்டு , விழுந்தடித்துக் கொண்டு, இதற்குக் காரணம் அங்கொரு அரசு இருந்ததுதான் என்று முடிவுக்கு வந்து விடுவது உறுதிமிக்க தர்க்கமாகப் படவில்லை. இதற்கு மாறாக கி.மு.காலத்திலிருந்தே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்கிய பூநகரிப் பகுதி பின்னர் சோழர் காலத்திலும், யாழ்ப்பாண அரசின் காலத்திலும் அதன் கேந்திர, வர்த்தக, இராணுவரீதியான முக்கியத்துவத்தினை இழக்காமலிருந்துள்ளதையே மேற்படி கட்டடச் சிதைவுகளும், இடப்பெயர்களும் மற்றும் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களும் உறுதிப்படுத்துகின்றன என்று வேண்டுமானால் வாதிடலாம். அது பொருத்தமாகவும், வலுவானதாகவுமிருக்கும்.

உசாத்துணை நூல்களில் சில:
1. 'யாழ்ப்பாண வைபவமாலை'- மாதகல் மயில்வாகனப் புலவர் (முதலியார் குல. சபாநாதன் பதிப்பு)
2. 'யாழ்ப்பாணச் சரித்திரம்' - முதலியார் செ.இராசநாயகம்
3. 'தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு'- ப.புஷ்பரட்ணம்
4. 'யாழ்ப்பாண அரச பரம்பரை' - கலாநிதி க.குணராசா
5. 'இலங்கைத் தமிழ் வணிகக் கணங்களும் நகரங்களும் (கி.பி.1000 - 1250) -சி.பத்மநாதன் (ஆய்வுக் கட்டுரை; 'சிந்தனை' ஆடி 1984 இதழ்).
6. 'இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை' - கலாநிதி கா.இந்திரபாலா

நன்றி: பதிவுகள், திண்ணை, தமிழர் மத்தியில்

8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....

கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' என்னும் நூலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததது. குமரன் புத்தக இல்லம்' பதிப்பகத்தினரால் தமிழகத்தில்; 2009இல் வெளியான நூலது. இதுவரையில் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றிப் பலர் எழுதியிருக்கின்றார்கள். இரசிகமணி கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராசன் என்று பலர், அவர்களது நூல்கள் பெரும்பாலும் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றிய பொதுவான அறிமுக நூல்களாகத்தான் அமைந்துள்ளன. அவற்றின் முக்கியம் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றீய தகவல்களை வழங்குகின்றன என்பதில்தான் தங்கியுள்ளது. ஆனால் கலாநிதி நா.சுப்பிரமணியனின் மேற்படி நூல் அவற்றிலிருந்தும் பெரிதும் வேறுபடுவது நூலாசிரியரின் ஈழத்து நாவல்கள் பற்றிய திறனாய்வில்தான். ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிய தகவல்களை வழங்கி நல்லதோர் ஆவணமாக விளங்கும் அதே சமயம் ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிய நல்லதொரு திறனாய்வு நூலாகவும் இந்நூல் விளங்குகின்றது. அந்த வகையில் இந்த நூலின் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது. இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களிலொன்று: நூலாசிரியரின் இந்த நூலானாது அவர் தனது முதுகலைமானிப் பட்டப்படிப்புக்காக, இலங்கைப் பல்கலைக்கழகப் பேராதனை வளாகத்தில் , ஈராண்டுகள் (1970- 1972) நடாத்திய ஆய்வின் விளைவாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையாகும். வெறும் ஆய்வுக்கட்டுரையாக இல்லாமல் அவரது கடும் உழைப்பினால் நல்லதொரு திறனாய்வு நூலாகவும் மேற்படி கட்டுரை வளர்ச்சியுற்றிருக்கின்றது.

இந்நூல் 1885ஆம் ஆண்டில் வெளியான அறிஞர் சித்திலெப்பையின் 'அசன்பேயினுடைய கதை' லிருந்து 1977ஆம் ஆண்டுவரை வெளிவந்த ஞானரதனின் 'ஞானபூமி' வரை சுமார் 450 நூல்களை ஆராய்கிறது. இந்நூலின் முதல் பதிப்பு 1978இல் வெளியானது. நான் வாசித்தது திருத்தி, விரிவாக்கப்பட்ட அண்மைய பதிப்பு, குமரன் புத்தக இல்லத்தினால் 2009இல்  வெளியான பதிப்பு. அதில் 1977ற்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களை உள்ளடக்கிய பின்னிணைப்புகளுமுள்ளன.


நூலின் உள்ளடக்கம் பற்றி...

இந்நூலின் திருத்திய பதிப்பானது ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம், சமுதாயச் சீர்திருத்தக்காலம், எழுத்தார்வக்காலம், சமுதாய விமர்சனக்காலம், பிரதேசங்களை நோக்கி, நிறைவுரை மற்றும் பின்னிணைப்புகள். பின்னிணைப்புகள் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1977ற்குப் பிற்பட்ட வரலாற்றுச்செல்நெறிகள், தனிக் கவனத்தைப்பெற்ற  இரு நாவல்கள் பற்றிய ஆய்வுரைகள், ஈழத்துத் தமிழ் நாவல்கள் பட்டியல் மற்றும்ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பான ஆய்வுகள் ஆகியனவே அவை.

அ. ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம்

இப்பகுதியில் நாவல் என்னும் சொல்லின் பயன்பாடு எவ்விதம் ஏற்பட்டது, ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பில் ஆற்றப்பட்ட ஆய்வுகள் பற்றிய விபரங்கள், ஈழத்தில் தமிழ் நாவல் தோன்றிய காலகட்டத்துச் சூழ்நிலை, ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத்தின் ஆரம்ப முயற்சிகள் போன்ற விடயங்கள் ஆராயப்படுகின்றன. நாவல் என்னும் சொல்லின் தோற்றம் பற்றி மிகவும் சுருக்கமாகவே கூறப்படுகிறது. "'நாவல்' (novel) என்ற ஆங்கிலச் சொல் புதுமையெனப் பொருள்தரும் நோவா (Nova) என்னும் இந்து- ஐரோப்பிய மூல மொழிச் சொல்லடியிலிருந்து உருவாகியது. " என்று குறிப்பிடுகின்றார். Nova என்பது இலத்தீன் சொல். உண்மையில்  புதியது என்னும் கருத்துடைய novus என்னும் இலத்தீன் பெயர்ச்சொல்லின் பெண்ணியல்பான சொல்தான் Nova. சில மொழிகளில் ஒரு சொல்லுக்கு ஆணியல்பான, பெண்ணியல்பான சொற்களுள்ளன. Nova Stella என்பதன் சுருக்கமான வடிவம்தான் Nova. இலத்தீன் மொழியில் நட்சத்திரம் என்னும் சொல்லுக்குரிய சொல் பெண்ணியல்பான stella. இலத்தீனில் stella என்னும் பெண்ணியல்பான சொல் பாவிக்கப்படுவதால் புது நட்சத்திரம் என்பதற்கு Nova Stella என்னும் சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன (Nova பெண்ணியல்பான சொல்; Stella பெண்ணியல்பான சொல்). "நாவல்' (novel)  என்ற ஆங்கிலச் சொல் புதுமையெனப் பொருள்தரும் நோவா (Nova) என்னும் இந்து- ஐரோப்பிய மூல மொழிச் சொல்லடியிலிருந்து உருவாகியது' என்பது "நாவல்' (novel) என்ற ஆங்கிலச் சொல் புதுமையெனப் பொருள்தரும் néwos, néwios என்னும் இந்து- ஐரோப்பிய மூல மொழிச் சொல்லடியிலிருந்து உருவாகியது" என்றிருக்க வேண்டுமென்று படுகிறது.

"ஸ்பானியாவிலும் இத்தாலியிலும் மத்திய காலத்தில் வழக்கிலிருந்த கதைகள் பதினான்காம் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் படிக்கப்பட்ட போது அவற்றை ஆங்கிலேயர் 'நாவல்' என்னும் பெயரால் வழங்கினர். அக்கதைகளைப் போலவர் தாமும் சுயமாக எழுதமுயன்ற வேளையில் அவற்றுக்கும் அப்பெயரையே வழங்கலாயினர்." என்று முதல் பந்தியில் வருகிறது. அடுத்த பந்தியில் "பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய சமூக அமைப்பிற் பெருமாற்றங்கள் நிகழ்ந்தன. கைத்தொழில் வளர்ச்சி, வாணிகப் பெருக்கம் ஆகியவற்றின் விளைவாகப் பாரம்பரிய சமூக அமைப்பு நிலைகுலைந்து புதிய 'சமூக பொருளாதார' உறவுகள் தோன்றின. இவற்றைப் புலப்படுத்தத்தக்க வகையில் 'நாவல்' பரிணாமம் பெற வேண்டியதாயிற்று. உண்மைச் சம்பவங்களுடன் கூடிய நடைமுறை வாழ்க்கையைச் சித்திரிக்கும் நீண்ட புனைகதை வடிவமே நாவல் என வழங்கும் மரபு பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாகியது." என்று வருகிறது.

"ஸ்பானியாவிலும் இத்தாலியிலும் மத்திய காலத்தில் வழக்கிலிருந்த கதைகள் பதினான்காம் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் படிக்கப்பட்ட போது அவற்றை ஆங்கிலேயர் 'நாவல்' என்னும் பெயரால் வழங்கினர்" என்பது சிறிது குழப்பத்தை வாசகர்களுக்குத் தருகிறது. பதினைந்தாம், பதினான்காம் நூற்றாண்டுகளில் மொழிபெயர்க்கப்பட்ட இத்தாலிய மற்றும் ஸ்பானிஸ் கதைகள் இங்கிலாந்தில் நாவல் என்று அழைக்கப்பட்டதாக இக்கூற்று கருத்தினைத் தருகின்றது.  ஆனால் பின்னர் வரும் "உண்மைச் சம்பவங்களுடன் கூடிய நடைமுறை வாழ்க்கையைச் சித்திரிக்கும் நீண்ட புனைகதை வடிவமே நாவல் என வழங்கும் மரபு பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாகியது: என்னும் கூற்று அதற்கு முரணாகவல்லவா அமைந்திருக்கிறது.

அடுத்து நூலாசிரியர் ஈழத்தின் தமிழ் நாவல்கள் தோன்றிய காலகட்டத்தையும், அக்காலகட்டத்தில் நிலவிய சூழ்நிலையினையும், அச்சூழல் எவ்விதம் நாவல் தோன்றக் காரணமாயிருந்தது என்பது பற்றியும் ஆராய்கின்றார். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பத்தில் கிறிஸ்த்தவ மதத்தைப் பரப்பும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்த 'மிசனரி; இயக்கங்கள் தமது மதமாற்ற முயற்சிகளோடு ஆங்கிலக் கல்வி வளர்ச்சிக்கும் மிகுந்த பங்காற்றியுள்ளன. அக்காலகட்டத்தில் குருகுல முறையிலான தமிழ்க்கல்வி முறையும் நடைமுறையிலிருந்தது. இது பற்றிக் குறிப்பிடுகையில் நூலாசிரியர்,

"பரம்பரையடிப்படையிலமைந்த சமூக பொருளாதார உறவுகளைக் கொண்ட ஈழத்தமிழரின் பண்பாட்டில் ஆங்கிலக் கல்வியும் ஐரோப்பொய பழக்கவழக்கங்களும் மாற்றங்களைத் தோற்றுவித்தன. பழைமையில் நம்பிக்கையிழந்தவர்களும் புதியராய் கிறித்தவ மதத்தைத் தழுவியவர்களும் அக் காலப்பகுதியில் ஐரோப்பிய நடையுடை பாவனைகளையும் வாழ்க்கை முறைகளையும் பின்பற்றத் தொடங்கினர். இவற்றின் விளைவாகத் தேசியப் பண்பாடு சீர்குலையும் என அஞ்சிய ஈழத்தறிஞர் சிலர் தேசியப் பண்பாட்டுப் பாதுகாப்பு நோக்கில் இயக்கங்களைத் தொடங்கினர். கலாயோகி ஆனந்த கெ. குமாரசுவாமி (1877-1947) 1905ஆம் ஆண்டில் நிறுவிய இலங்கை சமூக சீர்திருத்தக் கழகம் (Ceylon Social Reforms League) இத்தகைய நோக்கில் எழுந்ததொன்றேயாகும். ஈழத்துத் தமிழ் பேசும் மக்களுள் ஒரு பிரிவினரான முஸ்லிம்களிடையிலும் சமயம், அரசியல், கல்வி ஆகிய துறைகளில் மறுமலர்ச்சி இயக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே ஆரம்பமாகியது. அறிஞர் சித்தி லெவ்வை இம்மறுமலர்ச்சிக்குத் தலைமை தாங்கி இஸ்லாமிய எழுத்துலக முன்னோடியாகப் பணியாற்றினார். சமூகத்திற் புதிதாக உருவான நடுத்தர வர்க்கத்தினரின் தொகை பெருகியபோது அவர்களது கருத்துப்பரிமாற்றத்திற்குரிய வெளியீட்டுச் சாதனமாகப் பத்திரிகைகள் தோன்றின. சமயக் கருத்துக்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் பரப்பும் நோக்கில் வெளிவரத் தொடங்கிய பத்திரிகைகள் தமிழ் மக்களிலே குறிப்பிடத்தக்க தொகையினரிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தன." என்கின்றார்.

இதே சமயம் ஆறுமுகநாவலரால் தமிழ் இலக்கியத்தில் நிலவி வந்த செய்யுளின் ஆதிக்கம் படிப்படியாக வசனநடைக்கு மாறுகின்றது. இவ்வசன நடையினைப் பத்திரிகைகள் மேலும் வளர்த்தன. இவ்விதமாக நாவல் இலக்கியம் ஈழத்தமிழ் இலக்கியத்தில் தோன்றுவதற்கு அக்காலச் சூழல் எவ்விதம் விளங்கியது என்பதை ஆசிரியர் விளக்கிச் செல்லுவார். மேலும் ஆரம்பத்தில் உருவான நாவல்கள் தமிழகத்தின் பாதிப்பினால் உருவானவையென்றும், சி. வை. சின்னப்பபிள்ளையே  ஈழத்தைக் களமாகக் கொண்டு வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் (1905) என்னும் நாவலினை முதலில் எழுதினார் என்பதையும் நூல் விபரிக்கின்றது. அது பற்றிக் குறிப்பிடும் நூலாசிரியர் பின்வருமாறு விளக்குவார்:

"வீரசிங்கன் கதை அல்லது ச்ன்மார்க்க ஜெயம் என்ற எனது கன்னிப் படைப்பான இந்த நாவலைப் பொதுமக்களுக்குச் சமர்ப்பிக்கும் வேளையிற் சில குறிப்புக்களைக் கூறவேண்டியுள்ள்து. இது எனது கன்னி முயற்சியாதலினால் பல இடர்பாடுகளை நான் எதிர்நோக்க வேண்டியிருந்தது. வாசகர்களின் உள்ளங்களிலே சன்மார்க்கத்தின் மகத்துவத்தையும் அதனாலடையக் கூடிய நன்மைகளையும் பதிய வைப்பதும் இந்திய வாசகர்களுக்கு ஈழத்து மக்களின் சாதாரண கிராம வாழ்க்கையையும் பழக்க வழக்கங்களையும் தெளிவாக விளக்குவதுமே இப்படைப்பின் நோக்கமாகும். தற்பொழுது தமிழ் நாவல்கள் பெரும்பாலும் இந்திய வாழ்க்கையயும் குறிப்பாகப் பிராமணரது வாழ்க்கையையுமே விபரிக்கின்றன. இக் கதை ஓர் இளைஞனுக்கு உண்மையில் ஏற்பட்ட அநுபவங்களை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் காதல், வீரம் போன்ற சுவைகளையும் தமிழ்ச் சான்றோரிலக்கியங்களின் பொருத்தமான மேற்கோள்களையும் இணைத்து இதனைப் படைத்துள்ளேன். இத்தகைய கன்னிப்படைப்பில் குறைபாடுகள் காணப்படுவது தவிர்க்க முடியாததே. அவ்வகைக் குறைபாடுகளை மன்னிக்குமாறு எனது வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்."

அத்துடன் மதமாற்றத்திற்காக கிறிஸ்தவ மிசனரிகளால் பாவிக்கப்பட்ட நாட்டுக் கூத்து, நாடகம் ஆகியன நூல் வடிவம் பெற்றமையும் , அதன் தொடர்ச்சியாகவே இலங்கையில் நாவல் இலக்கியம் தோன்றியது என்ற சில்லையூர் செல்வராசனின் தனது ஈழத்து நாவல்கள் நூலில் கூறுவதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுவார்.

இவ்விதமாக ஈழத்தில் தமிழ் நாவல் தோன்றுவதற்கு அக்காலகட்டத்தில் நிலவிய சூழ்நிலை எவ்விதம் உதவின என்பதை நூலின் இந்த முதற்பகுதி சுருக்கமாக விபரிக்கும்.

ஆ.  சமுதாய சீர்திருக்கக் காலம், எழுத்தார்வக்காலம்  மற்றும் சமுதாய விமர்சனக்காலம்

இப்பகுதிகள் அனைத்தும் அப்பகுதிகளுக்குரிய காலகட்டங்களில் நிலவிய சூழல், அவை எவ்விதம் நாவல்கள் உருவாகக் காரணமாக விளங்கின என்பதை விளக்கிப் பின்னர் அக்காலகட்டங்களில் வெளியான பல்வேறு வகையான நாவல்களை இனங்கண்டு, வகைப்படுத்தி இறுதியாக ஆசிரியரின் அவை பற்றிய மதிப்பீடுகளையும் விபரிப்பன. இவ்விதமாக ஆசிரியர் படைப்புகளை நுணுகி ஆராய்ந்து, தரம் பிரித்துத் திறனாய்வு செய்திருப்பது இவரது இந்த நூலை ஏனைய நூல்களிலிருந்து பெரிதும் வேறுபடுத்திக் காட்டுகிறது. மேலும் இவ்விதமாக ஆசிரியர் வந்தடைந்த முடிவுகளுக்குத் தான் ஏன் வந்தேன் என்பதையும் அவர் விளக்கிச் செல்கின்றார். அவற்றை அவர் தர்க்கரீதியாக விளக்குவது நூலுக்குச் சிறப்பளிக்கின்றது.

இ.சமுதாய சீர்திருக்கக் காலம்

சமுதாய சீர்திருத்தக் காலமான பத்தொன்பதாம் நூற்றாண்டினின் இறுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பது ஆண்டுகள் வரையில் 'சைவம், கிறித்தவம் ஆகிய இரு சமயங்களினடிப்படையிலான சமுதாய சீர்திருத்த உணர்வே ஈழத்துத் தமிழிலக்கியத்தை நெறிப்படுத்தும் உந்து சக்தியாய்த் திகழ்ந்தது' என்கின்றார். சைவர்களுக்கும், கிறித்தவர்களுக்குமிடையில் நிலவிய போட்டி நிலை சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அவரவர் சமயம் சார்ந்த அறம், ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்வு கூறும் இயல்பினைத் தூண்டியது என்கின்றார். இதன் விளைவாக ஏனைய இலக்கியத் துறைகளைப் போல் நாவலிலும் சமய அடிப்படையிலான சமுதாயச் சீர்திருத்தம் ஒரு பொதுப்பண்பாக அமைந்தது என்று இனங்கண்டு இக்காலகட்டதை அவர் சமுதாய சீர்திருத்தக்காலம் என்ற முடிவுக்கு நூலாசிரியர் வருகின்றார். மேலும் நூலாசிரியர் அக்காலகட்ட நாவலாசிரியர்கள் தமது நாவல்களுக்கு வழங்கிய முன்னுரைகள் மற்றும் சக நாவலாசிரியர்களின் படைப்புகளுக்கு வழங்கிய அணிந்துரைகள் ஆகியவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளைத் தனது வாதத்துக்கு வலுச்சேர்ப்பதற்குப் பயன்படுத்துகின்றார்.

உதாரணத்துக்கு 'நொறுங்குண்ட இதயம்' என்னும் நாவலுக்கு அதன் ஆசிரியையான திருமதி மங்களநாயகம் தம்பையா கூறும் ""சன்மார்க்க சீவியத்தின் மாட்சியை உபதேசத்தால் விளக்குவதிலும் உதாரணங்களால் உணர்த்துவது மிகவும் நன்மை பயத்தற்கு ஏதுவாகும் என்றெண்ணி இக் கதையை எழுதத் துணிந்தேன். ஒரு விஷயத்தை உவமைகளாலும் ஒப்பனைகளாலும் மனதிற் பதியப் பண்ணுதல் இலகுவென்றது யாவருங் கண்ட நல்வழி. ஆகையினால் சில காரியங்களைப் போதனையாகவும் புத்திமதியாகவும் இப் புத்தகத்தில் அடக்க மனமேவப்பட்டேன்." என்ற கூற்றினைக் குறிப்பிடும் நூலாசிரியர் இது போன்ற மேலும் பல சான்றுகளைக் குறிப்பிடுவார்.

"ஆங்கில ஆட்சியின் விளைவுகளிலொன்றான ஐரோப்பிய பண்பாட்டுத் தாக்கத்தாலே தேசிய பண்பாடு நிலை தளரத் தொடங்கியிருந்த சூழ்நிலையும் பாரம்பரிய சமுதாய அமைப்பிற் புதிய கல்வி முறை ஏற்படுத்திய மதிப்பீடுகளும் இக்காலப்பகுதி சீர்திருத்தம் வேண்டி நின்றமையை உணர்த்தும்" என்று அக்காலகட்டத்தில் எதற்காக சீர்திருத்த உணர்வு மேலோங்கக் காரணமாகவிருந்த விடயங்களைக் குறிப்பிடும் நூலாசிரியர் அதற்காதாரமாக . சுதேச நாட்டியம் பத்திரிகையின் ஆசிரியரான வசாவிளான் க. வேலுப்பிள்ளை  தமது யாழ்ப்பாண வைபவ கௌமுதி நூலிலே தெரிவித்துள்ள " "சீர்திருத்தம் அதிகப்பட்டுவரும் இக்காலத்தில் நல்ல மரத்திற் புல்லுருவிகளைப் போலச் சில மோசங்களும் சிறிது சிறிதாய்ப் பெருகுவதைக் காண்பது துக்கமான சம்பவம். மதுபானம் பாவித்தல், அலங்கார மாளிகை, விலைபெற்ற வர்ணப் பட்டாடை முதலியவைகளில் அதிக பணத்தைச் செலவிடுதல், வாணவேடிக்கை, கூத்து முதலியவைகளுக்கு வீண் செலவு செய்தல், ஐரோப்பிய நாகரிக பழக்கவழக்கங்கள் ஆதியன யாழ்ப்பாணத்தின் ஏற்றத்தையும் தோற்றத்தையும் அழிக்கும் குருவிச்சைகளாம்." எடுத்துக்காட்டுவார்.

அக்காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து பெருமளவில் பொழுதுபோக்கு நாவல்கள் ஈழத்துக்கு இறக்குமதியாகின. இவற்றில் பல மனிதருடைய கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றன என்னும் கருத்தொன்று நிலவியதை இந்து சாதனம் பத்திரிகையில் வெளியான குமரன் என்பவர் எழுதிய 'நாவல் வெள்ளம்' என்னும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ""அன்பர்களே! உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிஷமும் மிகவும் அருமையானது. ஆகவே.... புண்ணிய நூலல்லாத தீய நாவல்களைத் தீக்கிரையாக்குங்கள். இந் நாவல் வெள்ளத்தைத் தடுத்தற்கு நாம் த்தகைய அணை கோலுதல் வேண்டும்? முள்ளை முள்ளாற் களைந்தெறிவது போல், இத்தீய நாவல் வெள்ளத்தை நல்ல நாவல்களை வெளியிட்டே தடுத்தல் வேண்டும். ஆங்கிலமும் தமிழும் பாங்குடன் கற்ற தமிழாசிரியர்கள் நல்ல நாவல்களை எழுதி வெளியிடல் வேண்டும். ஆகவே நாவல்களெழுதுதல் பாமரர் கரத்திலிருந்து பண்டிதர் கரத்திற்கு மாறுதல் வேண்டும். தீய நாவல்களை வாசித்தல் கூடாது என்று பிள்ளைகளைப் பெற்றோரும் மனைவியை நாயகனும் மாணவனை ஆசிரியரும் அழுத்தமாகக் கண்டிக்க வேண்டும்." என்னும் கூற்றின் மூலம் ஆசிரியர் எடுத்துக்காட்டுவார்.

அக்காலகட்டத்தில் வெளியான சமுதாயப் பிரச்சினைகளை உள்ளடக்கிய நாவல்கள், சம்பவச்சுவை மிக்க மர்ம நாவல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு அல்லது தழுவல் நாவல்கள் ஆகியவற்றை உதாரணங்களுடன் குறிப்பிடும் நூலாசிரியர் இவை பற்றிய தனது மதிப்பிட்டில் "சீர்திருத்த உணர்வு மேலோங்கி நின்ற இக் காலப் பகுதியில் வெளிவந்த நாவல்களை வரலாற்று நோக்கிலே நோக்கும்போது தொடக்கத்தில் நடப்பியல்புக்கு முக்கியத்துவம் அளித்தும் அடுத்து மர்மப் பண்புக்கும் சம்பவச் சுவைக்கும் முதன்மை தந்தும் எழுதப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது." என்ற முடிவுக்கு வருகின்றார்.

ஈ. எழுத்தார்வக் காலம்

இக்காலகட்டத்தைப் பற்றிக்குறிப்பிடும் நூலாசிரியர் :மேனாட்டு நாவல்களையும் தமிழ் நாட்டு நாவல்களையும் வாசித்ததன் காரணமாக ஏற்பட்ட அருட்டுணர்வுடனும் எழுத்தாளனாக மதிக்கப்பட வேண்டுமென்ற ஆர்வத்துடனும் ஒரு புதிய எழுத்தாளர் பரம்பரையொன்று இக்காலப் பகுதியில் ஈழத்துத் தமிழ் நாவலுலகில் அடியெடுத்து வைத்தது. இவர்களது முயற்சிகட்கு அடிப்படையாக அமைந்தது எழுத வேண்டும் என்ற ஆர்வமேயாம். இந்த ஆர்வம் தொடக்கத்திலே மொழிபெயர்ப்பு, தழுவல் முயற்சிகளாகவும் பின்னர் சுயமாகப் படைக்கும் ஆற்றலாகவும் வெளியிடப்பட்டது. தொடக்கத்தில் ஏறத்தாழப் பதினைந்தாண்டுக் காலம் இவ்வகையில் வெளியிடப்பட்ட எழுத்தார்வம் அடுத்து ஏறத்தாழப் பத்தாண்டுக் காலத்திற் சமூக, தேசிய உணர்வுகளுடன் இணைந்து புதிய பரிணாமம் பெறலாயிற்று. இவ்வகையில்முப்பதுகளின் முடிவில் ஈழகேசரி தனது நவீன இலக்கியக் களத்தினை விசாலித்த காலம் தொடக்கம் அறுபதுகளின் ஆரம்ப ஆண்டுகள் வரை ஏறத்தாழக் கால் நூற்றாண்டுக் காலத்தை எழுத்தார்வக காலம் எனலாம்."

இவ்விதமான எழுத்தார்வம் தோன்றி வளர்வதற்கு சாதகமான முக்கியமான காரணம் செய்திப்பத்திரிகைகளின் தோற்றம் என்று குறிப்பிடும் ஆசிரியர் ஈழகேசரி, தினகரன், வீரகேசரி மற்றும் சுதந்திரன் ஆகிய பத்திரிகைகள் புனைகதைத்துறைக்கு பங்காற்றியுள்ளன என்பார். எச்.நெல்லையா, ரஜனி (கே.வி.எஸ்.வாஸ்) போன்றோர் பரந்த வாசகர் கூட்டத்தைத் திருப்திப்படுத்தும் வகையில் தொடர்கதைகளை வீரகேசரியில் எழுதினர். எழுத்தாளர் அ.செ.முருகானந்தன் பீஷ்மன் என்னும் பெயரில் ஈழகேசரியில் எழுதிய 'யாத்திரை' என்னும் நாவல் ஈழகேசரி 1958இல் நின்று விடவே நின்று போன விடயத்தினையும் நூல் பதிவு செய்கின்றது.

இக்காலகட்டத்தில் எழுத்தார்வம் பெருகிட முக்கியமான காரணங்களிலொன்று தமிழகத்துடனான இலக்கியத் தொடர்பாகும் எனக் குறிப்பிடும் நூலாசிரியர் அதற்காதாரமாக அக்காலகட்டத்தில் தமிழகத்தில் தோன்றிய வெகுசன படைப்புகள், அவற்றினைப் படைத்த கல்கி, அகிலன் போன்ற எழுத்தாளர்கள், அவற்றினைப் பிரசுரித்த விகடன், கல்கி, கலைமகள், கிராம ஊழியன், கலாமோகினி, சூறாவளி போன்ற இலக்கிய சஞ்சிகைகள் பற்றியெல்லாம் , அவை எவ்வகையில் ஈழத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தின என்பதுபற்றியெல்லாம் விபரித்திருப்பார். நாற்பதுகளிலும், ஐம்பதுகளிலும் நாவல்கள் பலவற்றைப் படைத்தவர்களின் படைப்புகள் தமிழகத்தின் புகழ்பெற்ற வெகுசன எழுத்தாளர்களின் படைப்புகளின் கலவையாக விளங்குவதை விமர்சகரொருவர் குறிப்பிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டுவார். அதே சமயம் எழுத்தார்வக் காலகட்டத்தில் ஐம்பதுகளில் தேசிய உணர்வுகள் படிவதை அவதானிக்கலாம் எனக் குறிப்பிடும் நூலாசிரியர் ஆயினும்இக்காலகட்டத்தின் முக்கிய நாவல் பிரிவுகளாக மொழிபெயர்ப்பு (அல்லது தழுவல்) நாவல்கள், காதல் நாவல்கள், மர்மப்பண்பு நாவல்கள் ஆகியவற்றையே வகைப்படுத்துவார். இவ்வகை நாவல்களுக்கு உதாரணங்களைக் குறிப்பிட்டுச் செல்லும் நூலாசிரியர் "சமுதாய சீர்திருத்தக் காலத்திலே எழுதப்பட்ட மர்மப்பண்பு நாவல்கட்கும் எழுத்தார்வக்கால மர்மப்பண்பு நாவல்கட்குமிடையில் வேறுபாடுண்டு. முதல் வகையின சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைக் கூற எடுத்துக் கொண்ட கதைக்குச் சுவைநோக்கி மர்மப்பண்பு புகுத்தப்பட்டவை. எழுத்தார்வக் காலப்பகுதியிலே மர்மச் சுவையுடன் நாவல்கள் எழுத வேண்டுமென்ற ஆர்வமே தூண்டி நின்றது. பிறமொழிகளிற் படித்த புதுவகை மர்மக் கதைகளைப் போலத் தமிழில் எழுத முயன்ற பல தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் வாசகர்களின் உள்ளங்களைக் கவர்ந்திருந்தனர். அவ்வகை வாசகர் வட்டத்தைத் திருப்தி செய்யும் நோக்கில் எழுத வேண்டிய சூழ்நிலை இருந்தது. இவ்வண்ணம் எழுதியவர்கள் தமது நாவல்களில் சமகாலக் குடும்ப உறவுமுறைகள் காதல் ஆசாபாசங்கள் முதலியவற்றையும் சித்திரிக்கத் தவறவில்லை" என்று தன் அவதானிப்பினைக் குறிப்பிடுவார். இவ்விதமான அவதானிப்புகள். நூலாசிரியரின் படைப்புகளை வாசித்து, ஒப்பிட்டு முடிவெடுக்கும் திறனாய்வுத் திறமையினை வெளிப்படுத்துகின்றன. திறமையான திறனாய்வாளர் ஒருவருக்கு இவ்விதமாகப் படைப்புகளை நுணுகி வாசித்து, ஒப்பிட்டு, முடிவுகளைத் தர்க்கரீதியாக எடுக்கும் திறமை நிச்சயமிருக்க வேண்டும். நூலாசிரியருக்கு இத்திறமை நிறையவே உள்ளது.

உ. சமுதாய விமர்சனக் காலம்

அறுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து சுமார் பதினைந்து ஆண்டுகாலப் பகுதியை ஆசிரியர் 'சமுதாய விமர்சனக்காலம்' என்று வரையறுக்கின்றார். இக்காலகட்ட நாவல்களை சாதிப்பிரச்சினை நாவல்கள், அரசியல் பொருளாதாரப் பிரச்சினை நாவல்கள், தோட்டத் தொழிலாளர் பிரச்சினை நாவல்கள்,  மற்றும் பாலியற் பிரச்சினை நாவல்கள் என்னும் நான்கு பிரிவுகளில் பிரித்து நோக்கலாமென்பது நூலாசிரியரின் வாதம். அதே சமயம் மேற்படி அத்தியாயத்தின் இறுதியில் வரும் பல்வகைப்படைப்புகள் என்னும் பகுதியின் உப பிரிவுகளாக அவர்களுக்கு வயது வந்து விட்டது, நகைச்சுவை நாவல்கள், வரலாற்று நாவல்கள், மொழிபெயர்ப்பு நாவல்கள் மற்றும் குடும்ப நாவல்களும் மர்ம நாவல்களும் என நூலாசிரியர் பிரித்திருப்பார்,

சமுதாய விமர்சனக் காலத்தின் நாவல்களில் சாதிப்பிரச்சினையை மையமாக வைத்து எழுதப்பட்ட படைப்புகளாக செ.கணேசலிங்கனின் நீண்ட பயணம், சடங்கு, போர்க்கோலம் ஆகிய நாவல்களையும், கே.டானியலின் பஞ்சமர், தெணியானின்  விடிவை நோக்கி, சொக்கனின் சீதா, செங்கை ஆழியானின் பிரளயம் , செ..யோகநாதனின் காவியத்தின் மறுபக்கம், ஜானகி, தி.ஞானசேகரனின் 'புதிய சுவடுகள்' போன்ற நாவல்களையும் ஆராயும் நூலாசிரியர் அதன் பயனாகப் பினவரும் முடிவுகளுக்கு வருகின்றார்:

1. சொக்கன், செங்கை ஆழியான், தி.ஞானசேகரன் ஆகியோர் மனிதாபிமானக் கண்ணோட்டத்தினூடாகச் சாதிப் பிரச்சினைக்குத் தீர்வை நாடுகின்றனர். இதன் காரணமாகச் சாதிப் பிரச்சினையின் வெளிப்பரிமாணத்தை மட்டுமே இவர்களது நாவல்களால் வெளிப்படுத்த முடிந்தது.
2. செ.கணேசலிங்கன், கே.டானியல் ஆகியோர் சாதிப்பிரச்சினையை வர்க்கச்சார்புடைய பிரச்சினையாகக் கருதித் தீர்வை நாடுகின்றனர். இதன் விளைவாக மார்க்க்சியச் சித்தாந்த அடிப்படையில் போராட்டத்தின் மூலம் தீர்வு சாத்தியப்படுமென்பது இவர்களது நோக்கு. இதற்காக  செ.கணேசலிங்கனை மார்க்சிய நோக்கு நாவலாசிரியர்களில் முதன்மையானவராக் காணும் நூலாசிரியர் செ.க.வின் நாவல்கள் கலைத்தன்மையைப் பொறுத்தவரையில்  சிறிது குறைபாடுடையன என்னும் முடிவுக்கும் வருகின்றார் மேலும் செ.க.ம் கே.டானியல் போன்றோர் சாதியப் பிரச்சினையையும், வர்க்கப்பிரச்சினையையும்  ஒன்றாக இனங்காண முற்பட்டதால் அவர்களது சாதிப்பிரச்சினை பற்றிய நாவல்களில் வரும் பாத்திரங்கள் யதார்த்தபூர்வமாக அமையாமல் போய் விட்டன என்ற க.சண்முகலிங்கனின் கருத்தினையும் ஏற்றுக்கொள்கின்றார்.

இவ்விதமாக சமுதாய விமர்சனக் காலகட்டதில் வெளியான ஏனைய பிரிவு நாவல்களான வரலாற்று நாவல்கள், மொழிபெயர்ப்பு நாவல்கள், குடும்ப நாவல்கள், நகைச்சுவை நாவல்கள், பாலியற் பிரச்சினை நாவல்கள். மற்றும் இவற்றுள் அடங்காதவர்களின் படைப்புகள் எல்லாவற்றையும் ஆய்வுகுள்ளாக்கும் நூலாசிரியர் இவை அனைத்திலும் பொதுவாக அமைந்திருக்குமோர் அம்சமாக அவற்றில் காணப்படும் மொழி நடை இருப்பதாக முடிவு செய்கின்றார். புனைவுகளில் கதை மாந்தர்களை உயிரோட்டத்துடன் சித்திரிப்பதற்கு அவர்களது மொழிநடை உரையாடல்களில் புகுத்துவது அவசியமாகவிருந்தது. குறிப்பாக அறுபதுகளின் ஆரம்பத்தில் நடைபெற்ற மரபு பற்றிய போராட்டங்களின் விளைவாக எழுத்தாளர்கள் மத்தியில் பேச்சு வழக்கினைக் கையாள்வதில் தீவிரமானதோர் ஆர்வமேற்பட்டது. இதனாலேயே அக்காலகட்டப் படைப்புகள் அனைத்திலும் ஒரு தனிச்சிறப்புப் பண்பாக அப்படைப்புகளில் பாவிக்கப்பட்ட மொழிநடை அமைந்திருந்தது என்ற முடிவுக்கு நூலாசிரியர் வருகின்றார். அதே சமயம் மொழிநடை சிறப்பான பொதுப்பண்பாக இருந்தாலும், பேச்சு வழக்கினைக் கையாள்வதில் படைப்பாளிகளுக்கிடையில் வேறுபாடுகள் காணப்படுவதாக முனைவர் எம்.ஏ.நுஃமான், முனைவர் அ.சண்முகதாஸ் போன்றோர் இவ்விடயத்தில் ஆற்றிய ஆய்வுகளின் அடிப்படையில் நூலாசிரியரும் வருகின்றார்.

ஊ. பிரதேச இலக்கியப் படைப்புகள் பற்றி...

ஈழத்துத் தமிழ் நாவல்களில் காணப்பட்ட பிரதேசச்சித்திரிப்புகளை இனங்கண்டு குறிப்பிடும் நூலாசிரியர் குறிப்பாக அ.செ.மு, வ.அ.இராசரத்தினம் ஆகியோரின் படைப்புகளைக் குறிப்பிடுவார். இவர்களது படைப்புகளில் பிரதேசச்சித்திரிப்புகள் பகைப்புல வர்ணனைகளாக மட்டுமே வெளிப்பட்டனவே தவிர பிரதேசப் பண்பாட்டம்சங்கள் பற்றிய ஆழமான நோக்காக அவை அமைந்திருக்கவில்லை என்ற முடிவுக்கு நூலாசிரியர் வருகின்றார். இக்காலகட்டத்து வன்னிப் பிரதேசத்து நாவல்களைப் பொறுத்தவரையில் அ.பாலமனோகரனின் நிலக்கிளி, செங்கை ஆழியானின் காட்டாறு, தாமரைச்செல்வியின் சுமைகள் ஆகியவற்றை முக்கியமான வெளிவந்த படைப்புகளாகக் குறிப்பிடும் நூலாசிரியர் இவை அனைத்துமே வீரகேசரி பிரசுரங்களாக வெளிவந்தவைதாம் என்றும் சுட்டிக்காட்டுகின்றார். இவ்விதமாக வீரகேசரி பதிப்பகத்தின் மூலம் நாவல்கள் பல வெளியிடப்படுவதற்கு முக்கியமான காரணங்களிலொன்றாக, அன்றைய இலங்கை அரசின் வெளிநாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதித்தடையினைக் குறிப்பிடுவார். மேலும் வெளியான பிரதேசத்து நாவல்களை ஆராய்கையில், வன்னிப் பிரதேச நாவல்கள், கிழக்கிலங்கைப் பிரதேச நாவல்கள், யாழ்ப்பாணப் பிரதேசத்து நாவல்கள் என வகைப்படுத்தி ஆய்வினை நடாத்தியிருப்பார்.

எ. பின்னிணைப்புகள்..

இப்பகுதியில் 1977ற்குப் பின் வெளியான நூல்களாக வெளியான நாவல்கள், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நாவல்கள் ஆகிய விடயங்கள் பற்றி ஆராயும் நூலாசிரியர் புலம் பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்களில் முதன்மையாக தேவகாந்தனின் பெரு நாவலான கனவுச்சிறை நாவலினைக் குறிப்பிட்டு விரிவானதொரு விமர்சனக் குறிப்பினையும் எழுதியிருக்கின்றார்.

நூல் பற்றி மேலும் சில கருத்துகள்.....

ஆசிரியர் ஒரு விடயத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வரும்போது தான் ஏன் அந்த முடிவுக்கு வந்தார் என்பது பற்றிய தனது சிந்தனையினை விளக்குவார். உதாரணமாக எதற்காக ஆசிரியர் இளங்கீரனின் படைப்புகளை எழுத்தார்வக்கால நாவல்கள் பிரிவுக்குள் அடக்குகின்றார் என்றொரு எண்ணம் உடனடியாகவே எழுந்தது. நான் எழுத்தாளர் இளங்கீரனின் நாவல்களைப் பற்றி ஆய்வு நூல்களில், திறனாய்வு நூல்களில் படித்திருக்கின்றேன். அவரது நாவல்களை இன்னும் படிக்கவில்லை. நான் அவரைப்பற்றி வாசித்ததன் அடிப்படையில் அவரது படைப்புகளை 'சமுதாய விமர்சனக் காலகட்டப் படைப்புகளுக்குள்' அடக்கியிருக்கலாமே என்றெண்ணினேன். ஆனால் நூலாசிரியரோ இளங்கீரன் போன்றவர்களின் படைப்புகளை எழுத்தார்வக் காலகட்டத்தினுள் 'சமூக உணர்வும், தேசிய உணர்வுச் சாயலும் மிக்க படைப்புகள்' என்னுமொரு உபபிரிவினை உருவாக்கி அதற்குள் அடக்குவார். அவ்விதம் அடக்கினாலும் அப்படைப்புகளும் எழுத்தார்வக் காலகட்டத்துக்குரிய படைப்புகளே என்று கூறுவார். அதற்கு அவர் கூறும் காரணங்கள் வருமாறு:

1. உதாரணமாக சமூக உணர்வும், தேசிய உணர்வுச் சாயலும் மிக்க படைப்புகளைத் தந்த படைப்பாளிகளாகக் குறிப்பிடும் அ.செ.முருகானந்தன், உபகுப்தன் என்னும் பெயரில் எழுதிய கனக செந்திநாதன், கசின், வ.அ.இராசரத்தினம், சொக்கன், சி.வி.வேலுப்பிள்ளை, ஹமீதா பானு என்னும் புனைபெயரில் எழுதிய டி.எம்.பீர் முகமது, இளங்கீரன் ஆகியோரைப் பற்றிக் குறிப்பிடும்போது "பெரும்பாலோர்  கதையம்சத்திலும் பாத்திரப்படைப்பு முதலியவற்றிலும் தனித்தன்மையைப் புலப்படுத்தவில்லை. ' அ. செ. முருகானந்தன், கனக. செந்திநாதன், கசின், வ. அ. இராசரத்தினம், சொக்கன், சி. வி. வேலுப்பிள்ளை முதலியோர் சமகால ஈழத்து மக்கள் வாழ்க்கையைக் கதைக்குக் களமாகக் கொண்டோர் என்ற அளவிலேயே குறிப்பிடத்தக்கவர்கள்.' என்ற மதிப்பீடுக்கே நூலாசிரியரால் வர முடிகின்றது.

2. "ஈழத்தில் ஐம்பதுகளிலே சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளெக்கெதிராக முன்வைக்கப்பட்ட சமுதாய விமர்சனக் கண்ணோட்டம் சமகாலச் சிறுகதைகளில் பிரதிபலித்தது.  செ.கணேசலிங்கன், டொமினிக் ஜீவா முதலியோர் இக்கண்ணோட்டத்திற் பல சிறுகதைகளை எழுதினர். ஈழத்துச் சூழ்நிலையில் நாவல்கள் எழுத விழைந்த இளங்கீரன் தமது நாவல்களிலும் இப்பிரச்சினைகளை அணுகினார்.  எனினும் எழுத்தார்வத்தால் உந்தப்பட்ட அவரது நாவல்களில் இச்சமுதாய விமர்சனக் கண்ணோட்டம் கதையம்சத்திற்குத் துணைபுரியும் வகையிலேயே பயன்படுத்தப்பட்டது. பிரச்சினைகளையே கதையம்சமாகக்கொண்டு அவற்றின் வரலாற்று முறையிலான வளர்ச்சியையே கதை வளர்ச்சியாகக் கொண்டு நாவல்களை எழுதும்போக்கு அறுபதுகளின் நடுப்பகுதியிலிருந்தே ஈழத்தில் உருவாகியது." (பக்கம் 64) இவ்விதமாக நூலாசிரியர் கூறும் கூற்று எதற்காக இளங்கீரனின் படைப்புகளை எழுத்தார்வக் காலகட்டத்தில் அவர் உள்ளடக்கினார் என்பதற்கான முக்கியமான காரணங்களிலொன்று. எனினும் ' எழுத்தார்வத்தால் உந்தப்பட்ட அவரது நாவல்களில்' என்று அவர் குறிப்பிடுவதற்குரிய சான்றுகளை இன்னும் விரிவாக அவர், நூலாசிரியர், விளக்கியிருக்கலாமென்று தோன்றுகிறது. ஏனென்றால் ஆரம்பத்தில் இளங்கீரனின் படைப்புகளில் திராவிடக் கட்சிகளின் பாதிப்பு இருந்ததாகப் பல ஆய்வாளர்கள் அவ்வப்போது குறிப்பிட்டுள்ளார்கள். அதன் பின்னரே இலங்கையில் முற்போக்கு முகாமில் புகுந்த இளங்கீரனின் நாவல்கள் வெளிவரத் தொடங்கியிருந்தன. அவற்றை எழுத்தார்வத்தால் உருவான நாவல்கள் என்று கூறுவதில் எனக்குச் சிறிது தயக்கமே. அவ்விதம் கூறுவதானால் அதற்குரிய வலுவான சான்றுகளையும் வைப்பது அவசியமென்று எண்ணுகின்றேன். இருந்தாலும் நூலாசிரியர் ஈழத்து நாவல்களின் காலகட்டங்களை நிர்ணயம் செய்தபின்னர், அவற்றுக்குள் அடங்கிய நாவல்கள் பற்றிப் பொதுவாகக் கூறாமல், தன் நோக்குக்கேற்ப அவற்றைப் பற்றிக் கூறுவது வரவேற்கத்தக்கது. அது ஏற்படக்கூடிய சந்தேகங்களிலிருந்து நூலாசிரியரின் சிந்தனை தப்பியோடவில்லை என்பதைப் புலப்படுத்துகிறது. எழுத்தார்வக் காலத்தில் இளங்கீரனின் படைப்புகளை அடக்கிய நூலாசிரியருக்கும், சமுதாய விமர்சனக் காலகட்டப் படைப்புகளைப் பற்றிக் கூறும்போது இவ்விதமானதொரு சந்தேகம் தோன்றியிருக்கிறது. அதனால்தான் தன் நோக்கத்தை நியாயப்படுத்தும் வகையில் 'ஈழத்துச் சூழ்நிலையில் நாவல்கள் எழுத விழைந்த இளங்கீரன் தமது நாவல்களிலும் இப்பிரச்சினைகளை அணுகினார்.  எனினும் எழுத்தார்வத்தால் உந்தப்பட்ட அவரது நாவல்களில் இச்சமுதாய விமர்சனக் கண்ணோட்டம் கதையம்சத்திற்குத் துணைபுரியும் வகையிலேயே பயன்படுத்தப்பட்டது' என்று அவரால் கூற முடிகிறது.

இவ்விதமான முடிவுக்கு அவர் ஏன் வந்தார் என்பதை அவர் குறிப்பிடும் எழுத்தாளர்களின் படைப்புகளினூடு விபரித்திருக்கலாமே என்ற எண்ணம்தான் இதனைப் படித்தபொழுது தோன்றியது. என்னைப்பொறுத்தவரையில் எழுத்தார்வக் காலகட்டத்தில் அ. செ. முருகானந்தன், கனக. செந்திநாதன், கசின், வ. அ. இராசரத்தினம், சொக்கன், சி. வி. வேலுப்பிள்ளை போன்றோரை உள்ளடக்காமல் 'சமூக உணர்வும், தேசிய உணர்வுச் சாயலும் மிக்க நாவல்கள்' என்னுமொரு பிரிவினை எழுத்தார்வக்காலகட்டத்தின் உப பிரிவுகளிலொன்றாக்காமல், புதியதொரு பிரிவாக உருவாக்கி அவர்களின் படைப்புகளை அப்பிரிவினுள் உள்ளடக்கி இன்னும் விரிவாக ஆராய்ந்திருக்கலாமே என்று படுகிறது.

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நாவல்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் பொதுவாகக் குறிப்பிடாமல் கனடாத் தமிழ் நாவல்கள், ஆஸ்திரேலியத் தமிழ் நாவல்கள், பிரெஞ்சுத் தமிழ் நாவல்கள், நோர்வேத்தமிழ் நாவல்கள், சுவிஸ் தமிழ் நாவல்கள், டென்மார்க் தமிழ் நாவல்கள், ஜேர்மனித் தமிழ் நாவல்கள் என்று... பல்வேறு பிரிவுகளை உருவாக்கி ஆராய்ந்திருக்கலாமென்று தோன்றுகின்றது. நூலின் திருத்திய பதிப்பு வெளிவந்த 2009ஆம் ஆண்டினை  விடத்தற்போது புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் படைப்புகள் பற்றிய விபரங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. எதிர்காலத்தில் மேற்படி நூலானது இன்னும் விரிவாக்கப்பட்டு, மேற்படி பிரிவுகளில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் படைப்புகள் ஆராயப்பட்டால் இந்நூலின் கனம் இன்னும் அதிகமாகும். இந்நூலின் அமைப்பானது இவ்விதமான திருத்தங்களை உள்வாங்கி விரிவாக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது (ஏற்கனவே குறிப்பிடப்பட்ட விடயங்களில் எந்தவிதப் பெரிய மாற்றங்களையும் செய்யாமல்) இந்நூலின் சிறப்புகளிலொன்று.

1978 ஆம் ஆண்டுவரையில் வெளியான ஆய்வுகள் பற்றிக் குறிப்பிடும் ஆசிரியர் " 1978 ஆம் ஆண்டுவரையிலான நாவலிலக்கிய வரலாற்றை நோக்கியபோது நூல் வடிவில் வெளிவந்தனவற்றை மட்டுமின்றிப் பத்திரிகை சஞ்சிகை என்பவற்றில் தொடர்களாக வெளிவந்தனவும் கவனத்திற்கொள்ளப்பட்டன.  1978ற்குப் பிற்பட்ட இந்த நோக்கிலே நூலாக்கங்கள் மாத்திரமே இப்போது கவனத்திற்கொள்ளப்படுகின்றன.  முற்சுட்டிய சூழ்நிலைக்காரணியே தொடர்கதைகளைத் தொகுத்து நோக்கத் தடையாயிற்று" (பக்கம் 148) என்று குறிப்பிட்டிருக்கின்றார்.  இதன்படி ஆசிரியர் 1978ஆம் ஆண்டுவரை வெளியான அனைத்து நூல்களையும், தொடர்கதைகளையும் தொகுத்திருக்கிறார் என்னும் தொனி தென்பட்டாலும் அது நடைமுறைச் சாத்தியமில்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே. அது மிகவும் சிரமமான செயற்பாடு. இதற்கு வெளியான அனைத்து பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். இலங்கை சுவடிகள் திணைக்களம் அனைத்து வெளியான நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகளை தன்வசம் வைத்துள்ளதென்பதற்கில்லை. இருந்தாலும் இயலுமானவரையில் ஆசிரியர் ஆய்வுக்குத் தேவையான படைப்புகள் பற்றிய விபரங்களைத் திரட்டியுள்ளார் என்று குறிப்பிடலாம்.

பல எழுத்தாளர்களின் வெளியான தொடர்கதைகள் பற்றிய விபரங்கள் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள வெளியான நாவல்கள் பற்றிய விரிவான பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஈழத்தின் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஒரேயொரு நாவலான , தினகரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்து வெளிவந்த காலத்தில் பல வாசகர்களின் பாராட்டினைப் பெற்ற 'மனக்கண்' பற்றிய விபரங்களை அப்பட்டியலில் காணமுடியாதது ஆச்சரியம்தான். இவ்வாய்வு நூலின் திருத்திய பதிப்பு 2009இல் வெளியாகியுள்ளது. இச்சமயத்தில் 'மனக்கண்' பதிவுகள் இணையத்தளத்திலும் தொடராக வெளிவந்திருக்கிறது. அதே சமயம் எழுபதுகளின் இறுதியில் 'தணியாத தாகம்' முடிந்த கையோடு , சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் வெளிவந்திருக்கின்றது. நிச்சயமாக நாவல்கள் பட்டியலில் இந்நூல் பற்றிய விபரங்கள் வெளிவந்திருக்க வேண்டும்.

இது போல் 1978ற்குப் பின்னர் வெளியான நாவல்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 2008 வரையிலான நாவல்கள் பல சேர்க்கப்பட்டிருக்கின்றன. இக்காலகட்டத்தில் வெளியான எனது நாவல்கள் பற்றிய விபரங்கள், மண்ணின் குரல் (கனடா, 1987; புரட்சிப்பாதையில் வெளியான சிறுநாவல், மற்றும் கவிதைகள், கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு. மங்கை பதிப்பக வெளியீடு.), அமெரிக்கா (1996; அமெரிக்கா என்னும் தாயகம் பத்திரிகையில் தொடராக வெளிவந்த சிறுநாவல், மற்றும் சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு; ஸ்நேகா/மங்கை பதிப்பக வெளியீடு), மண்ணின் குரல் (1998; மண்ணின் குரல், கணங்களும் குணங்களும், அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும், வன்னி மண் ஆகிய நாவல்களின் தொகுப்பு; குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடு) எதனையும் மேற்படி பட்டியலில் காண முடியவில்லை. இவை பற்றிய விபரங்கள் இணையத்தில் (பதிவுகள் இணையத்தளமுட்பட) பல தளங்களிலுள்ளன. இவையும் விடுபட்டுள்ளன. மேலும் எத்தனைபேரின் படைப்புகள் பற்றிய விபரங்கள் விடுபட்டுப்போயுள்ளன என்பது தெரியவில்லை.  இவ்விதம் நூல்கள் விடுபட்டதற்கு நூலாசிரியரைக் குறை கூற முடியாது. அவர் பலரிடமிருந்து நாவல்கள் பற்றிய விபரங்களைப் பெற்றிருப்பார். அவருக்குப் பட்டியல்களைக் கொடுத்தவர்களுக்கு மேற்படி நூல்களைப் பற்றிய விபரங்கள் தெரியாமலிருந்திருக்கக்கூடும். இந்த நாவல் பற்றிய பட்டியல் தட்டச்சு செய்யப்பட்ட நிலையில் யாரிடமாவதிருந்தால் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அதனை இணையத்தில் பிரசுரிப்பதன் மூலம் இதில் விடுபட்ட படைப்புகள் பற்றிய விபரங்களைக் கோரலாம். பட்டியலை எதிர்காலத்தில் மேலும் செழுமைப்படுத்த அது உதவும்.

இன்னுமொரு முக்கியமான எண்ணமொன்று இந்த நூலினை வாசிக்கையில் தோன்றியது. ஈழத்தில் வெளியான நாவல்கள் என்னும் போது சமூக நாவல்கள், வரலாற்று நாவல்கள், மொழிபெயர்ப்பு நாவல்கள், பிரதேச நாவல்கள், மர்ம நாவல்கள் என்றெல்லாம் குறிப்பிடும் நூலாசிரியர் இக்காலகட்டங்களில் படைக்கப்பட்ட சிறுவர் நாவல்களை மறந்து விட்டார். உண்மையில் சிறுவர் அல்லது குழந்தைகளுக்காகப் படைக்கப்பட்ட நாவல்களையும் மேற்படி நூல் உள்ளடக்கியிருக்க வேண்டும். அறுபதுகளில், எழுபதுகளிலெல்லாம் பத்திரிகைகளில் குழந்தைகளுக்கான தொடர்கதைகள் பல வெளியாகியுள்ளன. ஈழநாடு மாணவர் மலரில் கூடத் சிறுவர் தொடர் நாவல்கள் வெளியாகியுள்ளன. சிந்தாமணியில் மாஸ்டர் சிவலிங்கத்தின் குழந்தைகளுக்கான தொடர் நாவல்கள் பல வெளியாகியுள்ளன. அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'சங்கீதப் பிசாசு' என்னும் சிறுவர் நாவலொன்று சிரித்திரனில் வெளியாகியதாக அறிய முடிகின்றது. பின்னர் எழுபதுகளில் சிரித்திரன் வெளியிட்ட கண்மணி சிறுவர் இதழில் இந்நாவலில் ஓருரு அத்தியாயங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் கண்மணியும் அற்ப ஆயுளுடன் முடிந்து போனது. எதிர்காலத்தில் இந்நூலின் திருத்திய பதிப்பு வெளியாகும் போது ஈழத்தில் வெளியான குழந்தைகளுக்கான நாவல்களைத் தனியானதொரு இணைப்பாக, பிரதேச நாவல்களைப் போல் , ஒரு தனிப்பிரிவாக உள்ளடக்குவது நல்லதென்பதென் கருத்து.

இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிடலாமென்றெண்ணுகின்றேன். நூலாசிரியர் எழுத்தார்வக்காலம், சமுதாய விமர்சனக் காலம் என்று ஈழத்து நாவல்களின் காலகட்டங்ளை நிர்ணயிப்பதற்கு, எத்தனை நாவல்களை வாசித்த பின்னர் அவ்வகையான முடிவுக்கு வந்தார் என்பதைச் சிறிது விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கலாம். உதாரணமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளியான நாவல்களின் எண்ணிக்கை எத்தனை, இவற்றில் எத்தனை படைப்புகளைத் தான் வாசித்து மேலுள்ளவாறு நாவல்களின் காலகட்டங்களைப் பிரிப்பதற்கு முன்வந்தார் என்பவை பற்றி இன்னும் விரிவாக விளக்கியிருந்தால் ஆய்வின் கனம் இன்னும் அதிகரித்திருக்கும்.

இன்னுமொரு விடயம் ஈழத்தின் நகைச்ச்சுவை நாவல்களைப் பற்றியது. பொ.சண்முகநாதன் நகைச்சுவைப் படைப்புகளைத் தந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவரது நாவல்களிரண்டு 'சேறும் தண்ணீரும்', 'அக்கரை அறுவடை' ஆகியன வெளிவந்துள்ளதாக அறிகின்றோம். அவரைப் பற்றிய விபரங்கள் எதனையும் நான் இந்நூலில் காணவில்லை.

எழுபதுகளில் இன்னுமொரு நகைச்சுவை எழுத்தாளரின் படைப்புகளை சிந்தாமணி பத்திரிகையில் வாசித்திருக்கின்றேன். வாசித்து விழுந்து விழுந்து சிரித்திருக்கின்றேன். அவரது நகைச்சுவைத் தொடரொன்று சிந்தாமணியில் வெளிவந்தது. யாழ் மணிக்கூட்டுக் கோபரத்திற்கு அண்மையில் முற்றவெளியிலிருந்து பனங்கள்ளினை எரிபொருளாகப் பாவித்து விண்வெளிக் கப்பலினூடு யாழ்ப்பாணத்தமிழர்கள் சிலர் விண்வெளி செல்வது பற்றியது. அவரது பெயர் த.இந்திரலிங்கம். அவரைப் பற்றிய விபரங்கள் எதனையும் நான் இந்நூலில் காணவில்லை.

ஈழத்துத் தமிழரின் நகைச்சுவை நாவல்கள், தொடர்கதைகள் இன்னும் அதிகமிருக்கலாமென்று எண்ணுகின்றேன். இவை பற்றிய மேலதிக ஆய்வுகள் செய்வது பயனுள்ளதென்பதென் கருத்து.

மொத்தத்தில் ஆய்வு மற்றும் திறனாய்வுக் கண்ணோட்டத்துடன் படைக்கப்பட்ட மேற்படி நூலானது இதுவரை வெளியான இத்துறை பற்றிய நூல்களில் முதலிடத்திலுள்ளது என்பதைக் கூறுவதில் எனக்கு எத்தகைய தயக்கமுமில்லை. எதிர்காலத்தில் மேலும் திருத்திய விரிவான பதிப்பாக வெளிவந்து, ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றிய மிகச்சிறந்த ஆய்வு மற்றும் திறனாய்வு நூலாக இந்நூல் விளங்கிட வேண்டுமென்பதென் அவா


9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்! -

ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' பற்றிப் பலர் பலவாறு கூறியுள்ளார்கள். இவர்களது குறிப்புகளெல்லாவற்றையும் பார்க்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது. இவர்களில் பலர் யானை பார்த்த குருடர்கள். நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி. ஹேமந்தன் என்னும் பாணன் விஷ்ணுபுரம் பற்றிய கதையினைக் கூறி முடித்ததும் வசந்தன் என்னும் பாணன் கூறத்தொடங்குவதுடன் ஆரம்பமாகும் நாவல் மூன்று பாகங்களாக விரிவடைந்து வசந்தன் கதையை முடித்ததும் இன்னுமொரு பாணனான கிரிஷ்மன் மீண்டுமொருமுறை விஷ்ணுபுரம் கதையினைக் கூறத்தொடங்குவதுடன் தொடர்கிறது. நாவலைப் பற்றிப் பின் அட்டையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: ' இந்நாவலில் விஷ்ணு ஒருமுறை புரண்டு படுக்கிறார். தருக்கம், தியானம்,கற்பனை என்ற மூன்று அடிப்படையான அறிதல் முறைகளில் கற்பனையின் துணை கொண்டு , பிற இரண்டின் சாத்தியங்களை பயன்படுத்தியபடி, மானுடனின் ஞானத்தேடலின் பயணத்தைச் சித்தரிக்கிறது (சித்திரிக்கிறது). கலையும், தருக்கமும், ஆன்மீகமும், மானுட உணர்வுகளுடன் கலந்து பௌராணிகமான மாய உலகமொன்றைப் படைக்கின்றன.'

ஜெயமோகனின் ஞானத் தேடலே நாவலாக உருப்பெற்றிருக்கின்றது. இந்து, பௌத்த தத்துவங்களினூடு மனித வாழ்வு, பிரபஞ்சத்தின் தோற்றம், காலம் பற்றி தர்க்கரீதியாகக் கற்பனையைப் படரவிட்டு இந்நாவலைப் படைத்திருக்கின்றார் ஜெயமோகன். தான் அறிந்ததை, உணர்ந்ததை அவ்விதமே கூறவேண்டுமென்ற ஆவல் ஜெயமோகனுக்கு அதிகமாக இருப்பதை நாவல் முழுவதிலும் காண முடிகிறது. விஷ்ணுபுரம் பற்றிய வர்ணணைகளில் நாவலாசிரியர் மிக அதிகளவில் கவனமெடுத்திருக்கின்றாரென்பதை விஷ்ணுபுரம் பற்றிய வர்ணனைகள் வெளிக்காட்டுகின்றன.ஜெயமோகனின் ஞானத்தேடலே நாவல் முழுக்கப் பல்வேறு பாத்திரங்களாக, பிங்கலன், சங்கர்ஷணன்.. என உலாவருகின்றது. நாவல் முழுக்க எண்ணமுடியாத அளவிற்குப் பாத்திரங்கள். அத்தியாயத்திற்கு அத்தியாயம் புதிய புதிய பாத்திரங்களின் வருகையுடன் நாவல் நடை போடுகிறது. வழக்கமாக அத்தியாயங்களிற்கிடையில் ஒருவித தொடர்ச்சியினை ( Linearity) எதிர்பார்த்துப் பழக்கப் பட்டு விட்ட பெரும்பாலான தமிழ் வாசகர்களுக்கு இந்தத் தொடர்ச்சியற்ற தன்மை நாவலைப் புரிதலில் சிரமத்தினை ஏற்படுத்தி விடுகின்றது. இது இந்நாவலை வாசிக்க விளைபவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுமையினையும் , பாத்திரங்களைச் சம்பவங்களைக் கிரகிக்க வேண்டிய திறமையினையும் மிக அதிகமாகவே வேண்டி நிற்கிறது. ஆனால் இந்த நாவலின் அடிப்படையே ஒரு மனித உயிரின் ஞானத் தேடல் என்ற அளவில், நாவல் பாத்திரங்களினூடு, நகர அமைப்பினூடு, காட்சிகளினூடு, கூறி விவாதிக்கும் இருத்தல் பற்றிய விசாரத்தைத் தொடர்ந்து கொண்டு போவதன் மூலம் இந்நாவல் பிரதியின் வாசிப்பை இலகுவாக்கலாம். பலருக்கு இந்நாவல் புரிபடுவதிலுள்ள குழப்பம் காரணமாகத் தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கருத்துகளை வைக்கின்றார்கள். (அண்மையில் ஜெயமோகனின் நூல் விழாவில் பேசிய ஜெயகாந்தன் தன்னாலேயே நாவலின் உள்ளே புக முடியவில்லை என்று குறிப்பிட்டதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது). நாவல் பற்றி ஈழத்தின் முற்போக்கு முகாமைச் சேர்ந்த அறிஞர் அ.ந.கந்தசாமி தனது 'மனக்கண்' என்ற நாவலின் முடிவுரையில் 'என்னைப் பொறுத்தவரையில் பாரகாவியமும் நாவலும் ஒன்றென்றே நான் கருதுகிறேன். ஒன்று வசனம், மற்றது கவிதை என்ற வித்தியாசத்தைத்தவிர பாரகாவியம் எப்பொழுதுமே அவசரமாகக் கதையைச் சொல்லத் தொடங்குவதில்லை. நாட்டு வர்ணனை, நகர வர்ணனை, பருவ வர்ணனை என்று மெதுவாகவே அது கிளம்பும். காரின் வேகம் அதற்கில்லை. தேரின் வேகமே அதற்குரியது. வழியிலே ஒரு யுத்தக் காட்சி வந்ததென்று வைப்போம். உதாரணத்துக்கு வியாச பாரதத்தை எடுத்தால் பதினேழு நாள் யுத்தம் நடந்தது. பாண்டவர் வென்றனர், கௌரவர் தோற்றனர் என்று மிகச்சுருக்கமாகவே அதனைக் கூறியிருக்கலாமல்லவா? ஆனால் அவ்வாறு எழுதினால் கதா நிகழ்ச்சியை நாம் புரிந்து கொண்டாலும் யுத்தத்தின் அவலத்தையும் வெற்றி தோல்வியையும் நேரில் பார்த்தது போன்ற உணைச்சி நமக்கு ஏற்படாது. அந்த உணர்ச்சி நமக்கு ஏற்படும்வரை பொறுமையாக விவரங்களை ஒன்றின் பின்னொன்றாகச் சலிப்பின்றி எடுத்துக் கூறி நிற்கும் ஆற்றல் பெற்றவனே பாரகாவியஞ் செய்யும் தகுதியுடையவன். நல்ல நாவலாசிரியனுக்கும் இப்பண்பு இருக்கவேண்டும்.' என்று கூறியுள்ளதுதான் நினைவுக்கு வருகின்றது.ஜெயமோகனுக்கு இப்பண்பு நிறையவேயுண்டு. விஷ்ணுபுரம் பற்றிய அவரது வர்ணனைகள் வாசிப்பவரிடத்தில் அதன் பிரமாண்டம் பற்றியதொரு பிரமிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. இருத்தல் பற்றிய மானுடத்தின் ஞானத் தேடல் என்ற சிறியதொரு கருவுக்கு விஷ்ணுபுரம் என்றொரு பிரமாண்டமான நகரினைப் பல்வேறு பாத்திரங்களினூடு படைத்து, நமது காவியங்களில் கையாளப் பட்டதொரு உத்தியினைப் ( பாணன் கதை சொல்லல்) பாவித்துக் கதை சொல்லியிருக்கின்றார் ஜெயமோகன்.ஆனால் மெய்ஞானம் மட்டுமின்றி நவீன விஞ்ஞானத்தினூடும் இருப்பு பற்றிய தேடலில் மூழ்கிக் கிடப்பவர்களை இந்த நாவல் கவருமா என்பது சந்தேகத்திற்கிடமானதே.எல்லாக் கதாப் பாத்திரங்களும் கதைகளாக மாறிவிடுகின்றதொரு உண்மையில் முழு நாவலுமேயொரு கதைதான். புராணக் கதை.திரிசாகரம் திரிவிக்கிரமர் இயற்றிய மகாபத்மபுராணம். பாணர்கள் கதைசொல்வதிலுள்ள ஒழுங்கு மாறியிருப்பதாகவும் கருத இடமுண்டு. பொதுவாகக் கதைகூறும்பொழுது சில சமயங்களில் ஒழுங்குகள் மாறிக் கதை சொல்வதுமுண்டு. ஆனால் விஷ்ணுபுரத்தில் வரும் விளக்கங்களும் இந்நாவலினூடு விரவிக் கிடக்கும் இருப்பு பற்றிய தேடலும் விரைவாக இந்நாவல் கூறும் பொருள் பற்றி நம்மை வந்தடைவதைத் தடுத்து விடுகின்றன. வாசிப்பவர்களைச் சிந்திக்க, தர்க்க ரீதியாகச்சிந்திக்கப் பெரிதும் தூண்டும் படியாக நாவலின் சம்பவங்களை நடத்திச் செல்லும் தொடர்ச்சி (Plot) இருந்து விடுவது இதன் காரணம். அதே சமயம் எல்லோராலும் இந்நாவலைப் படிக்கவும் முடியாது. ஏற்கனவே ஓரளவு பிரபஞ்சத் தேடல் மிக்க அல்லது தீவிர வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே இந்நாவலின் வாசகர்களாகவும் வரமுடியும்.
இன்னுமொன்றினையும் இந்நாவலின் அமைப்பில் காணமுடியும். பொதுவாக மூன்று பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருப்பதால் இந்நாவலின் மிகவும் முக்கியமான பகுதி மூன்றாவது பாகமான 'மணிமுடி'யென்றேபலர் எண்ணி விடக் கூடும். ஆனால் நாவலின் மிகவும் முக்கியமான, மையமான பகுதி இரண்டாவது பகுதியான 'கௌஸ்துபம்' என்றே எனக்குப் படுகிறது. இருப்பு பற்றிய, பிரபஞ்சத்தின் இருப்பு பற்றிய சாங்கியம், சைவம், சமணம், பௌத்தமெனப் பல்வேறு மதப் பிரிவுகளின் கோட்பாடுகளை மிகவும் தர்க்க ரீதியாக ஆராயும் பகுதியிது. சில சமயங்களில் தர்க்கம் சிரிப்பினூடு சிந்திக்கவும் வைத்து விடுவதாக அமைந்து விடுகின்றன. உதாரணமாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

வாசற்காவலன் தடுத்தான்.
சித்தன் "ஞானசபைக்கு " என்றான்.
"யார் நீங்கள், சார்வாகனர்களா?"
"இல்லை"
"காளாமுகர் போலிருக்கிறது"
"அதுவுமில்லை"
"காபாலிக மதமா?"
"அதுவும் இல்லை"
"சாக்தேயரோ, தாந்திரிகரோ ஆக இருக்கக் கூடும்"
"எதுவுமே இல்லை"
"அப்படியானால்?"
"எதுவும் இல்லை. அதுதான் எங்கள் மார்க்கம்"
"புரியவில்லை"
"சூனியம். ஒரு சூனியம் வந்துள்ளது என்று உன் பண்டிதர்களிடம்
போய்க் கூறு"
"அதுயார் குட்டிச் சூனியமா" என்றான் காவலன்.
" யாரடா நீ பயலே? பார்த்தால் பிராமணக் களை தெரிகிறதே"
"சூனியத்திலிருந்து பிறந்த சூனியம்" என்றான் காசியப்பன். "அதன் பிறகும்
சூனியமே எஞ்சுகிறது" [ பக்கம் 445, பகுதி இரண்டு]

"சுடாத தீ உண்டா?"
"உண்டு. நீரின் ஆத்மாவிற்கு" [ பக்கம் 479 ]

ஸ்யாத்வாதம் பிரபஞ்சத்தின் எவராலும் உற்பத்தி செய்யப் பட்டதல்ல என்று கூறும். இவ்விதமே இருந்து வந்தது எனக் கூறும். நவீன வானியற்பௌதிகத்தின் ( Astro Physics) பிரபஞ்சம் பற்றிய கோட்பாடுகளிலொன்றான 'உறுதி நிலைக் கோட்பாடு' (Steady State Theory)தனை இது நினைவு படுத்தும். காலம், சார்புநிலை பற்றியெல்லாம் தர்க்கரீதியான உரையாடல்களில் மிகவும் விரிவாகவே குறிப்பிடப் பட்டிருக்கின்றன. பல்வேறு பட்ட சமயப் பிரிவுகள் கூறும் பிரபஞ்சம், காலம், இருப்பு பற்றிக் கூறும் கோட்பாடுகளெல்லாம் நவீன வானியற் பௌதிகம், சக்திச் சொட்டுப் பௌதிகம் (Quantam Physics) போன்றவையும் விஞ்ஞானபூர்வமாகக் கூற ஆரம்பித்திருக்கின்றன. ஐன்ஸ்டைனின் வெளி, காலம் பற்றிய சார்பியற் கோட்பாடுகள், பொருள், சக்தி, விசை பற்றிய கோட்பாடுகள், அடிப்படைத் துணிக்கைகள் பற்றிய பௌதிகம் (Particle Physics) கூறும்அடிப்படைத்துணிக்கைகளின் உருவற்ற/உருவமான நிலை, அதன் நிச்சயமற்ற நிலை பற்றிய விதிகள் ( Principle of uncertainity), வெற்றிடம், வெற்றிடத்திலிருந்து பொருள் உருவாவது பற்றிய கோட்பாடுகள், பொருள், எதிர்ப் பொருள் (Anti matter), பிரபஞ்சம்/எதிர்ப் பிரபஞ்சம்..போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவ்வகையில் விஷ்ணுபுரம் நாவலின் பிரபஞ்சம் பற்றிய ஞானத் தேடலில், நவீன பௌதிகத்தையும் எதிர்காலத்தில் ஜெயமோகன் சேர்த்துக் கொள்வாரென்றால் இந்நாவல் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்துவதற்குச் சாத்தியமுண்டு. இல்லாவிட்டாலும் கூட இந்நாவலில் கூறப்பட்டுள்ள கீழைத்தேயத் தத்துவங்களினூடான தேடல் அறியும் ஆர்வமுள்ள நெஞ்சினருக்குப் பெரு விருந்தாக அமையும் சாத்தியமுண்டு. ஆனால் இந்நாவலப் படித்து முடிப்பவருக்கு வரும் முக்கியமான உணர்வு அல்லது அதனால் அவர் அடையும் இன்பம் முக்கியமாக ஆத்மீகத் தேடலாகவே இருக்கும்.

இந்நாவலில் இன்னுமொரு விடயத்தையும் அவதானிக்க முடிந்தது. முதலாம் பகுதி விஷ்ணுபுரத்தின் சிறப்பைக் கூறும். இரண்டாம் பகுதியோ அங்கு நிகழ்ந்த தர்க்க சிறப்பினைக் கூறும். ஆனால் மூன்றாவதான இறுதிப் பகுதியோ கனவாகிப் போன விஷ்ணுபுரச் சிறப்பினை எண்ணி ஏங்கிப் பிரளயத்தில் அழிந்து போவதைக் குறிப்பிடும். அதே சமயம் இரண்டாவது பகுதியின் தோற்றுவாயிலேயே விஷ மேகங்கள் பொழிந்த நீல மழையில் அழிந்து போய் விடும் விஷ்ணுபுரத்தைப் பற்றிக் குறிப்பிடப் பட்டிருக்கின்றது இது ஏற்கனவே நிகழ்ந்ததொரு கதையைக் கூருவதை நினைவு படுத்துவதற்காகவா? விஷ மேகம், நீல மழை, நெருப்பு ஆறான சோனா, அதன் செம்மைக்குக் காரணமான, சிலப்பதிகாரத்தை நினைவு படுத்தும் இன்னொரு உபகதை இவ்விதமாக ஒரு விதக் காவியச் சுவையுடன் விரியும் விஷ்ணுபுரத்தைப் பற்றிப் பல்வேறு கோணங்களிலும் விவாதிப்பதே அதனை முழுமையாக இனங்காண வைக்குமென்பதால், புரிய வைக்குமென்பதால் தொடர்ந்து விவாதிப்போம். கடுமையாக விவாதிப்பதில், தர்க்கிப்பதில் வறில்லை. நாவல் கூறுவதைப் போல் தர்க்கம் 'எதையும் சாராத தர்க்கமாகவோ, வெறும் தர்க்கமாகவோ, தருக்கம் மட்டுமேயான தர்க்கமாகவோ, தன்னையே உடைத்து விடும் தர்க்கமாகவோ' [பக்கம் 436] இருந்து விடுவதிலும் தவறில்லையென்பது என கருத்து. -

இந்நாவலில் வரும் பிங்கலன், மாகவி சங்கர்ஷணன் ...இவர்களைப் போன்றவார்கள் எவ்விதம் படைக்கப் பட்டிருக்கின்றார்கள் என்பதை ஒரு கணம் பார்ப்போம்.. பிங்கலனை சித்தார்த்தரின் பாதிப்பில் படைக்கப் பட்டதொரு பாத்திரமாகவும், சங்கர்ஷணனை சிலப்பதிகாரம், கௌதமர் சரித்திரம் ஆகியவற்றின் பாதிப்புகளாகப் படைக்கப் பட்டிருக்கலாமென்பதற்கு நாவல் முழுக்க பல சான்றுகள் உள்ளன.

இந் நாவலில் வரும் கணிகையர்களெல்லாம் சாருகேசி, பத்மாட்சி போன்றவர்கள் ஆழ்ந்த அறிவுத் தேடலுள்ளவர்கள். ஞானத்தின் பாரத்தால் அழுந்தி உதிரப் போகுமொரு பதர் தான் இந்தப் பிங்கலன் என்பதை இவர்களிலொருத்தியான சாருகேசி இலகுவாகவே உணர்ந்து கொள்ளும் பக்குவம் வாய்ந்தவள். இந்த விஷ்ணுபுர நாவலைப் படைத்த சங்கர்ஷ்ணனே ( நாவலிற்குள் நாவல்) பத்மாட்சியிடம் உரையாடுவதாக உள்ள உரையாடலே விஷ்ணுபுரத்தின் உண்மையான விளக்கத்தை அளிப்பதற்குப் போதுமானது.[பக்கங்கள் 359,360]

"பத்மா உண்மையச் சொல். என் காவியம் எப்படி இருக்கிறது?" என்றான்.

"மண்ணில் கால் பாவாத வெற்றுக் கற்பன இது. இதோ சற்றுமுன் மனிதர்கள் மத்தியிலிருந்து வருகிறேன். அழுக்கு, பசி, இச்சை, போதை, வெறி, உழைப்பு, இதெல்லாம் தான் மனிதர்கள். உழைப்பும், அடிமைத் தனமும், அதிகாரமும் மட்டும்தான் நிதரிசனம். லட்சியக் கனவுகளை உண்டு பண்ணி மனிதன் தன் வாழ்வின் அவலங்களுக்குத் திரை போடுகின்றான். நான் கனவில் நடந்து ஏதோ தெரியாத இடத்தில் கண்விழித்துப் பதைக்கும் மூடன்."

"உண்மையச் சொல்.இந்தக் காவியத்தில் மனித வாழ்வா இருக்கிறது. ஒவ்வொரு சர்க்கமும் உச்சக் கட்ட உத்வேகம் நோக்கி எடுத்துச் செல்லப் பட்டுள்ளது. அழகும் நளினமும் இதில் இல்லை. கட்டற்ற மொழி. உடைபெடுக்கும் ஆவேசம். இந்நூலை ஞான தரிசனம் வழி நடத்தவில்லை. எழுதும் கணங்களில் நானே என்னைத் தூண்டி விட்டு அடைந்து கொண்ட போலியான மனஎழுச்சிகள் தான் தீர்மானித்துள்ளன. அவை ஒவ்வொன்றும் நிதர்சனத்திலிருந்து விலகி ஓடியவை. ஒரு மூடனின் கற்பனை உலகமன்றி வேறல்ல இது."

"பொய்யையா? பொய்யை சொல்லால் சாஸ்வதப்படுத்தவா இத்தனை தவம்.?"

"...இதில் ஞானத் தேடலுடையவனுக்கு என்ன உள்ளது? ஒன்றுமில்லை. ஞானத்திற்கான தத்தளிப்புகள், தருக்கங்கள், பிறகு ஒரு கனவு அவ்வளவுதான்"

"..எது மெய்மையோ அதுவல்ல இது. இது சொற்களின் ஆரவாரத்திற்குள் ஓர்
ஆத்மா பதுங்கியிருக்கும் விளையாட்டுத் தான்."

இவ்விதமாக சங்கர்ஷணனிற்கும் பத்மாட்சிக்குமிடையிலுள்ள உரையாடல் செல்கிறது. சங்கர்ஷனின் மேற்படி அவனது காவியத்¨ப் பற்றிய விளக்கத்தின் அடிப்படையில் விஷ்ணுபுரம் நாவலினைப் புரிந்து கொள்வதிலொரு சுவையுண்டு. நாவலை முழுவதும் படிக்காமல் அதில் தொக்கி நிற்கும் பல காரணங்களைக் கண்டு கொள்ள முனைவோர் சங்கர்ஷணனின் மேற்படி கூற்றினூடு புரிந்து கொள்ள முனைவதும் ஓரளவுக்குப் பொருத்தமானதே. இவ்வளவு தூரம் சிந்திக்கின்ற ஜெயமோகன் 'தொக்கி நிற்கும் காரணங்கள் நிறைய இருந்தால் அவற்றைச் சிறிய அளவிலாவது பத்மாட்சியின் வாயிலாக எடுத்துக் கூறி சங்கர்ஷணனின் துயரைச் சிறிதளவாவது குறைத்திருக்க மாட்டாரா? ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இருப்பு பற்றிய ஞானத்தேடல் தானென்று அவரே பல இடங்களி குறிப்பிட்டுள்ள போது அந்த ஞானத் தேடலுடன் ஒப்பிடும் பொழுது வெகு சாதாரணமான விடயங்களைப் பெரிது படுத்தி 'இல்லை இந்த அற்ப விசயங்களைத் தான் இந்நாவல் கூறுகிறது' எனச் சிலர் வலிந்து பொருள் கூற முனைவதை என்னவென்பது. அது மூன்றாண்டுகளாக அலைந்து திரிந்த ஜெயமோகனின் தேடலினைக்கொச்சைப் படுத்துவதாகும். மேலும் இந்நாவலின் 357 ஆவது பக்கத்தில் சங்கர்ஷ்ணன் வாயிலாக இக்காவியத்தின் அமைப்பு பற்றி விரிவாகவே விளக்கம் தரப் பட்டிருக்கிறது.

"...யுகங்கள் திவலைகளாகச் சென்று ஒடுங்கும் அவன் மேனியென்னும் கடலன்றி வேறு எதுவுமில்லை. அந்த உடலையே என் காவியமாக எடுத்துக் கொண்டேன். ஸ்ரீபாதம், மணீமுடி, கௌஸ்துபம் என்று என் காவியத்தை மூன்றாகப் பிரித்தேன்... பாதமே சரணாகதி. ஞானமே கௌஸ்துபம். மணிமுடியே விஷ்வரூபம்..."

அதன் பிறகு சங்கர்ஷணன் பௌத்த தத்துவ நூல்களையெல்லாம் கரைத்துக் குடிக்கின்றார்.

"...பெருமாளின் உடலை ஞானத்தால் அள்ள முயல்வது என்று முடிவு செய்தேன். ஷட்தர்சங்களையும், தர்ம சாத்திரங்களையும், கற்ற கர்வம் தூண்டியது. மகா அஜிதரின் விஜயம் சம்பந்தமாக அமைந்தது கௌஸ்துப காண்டம். பின்பு காதலை அறிந்து மனம் நெகிழ்ந்து, குழந்தைகளை வளர்த்து மனம் விரிந்து, நான் வேறு ஒரு மனிதனாக ஆன பிறகு அந்தக் கௌஸ்துப காண்டம் வரண்ட தத்துவ விசாரங்களினாலானதாகப் பட்டது. என் சொந்த ஊர் திரும்பி, என் மண்ணில் அமர்ந்து ஸ்ரீபாத காண்டத்தை எழுதினேன்..."

"மணிமுடி காண்டம் எழுதியது வெகு காலம் கழித்து என்கிறீர்களா?"

"ஆம் வெகு காலம் கழித்துக் காவியம் முழுமை பெறமுடியவில்லை என்ற உணர்வு என்னை அலைக்கழித்தபடியே இருந்தது. முடிவுறாத காவியத்துடன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வடதிசைப் பயணம் மேற்கொண்டேன்.... பெருமாளின் விஸ்வரூபம் பற்றிய காட்சியினை அப்போது எழுதினேன்..... உண்மையச் சொல். காவியம் எப்படி இருக்கிறது"...

இனியாவது விஷ்ணுபுரத்தை ஆராய விளைபவர்கள், அதில் 'தொக்கி நிற்கும் பொருள்' பற்றியெல்லாம் அறிவதில் காலத்தைத் தள்ளாமல் நேரத்தைப் பொன்னாகச் செல்வழிப்பார்களாக. நாவலை நாவலினூடு, அதில் வரும் பாத்திரங்களினூடு, அது கூறும் பொருளினூடு ஆராயும் ஆற்றலினை இனியாவது வளர்த்துக் கொள்ளுங்கள். இத்தகைய யானை பார்த்த குருடர் வாதங்கள் ஜெயமோகனிற்கு மட்டுமல்ல பத்மபுராணம் படைத்த மாகவி சங்கர்ஷணரிற்கும் இழுக்கினைத் தேடித் தந்து விடுமென்பது அடியேனின் தாழ்மையான அபிப்பிராயமாகும். மேலும் எனது இந்தக் கருத்துகளை விமர்சனமாகக் கொள்வீரோ அல்லது கருத்துகளாகக் கொள்வீரோ? அது உங்களதுபார்வையைப் பொறுத்தது. இங்கு இந்த விஷ்ணுபுரத்தில் எல்லாமே சார்பானவைதான். எனவே தவறில்லை. மொத்தத்தில் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை சங்கர்ஷணன் வார்த்தைகளில் 'சொற்களின் ஆரவாரத்திற்குள் ஓர் ஆத்மா பதுங்கியிருக்கும் விளையாட்டுத் தான்' என்று நிச்சயமாகக் கூறலாம்.

நன்றி: பதிவுகள்.காம், திண்ணை.காம்

மீள்பிரசுரம்: பதிவுகள் - ஆகஸ்ட் 2007; இதழ் 92.

10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!

ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது' என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது

அ.ந.க. ஒரு செயல் வீரர். ஏனையவர்களைப் போல் வாயளவில் நின்று விட்டவரல்லர். தான் நம்பிய கொள்கைகளுக்காக இறுதிவரை பாடுபட்டவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்களிலொருவர். மேற்படி சங்கத்தின் கீதமாகவும் இவரது கவிதையே விளங்குகின்றது. அவரது கவிதைகளின் கருப்பொருட்களாகத் தீண்டாமை, தோட்டத்தொழிலாளர் இழிநிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள், சமுதாயச் சீரமைப்பு, இயற்கை, காதல், தத்துவம், வர்க்க விடுதலை, பிடித்த ஆளுமைகள் போன்றவை விளங்குகின்றன. இவரது கவிதைகள் தமிழமுது, தேன்மொழி, ஈழகேசரி, வசந்தம், வீரகேசரி, பாரதி, தினகரன், ம்ல்லிகை, நோக்கு, இளவேனில், சுதந்திரன், ஸ்ரீலங்கா போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன [அ.ந.க.வின் கவிதைகள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அவர் பங்கு பற்றிய கவியரங்குகள் பற்றிய விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளப்படவேண்டியதவசியம்.]. இவரது ஆரம்ப காலத்துக் க்விதைகளிலொன்றான , ஈழகேசரியில் வெளிவந்த, 'சிந்தனையும், மின்னொளியும்' என்ற கவிதை முக்கியமான கவிதைகளிலொன்று. 'அர்த்த இராத்திரியில் கொட்டுமிடித்தாளத்துடனும், மின்னலுடனும் பெய்யும் மழையைப் பற்றிப் பாடப்படும் இக்கவிதையில் , அந்த இயறகை நிகழ்வு கூடக் கவிஞரிடம் சிந்தனையோட்டமொன்றினை ஏற்படுத்தி விடுகின்றது. கணப்பொழுதில் தோன்றி அழியும் மின்னல் கூட ஒரு சேதியைக் கூறிவிடுகிறது. அது என்ன?

 'கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று....' (ஈழகேசரி)

இவ்விதமாகக் கணப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல் கூறும் சேதிதானென்ன? அதன் சோதிதான் அதன் சேதி. சிறுகணமே வாழ்ந்தாலும் அம்மின்னல் உலகிற்கு ஒளி வழங்குவதன் மூலம் நல்லதொரு சேவையைச் செய்து விட்டுத்தான் ஓடி மறைகிறது. மனித வாழ்வும் இத்தகைய மின்னலைப் போன்றுதான் விளங்க வேண்டும். இதுதான் மண்ணின் மக்களுக்கு கணப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல் சொல்லும் சேதி. இதுதான் கவிஞரிடத்தில் அவ்வியற்கை நிகழ்வு தூண்டிவிட்ட சிந்தனையின் தரங்கங்கள்.

'....அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.'

மேற்படி 'சிந்தனையும் மின்னொளியும்' என்னும் அ.ந.க.வின் ஆரம்பகாலக் கவிதை அ.ந.கவிற்கு மிகவும் பிடித்ததொரு கவிதை. மேற்படி மின்னலைப் போலவே தோன்றி குறுகிய காலமே வாழ்ந்து ஒளி வீசி மறைந்தவர் அ.ந.க. மின்னல் கூறிய பாடத்தினையே பின்பற்றி வாழ்ந்தவர் அவரென்பதை அவரது 'தேசாபிமானி' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையான 'நான் ஏன் எழுதுகிறேன்? ' என்னும் கட்டுரை புலப்படுத்துகிறது. (வ.ந.கிரிதரனை இதழாசிரியராக கொண்டு வெளிவந்த மொறட்டுவைப் ப்லகலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினரின் 'நுட்பம்' (1981) வருடாந்தச் சஞ்சிகையிலும் இக்கட்டுரை மீள்பிரசுரம் செய்யப் பட்டிருக்கின்றது.] அக்க்ட்டுரையில் மேற்படி தனது ஆரம்பகாலக் கவிதையினைக் குறிப்பிடும் அ.ந.க. மேலும் தொடர்ந்து கூறுவார்:

'....இம்மின்னல் எனக்குணர்த்தும் செய்தி என்ன? "சில நாட்களே நீ இவ்வுலகில் வாழ்ந்தாலும் மக்களுக்கும், உலகுக்கும் பயனுள்ளவனாக வாழ். இன்று நீ இருக்கிறாய். நாளை இறந்து விடலாம். ஆகவே நன்றே செய்க. அதையும் இன்றே செய்க" இது தான் மின்னல் சொல்லித் தரும் பாடம். இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை, வறுமை முதலான இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது. வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணிக்கவேண்டும் என்ற ஆசை மேலிட்ட நான் என் எழுத்தையும் அத்துறைக்கே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததில் வியப்பில்லை அல்லவா?...'

இதன் மூலம் அ.ந.கவின் ஆரம்பகாலக் கவிதையான் 'சிந்தனையும், மின்னொளியும்' கவிதை அவரது எதிர்கால இலக்கிய வாழ்வின் அடித்தளமாக, உந்து சக்தியாக விளங்குவதைக் காணமுடிகிறது. அவரது படைப்புகள் எல்லாமே மேற்படி அவரது இலட்சிய வேட்கையைப்
புலப்படுத்துவனவாகவேயிருக்கின்றன.

இவரது இன்னுமொரு கவிதையான 'வில்லூன்றி மயானம்' சமுதாயத்தில் நிலவிய சாதிக் கொடுமையினை, அதன் கட்டுப்பாடுகளை வன்மையாகச் சாடுகின்றது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வள்ளிப்பிள்ளை என்பவரின் பிரேதத்தை நகர சபைக்குச் சொந்தமான வில்லூன்றி மயானத்தில் புதைப்பதற்காகத் தலைமை தாங்கிச் சென்ற ஆரியகுளத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட நிகழ்வைச் சாடும் கவிதையிது. இச்சம்பவம் நிகழ்ந்த காலகட்டத்தில் ஏனைய கவிஞர்களெல்லாரும் அதனை விமர்சிக்கப் பயந்திருந்த நிலையில் , அறிஞர் அ.ந.க அதனை வன்மையாகத் துணிச்சலுடன் கண்டித்தார். தீண்டாமைக்கெதிராக வெடித்திட்ட புரட்சித் தீயாக அதனை இனங்கண்டார்:

'நாட்டினர்நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில்
நாம் கண்ட ஈமத்தீ வெறுந்தீ அன்று
கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்குக்
கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள்
நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும்
நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க்
வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும்
வல்லதொரு புரட்சித்தீ வாழ்க வஃது...'

மனிதர்கள் ஏழை, பணக்காரர் என்று ஏற்றத்தாழ்வுகள் பார்த்தல் தகாது. ஒருவரிற்கொருவர் அன்புடன் வாழ்தல் வேண்டும். அருவருப்பினையொதுக்கிச் சேவை மனப்பான்மையுடன் வாழ வேண்டுமென்பதை இவரது 'துறவியும், குஷ்ட்டரோகியும்' என்னும் கவிதை கூறுகிறது. தானமெடுப்பதற்காகச் செல்லும் துறவியொருவருக்குத் தானமிடுவதற்காகச் செல்வர்கள் பலர் காத்து நிற்கின்றார்கள். அவரோ குஷ்ட்டரோகத்தால் வ்ருந்துமோர் ஏழை தரும் உணவை அன்புடன் வாங்கி உண்ணுகிறார். அவ்விதம் உண்ணுகையில் அப்பாத்திரத்தினுள் நோயினால் அழுகி வீழ்ந்திருந்த அந்த ஏழையினது விரலொன்றினைக் க்ண்டும் அருவருப்படையாது, முகம் சுளிக்காது , அதையொதுக்கி வைத்துவிட்டு உணவையுண்ணுகின்றார். இதனை மேற்படி 'சுதந்திரன்' பத்திரிகையில் வெளிவந்த 'துறவியும், குஷ்ட்டரோகியும்' கவிதை விபரிக்கும்:

'உணவையிடும் போதந்தக் குஷ்ட நோயால்
உக்கி உணர்விழந்திருந்த விரலில் ஒன்று
பிணக்கமுற்று ஓடு தன்னில் வீழ்ந்தந்தப்
பீடைதனைக் கண்டனன் கண்டபோது
கனமுனிவன் சாந்த முகம் மாறாதந்த
கையில் விரலெடுத்ததனை மெல்ல நீக்கி
மனதினிலே ஒரு சிறிது மாசுமின்றி
வாயினிலே மெல்லமெல்ல அள்ளி உண்டான்.
புல்லுணவை நல்லுணவாய் ஏற்றதனை
புத்தமிர்தமாய் மதித்துப் புசித்தான் ஏழை
நல்லவொரு நண்பன் இந்த முனியில் கண்டான்!
நானிலத்தில் விஷமாகும் தனிமை என்னும்
கொல்லுகின்ற வியாதிய·து போயொளியும்
கொண்டனவன் பெரிய இன்பம் குவலயத்தில்
இல்லை இதுபோலில்லை இல்லை என்று
எண்ணி எண்ணி களிக்கடலில் மூழ்கிவிட்டான்.. ' (சுதந்திரன்)

'கவீந்திரன்' என்னும்பெயரிலும் அ.ந.க கவிதைகள் எழுதியுள்ளார். 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தினகரனில் வெளிவந்த தொடர்கட்டுரையில் எழுத்தாளர் அநதனி ஜீவா 'அ.ந.க. ஆரம்பகாலத்தில் கவீந்திரன் என்னும் பெயரில் நிறைய எழுதியிருப்பதாகக் குறிப்பிடுவார். 'தேசபக்தன்' பத்திரிகையில் 'கசையடிக் கவிராயர்' என்னும் பெயரில் அ.ந.க இலக்கிய உலகின் மோசடிகளைச் சாடிக் கவிதைகள் பல எழுதியுள்ளதாகவும் மேற்படி அந்தனி ஜீவாவின் கட்டுரை தெரிவிக்கின்றது. [மேலும் பல புனைபெயர்களில் அ.ந.க எழுதியுள்ளதாக அறிகின்றோம். இது பற்றியும் விரிவான ஆய்வுகள் நடைபெற வேண்டும்.] 'தேயிலைத் தோட்டத்திலே' என்ற இவரது கவிதை 'பாரதி' சஞ்சிகையில் 'கவீந்திரன்' என்னும் புனைபெயரில் வெளிவந்தது. காலையில் விழித்தெழுந்து, குழந்தைக்குப் பாலூட்டி விட்டு, அக்குழந்தை பற்றிய எதிர்காலக் கனவுகளில் மூழ்கி, பழையதை உண்டுவிட்டு, மூங்கிற் கூடையினை முதுகினில் மாட்டிவிட்டு வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளப் பெண்ணொருத்தியைப் பற்றிப் பாடும் கவிதையிது.

'பானையிலே தண்ணீரில இட்டிருநத
பழயதனை எடுத்தே உண்டுமிஞ்ச
மானைநிகர் கண்ணாள் தன் மணவாளர்க்கு
மற்றதனை வைத்துவிட்டு விரைந்து சென்று
கானகத்து மூங்கிலிலே வேய்ந்த கூடை
கழுத்தினிலே பின்புறமாய்த் தொங்கவிட்டு
தானெழுந்து விரைவாள் தன் வேலைக்காடு!
தன் கண்ணின் ஓரத்தைத் துடைத்துக்கொள்வாள்! '

இது போல் இன்னுமொரு கவிதையான 'முன்னேற்றச் சேனை' (மேற்படி இரு கவிதைகளும் 'பாரதி' என்னும் சஞ்சிகையில் வெளிவந்தவை ) 'மூடத்தனம் யாவு நிர் மூலமாகி வீழ்ந்திட', 'மங்கி நிற்கும் பாசிசத்தை மண்ணிடத்தே புதைத்திடப்' புறப்பட்ட 'முன்னேற்றச் சேனை' பற்றிப் பாடும்.
அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை அ.ந.க.வின் மிக முக்கியமான கவிதைளிலொன்று. நிகழ்கால மனிதனொருவன் காலத்தைத் தாண்டி எதிர்காலச் சித்தன் வாழும் உலகிற்கு வந்துவிடுகின்றான். நாடு, மதம், மொழி, இனம், ஏழை, பணக்காரன், சாதியென்று பிளவுண்டு, போர்களினால் சூழப்பட்டிருக்கும் நிகழ்கால உலகிற்கு எதிராகப் பிரிவினைகளற்ற, பேதங்களற்ற மனிதர்களென்றவொருரீதியில் அன்புடன் வாழும் சமுதாயமொன்றில் வாழும் எதிர்காலச்சித்தனொருவனின் உலகினைச் சித்திரிக்கும் கவிதையிது. அருமையான கவிதை. எதிர்காலச் சித்தனிற்கும், நிகழ்கால மனிதனுக்குமிடையில் நிகழும் உரையாடலாக அமைந்துள்ள நீண்ட் கவிதை.
'அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம்
அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்
விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம்
வீழ்ந்துவிடும் ஒருமொழியே ­அவ்வுலகில் உண்டாம்
சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச்
சமானர்கள் மனிதகுலம் என்ற இன மென்பார்
அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம்
அத்தனையும் ஒழிந்து விடும் எதிர்கால உலகில்'
என்று எதிர்காலச் சித்தன் கூறுவான். அத்துடன் அச்சித்தன் வாழும் புதுயுகத்தில் மானிடர்கள் இனம், மதம், நாடு போன்ற எல்லைகளைக் கடந்து மனிதர்களென்ற ஓரினமாகவும், ஒரே மொழிபேசுபவர்களாகவும் விளங்குவர். அவ்வெதிர்காலச் சித்தன் வாழும் உலகு காலம் தாண்டிச் சென்ற நிகழ்கால மனிதனுக்கு மிகுந்த உவகையினைக் கொடுத்தது. அதன் விளைவாக அவன் எதிர்காலச் சித்தனைப் பார்த்து,

"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ..' என்றிறைஞ்சி நிற்கிறான்.

அதனைக் கேட்டதும் எதிர்காலச்சித்தனின் இதழ்களிலே குஞ்சிரிப்பொன்று பிறக்கின்றது. அச்சிரிப்பினூடு 'காலத்தின் கடல்தாவி நீ இங்கு வந்த காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய். ஆனால் உன்னுலகில் நிகழ்கால மயக்கத்தில் வாழ்வோர் இந்த ஞானத்தினைக் காண்பாரோ? இல்லை. இத்தகையதொரு நிலையில் காலத்தை நான் தாண்டிக் காசினிக்கு வந்தால் விடத்தைத் தந்து சோக்கிரதரைக் கொண்ட உன் சோதரர்கள் கட்டாயம் என்னை ஏற்றி மிதித்திடுவார்கள்' என்கின்றான். அதனால் 'நிகழ்கால மனிதா! நான் அங்கு வரேன். நீ போவாய்' என்கின்றான். எனவே ஏமாற்றத்துடன் மீண்டும் நிகழ்கால உலகிற்கே நிகழ்கால மானுடன் திரும்புகின்றான். திரும்பியவனை நடைபெறும் மடைமைப் போர்களும், நடம் புரியும் தீதுகளும் திடுக்கிட வைக்கின்றன. 'என்றிவர்கள் உண்மை காண்பாரோ?' என ஏக்கமுற வைக்கின்றன. அதனையே கவிஞர் பின்வருமாறு கூறுவார்:

'புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன்
புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து
"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க
மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே
மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.
காலத்தின் கடல் தாவி நீ­ங்கு வந்த
காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய்
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.
ஞானத்தைக் காண்பாரோ? காணார்களப்பா
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்
கட்டாயம் ஏனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார்
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக் கொன்ற
அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?
ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு
யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன்
காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக்
கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று.
பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும்
பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும்
தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு
திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?'

மேற்படி கவிதையினை நவீனத்தமிழ்க் கவிதையுலகில் வெளிவந்த முதலாவது விஞ்ஞானக் கவிதையெனக் குறிப்பிடலாமா? ஆய்வாளர்கள்தான் பதிலிறுக்க வேண்டும். ஆயினும் நான் அவ்விதம்தான் கருதுவேன். மேற்படி 'எதிர்காலச் சித்தன்' கவிதை நிகழ்கால மனிதன் காலம் கடந்து செல்வதை மட்டும் குறிக்கவில்லை. அ.ந.க கண்ட இலட்சிய உலகினையும், கனவினையும் கூடவே வெளிப்படுத்தி நிற்கின்றது. நவீனத்தமிழ்க் கவிதையுலகில் குறிப்பிடத்தக்க முக்கியமான கவிதைகளிலொன்றாக இதனை நான் இனங்காணுகின்றேன். அ.ந.க.வையே மேற்படி கவிதையில் வரும் எதிர்காலச்சித்தனாகவும் நான் உணருகின்றேன். அவரது உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த இலட்சியக் கனவின் வடிவமாகவே எதிர்காலச் சித்தன் விளங்குகின்றான். அத்துடன் அ.ந.க.வின் சிந்தனைத் தெளிவினையும், கவி புனையும் ஆற்றலையும் கூட மேற்படி கவிதை விளக்கி நிற்கின்றது.
அ.ந.கந்தசாமி அவ்வப்போது கவியரங்கங்களிலும் பங்குபற்றித் தலைமை வகித்துள்ளார்; கவிதைகள் பாடியிருக்கின்றார். அ.ந.க.வின் கவியரங்கப் பங்களிப்பைக் குறிப்பிடும் அந்தனி ஜீவா த்னது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரையில் '1966ம் ஆண்டு ஸ்ரீலங்கா சாகித்திய மண்டபத்தில் நடத்திய ''பாவோதல்'' நிகழ்ச்சியில் அ.ந.கந்தசாமி பாடிய ''கடவுள் என் சோர நாயகன்'' என்ற கவிதை பாவோதல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. அந்தக் கூட்டத்தில் குறிப்புரையாற்றிய தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை "ஒரு நூற்றாண்டிற்கு ஒரு தடவைதான் இதைப் போன்ற நல்ல கவிதை தோன்றும்" எனப் பாராட்டினார். பல கவிதை அரங்குகளின் தலைமைப் பீடத்தை அலங்கரித்துள்ளார் அ.ந.க' என்று குறிப்பிட்டுள்ளது இங்கு கவனிக்கத் தக்கது.  இவ்விதமாக அவர் பங்குபற்றிய கவிதையரங்கொன்றுதான் வேலணையூர்த் தொல்காவிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கு. தமிழ் மறையாம் திருக்குறளினை வழங்கிய 'வள்ளுவர்' பற்றிய நீண்ட கவிதை தமிழ்க் கவிதையுலகில் திருவள்ளுவர் பற்றி வெளிவந்த அற்புதமான கவிதைகளில் நானறிந்த வரையில் முதன்மையானது. மேற்படி கவிதை வள்ளுவரின் சிறப்பினையும், கூடவே அ.ந.க அவர்மேல் வைத்திருந்த அபிமானத்தையும் புலப்படுத்தி நிற்கும். அத்துடன் அழகாகச் சொற்களை அடுக்கிச் சிந்தனையைத் தூண்டும் வகையில், மனதினை ஈர்க்கும் வகையில் கவிபுனையும் அ.ந.க.வின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றது.

'மதங்களை அடிப்ப்டையாக புலவர்கள் கொள்ளுமொரு காலகட்டத்தில் வள்ளுவரோ மன்னுலக வாழ்வை மட்டுமே அடிப்படையாகக் கொள்கின்றார். மற்றவரோ வீடென்றும், மோட்சமென்றும் புனைய வள்ளுவரோ இல்வாழ்வுக்குரிய அறம், பொருள், இன்பம் பற்றி உரைத்திடுகின்றார்' இவ்விதம் கூறும்
அ.ந.க

'இது நல்ல மாற்றமென இங்கெடுத்துச் சொல்வோம்.
இவர் குறளைக் கையேந்தி இவ்வுலகை வெல்வோம்' என்கின்றார்.

அத்துடன் 'வறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சினை வள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதை'

'வேந்தரது அரண்சிறப்புச் சொல்லவந்தபோது 1"உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து) உற்றிடுதல் ஒன்றல்ல நா"டென்று கேட்டார்' என்று குறிப்பிடும் அ.ந.க மேலும் 'பெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார் பெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன்' என்று விபரிக்கும் அ.ந.க மேலும் தொடர்ந்து வள்ளுவனார் வழிவந்த பாரதியார் 'தனி யொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார். ஆனால் வள்ளுவரோ 'தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே? அவ்விதமேல் சாய்கஅந்த ஆண்டவனும்' என்று பல்லாண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டுவார்:

'வள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார்
2"வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன்
உள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று
உளம்வருந்து வானாயின்" என்பதவர் பாட்டு.
வள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர்
வழுத்தினார் இதன் பொருளை ஆவேசத்தோடு
3"தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே?
அவ்விதமேல் சாய்கஅந்த ஆண்டவனும்" என்றார்'

இவ்விதமாக வள்ளுவரை மக்கள் கவிஞ்னாக, ஏழைகளின் தோழனாக அவனது குறட்பாக்களினூடு காணும் கவிஞர்

'கலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு
கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு
கலைஇந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று
கருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று
விலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை
வியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை.
கலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும்
கவினுடைய பாதையிலே பேனாவை ஓட்டும்'

என்று மேலும் பாடி , வள்ளுவரை கருத்துக்கு முக்கியம் தரும் கலை படைக்குமொரு சமுதாயச் சிந்தனை மிக்க படைப்பாளியாகச் சித்திரிப்பார். கலை கலைக்காக என்று கருதுபவர்கள் கலை இந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று வள்ளுவரைப் பார்த்து உணரட்டுமென்கின்றார். அவர் காட்டும் பாதையிலே பேனாவை ஓட்டட்டுமென்கின்றார். மக்களுக்காக இலக்கியம் படைப்பதையே தனது இலட்சியமாகக் கொண்டு செயலாற்றிவந்த அ.ந.க. வள்ளுவரையும் அத்தகையதொரு கோணத்திலேயே அவனது குறட்பாக்களினூட் இனம் காண்கின்றார். இச்சமயத்தில் அ.ந.க.வின் இலக்கியம் பற்றிய கருத்துகளை நினைவு கூர்வது பொருத்தமானதே. ஏற்கனவே குறிப்பிட்டுள்ள 'நான் ஏன் எழுதுகிறேன்' என்னும் கட்டுரையில் அவர் பின்வருமாறு கூறுவது கவனிக்கத்தக்கது. அவரது எழுத்தின் நோக்கம் பற்றிய அவரது உள்நோக்கத்தினை எடுத்தியம்பும் வரிகளிவை. அவரைப் பற்றி ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வாளர்களுக்கு மிகவும் உதவக் கூடிய வரிகளிவை.:

'மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில்> ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். "இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கம்பலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்.

பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை.... உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்.

"மக்கள் இலக்கியம்" என்ற கருத்தும் "சோஷலிஸ்ட் யதார்த்தம்" என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன. எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.

எழுத்தில் பலவகை உண்டு. நேரடிப் பிரச்சார எழுத்து ஒருவகை. கதை, கவிதை, நாடகம் என்ற உருவங்களில் வாழ்க்கையின் படமாகவும் வழிகாட்டியாகவும் எழுதப்படுபவை வேறொருவகை. இந்த இரண்டாவது வகை எழுத்தே இலக்கியம். அதுவே நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே அதைப்பற்றியே நான் இங்கு அதிகமாகக் கூறியிருக்கிறேன்.'

இவ்விதமாக எழுத்து பற்றிய கருத்துள்ள அ.ந.க வள்ளுவரையும் அவ்விதமான, மக்களுக்காக இலக்கியம் படைத்த் படைப்பாளியாகவே இனங்காண்கின்றார். அதனால்தான்

'நெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன்
செய்திட்ட நிறைநூ லில் பெய்திட்ட எண்ணம்
இசைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும்!
எல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்' என்கின்றார்.

அ.ந.க. வை வள்ளுவரைப் போல் மகாதமா காந்தியின் துணைவியார் அன்னை கஸ்தூரிபாயும் மிகவும் கவர்ந்தவர். அவரது மறைவையொட்டி அவர் எழுதிய 'அன்னையார் பிரிவு' என்னும் ஈழகேசரியில் வெளியான நினைவுக் கவிதையொன்றே அதற்குச் சான்று. அதிலவர் அன்னை பற்றி

'ஒப்பரிய காந்தியரி னொப்பில்லாத
ஓர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச்
செப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம்
தாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம்' எனவும்
'சீதையும் சாவித்திரியாம் தேவி மற்றும்
சிறப்புள்ள நளாயினி என்போரெல்லாம்
காதையிலே உலாவுகின்ற கன்னியர்கள்
கடுகேனும் உண்மையங்கு இல்லை யென்று
ஓதியவர் தலைநாணச் செய்து பெண்மைப்
பெருங்குலத்தின் உயர்வுதனை நாட்டினாய்'

எனவும் குறிப்பிடும் அ.ந.க, அன்னையார் இறந்த செய்தியினை 'மாரியினிலே பெருமழைதான் கொட்டுகின்ற காரிரவில் பல்லிடிகள் பின்னே வந்த பேரிடி'யாய் உணருகின்றார்.

இவ்விதமாகக் கவீந்திரனின் கவிதைகள் ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் முக்கியமான படைப்புகளாக விளங்கி நிற்கின்றன. அ.ந.க. வின் கவிதைகள் எல்லாமே போர்ச்சுவாலைகளாகத்தான் இருந்தன என்பதற்கில்லை, அவ்வப்போது காதல் போன்ற மென்மையான உள்ளத்துணர்வுகள் பற்றியும் பாடியுள்ளார். முற்போக்குக் கவிஞரொருவர் இவ்விதமாகவெல்லாம் பாடலாமா என்ற்ம் சிலர் கேட்பர். அதற்கு அ.ந.க. முன்பு குறிப்பிட்டுள்ள 'நான் ஏன் எழுதுகிறேன்?' என்னும் கட்டுரையினை மீண்டும் ஒருமுறை அசைபோடுதல் தகுமே. அதிலவர் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருப்பார்:

'எழுத்தில் பலவகை உண்டு. நேரடிப் பிரச்சார எழுத்து ஒருவகை. கதை, கவிதை, நாடகம் என்ற உருவங்களில் வாழ்க்கையின் படமாகவும் வழிகாட்டியாகவும் எழுதப்படுபவை வேறொருவகை. இந்த இரண்டாவது வகை எழுத்தே இலக்கியம். அதுவே நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே அதைப்பற்றியே நான் இங்கு அதிகமாகக் கூறியிருக்கிறேன். ஆனால் சோஷலிஸ யதார்த்தப் பாதையில் இலக்கியப் பணிபுரிவோர் வெறும் அழகையே நோக்காகக்கொண்ட கருத்துகள் இயற்கையாக மனதில் தோன்றும்பொழுது அவற்றை எழுதாது விட்டுவிட வேண்டுமா? நல்ல கருத்துகளைக் கருக்கிச் சாகவிட்டு விடவேண்டுமா என்று கேட்கப்படுகிறது.
பாரதி முற்போக்குக் கவிஞன். ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பாடிய அதே வாயால் 'கண்ணன் என் காதலனை'யும் பாடினான். ஆம், தோட்டக்காரன் கத்தரிக்காயையும், கீரையையும், தக்காளியையும் பயிரிடுகிறான். ஆனால் வீட்டு வாசலிலே மல்லிகைக் கொடியைப் படர விடுவதில்லையா? கத்தரித் தோட்டத்து வேலையின் களைப்புப் போக, மல்லிகைப் பந்தலின் நறுமணத்தை மகிழ்ச்சியோடு உறிஞ்சி மகிழ அதன் கீழ்ச் சென்று உட்காருவதில்லையா? எமக்கு நெல்லும் வேண்டும். கோதுமையும் வேண்டும். காய்கறிகளும் கிழங்குகளும் வேண்டும். ஆனால் ரோசா மலர்களும் வேண்டும். ரோசாமலர்களை மனநிறைவுக்காக நடும் தோட்டக்காரன் ரோசா மலர் நடுபவன் என்று சொல்லப்படமாட்டான். தோட்டக்காரன் என்றுதான் அழைக்கப்படுவான். பிள்ளையைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடுவோம். ஏற்றமிறைக்கையில் ஏற்றப்பாட்டுப் பாடுவோம். அணிவகுப்பில் புரட்சிக் கீதம் பாடுவோம். ஆனால் குளிக்கும் அறையில் வெறும் ஸ்வரங்களை நாம் வாய்விட்டு இசைப்பதில்லையா?

சோஷலிச யதார்த்தப் பாதையில் முற்போக்கு இலக்கியம் சமைப்பவனைக் கடும் விலங்குகளால் கட்டிவிடக்கூடாது. பொதுவாக ஒரு எழுத்தாளன் எத்துறைக்குத் தன்னை அர்ப்பணிக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் அவன் சரியாக இருந்தால், மற்ற விஷயங்கள் சம்பந்தமாக நுணுக்கமாகச் சட்டதிட்டங்களை உண்டாக்குதல் அவன் கலைச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும். 'சிந்தனையும் மின்னொளியும்' தொடக்கம் 'எதிர்காலச் சித்தன் பாட்டு ' வரை என் கருத்தோட்டம் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால் இடையிடையே ரோசாக்களையும் நான் நட்டதுண்டு. 'புரட்சிக் கீதம்' பாடாத வேளையில் 'காதல் கீதம்' பாடியதுமுண்டு. வெறும் சுவரங்களை இசைத்ததுமுண்டு. என்றாலும் என் பொதுவான இலட்சியம் ஒன்று. என் எழுத்துக்கள் மக்களை உயர்த்த வேண்டும். அவர்களின் போராட்டங்களில் எந்த அம்சத்தோடாவது அவை சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இந்த இலட்சியத்துக்காகவே நான் எழுத ஆசைப் படுகிறேன். ஆனால் போர்க்களத்தில்கூட பூக்கள் பூப்பதுண்டு. இதை நாம் மறக்கக்கூடாது. வாளேந்திப் போர்க்களம் புகும் வீரன் கூட தும்பை மாலையை கழுத்திலணிந்து செல்வது பண்டைத் தமிழ் நாட்டு வழக்கமாகும். இந்த விவகாரம் இக்கட்டுரைக்குப் புறப்பிரச்சினையானாலும் முற்போக்கு இலக்கியத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையென்பதால் சில வார்த்தைகள் கூறும்படி நேரிட்டது. முடிவாக "எதற்காக எழுதுகிறேன்?" என்பதற்கு நான் இரத்தினச்சுருக்கமாகச் சில காரணங்களைக் கூறி இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன். முதலாவதாக என் வாழ்வு சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக வேண்டும் என்ற காரணம். சுரண்டலும் அநீதியும் நிறைந்த சமுதாயத்தை ஒழிக்கவும் புதிய ஒளிமிக்க சமுதாயத்தை தோற்றுவிக்கவும் என்னாலான பணியை எழுத்து மூலம் செய்ய வேண்டுமென்ற காரணம். இதனை நான் முன்னரே விரித்துக் கூறிவிட்டேன்.'

ஈழத்து மரபுக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க கவிஞர்களிலொருவர் வித்துவான் க.வேந்தனார். இவரது கவிதைகளின் சிறப்பம்சங்களிலொன்று அவரது கவிதைகளில் காணப்படுகின்ற முற்போக்குக் கருத்துகள். ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் இவரது 'காலைத் தூக்கிக் கண்ணில் வைத்து கட்டிக் கொள்ளும் அம்மா' என்னும் குழந்தைப் பாட்டு மிகவும் புகழ் பெற்றது. க.வேந்தனாரின் இன்னுமொரு கவிதை 'கவிஞன்' அதிலவர் பின்வருமாறு கூறுவார்:

'வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள
மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல்
கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு
குமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான்!'

இவ்விதமாகக் வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள கோளரியாக வாழ்ந்த கவிஞன்தான் அ.ந.கந்தசாமி. ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகின் முக்கியமான கவிஞரான அ.ந.கவின் தமிழ்க் கவிதைக்கான பங்களிப்பை மறைத்துவிட முனைவோர் முழுப் பூசணிக்காயைச் சோற்றினுள் மறைக்க முயலும் அறிவிலிகளே! ஆய்வாளர்களல்லர்

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்