Sunday, June 30, 2019

அரசியல் கைதி எழுத்தாளர் சிவ. ஆரூரனின் 'யாழிசை'!


அண்மையில் பதுளையைச் சேர்ந்த முத்தையா சடகோபன் என்னும் அப்பாவி, அரசியல் கைதி, எவ்விதக் குற்றங்களும் செய்யாத நிலையில், பதினான்கு வருடங்கள் சிறை வாசம் அனுபவித்து சிறையில் மரணமடைந்தது யாவரும் அறிந்ததே. இவரது மரணம் இதுவரை விடுதலையாகாமல் சிறைகளில் ஆண்டுக்கணக்காக வாடும் அரசியல் கைதிகள் விடயத்தை மீண்டும் அனைவரின் கவனத்துக்கும் கொண்டுவந்துள்ளது. இலங்கையின் அனைத்துப்பகுதி அரசியல்வாதிகளும், மானுட உரிமை அமைப்புகளும் ஓன்றிணைந்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த வேண்டிய தருணமிது.
அண்மையில் என்னுடன் முகநூலில் நட்பராக இணைந்ததன் பின்னரே இன்னுமோர் அரசியல் கைதியைப்பற்றி அறிந்துகொண்டேன். இவர் மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி, இவர் ஓர் எழுத்தாளர். சிறையிலிருந்தபடியே இவர் எழுதிய 'யாழிசை' என்னும் நாவலுக்கு இலங்கை அரசின் தேசிய சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது. இவர் மொறட்டுவைப்பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி. இவர்தான் எழுத்தாளர் சிவ. ஆரூரன். இவர் இன்னும் அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவரைப்பற்றி , இவரது நாவலான 'யாழிசை' நாவல் பற்றி அறிய வேண்டுபவை பல உள்ளன. இவரது நாவலான 'யாழிசை' பற்றி எழுத்தாளரான மருத்துவர் எம்.கே.முருனானந்தன் எழுதிய முகநூற் பதிவு கீழே:
************************************************************************************************************
அரசியற் கூண்டுப் பறவை சிவ ஆருரன் அவர்களின் நாவல். ‘யாழிசை’ ; போர் தின்ற வாழ்வின் ஒரு முகம்.  - எம்.கே.முருனானந்தன் -

எமது வாழ்வானது போர் தின்ற வாழ்வு. சிலரது வாழ்வு முற்று முழுதாக விழுங்கப்பட்டு காணாமலே போய்விட்டது. வேறு சிலரது கொத்தி குதறிச் சிதைக்கப்பட்டு அழிக்க முடியாத வடுக்களோடு நகர்கிறது. அந்த வாழ்வின் இழப்புகளால் மனம் சோர்ந்து அழுது புலம்பி முன்னகர முடியாது அழுந்தி மாய்பவர்கள் பலர். அவற்றைச் சவால்களாக கொண்டு அதி தீவிர முயற்சிகளுடாக மற்றவர்களுக்கு நாம் சளைத்தலர்கள் அல்ல என துணிச்சலோடு வாழ்ந்து காட்டுபவர்கள் சிலர். இந்த நாவல் அதற்கு ஒரு சான்று.

யாழிசை நாவலானது போருக்கு பின்னான வாழ்வின் ஒரு முகத்தைப் பேசுகிறது. ஒரு குடும்பத்தின் கதை ஊடாக ஒரு முன்னை நாள் போராளியின் வாழ்வின் மறைந்து கிடக்கும் அனுபவங்களைப் தொட்டுக்காட்டி நகர்கிறது.

ஆனால் அங்கு மாலதி என்ற அந்தப் பாத்திரம் மட்டும் முக்கியப்படுத்தப்பட்டு தனித்துவமாகப் பேசப்படவில்லை. அவளது வாழ்வு மட்டும் காட்சிப்படுத்தப்படவில்லை. சமூக அக்கறையுள்ள ஒரு ஆசிரியரான மாறன், அவரது குடும்பம், அவருக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம். அதை மீறி திடீரென மணமுடிக்க நேர்ந்த அந்தப் பெண், அவர்களது குடும்பங்கள் நண்பர்கள் என அந்த குடும்ப உறவுகளில், சமூக வாழ்வின் தூறலில் எம்மை முழுமையாக நனைத்து சிலிர்க்க வைக்கிறது. யாழ் மண்ணிலும் வன்னிப் பரப்பிலுமாக கால் நீட்டி நடை பயில்கிறது.

அமைதியான நீரோட்டம் போல ஆர்ப்பாட்டமின்றி நகரும் கதை. அந்நிய மொழிக் கலப்படமில்லாத தமிழ். ஆனால் அது வாசிப்பிற்கு நெருடல் இல்லாமல் இருப்பது நாவலாசிரியரின் மொழி ஆளுமைக்குச் சான்றாகிறது.

கதை சுவார்ஸமாக நகர்வதற்கு நாவலின் இறுதிவரை பின்னிச் செல்லப்படும் ஒரு முடிச்சு காரணமாகிறது. மேலோட்டமான வாசகனுக்கு சிக்கலான முடிச்சு இருப்பது புலப்படாமல் போகவும் கூடும். ஆழமான வாசகனுக்கு அந்த முடிச்சு எவ்வாறு அவிழும் என்பது ஆரம்பத்திலேயே அனுமானிக்கக் கூடியதாக இருக்கவும் கூடும். எப்படியிருந்த போதும் ஆரவாரமும் அழுத்தமும் இல்லாமல் முடிச்சைப் போட்டு அதை அழுத்தமாக அவிழ்த்து வைத்து நாவலை மறக்க முடியாத படைப்பாக ஆக்கிய படைப்பாளி ஆருரன் பாராட்டுக்குரியவர்.

மற்றொரு விடயம் இந்த நாவலை வாசித்து முடித்து அதை மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தபோது மனதில் பட்டது. இந்த நாவலில் கெட்டவர்கள் என்றோ வில்லத்தனம் கொண்டவர்களோ என்று எவருமே இல்லை. எல்லோருமே நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.


மாலதியின் அக்காவின் கணவனான நாதன் அவள் மீது கடுமையாக நடந்து கொள்கிறான். ஏசவும் செய்கிறான். ஆனால் நாவலின் இறுதி அத்தியாயங்களில் அவன் அப்படி நடந்து கொண்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் போது அவனில் மதிப்பும் மரியாதையும் ஏற்படுகிறது.
அதே போல மாறனின் மாமாவான செல்வம் தன் மகள் வாணியை திருமணம் செய்வதாக கூறி பின் திடீரென மாலதியை திருமணம் செய்ததால் மாறனில் கோபம் கொள்வதும், மற்றவர்களிடேயே அவனைத் தூற்றிப் பேசுவதும், அவர்கள் குடும்பத்தையே ஒதுக்கி வைப்பதுமாக இருக்கிறார். ஆனால் அதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்ததும் அவர்களுடன் மீண்டும் உறவு கொண்டாடுகிறார்.
ஆம் எல்லா மனிதர்களும் அடிப்படையில் நல்லவர்கள்தான். சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவர்களை வழிதவறிப் போகச் செய்கிறது.

இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் கற்பனையில் பிறந்தவர்கள் போல இல்லை. “..நம்மோடு, நம்மண்மீது உலாவித் திரிபவர்கள். அவ்வாறனவர்களை ஒருங்கிணைத்ததே நான் செய்த பணி” என்கிறார் நூலாசிரியர்.

எனவே, கடந்த காலத்தில் அவருக்கு கிடைத்த அனுபவங்களும், பார்த்து உணர்ந்தவையுமே படைப்பாக உருப்பெற்றிருக்கின்றன என நினைக்கிறேன். அதற்கு அப்பால் தான் நேசித்த அந்த மண்ணில் அந்த மக்களிடையே இன்று அவர் இல்லை. அவர் அகற்றப்பட்டிருக்கிறார். தனிமையும், தாயகத்தின் மீதும் அந்த மக்கள் மீதுமான தாகமும் அவரை பழைய நினைவுகளில் மூழ்கடித்து முத்துக்களை அள்ளித் தெளிக்க வைத்திருக்கும் என்பது நிச்சயம்.

“தரணியெங்கும் விரிந்து கிடக்கும் இவ்விலக்கிய வான்பரப்பில் ஒரு கூண்டுப் பறவையாக சிறகு விரிக்க முற்பட்டேன். நாற்பக்கமும் சுவரில் முட்டி மோதி மீண்டும் மூலையில் வீழ்ந்துகொண்டேன்.
முடியவில்லை! பௌதீக ரீதியாக முடியவில்லை!

மனோரீதியாக உறவுகொள்ள முற்படுகிறேன்” என்கிறார் தன் சுருக்கமான முன்னுரையில்.
இந்த நூல் 2014ல் வெளிpயிடப்பட்டதாக அறிகிறேன். அதற்கு சில வருடங்கள் முன்தொடங்கி இன்றுவரை அரசியல் கைதியாக இருக்கும் அவர் கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்து காலத்தைக் கடத்தாமல் பேனாவைக் கையிலெடுத்தது ஈழத் தமிழுக்கு கிடைத்த பேறு. இந்த நூலுக்கு தேசிய சாகித்திய பரிசு கிடைத்திருப்பது அதற்கு ஒரு சான்றும் கூட.

மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான இவர் யாவரும் கேளீர் என்ற மற்றொரு நாவலையும், பூமாஞ்சோலை என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டுருக்கிறார். பூமாஞ்சோலை ஜீவநதி வெளியீடாக வந்திருக்கிறது. பரணீதரனின் Bharaneetharan Kalamany கண்ணுக்கு இதமான அட்டைப்பட வடிவமைப்புடன் மலர்ந்திருப்பதையும் குறிப்படலாம். அந்த நூல் கையிலிருந்தும் இன்னமும் வாசிக்க முடியவில்லை.

இந்நூல்களை எனக்கு கிடைக்கச் செய்தவர் திரு.சிவலிங்கம். ஆருரனின் தந்தை. அறிவோர் கூடல் காலம் முதல் எனது நண்பர். அவருக்கு எனது நன்றி.

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்