Sunday, June 30, 2019

டி.எம்.எஸ் பற்றிய காணொளி!

பாடகர் டி.எம்.எஸ் அவர்களின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அவர் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருக்காகக் குறிப்பாக எம்ஜிஆருக்காகப் பாடிய பாடல்கள். அன்று கேட்டோம்; இன்றும் கேட்கின்றோம். இனியும் கேட்போம். டி..எம்,எஸ் அவர்கள் எம்ஜிஆர்,, சிவாஜி படங்களில் பாடிய கருத்துள்ள பாடல்களாகட்டும், காதல் பாடல்களாகட்டும் அவை வரலாற்றில் நிலையாக நிலைத்து நிற்கப்போகும் பாடல்கள். அண்மையில் முனைவர் கெளசல்யா சுப்பிரமணியன் அவர்கள் தனது இசைத்தமிழ் பற்றிய ஆய்வு நூலொன்றில் திரைப்படப்பாடல்களையும் கவனத்திலெடுத்திருந்தது நினைவுக்கு வருகின்றது.

இங்கு பாடகர் டி.எம்.எஸ் அவர்கள் தான் எம்ஜிஆர் நடித்த 'அன்பே வா' திரைப்படத்தில் பாடிய தனது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கின்றார். அவ்வப்போது 'அன்பே வா' பாடல்கள் சிலவற்றையும் தெளிவு மிக்க காணொளிகளாக ஒ(லி)ளிப்பதிவு செய்திருக்கின்றார்கள். கேட்பதற்குச் சுகமாகவுள்ளது. கடந்த காலத்துக்கு எம்மையெல்லாம் இழுத்துச் செல்லும் காணொளி.

இக்காணொளியில் டி.எம்.எஸ் அவர்கள் அரிய தகவல்கள் பலவற்றை எம்முடன் பகிர்ந்துகொள்கின்றார். அவற்றில் என் கவனத்தை ஈர்த்த இரண்டினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

1. அக்காலகட்டத்தில் பாடல்களில் எதிரொலியினை உருவாக்குவதற்கான தொழில் நுட்பமில்லை. எவ்விதம் எம்ஜிஆர் மலைப்பிரதேசத்தில் பாடும் 'புதிய வானம். புதிய பூமி' பாடலுக்கு எதிரொலியைச் சேர்ப்பது என்பதில் அனைவருக்கும் குழப்பம். அப்பொழுது டி.எம்.எஸ் சிறு தந்திரம் மூலம் அக்குழப்பத்தை நிவர்த்தி செய்கின்றார். அது: பாடலைப்பாடும் பொழுது, எதிரொலியாக ஒலிக்க வேண்டிய சொல்லினைப் பாடுகையில் முதல் முறை ஒலிபெருக்கிக்கு அருகில் நின்றும், அடுத்தடுத்த தடவைகள் முறையே ஒலிபெருக்கிக்குத் தூரமாகவும், இன்னும் தூரமாகவும் நின்று பாடுவார். அது அப்பாடலில் அச்சொல் எதிரொலிப்பது போன்ற உணர்வினைத்தரும். அப்பாடலை மீண்டுமொரு முறை கேட்டுப்பாருங்கள் புரிந்து கொள்வீர்கள்.

2. படத்தில் இடம் பெறும் 'அன்பே வா' பாடலை முதலில் பாடும்போது இசையமைப்பாளர் எம்.எஸ்.வி அவர்கள் அதனையேற்று அதற்கு ஒப்புதல் அளித்தும் விட்டார். ஆனால் மறுநாள் டி.எம்,எஸ் வந்தபோது அவருக்கோர் அதிர்ச்சி. அவரை அப்பாடலை மீண்டுமொருமுறை பாடும்படி கூறி விட்டார்கள். எம்.எஸ்.வி அவர்களுக்கும் காரணம் புரியவில்லை. இதற்குக் காரணம் எம்ஜிஆர். படத்தில் அப்பாடல் பிரிந்து செல்லும் காதலியை நோக்கிக் காதலன் பாடுவதாக அமைந்துள்ளது. டி.எம்.எஸ் முதலில் பாடுகையில் சந்தோசமாகப் பாடி விட்டிருந்தார். அதனை எம்ஜிஆர் அவதானித்து விட்டார். பாடலை டி.எம்.எஸ் துயர உணர்வுடன் பாட வேண்டுமென்பது எம்ஜிஆரின் கணிப்பு. பின்னர் டி.எம்.எஸ் அவர்கள் அப்பாடலைத் துயரம் ஒலிக்கப்  பாடி முடித்தார். பாடலும் பெரு வெற்றியினை அடைந்தது.
இது போன்ற அரிய தகவல்கள் பலவற்றுடன் வெளியாகியுள்ள இக்காணொளியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

 https://www.youtube.com/watch?v=nxP4Ct3_9p4

இக்காணொளியைப் பார்த்ததும் எனக்கு டி.எம்.எஸ்ஸுன் இன்னுமொரு காணொளியில் அவர் பகிர்ந்துகொண்ட விடயம் நினைவுக்கு வந்தது. அதில் அவர் எவ்விதம் தான் எம்ஜிஆருக்கும், சிவாஜிக்கும் குரல் மாற்றிப் பாடினார் என்பதைப் பாடி விபரித்திருப்பார். அற்புதமான கலைஞர் அவர்.

1 comment:

kouwshik said...

Tms அவர்களைப்பற்றிய இந்த காணொளி மிக மிக அருமை. இவரைப்போல் இப்பாரினிலே எவருண்டு? சிவாஜி, mgr, tms போன்றவர்கள் மீண்டும் மீண்டும் இப்புவியில் பிறந்திடவேண்டும்.

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்