Sunday, June 30, 2019

அஞ்சலி: முத்தையா சகாதேவன்


முத்தையா சகாதேவன் ஓர் அப்பாவி. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த இவர் , கடந்த 15 வருட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அண்மையில் விடுதலையைக் காணாமலே சிறையில் மரணமானார். நாட்டின் அரசில் அமைப்பானது எவ்விதம் தனி ஒரு மனிதனின் வாழ்வை ஆட்டிப் படைக்கின்றது; சீர்குலைக்கின்றது என்பதை வெளிப்படுத்தும் மரணம் இது. தனி மனிதரின் இருப்பானது இவ்விதமான அரசியல் அமைப்பொன்றினால் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் புனைவுகள் பல வெளியாகியுள்ளன. அவற்றில் காப்காவின் 'விசாரண' நாவலும் முக்கியமானது. முத்தையா சகாதேவனின் நிலையும் அத்தகையதுதான். சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணைகளேதுமற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான இவரது மரணம் தேவையற்றதொன்று. இவரைப்போன்ற பல முத்தையாக்கள் இலங்கைச் சிறைகளில் வாடுகின்றார்கள்.

முத்தையா ஒரு சாதாரண தொழிலாளி. இவர் செய்த குற்றம்: லக்ஷ்மன் கதிர்காமர் வீட்டுக்கு அருகிலிருந்த வீட்டுச்சொந்தக்காரரின் உத்தரவுக்கமைய லக்‌ஷ்மன் கதிர்காமன் வீட்டு மதிலையொட்டியிருந்த மரக்கிளையை வெட்டித் துப்புரவு செய்ததுதான். லக்ஷ்மன் கதிர்காமர் கொலைக்காகத்தான் அவ்விதம் மரக்கிளை வெட்டப்பட்டு துப்புரவு செய்யப்பட்டிருக்கின்றது என்பது இலங்கைப் புலனாய்வாளர்களின் கண்டு பிடிப்பு. விளைவு ஆண்டுக்கணக்கில் விசாரணைகளும் ஏதுமற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டு , உறவுகளிடமிருந்து பிரிக்கப்பட்டு, மன உளைச்சல்களுக்குள்ளாகி மரணத்தைத் தழுவியுள்ளார் முத்தையா.
பதுளையைச் சேர்ந்த இவர் மலையகத் தமிழராகவிருக்க வேண்டும்.

இவரது மரணம் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு நல்லதோர் உதாரணம். இதற்குரிய நட்ட ஈட்டைப் பாதிக்கப்பட்ட முத்தையாவின் மனைவிக்குப் பெற்றுக்கொடுக்க மனித உரிமைக்காகப் போராடும் அமைப்புகள் முன் வரட்டும். முத்தையா சகாதேவனின் மரணம் அரசியல் கைதிகள் விடுதலையைத் துரிதமாக்கட்டும். அவரது மரணத்தால் வாடும் குடும்பத்தாருடன் நாமும் இணைந்துகொள்கின்றோம்.

No comments:

காலத்தால் அழியாத கானம்: 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!"

    'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Googel Nano Banana) உதவி; VNG   பாடகி வாணி ஜெயராமுக்குச் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின்...

பிரபலமான பதிவுகள்