Sunday, June 2, 2019

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஐந்து: கட்டடக்கலை & நகர அமைப்பு பற்றிய கட்டுரைகள் _37 - 45 )

37. நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் 'கெவின் லிஞ்ச்' இன் நகரொன்றின் பிம்பக்' கோட்பாடு பற்றிய புரிதலும்!

நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம் வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றனவோ அவ்விதமே நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களையும் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. நகர மாந்தரின் நகர் பற்றிய உளப்பதிவுகள் அவர்களது அந்நகரினுடான அனுபவங்கள். அதன் விளைவாக உருவான நினைவுகள், அந்நகரிலுள்ள கட்டடங்கள். முக்கியமான இடங்கள், அங்கு வாழும் ஏனைய மக்கள், அங்கு நிகழும் பலவேறு விதமான செயற்பாடுகள். நகரின் முக்கியமான அடையாளங்களாகத் திகழும் சின்னங்கள்,... ... என இவை போன்ற பல காரணிகளின் விளைவாக உருவாகுகின்றன. நகர அமைப்பு வல்லுநர்கள் நகர்களைப் புனர் நிர்மாணம் செயகையில் அல்லது புதியதொரு நகரமொன்றினை நிர்மாணித்திடும்போது அங்கு வாழும் மாந்தரின் மேற்படி மனப்பிம்பங்கள் அல்லது பதிவுகள் பற்றிய போதிய அறிவினைப் பெற்றிருப்பது அவர்களது பணிக்கு மிகவும் இன்றியமையாதது மட்டுமல்ல பயனுள்ளதுமாகும். இவ்விதமாக நகர மாந்தரின் அவர் வாழும் நகர் பற்றிய மனப்பிம்பங்களை மையமாக வைத்து அந்நகரினை அறிவதற்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முயனறவர்தான் பேராசிரியர் கெவின் லிஞ்ச் Professor Kevin Lynch).

நகரொன்றின் பெளதிக யதார்த்தத்திலிருந்து எவ்விதமான மனப்பிம்பங்களை அந்நகரத்து மாந்தர் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பது பற்றிய ஆய்வொன்றினை நகர மாந்தர்கள் பலருடனான நேர்காணல்கள் பலவற்றின் மூலம் கண்டறிந்த அவர் அவற்றின் பெறுபேறுகளை அடிப்படையாக வைத்து நகரின் பிம்பம்' (The Image Of the City) என்றொரு நல்லதொரு சிந்தைக்கு விருந்தளிக்கும், மேலும் அதனை விரிவடையவைக்கும் ஆய்வு நூலொன்றினை வெளியிட்டிருந்தார். மேற்படி அவரது ஆய்வானது நகர மாந்தரின் மேற்படி நகர் பற்றிய உளப்பதிவுகள் பற்றிய முக்கியமான பல நவீன கருதுகோள்களுக்கு அடிப்படையாக விளங்குகின்றது. மேலும் நகரொன்றின் உருவம் பற்றிய , அங்கு காணப்படும் கட்டடச் சூழல் அல்லது கட்டடக்கலை எவ்விதம் மேற்படி அந்நகர மாந்தரின் நகர் பற்றிய பிம்பத்திற்குக் காரணமாயிருக்கின்றது பற்றிய புரிதலுக்கு மிகவும் பங்களிப்புச் செய்துள்ளது என்று கூறினால் மிகையான கூற்றல்ல.
இவ்விதமான நகரத்து மாந்தரின் அந்நகர் அவர்களது மனங்களில் ஏற்படுத்திவிடும் மனப்பிம்பங்களை நிர்ணயிக்கும் முக்கிய ஆதாரப்பகுதிகளாக ஐந்து விடயங்களை பேராசிரியர் கெவின் லிஞ்ச் அவர்கள் தனது ஆய்வுகள் மூலம் இனங்கண்டார். அவையாவன:

1. நகரின் மாந்தரின் நடமாட்டத்திற்கு உதவும் பல்வகைப் பாதைகள் (Pathways)
2. நகரின் பல்வேறு தனமையினைப் பிரதிபலிக்கும் பிரதேசங்கள் அல்லது பகுதிகள் (Districs)
3. நகரின் பல்வேறு பகுதிகளைப் பிரிக்கும் ஓரங்கள் (Edges)
4. நகரின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் கட்டடங்கள் போன்ற நில அடையாளச் சின்னங்கள் (Lanadmarks)
5. நகரின் பல்வேறு செயற்பாடுகளின் மையப் புள்ளிகளாக விளங்கும் நகரின் பகுதிகள் ( Nodes)

நகர மாந்தரொருவரின் அந்நகர் பற்றிய அவரது மனப்பிம்பங்களை முக்கிய ஆதாரப்பகுதிகளாக விளங்குபவை மேலுள்ள ஐந்து பகுதிகளுமே என்பதைப் பேராசிரியர் லிஞ்சின் மேற்படி 'நகரின் பிம்பம' என்னும் ஆய்வு புலப்படுத்தும். இனி இன்னும் சிறிது விரிவாக மேற்படி ஐந்து ஆதாரப் பகுதிகள் பற்றியும் பார்ப்போம்.

1. பாதைகள் (Pathways)
 
நகரொன்றில் அந்நகரத்து மாந்தரின் நடமாட்டத்துக்குதவும் வகையில் பல்வேறு பாதைகள் பிரதான கடுகதிப் பாதைகளிலிருந்து, புகையிரதப் பாதைகள், கால்வாய்கள் தொடக்கம் குச்சொழுங்கை வரையிலெனப் பல்வேறு பாதைகள் காணப்படும். மேற்படி பேராசிரியர் லிஞ்சின் ஆய்வின்படி பாதைகள் நகர மாந்தரின் நகர் பற்றிய் பிம்பங்களை உருவாக்குவதில் முக்கியமான பங்கினை வகிப்பதை அறிய முடிந்தது. பல்வேறு காரணங்களுக்காக நகரத்து மாந்தர் மற்றும் அந்நகருக்கு வருகை தரும் பயணிகள் ஆகியோர் மேற்படி பாதைகளினூடு பயணிப்பர். அவ்விதமான பயணங்களின்போது மேற்படி பாதைகளினூடு பயணிக்கும் அனுபவமானது மேற்படி பயணிகளுக்கு, நகர மாந்தருக்குப்ப் பல்வேறு வகையிலான ம்னப்பதிவுகளை,மனக்கிளர்ச்சிகளை உருவாக்குகின்றன. இவையெல்லாம் சேர்ந்தே அவர்களது அந்நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குகின்றன. ( யாழ் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபொழுது மாலை நேரங்களில் துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கிக் கல்லுண்டாய் வெளியை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியினூடு செல்வதை இச்சமயத்தில் எண்ணிப் பார்க்கின்றேன். ஓட்டு மடத்தில் தொடங்கி காரைநகர் நோக்கிச் செல்லும் பிரதான பாதையது. ஆரம்பத்தில் முஸ்லீம் மக்களின் குடியிருப்பான பொம்மை வெளி தாண்டினால் அடுத்து விரிவது காக்கைதீவுக் கடற்புறம். மீன் சந்தையுடன் கூடிய முக்கியமான யாழ்நகரின் நெய்தல் நிலப்பகுதி அது. ஒரு புறம் ஆனைக்கோட்டை மறுபுறம் காக்கைதீவுக் கடற்பகுதி. இதனைத் தாண்டினால் விரிவது நவாலியின் புகழ்பெற்ற மண்மேடுகளுடன் கூடிய மருதநிலப் பகுதி. மேற்குப்புறம் புல்வெளியுடன் கூடிய கடல்சிறிது உள்வாங்கிய காக்கைதீவுக் கடற்பிரதேசம். மருதமும் நெய்தலும் இணையும் அற்புதம். அதனைத் தாண்டினால் கல்லுண்டாய் வெளியும் , உப்பளமும். மேலும் நீளும்பாதை வடக்கு அராலி, தெற்கு அராலியெனப் பிரிந்து மீண்டும் வட்டுக்கோட்டையில் இணைந்து ஒன்று காரைநகர் நோக்கியும் அடுத்தது சித்தன்கேணி நோக்கியும் செல்லும். வடக்கு அராலி/ தெற்கு அராலியெனப் பாதை பிரிவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற வழுக்கியாறு அராலிக் கடலுடன் கலப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள சிறிய பாலமொன்றைக் காணலாம். மேறபடி வழுக்கியாறு பற்றிய பிரபல ஈழத்து எழுத்தாளர் செங்கை ஆழியானின் சிரித்திரன் சஞ்சிகையில் வெளிவந்த 'நடந்தாய் வாழி வழுக்கியாறு' என்னும் பயணக்கட்டுரைத் தொடர் வயிறு குலுங்க வைக்கும் நல்லதொரு பயணத் தொடராக அப்பருவத்தில் எனக்குப் பட்டதும் நினைவுக்கு வருகிறது. மேற்படி பாதையானது என் இளம் பிராயத்திருப்புடன் பின்னிப் பிணைந்துள்ள பாதைகளிலொன்று. என் பால்யகாலம் வன்னி மண்ணில் கழிந்தததென்றால் அதன்பின்னான என் பதின்ம பருவம் யாழ் மண்ணிலும் அதன் சுற்றாடலிலும் கழிந்திருந்தது. அவ்வயதில் மேற்படி கல்லுண்டாய் வெளியினூடு காரைநகர் நோக்கி நீண்டிருக்கும் பாதையானது என் மனதிலேற்படுத்திய பதிவுகள் , பிம்பங்கள் பற்பல. அந்தியில் அவ்வழியே பயணித்தலோரினிய அனுபவம். ஆண்டின் பல்வேறு பருவங்களுக்கேற்ப அப்பயணத்தின் அனுபவங்களும் பலவகையின. அதிகாலையில் துவிச்சக்கர வண்டிகளில் நகர் நோக்கிப் படையெடுக்கும் தொழிலாளர்கள் அந்திசாயும் நேரங்களில் தத்தமது கிராமங்களை நோக்கி மீள் படையெடுப்பர். அதி காலைகளில் வழுக்கியாறு கடலுடன் கலக்குமிடத்தில் அமைந்துள்ள பாலத்தினடியில் மீனவர்கள் இறால் பிடித்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சில பருவங்களில் காக்கைதீவுக்கும், கல்லுண்டாய் உப்பளத்திற்குமிடையிலான பாதையின் ஓரங்களில் மீனவர்கள் பிடித்த கடலட்டைகளை அவித்துக் காயப்போட்டிருப்பார்கள். அப்பிராந்தியமெங்கும் கடலட்டைகளின் அவியும் மணமும், உலரும் மணமும் நிறைந்திருக்கும். கடலட்டைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் அப்பகுதி கடற்றொழிலாளர்களின் பங்கும் முக்கியமானது. காலை நேரங்களில் காக்கைதீவுக் கடற்கரையில் அமைந்திருந்த மீன்சந்தை ஒரே ஆரவாரமாக விளங்கும். கடற்பறவைகளால் நிறைந்திருக்கும். அந்திக் கருக்கிருளில் கட்டுமரங்களில் க்டலில் மீன்பிடிப்பதற்காகப் பயணத்தைத் தொடங்கியிருப்பர் கடற்றொழிலாளர்கள். தொலைவில் சற்றுமுன்னர்தான் கடலுக்குள் மூழ்கியிருந்த கதிரவனால் சிவந்து சிவந்து கிடந்த வானம் மேலும் சிவந்திருக்கும். இவ்விதமாக அப்பாதையானது என்னிடத்திலேற்படுத்திய மனப்பதிவுகள், பிம்பங்கள் அழியாத கோலங்களாக இன்றுமென் சிந்தையின் ஆழத்திலுள்ளனவென்றால் பாதைகள் எவ்விதம் நகர மாந்தரின் மனப்பிம்பங்களை உருவாக்குவதில் பங்கு வகிக்கின்றனவென்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்.)

2. பிரதேசங்கள் அல்லது பகுதிகள் (Districts)

நகரானது பலவேறு அம்சங்களுடன் கூடிய சுற்றுப்புறங்களையும் (Component neighbourhoods) அல்லது பிரதேசங்களையும் (Districts) உள்ளடக்கிக் காணப்படும். உதாரணமாக உள்நகர் (Downtown) , புறநகர் (uptown), அதன் மையப்பகுதி, வர்த்தக மையப் பகுதி, தொழிற்சாலைகளை உள்ளடக்கிய பகுதிகள், பல்கலைக்கழகப் பிரதேசங்கள் மற்றும் 'டொராண்டோ' போன்ற பல்சமூக மக்கள் வாழும் நகர்களில் அவ்வினங்கள் அதிகமாக செறிந்து வாழும் அல்லது வர்த்தகம் செய்யும் பிரதேசங்கள் எனப் பல்வேறு தனித்த அமசங்களைப் பிரதிபலிக்கும் பிரதேசங்களை அல்லது சுற்றுப்புறங்களைக் காணமுடியும். சில சமயங்களில் மேற்படிப் பிரதேசங்கள் தமக்கேயுரிய தனித்த அடையாளங்களுடன் ('டொராண்டோ'வின் நிதிமையமான உள்நகர்ப் பகுதி) விளங்கும். இன்னும் சில சமயங்களிலோ தனித்த சிறப்பியல்புகளற்று சிறப்பியல்புகளின் கலவையாகவும் (மான்ஹட்டனின் நடுநகர்ப் பிரதேசம் போன்று (midtown) விளங்குவதுண்டு. இவையெல்லாம் நகர மாந்தரொருவரின் அந்நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குவதில் முக்கியமான பங்களிப்பை நல்குகின்றனவெனலாம்.

3. ஓரங்கள் (Edges)
ஓரங்களை நகரின் பிரதேசங்களைப் பிரிக்கும் எல்லைகளாகக் குறிப்பிடலாம். இவை பாதைகளைப் போல் முக்கியமானவையாக இல்லாதபோதும் நகர் மாந்தரொருவரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வகிப்பவை. பெரும் வாவியினை உள்ளடக்கிய 'டொராண்டோ' போன்ற மாநகர்களைப் பொறுத்தவரையில் குளக்கரையானது நகரையும் நீரையும் பிரிக்குமோரெல்லையாக ஓரமாக விளங்குகின்றது. இவ்விதமே கடுகதிப் பாதைகளையும், மக்கள் வசிப்பிடங்களையும் பாதுகாப்பு, மற்றும் வாகன ஒலித்தொல்லை போன்றவற்றிலிருந்து பிரிப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள நீண்ட சுவர்களையும் ஓரங்களிலொன்றாகக் குறிப்பிடலாம். (சீனாவின் நீண்ட சுவரினயும் இங்கு நினைவு கூரலாம்). முதலாவதில் ஓரமானது நீரையும் நிலத்தையும் பிரிக்கும் வகையில் அமைந்திருந்தாலும், அநத ஓரமானது நிலத்திலிருந்து நீருக்கோ அல்லது நீரிலிருந்து நிலத்திற்கோ மாந்தரின் நடமாட்டத்தைத் தடுப்பதில்லை. ஆயினும் இரண்டாவது உதாரணத்தில் சுவரானது ஓரெல்லையாக விளங்கி மக்கள் அதனூடு ஊடறுத்துச் செல்வதைத் தடுக்கிறது. இன்னும் சில சமயங்களில் ஓரமொன்றினைக் கண்டறிவது கடினமானது. உதாரணமாக 'டொராண்டோ'வின் கிழக்கில் அமைந்திருக்கின்ற சீனந்கர்ப் பிரதேசமானது அதற்கணமையில் அமைந்துள்ள 'குட்டி இந்தியா' பிரதேசத்துடன் படிப்படியாக ஆடையொன்றின் இரு பகுதிகள் இணைவதைப் போல் இணைந்து கலந்து விடுவதைக் காணலாம்.

4. நில அடையாளச் சின்னங்கள் (Landmarks)
அடையாளச் சின்னங்களும் நகர் பற்றிய பிமபங்களை நகர மாந்தரிடையே உருவாக்குவதில் முக்கியபங்காற்றுகின்றன. இத்தகைய அடையாளச் சின்னங்கள் தனித்து, உயர்ந்து தொலைவிலிருந்தும் அந்நகரினைப் பிரதிநிதித்துவம் செய்யும் நியூயார்க்கின் 'எம்பயர் ஸ்டேட்' கட்டடம் அல்லது 9-11இல் அழிந்த இணைக் கோபுரங்களான 'உலக வர்த்தக மையக்' கட்டங்களைப்போன்று வான் முட்டும் கட்டடங்களாகவோ அல்லது 'டொராண்டோ'வின் புகழ்பெற்ற 'சி.என்' கோபுரம் (C.N.Tower) போன்ற கோபுரங்களாகவோ இருக்கலாம். தஞ்சையின் புகழ்பெற்ற தஞ்சைப்பெரிய கோயில் , பாரிஸின் சாயும் கோபுரம் மற்றும் குதுப்மினார் போன்ற கட்டடங்களையும் இவ்விதம் குறிப்பிடலாம். அல்லது குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு மட்டுமே புலப்படக்கூடிய பூங்காவிலுள்ள கட்டடமாகவோ அல்லது நீரூற்றாகவோ அல்லது சிலையாகவோ கூட இருக்கலாம். அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி, புகழ்பெற்ற அரண்மனைகள், ஆலயங்கள், தாதுகோபங்கள போன்ற கட்டடங்களை இதற்குதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

5. மையப்புள்ளிகள் ( Nodes)
இவையும் மேற்படி அடையாள சின்னங்கலைப் போன்று விளங்கினாலும் இவ்விதமான மையப் புள்ளிகள் வேறுபடுவது மற்றும் முக்கியத்துவம் பெறுவது அப்புள்ளிகளில் நடைபெறக்கூடிய செயற்பாடுகளிலிருந்துதான். நகரில் காணப்படும் பிரதானமான சதுக்கங்கள், பாதைகள் சந்திக்கும் சந்திகள் போன்றவற்றை இதற்குதாரணங்களாகக் குறிப்பிடலாம். நியூயார்க்கின் 'டைம்ஸ்' சதுக்கம் , 'டொராண்டோவின்' புதிய நகர மணடபமும் அதனுடன் கூடிய 'நேதன் பிலிப்' சதுக்கமும், மற்றும் புதிதாக அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட 'டன்டாஸ்' சதுக்கமும் அங்கு நடைபெறும் செயற்பாடுகள் காரணமாக நகரின் முக்கிய மையப்புள்ளிகளாக இருக்கும் அதே சமயம் முக்கியமான நில அடையாளச் சின்னங்களாகவும் விளங்குகின்றன. மேலும் 'டைம்ஸ்' சதுக்கம் அப்ப்குதியில் சிறப்பியல்பு காரணமாக அந்நகரின் முக்கியமான பிரதேசங்களிலொன்றாக (District) விளங்குவதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இவ்விதமாக மேற்படி ஐந்து ஆதாரப்பகுதிகளும் எவ்விதம் நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குகின்றன என்பதை ஆராயும் நகரின் விம்பம் பற்றிய பேராசிரியர் கெவின் லிஞ்சின் நகர அமைப்பு பற்றிய கோட்பாடானது நகர அமைப்புத் துறையின் முக்கியமானதொரு கோட்பாடுகளிலொன்றாக விளங்குகின்றது. நகரின் புனரமைப்புத் திட்டங்களில், அல்லது நிர்மாணத்திட்டங்களில் மேற்படி கோட்பாட்டின் பயன் மிகவும் முக்கியமானதே.

[இச்சமயத்தில் மொறட்டுவைப் ப்லகலைக் கழகத்தில் கட்டடக்கலை முடித்தபின்னர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அமைப்பு அதிகார சபை ஆகியவற்றில் பணியாற்றிய காலங்களில் கொழும்பு மாநகர், புதிய பாராளுமன்றம் போன்ற பல நில அமைப்பு (Landscape) , நகர் அமைப்புத் (Town Planning) திட்டங்களில் பணியாற்றிய நினைவுகள் மீளெழுகின்றன. அவற்றில் முக்கியமானதொன்று மேற்படி பேராசிரியர் லிஞ்சின் நகர் விம்பக் கோட்பாட்டின் அடிப்படையில் நகர் அமைப்பு வல்லுநரான டிக்சன், கட்டடக்கலை/ நகர் அமைப்பு வல்லுநரான சிவபாலன் (இவர் பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றியபோது மரணித்து விட்டார்) , கட்டடக்கலைஞரான வைரமுத்து அருட்செல்வன் ஆகியோருடன் இணைந்து மேற்கொண்ட கொழும்பு மாநகரின் பிம்பம் பற்றிய ஆய்வு. அது பலரின் பாராட்டுதல்களைப் பெற்றதும் நினைவுக்கு வருகின்றது. ஏற்கனவே பதிவுகளில் வெளியான இக்கட்டுரை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றது).

**************
38. வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்!

அத்தியாயம் ஒன்று : கட்டடங்களும், தொழில் மயப்படுத்தலும்.

வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! - வ.ந.கிரிதரன் -[-பதிவுகள் இணைய இதழின் அக்டோபர் 2008 , இதழ் 106இல் வெளியான இக்கட்டுரை இங்கு ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. இக்கட்டுரை ஏற்கனவே 'தாயகம் ' சஞ்சிகையிலும் வெளிவந்திருக்கிறது. -  பதிவுகள்] இலங்கை இந்தியா போன்ற வளர்முகநாடுகளில் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இந்த வீட்டுப் பிரச்சினை. இத்தகைய வளர்முகநாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள். இதனால் வீடுகளைக் கட்டினால் மட்டும் போதாது? குறைந்த செலவிலும் கட்ட வேண்டும். இதன் காரணமாகக் 'குறைந்த செலவு வீடுகளின்' (Low Cost Housing) தேவை வளர்முகநாடுகளைப் பொறுத்த வரையில் மிகவும் அவசியமாகின்றது. பல்வேறு வளர்முக, அபிவிருத்தியடைந்த நாடுகளிலெல்லாம் இத்தகைய குறைந்த செலவுக் குடிமனைகளைக் கட்டுவதெப்படி என்பது பற்றியெல்லாம் ஆய்வுகள், பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. வெற்றியடைந்திருக்கின்றன. மேலும் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுமிருக்கின்றன. இத்தகைய வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வீடமைப்புத் திட்டங்கள் மிகுந்த அவதானத்துடன் உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்களை அதிக அளவு பாவிக்கக்கூடியதாக, அதே சமயம் உருவாகக் கூடிய சேதங்களின் அளவைக் குறைக்கக் கூடியதாக, மேலும் கூடிய அளவு பயனைத் தரக்கூடியதாக, கட்டடம் கட்டுவதற்குரிய கால அளவைக் குறைக்கக் கூடியதாக இத்திட்டங்கள் அமைந்திருக்க வேண்டும். வீட்டைக் கட்டுவதுடன் மட்டும் பிரச்சினை தீர்ந்து போய்விடுவதில்லை. அவற்றில் வாழப்போகும் மக்களுக்கேற்றபடி வீடுகள் அமைந்திருக்க வேண்டும். இத்தகைய வீடமைப்புத் திட்டங்களை அமைக்கும்போது அவற்றில் வாழப்போகும் மக்களின் சமூக வாழ்க்கை முறை, அவர்களின் தேவைகள், மற்றும் வீடுகள் அமையவிருக்கின்ற பிரதேசங்களின் காலநிலை, அப்பகுதிகளில் கிடைக்கக்கூடிய மூலவளங்கள் என்பன பற்றியெல்லாம் கவனத்தில் கொண்டே அத்தகைய திட்டங்களை அமைக்க வேண்டும்.

 கட்டடங்களைத் தொழில் மயப்படுத்தல்....

இவ்விதமான குறைந்த செலவு வீடுகளை எவ்விதம் அமைக்கலாம்? வீடு கட்டுவதற்கான செலவை எவ்விதம் குறைக்கலாம்? வீடமைப்புச் செலவைப் பொறுத்தவரையில் மூலப்பொருட்செலவும் தொழிலாளருக்கான செலவும் முக்கியமானவை. கட்டடங்களைத் தொழில் மயப்படுத்துவதன் மூலம் (Industrialisation of Buildings) கட்டடப் பொருட்களுக்கு அல்லது பாகங்களுக்கு (மொத்தத்தில் கட்டடங்களுக்கு) குறிப்பிட்ட அளவு முறைகளை நிர்ணயித்துத் தரப்படுத்துவதன் மூலம் பெருந்தொகையாகவும் விரைவாகவும் கட்டடப்பொருட்களை உற்பத்தி செய்யக் கூடியதாகவிருக்கும். கட்டடங்களைக் கட்டுவதும் துரிதமாகவும் இலகுவானதாகவுமிருக்கும். இவ்விதம் கட்டடங்களைத் தொழில் மயப்படுத்துவதற்கு முன்னோடியாக இன்னுமொன்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அளவினை அடிப்படை அளவாக நிர்ணயம் செய்து கொண்டு (Module) இந்த அளவினை அடிப்படையாக வைத்துக் கட்டடப் பொருட்களைப் பாகங்களை உற்பத்தி செய்ய வேண்டும். வீடுகளை வடிவமைக்கும் போது கூட இத்தகைய அளவு முறையில் உருவாக்கப்பட்ட பாகங்களைப் பாவிக்கக்கூடியதாகத்தான் வடிவமைக்க வேண்டும். இதனை Modular Coordination என்பார்கள். இத்தகைய முறைகளில் வீடுகளை அமைக்கும் போது பெறக்கூடிய முக்கியமான நன்மைகளிலொன்று வீட்டிற்கு வீடு அளவு முறைகள் மாறுவதால் ஏற்படக் கூடிய சிக்கல்களைப் பற்றிக் கவலைப் படத்தேவையில்லை என்பதே. பெருந்தொகையாக உற்பத்தி செய்யப்படும் கட்டடப் பொருட்களை எல்லா வகையான வீடுகளுக்கும் பாவிக்கக்கூடியதாகவிருக்கும். இத்தகைய முறையில் வீட்டின் சுவர்கள், தரை, கூரை, மற்றும் ஜன்னல்கள், கதவுகளெல்லாம் மிக விரைவாகவும், தரமாகவும், குறைந்த செலவிலும் அமைக்கப்பட முடியும். இப்பாகங்கள் கட்டடங்களைக் கட்டுவதற்கு முன்பே உருவாக்கப்பட்டு பாதுகாத்து வைக்கவும் முடியும்.

இந்தியா, இங்கிலாந்து, போலந்து, நோர்வே போன்ற நாடுகளில் அடிப்படை அளவாக 10cm இனை அடிப்படை அளவாக வரையறுத்துள்ளார்கள். சுவர்களை எடுத்துக் கொண்டால் 190X90X90mm என்னும் அளவில் உருவாக்கப்பட்ட செங்கற்களை அல்லது 390x190x190 mm என்னும் அளவில் அமைக்கப்பட்ட சுவர்ப்பாகங்களைக் கொண்டு சுவர்களை அமைக்கலாம். இது போல் கதவுகள், ஜன்னல்களுக்குப் பின்வரும் அளவுகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன:

கதவுகள்:
உயரம்: 2000 mm
அகலம்: 700 mm, 800mm, 900mm

ஜன்னல்கள்:
உயரம்: 400mm, 800mm,1200mm,1600mm
அகலம்: 400mm, 800mm,1200mm, 1600mm

இவ்வாறே கூரை, தரை போன்ற பாகங்களையெல்லாம் இலகுவாகவும், விரைவாகவும், குறைந்த செலவிலும் பயன்பாடு மிக்கதாகவும் உருவாக்கிக் கொள்ளலாம்.

அத்தியாயம் இரண்டு: பாரம்பரியக் கட்டடக்கலை

வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! - வ.ந.கிரிதரன் -வளர்முக நாடுகளைப் பொறுத்த வரையில் கட்டடங்களைத் தொழில்மயப்படுத்துவதாலேற்படும் நன்மைகள் பற்றியும், இவ்விதம் தொழில் மயப்படுத்துவது எவ்விதம் வீட்டுப் பிரச்சினையைக் குறைப்பதற்கு உதவ முடியுமென்பது பற்றியும் பார்த்தோம். இனி கட்டட மூலப்பொருட்களையும், வடிவமைப்பையும் (Design) எவ்விதம் இவ்வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில் கையாளலாம் என்பது பற்றிப் பார்ப்போம். முதலில் கட்டட மூலப்பொருட்களைப் பற்றிப் பார்ப்போம்.

வீடு கட்டுவதற்கான செலவில் 60%ற்கும் அதிகமான பங்கை இம்மூலப்பொருட்களே எடுப்பதால், குறைந்த செலவு வீடுகளைக் கட்டும்போது இம்மூலப் பொருட்களைத் தகுந்த முறையில், குறைத்த செலவில் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயவேண்டியதன் தேவை தவிர்க்க முடியாததே. வீட்டிற்கான மூலப்பொருட் செலவுகளை எவ்விதம் குறைக்கலாம்? இதற்கான விடையின் ஒரு பகுதியினைப் பாரம்பரியக் கட்டடக்கலை (Traditional Architecure) எமக்குச் சுட்டிக் காட்டுகின்றது.

பாரம்பரியக் கட்டடக்கலை:

எமக்கு நன்கு பரிச்சயமான யாழ்ப்பாணத்தையே எடுத்துக் கொண்டால்... அங்கு வீடுகள் எவ்விதம் கட்டப்பட்டு வந்துள்ளன என்பதை ஆராய்ந்து பாருங்கள். பனையும் தென்னையும் ஒரு வீட்டின் அமைப்பில் எவ்விதம் ஆதிக்கம்ச் செலுத்துகின்றன என்பதை உடனே புரிந்து கொள்வீர்கள். வீட்டின் கூரைகள், உத்தரம் என்று பனை மரம் பாவிக்கப்படுகின்றது. பனையோலை , தென்னோலை கொண்டு உருவாக்கப்பட்ட கிடுகுகளால் வேயப்படுகின்றன. வீட்டு வளவின் வேலிகள் கிடுகுகளால் அமைக்கப்படுகின்றன. மண் சுவர்கள், மண் தரை என்று மண் பெரிதும் பாவிக்கப்பட்டு வந்துள்ளதையும் காண முடிகிறது. வீடுகள் கட்டும் போது மரம் அதிகம் கிடைக்கும் பகுதிகளில் மரச்சட்டங்கள் கொண்டு வீடுகளை அமைக்கின்றார்கள். உதாரணமாகத் தென்னிலங்கையின் பாரம்பரியக் கட்டடக்கலை இதனைத் தான் எமக்குப் புலபப்டுத்துகின்றது. அங்கு பெருமளவில் கிடைக்கும் மரங்களை வெட்டி, மரச்சட்டங்களை (Timber Frames) உருவாக்குகின்றார்கள். இவ்விதம் குறுக்கும் நெடுக்குமாகச் சிறு சிறு பிரிவுகளாக அமையப்படும் மேற்படி சட்டங்களில் மண்ணைக் குழைத்து நிரப்புவதன் மூலம் வீட்டுச் சுவர்களை அமைக்கின்றார்கள்.இத்தகைய முறையினை ஆங்கிலத்தில் Wattle and Daub என அழைப்பார்கள். இத்தகைய பாரம்பரியக் கட்டடக் கலை முறையில் வீடுகளை அமைக்கும் முறையிலிருந்து நாம் முக்கியமாக் அறிந்து கொள்வதென்ன? நமது முன்னோர்கள் வீடுகளைக் கட்டும் போது அவர்கள் தாம் வாழ்ந்த பகுதிகளிலிருந்து கிடைக்கக் கூடிய மூலப்பொருட்களைக் மிக அதிக அளவில் பாவித்தார்கள் என்பதைத் தான் அறிகின்றோம். இது எம் முன்னோர்களுக்கு மட்டுமல்ல உலகின் வேறு பகுதிகளில் வாழ்ந்த வாழும் மக்களுக்கும் பொருந்தும். பாரம்பரியக் கட்டடக்கலை உலகின் எப்பகுதியினைச் சேர்ந்ததாகவிருந்தாலும் பொதுவாக மேற்படி உண்மையினையே காட்டி நிற்கிறது. வளர்முக நாடுகளின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்படி உண்மை கைகொடுக்கிறது. வீடுகள் அமையவிருக்கும் பகுதிகளில் அதிக அளவில் காணப்படும் மூலப்பொருட்களை அதிக அளவில் பாவிக்க நாம் முயல வேண்டும். வீடுகளுக்கான மூலப் பொருட்செலவின் பெரும் பகுதியினை இவ்விதம் பாவிப்பதன் மூலம் குறைத்துக் கொள்ளலாம். உள்ளூர் மூலப்பொருட்களைப் பாவிக்க வேண்டுமென்பதற்காக நம் முன்னோர்கள் பாவித்த மாதிரியே நாமும் பாவிக்க வேண்டுமென்பதில்லை. நவீன விஞ்ஞானத் தொழில் நுட்பங்களைத் தகுந்த முறையில் பாவிப்பதன் மூலம் பெருமளவில் கிடைக்கக் கூடிய உள்ளூர் மூலப்பொருட்களின் தரம் (Quality), உறுதி (Strength), நீண்டகாலப் பயன்பாட்டுத் தன்மை (Durability) ஆகியவற்றையெல்லாம் அதிகரித்துப் பாவிக்கலாம். இது பற்றிப் பல்வேறு வகையான ஆய்வுகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு வகையான தொழில் நுட்பங்கள் ஏற்கனவே நடைபெற்ற இத்தகைய ஆய்வுகள் மூலம் நடைமுறையில் செயற்படுத்தப்பட்டும் வருகின்றன.

பாரம்பரிய மூலப்பொருட்கள்:

பாரம்பரிய மூலப்பொருட்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம். மண், ஓலைகளிலான கிடுகு, கல், மரம், செங்கற்கள், சுட்ட களிமண்ணாலான ஓடுகள், சுண்ணாம்பு, களிமண்..இவ்விதமாகக் கூறிக்கொண்டே செல்லலாம். முதலில் மண்ணையும் கிடுகையும் எவ்விதம் தரமுயர்த்தலாமென்பது பற்றிப் பார்போம். மண்ணும் கிடுகும் நீண்ட காலப்பயன்பாடு குறைவான பொருட்கள். வளர்முகநாடுகளின் பொருளாதார நிலை காரணமாக இவற்ரின் பாவனை ஒழிந்து போகப் போவதில்லை. அரசுகள் வீடமைப்புத் திட்டங்களை அமுலாக்கும் அதே சமயம் மக்களோ மண்ணும் கிடுகுகளும் கொண்ட வீடுகளை அமைத்துக் கொண்டுதான் வருகின்றார்கள். அமைத்துக் கொண்டுதானிருக்கப் போகின்றார்கள். எனவே இவற்றின் தரத்தை உயர்த்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக மண் சுவர்களின் நீர் எதிர்ப்புத் தன்மையை (Water Proof) மண்ணெண்ணெய், அஸ்பால்ட் போன்றவற்றால் உருவான கலவையைத் தெளிப்பதன் மூலம் அதிகரிக்கலாம். மண்ணின் உறுதியை சீமெந்து போன்றவற்றை மண்ணுடன் கலந்து உறுதியாக்குவதன் மூலம் அதிகரிக்கலாம். மேலும் கிடுகுகளின் நெருப்பெதிர்க்கும் தன்மையினை கிடுகுகளை அமோனியம் பொஸ்பேட் உரத்தால் உருவான கரைசலிற்குள் தோய்த்தெடுப்பதன் மூலம் அதிகரித்துக் கொள்ளலாம். இந்தியா போன்ற நாடுகள் சிலவற்றில் ஏற்கனவே இத்தகைய முறைகள் அமுலிலுள்ளன. வள்ர்முகநாடுகள் பலவற்றில் கிடுகுகளைப் பின்னுவதென்பது இன்னும் கைத்தொழிலாகத் தானிருந்து வருகிறது. இந்தோனேசியாவில் மூங்கிலான பாய்களைப் பின்னுவதற்கு எளிய இயந்திரங்களைப் பாவிக்கின்றார்களென்பதும் குறிப்பிடத் தக்கது.

அத்தியாயம் மூன்று: மண்ணும் மனிதரும்

வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! - வ.ந.கிரிதரன் -மண் வீடென்றதும் ஒருவித இளக்காரம் ஏற்பட்டு விடுகிறது. உண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் பாவித்து வரும் கட்டடப் பொருட்களில் முக்கியமானதும் முதன்மையானதும் இந்த மண்தான். மனித குல நாகரிக வளர்ச்சியுடன் போட்டி போட்டுக் கொண்டு தப்பிப் பிழைத்து விட்ட சிறப்பு மிக்க கட்டடப் பொருள்தான் இந்த மண். இன்றும் கூட மனிதர்களால் அதன் இயல்பான நிலையிலும், உருமாறிய நிலையில் செங்கற்களாகவும் (Bricks) பாவிக்கப்பட்டு வரும் பாக்கியத்திற்குரியது இந்த மண். மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட செங்கற்கள் மனிதர்களால் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே பாவிக்கபப்ட்டதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த மக்களின் ஆதி வரலாறு இத்தகைய செங்கற்களின் பாவனையைப் பறை
சாற்றுகின்றது.

மண்ணிலிருந்து செங்கற்களை உருவாக்கும்போது இரு வகைகளில் உருவாக்குகின்றார்கள். சூளைகளில் வைத்து சுடப்பட்டு உருவாக்கப்படும் செங்கற்கள் (Burnt Bricks), சூரிய வெப்பத்தில் காய விடப்பட்டு உருவாக்கப்படும் செங்கற்கள் என அவை இருவகைகளில் உருவாக்கப்படுகின்றன. இவ்விதம் சூளைகளின் உதவியில்லாமல் சூரிய வெப்பத்தில் காய வைக்கப்பட்டு உருவாக்கப்படும் செங்கற்களை ஆங்கிலத்தில் Adobe Blocks என்பார்கள். இத்தகைய செங்கற்கள் 25 தொன் சதுர அடி தாங்கும் சக்தி மிக்கவை என்பதை ஆய்வுகள் மூலம் நிலைநாட்டியுள்ளார்கள். அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் 33 தொன்/சதுர அடி தாங்கும் சக்தி மிக்கவை என்பதை நிலைநாட்டியுள்ளன. உண்மையில் இத்தகைய செங்கல் கட்டட அமைப்பு கூரைகள் போன்றவற்றைத் தாங்கும் சக்தி மிக்கவை என்பதையே ஆய்வுகள் காட்டி நிற்கின்றன. அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகள் பல கூட மண்ணாலான கட்டடங்களை அமைப்பதில் பின் தங்கி நிற்கவில்லை. முதலாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார மந்தச் சூழ்நிலை நிலவிய காலகட்டத்தில் இந்நாட்டு அரசாங்கங்களால் இத்தகைய மண்ணாலான வீடுகள் (Earth Homes) பெருமளவில் கட்டப்பட்டன. முன்பே கூறியது போல் இவ்விதம் மண்ணை வீடுகளை அமைக்கப் பாவிக்கும் பொழுது அதன் உறுதியை அதிகரிப்பதற்காக சீமெந்து , அஸ்பால்ட் போன்ற ஏனைய கட்டடப் பொருட்களைச் சேர்ப்பது வழக்கம். அஸ்பால்ட் என்றதும் தான் ஞாபகம் வருகிறது. பண்டைய 'பாபிலோனியர்கள்'  (Babylonians) மண் சுவர்களின் காலநிலைக்கெதிரான தனமையை அதிகரிப்பதற்காக அஸ்பால்ட்டுடன் மண்ணைக் கலந்து பாவித்திருக்கின்றார்கள். பாவிக்கப்படும் மண்ணின் தன்மைக்கேற்ப, அதனை உறுதிப்படுத்தும் ஊக்கியின் அளவும் மாறுபடும். உதாரணமாக அதிகளவு மணலைக் கொண்டுள்ள மண்ணுக்குக் குறைந்த அளவு ஊக்கியே தேவைப்படும். இத்தகைய செங்கற்களை உலோக அல்லது மர அச்சுகளைக் கொண்டு உருவாக்கலாம். இவ்விதம் உருவாக்கப்படும் செங்கற்கள் சுமார் ஒருமாதம் வரையில் சூரிய ஒளியில் காய வைக்கப்பட வேண்டும். காய்ந்த கற்களில் வெடிப்புகள் ஏதாவது ஏற்பட்டுள்ளதா என்பதை அவதானிக்க வேண்டும். செங்கல் உருவாக்கப்பட்ட மண்ணில் களிமண்ணின் அளவு அதிகமாக இருந்தால் வெடிப்பு ஏற்படலாம். மணல் அதிகமாகவிருந்தால் துண்டுகளாகப் பொடிந்து விடும். எனவே கலவை சரியாகவிருக்க வேண்டும். இது தவிர இன்னுமொரு முறையிலும் மண் பாவிக்கப்படுகிறது. செங்கற்கள் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே மனித சமுதாயத்திற்கு அறிமுகமான முறைதான் அது. மண்ணைக் குழைத்துப் பூசி உருவாக்கும் முறைதான் அது. ஆங்கிலத்தில் Rammed Earth என்பார்கள்.

மண்ணைப் பாவித்து மனைகளை அமைக்கும் போது இன்னும் சில விடயங்களையும் கவனிக்க வேண்டும். மேலும் மண் சுவர் முற்றாகக் காய்ந்த பின்னரே அதன் மேல் சுண்ணாம்புப் பூச்சு போன்ற பூச்சுக்களைப் பூச வேண்டும். நன்கு காய்வதற்கு முன்னர் பூசினால் அது பூச்சைப் பழுதாக்குவதோடு மட்டுமல்ல சுவரின் பயன்பாட்டுத் தன்மையினையும் ஊறுபடுத்தி விடும். இவ்விதம் உருவாக்கப்படும் மண் வீடுகளை சுண்ணாம்பு அல்லது சீமெந்துச் சாந்து கொண்டு பூசி மெழுகி விட்டால், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது மண் வீடென்பதே தெரியப் போவதில்லை. இலங்கையின் தென்பகுதிக் கிராமங்களில் முன்பே குறிப்பிட்டது போல் மரமும் மண்ணும் சேர்த்து Wattle And Daub முறையில் அமைக்கப்பட்டு, இவ்விதம் சுண்ணாம்புச் சாந்து (Lime Plaster) பூசப்பட்ட வீடுகளைக் கண்டிருக்கின்றேன். மண் வீடென்பதே தெரியாது. எழுபது எண்பது வருடங்களைக் கடந்து உறுதியாக நிற்கும் இத்தகைய வீடுகள் பலவற்றை அப்பகுதிகளில் காணலாம்.

புயல், காற்று, பூமி நடுக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படும் பகுதிகளில் இத்தகைய 'அடொபி' வகைச் செங்கற்களைக் கொண்டு வீடுகளை அமைக்கும் போது மிகக் கவனம் எடுக்கப்பட வேண்டும். வீடுகளின் வடிவமைப்பு நெருக்கமாகக் கச்சிதமாக (Compact) இருக்க வேண்டும். அத்திவாரம் உருக்கினால் உறுதிப்படுத்தப்பட்ட காங்ரீட்டினால் (Reinforced Concrete) உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய செங்கற்களை வைத்துச் சுவர் அமைக்கும் போது இவற்றை இணைத்து வைப்பதற்காகப் பூசபப்டும் 'காரை'யுடன் (Mortar) உருக்குக் கம்பிகளை அல்லது உருக்கு வலைகளையும் சேர்த்துச் சுவர்களை அமைத்தால் அவை உறுதியாக இருக்கும். இவ்விதம் அமைப்பதன் மூலம் சுவர் இறுக்கமானதாகவிருக்கும். மேலும் காலநிலை மாற்றங்களால் ஏற்படவிருக்கும் சுருக்கம் (Shrinkage) வெடிப்புகள் ஆகியவற்றையும் தவிர்த்துக் கொள்ளலாம். கூரையைத் தாங்குவதற்காகச் சுவரின் மேல் அமைக்கப்படும் உத்தரங்களைக் கூட (Beams) இத்தகைய உருக்கினால் உறுதியாக்கபட்ட 'காங்ரீட்'டைப் பாவித்து உருவாக்கலாம்.

களிமண் (50%ற்குக் குறையாமல்) மணல் (30%ற்குக் குறையாமல்) கலந்து உருவாக்கப்படும் இத்தகைய 'அடொபி' வகைச் செங்கற்கள் உருவாக்கப்படும் நிலையில் 30% வரையில் ஈரத்தனமையைக் (Moisture Content) கொண்டிருக்கும். உசிதமான ஈரத்தன்மை 15%இலிருந்து 18% வரையிலாகும். வைக்கோல், புல் போன்றவற்றை மண்னுடன் கலந்து இத்தகைய செங்கற்கள் ஆக்கப்பட்ட வரலாறுண்டு. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளில் காணப்படும் 120 வருடங்களுக்கும் அதிகமான பழமை வாய்ந்த வீடுகளில் இத்தகைய முறையில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் பாவிக்கப்பட்டுள்ளன. இவ்விதம் வைக்கோலைக் குறிப்பிட்ட அளவுகளாகக் கத்தரித்து (4" இலிருந்து 8" வரையில்) சேர்த்து செங்கற்களை உருவாக்கும் போது அவற்றில் வெடிப்புகள் ஏற்படுவதற்கான நிலைமைகள் உருவாவது குறைக்கப்படுகின்றன. இவ்விதம் வைக்கோல் அல்லது காய்ந்த புல்லைச் (Dried Grass) சேர்த்துச் செங்கற்களை ஆக்கும் போது அவற்றிலிருக்கும் புற்கள் அழுகிப் போய் விடாதா என நீங்கள் கேட்கலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளில் காணப்படும் 120 வருடங்களுக்கும் அதிகமான பழமையான வீடுகளில் காணப்படும் இத்தகைய செங்கற்களில் காணப்படும் காய்ந்த புற்கள் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது மேலுள்ள கேள்விக்குப் பதிலாக அமைகின்றது.

இவ்விதம் 'அடொபி' வகைச் செங்கற்களைக் கைத்தொழிலாகச் செய்வது தேவையற்ற நேர விரயத்தையும், மனித உழைப்பையும் உருவாக்கும். இதனைத் தவிர்ப்பதற்கு எளிய வகையில் உருவாக்கப்படும் இயந்திரங்களைப் பாவிக்கலாம். இந்தியாவுட்பட வளர்முக, அபிவிருத்தியடைந்த நாடுகளிலெல்லாம் இத்தகைய இயந்திரங்களைப் பாவிக்கின்றார்கள். இவற்றில் பெரும்பாலானவை மணிக்கு 150இலிருந்து 500 வரையில் செங்கற்களை உருவாக்க வல்லவை. இந்தியாவுட்படப் பெரும்பாலான நாடுகளில் பாவிக்கப்படும் இத்தகைய இயந்திரங்களில் குறிப்பிடத்தக்கவை 'எல்சன் புளக் மாஸ்டர்' (Elson Block Master), 'சின்வராம்' (Cinvaram) ஆகியவையே. இவற்றில் 'சின்வராம்' வகை 'எல்சன் புளக் மாஸ்டரி'ன் நவீன மயப்படுத்தப்பட்ட இன்னுமொரு வடிவமே. தமிழகத்தில் காரைக் குடியில் அமைந்திருக்கும் அழகப்பா செட்டியார் பொறியியற் கல்லூரியும் இத்தகைய வகைச் செங்கற்களை உருவாக்கும் இயந்திரமொன்றினை
உருவாக்கியுள்ளது. இவற்றின் தாங்கும் சக்தி 17 - 32 kg/cm.cm)

சூரிய வெப்பத்தில் காயவிடப்பட்டு உருவாக்கப்படும் 'அடொபி' (Adobe) செங்கற்கள் எவ்விதம் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க உதவமுடியுமென்பதைப் பார்த்தோம். இம்முறை மண்ணைக் குழைத்து மனைகளை அமைக்கும் முறை (Rammed Earth Construction) எவ்விதம் உதவக் கூடுமென்பது பற்றிப் பார்ப்போம். செங்கற்களின் பாவனைக்கு முன்பிருந்தே மனிதர்களால் பாவிக்கப்பட்டு வரும் முறை என்ற பெருமை இதற்குண்டு. இத்தகைய முறையில் மனைகளை அமைப்பது பற்றியும் பல்வேறு வகையான ஆய்வுகள் நடைபெற்றுள்ளனை. நூல்கள் எழுதப்பட்டுள்ளன. 'ரால்வ் பட்டி' (Ralf Patty) என்பவர் 'Age Strength Relationship for Rammed Earth'  என்றொரு நூலை எழுதியுள்ளார். இந்நூலில் இவர் இத்தகைய முறையில் அமைக்கபப்டும் சுவர்களின் உறுதி, அரிப்பெதிர்க்கும் தனமை என்பன காலம் செல்லச் செல்ல அதிகரிக்கும் என்பதனை விளக்கியுள்ளார். இத்தகைய முறையில் அமைக்கப்படும் வீடுகளை எவ்விதம் மிகக் குறைந்த செலவில் அமைக்கலாமென்பதை அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியரும் பொறியியலாளருமான 'ஜோன் கிர்காம்' (John Kirham) என்பவர் பரீட்சார்த்த முயற்சியாக அமைத்த வீடொன்றின் மூலம் உலகிற்கெடுத்துக் காட்டியுள்ளார். இந்த வீடு அமெரிக்காவின் 'ஓகலகோமா' (Oklakoma) மாநிலத்தில் அமைந்துள்ள 'ஸ்டில் வாட்டர்' (Still Water) என்னுமிடத்தில் அமைக்கபப்ட்டுள்ளது. சுவர், தரை, கூரை எல்லாமே குழைத்த மண்ணைக் கொண்டு $887.80 டாலர்கள் செலவில், சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்ட இந்த வீடு போதிய பயிற்சியற்ற சாதாரணத் தொழிலாளர்களாலேயே (Unskilled Labourers) உருவாக்கப்பட்டதென்பதும் குறிப்பிடத் தக்கது. மண் கூரையினை உறுதிப்படுத்துவதற்காக அதனுடன் 1-5/8'' (40/8") அங்குலத் தடிப்பில் காங்ரீட் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

உறுதிப்படுத்தும் ஊக்கிகள்....

இத்தகைய முறையில் மனைகள் அமைக்கபப்டும் பொழுது நிச்சயமாக மண் உறுதியாக்கப்பட வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்டது போல் பாவிக்கப்படும் மண்ணின் தன்மைக்கேற்ப அதனை உறுதியாக்கப் பாவிக்கப்படும் ஊக்கியும்(Stabilizing Agents or Stabilizing Materials) மாறுபடும். உதாரணமாக மணல் கலந்த மண்ணப் (Sandy Soil) பொறுத்தவரையில் சீமெந்து நல்லதொரு ஊக்கி. களிமண்ணைப் பொறுத்தவரையில் சுண்ணாம்பு நல்லதொரு ஊக்கி. நிலக்கரிச் சாம்பல் (Fly Ash) , மரச் சாம்பல், அஸ்பால்ட் என்று பல்வேறு வகையான ஊக்கிகள் பாவனையிலுள்ளன. வளர்முக நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்தத் துறையில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக வீடுகள் அமையவுள்ள பகுதியில் காணப்படும் மண்ணை வேறெவ்விதமான வழிகளில் உறுதிப்படுத்தலாமென்பது பற்றி ஆய்வுகள் மேலும் அவர்களால் தொடரப்பட வேண்டும். சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைக் கழிவுப் பொருட்களிலிருந்து இத்தகைய ஊக்கிகளை உருவாக்க முடியுமா என்பது பற்றித் தங்களது கவனத்தை அவர்கள் திருப்ப வேண்டும். காகித, சீனித் தொழிற்சாலைகளிலிருந்து உருவாக்கப்படும் கழிவுப் பொருட்களிலிருந்து இவ்விதமான ஊக்கிகளைத் தயாரிக்கலாமென்பதை ஆய்வுகள்
ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளன.

'வடிவங்கள்' (Forms) தரும் சிக்கல்கள்...

'காங்ரீட்' கட்டங்கள் கட்டும் பொழுது சுவர்கள், தரைகள் போன்றவர்ரை அமைக்குப்போது முதலில் மரங்கள் அல்லது உலோகத்தாலான 'வடிவங்களை' அமைப்பார்கள். இதனை ஆங்கிலத்தில் Form Work என்பார்கள். வளர்முக நாடுகளைப் பொறுத்தவரையில் சாதாரண வழக்கத்திலுள்ள 'வடிவங்கள்' மண் வீடுகளை அமைப்பதற்கு உகந்தவையல்ல. அவை பாரமானவை. நேராக ஒழுங்காக அமைப்பதில் சிரமங்களைத் தரக் கூடியவை. குறைந்த செலவு மண் வீடுகளை அமைக்கும் பொழுது அவற்றிற்குகந்த இலகுவான 'வடிவங்களை'ப் பாவிக்க வேண்டும். இத்தகைய 'வடிவங்களைப்' பற்றிய ஆய்வுகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளன. அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:

டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்த விவசாய பொறி நுட்பக் கல்லூரியினால் Texas Agricultural and Mechanical College பாரங் குறைந்த ஒட்டுப் பலகையைக் (Ply Wood) கொண்டு உருவாக்கப் பட்ட வடிவங்கள். பொநுநலவாய நாடுகளின் கட்டட ஆய்வுப் பிரிவினரின் ஆஸ்திரேலியக் கிளையினரால் உருவாக்கப் பட்ட உருளைகளையும், மரக் கெளவிகளையும் (Wooden Clamps) உள்ளடக்கிய 'வடிவங்கள்'. இந்த 'வடிவங்களால்' எற்பட நன்மைகளில் முக்கியமானவை காலவிரயத்தைக் குறைத்தமை, தொழிலாளர்களின் எண்ணிக்கையினைக் குறைத்தமை என்பவையே. அமெரிக்காவைச் சேர்ந்த மறைந்த 'கட்டட ஒப்பந்தக்கார்களான' 'டான் மக்டீல் (Dan Magdiel) மற்றும் ஜோன் மக்டீல் (John Magdiel) ஆகியோரால் உருவாக்கப் பட்ட உலோகத்திலான வடிவங்கள் (Metal Forms) இவர்களது 'உலோக வடிவங்களால்'  மண் சுவர்களைத் துரிதமாகவும், நேர்த்தியாகவும் அமைக்கலாம் என்பதை எடுத்துக் காட்டின. வழக்கமாகச் சிரமம் தரும் மூலைப்(Corner) பகுதியினைக் கூட இலகுவாக அமைக்கலாம் என்பதையும் இவை எடுத்துக் காட்டின. இத்தகைய 'வடிவங்களைப்' பற்றிய ஆய்வுகள் வளர்முகநாடுகளில் முன்னெடுக்கப்பட வேண்டும்...

அழுத்திகள் பற்றி.(Tampers).....

மண்ணைக் குழைத்து வீடுகளை அமைக்கும்போது, உதாரணமாகச் சுவரொன்றை அமைப்பதாக வைத்துக் கொண்டால், முதலில் சுவர் அமையவுள்ள பகுதியில் 'வடிவங்களை' (Forms) அமைக்க வேண்டும். அதனுள் குழைத்த ஈரப்பற்றுள்ள மண்ணைக் கொட்ட வேண்டும். இவ்விதம் கொட்டப்பட்ட மண்ணை அழுத்திகளைக் கொண்டு நன்கு குத்தி, இறுக்க வேண்டும். இவ்விதம் குத்தப்படும் குத்தின் தன்மைக்கேற்ப மண்சுவரின் உறுதியும் வேறுபடும் (பொதுவாக 93 இலிருந்து 393 இறாத்தல்கள்/சதுர அங்குலம் ). அழுத்தியின் பாரம் கூடக் கூட மண் இறுகிக் கெட்டியாவதும் விரைவாகின்றது. காலவிரயம், உழைப்பு , விரயம் ஆகியவற்றைக் குறைப்பதற்காக பல்வேறு வகையான அழுத்திகள் பற்றிய ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றின் விளைவுகளில் முக்கியமானதொன்று வருமாறு: காற்றைக் கொண்டு இயக்கப்படும் அழுத்தி (Air Tamper). இதன் மூலம் காலவிரயம் , தொழில் விரயம் என்பவற்றை அரைவாசியாகக் குறைக்கலாம். கைகளால் இயக்கப்படும் அழுத்திகள் தொடக்கம் மேற்கூறப்பட்ட வகியிலான அழுத்திகள் வரை பல்வேறுவிதமான அழுத்திகள் பாவனையிலுள்ளன.

இவ்விதமாக மண்ணைக் குழைத்து வீடுகளை அமைப்பதென்பது கேட்பதற்கு இலகுவாகயிருந்தபோதும் உண்மையில் குறைந்தளவு செலவில் வீடுகளை அமைக்கும்போது மேல் குறிப்பிட்டதுபோல் பல்வேறுவகைகளில் முயலவேண்டும். குறைந்த செலவில் அதேசமயம் உறுதி, நீண்டகால பயன்பாட்டுத் தன்மை என்பனவற்றையெல்லாம் அதிகரிக்கும் வகையில் முயற்சிகள் செய்ய வேண்டும். இதுவரை பாரம்பர்யக் கட்டடப்பொருட்களிலொன்றான மண்ணைப் பற்றிப் பார்த்தோம். இனி வேறு பொருட்கள் பற்றிப் பார்ப்போம்.

மண்ணைக் குழைத்து மனைகளை அமைக்கும்போது இவ்விதம் அமைக்கப்பட்ட மனைகளை எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று...அவற்றின் நீரெதிர்க்கும் தன்மையினை (Waterproofing) அதிகரிப்பது பற்றியது. இது பற்றியும் பல்வேறு வகையான ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் இவ்விதம் அமைக்கப்பட்ட வீடுகளின் சுவர்களை 1:3 என்ற விகிதத்தில் கலந்துருவாக்கப்பட்ட சீமெந்து:நீர்க் கலவையைப் பூசி, அதன் மேல் 1:15 என்ற விகிதத்தில் சீமெந்து:மணல் கலந்துருவான கலவையைப் பூசியபொழுது அவை நன்கு செயல்பட்டன. ரொடிசியாவின் தென்பகுதியில் இவ்விதம் அமைக்கப்படும் வீடுகளின் சுவர்களின் மேல் முதலில் பிட்டுமன் (Bituman) கலவையைத் தெளிக்கிறார்கள். அதன்மேல் மணலைத் தூவி பின்பு அதன்மேல் சீமெந்து நீர்க்கலவையால் பூசுகின்றார்கள். ஆபிரிக்காவின் சில பகுதிகளில் இவ்விதமான மண் வீடுகளின் சுவர்களை 1:12 என்ற விகிதத்தில் சீமெந்தும் மணலும் கலந்துருவாக்கிய கலவையில் 5% இலிருந்து 10% வரையில் சுண்ணாம்பையும் கலந்து பெறப்படும் சாந்தால் (Plaster) பூசி மெழுகுவது பயனைத் தருவதை அறிந்திருக்கின்றார்கள். அஸ்பால்ட்டை அடியாகக் கொண்ட (Asphalt-based) அலுமினியம் வர்ணத்தைப் (Paint) பாவிக்கும் போது மண் சுவருடனான பிணைப்பு நன்கு உறுதியாக இருப்பதைக் கண்டு பிடித்துள்ளார்கள். இது தவிர ஆளி விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் (Linseed oil) இவ்விதமான மண் சுவர்களை நன்கு பாதுகாப்பதை பல்வேறு நாடுகளிலிருந்தும் பெறப்பட்ட அனுபவங்களின் மூலம் அறிந்திருக்கின்றார்கள். அமெரிக்க ஆய்வுகள் மூலம் பின்வருவன அறியப்பட்டுள்ளன.

1) சுட்ட சுண்ணாம்பையும், 'Cottage Cheeseஐயும் 1:6 என்ற விகிதத்தில் கலந்து, அவற்றுடன் தகுந்த அளவு நீரைச் சேர்த்து உருவாக்கப்படும் கலவையை மண் சுவரின் உட்புறத்தே நீரெதிர்க்கும் பசையாகப் பாவிக்கலாம்.

2) ஒரு கலன் மோரையும் 4.5 இறாத்தல் வெண்சீமெந்தையும் (White Cement) கலந்து உருவாக்கப்பட்ட கலவையைப் வர்ணமாகப் (Paint)  பாவிக்கலாம்.

3) 30இறாத்தல் மாவையும், 50 கலன்கள் நீரையும் கலந்து சூடாக்கிப் பெறப்பட்ட கலவைக்கு மண்ணைத் தகுந்த அளவில் சேர்ப்பதன் மூலம் பெறப்படும் கலவையைக் கொண்டு மண் சுவர்களைப் பூசலாம்.

கேட்பதற்குச் சிரிப்பாக இருக்கிறதல்லவா? ஆனால் ஆய்வுகள் இவற்றை நிரூபித்துள்ளன. அவற்றை மறுப்பதற்கில்லை. வளர்முகநாடுகளிலும் இது போன்ற ஆய்வுகள் தொடரப்பட வேண்டும். பொருத்தமானவை பாவிக்கப்பட வேண்டும். குறைந்த செலவில் நிறைந்த பயனை அடைவதென்ற குறிக்கோளையும் ஆய்வாளர்கள் மறந்து விடக்கூடாது. அடுத்த அத்தியாயம் 'சுண்ணவெண் சாந்தும்..' சுண்ணாம்பு பற்றிக் கூறும்.

அத்தியாயம் நான்கு: சுண்ண வெண் சாந்தும்...

வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! - வ.ந.கிரிதரன் -சீமெந்து கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்பிருந்தே மனிதரால் பாவிக்கப்பட்டு வரும் கட்டடப்பொருட்களில் சுண்ணாம்பும் முக்கியமானது. சுண்ணாம்பும், மணலும் கலந்து உருவாக்கப்படும் கற்களை (sand-lime blocks) வீடுகளை அமைப்பதற்குப் பாவிக்கலாம். இத்தகைய கற்களைப் பல்வேறு வர்ணங்களுக்குரிய வஸ்துக்களைச் சேர்ப்பதன் மூலம் (pigments) பல்வேறு வர்ணங்களில் உருவாக்கலாம். இத்தகைய கட்டடங்களின் தாங்கும் சக்தி 200இலிருந்து 500 கிலோகிராம் /cm2 வரையிலிருக்கும். இத்தகைய சுண்ணாம்புக் கட்டிகளாளேற்படும் முக்கியமான நன்மைகள்: சீமெந்து குறைவாயிருக்குமிடங்களில் இவற்றை வீடுகளை அமைக்கப் பாவிக்கலாம். மேலும் பல்வேறு வர்ணங்களில் இவற்றை உருவாக்கக் கூடியதாகயிருப்பதால் இவற்றை வீடுகளிற்கு அழகான தோற்றத்தைக் கொடுப்பதற்குரிய கட்டடப் பொருளாகவும் பாவிக்கலாம்.

உலகம் முழுவதிலுமே பரவலாக சுண்ணாம்பு, சீமெந்து, மணல் கலந்த கலவையிலிருந்து உருவாக்கப்படும் காரை (mortar) பாவிக்கப்படுகின்றது. சுண்ணாம்புக் காரை (Lime Plastering) ஆகியன சீமெந்தை விட சிறந்து விளங்குகின்றன. தண்ணீர் உட்புகுவதைத் தடுப்பதில் சிறந்து விளங்குகின்றன. சீமெந்திலிருந்து உருவாக்கப்படும் காரை, சாந்தை விட சுண்ணாம்பிலிருந்து உருவாக்கப்படும் காரை, சாந்து ஆகியன கையாள்வதற்கு இலேசானவை (workable).

சுண்ணாம்பு இன்னொரு வழியிலும் சீமெந்தைவிட நன்மையானது. சீமெந்தைக் குடிசைக் கைத்தொழிலாக (Cottage Industry) உருவாக்க முடியாது. ஆனால் சுண்ணாம்பை அவ்விதம் உருவாக்கலாம். பல்வேறு அளவுகளில் உருவாக்கப்பட்ட சூளைகள் பல நாடுகளில் பாவ்னையிலுள்ளன. இவ்விதம் சூளையிலிருந்து உருவாக்கப்படும் சுண்ணாம்பை நீருடன் கலப்பதற்கு (slaking) உரிய இயந்திரங்களும் பாவனையிலுள்ளன.

சீமெந்துடன் ஒப்பிடும் பொழுது சுண்ணாம்பின் முக்கியமான குறைபாடு: சீமெந்து விரைவாக உறுதியடைந்து விடும். இதற்குரிய உறுதியடையும் நேரம் (setting time) சுண்ணாம்பை விடக் குறைவானது. சுண்ணாம்பையும் சீமெந்தைப் போல் விரைவாக உறுதியடையச் செய்ய முடியும். தகுந்த ஊக்கியொன்றைச் சேர்ப்பதன் மூலம். சுண்ணாம்பை உறுதியாக்குவதற்குப் பாவிக்கப்படும் பொருட்களில் முக்கியமானது 'பொசல்லோனா' (Pozzolana). இதனைக் கூட இலகுவான முறையில் குறைந்த செலவில் உருவாக்குவதற்குரிய வழிமுறைகளை பல ஆராயப்பட்டுள்ளன. கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் களிமண்ணையும் , உமியையும் கலந்து உருவாக்கப்படும் சிறு கட்டிகளை எரிப்பதன் மூலம் பெறப்படும் 'பொசல்லோனா'வைத் தகுந்த அளவில் சுண்ணாம்புடன் கலந்து பாவிக்கின்றார்கள். இவ்விதம் ஏற்கனவே உருவாக்கப்பட்ட சுண்ணாம்பு 'பொசல்லோனா'க் கலவையும், பைகளில் அடைக்கப்பட்டு இந்தியாவின் மத்திய கட்டட ஆய்வு நிலையத்தால் (Central Building Research Institute - CBRI) விற்கப்படுகின்றது. இவ்விதம் பொசல்லோனாவை உருவாக்கும் பொழுது அதற்குரிய எரிபொருளைக் கூட உமியை எரிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். கழிவாகக் கொட்டப்படும் உமியிலிருந்து எவ்விதம் பயனை அடையலாம் பார்த்தீர்களா? இவ்விதம் உமியை எரிபொருளாகப் பாவிப்பது எரிபொருட் செலவை மிச்சப்படுத்தி விடுகின்றது.

சுண்ணாம்பைச் சுண்ணாம்புக் கற்களைவிட இன்னுமொரு வழியிலும் பெறலாம். சீனித்தொழிற்சாலையில் கழிவுப் பொருளாக சுண்ணாம்புக் கலவையொன்று வெளியாகின்றது. இந்தக் கழிவுச் சுண்ணாம்புக் கலவையை உமியுடன் சேர்த்து எரிக்கும் பொழுது பெறப்படும் விளைபொருள் சிறந்த 'காரை'யாகத் (mortar) தொழிற்படுவதை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. அடுத்த இதழில் 'கல்லிலே கலை வண்ணம்..'

 அத்தியாயம் ஐந்து: கல்லிலே கலை வண்ணம்...

வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! - வ.ந.கிரிதரன் -ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதரால் பாவிக்கப்பட்டு வரும் இன்னுமொரு முக்கியமான கட்டடப்பொருள் கல். கற்கோயில்கள்,  ஸ்தூபிகள் என மிகப்பழமை வாய்ந்த சரித்திரச் சின்னங்கள் பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நிலைத்து நிற்பதைப் பார்க்கின்றோம். கல்லைப் பாவிப்பதனால் ஏற்படும் மிகப்பெரிய நன்மைகளில் இதுவுமொன்று. நீண்டகாலம் நிலைத்து நிற்கக் கூடியது. ஆனால் இன்னுமொன்றையும் நீங்கள் அவதானித்துக் கொள்ளலாம். கற்களால் ஆன கட்டடங்கள் பாரம் கூடியவை மட்டுமல்ல, அதிக அளவு இடத்தையும் அடைத்துக் கொள்ளக் கூடியவை. சாதாரணமாகக் கிடைக்கும் பொளியப்படாத கற்களைக் கொண்டு (Random Rubble) அமைக்கபப்டும் சுவர்களை 38cmக்கும் குறைவான தடிப்பில் அமைப்பதென்பது வெகு அபூர்வம். அது மட்டுமல்ல கற்களைக் கொண்டு கட்டடங்களை அமைக்கும் போது ஏற்படும் நேர விரயமும் மிகவும் அதிகம். மேலும் கற்கட்டடங்களின் உறுதி பாவிக்கபப்டும் 'காரை'யின் தரத்திலும், தொழிலாளியின் திறமையிலும் தங்கியிருப்பதால் அமைப்பதற்கான செலவும் அதிகம். கற்கட்டங்கள் நெருப்பெதிர்க்கும் தன்மையில் சிறந்து விளங்குபவை. ஆனால் நீரெதிர்க்கும் தன்மையில் சிறந்தவையல்ல. ஒலியெதிர்க்கும் தன்மையில் சிறந்தவை. ஆனால் வெப்பத்தைத் தடுப்பதில் சிறந்தவையல்ல. தாங்கும் சக்தி மிக்கவை. இழுவை விசைகளைப் பொறுத்தவரையில் வலிமை குன்றியவை. இத்தகைய காரணங்களினால் வளர்முக நாடுகளின் குறைந்த செலவு மனைகளைப் பொறுத்தவரையில் கல் உகந்ததொரு கட்டடப் பொருளல்ல. மனிதரால் முடியாததென்று ஏதாவதுண்டா? கல்லை எப்படித் தகுந்த முறையில் , குறைந்த செலவில் கட்டடப் பொருளாக உருமாற்றலாம் என்பதற்கான ஆய்வுகள் தொடராமலுமில்லை. இந்திய மத்தியக் கட்டட ஆய்வு நிலையத்தினால் ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி செங்கற்களை உருவாக்குவது போல், உலோக அல்லது மர அச்சுக்களில் கற்களையும் 'காங்ரீ'ட்டையும் கலந்து 20cm X 30cm X 15 cm என்ற அளவில் கற்கட்டிகள் (Stone Blocks) உற்பத்தி செய்யப்படுகின்றன. 18kg பாரமான இவ்வகையான கட்டிகளொவ்வொன்றும் 75.90kg/sq.cm அளவுக்குத் தாங்கும் சக்தி மிக்கவை. இத்தகைய கட்டிகளைக் கொண்டு இரண்டு மாடிக் கட்டடங்கள் வரையில் விரைவாக அமைக்கலாம். வழக்கமான கற்கட்டடங்களை விட இவ்வகையான கட்டடங்களில் இடம் (space) பெரிதும் சேமிக்கப்படுகின்றது. இந்திய மாநிலங்களான இராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களில் இம்முறை வெற்றிகரமாகக் கையாளப்படுகின்றது. அம்மாநிலக் கட்டடத்திணைக்களங்களினால் இம் முறை ஏற்றுக் கொள்ளப்பட்டுமிருக்கின்றது. மண்ணைப் போல் கல்லும் பெருமளவு கிடைப்பதால் கல்லைக் குறைந்த செலவுக் கட்டடப்பொருளாக மாற்றலாமா என்பது பற்றிய முயற்சிகள் இந்திய மாநிலங்களின் முன் மாதிரியைக் கொண்டு தொடரப்பட வேண்டும்.

பாரம்பரியக் கட்டடப் பொருட்களின் முக்கியம்!

இதுவரை பாரம்பரியக் கட்டடப் பொருட்களான மண், சுண்ணாம்பு, கல் என்பவை பற்றிப் பார்த்தோம். இத்தகைய கட்டடப்பொருட்கள் பெருமளவில் கிடைப்பதால் குறைந்த செலவு வீடுகளை அமைப்பதில் இவற்றின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. கட்டடச் செலவின் முக்கியமான பெருமப்குதிச் செலவைக் கட்டடப்பொருட்களே எடுப்பதால் வளர்முக நாடுகளைப் பொறுத்தவரையில் எதிர்கொள்ளப்படும் முக்கியமான பிரச்சனைகளிலொன்று கட்டடப் பொருட்களைக் குறைந்த செலவில் பெறுவது எப்படி என்பதுதான். பாரம்பரியக் கட்டடப்பொருட்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. இவ்விதம் அதிகமாகக் கிடைக்கும் இத்தகைய கட்டடப்பொருட்களைத் தகுந்த முறையில் உருமாற்றுவதன் மூலம் தரம் மிக்க, உறுதி மிக்க கட்டடப்பொருட்களாகக் குறைந்த செலவில் மாற்ற முடியும். சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைக் கழிவுகளைக் கூடக் கட்டடப்பொருட்களை உருவாக்குவதற்குப் பாவிக்க முடியும். இவ்விதம் பாவிப்பதன் மூலம் கட்டடப் பொருட்களை உருவாக்குவது, சூழலைச் சுத்திகரிப்பது என்னும் இருவிதப் பயன்களை அடைய முடியும்.

பெரும்பாலான வளர்முக நாடுகளில் போர்களினாலும், வறுமையினாலும் மக்களின் வாழ்வு சீரழிந்து கிடக்கின்றது. போதிய இருப்பிட வசதியற்று, அகதிகளாக, நாடோடிகளாக மக்கள் அலைந்து கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய மக்களுக்கு நிவாரணமளிப்பதற்குக் குறைந்த செலவு வீடுகளின் தேவை மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது. வளர்முக நாடுகளின் அரசுகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை வீட்டுப் பிரச்சனைதான். எனவே தான் இத்துறையில் போதிய ஆய்வுகள் தொடரப்படுவதன் தேவை மிகவும் முக்கியம். பாரம்பரியக் கட்டடப்பொருட்களைத் தகுந்த வகையில் உருமாற்றிப் பாவிப்பதென்பது இந்தப் பிரச்சனையின் தீர்வுக்கான முதற்படிதான்.

ngiri2704@rogers.com

மூலம்: பதிவுகள் அக்டோபர் 2008, இதழ் 106., தாயகம் (கனடா)

******************


39.  வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கலைக் குறிப்புகள்' 1: ஜெவ்ரி பாவா Geoffrey Bawa (23.-7.1919 - 27.05.2003)!
ஜெவ்ரி பாவா Geoffrey  Bawa  - 'வெப்பநில நவீனத்துவக்' (Tropical Modernism) கட்டடக்கலைப்பாணியின் மூலவர்!

இலங்கையின் முக்கியமான கட்டடக்கலைஞர்களிலொருவராக விளங்கியவர் ஜெவ்ரி பாவா. இவரது முழுப்பெயர் ஜெவ்ரி மான்னிங் பாவா (Geoffrey Manning Bawa ). உலகக் கட்டடக்கலையில் ஆசியாக் கட்டடக்கலையின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராகத் தன் கட்டடங்களின் மூலம் திடமாகத் தடம் பதித்தவர் இவர். குறிப்பாக இன்று உலகக் கட்டடக்கலையில் வெப்பநில நவீனத்துவம் (Tropical Modernism) என்று அறியப்படும் கட்டடக்கலைப்பாணிக்கு அடிகோலியவராக அறியப்படுபவர் இவர்.

இவரது தந்தையாரான பி.டபிள்யு. பாவா செல்வச்சிறப்பு மிக்க சட்டத்தரணியும், நீதிபதியுமாவார். ஆங்கில, முஸ்லிம் இரத்தக்கலப்புள்ளவர். தாயாரான பேர்த்தா மரியன்னெ ஸ்ராடர் ஜேர்மனிய, ஸ்ஹொட்டிஸ் மற்றும் சிங்கள இரத்தக்கலப்புள்ளவர். இவரது மூத்த சகோதரரான பெல்விஸ் பாவா புகழ்பெற்ற 'நிலப்பரப்புத் தோற்றக் கட்டடக்கலைஞராக (Landscape Architect) விளங்கியவர்.

ரோயல் காலேஜ் மாணவரான ஜெவ்ரி பாவா ஆரம்பத்தில் படித்தது ஆங்கிலமும் சட்டமும். ஆங்கில இலக்கியத்தில் புனித காதரின்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜில் இளங்கலைப்பட்டப்படிப்பை முடித்த இவர் பின்னர் Middle, London இல் சட்டத்துறைப்பட்டதாரியானார். இலங்கை திரும்பிய இவர் இரண்டாவது யுத்தகாலத்துக்குப் பின்னர் கொழும்பிலுள்ள சட்ட நிறுவனமொன்றில் பணியாற்றினார். பின்னர் இவரது தாயாரின் மறைவினையடுத்து சட்டத்துறையை விட்டு விலகிய இவர் சுமார் இரு வருட காலம் சர்வதேச பயணங்களிலீடுபட்டார். அமெரிக்கா, ஐரோபா என்று பயணித்த இவர் இத்தாலியில் வீடு வாங்கி நிரந்தரமாகத் தங்க எண்ணினார். ஆனால் அந்த எண்ணம் சரிவரவில்லை. 1948இல் நாடு திரும்பிய இவர் கைவிடப்பட்டிருந்த இறப்பர் தோட்டமொன்றினை வாங்கினார். அதனையொரு இத்தாலியப் பாணிப்பூங்காவாக ஆக்க விரும்பினார். ஆனால் அதற்குரிய தொழில்நுட்ப அறிவு அவருக்கில்லாதது பெருங்குறையாகவிருந்தது.

இக்காலகட்டத்தில் கொழும்பிலுள்ள எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) அவர்களது கட்டடக்கலை நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அப்பொழுது கட்டடக்கலைஞர் ரீட் மட்டுமே உயிருடனிருந்தார். அவருக்குக் கீழேயே பயிற்சியில் இணைந்தார். ரீட் மறைவினையடுத்து கேம்ரிட்ஜ் திரும்பிய இவர்  இங்கிலாந்திலுள்ள கட்டடக்கலைஞர் சங்கத்தில் மாணவராக இணைந்தார். அங்கு கட்டடக்கலைத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். அதன் பின்னர் 'ரோயல் இன்ஸ்டிடியூட் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ்' (The Royal Institute of British Architects ) அமைப்பின் 'அசோசியட்' உறுப்பினரானார். தனது 38ஆவது வயதில் நாடு திரும்பிய ஜெவ்ரி பாவா தான் பணியாற்றிய எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) கட்டடக்கலை நிறுவனத்தைத் தனது பொறுப்பில் கொண்டு வந்து தனது கட்டடக்கலைப் பணியினைத் தொடர்ந்தார்.

1959இல் 'டானிஸ்' கட்டடக்கலைஞரான உல்ரிக் பிலெஸ்னெர் (Ulric Plesner) இவருடன் இணைந்தார். இவர்கள் இருவருமாகப் பல கட்டடங்களை தமக்குரிய தனித்துவமான பாணியில் வடிவமைத்துத்தார்கள். இப்பாணியே பின்னர் 'வெப்பநில நவீனத்துவம்' என்று உலகக் கட்டடக்கலையில் 'வெப்பநில நவீனத்துவ'ப் பாணியாக அறியப்பட்டது. கட்டடங்கள் அமைந்துள்ள நிலத்தின் தன்மைக்கேற்ப, அங்குள்ள காலநிலைக்கேற்ப அப்பகுதியின் பாரம்பரியக் கட்டடக்கலைக்கூறுகளை உள்வாங்கி, அங்கு வாழுவோருக்கு இன்பத்தைத்தரும் வகையில், கட்டடக்கலையின் நவீனத்துவக் கூறுகளையும் கலந்து கட்டடங்களை வடிவமைப்பதில் வல்லவர் இவர். காலனித்திய, பாரம்பரிய மற்றும் நவீனத்துவக் கட்டடக்கலையின் கூறுகளை உள்வாங்கி அம்மண்ணின் கலாச்சாரக் கூறுகளையும் கவனத்தில்கொண்டு , வெப்பமண்டலப் பிரதேசங்களில் வடிவமைக்கப்பட்ட இவரது கட்டடஙகள் இவரது கட்டடக்கலைப்பாணியில் பிரதிபலித்த தனித்துவம் காரணமாக உலகக்கட்டடக்கலையில் குறிப்பாக ஆசியாக் கட்டடக்கலையில் முக்கியமானவையாகக் கருதப்பட்டன. இலங்கை மட்டுமல்லாமல், இந்தியா, இந்தோனேசியா என்று பிற நாடுகளிலும் இவர் கட்டடங்களை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் பட்டங்களைபெற்ற ஜெவ்ரி பாவா , பின்னரே தனது நடுத்தர வயதில் கட்டடக்கலைத்துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். அவ்விதம் ஈடுபடுத்திக்கொண்ட அவர் உலகக் கட்டடக்கலையில் குறிப்பாக ஆசியாக் கட்டடக்கலையில் தனது தனித்துவமான பாணியில் வடிவமைக்கப்பட்ட கட்டடங்கள் மூலம் 'வெப்பநில நவீனத்துவம்' என்னும் கட்டடக்கலைப்பாணியின் மூலவராக  இடம் பிடித்தவரென்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல பிரமிக்கத்தக்கதும் கூட.

தனது கட்டடக்கலைப்பங்களிப்புக்காக ஆகாகான விருது, இலங்கை அரசின் விருதுகளைப்பெற்ற ஜெவ்ரி பாவா இலங்கையில் வடிவமைத்த அவரது சிறப்பினை வெளிப்படுத்தும் முக்கியமான கட்டடங்களில் சிலவாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

1. கோட்டேயில் அமைந்துள்ள புதிய பாராளுமன்றக் கட்டடம்..
2. பெந்தோட்ட  கடற்கரைக் ஹொட்டல்.
3. ருகுண பல்கலைக்கழகக் கட்டடங்கள்
4. கந்தான ஹொட்டல்
5. புளூ வார்ட்டர் ஹொட்டல்

எண்பதுகளில் நகர அதிகார சபையில் நானும் நண்பர் கட்டடக்கலைஞர் வைரமுத்து அருட்செல்வனும் நிலப்பரப்புத் தோற்றக் கட்டடக்கலைஞரான  (Landscape Architect) திருமதி 'கெஸ்டர் பசநாயக்கா'வுடன் கோட்டேயில் அமைக்கப்பட்டிருந்த புதிய பாராளுமன்றக் கட்டடத்தைச் சுற்றிய நிலப்பரப்பு வடிவமைப்பு வேலைகளில் இணைந்து பணியாற்றியிருந்தோம். அதன் காரணமாக புதிய பாராளுமன்றம் திறப்பதற்கு முன்னர் அங்கு சென்று அதன் உட்புறத் தோற்றங்களையெல்லாம் கண்டு களித்திருக்கின்றோம். அப்பொழுது கட்டடக்கலைஞர் ஜெவ்ரி பாவாவின் கட்டடக்கலை வடிவமைப்பில் எம்மை மறந்திருக்கின்றோம். இப்பொழுதும் நினைவிலுள்ளது.

இப்பதிவுக்கான முகநூலில் வெளியான எதிர்வினைகள்:

Janaki Karthigesan Balakrishnan இந்தப் பதிவினை வாசிக்கும் போது நானும் கந்தளம சுற்றுலாத் தளத்தைத்தான் உடனே எண்ணினேன். இந்தப் பதிவினைப் படித்து கருத்துரைக்கு வரும் வரை அதன் கட்டடக் கலைஞர் யார் என்று தெரிந்திருக்கவில்லை அல்லது மனப்பாடம் செய்து வைத்திருக்கவில்லை. எனது இரு பயணங்கள் போது குடிசைகள் போலமைக்கப்பட்ட அறைகளில் தங்கி, ஏனைய ஹோட்டல் வசதிகளை அனுபவித்தேன். அந்த ஹோட்டலும், குடிசை போன்ற அறைகளும் ஒரு கிராமமும், நகரமும் ஒருங்கிணைந்தது போல், ஆதிகுடியினரின் கலாச்சாரத்தை அதில் புகுத்தி, அழகான அமைதியான சுற்றுப்புறச் சூழலில் ஒரு அற்புதமான சுற்றுலாத் தளத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. சிறீ லங்கா பயணம் செல்பவர்கள் ஒரு நாளேனும் அங்கு சென்று வந்தால் மகிழ்ச்சியடைவீர்கள். செல்வதற்கு பகல் பயணத்தை மேற்கொள்வதையே நல்லதென்று கூறுவேன். தம்புளை எனும் இடத்திற்கு சென்று, உள்ளே அதிகம் வெளிச்சம் அற்ற பாதையில் நீண்ட பயணம். அவ்வாறெல்லாம் அமைந்தது தான் அதன் சிறப்பிற்குக் காரணம். நான் முதல் தடவை வேறு அனுசரணையுடன் சென்று நன்கு அனுபவித்ததால், அடுத்த தடவை எனது குடும்பத்தினரை அழைத்துச் சென்றேன். இதைக் கூறாவிட்டால் கடமையிலிருந்து தவறி விடுவேன். செலவும் அதிகம்தான். கந்தளம பற்றி முகநூல் வாயிலாக நண்பர்களுக்கு தெரியப்படுத்த முன்பே விரும்பினேன். அச் சந்தர்ப்பத்தை இப்பதிவின் மூலம் ஏற்படுத்திக் கொடுத்த கிரிதரனுக்கு மிக்க நன்றி.

Memon Kavi அருமையான பதிவு

Memon Kavi '' 'வெப்பநில நவீனத்துவம்' என்று உலகக் கட்டடக்கலையில் 'வெப்பநில நவீனத்துவ'ப் பாணியாக அறியப்பட்டது. கட்டடங்கள் அமைந்துள்ள நிலத்தின் தன்மைக்கேற்ப, அங்குள்ள காலநிலைக்கேற்ப அப்பகுதியின் பாரம்பர்யக் கட்டடக்கலைக்கூறுகளை உள்வாங்கி, அங்கு வாழுவோருக்கு இன்பத்தைத்தரும் வகையில், கட்டடக்கலையின் நவீனத்துவக் கூறுகளையும் கலந்து கட்டடங்களை வடிவமைப்பதில் வல்லவர் இவர். காலனித்திய, பாரம்பரிய மற்றும் நவீனத்துவக் கட்டடக்கலையின் கூறுகளை உள்வாங்கி அம்மண்ணின் கலாச்சாரக் கூறுகளையும் கவனத்தில்கொண்டு , வெப்பமண்டலப்பிரதேசங்களில் வடிவமைக்கப்பட்ட இவரது கட்டடஙகள் இவரது கட்டடக்கலைப்பாணியில் பிரதிபலித்த தனித்துவம் காரணமாக உலகக்கட்டடக்கலையில் குறிப்பாக ஆசியாக் கட்டடக்கலையில் முக்கியமானவையாகக் கருதப்பட்டன'' இது மிக முக்கியான குறிப்பு கட்டிட கலை ஆர்வலர்களுக்கு

Memon Kavi அதே போல் ஒரு நிலப்பகுதியினை சமப்படுத்தாமல் அது இருக்கும் அதே அமைப்பில் வைத்து கட்டிடங்கள் என்பதும் ஒரு உத்தியாக இருந்த து. இலங்கை யில் அம்மாதிரியான அக்கட்டிடங்கள் பல உண்டு. (சும்மா ஒரு நினைவுக்கு இலங்கை மகரகம வில் அமைந்துள்ள் இளைஞர் சேவை மன்ற கட்டிடம். அப்படியான ஒரு கட்டிடமாகவே பட்டது.) இது கட்டிட ஒர் உத்தி என்றும் , அது ஜெர்மனியில் கட்டிட கலையில் அறிமுகப்பட்ட உத்தி என்றலாம் சொல்லப்ட்டது. ஆனால் அது பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. இங்கு இதனை நான் குறிப்பிட காரணம். எனது சிறிய வயதில் எனது தாய் மாமா வசித்த இலங்கை கண்டி அக்குறணையில் நிலத்தின் அமைப்புக்கு அமைப்பு ஏன்ப உள்ளூர் bassமார்கள் கட்டிய கட்டிங்கள் கண்டு நான் வியந்து போனது உண்டு.அங்கு மேடும் பள்ளமும் சின்ன சின்ன கற்பாறைகளும் அதிகமான அக்குறணை ப்குதியில் அமைந்து கட்டிடங்களுக்கு சிறிய பாலம் வளைந்து நெளிந்து போகும் படிகற்கள் அப்படிவான வடிவில் பல கட்டிங்கள்.

Memon Kavi Lafees Shaheed (இந்த குறிப்பு நண்பர் lafees shaheed யின் கவனத்திற்கு கிரி! ஜெவ்ரி பாவா Geoffrey Bawa (23.-7.1919 - 27.05.2003) பற்றிய: உங்கள் குறிப்பு எனக்கு 60களின் இறுதியில் அக்குறணையில் நான் பாரத்த கட்டிங்களை எனக்கு நினைவுப்படுத்தின.

Vadakovy Varatha Rajan புதிய தகவலை தந்தத்திற்கு நன்றி

Vimalendran Barathithas Very interesting article! Great

Kanagaratnam Balendra நன்றி. நல்ல பதிவு.

Gv Venkatesan Well-done...super

Naveen Navaratnarajah Kandalama Heritage Hotel also one of his architectural work.

Naveen Navaratnarajah இந்த கந்தளம விடுதியில் 2003 ல் சில நாட்கள். தங்கியிருந்தேன். குளியலறைகளின் வெளிப்புறச்சுவர்கள் முற்றிலும் கண்ணாடியாலானவை. மறைப்பு ஒருவகையில் படர்கொடிகளே (kind of curtain creepers hanging from roof garden)

உசாத்துணை விபரங்கள்
1. விக்கிபீடியா: https://en.wikipedia.org/wiki/Geoffrey_Bawa
2. Spotlight: Geoffrey Bawa by Patrick Kunkel  https://www.archdaily.com/770481/spotlight-geoffrey-bawa
3. Geoffrey Bawa :http://www.geoffreybawa.com/

***********

40. வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக்குறிப்புகள் 2: பேராசிரியர் நிமால் டி சில்வாவின் 'பாரம்பரியக் கட்டடக்கலை'யும் 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பும்'.

மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பட்டப்படிப்பினைப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்களுக்குப் 'பாரம்பரியக் கட்டடக்கலை' (Traditional Architecture) என்னும் பாடத்தினை எடுத்தவர் பேராசிரியர் நிமால் டி சில்வா. இவர் கட்டடக்கலைஞரும் கூட. தனியாகக் கட்டடக்கலை நிறுவனமொன்றினையும் நடத்தி வந்தவர். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடக்கலை பற்றிய விடயங்களில் இப்பாடத்தின் மூலம் எம் கவனம் திரும்பியது. இப்பாடம் உண்மையில் கட்டடக்கலையின் வரலாறு என்னும் பாடத்தின் துணைப்பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ்ப்பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்ட நாற்சார வீடுகள் பற்றி, தென்னிலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மண்ணால் நிரப்பப்பட்ட மரச்சட்டங்கள் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் (wattle and daub) பற்றியெல்லாம் அறியத்துணையாகவிருந்த பாடமிது. எனக்குப் பாரம்பரியக் கட்டடக்கலை மீது ஆர்வத்தினை ஏற்படுத்தியதில் பேராசிரியர் நிமால் டி சில்வாவுக்கு முக்கிய பங்குண்டு.

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நிமால் டி சில்வாவின் 'பாரம்பர்யக்கட்டடக்கலை' பாடத்தின் மூலம்தான் நான் முதன் முதலில் பண்டைய அநுராதபுர நகர அமைப்பு பற்றியும் முதன் முதலாக அறிந்துகொண்டேன். தொல்லியற் துறையில்  நன்கு அறியப்பட்ட ரோலன் சில்வா அவர்களின் (இவர் ஒரு கட்டடக்கலைஞரும் கூட) 'பண்டைய அநுராதபுர நகர அமைப்பு' பற்றிய கட்டுரையொன்றினை பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் எமக்கு அறிமுகம் செய்தார். எவ்விதம் பண்டைய அநுராதபுர நகரமானது சந்தையினை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டதென்பது பற்றியும், நகரைச் சுற்றி இரு வேறு வட்ட ஒழுக்கில் எவ்விதம் தாதுகோபங்கள் கட்டப்பட்டன என்பது பற்றியும் விபரிக்கும் ஆய்வுக் கட்டுரை அது.  பேராசிரியர் ரோலன் சில்வா அவர்கள் பின்னர் இலங்கைத் தொல்பொருள் நிலையத்திணைக்களத்தின் தலைவராகவும், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் விளங்கியவர்.


எனக்கு நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றி அறியும், ஆராயும் ஆர்வத்தை ஏற்படுத்திய காரணங்களிலொன்று பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் அறிமுகப்படுத்திய அக்கட்டுரை. அவர் அன்று அறிமுகப்படுத்திய ரோலன் சில்வாவின் 'அநுராதபுர நகர அமைப்பு' பற்றிய கட்டுரையின் விளைவாக எனது ஆய்வு நூலான 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' தமிழகத்தில் ஸ்நேகா/மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு விடயத்துக்காகவே எப்பொழுதுமென் நினைவில் நிற்கும் ஆளுமைகளிலொருவராக பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் விளங்குவார்.

இச்சமயத்தில் பெளத்த கட்டடங்கள், நகர அமைப்புகள் மற்றும் இந்துக்களின் நகர அமைப்பு, நகர அமைப்புகள் பற்றி குறிப்பாக அவற்றின் வடிவங்கள் பற்றிச் சிறிது நோக்குவது அவசியம். இது பற்றி எனது 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' நூலில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளை இங்கு எடுத்து நோக்குவது நல்லது.


" இந்துக்களின் கட்டடங்களையும், பெளத்தர்களின் கட்டடங்களையும் நோக்குபவர்கள் ஒன்றினை இலகுவாக அறிந்து கொள்வார்கள். பெளத்த கட்டடங்கள், தாது கோபுரங்கள் போன்றவை வட்டவடிவில் அமைக்கப்பட்டன. இந்துக்களின் கட்டடங்களோ சதுர அல்லது செவ்வக வடிவங்களில் அமைக்கப்பட்டன. அநுராதபுர நகர, கட்டட அமைப்புத் துறையினை வட்ட வடிவம் எவ்வளவு தூரம் பாதித்துள்ளதென்பதை ரோலன் டி சில்வா என்ற சிங்களப் பேராசிரியர் ஆராய்ந்து தெளிவு படுத்தியுள்ளார். சந்தையை மையமாக வைத்து உருவான பண்டைய அநுராதபுர நகரைச் சுற்றி வட்ட ஒழுக்கில் வட்ட வடிவமான தாது கோபுரங்கள், இரு வேறு ஒழுக்குகளில் அமைக்கப்பட்டிருந்ததை அவரது ஆய்வுகள் புலப்படுத்தும். வட்ட வடிவம் இயக்கத்தை உணர்த்தும். தோற்றமும், அழிவும், இரவும், பகலும் இவ்விதமாக ஒருவித வட்ட ஒழுக்கில் நகரும் காலத்தை மேற்படி வட்டவடிவம் உணர்த்தும். மேலும் இவ்வட்ட வடிவம் நாம் வாழும் பூமிக்குரிய வடிவ இயல்பையும் குறிக்கும். பொருள் முதல்வாதக் கோட்பாட்டினை அதிகம் நம்பும் பெளத்தர்கள் வட்டவடிவத்தைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமானதொன்றல்ல.


மாறாக சதுரவடிவம் ஓர் இறுதியான, தெளிவான வடிவம். வட்டத்தைப்போல் இது இயக்கத்தைப் புலப்படுத்துவதில்லை. இந்துக்கள் இப்பிரஞ்சத்தை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு போன்ற திசைகளால் உருவான சதுர வடிவான வெளியாகவும், அவ்வெளியில் நேரத்தின் பாதிப்பை இராசிகளாலும் உருவகித்தார்கள். நவீன பெளதிகம் கூறுவதைப் போல இந்துக்களும் இப்பிரஞ்சத்தை ஒருவித வெளி-நேர (Space- Time) அமைப்பாகத்தான் விளங்கி வைத்திருந்தார்களென்பது இதிலிருந்து புலனாகின்றது. இவ்விதம் இப்பிரஞ்சத்தைச் சதுர வடிவாக உருவகித்த இந்துக்கள் இவ்விதிகளுக்கமைய உருவாக்கப்பட்ட கட்டடங்கள், நகரங்கள் என்பவற்றையும் சதுர வடிவாகவே (அல்லது செவ்வக) அமைத்தார்களென்பது ஆச்சரியமானதொன்றல்லதான். மாறாக சதுரவடிவம் ஓர் இறுதியான, தெளிவான வடிவம். வட்டத்தைப் போல் இது இயக்கத்தைப் புலப்படுத்துவதில்லை. இந்துக்கள் இப்பிரபஞ்சத்தை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு போன்ற திசைகளால் உருவான சதுரவடிவான வெளியாகவும், அவ்வெளியில் நேரத்தின் பாதிப்பை இராசிகளாலும் உருவகித்தார்கள். நவீன பெளதிகம் கூறுவதைப் போல் இந்துக்களும் இப்பிரபஞ்சத்தை ஒருவித வெளி(Space) நேர (Time) அமைப்பாகத்தான் விளக்கி வைத்திருந்தார்களென்பது புலனாகின்றது. இவ்விதம் இப்பிரபஞ்சத்தைச் சதுர வடிவாக உருவகித்த இந்த்துக்கள் இவ்விதிகளிற்கமைய உருவாக்கப்பட்ட கட்டடங்கள், நகரங்கள் என்பவற்றையும் சதுர வடிவாகவோ (அல்லது செவ்வக வடிவாகவோ) அமைத்தார்களென்பதும் ஆச்சரியமானதொன்றல்லதான். இவ்விதம் சதுரவடிவில் அமைக்கப்பட்ட 'வாஸ்து' புருஷமண்டலத்திற்கேற்ப நகரங்கள் அல்லது கட்டடங்கள் அமைக்கப்பட்டன. வாஸ்து புருஷனை இச்சதுர வடிவில் இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் தெய்வங்கள் ஒவ்வொருவரும் சிறுசிறு சதுரங்களாக உருவாக்கப்பட்டார்கள். மேற்படி சதுரவடிவான வாஸ்து புருஷ மண்டலம் மேலும் பல சிறுசிறு சதுரங்களாகப் பிரிக்கப்பட்டன. இத்தகைய சிறுசதுரங்கள் 'படா'க்கள் (Padas) என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு சிறு சதுரத்தையும் ஒவ்வொரு தெய்வம் ஆக்கிரமித்திருக்கும். வாஸ்து புருஷமண்டலத்தின் மையப்பகுதியில் பலசிறு சதூரங்களை உள்ளடக்கிய பெரிய சதுரமொன்று காணப்படும். இச்சதுரத்தை பிரம்மனிற்கு உருவகப்படுத்தினார்கள்."  ['நல்லூர் இராஜதானி நகர அமைப்பு', வ.ந.கிரிதரன், பக்கம் 49-55]

முதன் முறையாக பண்டைய அநுராதபுர நகர் அமைப்பைப்பற்றி நிமால் டி சில்வாவின் 'பாரம்பரியக் கட்டடக்கலை' பாடத்தின் மூலம அறிந்தபோது எனக்கு இலங்கைத்தமிழர்களின் ஆட்சியிலிருந்த பண்டைய நகர்களின் நகர அமைப்பு பற்றிய சிந்தனைகளோடின. எனக்குத் தமிழர்களின் நகர அமைப்பு பற்றிய சிந்தனைகள் என் மாணவப்பருவத்தில் வாசித்த பல தமிழகத்து எழுத்தாளர்களின் வரலாற்றுப்புனைகதைகளை வாசித்த சமயங்களில் ஏற்பட்டிருக்கின்றன. தஞ்சாவூர், பழையாறை, குடந்தை, காஞ்சிபுரம், புகார், மதுரை, வஞ்சி என்று பண்டையத்தமிழ் அரசர்களின் தலைநகர்கள் பற்றிய கனவுகளில் திளைத்திருக்கின்றேன். சங்க இலக்கியங்களில் , சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களில் கூறப்பட்டுள்ள அத்தலைநகர்களின் நகர அமைப்புகள் பற்றிய தகவல்கள் என்னைப் பிரமிப்படைய வைத்திருக்கின்றன. ஆனால் அதே சமயம்  இலங்கையில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் சிறந்து விளங்கிய அநுராதபுரம், யாப்பக்கூவா, பொலனறுவா போன்ற நகர்களின் அமைப்புகள் பற்றியெல்லாம் தகவல்கள், ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கையில் ஈழத்தமிழர்களின் தலைநகர்கள் பற்றியெல்லாம் போதிய தகவல்கள் இல்லாமலிருந்தது எனக்கு வியப்பினைத்தந்தது. ஏன் அண்மைக்காலத்தில் சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்னர் சிறந்த விளங்கிய நல்லூர் இராஜதானி பற்றியெல்லாம் கூடப் போதிய தகவல்கள் இல்லையென்பது வியப்பினைத் தந்த அதே சமயம் வரலாற்றை, வரலாற்றுச்சின்னங்களைப்பேணுதல் போன்ற விடயங்களில் தமிழர்கள் காட்டிய அசிரத்தையையும் அந்நிலை வெளிப்படுத்தியது. பழம் பெருமை பேசும் தமிழர்கள் வரலாற்றைப்பேணுவதில் காட்டிய அசிரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இவ்விடயத்தில் அவர்கள் சிங்கள மக்களிடமிருந்து பல விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். வரலாற்றுச்சின்னங்களைப்பேணுவதற்கு அவர்கள் ஆட்சியிலிருந்த அந்நியராட்சியைக் குறை கூறலாம். அவ்விதமானால் ஏன் அவர்களால் தம் வரலாற்றை முறையாகப் பதிவு செய்து வைத்திருக்க முடியவில்லை என்னும் கேள்விக்குப் பதில் கூற முடியாது போய் விடும். இன்றும் மயில்வாகனப்புலவரின் பல வழுக்களுள்ள வரலாற்று நூலொன்றுதானே ஆதாரமாக எம்மிடம் இருக்கிறது? ஏன் யாருமே தமிழர்களின் வரலாற்றை முறையாகப் பதிவு செய்திருக்கவில்லை? இதற்கு முக்கிய காரணமாகத் தமிழர்களின் அசிரத்தையையே கூறுவேன். இதற்கு அண்மைக்கால உதாரணங்களிலொன்றாகக் கீழ்வரும் விடயத்தைக் கூறுவேன்.

நாற்பதுகளில் கோப்பாயில் தமிழ் அரசர்களின் அரண்மனை இருந்ததாகக்கருதப்படும் கோப்பாய்க் கோட்டை என்னும் பகுதி பற்றி சுவாமி ஞானப்பிரகாசர் வரலாற்று ஆய்விதழொன்றில் கட்டுரையொன்று எழுதியிருக்கின்றார்.  இது பற்றி எழுபதுகளின் இறுதியில் அல்லது எண்பதுகளின் ஆரம்பத்தில் கலாநிதி கா. இந்திரபாலாவை யாழ் பல்கலைக்கழகத்தில் சந்தித்தபொழுது முதன்முறையாக அறிந்துகொண்டேன். அதன்பின் அப்பகுதியைப்பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். திருமதி வூட்ஸ்வேர்த் என்பவருக்குச் சொந்தமாக விளங்கிய பழைய கோட்டை (Old Castle) என்னும் அப்பகுதி பல்வேறு பகுதிகளாகப்பிரிபட்டுச் சிறுத்துப்போயிருந்தது. இதனைப்பற்றிச் சிறு கட்டுரையொன்றும் வீரகேசரியில் எழுதியிருக்கின்றேன். ஏன் சுவாமி ஞானப்பிரகாசரின் காலத்தில் அவரால் சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் இன்றுவரை அப்பகுதி முறையாகப்பாதுகாக்கப்படவில்லை? தமிழ் அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள் இவ்விடயத்தில் என்ன நடவடிக்கைகள் இதுவரையில் அப்பகுதியைப் பாதுகாப்பது பற்றி எடுத்தார்கள்? எவ்விதமான ஆய்வுகளை இதுவரையில் செய்திருக்கின்றார்கள்? இவற்றையெல்லாம் செய்வதற்கு ஏன் யாரும் பெரிதாக முயற்சிகள் செய்யவில்லை? வரலாற்றுச்சின்னங்களைப்பாதுகாப்பதில் எம்மவர்கள் காட்டும் அசிரத்தைக்கு இதுவோர் மிகச்சிறந்த உதாரணம்.

இந்நிலையில்தான் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றிய என் கவனத்தைத்திருப்பினேன். தர்க்கரீதியாக வரலாற்று நூல்கள் கூறும் தகவல்கள், வெளிக்கள ஆய்வில் கிடைக்கப்பெற்ற காணிப்பெயர்கள், வரலாற்றுச்சின்னங்களின் அடிப்படையில், பண்டைய கட்டடக்கலை ,நகர அமைப்பு பற்றிக் கிடைக்கப்பெறும் தகவல்கள் அடிப்படையில் என்னால் முடிந்த அளவுக்கு இந்நூலில் விளக்கியுள்ளேன். இவ்வகையில் இந்நூல் ஒரு முதனூல். இதுவரை யாரும் செய்யாததொன்று. பொதுவாக ஈழத்துத் தமிழ் மன்னர்களின் வரலாறு  பற்றி, தலைநகர்கள் பற்றி கிடைக்கப்பெறும் வரலாற்று நூல்களில் , கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால் இதுவரையில் இலங்கைத்தமிழ் மன்னர்கள் காலத்தில் புகழ்பெற்று இராஜதானியாக விளங்கிய நகர் பற்றி ஆய்வுக்கண்ணோட்டத்தில் அணுகப்பட்டிருப்பது இதுவே முதற் தடவை. அன்றைய நல்லூர் இராஜதானி நகர அமைப்பு இன்றைய நகர அமைப்பில் எவ்வாறு அமைந்திருந்தது என்பதைத் தர்க்கரீதியாக அணுகியிருக்கின்றேன் எனது இந்த ஆய்வில். எதிர்காலத்தில் இன்னும் பலர் விரிவாக ஆய்வுகளைச் செய்வதற்கு இந்நூல் அணுகுமென்பது என் எண்ணம். அவா.

நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றிய ஆய்வுக்கு என்னைத்தூண்டிய காரணிகளில் முக்கியமான காரணி பேராசிரியர் நிமால் டி சில்வா தனது 'பாரம்பரியக் கட்டடக்கலை' பாடத்தில் அறிமுகப்படுத்திய ரோலன்ட் சில்வாவின் 'பண்டைய அநுராதபுர நகர அமைப்பு' பற்றிய கட்டுரையே. அந்த வகையில் அவருக்கு நான் என்றுமே நன்றிக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

உசாதுணை:
1. ரோலன் சில்வாவின் பண்டைய அநுராதபுர நகர் அமைப்பு பற்றிய கட்டுரை.
2. சுவாமி ஞானப்பிரகாசரின் கோப்பாய்ப் பழைய கோட்டை பற்றிய கட்டுரை.
3. வ.ந.கிரிதரனின் 'கோப்பாய்ப் பழைய கோட்டையின் இன்றைய கோலம்' கட்டுரை (வீரகேசரி)
4. வ.ந.கிரிதரனின் 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல்.
5. V.N.Giritharan  - Nallur Rajadhani: City Layout  [ https://vngiritharan23.wordpress.com/category/architecture-town-planning ]


 41. வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக் குறிப்புகள் 3 : களனி விகாரைக் 'கண தெய்யோ' (பிள்ளையார்)

களனியா ரஜமகா விகாரைப்பிள்ளையார் களனி ரஜ மகா விகாரை மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றுகொண்டிருந்தபோது எமது முதலாவது வருடத்தில் 'வெளிக்களக் கட்டடக்கலை' (Field Architecture) என்றொரு பாடமுமிருந்தது. அப் பாடம் வார இறுதி நாள்களிலொன்றான சனிக்கிழமையில்தானிருக்கும். அப்பாடத்தின் நோக்கம் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களைச் சென்று பார்ப்பது. எமது பல்கலைக்கழகம் கொழும்பு மாநகரிலுள்ள மொறட்டுவைப்பகுதியிலிருந்ததால் கொழும்பு மாநகரிலுள்ள கட்டடங்களையே சென்று பார்ப்பது. கட்டடக்கலைஞர்களின் கவனத்துக்குள்ளாகிய இல்லங்கள், பழம்பெரும் சரித்திரச்சின்னங்கள், நகரின் சுதந்திர சதுக்கம் போன்ற முக்கிய கட்டடங்கள் ஆகிய பல கட்டடங்களைச் சென்று பார்த்திருக்கின்றோம். அவ்விதம் சென்று பார்த்த எல்லாக்கட்டடங்களின் விபரங்களும் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் சில கட்டடங்களுக்கான எமது விஜயங்கள் மட்டும் இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளன.


இப்பாடத்துக்கு எமக்கு விரிவுரையாளராகவிருந்தவர் இன்று தெற்காசியாவின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராக அறியப்படும் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன் அவர்களே. புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கிய ஜெஃப்ரி பாவாவின் (Geoffrey Bawa) மாணவர். இவரைபற்றி Anjalendran: Architect of Sri Lanka  என்னுமொரு நூலினை டேவிட் ராப்சன் (David Robson) என்பவர் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அஞ்சலேந்திரனின் கட்டடக்கலைப்பங்கபபளிப்பு பற்றிப் பின்னர் விரிவாக எழுதும் எண்ணமுண்டு. யாழ் நகரிலுள்ள பல்வேறு காரணங்களுக்காகப் புகழ்பெற்ற அசோகா ஹொட்டலை வடிவமைத்தவர் இவரே. அக்ஹொட்டல் வடிவமைக்கப்பட்ட காலத்தில்தான் இவர் எங்களுக்கு விரிவுரையாளராகவிருந்தார். அதனால் எமது விடுமுறைக்காலத்தில் அக்ஹொட்டல் கட்டி முடிக்கப்பட்டிருந்த ஆரம்ப காலத்தில் அங்கு சென்று பார்த்திருக்கின்றோம்.  இவர் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அரசியல்வாதிகளிலொருவராக   விளங்கிய 'அடங்காத்தமிழன்' என்று அறியப்பட்ட, முன்னாள் வவுனியாப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த சுந்தரலிங்கம் அவர்களின் பேரன். எமக்கு இப்பாடமெடுத்துக்கொண்டிருந்ந காலத்தில் எப்பொழுதும் டெனிம்ஸ் பாண்ட் அணிந்து வருவார். இவர் சிறுவயதிலிருந்தே கொழும்பு வாசியாகவிருந்தவரென்று நினைக்கின்றேன்.


களனி ரஜா மகா விகாரை இலங்கையின் சிங்கள மக்களைப்பொறுத்தவரையில், குறிப்பாகப் பெளத்த சமயத்தைவரைப்பொறுத்தவரையில் மிகவும் சரித்திர , சமய முக்கியத்துவம் வாய்ந்தது. கெளதம புத்தர் பரிநிர்வாண நிலையடைந்து , எட்டு ஆண்டுகள் கடந்து, மூன்றாவது தடவையாக இலங்கைக்கு வந்த சமயம் கி.மு.500 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டதாக பெளத்தர்களால் நம்பப்படுகிறது. கோட்டை இராச்சியத்தில் புகழ்பெற்று விளங்கிய இப்பெளத்த ஆலயம் பின்னர் போர்துகீசர் காலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுப் பின்னர் கீர்த்தி சீறீ ராஜசிங்கன் காலத்தில் மீள்புனருத்தானம் செய்யப்பட்டது.

எமது 'வெளிக்களக்கட்டடக்கலை'ப் பாடத்துக்கான விஜயத்தின்போது ஒருமுறை விரிவுரையாளர் அஞ்சலேந்திரனுடன் களனி ரஜமகா விகாரைக்கும் சென்றிருந்தோம். யாழ்தேவியில் கொழும்பு நோக்குப் பயணிக்கையில் , பண்டைய பெளத்தர்களின் புனித நகர்களிலொன்றாகிய அநுராதபுரத்தைப் புகைவண்டியில் கடக்கையில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயகிரி விகாரை, ரூவன் வெலிசாய மற்றும் ஜீத்தவனாராம தாதுகோபங்களைப் பார்த்திருந்த எனக்கு களனி விகாரையே முதன் முதல் நான் நேரில் சென்று பார்த்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விகாரையாகும்.

இந்த விகாரைக்கான விஜயத்தை நினைக்கையில் எனக்கு உடனடியாகத்தோன்றுமொரு விடயம் விகாரையின் பின்புறச் சுவரிலுள்ள இந்துக்கடவுள் ஒருவரின் சிலைதான். அவர்தான் கண தெய்யோ என்று பெளத்த சிங்களவர்களால் அழைக்கப்படும் பிள்ளையார். அந்தப்பிள்ளையாரையே இங்குள்ள புகைப்படமொன்றில் நீங்கள் காண்கின்றீர்கள்.

தென்னிலங்கையில் இவை போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல புராதனக் கட்டடங்களுள்ளன.இவற்றையெல்லாம் நாம் சுற்றுலாக்களில் சென்று பார்க்கவேண்டும். துரதிருஷ்ட்டவசமாக நாட்டில் இதுவரை நிலவிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் காரணமாக இவ்வகையான பழமையின் சின்னங்களையெல்லாம் இனக்கண் கொண்டு பார்க்கும் போக்கு நிலவியது. அந்நிலை இனியாவது மாற வேண்டும். நாட்டு மக்கள் மத்தியில் நிலவும் சகல வகையான சமூக, அரசியல் முரண்பாடுகளெல்லாம் காலப்போக்கில் நீங்கி, மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத்திரும்பும் நிலை உருவாகட்டும். உருவாகுமென்று நம்புவோம். பாருங்கள் இது போன்ற ஆலயங்களில் இந்துக்கடவுள்களும், பெளத்தக்கடவுள்களும் எவ்வ்வளவு ஒற்றுமையாக விளங்குகின்றார்கள். நாம்தாம் வெளியில் அடிபட்டுக்கொண்டிருக்கின்றோம்.

முகநூல் எதிர்வினைகள்:

1. Maheswaran Murugaiah அநேகமாக எல்லா புத்த விகாரைகளிலும் பிள்ளையார் சிலை காணப்படுகின்றது .தங்களின் காவல் தெய்வம் என்றும் சொல்வார்கள்

2. Pena Manoharan நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் அநுராதபுரம் ரூவானவெலிசாய கோயிலில் உட்பிரகாரத்தில் எல்லாளன் ஒரு திசையில் யானைமீதும் எதிர்த்திசையில் துட்டகைமுனுவும் இருந்ததை என் பால்யத்தில்....அறுபதுகளில் பார்த்த ஞாபகம்.இது சரிதானா என்பதைப் பழைய படங்கள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.2015 இல் நான் போனபோது இரண்டு சிலைகளும் வெளிப்பிரகாரத்தில் தற்காலிகக் கூடாரத்தில் மூடி வைக்கப்பட்டிருந்தது.உங்கள் கணினி...கட்டிடத் தொழில்நுட்ப ஞானத்தால் என் கூற்றை ஆய்வு செய்து உண்மைநிலை உரைக்க முடியுமா நண்பரே..

3. Thilina Kiringoda Giri, Anjalendran came for only two sessions of experiencing in Architecture in the first year. Two weeks later Prof. KRS Pieris sacked him as a Visiting Lecturer because he had criticized Prof. Pieris.

4. Giritharan Navaratnam //Two weeks later Prof. KRS Pieris sacked him as a Visiting Lecturer // Hi Kiringoda, it is news to me. I still remember visiting Kelaniya Raja Maha Vihara with him. It was a memorable visit for me. For me, it looks like he came more than two sessions. May be I am wrong. Kelaniya visit is still fresh in my memory. We also visited few beautiful houses and Independence Square with him, I think.

5. Thilina Kiringoda Do not forget that I was the batch rep.

6.Athanas Jesurasa '// பாருங்கள் இது போன்ற ஆலயங்களில் இந்துக்கடவுள்களும், பெளத்தக்கடவுள்களும் எவ்வ்வளவு ஒற்றுமையாக விளங்குகின்றார்கள். நாம்தாம் வெளியில் அடிபட்டுக்கொண்டிருக்கின்றோம்.// - சடப் பொருள்கள் சண்டை பிடிக்க முடியாதுதானே! அதே பிள்ளையார் சிலைகளைக் குளத்தில் வீசிவிட்டு, "பிள்ளையார் குளிக்கப் போய்விட்டார்" (கணதெய்யோ நான்ட கியா) என்று கூக்கிரலிட்டதெல்லாம் யதார்த்தத்தில் நடந்துமுள்ளன!

7. Siva Sivakumaran I remember him as a quite outspoken architect, speaking his mind not fearing about the established architects or academics. Can't think of anyone else of that calibre - perhaps Vidura is another one...

8. Giritharan Navaratnam Hi kiringoda , Siva, Siva Sivakumaran , is one year senior to us. I hope you remember him.He was staying at Molpey with Baskaran & Kunasingam..

9. Siva Sivakumaran Thilina, to further refresh your memory, I left Justin's just before you joined.

10.Thilina Kiringoda Siva Sivakumaran I remember you. During my first year, your batch mates Hiran Leitan and Praneeth Amaratunga and I were in the same boarding house at Rawatawatta. After they had left RL Ravichandra joined me. From your batch only 7 are remaining in the country. Dotta, Dottie, Ganepola, Panapitiya, Anura Jayathilaka and Dharshanie. From ours Piyal, Saba, Nihal Bada, Kulatunga, Mandawela, Saroja, Champa and Chaya are in the country. Shanthi and Aryadasa passed away. We are planning to celebrate the 40th year of our getting together in October this year. I am trying to collect contact details of our batch mates who are domiciled abroad. If you know any pl forward it to me via e-mail: ltkirin@hotmail.com.


42.  வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக்குறிப்புகள் 4: லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function)

ஒரு கட்டடத்தின் அல்லது பொருளொன்றின் வடிவமானது அக்கட்டடம் அல்லது அப்பொருள் எக்காரணத்துக்காகப் பாவிக்கப்படுகின்றதோ அக்காரணத்துக்கேற்ப பொருத்தமான வடிவமொன்றினைப்பெறும். அதாவது அக்கட்டடம் அல்லது அப்பொருளின் செயற்பயனுக்கேற்ப அவற்றின் வடிவமுமிருக்கும். இதனைத்தான் வடிவம் செயற்பயனைத்தொடர்தல் (Form follows function) என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது. இக்கருதுகோள் அல்லது சிந்தனை் அல்லது விதி இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் அல்லது தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் பொருளொன்றின் வடிவமைப்பில் முக்கியமானதொரு கருதுகோளாகும்.

இக்கோட்பாட்டின் காரணகர்த்தா புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவன் ( Louis Sullivan) ஆவார். ஆயினும் பொதுவாக இக்கோட்பாட்டின் காரணகர்த்தாவாகத் தவறாகச் சிற்பி ஹொரதியொ கிறீனோ , Horatio Greenough (1805 – 1852) , குறிப்பிடப்பட்டாலும் அது தவறானது. சிற்பி ஹொரதியொ கிறீனோவை இவ்விதம் குறிப்பிடுவதற்குக் காரணம் அவரது கட்டுரைகளின் தொகுதியொன்று 'வடிவமும், செயற்பயனும்: கலை மீதான ஹொரதியோ கிறீனோவின் குறிப்புகள்' (Form and Function: Remarks on Art by Horatio Greenough.) என்னும் பெயரில் வெளிவந்ததாகும். ஆயினும் வடிவமானது எப்பொழுதுமே செயற்பயனைத் தொடரும் என்னும் கூற்றினை முதன் முதலில் பாவித்தவராகக் கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவனைத்தான் குறிப்பிட வேண்டும்.

தேரோ , எமர்சன், மெல்வில் போன்றோரின் பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட லூயிஸ் சல்லிவன் சிற்பி ஹொரதியோ கீறினோவுக்குப் பல வருடங்களுக்குப் பின் பிறந்தவர். அவர் 1896இல் எழுதிய 'கலைத்துவ அடிப்படையிலான உயர்ந்த ஆபிஸ் கட்டடம்' (The Tall Office Building Artistically Considered) என்னும் கட்டுரையில் இக்கருதுகோளினை முதன் முதலாகப் பாவித்திருகின்றார். இருந்தாலும் தனது இக்கருதுகோளுக்குக் காரணமானவராக அவர் கி.மு 80–70 காலகட்டத்தில் பிறந்து கி.மு 15 ஆண்டளவில் இறந்த புகழ்பெற்ற ரோமன் கட்டடக்கலைஞரான மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ (Marcus Vitruvius Pollio) என்பவரைப் பின்னொரு சமயம் குறிப்பிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ புகழ்பெற்ற 'கட்டடக்கலைபற்றி' என்னும் அர்த்தத்திலான De architectura என்னும் கட்டடக்கலை பற்றிப் பத்துத் தொகுதிகள் அடங்கிய நூலொன்றினை எழுதியிருக்கின்றார். கு.மு. காலகட்டத்தில் எழுதப்பட்ட அந்நூலானது கட்டடக்கலை வரலாற்றில் மிகவும் முக்கியமானதோரு நூலாகக் கருதப்படுகின்றது. இந்நூலில் அவர் கட்டடமொன்றின் அமைப்பானது திடம், பயன் மற்றும் அழகு (firmitas, utilitas & venustas) ஆகிய மூன்று முக்கியமான பண்புகளை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

கட்டடக்கலைஞரான லூயிஸ் சல்லிவன் 'வடிவமானது எப்பொழுதும் அதன் செயற்பயனைத் தொடரும்' (form ever follows function) என்ற கூற்றினைத்தான் தனது 'கலைத்துவ அடிப்படையிலான உயர்ந்த ஆபிஸ் கட்டடம்' என்னும் கட்டுரையில் பாவித்திருந்தாலும், அக்கூற்றே காலப்போக்கில் எளிமைப்படுத்தப்பட்டு 'வடிவம் அதன் செயற்பயனைத் தொடரும்' (form follows function) என்று பரிணாமடைந்து கட்டடக்கலை உலகில் நிலைத்து நின்று விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உருக்கினாலான உயர்ந்த கட்டடங்களுக்குரிய வடிவினை உருவாக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வழக்கிலிருந்த பாணிகளை மீறிப் புதிய பாணிகளைச் சூழல் வேண்டி நின்ற வேளையில் , கட்டடமொன்றின் வடிவமானது பழைய கோட்பாடுகளின் அடிப்படையில் (form follows precedent) தெரிவு செய்யப்பட-போவதில்லையென்றால் , கட்டடமொன்றின் வடிவமானது அக்கட்டடத்தின் நோக்கத்துக்கேற்ப , செயற்பயனுக்கேற்பத் (form follows function) தெரிவு செய்யப்பட வேண்டுமென்று லூயிஸ் சல்லிவன் கருதினார். 'செயின்ற்' (புனித) லூயிஸ், மிசூரியிலுள்ள லூயிஸ் சல்லிவன் வடிவமைத்த வெயின்ரைட் (The Wainwright Building ) கட்டமானது அவரது 'வடிவம் செயற்பயனைத் தொடரும்' கருதுகோளினை வெளிப்படுத்தி நிற்கும் முக்கியமான கட்டடங்களிலொன்றாகும்.
* function என்னும் ஆங்கிலச்சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. ஒரு கட்டடமொன்றின் function என்னும்பொது அது செயற்படுகையில் அதன் பயன் என்னும் அர்த்தத்தைக் கொள்ளலாமென்பதன் அடிப்படையில் இங்கு 'செயற்பயன்' என்னும் சொல்லினைப் பாவித்துள்ளேன்.

'செயின்ற்' (புனித) லூயிஸ், மிசூரியிலுள்ள லூயிஸ் சல்லிவன் வடிவமைத்த வெயின்ரைட் (The Wainwright Building ) கட்டடமானது அவரது 'வடிவம் செயற்பயனைத் தொடரும்' கருதுகோளினை வெளிப்படுத்தி நிற்கும் முக்கியமான கட்டடங்களிலொன்றாகும். - 'செயின்ற்' (புனித) லூயிஸ், மிசூரியிலுள்ள லூயிஸ் சல்லிவன் வடிவமைத்த வெயின்ரைட் (The Wainwright Building ) கட்டடம். -

ngiri2704@rogers.com

நன்றி: http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4380:-4-louis-sullivan-form-follows-function&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54


 43. வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக் குறிப்புகள் 5: சேதனக் கட்டடக்கலை (Organic Architecture).
நவீனக் கட்டடக்கலையின் கோட்பாடுகளிலொன்று சேதனக் கட்டடக்கலை (Organic Architecture). இதன் மூலவர் புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான ஃப்ராங் லாயிட் ரைட் ( Frank Lloyd Wright) . இதனை , இச்சொல்லாட்சியினை், அவர் தனது சூழலுக்கு இயைந்த கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிக் குறிப்பிடுகையில் பாவித்ததன் மூலம் அறிமுகப்படுத்தினார். இதனை இவர் வடிவமானது அதன் செயற்பயனை அல்லது பாவனைப்பயனைத் தொடருமொன்று (form follows function) என்று நம்பிய கட்டடக்கலைஞரும் , ஃப்ராங் லாயிட் ரைட்டின் கட்டடக்கலைத்துறை வழிகாட்டியுமான கட்டடககலைஞர் லூயிஸ் சல்லிவனின் ( Louis Sullivan) கட்டக்கலைக் கருதுகோள்களின் வாயிலாக வந்தடைந்ததாக கட்டடக்கலை விமர்சகர்கள் கருதுவர். மேலும் சிலர் தோரோவின் மீ இறையியல் (Transcendentalism) சிந்தனையே இவரை அதிகம் பாதித்ததாகக் கருதுவர். ஃப்ராங் லாயிட் ரைட் வடிவமும், அதன் செயற்பயனும் ஒன்றென்று (form and function are one.) வாதிடுவார். வடிவம் அதன் செயற்பயனைத்தொடர்வது என்னும் கோட்பாடு அல்லது சிந்தனை நவீனக் கட்டடக்கலையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடோ அத்தகையதொரு கோட்பாடே ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக் கட்டடக்கலை என்னும் கோட்பாடும்.

சேதனக் கட்டடக்கலை என்றால் என்ன?
இதனை ஒரு கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிய நவீனத்துவச் சிந்தனையெனலாம். இச்சிந்தனையான கட்டடமொன்றினை உயிர்த்தொகுதியாக உருவகித்து உயிர் வடிவங்கள் எவ்விதம் அவை அவற்றுக்குரிய உயிர்கள் வாழும் இயற்கைச் சூழலுக்கேற்ப  , சூழலுடன் இயைந்து உருவாகினவோ, சூழலுக்கு இணக்கமாக அமைந்துள்ளனவோ அவ்வாறே கட்டடமொன்றின் வடிவமும் (form) , அமைப்பும் (structure) அக்கட்டடம் அமையவுள்ள இயற்கைச்சூழலுக்கேற்பவிருப்பதுடன் , இணக்கமாகவுமிருக்க  வேண்டும் என்று எடுத்தியம்புகின்றது. ஆக, சேதனக்கட்டடக்கலையானது கட்டடம் வடிவமைக்கப்படும் வெளியினை அதன் உட்புற, வெளிப்புறங்களுடன் கலந்துவிடும் வகையில் அவற்றுடன் ஒன்றிணைக்கின்றது. இவ்விதமாக உருவாக்கப்படும் கட்டடச்சூழலினை அக்கட்டடம் உருவாகும் இயற்கைச்சூழலிலிருந்து வேறுபடுத்த முற்படாது, அச்சூழலுடன் ஒன்றாகும் வண்ணம் கலந்திருக்க வழி சமைக்கின்றது. ஃப்ராங்ல் லாயிட ரைட் வடிவமைத்த பல கட்டடங்கள் குறிப்பாக அவரது சொந்த இல்லங்கள் (ஸ்பிரிங் கிறீன், விஸ்கான்சின், அரிசோனா போன்ற இடங்களில் அமைந்துள்ள) இவ்விதமான அவரது கட்டடக்கலைச்சிந்தனைபோக்கான சேதனக் கட்டடக்கலைச் சிந்தனையினைப் பிரதிபலிப்பவை. உண்மையில் ஃப்ராங் லாயிட ரைட் கட்டடக்கலைப்பாணிகளைப்பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. ஏனென்றால் அவர் ஒவ்வொரு கட்டடமும் அது அமைந்திருக்கும் இயற்கைச்சூழலிலிருந்து இயல்பாக உருவாக, வளர வேண்டுமென்று திடமாக நம்பினார்.

ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக்கட்டடக்கலை வடிவமைப்பை வெளிப்படுத்தும் கட்டடங்களில் மிகவும் புகழ்பெற்ற கட்டடமாக அவரது 'வீழும் நீர்' என்றழைக்கப்படும் (Fallingwater) வீட்டினைக் குறிப்பிடலாம். தென்மேற்குப் பென்சில்வேனியாவில், இயற்கைச்சூழலுக்கு மத்தியில் 1935இல் அமைக்கப்பட்டுள்ள வீடு அது. லிலியன் காவ்மானும் அவரது கணவரான எட்கர் காவ்மானுக்காகவும் அவர்கள் வார இறுதி நாள்களில் தங்குவதற்காக ஃப்ராங் லாயிட் ரைட்டினால் வடிமைக்கப்பட்ட அவ்வீடானது இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கட்டடடங்களிலொன்றாக, நவீனத்துவக் கட்டடக்கலையின் சிறந்த வெளிப்பாடாகக்கருதப்படுகின்றது. அத்துடன் ஃப்ராங் லாயிட் ரைட் வடிவமைத்த மிகச்சிறந்த கட்டமாகவும் கருதப்படுகின்றது. மலைப்பாங்கான காட்டுப் பகுதியில் நீர்வீழ்ச்சி பாயும் பாறைக்கு மேல், அவ்வியற்கைச்சுழலுடன் இயைந்து போகும் வகையில் இணக்கமாக அமைக்கப்பட்டுள்ள வீடு அது. 1963ஆம் ஆண்டிலிருந்து மேற்குப் பென்சில்வேனிய நகரினால் நூதனசாலையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தற்போது கட்டடக்கலையில் ஆர்வமுள்ள, கட்டடக்கலை கற்க விருப்பமுள்ள உயர்தரப்பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கோடைக்கால முகாம்கள் அங்கு வருடா வருடம் அங்கு நடைபெறுகின்றன. அதன் பொருட்டு அங்கு மேலும் பல இருப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக்கட்டடக்கலை வடிவமைப்பை வெளிப்படுத்தும் கட்டடங்களில் மிகவும் புகழ்பெற்ற கட்டடமாக அவரது 'வீழும் நீர்' என்றழைக்கப்படும் (Fallingwater) வீட்டினைக் குறிப்பிடலாம்.

கட்டடக்கலை வரலாற்றில் நவீனக் கட்டடக்கலைக் கோட்பாடுகளிலொன்றான சேதனக்கட்டடக்கலை வடிவமைப்பை வெளிப்படுத்தும் இக்கட்டடமும், இச்சேதனக்கட்டடக்கலைக் கோட்பாடும் முக்கியமானவை. இக்கோட்பாட்டின் மூலவரான அமெரிக்கக் கட்டடக்கலைஞர் ஃப்ராங் லாயிட ரைட் இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் மிகச்சிறந்த அமெரிக்கக் கட்டடக்கலைஞராகக் கருதப்படுகின்றார். கட்டடக்கலையில் ஆர்வமுள்ள எவரும் அமெரிக்கா செல்லும்போது தவறாமல் சென்று பார்க்க வேண்டியதொரு கட்டடம்தான் இந்த 'வீழும் நீர்' இல்லமும்.

இச்சேதனக் கட்டடக்கலையினை வெளிப்படுத்தும் வடிவமைப்புடன் அமைக்கப்பட்ட அண்மைக்காலக் கட்டடங்களிலொன்று புதி தில்லி, இந்தியாவில் அமைந்துள்ள் தாமரை ஆலயத்தினைக் ( Lotus Temple, India; Architect: Fariborz Sahba - Iranian-Canadian -) குறிப்பிடலாம். இதனை வடிமைத்தவர் ஈரானியக் கனடியக் கட்டடக்கலைஞரான Fariborz Sahba என்பவர். பெரியதொரு தாமரை மலர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இக்கட்டமானது அனைத்து மதப்பிரிவினரும் வந்து வணங்கும் பஹாய் இல்லமாகும் (Bahai House).

உசாத்துணைக்காகப் பாவித்த கட்டுரைகள்:
1. Organic Architecture as a Design Tool Frank Lloyd Wright's Natural Harmony by Jackie Craven
2. Examples of Organic Architecture Buildings Concept Characteristic By Jay Amrutia
3. Frank Lloyd Wright integrated architecture into nature at Fallingwater by Eleanor Gibson
4. Organic architecture From Wikipedia, the free encyclopedia


44. வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக் குறிப்புகள் 6: 'குறைவில் நிறையச் (Less is more) சாதித்த கட்டடக்கலைஞர் லட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies Van der Rohe)
ஜேர்மனியில் பிறந்து 1938இல் அமெரிக்கா குடிபுகுந்து அமெரிக்காவில் நவீனத்துவக் கட்டடக்கலையின் முக்கிய கட்டடக்கலைஞராக விளங்கியவர் 'லட்விக் மீஸ் வான் டெர் ரோ' (Ludwig Mies Van der Rohe).  இவர் தனது கட்டடக்கலைத் தொழிலை ஜேர்மனியில் ஆரம்பிப்பதற்கு முன்னர் அமெரிக்கக் கட்டடக்கலைஞரான பீட்டர் பெஹ்ரென்ஸுடன் (Behrens) பணி பழகுநராகச் சேர்ந்து தன் கட்டடக்கலைத் தொழிலினை ஆரம்பித்தவர்.

கனடியர்களுக்குக் குறிப்பாகட்த் தொரோண்டோ வாசிகளுக்கு மீஸ் வான் டெர் ரோ என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது நகரின் வர்த்தக மையத்தில் உயர்ந்து நிற்கும் TD  centre  (1964)
தான். இதுபோல் அமெரிக்க வாசிகளுக்கு, குறிப்பாக நியுயார்க் வாசிகளுக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது அவரது சீகிரம் கட்டடடம்தான் (Seagram Building 1958). இவ்விரு கட்டடங்களைப் பார்த்ததுமே இவரின் தனித்தன்மை உடனே புலப்படும்.
இவர் உருக்குச் சட்டங்கள் (Steel Frames), கண்ணாடி (Glass)  போன்ற புதிய கட்டடப்பொருட்களைப் பாவிப்பதில் முன்னோடிகளிலொருவராக விளங்கினார். அதில் மிகுந்த தெளிவுடனிருந்ததுடன் தனது பாணியினை 'ட்தஓலும், எலும்பும்' (Skin and Bones) என்றும் அழைத்தார். தேவையற்ற கட்டட அலங்காரங்களை இவர் தவிர்த்ததுடன் , கட்டடங்களின் உள்வெளியினை (interior space)  முழுமையாக, தேவைக்கேற்ப  திரைச்சுவர்கள் (curtain walls) மூலம் பிரித்துப் பாவிக்கும் வகையில் தனது கட்டட வடிவமைப்புகளை உருவாக்கினார்.

1929இல் பார்சலோனா கண்காட்சியிலிருந்த ஜேர்மன் விளையாட்டரங்கில் பச்சைக்கண்ணாடிகளைக் கொண்டு வடிவியல் ஒழுங்கில்  பச்சைக் கண்ணாடி, பளிங்குக் கல் (marble), 'குரோம்' தூண்கள் (chrome columns), ஒனிக்ஸ் எனப்படும் ஒருவகை இரத்தினக் கல்,  இத்தாலி நாட்டில் காணப்படும் travertine என்னும் ஒருவகைக் கிறிஸ்டல் அல்லது படிகக் கல் ஆகியவற்றைப் பாவித்து அமைக்கப்பட்ட தளங்கள் (planes) ஆகியவற்றைப் பாவித்திருக்கின்றார் இவர்.


இவரது புகழ்மிக்க கட்டடமான 'சீகிரம்' கட்டடம் எளிமையானதும், பொதுவாகத் தேவையற்ற (superfluous)  மிதமிஞ்சிய அலங்காரங்களால் மறைக்கப்பட்டிருக்கும் நிலை  தவிர்க்கப்பட்டு கட்டுமான உறுப்புகள் (structural elements)  வெளியில் தெரியும் வகையில் அமைந்த வானுயரக் கட்டடங்கள் உருவாவதற்குரிய புதிய சகாப்தமொன்றினைக் கட்டடக்கலை வரலாற்றில் உருவாக்கி வைத்ததெனலாம்.

லட்விக்  மீஸ் வான் டெர் ரோ என்றதும் புகழ்பெற்ற இன்னுமொரு சொற்றொடரும் நினைவுக்கு வரும். அது குறைவே நிறைய என்னும் அர்த்தத்தைத்தரும் Less is more என்னும் சொற்றொடராகும். இச்சொற்றொடரைத்தாம் முதலில் தனது கட்டடக்கலைக் குருவான பீட்டர் பெஹ்ரென்ஸிடமிருந்து தான் கேட்டதாகக் கூறுமிவர் அவர் அதனைப்பாவித்த அர்த்தம் வேறு. தான் பாவித்த அர்த்தம் வேறென்றும் கூறுவார். தான் அவரிடம் பணி புரிந்த காலகட்டத்தில் ஒருமுறை தொழிற்சாலையொன்றின் முகப்புக்கான வடிவமைப்புகளாகப் பல வரைபடங்களைக் குருவான பீட்டர் பெஹ்ரென்ஸிடம் காட்டியபோது அவர் குறைவானதே அதிகம் என்னும் அர்த்தத்தில் அத்தொடரைப் பாவித்ததாக ஒருமுறை நினைவு கூர்ந்திருக்கின்றார். ஆனால் லட்விக்  மீஸ் வான் டெர் ரோ கட்டடமொன்றின் தேவையற்ற அலங்காரங்களை ஒதுக்கி, மிகவும் எளிமைப்படுத்தி, கண்ணாடி, உருக்கும் மற்றும் திரைச்சுவர்களைப் மற்றும் புதிய கட்டடப்பொருட்களைப் பாவித்து காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புதியதொரு கட்டடக்கலைப்பாணியின் அறிமுகப்படுத்தினார். பழைய பாணிக் கட்டடக்கலையிலிருந்து அதிகமாகப்பாவிக்கப்பட்ட மிதமிஞ்சிய தேவையற்ற அலங்காரங்களையெல்லாம் குறைத்து, மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட நவீன வானுயரக் கட்டடங்களை அமைத்ததைக் குறிப்பிடுதற்கே 'குறைவில் நிறைய'  (Less is more)  என்னும் சொற்றொடரினைப் பயன்படுத்தினார்.

இவர் பெயரைக்கூறும் பல வானுயரக் கட்டடங்கள் பல்வேறு நாடுகளிலுள்ளன. கட்டடங்கள் தவிர தளபாட வடிவமைப்பிலும் காத்திரமான பங்களிப்பினை நல்கியவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

 இவ்விதமான புதியதொரு கட்டடக்கலைப்பாணியினைக் காலத்துக்கேற்ப அறிமுகப்படுத்திய லட்விக்  மீஸ் வான் டெர் ரோ நவீனக் கட்டடக்கலையின் மூலவர்களில் முக்கியமான ஒருவர் என்னும் கூற்று மிகையானதொரு கூற்றல்ல.

        
முகநூல் எதிர்வினைகள்:
Luthuf Ameen  உங்களது கட்டடகலை தமிழ் பதிவுகள் மிகவும் உதவியாக உள்ளது எங்களை போன்ற கட்டடகலை மாணவர்களுக்கு. மிக்க நன்றி

Giritharan Navaratnam:  நன்றி நண்பரே.தமிழில் கட்டடக்கலை, நகர அமைப்பு போன்ற விடயங்கள் பற்றிய நூல்கள், கட்டுரைகள் குறைவு. அதனால்தான் ஆரம்பத்தில் சுருக்கமாகக் கட்டடக்கலைக் குறிப்புகள் என்னும் தலைப்பில் கட்டக்கலை பற்றிய பல்வேறு விடயங்கள் பற்றித் தமிழில் எழுத வேண்டுமென்று எண்ணினேன். உங்களைப்போன்றவர்களுக்கு இவை பயனளிப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது. கருத்துகளுக்கு நன்றி.

நன்றி: பதிவுகள்.காம்

 45. கட்டக்கலைக்குறிப்புகள் 7 : லெ கொபூசியேவின் (Le Corbusier) நவீனக்கட்டடக்கலைக் கருதுகோள்கள்! 
 
" A house is a machine to live in " - Le Corbusier -

நவீனக்கட்டடக்கலையின் முன்னோடிகளில் பன்முகத்திறமை வாய்ந்த ஆளுமைகளில் முதன்மையானவர் சுவிஸ்-பிரான்ஸ் கட்டடக்கலைஞரான லே கொபூசியே ( Le Corbusier ) . சுவிஸில் பிறந்து பிரான்சு நாட்டின் குடிமகனானவர் இவரின் இயற்பெயர் சார்ள்ஸ் எடுவார்ட் ஜென்னெரெ  ( Charles-Édouard Jeanneret) நகர அமைப்பு, கட்டடக்கலை, ஓவியம், தளபாட வடிவமைப்பு , எழுத்து எனப்பன்முகத்திறமை வாய்ந்த ஆளூமை மிக்கவர் இவர். உலகின் பல நாடுகளிலும் ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிலெல்லாம் இவரது கை வண்ணம் மிளிர்கிறது. சுதந்திர இந்தியாவில் முதன் முதலாகப் புதிதாக அமைக்கப்பட்ட சண்டிகார் நகர வடிவமைப்பினை அமைத்தவர் இவரே. அத்துடன் அந்நகரிலுள்ள பல முக்கியமான கட்டடங்களையும் வடிவமைத்தவரும் இவரே.

நவீனக் கட்டடக்கலையில் முன்னோடிகளில் முக்கியமான எனக்குப் பிடித்த ஆளுமைகளாக ஃப்ராங் லாயிட் ரை (Frank Lloyd Wright ) , மீஸ் வான்ட ரோ (Mies van der Rohe)  , லி கொபூசியே ஆகியோரையே குறிப்பிடுவேன். இவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவராக நான் கருதுவது லி கோபுசியேயைத்தான். அதற்குக் காரணம் இவரது பன்முகத் திறமையும், படைப்பாக்கத்திறனும், சீரிய சிந்தனை மிக்க எழுத்துகளும்தாம். இம்மூவரும் முறையாகக் கல்விக்கூடங்களில் கட்டடக்கலைத்துறையில் கற்று கட்டடக்கலைஞராக வந்தவர்களல்லர். தம் சொந்தத் திறமையினால் , அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற பயிற்சிகள் மூலம், இத்துறை சார்ந்த பாடங்கள் மூலம் தம் கட்டடக்கலையாற்றலை வளர்த்துச் சாதித்தவர்கள். முறையாகக் கர்நாடக சங்கீதம் கற்காமல் வந்து சிறந்த பாடகர்களாக விளங்கும் பாடகர் பாலசுப்பிரமணியம் போன்று , தம் சொந்தத்திறமை காரணமாகச் சிறந்து விளங்கியவர்கள்.

லி கொபூசியே என்றால் முதலில் நினைவுக்கு வருபவை அவரது புகழ்பெற்ற கூற்றான " ஒரு வீடானது வாழ்வதற்குரிய இயந்திரம்"  ("A house is a machine to live in"), என்னும் கூற்றும், நவீனக் கட்டடக்கலையில் கட்டட வடிவமைப்பு சார்ந்து அவர் கொண்டிருந்த ஐந்து முக்கிய கருதுகோள்களும் ஆகும். ஒரு வீடானது வாழ்வதற்குரிய இயந்திரம் என்னும் அவரது கூற்றின் முக்கிய அர்த்தம் என்னவெனில் ஒரு வீட்டின் சகல உறுப்புகளுமே மனித வாழ்வின் தேவைகளைத் தீர்ப்பதற்கான இயந்திரங்களே என்பதுதான். குளியல் அறை, சமையலறையிருந்து அனைத்து அறைகளுமே இயந்திரங்கள்தாம். இவ்விதமான பல இயந்திரங்களை உள்ளடக்கிய பெரும் இயந்திரமே ஒரு வீடு என்னும் அர்த்தத்தையே இவரது கூற்றான " ஒரு வீடானது வாழ்வதற்குரிய இயந்திரம்" என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது.

அடுத்து நவீனக் கட்டடக்கலையில் கட்டடமொன்றின் வடிவமைப்பைப்பொறுத்தவரையில் லி கொபூசியேயின்  ஐந்து பிரதான கருதுகோள்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

லி கொபூசியேயின் ஐந்து பிரதான கருதுகோள்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

1. தரைத்தளத்திலிருந்து கட்டடமொன்றினை உயர்த்திப்பிடிக்கும் தூண்கள் (Pilotis): உருக்குக் கம்பிகளினால் அல்லது உருக்கு வலையினால் வலிதாக்க்கப்பட்ட காங்கிரீட்டினால் ஆன தூண்கள். (Reinforced Concrete). இவ்விதமாகக் கட்டடமானது அதன் தரைத்தளத்திலிருந்து உயர்த்திப்பிடிக்கும் தூண்களினால் உயர்த்திப்பிடிக்கும் வகையில் கட்டடங்கள் அமையும்போது, அதனால் உருவாகும் வெளியினால் அதிக வெளிச்சம் அப்பகுதிக்குக் கிடைக்கின்றது. வாகனத்தை நிறுத்த அல்லது மேலும் பல தேவைகளுக்கு அவ்வெளியினைப் பயன்படுத்தும் நிலை உருவாகின்றது.

2.  தளத்தரையின் (Ground Plan)  சுதந்திரமான கட்டுப்பாடட்டற்ற திறந்த தள வடிவமைப்பு (Open Floor Plan) :  கட்டமொன்றின் நிறையினைத்தாங்குவதற்கு வலிய தூண்கள் இருப்பதால் , முன்பிருந்ததைப்போல் சுவர்கள் மூலம் கட்டடமொன்றின் நிறையினைத்தாங்கும் நிலைக்கு விடுதலை கிடைக்கின்றது. இதனால் கட்டடமொன்றின் , தளத்தினை, உள்வெளியினை (Interior Space)  விரும்பியவாறு , எவ்வித நிர்ப்பந்தங்களுமற்று வடிவமைக்கும் நிலை உருவாகின்றது.

3. சுதந்திர வடிவமைப்புக்கு இடம் தரும் முகப்பு (The free design of the façade ): கட்டடமொன்றினை பாரம் தாங்குவதைத் தூண்களை உள்ளடக்கிய கட்டுமான அமைப்பு செய்வதால், கட்டடமொன்றின் வெளிப்புறத்தை அதாவது வெளிப்புறச்சுவரினை கட்டட நிறையினைத் தாங்குவது போன்ற அதன் கட்டுமானத்தேவைக்கான பொறுப்பிலிருந்து விடுவிக்கின்றது. இதனால் வெளிப்புறத்தையும் விரும்பியவாறு வடிவமைக்கும் சுதந்திரம் கட்டடக்கலைஞர் ஒருவருக்கு ஏற்படுகின்து.

4. நீண்ட கிடை ஜன்னல்கள் (The Horizontal Window): சுவர்கள் கட்டடமொன்றின் பாரம் தாங்கும் பொறுப்பிலிருந்து தவிர்க்கப்படுவதால் அச்சுவர்களையும், அச்சுவர்களில் அமையக்கூடிய ஜன்னல்களையும் சுதந்திரமாக வடிவமைக்க முடியும். நீண்ட கிடை ஜன்னல்களை அமைப்பதன் மூலம் கட்டடத்துக்கு வடிவு மட்டுமல்ல, உள்ளிருந்து பார்ப்பதற்கு நீண்ட கண்ணாடி ஜன்னல்கள் உதவுகின்றன. அத்துடன் உள்புறம் அதிக அளவில் வெளிச்சமும் கிடைக்கும் வழியேற்படுகின்றது.
 
5. கூரைத்தோட்டம் (Roof Garden ): சாய்வான கூரைகளுக்குப் பதில்  அமைக்கப்படும் காங்கிரீட்டினாலான கிடையான் கூரைகளின் மேல் கூரைட்த்தோட்டங்கள் அமைப்பதால் பல நன்மைகளுள்ளன. ஒன்று கட்டடமொன்றினைக் கட்டுவதால் எடுக்கப்பட்ட நிலத்தின் பகுதியினை ஈடு செய்வதாக முடிகின்றது. அடுத்தது கிடையான காங்கிரீட் கூரைகளுக்கு பாதுகாப்பினையும் வழங்க முடிகின்றது. இவை போன்ற பயன்களுடன் தோட்டங்கள் மானுடருக்கு இன்பத்தினையும் தருகின்றது.

லி கொபூசியே வடிமைத்த  பாரிஸிலுள்ள வீடான வில்லா சவோஜ் (Villa Savoge) லி கோபூசியேயின் நவீனக்கட்டடக்கலை பற்றிய ஐந்து கருதுகோள்களையும் உள்ளடக்கிய, சர்வதேசபாணியிலமைந்த நவீனக்கட்டடக்கலையின் மிகச்சிறந்த உதாரணமாகக் குறிப்பிடக்கூடிய கட்டடம்.

லி லொபூசியேயின் இவ்வைந்து நவீனக்கட்டடக்கலை பற்றிய கருதுகோள்களையும் வெளிப்படுத்தும் வகையில் அவரது கட்டடங்கள் அமைந்திருந்தன. நவீனக்கட்டடக்கலையின் சர்வதேசப் பாணியின் (Internattional Style) பிரதான பண்புகளாக தேவையற்ற அலங்காரங்களற்ற கட்டடக்கூறுகள், வளைவுகளற்ற நேர்க்கோடுகளில் அமைந்த தளங்கள், சுவர்களையுள்ளடக்கிய வடிவமைப்பு, ஒளி வழங்கும் நீண்ட கண்ணாடி ஜன்னல்கள், நவீன கட்டடப்பொருட்களாலான கண்ணாடி, வவூட்டப்பெற்ற காங்கிரீட் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். லி கோபூசியேயின் கட்டடங்கள் இவ்வகையான பாணியிலமைந்த கட்டடங்களுக்கு மிகச்சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன.

உசாத்துணைக் குறிப்புகள்:
1 . Le Corbusier's Five Points of Architecture  -  http://www.geocities.com/rr17bb/LeCorbusier5.html
2. Wikipedia: Le Corbusier's Five Points of Architecture  -  https://en.wikipedia.org/wiki/Le_Corbusier%27s_Five_Points_of_Architecture
3. காணொளி:  VIDEO: Villa Savoye, The Five Points of a New Architecture  by Karissa Rosenfield - https://www.archdaily.com/430550/video-le-corbusier-s-five-points-of-architecture
4. book: Towards A  New Archotecture_ https://monoskop.org/images/b/bf/Corbusier_Le_Towards_a_New_Architecture_no_OCR.pdf
5. Wikipedia notes on Modern Architecture

No comments:

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (1& 2) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று: நகரத்து அணில்! மாதவன் தான் வசித்து வந்த கட்டக்காட்டு விருட்சக் கூட்டிலிருந்து  வெளியில் இறங்கினான். எதிரே 'டொரோண்டோ...

பிரபலமான பதிவுகள்