Wednesday, June 5, 2019

எழுத்தாளர் காத்யானா அமரசிங்கவின் யாழ் நூலகம் பற்றிய பத்தி பற்றி...

யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நாளான மே 31 பற்றி முகநூலுட்படப் பல்வேறு ஊடகங்களில் அது பற்றிய பதிவுகள் பலவற்றைப்பார்த்தோம். இன, மத , மொழி வேறுபாடின்றிப் பல்லின மக்களும் நூலக எரிப்புக்காக மனம் வருந்துகின்றார்கள். சிங்கள எழுத்தாளர் காத்யானா அமரசிங்க அவர்களும் அவர்களிலொருவர். இலங்கைத் தமிழ் மக்களின் உணர்வுகளைப்புரிந்துகொண்ட சிங்கள மக்களில், எழுத்தாளர்களிலொருவர். அண்மையில் வெளியான அவரது நாவலும் கூட அவரது வடக்குப் பயணத்தின்போது அவர் கேட்டு, அறிந்த , அனுபவங்களை மையமாக வைத்து எழுதப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் இன்று புதன் கிழமை வெளியான (ஜூன் 5, 2019) 'ரச' பத்திரிகையின் புதன் கிழமைக்கான பதிப்பில் 'எரியும் இதயம்' என்னும் தலைப்பில் யாழ் நூலக எரிப்பு பற்றி எழுதியுள்ளார். இக்கட்டுரை ஏரிக்கரை நிறுவனம் வெளியிடும் இப்பத்திரிகையின் புதன் கிழமைக்கான பதிப்பில் வாரம் தோறும் அவர் எழுதும் பத்திக்கான இவ்வாரக் கட்டுரையாகும்.

இக்கட்டுரையில் அவர் நூலகம் எரியுண்டதன் பின் ஊடகங்களில் வெளியான நூலகர் ரூபாவதி நடராஜா அவர்கள் நூலகப் பணியாளர்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் பற்றிக் குறிப்பிடுகையில் 'நூலகர் ரூபாவதி நடராஜாவின் வெறுமையான பார்வை என் இதயத்தை வேதனையால் எரிக்கின்றது' என்று குறிப்பிட்டுள்ளார். இப்பந்தியில் நூலக எரிப்பு பற்றிய எனது கருத்துகளையும் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையில் வெளியான எனது கருத்துகளில் நூலகம் எவ்வாறு என் மாணவப்பருவத்தில் உதவியது என்பது பற்றியும், அங்கு நான் வாசித்த பல் துறை நூல்கள், மொழிபெயர்ப்புகள் பற்றியும் குறிப்பிட்டதுடன் 'நூலகங்களே எனது ஆலயங்கள்' என்ற எனது கருத்தினையும் குறிப்பிட்டுள்ளார்.
 

மேற்படி கட்டுரையை அவர் முகநூலிலும் பதிவு செய்துள்ளார். அதனை வாசித்த சிங்கள மக்கள் பலர் அதனைப் பகிர்ந்துகொண்டுள்ளதுடன் , நூலக எரிப்புக்கான அவர்கள்தம் வருத்தத்தையும் எதிர்வினைகளில் பதிவு செய்துள்ளார்கள். 


No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்