Sunday, June 2, 2019

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி இரண்டு (11 - 20)

11. இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்ள 'தேசிய இலக்கியமும், மரபுப்போராட்டமும்' என்னும் நூல் பற்றியுமான பதிவு!.

இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றைப்பொறுத்தவரையில் முக்கியமான காலகட்டங்களாக 'மறுமலர்ச்சி'க் காலகட்டத்தையும், 'இலங்கை எழுத்தாளர் முற்போக்குக் கழகக்' காலகட்டத்தையும் குறிப்பிடலாம். இலங்கை மண்ணுக்கேயுரிய மண்வாசனை மிக்க தனித்துவம் மிக்க எழுத்துகளைப்படைக்க வேண்டுமென்று 'மறுமலர்ச்சிக்' குழு வழிவந்த இளைஞர்கள் எண்ணினார்கள். ஆனால் அந்நோக்கமே 'தேசிய இலக்கியம்' என்னும் கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் வழிச் செயற்பட்ட எழுத்தாளர்கள் , திறனாய்வாளர்கள். தேசிய இலக்கியம் பற்றிய புரிதலுக்காக எழுத்தாளர் இளங்கீரனின் 'மரகதசம்' சஞ்சிகையில் 'தேசிய இலக்கியம்' பற்றி 'மரகதம் ' சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் க.கைலாசபதி, ஏ.ஜே.கனகரட்னா, அ.ந.கந்தசாமி ஆகியோர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை.

இதனைத்தொடர்ந்து தினகரன் பத்திரிகையில் மரபினைப்பேணிய பண்டிதர்களுக்கும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களுக்குமிடையில் தலையெடுத்த 'மரபு' பற்றிய விவாதமும் முக்கியமானது. இரு சாராரும் தினகரன் பத்திரிகையில் நடாத்திய விவாதம் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வு.

'மரகதம்' சஞ்சிகையில் வெளியான 'தேசிய இலக்கியம்' பற்றிய கட்டுரைகளையும், தினகரன் பத்திரிகையில் நிகழ்ந்த மரபு பற்றிய விவாதக் கட்டுரைகள் சிலவற்றையும், வேறு சில கட்டுரைகளையும் தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கின்றனர் 'சவுத் ஏசியன் புக்ஸ்' (சென்னை) பதிப்பகத்தினர். தொகுத்தவர் எழுத்தாளர் சுபைர் இளங்கீரன். மிகவும் முக்கியமான தொகுப்பு.
இத்தொகுப்பில் 'மரகதம்' சஞ்சிகையில் வெளியான 'தேசிய இலக்கியம்' பற்றிய கட்டுரைகளை  எழுதியவர்கள்:

1. தேசிய இலக்கியம் என்றால் என்ன? - பேராசிரியர் க.கைலாசபதி (மரகதம் 1961).
2. தேசிய இலக்கியம்  -சில சிந்தனைகள் - ஏ.ஜே.கனகரத்தினா (மரகதம் செப்டம்பர்  1961)
3. தேசிய இலக்கியம் - அ.ந.கந்தசாமி (மரகதம் அக்டோபர் 1961)

இதுபற்றி மேற்படி நூலுக்கான முன்னுரையில் இளங்கீரன் அவர்கள் பின்வருமாறு கூறுவார்:

"1954இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  நிறுவப்பட்டது.  அது நடத்திய இலக்கிய இயக்கத்தினூடாக ஈழத்து எழுத்தாளர் மத்தியிலும் , ஈழத்துப் படைப்பிலக்கியம் சம்பந்தமாகவும் விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் ஏற்பட்டது.  எனவே ஈழத்தின் படைப்பிலக்கியம் தமிழ் என்னும் பொதுப்பரப்புக்குள் அடங்கும் அதே வேளையில், அதன் தனித்துவத்தைக் காட்டவும் அத்தனித்துவத்தை நமது  மக்கள் இனங்கண்டு அதன் மீது தமது இலக்கிய உணர்வைப் பதிய வைக்கவும் , நேசிக்கவும், யதார்த்தவாதக் கோட்பாட்டை எளிதில் புரிந்துகொள்ளவும் அதற்குத் 'தேசியம்' என்னும் சொற் பிரயோகம் தேவையாகவிருந்தது.  எனவே இ.மு.எ.ச தனது முதலாவது மாநாட்டில் முன்வைத்த ஜனநாயக யதார்த்தவாதக் கோட்பாட்டை அடியொட்டி இரண்டரை வருடங்களுக்குப் பிறகு 1960 இல் 'தேசிய இலக்கிய'த்தைப் பிரகடனம் செய்தது. இதனைத்தொடர்ந்து தேசிய இலக்கியம் பற்றிய விளக்கத்தை அளிக்க வேண்டியிருந்தது.  1961இல் வெளியான எனது கலை இலக்கிய சஞ்சிகையான 'மரகதம்' இப்பணியை ஏற்றது.  அதில் முதல் இதழில் பேராசிரியர் கைலாசபதி 'தேசிய இலக்கியம்' பற்றிய  தனது முதலாவது கட்டுரையை எழுதினார். அதனை அடுத்து இரண்டாவது மூன்றாவது கட்டுரைகளாக ஏ.ஜே.கனகரத்தினா, அ.ந.கந்தசாமி ஆகியோர் எழுதியதை மரகதம் வெளியிட்டது. "

தேசிய  இலக்கிய பற்றிய விழிப்புணர்வைப்பொறுத்துக்கொள்ளாத பழமைவாதிகள் மத்தியில் இதற்குக்கடுமையான எதிர்ப்பு எழுந்தது.  அதுபற்றியும் மேற்படி முன்னுரையில் இளங்கீரன் பின்வருமாறு கூறுவார்:

".. இலக்கிய உலகில் அரசோச்சிக் கொண்டிருந்த செல்வாக்கை இழந்திருந்த இலக்கிய சனாதனிகள் படைப்பிலக்கியவாதிகள் மீது கடும் தாக்குதலை நடாத்தினார்கள்.  கண்டனக்கணைகளை வீசினர். போதிய கல்வியறிவும் படிப்பும் இல்லாதவர்கள், தமிழ் மரபு தெரியாதவர்கள் மரபை மீறி எழுதும் மட்டமான எழுத்தாளர்கள்.  இவர்களின் இலக்கியம் இழிசனர் இலக்கியம் என்றெல்லாம் வசைபாடினர். இதனைத்தொடர்ந்து மரபுப்போராட்டம் தொடங்கியது. 1962 ஜனவரில் தினகரனில் 'தற்காலத் தமிழ் இலக்கியம் தமிழ் மரபுக்குப் புறம்பானதா?' என்னும், விவாதக்கட்டுரைகள் வெளியாயின. மரபுவாதிகள் தரப்பில் கலாநிதி ஆ.சதாசிவம், பண்டிதர் இளமுருகனார், பண்டிதர் வ.நடராஜன் போன்றோரும்,  எழுத்தாளர் தரப்பில் பேராசிரியர் சிவத்தம்பி, அ.ந.கந்தசாமி, இளங்கீரன் போன்றோரும் கட்டுரைகள் எழுதினர். இறுதியில் படைப்பிலக்கியவாதிகள் சார்பில் விவாதம் முடிவுற்றது. மேற்கூறிய  விவாதத்தில் நானும், அ.ந.க.வும் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன."

அக்கட்டுரைகள் விபரங்கள் வருமாறு:

1. 'ஈழத்து  சிருஷ்டி இலக்கியத்துக்கு குழி தோண்டும் முயற்சி' - அ.ந.கந்தசாமி (தினகரன் 2.1.1962)
2. மாறுதல் பெறுவதே மரபு - சுபைர் இளங்கீரன் (தினகரன் 1962 ஜனவரி 19,21,23 & 25)

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றி , இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் திறனாய்வு முயற்சிகள் பற்றி எழுத முனைவோர் முதலில் இது போன்ற நூல்களை வாசிக்க வேண்டும். காய்தல் உவத்தலினிறி எழுதப்பழகிக்கொள்ள வேண்டும். இளந்தலைமுறையினர் இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் கடந்த கால வரலாற்றினை அறிந்துகொள்ள இது போன்ற நூல்களைத் தேடியெடுத்து வாசிக்க வேண்டும். இவ்வகையில் சுபைர் இளங்கீரன் தொகுத்துள்ள 'தேசிய இலக்கியமும், மரபுப்போராட்டமும்' என்னும் நூல் முக்கியத்துவம் வாய்ந்தது. இது போன்ற நூல்கள் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் திறனாய்வுத்துறையில் பங்களிப்புச் செய்த இலக்கிய ஆளுமைகள் பற்றி அறிய உதவுகின்றன என்பதாலும் முக்கியமானவை. உண்மையில் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் பங்களிப்பானது நன்றியுடன் விதந்தோதப்பட வேண்டியது. முதன் முதலாக மக்களுக்காக இலக்கியம் படைத்தார்கள் அவர்கள். மக்கள் வாழும் சூழலின் சமூக, அரசியல் மற்றும் பொருளியல் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி அவர்கள் சிந்தித்தார்கள். 'தேசிய  இலக்கியம்' பற்றிய கோட்பாடு பற்றி விவாதித்தார்கள். அதனைத் தமிழ் இலக்கியத்தில் உள்வாங்கி வளப்படுத்தினார்கள். மரபுக்கெதிராகத் தர்க்கரீதியாக வாதங்களை முன்வைத்து மரபினை மீறினார்கள். பன்னாட்டு இலக்கிய முயற்சிகளை, கோட்பாடுகளை, கருத்துகளையெல்லாம் தமிழுக்குக் கொண்டுவந்தார்கள். இவ்விதமான காரணங்களினால் அவர்கள் முன்னெடுத்த முற்போக்கு இலக்கியமானது பெருமைப்படத்தக்க பங்களிப்பினை ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ளது. காத்திரமான வரலாற்றுப்பங்களிப்பு அது.

12. அமரர் வெங்கட் சாமிநாதன் நினைவாக.....

அக்டோபர் 20 அமரர் வெங்கட் சாமிநாதனின் நினைவுதினம். தமிழகத்தைச்சேர்ந்த கலை, இலக்கிய ஆளுமைகளில் என்னுடன் மிகவும் அதிகமாகத் தொடர்பு வைத்திருந்தவராக நான் கருதுவது அமரர் வெங்கட் சாமிநாதனைத்தான். இவ்வளவுக்கும் நான் அவரை ஒருபோதுமே நேரில் சந்தித்ததில்லை. அவர் இயல் விருது பெறுவதற்காகத் 'டொராண்டோ' வந்திருந்தபோதுகூட நான் அவரைச் சந்திக்கவில்லை. அவர் அப்பொழுது அவரை அழைத்தவர்களுடன் மிகவும் நேரமின்றி அலைந்துகொண்டிருப்பாரென்று எண்ணி நானும் அவரைச் சந்திக்கும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதன் பின்னரே அவர் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அதிகமாக அனுப்பத்தொடங்கினார். அவரது மறைவுக்கு முதல் நாள் வரையில் அவர் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அவ்வப்போது தன் மின்னஞ்சல்களில் தான் என்னை நேரில் சந்திக்காததையிட்டு வருந்தியிருப்பார். நான் தமிழகம் வரும்போது நிச்சயம் அவரைச் சந்திப்பேனென்று ஆறுதலாக அப்போதெல்லாம் பதில் அளிப்பதுண்டு. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை. அது என் துரதிருஷ்ட்டம்.

அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த குணங்களிலொன்று: இறுதி வரையில் தன் நிலை தளராமல், தனக்குச் சரியென்று பட்டதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் அந்தப்பண்புதான். நிறைய வாசித்தார். நிறையவே சிந்தித்தார். கலை, இலக்கியத்துறையில் அவர் தனக்கென்றோரிடத்தை ஏற்படுத்தி விட்டு அமரராகி விட்டார். அவர் இருந்தபோதே அவரைக்கெளரவிக்கும் முகமாக எழுத்தாளர்கள் திலிப்குமார், பா.அகிலன் போன்றவர்கள் 'வெங்கட் சாமிநாதன் வாதங்களும், விவாதங்களும்' என்னும் அரியதொரு தொகுப்பு நூலினை வெளியிட்டார்கள். மிகவும் பாராட்டுதற்குரிய பணி அது. அதில் என் கட்டுரையொன்றும் அடங்கியுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியைத் தருவது. அதன் மூலம் அவரைச் சந்தித்திருக்காவிட்டாலும், சந்தித்துப் பழகியதோர் உணர்வே எனக்கு எப்பொழுதுமுண்டு.


அவரது தொடர்ச்சியான மின்னஞ்சல்களும், பதிவுகள் இணைய இதழுக்கான அவரது ஆக்கப்பங்களிப்புகளும் ஒருபோதுமே அவரை என் நினைவிலிருந்து அகற்றி விடாதபடி செய்து விட்டன. அவரது நினைவாக அவரது இறுதிக்கால மின்னஞ்சல்கள் சிலவற்றை மீண்டும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

1. Swaminathan Venkat < vswaminathan.venkat@gmail.com>   06/02/15 at 5:43 AM
அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு,

இதோ நீங்கள் முன்னர் கொடுத்த முகவரிக்கு அனுப்பினேன். அது டெலிவரி ஆகாமல் திரும்பி விட்டது. நான் அனுப்பியதன் நகல் இதோ: அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்களுக்கு, நான் சென்னைய்லிருந்து பஙகளூரு வந்துவிட்டேன். சென்னைய்லிருந்த பொழுது படுக்கையிலிருந்து கீழே இரவு தூக்ககத்தில் விழுந்து விட்ட காரணமாக, மறுபடியும்  இடுப்பு எலும்பில் ஒரு பிளவு.  வாக்கர் வைத்துக்கொண்டு நடக்கிறேன். செனனை டாக்டர் சர்ஜரி தேவை என்றார்.  பங்களூர் டாகடர் அதெல்லாம் தேவையில்லை. it is only a slight hairline crack. it will unite by it self in due course.என்று சொன்னது நிம்மதியாக இருந்தது.

உங்கள் புதிய இ/மெயில் முகவரிக்கே அனுப்புகிறேன். வந்த சேர்ந்தது பற்றி எழுதினால், மறுபடியும் spam-ல் அகப்பட்டுக்கொண்டதோ இல்லை உங்களுக்குக் கிடைத்ததோ என்பது நிச்சயமாகும்.உடன் பதில் வந்தால் சேர்ந்துவிட்டது உங்களை என்றும்,, பதில் வராவிட்டால் spam -ல் போய் சிக்கிக்கொண்டுவிட்டது மறுபடியும் அனுப்பவேண்டும் என்றும் புரிந்து கொள்வேன்.

தங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் என் நன்றி.
அன்புடன்,
வெ.சா.

அது  திரும்பி விட்டதால், பழைய முகவரிக்கும் தேவகாந்தனுக்குமாக அஞுப்புகிறேன்.  மற்படியும் ஸ்பாமில் போய் விழுந்தால், தேவகாந்தனாவது  உங்களிடம் இதைச் சேர்ப்பார் அல்லவா. இந்த வினையான விளையாட்டு எவ்வளவு தரம் திரும்பத் திரும்ப நடக்குமோ, தெரியவில்லை.

அன்புடன்,
வெசா.

2.  Swaminathan Venkat < vswaminathan.venkat@gmail.com>   07/15/15 at 2:45 AM

அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்களுக்கு,  தங்ள் அக்கறைக்கும் கவலைகளுக்கும், எங்கிருந்தோ பல வேலைகளுக்கும் இடையே என் சிரமங்களுக்கு தீர்வு காண முனையும் அன்புக்கும் எப்படி நன்றி சொல்வது?

வலது கை விரல்கள் சரிவர ஒத்துழைப்பதில்லை. பாரலிஸிஸின் தொடக்கமோ என்னவோ தெரியவில்லை. இதற்கிடையில் லா;ப் டாப்பில் சில பாகங்கள் வேலை செய்ய மறுக்கவோ, சரி செய்யக் கூப்பிட்ட ஆள் என்னன்னவோ புதிய சௌகரிங்களையும், புதிய சிரமங்களையும் உருவாக்கிக் கொடுத்துச் சென்றுவிட்டான்.நான் வெளியே நடமாட முடியாத் மூட்டு வலி. எப்படியோ மறுமகளின் உதவியோடு சமாளித்து வருகிறேன்.  கொஞ்சம் அதிகம் தொந்திரவு செய்ய வேண்டுமென்றால், பங்களூரிலேயே இருக்கும் அன்பர் டெலிகாமில் வேலை செய்து இப்போது ஒய்வில் இருப்பவர், கொஞ்சம் தூரத்தில் இருப்பவர், எப்போதும் அலைந்து கொண்டிருப்பவர் கூப்பிடல் சிரமம் பாராது வருவார், உதவி செய்வார். ஆகவே நீங்கள் கவலைப் படவேண்டாம்.  மேலும் இதில் நான் எதிர் கொள்ளும் எல்லாவற்றையும் எப்படி அதன் தொழில் நுட்ப பாஷையில் சொல்வது. நண்பர் வந்தால் பார்த்துப் புரிந்து கொண்டு ஆவன செய்வார்.

தெருக்கூத்து தொடரின் கடைச்ப் பகுதி ஏன் பிரசுரமாகவில்லை. மேலே பார்த்தால் அந்த அட்டாச்மெண்ட் சரியாகத் தானே வந்திருக்கிறது.  சரி மறுபடியும் பழைய தகராரோறோ என்று நினைத்தேன். தங்கள் மெயில் இதோ வந்ததும் சந்த கவலை தீர்ந்தது. மறுபடியும் தங்கள் அன்புக்கு நன்றி. கனடா வந்தபோது தங்களுடன் சந்திப்பு நிகழவில்லையே என்ற வருத்தம் இப்போது மேலும் அதிகமாகிறது. இனி அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை.

2015-07-15 9:29 GMT+05:30 NAVARATMAM GIRITHRAN < ngiri2704@rogers.com>:

மதிப்புக்குரிய திரு. வெ.சா. அவர்களுக்கு, இணைய இதழ்களில் உங்கள் ஆக்கங்கள் பல இருப்பதால் அவற்றை எப்பொழுதும் நீங்கள் பாவித்துக்கொள்ள முடியும். எ-கலப்பை மென்பொருளினைக் கணினியில் பதிவிறக்கம் செய்தால் பின்னர் விண்டோஸ் அப்ளிகேசன்கள் மூலம் (Note Pad, MS Word போன்ற) இலகுவாகத் தட்டச்சு செய்ய முடியும்.

மேலும் உங்கள் கணினிக்கு எவ்வகையான பிழை ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் 'மதர் போர்ட்' பழுதாகலாம். ஆனால் 'ஹார்ட் ட்ரைவ்' நல்ல நிலையிலிருக்கும். அவ்விதமான சமயங்களில் பழைய ஹார்ட் ட்ரைவினை வேறொரு கணினியில் இணைத்து, அல்லது 'மதர் போர்டு' பழுதாகிய கணினிக்குப் புதிய 'மதர் போர்'டினைப் பொருத்திப் பாவிக்கலாம்.

உங்கள் கணினிக்கு ஏற்பட்ட நிலை பற்றிச் சிறிது விரிவாக விளக்கிக்கூறினால் நிலைமையினைச் சரியாகப் புரிந்து கொள்வதௌ இலகுவாகவிருக்கும்.

அன்புடன்,
கிரிதரன்

On Sun, 7/12/15, Swaminathan Venkat < vswaminathan.venkat@gmail.com> wrote:

Subject: பதிவுகள் இதழுக்காக
Date: Sunday, July 12, 2015, 10:17 AM

அன்புள்ள ஆசிரியரும் நண்பருமான கிரிதரன் அவர்களுக்கு,

கணிணியில் சில தேய்ந்து சரிவர வேலை செய்யவில்லை. சரி செய்யக் கொடுத்தால் நான் எங்கே எதை வைத்திருக்கிறேன்'மதர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எதுவும் தொலைந்ததா என்பதும் தெரியவிலலை. சிரமம்தான். இத்துடன் தெருக்கூத்து கட்டுரையின் கடைசிப் பகுதியை அனுப்பியிருக்கிறேன். இடையில் திரும்ப கற்றுப் பழகிக்கொள்ள வேண்டும். என் மகனுக்கும் தமிழ் தெரியாது மருமகளுக்கும் அவ்வளவாகத் தெரியாது. கஷ்டம்
தான்.

அன்புடன்,
வெ.சா.

3.    Swaminathan Venkat < vswaminathan.venkat@gmail.com>    10/02/15 at 2:08 AM

அன்புள்ள நண்பர்களுக்கு, இப்பொழுது தான் பதிவுகள் இணையத்தில் திருமாவளவனின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக, அவரால் யாரையும் அடையாளம் கூட காணமுடியாது இருப்பதாக ஒரு அனபர் அவரை மருத்துவ நிலையத்தில் கண்டுவந்த செய்தியை எழுதியிருந்தார்.  இது பற்றி யாரோ முகநூலில் எழுதியிருப்பதாகவும் சொல்கிறார்.

மனதுக்கு மிக வேதனையாக இருக்கிறது. கனடா வந்ததிலிருந்து அவருடன் பழகி மிக நெருங்கிய நண்பருமானார். சில மாதங்களுக்குமுன் அவர் நோய்வாய்ப்பட்டதாகவும் பிறகு தேறிவிட்டதாகவும் எழுதியிருந்தார். பின் என்ன ஆயிற்று.  இப்போது ;பதிவில் வந்துள்ள செய்தியைப் பார்த்தால், அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிட்டது போல் அல்லவா இருகிறது.

எப்படி யாரைத்தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. கனடா அன்பர்களைத் தான் கேட்க முடியும். தேவகாந்தன் e/mail  இப்போது சட்டென கிடைக்க மாட்டேன் என்கிறது. இப்போது ஜி ,மெயிலின் சிஸ்டம் மாறியிருப்பது தெரிகிறது. தேடுவது அவ்வளவு சுலபமாக இல்லை.

உங்களில் யாருக்கும் அவரது  இப்போதைய உடல் நிலை தெரியுமா? யாரும் மருத்துவ நிலையத்தில் பார்த்தீர்களா?  சில மாதங்களாகிற்று அவரிடமிருந்து செய்தி வந்து. திடீரெனெ இப்படி ஒரு செய்தியா? அவர் சீக்கிரம் உடல் குணம் அடைந்து, முன்னர் செய்தி தந்தது போல, “நான் தேறிவிட்டேன் என்று சொல்லவேண்டும். அவர்  சீக்கிரம் உடல் நலம் பெற என் பிரார்த்தனைகள்.

அன்புடன்,
வெ.சா.

4.  Swaminathan Venkat < vswaminathan.venkat@gmail.com> 10/04/15 at 3:23 AM
நன்றி, கிரிதரன். என்ன செய்வதென்று தெரியவில்லை. இம்மாதிரி செய்தி வரும் என்று யார் கண்டார்? பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு என்ன் செய்ய முடியும்? தெய்வத்திடம் நம்பிக்கை வைப்போம். மனம் செய்வதறியாது அலையாடுகிறது. அவர் மடிப்பாக்கம் வந்து சந்தித்த கணங்கள்........ அதிர்ச்சியும் வேதனையும் தான்...

2015-10-03 10:33 GMT+05:30 NAVARATMAM GIRITHRAN < ngiri2704@rogers.com>:
வணக்கம் திரு. வெ.சா. அவர்களுக்கு,

தற்போது கவிஞர் திருமாவளவனின் நிலை மிகவும் மோசமாகவுள்ளதாக நண்பர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் கூறினார். கடந்த வார இறுதியிலிருந்து திருமாவளவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, உடல் நிலை மோசமாகக் கடந்த ஞாயிறிலிருந்து கோமாவில் இருக்கின்றார். வைத்தியர்கள் கையை விரித்து விட்டதாகக் குடும்பத்தவர்கள் கூறியதாக விக்கினேஸ்வரன் கூறினார்.  அவரது நிலையிலேதும் மாற்றமேற்பட்டால் அறியத்தருகின்றேன்.

அன்புடன்,
கிரிதரன்
முகநூலில் வெ.சா.வுடன்..

'கட்டோடு குழலாட ஆட' என்ற இந்தப்பாடல் 'பெரிய இடத்துப்பெண்' என்னும் திரைப்படத்திலுள்ள பாடல். ஜோதிலட்சுமி, மணிமாலா , எம்ஜிஆர் ஆகியோரின் நடிப்பில் வெளியான பாடல். இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. ஆனால் தற்போது இந்தப்பாடல் இன்னுமொரு காரணத்துக்காகவும் பிடித்துப்போனது. அதற்குக் காரணம் அண்மையில் மறைந்த அமரர் வெங்கட் சாமிநாதன். இன்று இந்தப்பாடலைக்கேட்கும் சமயங்களில் திரு.வெங்கட் சாமிநாதனின் நினைவும் கூடவே தோன்றி விடுகின்றது.

திரு. வெங்கட் சாமிநாதன் என் முகநூலில் நண்பர்களிலொருவராக இருந்தாலும் முகநூலில் நான் அவரது பதிவுகளைக்காண்பதில்லை. என்னுடன் தொடர்புகொள்வதென்றால் மின்னஞ்சல் மூலம்தான் அவர் தொடர்பு கொள்வார். ஆனால் இந்தப்பாடலுக்கு மட்டும் அவர் தற்செயலாக இதனைப்பார்த்துவிட்டுத் தம் கருத்தினைத்தெரிவித்திருந்தார். அந்தக் கருத்துப்பரிமாறல்களையும் , அந்தப்பாடலையும் மீண்டுமொருமுறை 'பதிவுகள்' வாசகர்களுடன்  அவர் ஞாபகார்த்தமாகப்பகிர்ந்து கொள்கின்றேன்.

Venkat Swaminathan இது எப்படி? இப்போது தான் தற்செயலாக எங்கோ ஒரு மூலையில் ஒடுங்கிக்கிடக்கும் உங்கள் பதிவை. எல்லாம் எம்ஜிஆர் பாட்டுக்களாக இருக்கின்றனவே என்று ஆச்சரியப்பட்டு. ஒன்றைப் போட்டுப் பார்த்தேன். கட்டோடு குழல் ஆட பாட்டு அது. மிக நன்றாக இனிமையாக இருக்கிறது. இதையெல்லாம் எப்படி ஒன்று சேர்த்து வைத்திருக்கிறீர்கள் எம்ஜிஆர் ரசிகரா நீங்கள்? அல்லது அப்பழங்கால சினிமாப் பாட்டுக்களின் ரசிகரா? எம்ஜிஆர் பாட்டுக்களாக ஒன்று சேர்க்க எப்படித் தோன்றியது? எப்படியிருந்தாலும் ஒரு வித்தியாசமான தேடலுக்கு நன்றி. சந்தோஷமாக இருக்கிறது. January 25, 2013 at 11:50pm ·

Giritharan Navaratnam வணக்கம் திரு வெ.சா. அவர்களே, உங்களது வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி. பொதுவாக அறுபதுகளில் வெளியான எம்ஜிஆரின் படப்பாடல்கள் எனக்குப் பிடித்தவை. அத்துடன் எம்ஜீஆரின் ஆளுமையும், முக வசீகரமும் என்னைக் கவர்ந்தவை. முக்கிய காரணம்: தமிழ் சினிமாவின் அறிமுகமே எம்ஜிஆர்/ஜெயலலிதா/சரோஜாதேவி திரைப்படங்கள் மூலம்தாம் கிடைத்தது. பால்ய காலத்து நிகழ்வுகள், விருப்பங்கள் எல்லாமே ஒவ்வொருவரது மனதிலும் , குறிப்பாக ஆழ் மனதில் ஆழமாகப் பதிந்து விடுவது வழக்கம். அந்த வகையில் எனக்கும் அன்றைய காலகட்டத்து எம்ஜிஆர் திரைப்படப்பாடல்கள் பிடித்தவை. எம்ஜிஆரின் இறுதிக்காலகட்டத்துப் படப்பாடல்களை விட, அவரது கறுப்பு வெள்ளைப் படப்பாடல்களே பொதுவாக என்னைக் கவர்ந்தவை. முக்கிய காரணங்கள்: இளமையான , அழகான, வசீகரம் மிக்க எம்ஜீஆர், அவருக்குப் பொருத்தமான டி.எம்.செளந்தரராஜனின் / பி.சுசீலாவின் அற்புதமான இளங்குரல் இனிமை, பாடலின் கருத்தாழமிக்க வரிகள். இவையெல்லாம் எனக்குத் தனிப்பட்டரீதியில் பிடிக்கும். முகநூலை நான் அதிகமாகப் பாவிப்பது எனக்குப் பிடித்த பதிவுகளை, பாடல்களை ஓரிடத்தில் சேர்த்து வைக்கும் சேமிப்புத் தளமாகவே. தேவையானபோது தேடி அலையத் தேவையில்லையே. அதனால்தான் அவ்வப்போது கேட்பதை, வாசிப்பதை இங்கு பதிவு செய்கின்றேன். இன்னுமொரு எனக்குப் பிடித்த பாடல் 'மானல்லவோ கண்கள் தந்தது'.

January 26, 2013 at 12:30am ·
Venkat Swaminathan ஆச்சரியம். இந்நேரம் நீங்கள் தூங்கிக்கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். ஒரு வேளை நீங்கள் இரவிலும் உறங்காது உழைப்பவரோ. இப்போதுதான் 'பதிவுகளு'க்கு செல்லப்பா பற்றிய நீண்ட கட்டுரையின் முதல் பகுதியை அனுப்பி அது "sending" என்றே சொல்லிக்கொண்டிருக்க, அனுப்பியாகட்டும் என்று காத்திருந்தேன். உடனுக்குடன் உங்கள் பதில். பழைய பாடல்கள் தான் எனக்கும் பிடிக்கும். ஐம்பதுகள் வரைய பாடல்கள். அதன் பின் வெகு வெகு சிலதான். இன்னும் சிலவற்றை நான் தவற விட்டிருக்கக் கூடும். இப்படி உங்கள் பதிவு சிக்கியது போல, நான் அதன் பாதையில் தடுக்கி விழுந்தால் தான். தேடிச் செல்வது என்பது வருடத்துக்கு 200-300 படங்கள் எடுத்துத் தள்ளும் தமிழ் சினிமா காட்டுக்குள் நான் இந்த வயதில் புகுந்து தேடி எடுத்து வெளி வருதல் சாத்தியமில்லை. இப்படி எடுத்துக்கொடுப்பவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். தங்களூக்கு என் நன்றி. இப்படி எங்கோ மூலையில் இருக்கும் உங்களூடன் பேச, உறவாட வழிசெய்துகொடுத்திருக்கும் கம்ப்யூட்டருக்கும் யூ ட்யூபுக்கும் நன்றி.

January 26, 2013 at 12:44am ·
Giritharan Navaratnam வெ.சா. அவர்களுக்கு, உங்கள் கருத்துகளுக்கு மீண்டுமொருமுறை நன்றி. உங்கள் கட்டுரை கிடைத்தது. 'பதிவுகளு'க்கு நீங்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் பங்களிப்பினைப் 'பதிவுகள்' எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரும்.

நன்றி: பதிவுகள்.காம்

13. பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி...

மகாகவி பாரதியார் 'சுயசரிதை' என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார். பாரதியாரின் ஆளுமையை அறிந்து கொள்வதற்கு உதவும் கவிதைகளிலொன்று அவரது இந்தக்கவிதை. இதுவொரு நீண்ட கவிதை. கவிதையின் ஆரம்பம் "பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே." என்ற பட்டினத்துப்பிள்ளையாரின் கவிதை வரிகளுடன் ஆரம்பமாகின்றது. பாரதியார் தன்னைச் சித்தர்களிலொருவராகக்கருதுபவர். சித்தர்களிலொருவரான பட்டினத்தாரின் இருப்பு பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பமாகியிருப்பது ஒன்றினை நன்கு புலப்படுத்துகின்றது. அது பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனையினைத்தான். 'பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்னும் கூற்றுக்கேற்ப அவரது வாழ்வில் கடந்து போன இழப்புகளைப்பற்றிச் சுயசரிதை விபரிக்கின்றது. நிறைவேறாத பிள்ளைக்காதல் அதாவது மானுடரின் முதற் காதல், அவரது ஆங்கிலக்கல்வி கற்றல், அவரது திருமணம் மற்றும் அவரது தந்தை வியாபாரத்தில் நொடிந்துபோய் வறுமையுறல்போன்ற விடயங்களைக்கவிதை விபரிக்கின்றது ஆனால் இந்த வாழ்வே இவ்விதமானதொரு கனவுதான் என்பதை அவர் நன்கு புரிந்திருக்கின்றார். ஆனால் அதற்காக அவர் வாழ்விலிருந்து ஓடி, ஒதுங்கிப்போய் விட்டவரா?

இவ்விதமாக இழந்தவை பற்றியெல்லாம் விபரிக்கும் அவர், ஆரம்பத்தில் 'உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி லுங்கன வாகும்' என்று கூறும் அவர்,  தன் கவிதையின் இறுதியில் உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி னுங்கன வாகும்' என்று மானுட வாழ்வே ஒரு கனவு என்பார். ஆனால் அதற்காக , அதனை நினைத்து , நினைத்து வருந்துவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 'இதற்குநான் பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்? பண்டு போனதை எண்ணி யென்னாவது? சிலதி னங்கள் இருந்து மறைவதில் சிந்தை செய்தெவன் செத்திடு வானடா' என்று கூறித் தன் சுயசரிதையினை முடிப்பார்.

இந்தச்சிந்தனை அவருக்கு இருந்ததனால்தான் அவர் மானுட வாழ்வே ஒரு கனவு என்று வருந்தி, ஒதுங்கி, ஓர் ஓரத்தே ஒடுங்கிக்குடங்கி இருந்து விடாமல், இயன்ற மட்டும் நூல்களை வாசிப்பதில் , இருப்பை அறிவதில், இருப்பில் நிறைந்து கிடக்கும் வறுமை, தீண்டாமை, அடிமைத்தனம், வர்க்க வேறுபாடுகள், மத வேறுபாடுகள், பெண் அடிமைத்தனம் எனப் பல்வேறு சீர்கேடுகளையும் சீரமைக்க வேண்டுமென்று சிந்தித்தார். அந்த அவரது பரந்து பட்ட சிந்தனைகளே கவிதைகளாக, கட்டுரைகளாக, வசன கவிதைகளாக, கதைகளாக , மொழிபெயர்ப்புகளாக என்று பல்வேறு வடிவங்களில் உருப்பெற்றன. அவ்விதம் உருப்பெற்றதால்தான் அவை இன்னும் மானுடர்க்கு அரிய பலவகைகளிலும் பயனுள்ளவையாக விளங்கி வருகின்றன. இன்னும் பல் ஆயிரம் வருடங்களுக்கு அவ்விதமே அவை இருக்கும்.

இந்தச்சுயசரிதையில் ஆரம்பத்தில் அவர் தன்னைப்பற்றிக்கூறியுள்ள கீழுள்ள வரிகள் என்னைக் கவர்ந்தன. அவை:

"வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய
மறைவ லோர்தம் உரைபிழை யன்றுகாண்;
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள்
சரத மன்றெனல் யானும் அறிகுவேன்;
பாழ்க டந்த பரனிலை யென்றவர்
பகரும் அந்நிலை பார்த்திலன் பார்மிசை;
ஊழ் கடந்து வருவதும் ஒண்றுண்டோ ?
உண்மை தன்னிலொர் பாதி யுணர்ந்திட்டேன்

மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்;
சிறிது காலம் பொறுத்தினுங் காண்பமே."

வாழ்வு முற்றுங் கனவெனக்கூறிய மறையோர் கூற்று பிழையன்று காண் என்கின்றார். ஆனால் 'பாழ்கடந்த பரனிலை யென்றவர் பகரும் அந்நிலை பார்த்திலன் பார்மிசை' என்கின்றார். மேலும் 'உண்மை தன்னிலொர் பாதி யுணர்ந்திட்டேன்' என்கின்றார். மேலும் மாயை பொய்யென்பதை முற்றும் கண்ட தான் பிரம்மத்தின் இயல்பினை ஆயும் வகையிலான நல்லருளைப்பெறவில்லை என்கின்றார்.  அதே நேரத்தில் தேசத்தில் உள்ளவர்கள் கூறும் சொற்கள் தன்னுடைய அறிவினுக்குப் புலப்படவில்லையென்றால் அவற்றைச் 'செம்மை யென்று மனத்திடைக்கொள்ளும்' 'தீய பக்தி இயற்கையும்' வாய்த்தவனல்லன் தான் என்றும் கூறுகின்றார். அறிவினுக்குச் சரியென்று படாத ஒன்றை, அறிவினுக்குப் புலப்படாத ஒன்றினை, வெறும் பக்தியின் அடிப்படையில் தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறும் பாரதியார் அவ்விதமான பக்தியைத் 'தீய பக்தி'  என்றும் கூறுகின்றார். 'சிறிது காலம் பொறுத்தினுங் காண்பமே' என்கின்றார்.

மாயை விடயத்தில் பாரதியார் மிகவும் தெளிவான நிலைப்பாடினைக்கொண்டிருந்தார்.  அதனால்தான் அவர் இக்கவிதையிலும் 'மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்' என்று கூறுகின்றார். அவரது இந்த நிலைப்பாட்டினை அவரது வேறு கவிதைகளிலும் காண முடியும். உதாரணமாக 'மாயையைப் பழித்தல்' என்னும் கவிதையைக்கூறலாம். அதிலவர் 'யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே! உன்றன் போர்க்கஞ்சுவேனோ, பொடியாக்குவேனுன்னை மாயையே' என்று கூறுவது அதனால்தான்.

பாரதியாரின் பால்ய காலத்தில் அவரையொத்த சிறுவர்கள் எல்லாரும் ஆடியும், பாடியும், ஓடியும் விளையாடிக்கொண்டிருக்கையில் , பாரதியாரால் மட்டும் தந்தையின் கண்டிப்பு அஞ்சி அவ்விதம் அச்சிறார்களைப்போல், அவர்களோடு ஆடிப்பாடிட முடியவில்லை. அதனால் தனிமையில் , தோழ்மையின்று அவர் வருந்தினார். அதனைத் தனது சுயசரிதையில் பாரதியார் பின்வருமாறு கூறுவார்:

ஆண்டோ ர் பத்தினில் ஆடியும் ஓடியும்
ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும் '
ஈண்டு பன்மரத் தேறியி றங்கியும்
என்னோ டொத்த சிறியர் இருப்பரால்;
வேண்டு தந்தை விதிப்பினுக் கஞ்சியான்
வீதி யாட்டங்க ளேதினுங் கூடிலேன்,
தூண்டு நூற்கணத் தோடு தனியனாய்த்
தோழ் மைபிறி தின்றி வருந்தினேன்.
பாரதியார் தன் சுயசரிதைக் கவிதையில் விரிவாகவே தன் பிள்ளைக்காதல் அனுபவங்களை விபரித்திருக்கின்றார். பாரதியாருக்குக் காதல் பற்றி, பெண்கள் பற்றி உயர்ந்த எண்னமுண்டு, இதனால்தான் காதலின் சிறப்பைப்பற்றி, பெண்களின் உயர்வைபற்றியெல்லாம் அவரால் சிந்திக்க முடிந்தது.
அவற்றை மையமாக வைத்துக் கவிதைகள் பலவற்றை எழுத முடிந்தது. ஆனால் அவரை அந்த முதற் காதல் மிகவும் அதிகமாகவே பாதித்திருப்பதை அது பற்றி விரிவாகவே அவர் எழுதுயிருந்த கவிதை வரிகள் மூலம் அறிய முடிகின்றது. நீரெடுப்பதற்காக, நித்திலப்புன்னகை வீசி அவள் வரும் அழகினை, அவளுக்காகக் காத்திருந்து அவளழகைக் கண்டு அவளழகில் களித்திடும் மனப்போக்கினை எல்லாம் அவர் விரிவாகவே விபரித்திருக்கின்றார் தன 'சுயசரிதை'யின் 'பிள்ளைக்காதல்' என்னும் பகுதியில்:

"நீரெ டுத்து வருவதற் கவள், மணி
நித்தி லப்புன் நகைசுடர் வீசிடப்
போரெ டுத்து வருமதன் முன்செலப்
போகும் வேளை யதற்குத் தினந்தொறும் வேரெ டுத்துச் சுதந்திர நற்பயிர்
வீழ்ந்திடச் செய்தல் வேண்டிய மன்னர்தம்
சீரெ டுத்த புலையியற் சாரர்கள்
தேச பக்தர் வரவினைக் காத்தல்போல்"

"காத்தி ருந்தவள் போம்வழி முற்றிலும்
கண்கள் பின்னழ கார்ந்து களித்திட
யாத்த தேருரு ளைப்படு மேளைதான்
யாண்டு தேர்செலு மாங்கிழுப் புற்றெனக்
கோத்த சிந்தனையோ டேகி யதில்மகிழ்
கொண்டு நாட்கள் பலகழித் திட்டனன்;
பூத்த ஜோதி வதனம் திரும்புமேல்
புலன ழிந்தொரு புத்துயிரெய்துவேன்"

ஆனால் அவரது முதற்காதலான இந்தப் பிள்ளைக்காதல் தோல்வியிலேயே முடிந்தது. பத்து வயதில் அவர் நெஞ்சை ஒருத்தி ஆட்கொண்டாள். ஆனால் அவரது தந்தையோ பன்னிரண்டு வயதில் தான் பார்த்த பெண்ணொருத்தியை அவருக்கு மணம் செய்து வைத்தார். அதனைப்பாரதியார் மேற்படி 'சுயசரிதை' கவிதையில் பின்வருமாறு விபரிப்பார்:

"ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன்;
ஈங்கோர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள்
எந்தை வந்து மணம்புரி வித்தனன்."

இவ்விதமாகத் தான் காதலித்த பெண்ணை இழந்து, இன்னுமொருத்தியை மணம் செய்தபோதும், ஏற்கனவே தான் இன்னுமொரு பெண்ணிடம் கொண்டிருந்த காதல்தான் நிற்க வேண்டுமெனத்தான் தான் ஒருபோது தன் உள்ளத்திலெ எண்ணியவனல்லன் என்றும் கவிஞர் கூறுகின்றார்:

"மற்றோர் பெண்ணை மணஞ்செய்த போழுதுமுன்
மாத ராளிடைக் கொண்டதோர் காதல்தான்
நிற்றல் வேண்டு மெனவுளத் தெண்ணிலேன்'

இவ்விதம் ஒருத்தியை நினைத்திருக்கையில், இன்னொருத்தியை மணப்பது தவறென்றாலும், அதனை எடுத்துத் தந்தையிட கூறும் திறனிலலாயினேன் என்று கூறும் பாரதி, சுவாலைவிட்டு எரியும் காதல் தழலானது எவ்வளவு தூரம் தன் உள்ளத்தை எரித்துள்ளதென்பதையும் தான் கண்டிலேன் என்கின்றார்.
இவ்விதம் இந்தச் 'சுயசரிதை' கவிதையின் மூலம் பாரதியாரின் தனிப்பட்ட வாழ்க்கை , அது பற்றிய உணர்வுகள் பலவற்றை அறிய முடிகின்றது. அந்த வகையில் மிகவும் முக்கியத்துவம் மிக்க கவிதையாக மிளிர்கிறது .

ngiri2704@rogers.com

நன்றி: பதிவுகள்.காம்

14. தமிழ்க்க் கவிதைகளில் நகரம்.

தமிழ்க்கவிதைகள் சங்ககாலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு விடயங்களைப்பற்றி விபரித்திருக்கின்றன. சங்காலக்கவிதைகள் , காப்பியங்கள் பல அக்காலகட்டத்து நகர்களைப்பற்றிய  தகவல்கள் பலவற்றைத்தருகின்றன. குறிப்பாக சிலப்பதிகாரம் அக்காலகட்டத்தில் புகழ்மிக்க கோநகர்களாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம், மதுரை மற்றும் வஞ்சி பற்றி, அந்நகர்களில்  வாழ்ந்த மக்கள் பற்றி, அவர்கள் ஆற்றிய பல்வேறு தொழில்கள் பற்றியெல்லாம் விரிவாகவே தகவல்களைத்தருகின்றது. அக்கால நகரங்களின் நகர வடிவமைப்பு பற்றி, வாழ்ந்த மக்கள்  புரிந்த தொழில்கள் பற்றி, நடைபெற்ற விழாக்கள் பற்றி, பிற நாடுகளுடன் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகள் பற்றி.. என்று பல்வேறு வகைப்பட்ட தகவல்களை அவற்றின் மூலம்  அறிந்துகொள்ளலாம். இதனைப்போல் அண்மைக்காலத் தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளில் நகரம் கூறு பொருளாக அமைந்துள்ளதா என்று சிறிது சிந்தனையையோட்டியதன் விளைவுதான்  இக்கட்டுரை. இதுவொரு விரிவான ஆய்வல்ல. எதிர்காலத்தில் மேலும் பல படைப்புகளை ஆராய்ந்து  காலத்துக்குக்காலம் விரிவுபடுததப்படுத்தக்கூடியதொரு ஆரம்பக்கட்டுரையே.

இக்கட்டுரைக்காக ஆராய்ந்த  கவிஞர்களின் கவிதைகள் நகரங்களைப்பற்றி விபரிக்கையில் அங்கு வாழ்ந்த பல்வகைப்பட்ட மக்களைப்பற்றி, சமூக வாழ்க்கை முறைபற்றி, நகரங்கள் சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்பு பற்றி,  நகரங்களில் நிலவிய சமூக வாழ்வின் இயல்பினால் மனிதர்களின் உளவியலில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி, அங்கு நிலவிய வர்க்கங்கள் மானுட வாழ்விலேற்படுத்தும் பாதிப்புகள் பற்றி,  நகரச்சூழல் ஏற்படுத்தும் உடல் உபாதைகள் பற்றி, மானுட சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நகரத்தில் ஏற்படுத்திய போர்ப்பாதிப்புகளைப்பற்றி.... எனப்பல்வேறு விடயங்களை  வெளிப்படுத்தி நிற்கின்றன. இவற்றை எடுத்துக்கொண்ட படைப்புகளினூடு இனங்காணுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவராகக்கருதப்படும் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) நகரம் பற்றிய கவிதையொன்று சுதந்திரன் பத்திரிகையில் 18 மார்ச் 1951  பதிப்பில் வெளியாகியுள்ளது. கவீந்திரனின் (அறிஞர் அ.ந.கந்தசாமி) 'நகரம்' கவிதை நகரத்து மக்களைப்பற்றி , நகரத்தில் நிறைந்திருக்கும் வாகனங்களைப்பற்றி, அவற்றின் விளைவாக  ஏற்படும் வாகன நெரிச்சல் பற்றி, புதுவகை மோஸ்தரில் பல்வேறு வகையான சிகை அலங்காரங்களுடன் வளைய வரும் பெண்களைப்பற்றி, பல்வகை உடலைமைப்புடன் காணப்படும்  பல்வகை மானுடர் பற்றி விரிவாகவே பேசும்.  'ட்ராமில் பயணிக்கும் தாமரை முகம்கொண்ட பெண்களைக்காமக்கண்களுடன் பார்க்கும் ஆண்களைக்கொண்டது நகரம்.  நகரம் சனத்தொகையால் நிறைந்திருந்தபோதும் மனம் திறந்து பேசுவதற்குத்தான் மனிதர்கள் இல்லை. பல்வகை மரம் வளர்ந்து மண்டிய  காட்டினைபோன்றதுதான் நகரத்தின் பண்பு; மனிதப்பண்பற்ற நகரம்' இவ்விதம் கூறுவாரவர்.

"நகரத்தில் கனத்தொகைக்கு நலிவில்லை இருந்த போதும்
அகத்தினைத் திறந்து பேச ஆட்கள் இல்லைப் பார்த்தால்
வகை வகை மரம் வளர்ந்து மண்டிய காடும் போல்தான்
நகரத்தின் பண்பு இங்கே மனிதப் பண்பில்லை யம்மா!"

இவ்விதமாக நகரம் பற்றி விபரிக்கும் நகரம் பற்றிய அவரது கவிதை இறுதியில் நகரம் செல்வம், கொல்புலியையொத்த வறுமை என்னும் வர்க்கங்களிரண்டால் பிரிந்துகிடக்கும் என்று  கூறும். அமைதிப்பண்பற்ற மானுடரைக்கொல்லும் நரகமே நகரமென்று அவரது கவிதை முடியும்.
"செல்வத்தின் செழிப்பு ஓர்பால் தீயதாம் வறுமை என்னும்
கொல்புலி வாயிற்பட்ட கும்பலோ மறு பக்கத்தில்
பல்விதப் பண்பும் சேர்ந்து கணமேனும் அமைதிப் பண்பு
நல் விதம் தோன்றா இந்த நகரம் கொல் நர கமாமே!"

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் பிறந்த மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து உலகின் நானா திக்குகளிலும் அகதியாக அலைந்தவர். அவரது கவிதைகளில் நகரம் பற்றிய புதிய படிமங்களைக்காண  முடிகிறது.'பிராங்போட் நகரத்து இரவு' என்னுமவரது கவிதை பிராங்போட் நகரத்துச்சந்திலுள்ள அறையொன்றில் இருத்தலுக்காகப்போராடும் தமிழ் அகதியொருவரின் வாழ்வினை விபரிக்கும்.  பிராங்போட் நகரத்துச்சந்தொன்றில் காணப்படும் அறையினை சூல் கொண்ட பன்றியின் கருவறையாகக்காணுவார் கவிஞர்:

"சூல்கொண்ட் பன்றியின்  கருவறை போன்ற
'பிராங்போட்' நகரச்சந்திலோர் அறை. "

என்று கூறும் கவிதை, பிராங்போட் நகரில் இருப்புக்காகத்தத்தளிக்கும் அகதியொருவன் இருப்புக்காக அடையும் சிரமங்களை மேலும் விபரிக்கும்.  இவ்விதமான அலைச்சலினால் சிதைந்துபோகும் அவனது இளமை வாழ்வினையும் எடுத்துரைக்கும். இவரது  இன்னுமொரு கவிதை நியூயோர்க் மாநகரத்து வீதியின் இருமருங்கிலும் உயர்ந்து  விண்ணைத்தொடும் கொங்கிறீட்டிலான உயர் மாடிக்கட்டடங்களை ஏவுகணைகளாகச்சித்திரிக்கும். 'எமது மண்ணும் இனிய வசந்தமும்'  சென்னை  மாநகரின் மாடிக்கட்டடங்களை குளவிக்கூடுகளாக உருவகிக்கும். அபெருநகரில் மானுடரின் அலுவலக வாழ்வை எடுத்துரைக்கும்:

'கொங்கிறீட் குளவிக்கூடுகளென
மாடித்தொகுதிகள்
உலகாய் விரியும்
சென்னைப்புறநகர்.
தனித்தனியாக லட்சம் மக்கள்
அலுவலகத்துப் பைல் கோர்வைகளாய்
பகலில் அலைவதும்
அதன் அதன் அடுக்குள் மாலைகள்தோறும்
இலக்க எண்படிக்குப் பணிமுடங்குதலுமாய்ப்
பெருநகர் நடத்தும் அலுவலக வாழ்வு.'

இவ்விதமானதொரு பெருநகரில் தனித்து வாழும் ஈழத்து அகதியொருவனின் இழந்த மண் பற்றிய ஏக்கங்களை கவிதை மேலும் விபரித்துச்செல்லும். ;வெய்யில் நாள்' என்பது இவரது  இன்னுமோர் கவிதை. நோர்வேயின் கார்ல் யோன் சாலைய்யில் வெய்யில் நாளொன்றில் திகழும் காட்சியினை விபரிக்கும் கவிதை. சூரியன் சுடர்ந்த அந்த நாளில் கார்ல் யோன் சாலையில் நோர்வீஜியர்கள்  ஆறாய்ப்பெருகுகின்றார்கள். உணவு விடுதிகளும்  மதுச்சாலைகளும் நிரம்பி வழிகின்றன. 'ஈக்களைத்தொலைக்க ஓடித்திரிகிற குதிரையைபோல, நாட்டேக்கத்தைத்தொலைப்பதற்காக கார்ல்  யோன் சாலையில்' அகதிக்கவிஞரும் அலைகின்றார். அவருடன் கூடவே தெருப்பாடகர்களும் அந்த வெய்யில் நாளில் கார்ல் யோன் சாலையில் காணப்படுகின்றனர். அவர்களிலொருவர்  தென்னமரிக்கத் தெருப்பாடகன். அவனது புல்லாங்குழலில் புதியதோர் சோகத்தைக்கவிஞர் உணர்கின்றார்:

'அவனது ஆத்மா இக்கணப்பொழுதில்
கார்ல் யோன்  தெருவில்
சுற்றியிருக்கும்  ரசிகர் மத்தியிலா
அல்லது மச்சுபிச்சு  மாநகர்ப்புறத்திலா
சஞ்சரிக்கிறது'

தென்னமரிக்கரின் அழிந்து போன மாநகரான மச்சுபிச்சுவைப்பற்றிய ஏக்கமாக அத்தெருப்பாடகனின் புல்லாங்குழலை உணரும் கவிஞர் அதில் புதியதோர் சோகத்தினைக்காணகின்றார். கூடவே  அவரை அவரது நாடு பற்றிய ஏக்கமும் சூழ்ந்துகொள்கிறது.  புகலிடம் நாடித்தஞ்சமடைந்திருக்கும் அகதிகளின் ஏக்கங்களால் நிறைந்திருக்கும் மேற்கின் மாநகர்களை விபரிக்கும் கவிதைகள்  ஜெயபாலனின் கவிதைகள். அவரது இன்னுமொரு கவிதையான 'நீலகிரிப்பயணக்குறிப்புகள்' ஈழத்தின் நாடற்ற மலையகத்து மக்கள், சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தால் நீலகிரி நகருக்கு வந்து  கொத்தடிமைகளாகச் சீரழிவதைச் சீற்றத்துடன் விபரிக்கும். இரண்டாம் உலக மகாயுத்தக்காலகட்டத்தில் ஹிட்லரின் படைகளுக்கெதிராக, அவற்றின் முற்றூகையின இரண்டரை வருட காலம்  எதிர்கொண்டு முறியடித்த நகர் லெனிகிராட். கவிஞரின் 'லெனின்கிராட் நகரமும்,  யாழ்ப்பாணச்செம்மண்  தெருவும்'  லெனின்கிராட்டின் வரலாற்றுச்சிறப்பினை விதந்தோதும். லெனிகிராட்டின்  வெற்றியானது 'இருள் கவிந்த யாழ்ப்பாணத்துச் செம்மண் தெருக்களில் , விரக்தி விளிம்ப்பில் தடுமாறுகையில்' 'மானிடர்களின் மாட்சியினைப்புலப்படுத்தி நம்பிக்கையினை ஊட்டும்:

'லெனின் நகரே இரண்டரை வருட முற்றுகைத்தீயில்
புடமிடப்பட்ட புரட்சியின் தொட்டிலே
இருள் கவிந்த யாழ்ப்பாணத்துச்
செம்மண் தெருக்களில்
விரக்தி விளிம்பில் தடுமாறுகையில்
உந்தன் நினைப்பு
மானிடர்கள் நாமென்ற
மாட்சிதனைப் புலப்படுத்தும்'.

இவ்விதமாக ஜெயபாலனது கவிதைகள் பலவற்றில் யாழ்ப்பாணம், நோர்வே , இந்தியா போன்ற பல நாடுகளில் நகரங்கள் பற்றிய குறிப்புகளுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கவிஞர் சேரனின்  கவிதைகள் ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்ட காலகட்டத்தின் பல்வேறு நிகவுகளின் ஆவணப்பதிவுகளாக இருப்பவை. ஈழத்தமிழர்தம் நகரங்களின் யுத்தகாலத்து இருப்பினை  விபரிப்பவை சேரனின் கவிதைகள். உதாரணத்துக்கு 'இரண்டாவது சூரிய உதயம்' கவிதை யுத்தச்சூழலில் எரியுண்ட இலங்கைத்தமிழரின் நகரமொன்றினைப்பதிவு செய்யும்:

'என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது.
எனது மக்கள் முகங்களை இழந்தனர்.
எனது நிலம், எனது காற்று
எல்லாவற்றிலும் அந்நியப்பதிவு.'

இவ்வாறாக சேரனின் கவிதைகள் பல ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்ட காலத்து நிகழ்வுகளின் ஆவணப்பதிவுகளாக விளங்குகின்றன. அந்நிகழ்வுகளினூடு மறைமுகமாக  அந்நிகழ்வுகள் நடைபெற்ற நகர்கள் பற்றிய விமர்சனங்களாகவும் அவரது அக்கவிதைகளைக்கருதலாம்.

கவிஞர் திருமாவளவனின் கவிதைகளில் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குப் புகலிடம் கொடுத்த நகர்கள் பற்றிய தகவல்கள், உணர்வுகள் காணப்படுகின்றன. அவரது 'நுகத்தடி மனிதர்' புகலிடம்  தந்த மாநகர்கள் அகதியொருவருக்கு  அளித்த அனுபவங்களை விபரிக்கும். நகரத்தின் தொடர்மாடிக்கட்டடங்களில் உறைந்து வாழும் அகதிகளின் இருப்பிடங்களைப்பற்றி கூறுகையில்,

'புகைவண்டியென நீண்டு கிடக்கும்
நகரத்தொடர்வீட்டுக் கட்டடத்தில்
நம்மவர் உறையும்
கூடு. ; என்று கூறும்.

இந்த புகைவண்டித்தொடரின் பெட்டிகளில் உறைந்துகிடக்கும் புகலிடம் நாடிய தமிழர்களின் இருப்பினை எடுத்துரைக்கும் கவிதைகள் திருமாவளவனுடையது.

'சிகரட் சாம்பரில் மூழ்கிய வட்டிலும்
பியர் போத்தல் எச்சங்களும்
குலைத்துப்போட்ட சீட்டுக்கட்டும்
குண்டடிபட்ட ஈழக்கிராமத்து
காட்சிப்புலமென விரியும்
முன்கூடம்'
இங்கு
'பால்ய வயதுப்பகிடிக்கதைகள்
நம்மவர் புரியும் நாட்டு நடப்புகள்
வெட்டிப்பேச்சு
வெடிச்சிரிப்பொலி'

என விரியும் புகலிட அகதித்தமிழரின் வாழ்வை புதிய சூழலின் சமுதாய அமைப்பு எவ்விதம் நுகத்தடி மனிதராக்கி விடுகின்றதென்பதை விபரிக்கும் கவிதை 'நுகத்தடி மனிதர்'.

இவ்விதமான புகலிடத்தமிழரின் வாழ்க்கையானது 'சூத்திரக் கிணற்றை சுற்றிப்பழகிய மாடென' நகரின் இயந்திரமயமான வாழ்வழுத்த, அந்த வாழ்வு அவர்களைச்சுற்றிப்போட்ட நுகத்தடியினை  விலக்கிட ஓரளவாவது உதவுகின்றது. இவ்விதமான நிகழ்வுகள் பற்றிய எண்ணங்களில் நனைந்து விடுகிறது மனசு. மேலும் கவிதையானது எவ்விதம் புகலிடமளித்த மாநகரின் சமுதாய  அமைப்பானது மீண்டும் மீண்டும் நுகத்தடிக்கீழ் மானுடரைக்கொண்டு சேர்த்துவிடுகின்றது என்பதைக் கீழுள்ள் வரிகள் வாயிலாக விபரிக்கும்:

'கடன் தந்தவனின் வட்டிக்கணக்கும்
கிரடிக்காட் நிலுவையும்
பெல்கனடாவின் சிவப்புச்சிட்டையும்
கண்ணீர் கரைத்து வந்த
அம்மாவின் கடிதமும்
தங்கையின் வயதும்
தம்பியின் கானற்கனவும்
சுமையாய் இறங்கும்.
மீளத் தலை
மீளும்நுகத்தடிக்கீழ்.'

திருமாவளவனின் 'பனிவயல் உழவு' கவிதை 'டொராண்டோ' பெருநகரைக்காமக்கிழத்தியாக உருவகிக்கும். அதிகாலையில் அதன் இருளாடை கலைய, வெண்பனி உள்ளாடையுடன் எடுப்பாய்  வனப்புக்காட்டுக் காமக்கிழத்தியாக நகர் கவிஞருக்குப்புலப்படுகின்றது:

' காமக்கிழத்தியியென
இருளாடை களைந்து வெண்பனி
உள்ளாடையுள்
எடுப்பாய் உடல் வனப்புக் காட்டும்
ரொறான்ரோ நகரி'.

காமக்கிழத்தியின் உடல் தழுவிய  காமக்கிறக்கத்தில் ஒன்டாரியோ வாவியிருக்க, கட்டிலின் விளிம்பில் விடிவிளக்கா நாணி நிற்பாராம் சூரியனார்:

உடல் தழுவிக்
காமக் கிறக்கத்தில்
சலனமற்றுக்கிடக்கும்
ஒன்ராரியோ நீர்வாவி
கட்டில் விளிம்பில்
விடிவிளக்கென
நாணிக்கிடப்பார் சூரியனார்'.

இவ்விதமாக விடிவிளக்கெனத்தென்படும் சூரியனார் மறுகணமே கவிஞருக்கு 'துருவக்கொடுங்குளிரில் அலைகின்ற' அகதியாகத்தென்படுவார்.

'ஆயுதத் துரத்த
நெடுந்தூரம் கடந்த
பரதேசி நான்
உனை யார் துரத்த
இங்கு வந்து அகதியானாய்?'

என்று கேள்விக்கணையினைத்தொடுக்கின்றார் கவிஞர் நகரத்துச்சூரியனைப்பார்த்து.

அதே சமயம் மாநகரானது மானுட வாழ்வை நடைப்பிணமாக்கிவிடுகிறது.  ஆலைகளின் இயந்திரங்கள் பிழிந்து துப்பிவிட்ட சக்கையாகிவிடுகிறது மானுட இருப்பு. இவ்விதமான மாநகரில்  மானுடம் இன்னும் செத்துவிடவில்லை.  நகரில் தப்பிப்பிழைத்திருக்கும் ஆலாக்கள், புறாக்கள் போன்ற புள்ளினங்களுக்கு உணவூட்டி மகிழும் உள்ளங்களும் இல்லாமலில்லை. தாமிர  பொற்கூந்தல்; கருமணி சுருட்டை முடி, மஞ்சள் முகம், எதியோப்பிய மீன் விழிகள் எனப்பபல்லினத்துபெண்களுடன் கைகள் இணைந்து களிப்புற்றிருக்கிறார்களாம எம் இளசுகள. இவற்றை

' மாலை
எந்திரம் பிழிந்து துப்பிவிட்ட
உடல் மீளும்'
'தாமிர பொற்கூந்தல்
கருமணி சுருட்டைமுடி
மஞ்சள் முகத்தில்
குறுகி சிறுத்த கண்கள்
எதியோப்பிய மீன்விழிகள்
இவர்களோடு
கை கோர்த்து மகிழ்ந்திருக்கும்
எங்கள் இளசுகள்'

என்னும் வரிகளினூடு வெளிப்படுத்தும் கவிதையிது.

ஈழக்கிராமமொன்றின் காட்சிப்புலமாக விரியும் நகரத்துக் கொங்கிறீட் புகைவண்டித்தொடர்ப் பெட்டியொன்றின் காட்சிப்புலத்தைக்கொண்ட மாநகரத்து வாழ்வைக்கூறும் திருமாவளவனின்  கவிதை.

நவகாலக்கவிஞர்களில் நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதைகள் நகரத்து மானுடர் வாழ்வில் ஏற்படும் உளவியற்சிக்கலைப்பற்றி, நகரச்சூழல் ஏற்படுத்தும் உடல் உபாதை பற்றிப்பேசும்.   நகரம் மானுடர்களால் நிறைந்து வழிகின்றது. ஆனால் சொந்த ஊரில் நிலவிய சமூக உறவுகளை நகர் பறித்துவிடுகிறது. உறவுகளற்ற நகரத்து வாழ்வின் தனிமையின் வெம்மையினை  அவரது 'நகரத்தனிமை' என்னும் கவிதை விபரிக்கும். அந்தக்கவிதை வருமாறு:

'ஊரில் இல்லாத
கொடிய தனிமையினை
இப்போது நான் உணருகிறேன்
நண்பர்களுக்காக அல்லது ஒருவருக்காகவேனும்
அவர்களைக் காணுவேன் என்று
பயணம் செய்தேன். மாலை வெய்யிலில் நடந்து திரிந்தேன்.
ஒருவரையும் காணாது
அந்த வெய்யிலும் போனபிறகு
தனித்த துயரத்தோடு
இன்றைய கொத்துரொட்டியையும் பிளேதீயையும் விழுங்கினேன்.
காலில் வியர்த்தது
ரௌசரோடு நடக்கக் கஷ்டமாய் இருந்தது
கடற்கரை ஒழுங்கைக்குள் தள்ளாடித் தள்ளாடி
அறைக்குள் போனேன்'

இக்கவிதை விபரிக்கும் மானுடர்கள் பலரைப்பெரு நகரங்களில் காணலாம். வேலையும், வீடுமென்று எந்தவிதச்சமூகச்செயற்பாடுகளுக்கும் நேரமின்றி, நகரத்தனிமையில் வாடும்  மானுடர்களின் நிலையை எடுத்துரைக்கும் கவிதையிது. அவரது இன்னுமொரு கவிதை 'நகரம்' நகரத்துச்சூழல் ஏற்படுத்தும் பீலிசம் போன்ற உடல் உபாதையினை எடுத்துக்கூறும். மண்ணுக்குப்பசுமையினைத்தரும் மரங்களற்ற நகரத்தின் மாசுற்ற  சூழலின் விளைவாக உருவாகும் ஒவ்வாமை (அழற்சி) தரும் பீலிசத்தைபபற்றிக்கவிதை பின்வருமாறு விபரிக்கும்:

'நகருக்குள் எனக்குப் பீலிசம் வந்தது
கிஞ்சித்தும் பச்சை மரங்கள் இல்லாத
பாதையோரங்களில்
சிவப்பு நீலம் மஞ்சள் கனலும் கடைகளில்
கவிதை நசிந்து உருகி ஆவியாகிப் போயிற்று
அது நடந்து கனகாலம்
எஞ்சியுள்ளவைகள்
மழைநாட்களில் வழிந்தோடும் குறுக்கொழுங்கைகள்.
கடல் பின்னுக்கு இருக்கிறது
(ஒருநாளும் வரக் கிடைக்கவில்லை)

வ.ந.கிரிதரனின் 'டொராண்டோவின் இரவுப் பொழுதொன்றில்....' கவிதை 'டொராண்டோ'வின் பல்வேறு பண்புகளை விபரிக்கிறது. நகரில் வாழும் வீடற்றவர்களை, தொழிற்சாலைகளை,  அவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை, நகரத்தின் இரவு வாழ்க்கையை, மாந்தர்களை என்று விபரிக்கும் கவிதை, கட்டடக்காட்டினுள் தப்பிப்பிழைத்து வெற்றியுடன் வாழும்  மிருகங்களை, பட்சிகளைப்பற்றியும் கூறும். இறுதியில் கவிதை இருப்பு பற்றிய தத்துவ விசாரத்தில் இறங்கினாலும், கவிதையில் டொராண்டோ மாநகரம் பற்றிய தகவல்கள்  நிறையவேயுள்ளன.

"பெருநகரத்துப் பரந்த 'காங்ரீட்' வனத்தின்
மத்தியில் ஒளிந்திருக்கும் இயற்கைக்
கன்னியின் வனப்பினை
இவ்விதமான இரவுப் பொழுதுகளில்தான்
ஆறுதலாக, உணர்ந்து, சிந்தித்து,
இரசிக்க முடிகிறது.
சில சமயங்களில் நகரத்தின்
மயானங்களினருகில்
நரிகளைக் கண்டு வியந்திருக்கின்றேன்.
பள்ளத்தாக்குப் பகுதிகளில்
மானினங்களைக் கண்டிருக்கின்றேன்.
குழிமுயல்களை, இன்னும் பல
உயிரினங்களையெல்லாம்
இத்தகைய இரவுப் பொழுதுகளில்
கண்டிருக்கின்றேன்.
அப்பொழுதெல்லாம்
வ்ளைகளுக்குள் வாழ்ந்து
இரவுகளில்
இந்தக் 'காங்ரீட்' வனத்தினுள்
சஞ்சரிக்கும் அவற்றின்
படைப்பின் நேர்த்தியில்
மனதிழந்திருக்கின்றேன். "
"நகரில் துஞ்சாமலிருப்பவை
இவை மட்டும்தானென்பதில்லை!
துஞ்சாமலிருப்பவர்களும்
நிறைந்துதான் இருக்கிறார்கள்.
ஆலைத் தொழிலாளர், ஓரின,
பல்லினப் புணர்வுகளுக்காய்
வலைவிரிக்கும்
வனிதையர், வாலிபர்.
'மருந்து'விற்கும் போதை
வர்த்தகர்கள்,
திருடர்கள், காவலர்கள்....

துஞ்சாதிருத்தல் பெருநகரப்
பண்புகளிலொன்றன்றோ!"

வ.ந.கிரிதரனின் 'நகரத்து மனிதனின் புலம்பல்!' கவிதை மரங்களிலிருந்து 'காங்ரீட்' மரங்களிற்கு..மாறிய நகரங்களைப்பற்றி, அதன் விளைவாக ' இரவு வானத்துச் சுடரையும் நிலவுப்பெண்னின் எழிலையும் ,பாடும் புள்ளையும் ,இரசிக்கும் ,உரிமை கூட ,மறுதலிக்கப் பட்டுப்போன நகரத்துச்சூழலையும் விபரிக்கும். இந்தக்கவிதை முதலில் யாழ் இந்துக்கல்லூரி  பழைய மாணவர் சங்கக்கலைவிழா மலரொன்றில் வெளியானது; பின்னர் பதிவுகள், திண்ணை  ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. வ.ந.கிரிதரனது அ'தி மானுடரே!  நீர் எங்கு போயிளிந்தீர்?' கவிதை பதிவுகள், திண்ணை இணைய இதழ்களில் வெளியான கவிதைகளிலொன்று.  இந்தக்கவிதையின் மூல வடிவம் தாயகம்  (கனடா) பத்திரிகையில் வெளியானது.

'காங்ரீட் '! காங்ரீட் '! காங்ரீட் '
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.'

ஆகியவற்றால் நிறைந்து கிடக்கும் நகரங்களைபற்றி, அவற்றாலேற்பட்ட சூழல் அழிவுகள் போன்ற விளைவுகளைப்பற்றிக்கேள்விகளையெழுப்பும்.  நகரங்களின் வரவினால் காணாமல் போன  பல்லுயிர்களைபற்றி

அச்சமின்றிப் பறந்த ஆருயிர் நண்பர்களே!
நகை தவள நீந்திச் சுகித்த என்னருமைத் தோழர்களே!
தென்றலணைப்பில் தூங்கிக் கிடந்திட்ட
விருட்சத்துக் குழந்தைகளே!
ஆறறிவால் நிலைகுலைந்து
நிற்கும் பிரிய சிநேகிதர்களே!

என்று எடுத்துரைக்கும்.

இவ்விதமாக தமிழ்க்கவிதைகள் சில எவ்விதம் நகர் பற்றிய பதிவுகளை மேற்கொண்டுள்ளன என்பதை ஓரளவுக்குச் சான்றுகள் அடிப்படையில்  விபரித்துள்ளது இக்கட்டுரை.  எதிர்காலத்தில் மேலும் பல படைப்புகளை உள்வாங்கி இக்கட்டுரை விரிவுபடுத்தப்படும்.

உசாத்துணை நூல்கள் / ஆக்கங்கள்:

1. கவிதை 'நகரம்' - அறிஞர் அ.ந.கந்தசாமி (சுதந்திரன் மார்ச் 18, 1951)
2. வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள் பெருந்தொகை
3. நீ இப்பொழுது இறங்கும் ஆறு - சேரன் (கவிதைத்தொகுப்பு)
4. வசந்தம் 91 - நட்சத்திரன் செவ்விந்தியன் (கவிதைத்தொகுப்பு)
5. பனிவயல் உழவு - திருமாவளவன் (கவிதைத்தொகுப்பு)
6. வ.ந.கிரிதரன் கவிதைகள் (பதிவுகள் இணைய இதழ்)

ngiri2704@rogers.com

நன்றி: பதிவுகள்.காம்

15. தேன்மொழி'க் கவிதைகள் - 1

நூலகம்' தளம் பல்வேறு வழிகளிலும் உதவி வருகின்றது. மிகவும் பயனுள்ள அரியதோர் ஆவணத்தளமாக 'நூலகம்' உருமாறி வந்திருக்கின்றது. அத்துடன் 'தேன்மொழி' சஞ்சிகையின் 'நூலகத்தில்' இதுவரை வலையேற்றப்படாத பிரதிகளையும் தந்துதவிய 'நூலகம்' கோபி அவர்களுக்கு நன்றி. 'தேன்மொழிக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைத்தொடரினை எழுதுவதற்கு அவரது இந்த உதவியே முக்கிய காரணம்.

தேன்மொழி சஞ்சிகை கவிதைக்காக வெளிவந்த முதலாவது சஞ்சிகை. மறுமலர்ச்சிக்காலப்படைப்பாளிகளே இச்சஞ்சிகைக்கும் தோற்றுவாய். மறுமலர்ச்சி சஞ்சிகையினை வெளியிட்ட எழுத்தாளர் தி.ச.வரதராஜனே தேன்மொழியின் நிர்வாக ஆசிரியராக விளங்கியவர். இணையாசிரியராக இருந்தவர் கவிஞர் மஹாகவி. 1955இல் நான்கு இதழ்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதழ்கள் வெளியாகியுள்ளனவா என்பது ஆய்வுக்குரிய விடயம். அத்துடன் 'நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நினைவுச்சின்னம்' என்னும் தாரக மந்திரத்துடன் எழுத்தாளர் தி.ச.வரதராஜனை நிர்வாக ஆசிரியராகவும், கவிஞர் மஹாகவியை இணை ஆசிரியராகவும் கொண்டு வெளியான சஞ்சிகை. சஞ்சிகையின் அட்டைப்படம் ஒவ்வொன்றும்  'தங்கத்தாத்தா' சோமசுந்தரப்புலவரின் கவிதை வரிகளைத் தாங்கி வெளியாகியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. சஞ்சிகையின் கடைசிப்பக்கத்தில் தேன்மொழியில் எழுதும் படைப்பாளிகளில் ஒருவரைப்பற்றியச் சுருக்கமான குறிப்பும் காணப்படுகின்றது. மேலதிக விபரங்கள்: அச்சு - ஆனந்தா அச்சகம். தேன்மொழி அலுவலகம்: 226 , காங்கேசன் துறை வீதி, யாழ்ப்பாணம், இலங்கை.  ஆண்டுக்கட்டணம் - ரூ. 3.00. தனிப்பிரதி 23 சதம்.

மறுமலர்ச்சி இதழ் மூலம் ஈழத்தமிழ் இலக்கியத்தில் கால்பதித்த தி.ச.வரதராஜன் (வரதர்) அவர்கள் முதலாவது கவிதைகளுக்காக மட்டும் வெளிவந்த முதலாவது சஞ்சிகையான தேன்மொழியினையும்  வெளியிட்டவர் என்னும் பெருமைக்குள்ளாகின்றார்.

தேன்மொழியின் நோக்கம் பற்றி அதன் முதலாவது இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது: "கட்டிளமை சொட்டுகின்ற கன்னிகையும், காதலனும் ஒன்று சேர்ந்தது போல, எமது உள்ளத்திலே தோன்றிப் பேராவலாய்  நிறைந்த இரு எண்ணங்களின் சேர்க்கைதான் இந்த இதழ் - 'தேன்மொழி' கவிதைகளை மாத்திரமே தாங்கிய ஒரு இதழை வெளிக்கொணர வேண்டுமென்பது ஒரு எண்ணம்; நவாலியூர் சோமசுந்தரப்ப்புலவருக்கு ஒரு நல்ல நினைவுச்சின்னம் உருவாக்க வேண்டுமென்பது மற்ற எண்ணம். இந்த இரண்டு எண்ணங்களும் சேர்ந்து 'தேன்மொழி'யை உருவாக்கி விட்டன.  ஈழத்தின் மறுமலர்ச்சிக் கவிவாணர்களில் முக்கியமான பலர் இந்த முதலாவது இதழை அலங்கரித்திருக்கின்றார்கள்."
கவிதைக்காக ஓரிதழ். தங்கத்தாத்தா சோமசுந்தரப்புலவருக்காக எழுத்தால் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னமாக ஓரிதழ். ஒரு கல்லில் இரு மாங்காய்கள். இன்று வரலாற்றில் 'மறுமலர்ச்சி' இதழ் போல் கவிதைக்காக மட்டுமே வெளிவந்த சஞ்சிகையான  'தேன்மொழி'யும் நின்று விட்டது. அதே சமயம் சோமசுந்தரப்புலவரின் நினைவுச்சின்னமாகவும் தேன்மொழி விளங்குகின்றது.

தேன்மொழிச் சஞ்சிகையில் வெளியான கவிதைகளை அறிவதுதான் இப்பதிவின் நோக்கம். முதலில் தேன்மொழி சஞ்சிகையின் முதலாவது இதழில் வெளியான கவிதைகளைப்பார்ப்போம்.

இவ்விதழில் வெளியான கவிதைகளின் விபரங்கள் வருமாறு:

1. நாவற்குழியூர் நடராசன் - 'படுத்துகிற பார்வை!"
2. சாரதா - துயிலெழுச்சி
3. யாழ்ப்பாணன் - அவள்
4. சோதி - நதி ( ஒரு ஸ்பானியக் கவியின் எண்ணம்)
5. வி.கி.இராசதுரை - காதல் போச்சோ?
6. மிருசுவில், அரி அரன் - நிலவு விடு தூது.
7. அ.ந.கந்தசாமி - எதிர் காலச்சித்தன்ன் பாடல்
8. சோ.பத்மநாதன் - யாருக்கு வெறி?
9. முருகையன் -  புத்தொளி பாய்ச்சுக!
10. மஹாகவி - பல்லி!
11. வரதர் - காதலாம், காதல்!

இவற்றிலுள்ள கவிதைகளில் மிக நீண்ட கவிதை அ.ந.கந்தசாமியின் 'எதிர்காலச்சித்தன் பாடல்'. எனக்குப்பிடித்த கவிதைகளிலொன்று. தமிழில் வெளிவந்த முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுவது  இக்கவிதையைத்தான். இக்கவிதை ஒரு கதையைக் கூறுகின்றது. ஒரு மதம், ஒரு மொழி, ஓர் அரசு என்று நிலவும் எதிர்காலப்பூமியில் ஏழை, பணக்காரனென்று எவ்விதப் பேதங்களுமில்லை. மனிதர்கள் மனிதர்களாகச் சமத்துவமாக வாழ்கின்றார்கள். அவ்வெதிர்காலத்துக்கு நிகழ்கால மனிதனான கவிஞன் செல்கின்றான். அங்குள்ள எதிர்கால மனிதனுடன் உரையாடுகின்றான்.

அவ்வெதிர்காலத்து உலகில் நிலவும் மானுட சமுதாய அமைப்பால் கவரப்பட்ட நிகழ்கால மனிதன் , எதிர்கால மனிதனை, இனம், மதம், மொழி, வர்க்கம் என்று பிளவுகளால் சீரழிந்து கிடக்கும் நிகழ்காலத்துக்கு வரும்படியும், வந்தால் பிளவுகளில் மூழ்கிக் கிடக்கும் நிகழ்கால மனிதரின் எண்ணம் உயரும். புதுவாழ்வு கிட்டும் என்றும் வேண்டுகின்றான். அதற்கோ அவ்வெதிர்கால மனிதன் 'மயக்கத்திலுள்ள உன் நிகழ்கால மனிதர் ஞானத்தைக் காணார். என்னை ஏற்றி மிதித்திடுவார். ஆலத்தைத் தந்து அன்று சோக்கிரதரைக் கொன்றவர்களல்லவா உன் மனிதர். ஆகவே நான் வரேன். நீ செல்க' என்கின்றான். முயற்சியில் தோல்வியுற்ற நிகழ்கால மனிதன் ஏமாற்றத்துடன் ' பாதகர்கள் முழுமடைமைப் போர்கள்சூழும் , பாருக்கு'த் திரும்பி வந்தான். 'எங்கும் தீதுகளே நடம்புரியும்' நிலைமைகண்டு திடுக்கிடுகின்றான். 'என்று இவர்கள் உண்மைகாண்டல்?' என்று பெருமூச்சு விடுவதுடன் இந்நீண்ட கவிதை முடிகின்றது.

இந்தக் கவிதையை நான் இருபதாம் நூற்றாண்டில் இதுவரை வெளியான சிறந்த தமிழ்க் கவிதைகளிலொன்றாகவும் கருதுவேன். இக்கவிதை 1955இல் காலத்தைக் கடந்து எதிர்கால உலகுக்குச் செல்லும் நிகழ்கால மனிதனைப்பற்றிக் கூறுகின்றது. அவ்வெதிர்காலத்தில் நிலவும் மானுடர்கள் அனைவரும் யுத்தங்களற்று, பிரிவுகளற்று ,  அன்புடன் சமத்துவமாக வாழும் சமுதாய அமைப்புப் பற்றிக் கூறுகின்றது. மதம், மொழி, இனம் , வர்க்கம் என்று பற்பலப் பிரிவுகளால் சீரழிந்து கொண்டிருக்கும் இன்றைய மானுட சமுதாயத்தைப்பற்றி விமர்சனம் செய்கின்றது. இன்றைய மானுடரின் பிரச்சினைக்கு அவ்விதமானதோர் அமைப்பு தேவைப்படுகின்றது என்பதை வலியுறுத்துகின்றது. கூறும்பொருள் காரணமாக, கூறும் கவிதை மொழி காரணமாக இக்கவிதை சிறந்ததொரு தமிழ்க் கவிதை. மேலும் காலத்தைத் தாண்டிச்செல்லும் பயணத்தைப்பற்றிக் குறிப்பதால், இக்கவிதை அறிவியற் கவிதை என்னும் பிரிவுக்குள்ளும் அடங்குகின்றது. அ.ந.க.வின் இக்கவிதையை 'எதிர்காலச்சித்தன்' என்றொரு சிறுகதையாக எழுதியிருக்கின்றேன். அது 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகியுள்ளது.

அ.ந.க. நூற்றுக்கணக்கில் கவிதைகளை எழுதிக்குவித்தவரல்லர். ஆனால் அவரது கவிதைகளில் 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'சிந்தனையும் மின்னொளியும்',  'துறவியும் குஷ்ட்டரோகியும்' போன்ற கவிதைகள் நவீனத்தமிழ்க் கவிதைகளில் தவிர்க்கப்பட முடியாத கவிதைகள் என்பேன். அத்துடன் அவர் 1967இல் இலங்கையில் நிகழ்ந்த சாகித்திய விழாவில் பாடிய 'கடவுள் என் சோர நாயகன்' என்னும் கவிதையைப்பற்றித் தென் புலோலியூர் கணபதிப்பிள்ளை அவர்கள் மிகவும் சிலாகித்து 'ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் இதுபோன்ற கவிதை தோன்றும்' என்று குறிப்பிட்டதாக எழுத்தாளர் அந்தனி ஜீவா அ.ந.க. பற்றித் தினகரனில் எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் குறிப்பிட்டிருக்கின்றார். அது அக்கவிதையை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது. அக்கவிதைபற்றிக் கேட்டதிலிருந்து இன்றுவரை அக்கவிதையைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்னும் கிடைக்கவில்லை. உங்களில் யாரிடமாவது அக்கவிதை இருந்தால்  ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அறியத்தாருங்கள்.

நாவற்குழியூர் நடராசன் நல்லதொரு கவிஞர். மறுமலர்ச்சிக் காலத்திலிருந்து எழுதத்தொடங்கியவர். இவரது 'படுத்துகிற பார்வை' என்னும் கவிதையில் வள்ளுவரின்  'யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்' குறளின் தாக்கத்தைக் காணலாம். கவிஞர் கண்ணதாசனின் புகழ்பெற்ற திரைப்படப்பாடலான 'நேற்றுவரை நீ யாரோ, நான் யாரோ' பாடலில் வரும் 'உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே. விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே' என்னும் பாடலிலும் வள்ளுவரின் மேற்படி குரலின் தாக்கத்தைக்காணலாம்.

'நான்பார்க்கத் தான்பாராள் நான்பாரா விட்டதன்பின்
தான்பார்த்து வான்பார்க்கும்; நான்பார்க்கில் - தான்பார்த்த
வான்பார்த்து மீன்பார்த்து வையத் துளவெல்லாம்
தான்பார்க்கு மென்னைத் தவிர்த்து.' என்று நாவற்குழியூர் நடராசனின் மேற்படி 'படுத்துகிற பார்வை' கவிதை ஆரம்பமாகும்.

இவ்விதம் ஆரம்பித்துச் செல்லும் கவிதை ,

'பார்த்தாலும் துன்பம், படுத்துகிற பார்வையினை
நீத்தாலும் ஆங்கே நெடுந்துன்பம் - பார்த்தால்
படுத்தும் அவளை, அதுஇன்றேல் என்னை
அடுத்துக் கெடுக்கும் அது' என்று முடியும்.

கவிஞர் சாரதாவின் 'துயிலெழுச்சி' கவிதையும் நல்லதொரு கவிதை. தேன்மொழியில் பத்து வருடங்களின் முன் எழுதிய கவிதைகளுக்கான பிரிவில் மேற்படி 'துயிலெழுச்சி' அடங்கியுள்ளது.  உலகெல்லாம் புரட்சிக்கூச்சல் கேட்கையில், அதுபற்றி உணராது 'பழந்தமிழர் பெருமை' பேசியும், வேதாந்தம் பேசியும் இருக்கிறோம்.  இந்நிலை மாறவேண்டும். 'உலகத்தோடு சரிநிகராய்த் தமிழரினித் தலையெடுக்கச் சாத்திர ஞானம் தமிழில் தழைக்க வேண்டும்.  அரசியல் விஞ்ஞான நிலை, பொருளாதாரம் அனைத்தையும் நாம் ஆய்ந்து புது ஆக்கஞ் செய்யவேண்டும்'  என்று அறை கூவல் விடுக்கும் கவிதை. இதற்காகத் தூக்கத்திலிருந்து எழ வேண்டும் என்பதற்காகத் 'துயிலுழுச்சி' பாடுகின்றது.

மிருசுவில் , அரிஅரனின் 'நிலவு விடு தூது' கவிதையின் தலைவி நிலவைத் தன் அத்தானிடம் தூது செல்லும்படி வேண்டுகின்றாள். வழக்கம்போல் தன் வேதனையை அத்தானிடம் வேண்டும் தலைவியின் பின்வரும் கூற்றுப் படிப்பவர்கள் இதழ்களில் புன்னகையைப் படர வைக்கும். 'குயில் பாடுகின்றது. பாடுங்குயில் அத்தானோ என்று ஓடிச்சென்று ஏமாந்தாளாம் தலைவி. இதனையும் போய் அத்தானிடம் 'பாடுங்குயில் அத்தானோ? என்று  ஓடிப்போய்க் காமாந்தகாரி கருங்குயிலைத்தான் கண்டு ஏமாந்தாள்' என்றும் கூறும்படி நிலவை வேண்டுகின்றாள் தலைவி. எப்படியெல்லாம் நம் கவிஞர்களின் கற்பனை ஓடுகின்றது!

சோ.பத்மநாதனின் 'யாருக்கு வெறி?' மதுவருந்தி வாகனமோட்டும் செல்வனொருவன் ஏழையொருவனைத் தன் வாகனத்தால் இடித்து விட்டான். அடிபட்டவன் இறந்து விடுகின்றான். வழக்கு நடக்கிறது. நீதிபதியோ மதுவெறியில் அவ்வேழை தெருவில் நடந்ததன் காரணமாகவே அவன் அடி பட்டு இறக்க வேண்டி வந்தது என்று தீர்ப்புக் கூறுகின்றார். அச்செல்வன் விடுதலையாகின்றான். 'மதுவைத் தன் வாய்க்குள் விட்டுக் கடையாகிக்கள்ளு வெறியால் மருண்ட  கசடர் - இழிந்தோர் எவரோ? என்று கவிஞர் கேட்பதுடன் கவிதை முடிவுக்கு வருகின்றது. ஏழைக்குச் சார்பான நீதிபதியின் தீர்ப்பு , பிரெக்டின் 'யுகதர்மம்' நாடகத்தை நினைவுக்குக் கொண்டுவந்தது.

மஹாகவியின் 'பல்லி' கவிதையும் இதழின் முக்கியமான கவிதைகளிலொன்று. தாயிடம் பாலருந்திய குழந்தையொன்று பாயில் படுத்திருந்தபடி கால்களை உதைத்தபடியிருக்கிறது. ' காற்றில் எழும் கடுகோ'என்னும்படியான வண்டொன்று பறந்து திரிகின்றது . குழந்தையின் பார்வையும் அவ்வண்டினைத்தொடர்கிறது. 'சிந்திய மைத்துளி'போல் குந்திய வண்டினைப் பொந்தொன்றிலிருந்து வெளிவந்த பல்லியொன்று உண்டு செல்கிறது. திடீரென நடந்த இச்செயலால் ஆத்திரமுற்ற குழந்தை, 'உளம் வெந்து வெகுண்டு, விம்மி' அழுகிறது. குழந்தையின் அழுகைக்குக் காரணம் புரியாத , உலை மூட்டிக்கொண்டிருந்த தாயார், பசியால் அழுவதாக நினைத்தோ என்னவோ பாலூட்டத் தொடங்கினாள்.  பல்லிக்கதையைக் கூறும் கவிதை நல்லதொரு கவிதை.

வரதரின் 'காதலாம் காதல்' இன்றைய இளம் பருவத்தினர் மத்தியில் பார்க்கில், பீச்சில், போக்குவரத்தில் , 'காணிவலில்', பள்ளிக்கூடத்தில் கண்டதும் ஏற்படுங் காதலை  'போக்குவ்வரத்தில், பொழுதைப்போக்கும் 'பாக்கில்', சினிமா, 'பீச்'சிலும் வருவது - ஐயோ காதல்! காதல்!!' என்று நையாண்டி செய்கின்றது.

16. இலங்கைத்தமிழ் இலக்கியமும், விமர்சனமும் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பும், மு.பொன்னம்பலத்தின் இருட்டடிப்பும்!
இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி எனக்கருதப்படும் இவர், புலமை காரணமாக அறிஞர் அ.ந.கந்தசாமி என்று அழைக்கப்பட்ட இவர் சிறுகதை, கவிதை,  நாடகம், விமர்சனம் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தனது குறுகிய கால வாழ்வினில் காத்திரமான பங்களிப்பினை நல்கியவர். அவ்வப்போது இலங்கைத்தமிழ்  இலக்கியம் பற்றி எழுதும் சிலர் அத்துறையில் போதிய புலமையற்றோ அல்லது திட்டமிட்டோ இவரது பங்களிப்பினை மறைத்துவிடுகின்றனர்.

அ.ந.க.வின் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் விமர்சனத்துக்கான (அல்லது திறனாய்வுக்கான) பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அ.ந..க.வின் புலமை காரணமாகவே பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் தனது 'ஒப்பியல் இலக்கியம்' நூலினை அ.ந.க.வுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் திறனாய்வுத்துறைக்குப் பெரும்பங்களிப்பு செய்தவர் பேராசிரியர் கைலாசபதி. அவர் ஒருவருக்குத் தன் நூலினைச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார் என்றால் அதனைச் சாதாரணமாக எடுத்துவிட முடியாது. அச்சமர்ப்பணத்தில் அவர் இவ்விதம் கூறுவார்:

“  பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங்கொடுத்து வருபவரும், இன்றைய  ஈழத்து  எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவரும், பிறமொழி யிலக்கியங்களைக் கற்றுமகிழ்ந்து அவற்றைத் தழுவியும் மொழிபெயர்த்தும்  தமிழுக்கு அணி செய்தவரும் ,பலதுறை வல்லுனருமான காலஞ்சென்ற அ.ந. கந்தசாமி அவர்களது நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்”
இக்கூற்றிலுள்ள "பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங்கொடுத்து வருபவரும்"  என்று பேராசிரியர் கைலாசபதி அவர்கள் கூறுவதொன்றே போதும் அ.ந.க.வின் திறனாய்வுப்புலமையினை எடுத்தியம்புதற்கு.

தினகரன் (இலங்கை) பத்திரிகையில் 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் அ.ந.க பற்றிய கட்டுரைத்தொடரினை எழுதிய எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் அ.ந.க.வின் விமர்சனப்பங்களிப்பினைக் குறிப்பிடுகையில் பினவ்ருமாறு குறிப்பிடுவார்:

"இலக்கிய விமர்சனத் துறையில் 'தேசிய இலக்கியம்' என்ற கருத்தைப் பற்றி அந்த இயக்கம் ஈழத்தில் வலுவடைந்த காலத்தில் அ.ந.கந்தசாமி பல அரிய கட்டுரைகள் எழுதியுள்ளார். அத்துடன் 'சிலப்பதிகாரம்', 'திருக்குறள்', 'எமிலிஸோலா' போன்ற பரபரப்பான கட்டுரைகள் எழுதினார். அறிவுலகவாதியான அ.ந.கந்தசாமி எழுதும் கட்டுரைகள் புதுமை நோக்குடன் இருக்கும். சிலப்பதிகாரத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் பண்டிதர் முதல் பட்டதாரி வரை பெரும்பாலோரிடையே பெரும் சர்ச்சைக்குள்ளாகின. 'தினகரன்' வாரமஞ்சரியில் வெளிவந்த 'நான் விரும்பும் நாவலாசிரியர்' என்ற கட்டுரைத் தொடரில் எமிலிஸோலாவைப் பற்றி அ.ந.கந்தசாமி எழுதிய கட்டுரை திறனாய்வு மிக்க கட்டுரை என்று எல்லோருடைய பாராட்டையும் பெற்றதுடன் எமிலிஸோலாவைப் படம் பிடித்துக் காட்டியது. தகவல்பகுதியினரால் வெளியிடப் பெற்ற 'ஸ்ரீலங்கா' சஞ்சிகையிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சரித்திர நிகழ்ச்சிகளையும் நிலைக்களனாகக் கொண்ட கதைகள் எழுதியுள்ளார். வானொலியில் மேல் நாட்டு நாடக ஆசிரியர்களைப் பற்றிச் செய்த விமர்சனங்கள் தினகரனில் தொடராக வெளிவந்த பொழுது நாடகத்துறையிலீடுபட்டவர்கள் அதனைவிரும்பிப் படித்தார்கள். ஹென்றிக் ஹிப்சனின் அமர நாடகமான 'பொம்மை வீடு' (The Doll House) நாடகத்தைத் தழுவிப் 'பெண்பாவை' என்ற பெயர் (நாடகத்திற்குத் தமிழ் வடிவம் கொடுத்தவர் தேவன் - யாழ்ப்பாணம்) கொடுக்கப்பட்டது.  வானொலியில் இப்ஸனின் பொம்மை வீட்டைப் பற்றி அறிஞர் அ.ந.கந்தசாமி செய்த நாடக விமர்சனம் 'பெண்பாவை'யைப் பார்த்த நாடக அபிமானிகளுக்கு இப்ஸனின் 'பொம்மை வீட்டை'ச் சரியாக இனம் கண்டு கொள்ள உதவியது. அறிஞர் அ.ந.கந்தசாமி இலக்கிய விமர்சனத்துடன் நில்லாது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவர் மகாகவி பாரதியாரின் ஞானகுருவாகிய யாழ்ப்பாணத்துச் சாமியார் யார் என்பதை ஆராய்ந்து பாரதியாரின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சாமியார் அல்வாயூர் அருளம்பல தேசிகர் என்ற உண்மையை நிலைநாட்டினார். அருளம்பல தேசிகர் பற்றிய விரிவான நூல் எழுதுவதற்குரிய குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார். மகாகவி பாரதியாருக்கு 'பாரதி' பட்டம் கொடுத்த இலங்கையர் யார் என்பதை மரணமடைவதற்குச் சில மாதங்களுக்கு முன்னால் ஆராய்ந்து கொண்டிருந்தார். உலகப் பேரழகி கிளியோபறாவைப் பற்றிப் பல ஆங்கில நூல்களை ஆராய்ந்து அரியதொரு கட்டுரையை 'ராதா' வார இதழில் வரைந்தார். ஆறுமுக நாவலரைப் பற்றி விரிவானதொரு நூல் எழுதப் போவதாகக் குறிப்பிட்டதுடன் அவ்வப்போது பல நாளிதழ்களில் எழுதிய கட்டுரைகளையும் ஒழுங்காகச் சேகரித்து வைத்திருந்தார். மேல்நாட்டு எழுத்தாளர் ஓ ஹென்றியின் சிறுகதை உத்திகளையும், திருப்பங்களையும் பாராட்டும் அ.ந.க. அவற்றை இளம் எழுத்தாளர்கள் படித்துப் பயனடைய வேண்டும் என்று அவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டார். அ.ந.க. அறிஞர் பெர்னாட்ஷா முதல் பேரறிஞர் பெட்ரண்ட் ரஸ்ஸல் வரை அறிந்து வைத்திருந்தார். பெட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத அராபிய உறவுகள்' என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை 'இன்ஸான்' வார இதழில் தொடர்ந்து எழுதினார்.  எப்பொழுதும் தன் எழுத்துக்களால் பிறர் பயன் அடைய வேண்டும் என்று விரும்பும் அ.ந.கந்தசாமி 'வெற்றியின் இரகசியங்கள்' என்ற தத்துவ நூல் ஒன்றினையும் எழுதியுள்ளார். இது தமிழகத்தில் பாரி நிலையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இஃது எல்லா வகையிலும் சிறந்து வாழ்க்கையைப் படிப்பிக்கும் நூலாகும்."

'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்' என்னும் அரியதோர் ஆய்வு நூலை முனைவர்களான சி. மௌனகுருன் மௌ. சித்திரலேகான் & எம். ஏ. நுஃமான் ஆகியோர் எழுதியுள்ளனர். அதில் 'விமர்சனம்' என்னும் பகுதியில் அ.ந.க.வின் பங்களிப்பு பற்றிக் குறிப்பிடுகையில்,

"இவ்வாறு 1940 ஆம் ஆண்டுகளிலேயே நவீன இலக்கிய விமர்சன முயற்சிகள் தொடங்கப்பட்டன எனினும் 50 ஆம் 60 ஆம் ஆண்டுகளில்தான் ஈழத்தில் அவை சிறப்பாக வளர்ச்சியுற்றன. 50ஆம் ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக 1956க்கப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஈழத்தில் ஏற்பட்ட தேசிய பண்பாட்டு உணர்ச்சியின் விளைவாக இலக்கியத்திலும் தேசிய தனித்துவச் சிந்தனை வளர்ச்சியுள்ளது. இதன் பெறுபேறாக தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு வடிவம் பெற்றது. 50 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இருந்து 60 ஆம் ஆண்டுகளின் முற்பகுதி வரை, ஈழத்தின் இலக்கிய மேடைகளிலும், பத்திரிகை சஞ்சிகை போன்ற பொதுத் தொடர்புச் சாதனங்களிலும் தேசிய இலக்கியம் பற்றிய சர்ச்சைகள் நடைபெற்றன. ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். ஆங்கில இலக்கியத்துக்கும் அமொிக்க இலக்கியத்துக்கும் இடையே உள்ள வேற்றுமைகளை உதாரணமாகக் கொண்டு தமிழக இலக்கியத்துக்கும் ஈழத்து இலக்கியத்துக்கும் இடையே அழுத்திக் கூறினர். தேசிய இலக்கியம் பற்றி எழுதிய அ.ந.கந்தசாமி பின்வருமாறு குறிப்பிட்டார்.

'ஒரு மொழிக்கு ஒரு இலக்கியம் என்பது மொழிகள் கடந்து பரவி நிலைபெற்ற இக்காலத்துக்கு ஒவ்வாது. கடந்த இருநூறு ஆண்டுகளாக வளர்ச்சி பெற்றுவரும் ஆங்கில மொழி பல தேசிய இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இன்று நாம் வெறுமனே ஆங்கில இலக்கியம் என்று கூறினால் அது அமொிக்க இலக்கியத்தையோ ஆஸ்திரேலிய இலக்கியத்தையோ கனேடிய இலக்கியத்தையோ குறிக்காது. தேசிய இலக்கியம் என்ற நமது இயக்கம் சர்வதேசியத்துக்கு முரண்பட்ட ஒன்றல்ல. உயிருள்ள இலக்கியத்துக்கு தேசிய சமுதாயப் பின்னணி அவசியம். இவ்விதப் பின்னணியில் உருவாகும் தேசிய இலக்கியமே காலத்தையும் கடலையும் தாண்டி சர்வ தேசங்களையும் ஈர்க்கும் வல்லமை பெற்றதாகும்.'

இக்காலப் பகுதியிலே நாவல், சிறுகதை போன்ற படைப்பிலக்கியத்துறையில் ஈழத்து வாழ்க்கை யதார்த்த பூர்வமான வடிவம் பெற்றது என்பதை முன் அத்தியாயங்களில் பார்த்தோம். அதைப் பலப்படுத்துகின்ற பிரக்ஞை பூர்வமான இலக்கிய சித்தாந்த வெளிப்பாடாகவே இத்தேசிய இலக்கியக் கோட்பாடு அமைந்தது. தேசிய இலக்கியம் என்பது எவ்வித வேறுபாடும் காட்டாது முழு மொத்தமான தேசியப் பண்பாட்டையும் உள்ளடக்கும் ஓர் இலக்கியக் கோட்பாடாகும். ஆனால் அதற்குள்ளே வர்க்க முரண்பாடுகள் உள்ளன. வர்க்க முரண்பாடுகளுக்கு இலக்கியத்தில் முதன்மை கொடுக்கும்போது, தேசிய இலக்கியத்தின் அடியாக பிறிதொரு இலக்கியக் கோட்பாடு உதயமாகிறது. அதுவே முற்போக்கு வாதமாகும். பரந்துபட்ட வெகுஜனங்களின் நலனையும், அவர்களின் பிரச்சினைகளையும், அவர்களது விமோசனத்துக்கான வேட்கையையும் இலக்கியத்திற் பிரதிபலிக்க வேண்டும் என்ற கொள்கையே முற்போக்கு வாதத்தின் சாராம்சமாகும். காலத்துக்குக் காலம் முற்போக்கு என்ற சொல்லுக்கு உரிய பொருள் வேறுபடலாம். நமது காலத்திலே முதலாளித்துவ சமூக முறையில் இருந்து, சோசலிச சமூக முறைக்கு மாறிச் செல்லும் போக்கினையே இது குறிக்கும். ஆகவே முற்போக்கு வாதம் தவிர்க்க முடியாமல் மார்க்ஸீய சித்தாந்தத்துடன் பிணைந்துள்ளது. அவ்வகையில் தேசிய இலக்கியக் கோட்பாட்டைவிட முற்போக்கு இலக்கியக் கோட்பாடு திட்டவட்டமான வரையறுக்கப்பட்ட அரசியல் சார்பு உடையதாகின்றது. ஈழத்து இலக்கிய விமர்சனத் துறையில் தேசிய இலக்கியக் கோட்பாட்டைப் பிரசாரப் படுத்துவதில் முன்னணியில் நின்ற விமர்சகர்களே 1950, 60 களில் இலக்கிய விமர்சனத்தில் முற்போக்கு வாதத்தை, அல்லது மார்க்ஸீய அணுகுமுறையைப் பிரயோகித்தனர். க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகிய இருவரும் இதில் முதன்மையாகக் குறிப்பிடத் தக்கவர்கள். அ.ந. கந்தசாமி, கே.கணேஷ் இளங்கீரன், ஏ.ஜே. கனகரத்தினா, பிரேம்ஜி. சில்லையூர் செல்வராசன், எச்.எம்.பி. முகையதீன் முதலியோரும் இலக்கிய விமர்சனத்தில் முற்போக்குக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தினர்."

இவையெல்லாம் அ.ந.க.வின் இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கான விமர்சனப்பங்களிப்பினை எடுத்தியம்புவன. அ.ந.க.வின் படைப்புகள் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் சிதறுண்டு கிடக்கின்றன. தினகரனில் வெளியான 'நான் விரும்பும் நாவலாசிரியர்' தொடரில் எழுத்தாளர் எமிலி சோலா பற்றி எழுதிய கட்டுரை, தினகரனில் தொடராக வெளிவந்த  மேனாட்டு நாடக ஆசிரியர்களைப்பற்றிய விமர்சனங்கள் (இவை அ.ந.க.வின் வானொலி விமர்சனங்கள். பின்னர் இவை தினகரனில் தொடராக வெளிவந்ததாக எழுத்தாளர் அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடரில் குறிப்பிட்டுள்ளர்.)  வானொலியில் இப்ஸனின் 'பொம்மை வீடு' நாடகம் பற்றி ஆற்றிய விமர்சன உரை ('வானொலியில் இப்ஸனின் பொம்மை வீட்டைப் பற்றி அறிஞர் அ.ந.கந்தசாமி செய்த நாடக விமர்சனம் 'பெண்பாவை'யைப் பார்த்த நாடக அபிமானிகளுக்கு இப்ஸனின் 'பொம்மை வீட்டை'ச் சரியாக இனம் கண்டு கொள்ள உதவியது.' என எழுத்தாளர் அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடரில் கூறியிருக்கின்றார்).

'வசந்தம்' நவம்பர் 1965 இதழில் வெளியான அ.ந.க.வின் 'தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்!' அ.ந.க.வின் முக்கியமான விமர்சனக் கட்டுரைகளிலொன்று. இது பின்னர் 'தேசாபிமானி' (ஜூலை 1970)  'பதிவுகள்' இணைய இதழ் (மார்ச் 2004; இதழ் 51) ஆகியவற்றிலும் மீள்பிரசுமாகியுள்ளது. இளங்கீரன் தொகுத்து வெளியான 'தேசிய இலக்கியமும், மரபுப் போராட்டமும்' கட்டுரைத்தொகுதியில் இடம்பெற்றுள்ள அ.ந.க.வின் 'தேசிய இலக்கியம்' (மரகதம்& 'ஈழத்து சிருஷ்டி இலக்கியத்துக்கு  குழிதோண்டும் முயற்சி' (தினகரன் 2.1.1962) ஆகிய கட்டுரைகளும் முக்கியத்துப் பெற்றவை.

அ.ந.க தினகரன் பத்திரிகையில் தொடராக வெளியான அவரது மனக்கண் நாவல் முடிவுக்கு வந்தபோது எழுதிய முடிவுரை நாவல்கள் பற்றி வெளியான சிறப்பான விமர்சனக் கட்டுரைகளிலொன்று. (அதனைப் பின்வரும் இணைப்பில் வாசிக்கலாம்: http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1433:2013-04-03-04-11-21&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47)  உதாரணத்துக்காக அக்கட்டுரையிலிருந்து அதன்  முக்கியத்துவத்தைக் காட்டுவதற்காகக் கீழுள்ள பகுதியினைத்தருகின்றேன்:

"நாவலிலே நாம் எதிர்பார்ப்பது சுழல்கள் நிறைந்த ஒரு கதை; உயிருள்ள பாத்திரங்கள்; கண் முன்னே காட்சிகளை எழுப்பும் வர்ணனைகள் என்பனவாம். கதை இயற்கையாக நடப்பது போல் இருக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் அந்த இயற்கை சட்டமிடப்பட்ட ஒரு படம் போல் ஓர் எல்லைக் கோடும் அழுத்தமும் பெற்றிருக்க வேண்டும். இன்னும் எந்தக் கதையுமே மனிதனிடத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஓர் இரக்க உணர்ச்சியைத் தூண்டல் வேண்டும். இதில்தான் ஒரு நாவலின் வெற்றியே தங்கியிருக்கிறதென்று சொல்லலாம். உண்மையில் மனித உணர்ச்சிகளில் இரக்கமே மிகவும் சிறந்ததென்றும் அதுவே ஒருவனது உள்ளத்தைப் பயன்படுத்தி அவனை நாகரிகனாக்குகிறதென்றும் கூறலாம். டேனிஸ் சேனாரட் (Denis Sanarat) என்ற அறிஞர் நாவலின் இத்தன்மையைப் பற்றிப் பேசுகையில் “காதலர்களின் நெஞ்சுடைவைப் பற்றி வாசிக்கும் வாசகன் தன் கண்ணில் நீர் பெருக்கிறானே, அது தான் நாவலாசிரியன் தன் உழைப்புக்குப் பெறும் பெரும் பரிசாகும்” என்று கூறுகிறார். ஷேக்ஸ்பியருக்குப் பின்னால் பாத்திர சிருஷ்டியின் பரப்பிலே ஆங்கில மொழி கண்ட மகாமேதை என்று கருதப்படும் சார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens)  பெற்ற வெற்றிக்கு, அவர் கதைகளில் இவ்வித இரக்க உணர்ச்சி விஞ்சியிருப்பதே காரணம், டிக்கென்ஸின் கதைகளில் இரண்டு பண்புகள் தலை தூக்கி நிற்கின்றன. ஒன்று அனுதாப உணர்ச்சி, மற்றது உற்சாகமூட்டும் நகைச்சுவை. உண்மையில் மனித வாழ்க்கைக்கே மதிப்பும் இன்பமும் நல்குவன இவ்விரு பண்புகளுமே. விக்டர் ஹியூகோவின் “ஏழை படும் பாடு”ம் இவ்விரு பேருணர்ச்சிகளையுமே பிரதிபலிக்கிறது." ('மனக்கண்' நாவலுக்கான தனது முடிவுரையில் அ.ந.க)

இவை தவிர 'தேசாபிமானி' பத்திரிகையில் எழுதிய 'நான் ஏன் எழுதுகின்றேன்?' போன்ற கட்டுரைகள், 'நாடகத்தமிழ்' (தமிழோசை), 'ஈழத்துத தமிழ்க் கவிதை' பற்றிய கட்டுரைகள், மரகதம் , பாரதி போன்ற சிற்றிதழ்களில் எழுதிய கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், திரைப்படங்கள் பற்றிய விமர்சனக் கட்டுரைகள், 'சுதந்திரன்' பத்திரிகையில் அவரது மொழிபெயர்ப்பில் 'நானா' தொடர் நாவலாக வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அவர் எழுதிய 'எமிலி சோலா' பற்றிய கட்டுரைகள், 'பண்டிதர் திருமலைராயர்' என்னும் பெயரில் 'சிலப்பதிகாரம்' பற்றிய் எழுதிய கட்டுரைகள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 'ஆத்ம ஜோதி' நாடகம் பற்றி எழுதிய விமர்சனக்கட்டுரை, திருக்குறள் பற்றி, அர்த்தசாத்திரம் பற்றி எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளும் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை. இவ்விதமாக அ.ந.க அவர்கள் இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது; விதந்தோடப்படுவது; காலந்தோறும் நினைவு கூரப்படுவட்து.

இந்நிலையில் 'நூலகம்' தளத்திலிருந்து எழுத்தாளர் மு.பொன்னம்பலம் அவர்களின் நூலான  "திறனாய்வு சார்ந்த சில பார்வைகள்" என்னும் நூலிலிருந்து "தமிழ் இலக்கிய விமர்சனப்போக்கு" என்னும் கட்டுரையினை வாசிக்கும் சந்தர்ப்ப கிட்டியது.  தமிழ் இலக்கிய விமர்சனப்போக்கினை ஆராயும் கட்டுரையின் இறுதிப்பகுதி இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் விமர்சனப்போக்கு பற்றி விரிவாகவே ஆராய்கிறது., இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியான அ.ந.க.வின் விமர்சனப்பங்களிப்பைத் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்துள்ளார் மு.பொ இக்கட்டுரையில். அதிலோரிடத்தில் தினகரனில் வெளியான 'நான் விரும்பும் நாவலாசிரியர்'என்னும் தொடரில் எழுதிய காவலூர் ராசதுரை, இளங்கீரன், பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றோரை மறக்காமல் குறிப்பிடும் மு.பொ அத்தொடரில் எமிலி சோலா பற்றி எழுதிய அ.ந.கந்தசாமியின் கட்டுரையினைக்குறிப்பிடாது இருட்டடிப்பு செய்துள்ளார். இக்கட்டுரையைப்பற்றி எழுத்தாளர் அந்தனி ஜீவா "தினகரன்' வாரமஞ்சரியில் வெளிவந்த 'நான் விரும்பும் நாவலாசிரியர்' என்ற கட்டுரைத் தொடரில் எமிலிஸோலாவைப் பற்றி அ.ந.கந்தசாமி எழுதிய கட்டுரை திறனாய்வு மிக்க கட்டுரை என்று எல்லோருடைய பாராட்டையும் பெற்றதுடன் எமிலிஸோலாவைப் படம் பிடித்துக் காட்டியது. " என்று கூறியதை முன்பே குறிப்பிட்டிருந்தேன். அத்தகையதொரு கட்டுரை மு.பொ.வின் கண்களுக்குத் தட்டுப்படாதது  ஆச்சரியமானது.

மேற்படி கட்டுரையில் 'மார்க்சியக் கருத்தியல் நோக்கினால் ஆற்றுப்படுத்தப்பட்டு  நவின தமிழ்  இலக்கிய விமர்சனத்துறைக்குள் புகுந்தவர்களாக க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, முருகையன், வானமாலை ஆகியோர் நிற்கின்றனர். இவர்கள் வழியில் ஆற்றுப்படுத்தப்பட்டவர்களாக இவர்களின் இளந்தலைமுறையினரானகே.எஸ்.சிவகுமாரன், எம்.ஏ.நுஃமான், மெளனகுரு, சித்திரலேகா மெளனகுரு, சிவசேகரம், யோகராசா ஆகியோர் நிற்கின்றனர்."  என்று குறிப்பிடும் மு.பொ. அங்கும் அ.ந.கவை இருட்டடிப்பு செய்துள்ளார். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மார்க்சியப்பார்வையினைப்புகுத்தியவராக அ.ந.க.வையே விமர்சகர்கள் குறிப்பிடுவர். ஆனால் அதனைக்கூட ஏற்க மனமில்லாதவராக மு.பொ. இருப்பதையே அவரது இக்கட்டுரை எடுத்துக்காட்டுகின்றது. முழுமதியை மேங்களால் நிரந்தரமாக மறைத்துவிடமுடியாது.  இலக்கிய வானில் அ.ந.க.வும் அத்தகைய முழுமதியைப்போன்றவர்.

உசாத்துணைச் சான்றுகள்:

1. அந்தனி ஜீவா 'சாகாத  இலக்கியத்தின் சரித்திர நாயகன்' (தினகரன்)
2.  தேசாபிமானி, சுதந்திரன் மற்றும் பாரதி ஆகியவற்றில் வெளியான கட்டுரைகள்.
3. பேராசிரியர் கைலாசபதி 'ஒப்பியல் இலக்கிய'
4. 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்' எழுதியவர்கள்: முனைவர்களான சி. மௌனகுருன் மௌ. சித்திரலேகான் & எம். ஏ. நுஃமான்
5. கட்டுரை: 'தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்" (வசந்தம், நவம்பர் 1995)
6. 'திறனாய்வு சார்ந்த சில பார்வைகள்' - மு.பொன்னம்பலம்.


17. கட்டுரை: 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு

அண்மைககாலத்தில் வெளிவந்து நான் வாசித்த கட்டுரைத்தொகுதிகளில் சிறந்த தொகுதிகளிலொன்றாகக் 'கணையாழிக்கட்டுரைகள் (1995-2000) தொகுதியினைக் கருதுவதில் எனக்கு எந்தவிதத்தயக்கமுமில்லை. இந்தக்கட்டுரைதொகுதி என்னைக் கவர்வதற்குக் காரணமாக  இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ள கட்டுரைகளின் கூறுபொருள், கட்டுரைகளின் மொழிநடை ஆகியவற்றையே குறிப்பிடுவேன்.

கட்டுரைகளின் கூறுபொருள்
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளின் கூறுபொருள் பன்முகத்தன்மை வாய்ந்தவை. கலை, இலக்கியம், அறிவியல், அரசியல் எனக் கட்டுரைகள் பல விடயங்களைப்பற்றிக் கூறுபவை. இலக்கியத்தை என்னும் அதை மேலு பல உபபிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். கவிதை, படைப்பாளிகளின் படைப்புத்தன்மை, நாடகம், மொழிநடை (வட்டாரத்தமிழ் போன்ற), மேனாட்டு இலக்கிய அறிமுகம், நூல் அறிமுகம் இவ்விதம் இலக்கியத்தின் பன்முகப்பிரிவுகளிலும் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது தேர்வாளர்களின் கடும் உழைப்பினை வெளிப்படுத்துகின்றது. இப்பிரிவிவில் வெளியான கட்டுரைகள் வெளிப்படுத்தும் விடயங்கள், தகவல்களும் பற்பல.

படைப்பாளிகளைப்பற்றிய கட்டுரைகளாகச் சா.கந்தசாமியின்  'ஒரு படைப்பாளியின் நடைப்பயணத்தில்' , 'ஆருயிர் கண்ணாளுக்கு' (எழுத்தாளர் புதுமைப்பித்தன் மனைவிக்கு எழுதிய நெஞ்சினைத் தொடும் கடிதம்), 'கருத்துக்குளத்தில் கல்லெறிந்த கலகக்காரர்'(பிரபஞ்சனின் கலைஞர் படைப்புகள் பற்றிய பார்வை), சா.கந்தசாமியின் 'இலக்கிய சரிதம்' , தஞ்சை ப்ரகாஷின் 'எம்.வி.வெங்கட்ராம் எனும் நிரூபணம்', விக்கிரமாதித்யனின் 'நவீன கவிதை பிரமிளுக்கு முன்னும் பின்னும்' , ஞானக்கூத்தனின் 'டி.எஸ்.இலியட்டும் தமிழ் நவீன இலக்கியமும்' , அசோகமித்திரனின் 'சக பயணி' போன்ற கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.

அசோகமித்திரனின் கட்டுரைகளில் கூறப்படும் பொருளுடன் பல்வேறு தகவல்களும் காணப்படுவது வழக்கம். இங்கும் 'சக பயணி' என்னும் அவரது சிறு கட்டுரை கோமல் சுவாமிநாதனைப்பற்றி குறிப்பாக அவரது நாடக, சினிமா முயற்சிகளைபற்றி, அவர் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட 'சுபமங்களா' பற்றி, கோமலின் இறுதிக்காலத்தைப்பற்றிச் சுருக்கமாகப் பதிவு செய்யும் கட்டுரை அறுபதுகளில் நடிகர் சகஸ்ரநாம் சேவா ஸ்டேஜ் நாடகக் குழு பற்றி, அறுபதுகளில் உஸ்மான் சாலையின் தென்பகுதியிலிருந்த தி.நகர் பஸ் ஸ்டாண்ட் பற்றியெல்லாம் மேலதிகத் தகவல்களைத் தருகின்றது.\

தஞ்சை ப்ரகாஷின் 'எம்.வி.வெங்கட்ராம் எனும் நிரூபணம்' என்னும் கட்டுரை எம்.வி.வி.யின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் சமயம், எழுத்தாளர் நீலமணி பற்றியும், சுதேசமித்திரன் பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பு பற்றியும் எடுத்துரைக்கின்றது. பொருளியல்ரீதியில் எவ்வளவோ சிரமங்களை இருப்பு அவருக்குக் கொடுத்தபோதும் எம்.வி.வி ஒருபோதுமே 'அவர் வியாபார எழுத்தில் , வெகுஜன ரசனையில் என்றுமே ஈடுபாடு வைத்ததில்லை' என்றும் கட்டுரையாளர் சுட்டிக்காட்டுவார்.

மேற்படி கட்டுரையில் சுதேசமித்திரன் பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பைக் குறிப்பிடுகையில், அதன் ஆசிரியர்  சீனிவாசன் புரியும் பண உதவி பற்றியும் கட்டுரையாசிரியர் பதிவு செய்கின்றார். "தமிழின் தரமான எழுத்து முயற்சிகளை, சிறந்த பத்திரிகைகளைப் பற்றிச் சொல்லும்போது தமிழ் அறிஞர்கள் சுதேசமித்திரனை மறந்து விடுகின்றார்கள். மணிக்கொடி, கிராம ஊழியன், கலாமோகினி போன்ற சிறந்த இலக்கிய இதழ்கள்  1940இலிருந்து 50 வாக்கில் மரணமடைந்த பின்னர்  அந்த வெற்றிடத்தை  சுதேசமித்திரன் என்ற சாதாரண செய்திப்பத்திரிகைதான் நிரவி சரி செய்தது.  லா.ச.ராமாமிர்தம், தி.ஜானகிராமன், பராங்குஷம், எம்.வி.வெங்கட்ராமன், கரிச்சான் குஞ்சு போன்ற  பல எழுத்தாளர்களுக்கு மிகச்சிறந்த இலக்கியத் தளமாக அமைந்த சுதேசமித்திரன் எங்களுக்குப் பெரியதொரு ஆலமரமாக நிழல் பரப்பியது என்பதைச்சொல்லாமல் இருக்க முடியாது. எம்.வி.வெங்கட்ராமன் அவர்களின்  மிகச்சிறந்த பரிசோதனை நாவல்களான இருட்டு, உயிரின் யாத்திரை இரண்டு நாவல்களும் வேறு எந்த வெகுஜனப் பத்திரிகையிலும் வெளிவந்திருக்க முடியாது. அந்தத் துணிச்சல்  சுதேசமித்திரனுக்கு இருந்தது." என்று சுதேசமித்திரனின் இலக்கியப்பங்களிப்பைக் கட்டுரை பதிவு செய்யும்.

கலைமகள் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்த எழுத்தாளர் நீலமணி பற்றியும், நீலமணி தம்பதியினரின் உபசரிப்பு பற்றியும் கட்டுரை நினைவு கூர்கின்றது. எழுத்தாளர் நீலமணி என்றதும் எனக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது எங்களது மாணவப்பருவத்தில் கலைமகள் சஞ்சிகையில் தொடராக வெளிவந்த அவர் எழுதிய 'புல்லின் இதழ்கள்' தொடர்நாவல்தான். தமிழில் இசை பற்றி வெளியான நாவல்களில் முக்கியமானவையாகப் பலரும் குறிப்பிடுவது தி.ஜானகிராமனின் 'மோகமுள்' நாவலையும், நீலமணியின் 'புல்லின் இதழ்கள்' நாவலையும்தாம் என்பது நினைவுக்கு வருகின்றது. உண்மையில் நீலமணி முறையாகப் பயிற்சி பெற்ற வயலின் இசைக் கலைஞர் என்பதும் , அவர் ஊடகத்துறையினையே தன் வாழ்வாதாரமாகத் தேர்ந்தெடுத்த ஒருவர் என்பதும் கூடவே நினைவுக்கு வருகின்றன.

எம்.வி.வெங்கட்ராமன் என்னும்போது எனக்கு நினைவுக்கு வருமொரு படைப்பு: தேவி மகாத்மியம். எழுபதுகளில் விகடன் மாதத்தொடர்நாவல்களை (நான்கு அத்தியாயங்களைக் கொண்ட தொடர்) வெளியிட்டு வந்தது. அவற்றிலொன்றுதான் 'தேவி மகாத்மியம்' என் அப்பா மிகவும் விரும்பிப்படித்த மாதத்தொடர்களிலொன்று என்பதால் இன்னும் ஞாபகத்திலுள்ளது.

கலைஞர் மு.கருணாநிதியின் எழுத்து பற்றிக்குறிப்பிடுகையில் எழுத்தாளர் பிரபஞ்சன் ( 'கருத்துக்குளத்தில் கல்லெறிந்த கலகக்காரர்' கட்டுரை) "எழுத்துக்கெனத் திட்டவட்டமான நோக்கம் வகுத்துக்கொண்டு இயங்குபவர் கலைஞர் மு.கருணாநிதி. தன் சமகாலத்தை விமர்சிப்பது, மாற்றுவது, உயர்த்துவது, ஒரு பொதுமை நலம் கொண்ட சமுதாயம் படைப்பது ஆகியவைகள் அவ்வரது லட்சியங்கள்" என்பார். எழுத்தாளர் சா.கந்தசாமியோ 'கலைஞர் மு.கருணாநிதி தன்  எழுத்து மீது நம்பிக்கை வைத்து ஐம்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து எழுதி வருகின்றார். அதனையே அவர் இலக்கிய இலட்சியம் என்று குறிப்பிட வேண்டும்' என்பார் தன் 'இலக்கிய சரிதம்' கட்டுரையில். நவீனத்தமிழ் இலக்கிய வரலாற்றில் பகுத்தறிவுக்கொள்கைகளைப் பாமரர்கள் மத்தியிலும் தம் அடுக்குமொழி மேடைப்பேச்சுகளாலும், திரைப்படங்களாலும் மற்றும் எழுத்தாலும் பரப்பியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் என்பது ஒரு காலகட்ட வரலாறு. அந்த அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் படைத்த இலக்கியத்துக்கும் ஓரிடமுண்டு. அவ்விதம் எழுத்தைத் தம் கொள்கைகப்பரப்புச்சாதனமாகப்பாவித்தவர்களில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் எழுத்துகளையும் தவிர்க்க முடியாது அவை உருவானதன் காரணத்தின் அடிப்படையில்.

கணையாழிக் கட்டுரைகள் (1995 - 2000)கி.ரா.வின்  'அந்த நாள்' படிப்பறிவற்ற மாடு மேய்த்து மடிந்துபோன ரெங்கி என்னும் பெண்ணிடமிருந்து தான் அறிந்த சொலவடைகளைப்பற்றி விபரிக்கும். குறிப்பாகத் தமிழ் மாதங்களின் பெயர்களில் அமையும் சொலவடைகளப்பற்றிக்குறிப்பிடும் கி.ரா செங்கி என்னும் மாடு மேய்க்கும் பெண்ணைப்பற்றியும் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்கின்றார். இதன் மூலம் அந்த மாடு மேய்க்கும் பெண்ணான செங்கி தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்து நின்றுவிட்டாள்.

வெங்கட் சாமிநாதனின் 'ஏன் இந்த இரைச்சல்' கட்டுரை புது தில்லியில் நீண்ட காலம் பணியாற்றிவிட்டுச் சென்னை திரும்பிய கலை, இலக்கியத் திறனாய்வாளாரான அமரர் வெங்கட் சாமிநாதனின் தமிழகக் கலை, இலக்கியச்சூழல் பற்றிய அவதானிப்பை வெளிப்படுத்துகின்றது. கூத்திலிருந்து ஆரம்பித்து, நாடகம், சினிமா, தொலைக்காட்சித்தொடர்களென்று வியாபித்திருக்கும் கத்திப்பேசும் பண்பினை எள்ளி நகையாடும் கட்டுரை கலை, இலக்கியவாதிகளின் மிகைப்படுத்தல்களையும், அலங்கார வார்த்தை விரயங்களையும், பட்டங்களையும் இரைச்சலின் பாற்பட்டவையாக, இரைச்சலின் இன்னுமொரு பரிணாமமாகச் சாடுகின்றது.

மரனின் 'நினைக்கப்படும்' கட்டுரைகள் மும்பை, கல்கத்தா நகர்களைப்பற்றிய சுருக்கமான பயண, விமர்சனக் கட்டுரைகள். கல்கத்தா பற்றிய கட்டுரையில் கல்கத்தாவில் பாரதியை நினைவுபடுத்தும் வகையில் வீதிகளுக்கு பாரதி பெயரில் வீதிப்பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் கட்டுரை 'தமிழர்கள் தாகூரைத்தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு வங்காளிகளுக்குப் பாரதியைத்தெரியுமோ? சந்தேகம்தான். ஆனாலும் பாரதிக்குக் கல்கத்தா காட்டும் மரியாதை , கவிஞனைப்போற்றும் கண்ணியம், காலமும் தூரமும் கடந்தும் கூட நினைக்கப்படும்' என்று முடிகின்றது.

'புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார்?' என்னும் மருதமுத்துவின் விரிவான கட்டுரை தொகுப்பின் இன்னுமோரிலக்கியக்கட்டுரை.  மிகவும்  விரிவாக எவ்விதம் பண்டைத்தமிழரின் சமுதாயத்தில் ஈமச்சடங்கு செய்யும் மதகுருக்களாக மிகவும் உன்னதமான இடத்திலிருந்த புலையர் பின்னர் வைதிகரின் வருகையால் எவ்விதம் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு இழிநிலை அடைந்தனர் என்பது பற்றியும், தமிழரின் கடவுளாக முருகக்கடவுளே இருந்தார் என்பது பற்றியும் ஆராயும் கட்டுரை அமெரிக்க அறிஞரான ஜார்ஜ் ஹார்ட்டின் தமிழர் பற்றிய ஆய்வுகளிலுள்ள குறைபாடுகள் பற்றியும் கவனத்தைச் செலுத்துகின்றது. தொகுப்பிலுள்ள நீண்ட கட்டுரைகளிலொன்று இந்தக் கட்டுரை.

தொகுப்பின் இன்னுமொரு நீண்ட கட்டுரை 'கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் அரசியற் பின்னணி' என்னும் முனைவர் க.முத்தையாவின் ஆய்வுக் கட்டுரை கால்டுவெல் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' நூலின் உண்மையான நோக்கம் தமிழின் தொன்மையை நிறுவுவதா அல்லது வடமொழி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத இகழ்ச்சி மூலம் தென்னிந்தியர்கள் மத்தியில் கிறிஸ்தவ மதத்தைப் புகுத்துவதா என்பது பற்றி ஆராயும். மேலும் திராவிடர்கள் என்னும் பதம் தமிழர்களைக் குறிக்கின்றது என்றும், வடவர்களால் இழிவாகத் தமிழர்களைக்குறிக்க அப்பதம் பாவிக்கப்பட்டதால் தமிழர்களே தம் இலக்கியங்களில் அப்பதத்தைப் பாவிக்கவில்லையென்றும் தனது ஆய்வுகள் மூலம் முடிவுக்கு வரும் முனைவர் இந்நிலையில் கால்டுவெல் அவர்கள் முதன் முறையாகத் தென்னிந்தியர்கள் அனைவரையும் இணைத்து 'திராவிடமொழிக் குடும்பம்' என்னும் கோட்பாட்டினை உருவாக்குகின்றார் என்கின்றார். கால்டுவெல்லுக்கு முன்னர் மலையாளம், தெலுங்கு , கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளை இணைத்துத் திராவிடம் என்னும் சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை என்கின்றார். உண்மையில் திராவிடக் குடும்பம் என்னும் கோட்பாட்டின் மூலம் , இந்தியாவை வடக்கு, தெற்காகப் பிரிப்பதும், தெற்கில் ஆதிக்கம் செலுத்துக்கொண்டிருந்த ஆரியரின் மதக் கோட்பாடுகளை எதிர்ப்பதும், இதன் மூலம் தெற்கில் மக்களைக் கிறிஸ்த்தவ மதத்துக்கு மாற்றுவதுமே மேற்படி நூலின் உருவாக்கத்துக்குக் காரணமான அடிப்படைக்காரணங்கள் என்பதையே முனைவரது ஆய்வுக்கட்டுரை எடுத்தியம்புகின்றது.

தொகுப்பில் இந்திய ஓவியக்கலை, சிற்பக்கலை பற்றி தமிழ்நாடனின் இரு கட்டுரைகள் "இந்திய இதிகாசங்களும், இந்திய ஓவிய மரபும்", "இந்திய இதிகாசங்களும், இந்திய சிற்ப மரபும்" ஆகிய கட்டுரைகளும், பெளத்த தாதுகோபங்கள் பற்றிய  மு.ஸ்ரீனிவாசனின்  'ஸ்தூபங்கள்' கட்டுரையும், வ.ந.கிரிதரனின் 'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக்கலையும்' கட்டுரையும், பிரெஞ்சு அறிஞரான  ழூவே துப்ருயலின் 'திராவிடர் கட்டடக்கலை' என்னும் கட்டுரையின் முரளி அரூபனின் மொழிபெயர்ப்புக் கட்டுரையும், அறிஞர் ஆனந்த குமாரசாமியின் 'அறிகுறி அறிதலும், தீர்வும்' என்னும் மொழிபெயர்ப்புக் கட்டுரையும் (முரளி அரூபன் மொழிபெயர்த்தது), , சி.மோகனின் ' ராய் செளத்திரி (1899- 1975)' என்னும் ஓவியம், சிற்பம், இசை, எழுத்து எனத்தடம் பதித்த தேவி பிரசாத் ராய் செளத்திரி பற்றிய கட்டுரையும் விபரிக்கின்றன. ழூவே துப்ருயலே முதலில் திராவிடர்க்கட்டடக்கலை பற்றித்  தமிழில்  எழுதிய  அறிஞர் என்று அறிகின்றேன். அதற்காக அவருக்கு நன்றி கூறவேண்டும். இதற்குக்காரணம் வரலாற்றுப்பெருமை பேசுவதில் காலத்தைக் கழிக்கும் தமிழர்கள் வரலாற்றைப்பேணுவதில் அதிகம் அக்கறை காட்டுவதில்லை என்பதுதான். இல்லாவிட்டால் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் ஆலயங்கள் , சிற்பங்கள் போன்றவற்றை ஆராய்ந்து நூற்றுக்கணக்கில் நூல்கள் வந்திருக்க வேண்டுமல்லவா? மேற்படி  முரளி அரூபனின் இக்கட்டுரை ஏற்கனவே புகைப்படங்கள், ஓவியங்களையும் உள்ளடக்கிச் சிறு நூலாக த் தமிழில் வெளியாகியுள்ளது. மு.ஶ்ரீனிவாசனின்  'ஸ்தூபங்கள் தாதுகோபங்களை அவற்றின் வரலாற்றுப்பின்னணியில் வைத்து, ஆராய்கிறது. வ.ந.கிரிதரனின்  'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக்கலையும்'  பண்டைய இந்துக்களின் கட்டட மற்றும் நகர அமைப்புக் கலை பற்றியும், அவற்றைப் பாதித்த சமயம், புவியியல் அமைப்பு, மற்றும் சமுதாய அமைப்பு போன்ற காரணிகள் பற்றியும், இந்து மற்றும் பெளத்த மதங்களின் கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய கோட்பாடுகள் பற்றியும் சுருக்கமாக ஆராய்கின்றது.

தொகுப்பிலுள்ள ஒரேயொரு அறிவியற் கட்டுரையான வ.ந.கிரிதரனின் 'அண்டவெளிக்கு ஆய்வுக்கு வழிகோலும் தத்துவங்கள்' என்னும் கட்டுரை. நவீன இயற்பியலின் இரு தூண்களாக ஐன்ஸ்டைனின் 'சார்பியற் தத்துவத்தையும்' (சிறப்புச் சார்பியற் தத்துவம் மற்றும் பொதுச்சார்பியற் தத்துவம்) , சக்திச்சொட்டுப்பெளதிகத்தையும் (குவாண்டம் பிசிக்ஸ்) குறிப்பிடலாம். இவற்றில் சார்பியற் தத்துவமே நவீன வானியற்பியலின் (Astro Physics)  அடிப்படையும் கூட.   ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவத்தின் வெளி, நேரம், புவியீர்ப்பு பற்றிய நவீனக் கோட்பாடுகளை சாதாரண மக்களும் அறிந்துக்கொள்ளும் வகையில், எளிமையான மொழி நடையில் விவரிக்கின்றது கிரிதரனின் மேற்படி கட்டுரை.

தி.க.சிவசங்கரனின் 'கி.பி.இரண்டாயிரத்தில் தமிழ் இலக்கியம்: சில கவலைகளும், கனவுகளும்' கட்டுரையும் தொகுப்பின் இன்னுமொரு குறிப்பிடத்தக்கக் கட்டுரை. வணிக மயமாகிவிட்ட ஊடகத்துறை, மனிதரை விலங்கு நிலைக்குத்தள்ளக்கூடிய நுகர்வுக் கலாச்சாரத்தின் தாக்கம், இவற்றுக்கு மத்தியில் தமிழ் இலக்கியம் வளராது தேங்கிய குட்டையாகி விடும் ஆபத்துள்ளது. இந்நிலையில் தமிழ் இலக்கியத்தை எவ்விதம் காப்பது என்பது பற்றிய தி.க.சி.யின் கவலையை விபரிக்கும் கட்டுரை இது.

நகுலனின் 'கூண்டினுள் பட்சிகள்' என்னும் நீல பத்மனாபனின்  நாவலைப்பற்றிய மதிப்பீடு. இந்நாவல் தத்துவச்சார்பான நாவலென்றும், சச்சிதானந்த சுவாமிகள் எவ்விதம் போகியாகி, யோகியாகி, சுவாமிகளாகிச் சமாதிநிலை அடைக்கின்றார் என்பதை விவரிக்கும் நாவலென்றும், சுவாமிகளின் வாழ்க்கையூடு ஆத்மா எவ்விதம் பல் நிலைகளைத்தாண்டிப்பிறவிப்பிணியிலிருந்து விடுபடுகின்றது என்பதை ஆராயும் நாவலென்றும் நகுலன் நாவலை மதிப்பீடு செய்கின்றார். என்.எஸ். ஜகந்நாதனின் 'என்னைக் கேட்டால்' நார்வீஜிய மெய்யியல் பேராசிரியரான ஜோஸ்டைன் கார்டர் எழுதிய 'சோபியின் உலகம்' என்னும் நூலைப்பற்றிய விமர்சனம். நாவலின் பிரதான பாத்திரமான சோபிக்கு வரும் கடிதங்களினூடு மேலைய மெய்யியலைப்பற்றிய விரிவான தகவல்களை அறிய முடிகின்றது. 'புனைவும் , யதார்த்தமும் ஒன்றில் மற்றொன்று கலந்து வெகுதூரம் செல்லு கதை' இந்நாவலை வர்ணிக்கின்றார் கட்டுரையாசிரியர். நகுலனின் விமர்சனத்துக்குள்ளான நீல பத்மனாபனின் நாவல் கீழைத்தேய மெய்யியலை விபரித்தால், ஜகந்நாதனின் 'என்னைக் கேட்டால்' மேலைத்தேய மெய்யிலை விபரிக்கும் நாவலை விமர்சனத்துக்குள்ளாக்குகின்றது.

இந்திரா பார்த்தசாரதியின் 'பழையன புகுதல்' மேனாட்டிலுருவாகி ஆண்டுகள் பல கடந்துத் தமிழகத்தில் அறிமுகமாகும் பல இலக்கியக்கோட்பாடுகளின் அடிப்படை பண்டைய இந்திய இலக்கியங்களிலிருந்து ஆரம்பமாகியுள்ளதைச் சுட்டிக்காட்டும். 'Jawues Lacan' ஒப்புக்கொண்டிருக்கின்றார். அபி நவ குப்தாவின் (950 - 1020 AD)) 'த்வொனி' என்ற கருத்தாக்கம் அவரை எப்படிப்பாதித்தது என்று அவரே கூறியுள்ளார்'  என்று எடுத்துரைக்கும் அவர் 'அதி அற்புதமான பின் நவீனத்துவ இலக்கியப் படைப்புகளுக்குச் சிறந்த சான்றுகள் மஹாபாரதமும், விக்கிரமாதித்தியன் கதைகளுந்தாம்' என்று கட்டுரையை முடிக்கின்றார்.

எஸ்.ராமச்சந்திரனின் 'ஆயுத பூசை' தொழிலாளர் விழாவான ஆயுத பூசையையைப்பற்றி வரலாற்று நோக்கில் ஆராயும் நல்லதோர் ஆய்வுக்கட்டுரை.

கணையாழி சஞ்சிகை செப்டம்பர் 2017 இதழின் முகப்பு'தமிழ்ப்படைப்பிலக்கியத்தின் எதிர்காலம்' என்னும் இந்திரா பார்த்தசாரதியின் தொகுப்பிலுள்ள இன்னுமொரு நீண்ட கட்டுரை. 'பிரபல இலக்கியத்தின் பிரதிநிதியாக கல்கியும், சிறுபான்மையோ இலக்கியத்தின் பிரதிநிதியாகப் புதுமைப்பித்தனும் முப்பதுகளில் தோன்றினார்கள்.  இவ்வரலாற்று உண்மையின் தொடர்ச்சியாகத்தான் இன்றுவரை தமிழ் இலக்கியம் வளர்ந்து வந்திருக்கின்றது' என்று குறிப்பிடும் இ.பா. 'தமிழ்ப்படைப்பிலக்கியத்தின் எதிர்காலம் தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பால்தானிருக்கின்றது' என்னும் முடிவுக்கு வருகின்றார். அதற்கான அவரது தர்க்க நியாயங்களை சங்க கால இலக்கியங்களில் தொடங்கி, மேனாட்டு இலக்கியங்களில் புகுந்து அவற்றிலிருந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில் நிறுவுகின்றார்.

தொகுப்பின் சினிமாக் கட்டுரைகளை எஸ்.குரு மற்றும் எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். எஸ்.குருவின் கட்டுரைகள் பிரெஞ்சு சினிமா பற்றியும், தமிழ்ச் சினிமாவின் முதலாவது சமூகப்படம் எது என்பது பற்றியும் ஆராய்ந்தால், எஸ்.சுவாமிநாதன் 'குருதிப்புனல்' தமிழ்த்திரைப்படம் பற்றித் தன் கவனத்தைச்செலுத்துகின்றது.

'வட்டார வழக்குகளில் பாவிக்கப்படும் அளவை அலகுகள்' பற்றி ஆராயும் கழனியூரானின் கட்டுரை 'நாட்டுப்புற மக்களின் மொழிநடையில்தான் நமது கலாச்சார பண்பாட்டுச் செல்வங்களின் சுவடுகள் காணக்கிடக்கின்றன.  எனவே நாம் நாட்டார் வழக்காற்றியல் துறை சார்ந்த சேகரங்களைச் சேமிப்பதிலும் ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்தவேண்டும்'எ என்று வற்புறுத்துகின்றது.

'மார்க்சின் தூரிகை யுகம் கடந்த குறியீடுகள்' என்னும் தியாகுவின் கட்டுரையும் முக்கியமான கட்டுரைகளிலொன்று. கிரேக்க தெய்வங்களிலொன்றான சீயுஸ் தலைமையிலான தேவர்களை எதிர்த்து, அவர்களிடமிருந்து நெருப்பைக் கைப்பற்றி வந்த வீரன் புரோமிதியஸ் பின்னர் கைது செய்யப்பட்டுக் கொடிய சித்திரவதைகளுக்குள்ளாகியபோதும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கின்றான். இக்கிரேக்கப்புராணக் கதையினை அடிப்படையாக வைத்துக் கிரேக்க நாடகாசிரியரான எஷ்கிலஸ் எழுதிய புகழ்பெற்ற நாடகம்தான் 'கட்டுண்ட புரோமிதியஸ்'. இக்கதையினை எவ்விதம் மார்க்ஸ் தன் முனைவர் பட்டத்துக்கான் ஆய்வுக்கட்டுரையில் கையாள்கின்றார் என்பதை ஆய்வுக்கண்ணோட்டத்தில் விபரிக்கின்றது மேற்படி கட்டுரை.

இவை தவிரத் தொகுப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பி, லதா ராமகிருஷ்ணன், சுஜாதா, அம்ஷன் குமார், வெளி ரங்கநாதன் என்று மேலும் பலரின் ஆக்கங்களும் அடங்கியுள்ளன.

இவையெல்லாம் கூறி நிற்பவைதாமென்ன? தொகுப்பின் பன்முகக்கட்டுரைகளின் கூறு பொருளையல்லவா. இத்தொகுப்பின் முக்கியமான சிறப்பு இதுதான். கலை, இலக்கியத்தின் பல்வகைப்பிரிவுகளிலும் (அரசியல், தத்துவம், நூல் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், சினிமா, அறிவியல் என்று) கட்டுரைகளைத்தொகுப்பாளர்கள் தேர்ந்தெடுத்திருப்பதுதான்.

கட்டுரைகளின் மொழிநடை!
கட்டுரைகள் அனைத்துமே பல்வேறு விடயங்களைக் கூறினாலும், அவை எவ்வளவு சிக்கலாக இருந்த போதிலும், வாசிப்பவர்களுக்கு எளிதில் விளங்கும் வகையிலான நடையினைக் கொண்டவை. அதற்காக, வாசகர்களைக்கவர வேண்டுமென்பதற்காக அண்மைக்காலச்சிற்றிதழ்கள் பல வெளிப்படுத்தும் தேவையற்ற சொற்பிரயோகங்களைக் கொண்டவை அல்ல. இது கணையாழிப்படைப்புகளின் முக்கியமானதொரு பண்பு என்பேன். அப்பண்பு இக்கட்டுரைத்தொகுப்பிலுமுள்ளது என்பதைத்தொகுப்பு ஆக்கங்கள் வெளிப்படுத்துகின்றன. தொகுப்பிலுள்ள கட்டுரையொன்றான  'இருண்மை:  இலக்கிய உத்தியா? தந்திர வித்தையா? ' என்னும்  பழநியப்பா சுப்பிரமணியனின் கட்டுரையில் பின்வருமாறு ஓரிடத்தில் வருகின்றது:

".. இந்த நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் நவீன இலக்கியவாதிகள் கவிதை என்பது படித்துப் புரிந்துகொள்ளக் கடினமானதாக இருக்க வேண்டும் என்ற அணுகுமுறையைத் தோற்றுவித்தார்கள்.  எளிமையையும், தெளிவையையும் எழுத்தில் கொண்டு வருவதற்கு அவசியமான கடின உழைப்பை விரும்பாதவர்கள் அதனை வரவேற்றார்கள்." இக்கூற்றானது பி.ஜே. என்ட்ரைட் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட தற்காலக்கவிதைத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள முன்னுரையில் வரும் கூற்றெனவும் கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். இக்கூற்று கவிதைக்கு மட்டுமல்ல கதை, கட்டுரை போன்ற இலக்கியத்தின் ஏனைய வடிவங்களுக்கும் பொருந்துமென்பதென் கருத்து.

மிகவும் எளிமையும் தெளிவையும் ஒருங்கே கொண்டுவருவதற்கு மிகுந்த உழைப்பு தேவை. ஏனென்றால் ஒரு விடயத்தில் ஆழமான  புலமை இருந்தால் மட்டுமே , அந்த விடயத்தைப்பற்றி மிகவும் தெளிவாகவும், எளிமையாகவும் எழுத முடியும். இதற்கு அவ்விடயத்தைப்பற்றிய பூரண அறிவு இருக்க வேண்டும். அதற்கு நிச்சயம் கடினமான உழைப்பு அவசியம். இத்தகைய உழைப்பு அற்றவர்கள்தாம் , சொற்சிலம்பம் ஆடுவார்கள். இவர்கள்  வாசகர்களை மயக்கி, கூறும் விடயத்தைப்பற்றி வாசகர்களுக்கும் புரிய விடாது, தாமும் முழுமையாகப் புரிந்துகொள்ளாதவர்கள் என்பதை மூடி மறைக்கச் சொற்சிலம்பம் ஆடுவார்கள்.  ஆனால் கணையாழிப்படைப்புகள் எளிமையும், தெளிவையும் கொண்டு , ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தும் படைப்புகள். கணையாழிப்படைப்புகளின் முக்கிய பண்புகளிலொன்றாக இதனைக் குறிப்பிடலாம். இத்தொகுப்பிலும் அதனை நீங்கள் காணலாம். மொத்தத்தில் தொகுப்பாளர்களான ம.ரா, க.முத்துக்கிருஷ்ணன் மற்றும் ஜீவ கரிகாலன் ஆகியோரும், வெளியிட்ட கவிதா பதிப்பகத்தாரும் நிச்சயமாகப் பெருமைப்படத்தக்கதொரு தொகுப்புத்தான் 'கணையாழிக் கட்டுரைகள் (1995 - 2000) ' தொகுப்பும்.


18.  புலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்!

[இந்தக் கட்டுரை எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகவும், எழுத்தாளர் டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டு தோறும் வெளிவரும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலருக்காக எழுதப்பட்டது.  கனடாத் தமிழ் இலக்கியவுலகில் தவிர்க்க முடியாததொரு தொகுப்பிதழ் 'கூர்' கலை இலக்கிய மலரென்று நிச்சயம் கூறலாம். - ஆசிரியர் ]

புலம் பெயரும் மானுட சமுதாயம் ...புலம்பெயர்தலென்பது மானுட இனத்துக்கு மட்டுமேயுரியதொன்றல்ல. இயற்கையில் பறவைகள், மிருகங்கள் மத்தியிலெல்லாம் அவற்றின் இருப்புக்கு ஆதாரமாகப் புலம்பெயர்தலிருப்பதைக் காணலாம். உடல்ரீதியிலான பருவ மாற்றங்கள், காலநிலை மாற்றங்கள், இனவிருத்தி தேவைகளெனப் பல்வேறு காரணங்களுக்காகப் பறவைகள், மிருகங்களெல்லாம் தாம் பிறந்த இடத்திலிருந்து புலம்பெயர்ந்து வருவதெல்லாம் அவற்றின் தப்பிப்பிழைத்தலுக்குரிய தேவைகளின் காரணமாகத்தான். புலம்பெயர்தலென்பது மானுட சமுதாயத்தின் வளர்ச்சிக்கு எப்பொழுதுமே உறுதுணையாகத்தானிருந்து வந்திருக்கிறது. இதனைத்தான் இதுவரையிலான மானுட வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கிறது. புலம்பெயர்தலுக்குப் பல்வேறு காரணிகள் இருந்த போதிலும் முக்கியமான காரணம் இருத்தலுக்கான தப்பிப் பிழைத்தலே என்று நிச்சயமாகக் கூறலாம். ஆதியில் மானுடர்கள் நாடோடிகளாக புலம்பெயர்ந்தார்கள். உணவுக்காக அவர்கள் அடிக்கடி புலம்பெயர வேண்டிய தேவை ஏற்பட்டது. பின்னர் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்கள் மானுடரின் புலம்பெயர்தலை ஊக்குவித்தன. சங்ககாலத்தமிழர் வாழ்வை விபரிக்கும் சங்கத் தமிழ் இலக்கியங்கள் உழைப்புக்காகப் புலம்பெயர்ந்த தலைவனின், அவனை நினைத்து ஏங்கும் தலைவியின் உளநிலையினை விரிவாகவே விளக்கி நிற்கின்றன. அவ்விதம் உழைப்புக்காகப் புலம்பெயராமல் சோம்பி நிற்றலை எள்ளி நகையாடியது அக்காலகட்டச் சமுதாயம். மாதவியிடமிருந்து பிரிந்து மீண்டும் கண்ணகியை நாடிய கோவலன் அவளுடன் மதுரைக்குப் புலம்பெயர்ந்ததை விபரிக்கிறது சிலம்பு. அத்துடன் பல்வேறு காலகட்டங்களில் வேற்று நாட்டவர்கள் வர்த்தகம் நாடிப் புலம்பெயர்ந்து பண்டையத் தமிழ்கத்துக்கு வந்திருப்பதையும் 'கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்' என்று மேலும் விபரிக்கும் (கடல் ஆடு காதை: வரி 130). புலம்பெயர் மாக்கள் என்ற பதத்தினை அப்பொழுதே இளங்கோவடிகள் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் புலம்பெயர்தலைக் குறிப்பிடும் diaspora என்னும் சொல்லினை ஆராய்வது இச்சமயத்தில் சிறிது பயன்மிக்கதாக அமையக்கூடும். diaspora என்னும் பெயர்ச்சொல் புலம்பெயர்ந்த சமூகத்தைக் குறிப்பிடுவதற்காக இன்று பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த அர்த்தத்தில் இடம் பெயர்தலைக் குறிப்பிடும் migration என்னும் சொல்லும்,  diaspora என்னும் சொல்லும் ஒரே பொருளையே கொண்டுள்ளன. சிதறுதல் அல்லது பரவுதல் என்னும் பொருளைத்தரும் கிரேக்கச் சொல்லான diaspeirein என்னும் சொல்லினை அடியாகக் கொண்டு உருவானதொரு சொல்லே diaspora. மேற்படி 'டயஸ்போரா' (diaspora) என்னும் சொல் வரலாற்றுரீதியாகப் பலவேறு சமயங்களில் பல்வேறு காரணங்களில் பாவிக்கப்பட்டு வந்துள்ளது.  கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இஸ்றவேலிலிருந்து பாபிலோனுக்கு வெளியேற்றப்பட்ட யூதர்களைக் குறிப்பதற்காக இந்த dispora என்னுக் சொல் பாவிக்கப்பட்டுள்ளது.  இன்றைய இஸ்ரேல்குக்கு வெளியே, பாலஸ்தீனத்துக்கு வெளியே காணப்பட்ட யூதச் சமூகங்களைக் குறிப்பிடுவதற்காக இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு வெளியே வாழ்ந்த யூதர்களைக் குறிப்பிடுவதற்காக இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு வெளியே காணப்பட்ட யூதக் குடியேற்றங்களின் நீட்சியினைக் குறிப்பிடுவதற்கு இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர்தலென்பதென்பதொன்றும் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமேயுரியதொன்றல்ல. ஆனால் அவ்வப்போது படைப்பாளிகள் சிலர் உதிர்க்கும் கருத்துகள் சிலவற்றைப் பார்க்கும்போது அவ்விதம்தான் எண்ணத் தோன்றுகின்றது. தேசம.நெற் இணையத்தளத்தில் 'புலம்பெயர் எழுத்தாளர்களே! எங்கள் அவலங்களை உங்கள் இருப்பக்காகப் பயன்படுத்தாதீர்கள் -செங்கை ஆழியான் ' என்றொரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதிலவர் ' ஈழத்திலிருந்து இடம்பெயர்ந்து ஆக்குகின்ற எழுத்துக்களை புலம்பெயர் இலக்கியங்கள் என்று அழைக்கின்றோம்' என்று கூறுவார். அத்துடன் அக்கட்டுரையில் புலம்பெயர்ந்த மக்களையெல்லாம் கோழைகளென்றும், பயத்தினாலும், பொருள் தேடும் நோக்கினாலும் மேற்குநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களென்றும் குறிப்பிட்டிருப்பார். இவ்விதமாகப் பலர் மேலோட்டமான கட்டுரைகளை அவ்வப்போது புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றி உதிர்ப்பது வழக்கம்.  இவர் மட்டுமல்ல எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒருமுறை அதனைப் 'புலம்பல் இலக்கியம்' என்றார். மல்லிகை ஆசிரியரும் வாசகரொருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் 'பிரச்சினைகளுக்குப் பயந்து பிறந்த நாட்டையும் வாழ்ந்த வீட்டையும் இனசனங்களையும் விட்டு பிரதேசம் ஓடும் காகக் கூட்டத்தைப் பற்றி நினைத்துத்தான் நான் அடிக்கடி பச்சாதாபப்படுவதுண்டு' என்று பதிலளித்திருப்பதாக எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரையொன்றில் படித்த ஞாபகம். கம்பவாரிதி ஜெயராஜ், கவிஞர் புதுவை இரத்தினதுரை போன்றோர் கூட புலம்பெயர்ந்தோர் பற்றி கிண்டலடித்திருக்கின்றார்கள். இவர்களெல்லோரும் புலம்பெயர்ந்த மக்கள் கூட்டததைப் பற்றிய கிணற்றுத் தவளைகளாக இருந்ததனால்தான் இவ்விதம் பதிலளித்திருக்கின்றார்கள். மேலும் சிலர் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் தமிழ் இலக்கியத்தைக் குறிப்பிடுவதற்காக மேற்குறிப்பிட்டவாறு 'புலம்பெயர் இலக்கியம்' என்று பொதுவாகக் குறிப்பிடுவார்கள். இதுவும் தவறானதொரு பதம். உண்மையில் வரலாற்றினை எடுத்துப் பார்த்தால் காலத்துக் காலம் பலவேறு நாடுகளிலிருந்தும் மக்கள் பலவேறு சமூக, அரசியல், பொருளியல் காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்திருகின்றார்கள். இவர்களெல்லாரும் காலத்துக் காலம் பலவேறு வடிவங்களில் (செய்யுள், உரைநடை என) புலம்பெயர் இலக்கியங்களைப் படைத்திருக்கின்றார்கள். இந்நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் படைத்த இலக்கியங்களை 'புலம்பெயர் தமிழர் இலக்கியங்கள்' என்றுதான் குறிப்பிட வேண்டும்.

புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கில் புலம்பெயர்ந்தவர்கள் தமிழ் இளைஞர்கள்தான். இவர்கள் புலம்பெயர்ந்ததற்கு முக்கிய காரணம் அங்கு நிலவிய அரசியல்தான். பொருளாதாரமும் காரணங்களிலொன்றுதானெறாலும் முக்கியமான காரணம் அரசியல்ரீதியானதுதான். தமிழ் இளைஞர்களைப் பொறுத்தவரையில் முக்கியமாக இருவிதமான அரசியல் நிலைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஒன்று இலங்கைத் தீவின் ஆட்சிக் கட்டிலிலிருந்த இனவாத அரசுகளின் அடக்குமுறை; பயங்கரவாத தடைச் சட்டங்கள் போன்ற கொடிய மானுட உரிமைகளை மறுதலிக்கின்ற சட்டங்கள். எழுபதுகளில், எண்பதுகளில் இலங்கை அரச படைகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் பல ஆயிரங்களைத் தாண்டும். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்; இன்னும் பலர் காணாமல் போனார்கள். அன்றைய காலகட்டங்களில் அடைக்கப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் இன்றும் வெலிக்கடை போன்ற சிறைகளில் வாடுவதொன்றும் இரகசியமான செய்தியல்லவே. அடுத்தது தமிழ் அமைப்புகளுக்கிடையில் நிகழ்ந்த மோதல்கள். அவற்றிலும் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவ்வமைப்புகளைச் சேர்ந்த பல தமிழ் இளைஞர்கள் இம்மோதல்கள் காரணமாகவே புலம்பெயர்ந்தார்கள். அதே சமயம் இத்தகைய அமைப்புகளுக்கிடையிலான மோதல்களின் போது வீதிகளில் இளைஞர்களின் உடல்கள் எரியுண்டிருக்கும் சமயம் அங்கிருந்த புலம் பெயராமலிருந்த தமிழர்களில் சிலர் வெற்றிக் களிப்பில் மிதந்தவர்களுக்கு சோடா உடைத்துக் கொடுத்தார்கள். அப்பொழுதெல்லாம் அங்கிருந்த மக்களில் பெரும்பான்மையினர் கொலைசெய்யப்பட்டவர்களுக்காக நீதி கேட்கவில்லை. ஒருவித அச்சத்தில் ஒடுங்கிக் கிடந்தார்கள். அங்கிருந்த எழுத்தாளர்களும் அன்று அச்சத்தில் முடங்கிக் கிடந்தார்கள். அவற்றையெல்லாம் அச்சத்தின் காரணமாகப் படைப்புகளின் பொருளாக ஆக்கப் பயந்திருந்தவர்கள் புலம்பெயர்ந்தவர்களைப் பார்த்து எள்ளி நகையாடியது ஒருவித முரண்நகை. அவ்விதம் எள்ளி நகையாடியவர்களே பின்னர் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்களை யுத்தங்களில் கொன்று குவித்த இலங்கையின் ஆட்சிக் கட்டிலிலிருந்தவர்களிலிருந்து பல்வேறு விருதுகளை பணிவுடன், குழைந்து நின்று பெற்றது காலத்தின் கோலம். உண்மையில் இவ்விதம் சமூக, அரசியல், பொருளியற் காரணங்களுக்காக மக்கள் அவ்வப்போது புலம்பெயர்வதென்பது ஆச்சரியமானதோ அல்லது வெட்கப்படக் கூடியதோ அல்லவென்பதை வரலாற்றின் அடிப்படையில் புரிந்து கொண்டு ஆய்வுக் கண்ணோட்டத்துடன் ( ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டுவதை விட்டுவிட்டு ) அணுகவேண்டும். எல்லோருமே மானுடர்கள். குற்றமும், குறைகளையும் கொண்ட சாதாரண மானுடர்களென்பதை விளங்கிக்கொண்டு புரிந்து கொண்டு ஆய்வுக் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுவே சரியான அணுகுமுறையாகவிருக்க முடியும்.  உண்மையில் புலம் பெயருமொருவரின் புலம்பெயர்தலுக்குக் காரணிகளாக அரசியலுமிருக்கும்; பொருளியலுமிருக்கும். இலங்கையிலிருந்து தமிழ் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் 1979இல் புலம் பெயர்ந்ததற்கு அன்றைய 'தம்மிஷ்ட்ட' ஜனாதிபதி ஜே.ஆர். கொண்டுவந்த 'பயங்கரவாத தடைச் சட்டம்'  பிரதானமான காரணமாகவிருந்தது. ஆனால் அவ்விதம் புலம்பெயர்ந்தவர்கள் அருகிருந்த இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்திருக்கலாம். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் செல்வச் செழிப்புள்ள மேற்குலகிற்கே புலம்பெயர்ந்தார்கள். அதற்குக் காரணம். நல்லதொரு எதிர்காலத்தை நாடித்தான். அதற்குக் காரணம் பொருளியல்தான். அன்றைய காலகட்டத்தில் பொருளியல் காரணங்களினால் மேற்குலகிற்குப் புலம்பெயர முடியாதவர்களில் பலர் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்தார்கள். ஆனால் அவர்களில் பலர் இன்னும் பல சிரமங்களுக்கிடையில் அங்குள்ள அகதி முகாம்களில் வாழும் துர்ப்பாக்கிய நிலையினைத்தானே இன்றும் காண்கின்றோம். ஆயுதங்களுக்கு அஞ்சி ஈழத்திலிருந்த மக்கள் மெளனித்திருந்ததொன்றும் வெட்கப்படக்கூடியதொன்றல்ல. இது பொதுவானதொரு மானுடரின் இயல்புதான். அதுபோல்தான் அங்கிருந்த படைப்பாளிகளும் தம்மீது திணிக்கப்பட்டிருந்த அடக்குமுறைகள் அனைத்துக்கும் எதிராகத் துணிந்து குரல்கொடுக்க முடியாதிருந்தார்கள். அதுவும் வெட்கப்படக்கூடியதல்ல. எல்லோருமே லசந்த விக்கிரமதுங்க போன்றவர்களாகவோ ரிச்சர் டி சொய்சா போன்றவர்களாகவோ அல்லது 'தராக்கி' சிவராம் போன்றவர்களாகவோ இருந்து விடுவார்களென்று எதிர்பார்க்க முடியாது. இதுபோல்தான் ஈழத்தில் நிலவிய சமூக , அரசியல் அடக்கு, ஒடுக்குமுறைகள் காரணமாக வெளியேறியவர்கள்,  புதிய சூழலில் கிடைத்த சுதந்திரத்தை வைத்து படைப்புளைப் படைத்ததும், அதுவரை நிலவிய அரசியலை ஆய்வுசெய்ய விழைந்ததும் இயல்பானதொன்றே; வரவேற்கப்படத்தக்கதொன்றே. ஆனால் அவ்விதம் அணுகியவர்களும் அவற்றையும் உணர்ச்சிரீதியில், மாற்றுக்கருத்துகளை ஆக்ரோசத்துடன் கூற விழைந்ததுதான் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டிய அத்தகைய ஆய்வுகளின் முக்கியத்துவத்தையும் குறைப்பதாகவிருந்து விட்டது. அதே சமயம் புஸ்பராசா போன்ற ஒரு சிலரின் ஆய்வுகள் இந்தவிடயத்தில் ஆரோக்கியமாக அமைந்திருந்ததையும் மறுப்பதற்கில்லை.

புலம் பெயரும் பறவைகள் ...புலம்பெயர் இலக்கியமென்று பொதுவாகப் புலமபெயர்ந்த மக்கள் படைக்கும் இலக்கியங்களை அழைக்கலாமா என்பதில் கூடப் பலவகையான கருத்துகள் நிலவுகின்றன. உண்மையில் புலம்பெயர்ந்த மக்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டுமே புலம்பெயரவில்லை. பலவேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தார்கள். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவிலிருந்து வட அமெரிக்காவரைக்கும் பலவேறு சமூக, அரசியல், பொருளியல் மற்றும் பண்பாட்டுச் சூழல் நிலவும் சூழல்களுக்குள் தூக்கியெறியப்பட்டார்கள். இவ்வகையில் அந்தந்த நாடுகளில் கால்களை ஊன்றிக்கொண்டவர்களால் படைக்கப்பட்ட இலக்கியமும் அந்தத தேசங்களுக்குரிய தேசிய இலக்கியங்களில் ஒரு பகுதியே. இந்த வகையில் அந்தத்த நாடுகளில் நிலவும் சமூக, அரசியல், பொருளியல் மற்றும் பண்பாட்டுச் சூழல்களுக்கேற்ப அங்கு படைக்கப்படும் இலக்கியங்களும் விளங்கின; விளங்கும்.  இதனால்தான் ஈழத்துக் கலை, இலக்கிய விமர்சகர்களிலொருவரான கே.எஸ்.சிவகுமாரன் அடிக்கடி  'புலம் பெயர்ந்தோர் இலக்கியம்' என்று கூறுவது பொருத்தமானதாகயில்லை. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் பல இளைஞர்கள் எழுதி வந்தாலும் அவற்றை ஈழத்து இலக்கியத்தின் ஒரு கூறாக நாம் எடுத்துக் கொள்வது சரியில்லை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தமிழ் மொழியில் எழுதினாலும் அவர்கள் வெளிப்படுத்தும் அனுபவங்களும், சிந்தனைகளும் அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் இடங்களின் சித்திரிப்பாகவே நாம் கொள்ள வேண்டும். உதாரணமாக, பிரான்சிலிருந்து ஒருவர் தமது பிரெஞ்சிய அனுபவங்களையோ, அங்கிருந்து கொண்டு ஈழத்துச் சூழல் நினைவுகளையோ எழுத்தில் வடித்தால் அந்த எழுத்துக்களை ஈழத்துப் புலம்பெயர்ந்தோர் இலக்கியமென்று கூறுவதை விட 'பிரெஞ்சு நாட்டு தமிழிலக்கியம்' என்று கூறுவதே பொருத்தமானது. ஆங்கில மொழியை வெவ்வேறு நாடுகளில் ஆக்க இலக்கியத்திற்குப் பயன்படுத்தப்படும்பொழுது அந்த இலக்கியங்கள் அந்தந்த நாட்டு ஆங்கில இலக்கியங்களாகவே கருதப்படுகிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, கரீபியத் தீவுகள், நியூசிலாந்து, ஆப்பிரிக்கா கண்டத்தின் பல்வேறு நாடுகள், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து குறிப்பிடக்கூடிய பல எழுத்தாளர்கள், ஆங்கிலேயரைப் போன்றே அற்புதமான ஆங்கில இலக்கியப் படைப்புகளைத் தந்துள்ளனர். இலங்கையில் பிறந்தாலும் 'மைக்கல் ஒண்டாட்ஜி', 'ஷ்யாம் செல்வதுரை' போன்றவர்கள் கனடா ஆங்கிலேய இலக்கியத் துறைக்கு வளம் சேர்த்துள்ளமையை இங்கு நினைவூட்டலாம்' என்று கூறுவதைப் புறக்கணிக்க முடியாது. அதுவே சரியானதொரு நிலைப்பாடாகவும் தெரிகிறது.  இதனைப் புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம் பற்றி கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் அனைவரும் அவதானத்திலெடுத்துக் கொள்வது நல்லது.  அண்மைக் காலமாக சு. குணேஸ்வரன், டிசெ தமிழன் போன்றவர்கள் சிறிது ஆழமான கட்டுரைகளை இந்த விடயத்தில் எழுதி வருவதைக் காண்கின்றோம். ஆயினும் இவர்களும் 'புலம்பெயர்ந்தோ இலக்கியம்' என்ற பொதுவான கண்ணோட்டத்தில்தான் பலவேறு நாடுகளிலும் பரந்து வாழ்ந்துவரும் தமிழர்களால் படைக்கப்படும் தமிழ் இலக்கியம் பற்றிக் கூறி வருகின்றார்கள். இது புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் தமிழ் இலக்கியத்தின் முழுப் பரிமாணத்தையும் காட்டுவதாக அமைந்து விடாது. இதற்கு முக்கிய காரணிகளிலொன்று பலவேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் படைக்கும் இலக்கியப் படைப்புகள் பற்றிய விபரங்கள், படைப்புகள் இவர்களுக்குப் போதிய அளவில் கிடைப்பதில்லை. மேலும் இவர்கள் தமக்குக் கிடைக்கும் அச்சுருவில் வெளியான நூல்களை மட்டுமே பெரும்பாலும் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றார்கள் (ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில், தமிழகப் பல்கலைக் கழக மட்டங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்கள் கணித்தமிழின் முக்கியத்துவத்தையும் ஏற்றுக்கொண்டு அவற்றையும் , அவற்றில் வெளிவந்த படைப்புகளையும் தமது ஆய்வுகளில் பாவித்துக் கொள்கின்றார்கள். ஈழத்தைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழக மட்டத்திலுள்ளவர்களும் தமக்குக் கிடைக்கும் நூல்களின் அடிப்படையில் மட்டும்தான் ஆய்வுகளை மேற்கொள்கின்றார்கள். கணித்தமிழின் முக்கியத்துவத்தை இவர்கள் உணர்ந்ததாக இன்னும் தெரியவில்லை. இந்நிலையின் இவர்கள் மாற்றிக் கொள்வது தமிழ் இலக்கிய ஆய்வுகளை மேளும் செழுமைப்படுத்துவதாக அமைந்துவிடும்.) மேலும் பல்வேறு நாடுகளுக்கும் இடம்பெயர்ந்து, நிலையூன்றி அந்தந்த நாடுகளில் இலக்கியம் படைக்கும் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியிலும் படைப்புகளை மையமாகவைத்து 'எப்பொருள் யார்வாய்க் கேட்பினும்  அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்னும் பக்குவம் நிலவாத நிலைதான் காணப்படுகிறது. ஒருவருக்கொருவர் தமக்கென்று குழுமங்களை உருவாக்கி, தாம் சொல்வதே சரியென்னும் தொனியில் செய்ற்படும் பலரையே காண்கின்றோம். கனடாவிலிருந்து அண்மையில் இலங்கை சென்ற பெருங்கவிஞர் ஒருவர் , கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 'கனடாத் தமிழ் இலக்கியம்' பற்றி நிகழ்த்திய உரையினை 'ஞானம்' இதழொன்றில் வாசித்தது ஞாபகத்திற்கு வருகிறது. எந்தவித ஆய்வுக் கண்ணோட்டமுமின்றி கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். இதனை வாசிக்குமொருவர் அதனடிப்படையில் எதிர்காலத்தில் இன்னுமொரு ஆய்வுக் கட்டுரையினைப் படைத்து விடுவார். சு. குணேஸ்வரன் போன்றவர்களின் கட்டுரைகள் ஆழமாக இருந்தாலும் அவர்களும் பொதுவானரீதியில் ஆய்வுக்கட்டுரைகளைப் படைக்கின்றார்கள். அவற்றை வாசிக்கும்போது அவற்றை ஆக்கியவர்கள் நிறைந்த எண்ணிக்கையில் படைப்புகளைப் படித்துவிட்டுக் கூறுவதுபோன்றதொரு தொனிதான் அக்க்ட்டுரைகளில் தென்படுகிறது. உண்மையில் இவர்கள் தமக்குக் கிடைத்த ஒருசில படைப்புகளை வாசித்துவிட்டுத்தான் இவ்விதம் கூறுகின்றார்களென்பதே உண்மை. மேலும் தமிழகப் படைப்பாளிகளின் பின்னால் (அதிலும் குழுரீதியில்தான்) ஒளிந்து நின்றுகொண்டு தமது படைப்புகளைக் கொண்டுவருவதற்கு முனையும் பலரையும் காணலாம். (படைப்பாளிகள், படைக்காத கலை, இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் படைப்புகளை அறிமுகம் செய்யும் காவிகள் எனப் பலர்). புலம்பெயர் இலக்கியம் பற்றி ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரைகள் எழுத விளையும் ஆய்வாளர்கள் பொதுவாக எழுதுவதைத் தவிர்த்துவிட்டு ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குரிய புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றித் தேவையான தரவுகளைச் சேகரித்துவிட்டு அக்குறிப்பிட்ட நாட்டிற்குரிய தமிழ் இலக்கியம் பற்றி எழுதுவது ஒருவிதத்தில் பயன்தர வல்லது. உதாரணமாக ஆஸ்திரேலியாத் தமிழ் இலக்கியம் பற்றி விரிவான கட்டுரையொன்றினை, விரிவாக எழுதலாம். இதுபோல் கனடா, அமெரிக்கா, பிரான்சு, ஜேர்மனி, நோர்வே... எனத் தனித்தனி ஆய்வுக்கட்டுரைகள எழுதலாம். இதற்கு அந்தந்த நாடுகளில் வசிக்கும் படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களெனப் பலருடன் தொடர்புகொண்டு பரந்த அளவில் தகவல்களைக் காய்த்தல் உவத்தலின்றிச் சேகரிக்க வேண்டும். இவ்விதமாக ஆவணங்கள் அதிக அளவில் சேகரிக்கப்படும்பொழுது,  ஆய்வுக்கட்டுரைகள் அதிக அளவில் வரும்பொழுது புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிய விரிவான ஆய்வுக் கட்டுரைகள் வெளிவரும் சாத்தியங்களுள்ளன.

இன்னுமொரு விடயத்தைப் பற்றிப் புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிப் புலம்புபவர்கள் கூறும் விடயங்களிலொன்று புலம்பெயர் தமிழ் இலக்கியப் படைப்புகள் கூறும் பொருள் பற்றியது. முன்னர் குறிப்பிட்ட செங்கை ஆழியானின் கட்டுரையினை ஒருமுறை இதற்குதாரணமாகப் பார்ப்பது பொருத்தமானது. புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் இன்னும் தமது பழைய (பிறந்த மண்ணில் அவர்களடைந்த) அனுபவங்களை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். மற்றது அவர்கள் புலம்பெயர்ந்த பின்னர் பார்வையாளர்களாக இருந்து கொண்டு 'பார்வையாளர்களின் குறிப்புகளை' எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்:

' அவர்கள் ஈழம் பற்றி எழுதியவை பார்வையாளர்களின் குறிப்புகளாக இருக்கின்றன. ஈழத்தின் துயரங்களை, இன்றைய வாழ்வியலை இத்துயரங்களுக்கிடையில் வாழாமல் பதிவசெய்ய முடியாது. பட்டினி தேசமாக மாறிவிட்ட யாழ்ப்பாணத்தின் துயரங்கள் தெரியுமா? தீ விட்டெரியும் கிழக்கின் அவலங்களைக் கற்பனையில் காணமுடியுமா? நாசி முகாம்களுக்கு இழுத்துச் செல்வது போன்ற அவலங்களை அனுபவிக்க முடியுமா? வீதிகளில் அவமே செத்துக் கிடக்கும் இளைஞர்களின் சடலங்கள் வெளியிடும் கனவுகளை உணர முடியுமா?' ( கட்டுரை: 'புலம்பெயர் எழுத்தாளர்களே! எங்கள் அவலங்களை உங்கள் இருப்பக்காகப் பயன்படுத்தாதீர்கள்!' - செங்கை ஆழியான் )

உண்மையில் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களால் ஊரில் வாழும், வாழ்ந்த சொந்த பந்தங்களின் நிலையினை வெளிநாட்டிலிருந்தே உணரமுடியாதா? அவர்களது உறவுகளில் பலர் செங்கை ஆழியான் மேற்குறிப்பிட்ட பல்வேறு வகையான துன்பங்களைத் துயரங்களை உணர்வதற்கு அவர்கள் ஊருக்குததான் போக வேண்டுமா? அவர்களது உறவுகளுக்கு ஏற்படும் துயரங்கள், சோகங்கள் இவர்களையும் நேரடியாகப் பாதிக்கின்றன. ஏனெனில் இவர்கள் அவர்களுக்கு அந்நியரல்லர். அவர்கள் இவர்களது உறவுகள். மண்ணை, உறவுகளையெல்லாம் பிரிந்து , அந்நிய மண்ணில் பல்வேறு மன உளைச்சல்களுக்கு மத்தியில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளால் நிச்சயமாக மண்ணின் நிலையினைப் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் தங்கள் உளவியற் பாதிப்பினைத்தான் எழுத்தில் வடிக்கின்றார்கள். அவை வெறும் பார்வையாளர்களின் குறிப்புகள் மட்டுமேயென ஒதுக்கி விடுவது அவ்வளவு இலகுவானதல்ல.  ஏனெனில் புலம்பெயர்ந்த தமிழர்களொன்றும் ஆகாயத்தின் மூலம் வேற்று நாடுகளுக்குக் குதித்துக் குடியேறியவர்களல்லர். அவர்களும் இதே மண்ணில் ஒருகாலத்தில் வாழ்ந்தவர்கள்தான். இது போன்ற அனுபவங்களை ஏதோ ஒருவகையில் அனுபவித்தவர்கள்தான். எழுபதுகளில், எண்பதுகளில் புலம்பெயர்ந்தவர்களில் பலர் பெரும்பாலும் அன்றைய சூழலில் நிலவிய அரசியல் நிலைமைகளால் ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கப்பட்டவர்கள்தான். தமிழர்களென்றரீதியிலும் பாதிக்கப்பட்டவர்கள்தான். இந்திய, இலங்கை அரசுகளின் யுத்தங்களில் சிக்குண்டு பாதிக்கப்பட்டுப் புலம்பெயர்ந்தவர்கள்தான். அன்றிலிருந்து இன்றுவரையில் (1979இலிருந்து இன்றுவரையில்) மக்கள் புலம்பெயர்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள். இன்றுள்ளவர்கள், சென்ற சில வருடங்களில் நிலவிய கொடிய போர்ச்சூழலில் அகப்பட்டு நிலைகுலைந்தவர்களைப் போல்தான், இந்தியப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட யுத்தகாலத்தில் நிலவிய சூழலிருந்தது. தொண்ணூறுகளில் இலங்கை அரசுகளுடனான யுத்தங்களின்போதும் இதுபோன்ற அழிவுகள்தான் நிகழ்ந்தன. அளவின் அடிப்படையில் மாறுதலிருக்கலாம். ஆனால் நிகழ்ந்த துயரங்கள், சோகங்களெல்லாம் ஒரே விதமானவைதான். பாதிப்புகள் ஒரே விதமானவைதான். இது போல்தான் அமைப்புகளுக்கிடையில் நடைபெற்ற மோதல்களில், உள்முரண்பாடுகளில் பாதிக்கப்பட்ட இளம் சமுதாயத்தினர் நிலையும். ஆக புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குப் போனவர்களெல்லாரும் ஒரே காலகட்டத்தில் நாட்டைவிட்டு ஓடியவர்களல்லர். அதே சமயம் ஓடிய ஒவ்வொருவரும் ஏதோவொரு பாதிப்பினை உள்வாங்கியதனால்தான் பிறந்த மண்ணைவிட்டு ஓடவேண்டிய சூழலேற்பட்டது. அந்த வலி,  துயரம் அவர்களிறக்கும் வரையில் அவர்களை விட்டுப் போகப்போவதில்லை. நாட்டில் உண்மையானதொரு அமைதியான சூழல் திரும்பும்வரையில் இப்படியேதான் அவர்கள் திரிசங்கு வாழ்க்கை (அங்குமிங்குமாய், ஓரிடத்திலும் நிலைக்க முடியாத அலைவு வாழ்க்கை) வாழப்போகின்றார்கள். அவர்கள் படைப்புகளில் தொனிக்கும் குரல்களை வெறுமனே பார்வையாளர்களின் குறிப்புகளாக ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் அவர்கள் பார்வையாளர்களல்லர். அவர்கள் அன்னிய மண்ணிலிருந்தாலும் பிறந்த மண் பற்றிய கனவுகளுடன், அனுபவங்களுடன், வலியுடன் வாழ்பவர்கள் அவர்கள். அவர்களது (புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறையினரது)  குடும்பங்கள் அன்னிய மண்வரையில் நீண்டு விட்டிருக்கின்றன. அவர்களை அவர்களது குடும்பங்களிடமிருந்து பிரிப்பது சாத்தியமற்றது.

மேலும் மேற்படி கட்டுரையில் செங்கை ஆழியான் பின்வருமாறும் கூறுவார்: 'இன்னமும் எவ்வளவு காலத்திற்குத் தான் கேள்வி ஞானங்களையும் தம் முன்னைய அனுபவங்களையும் வைத்து எம்மவரின் தாங்கொணாத் துயரங்களைப் புனைகதைகளாகவும் கவிதைகளாகவும் வடித்துத் தமிழ்நாட்டின் அப்ளாசைப் பெறப்போகிறார்கள்? அவை ஈழத்துத் தமிழ் இலக்கியங்களல்ல. ஈழம் பற்றிய தமிழ் இலக்கியங்கள். அது அ.முத்துலிங்கத்திற்கும் பொருந்தும். அதே போல எஸ்.பொன்னுத்துரை, வி.கந்தவனம், அரவிந்தன், ஷோபாசக்தி, ஜெயபாலன், சேரன் முதலான ஆற்றல் வாய்ந்த புலம்பெயர் இலக்கியம் படைக்கும் அனைவருக்கும் பொருந்தும்'

இதுவுமொரு தர்க்கநியாயமற்ற கூற்று. மேற்படி கூற்றில் ஒருவித எள்ளலும், காழ்ப்புணர்ச்சியும் குடிகொண்டிருப்பதுபோல் தென்பட்டால் அதற்குக் காரணம் மேலுள்ளவாறு எழுதிய கட்டுரையாளரே. முதலில் இன்னமும் எவ்வளவுகாலத்திற்குத் தான் 'கேள்வி ஞானங்களையும் தம் முன்னைய அனுபவங்களையும் வைத்து எம்மவரின் தாங்கொணாத் துயரங்களைப் புனைகதைகளாகவும் கவிதைகளாகவும் வடித்துத் தமிழ்நாட்டின் அப்ளாசைப் பெறப்போகிறார்கள்' என்றால் இருக்கும்வரையிலென்றுதான் கூறவேண்டும். ஏனெனில் பொதுவாகப் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளில் காணப்படும் பொதுவான பண்புகளில் சில: இழந்த , சொந்த மண்மீதான் கழிவிரக்கம்; இழந்ததை எண்ணிய ஏக்கம். அவர்களது படைப்புகளில் சொந்த மண்மீதான ஏக்கம், அங்கு நடைபெறும் நிலைமைகள் பற்றிய சிந்தனைகள் மற்றும் அவற்றின் விளைவான படைப்புகள் ஆகியன இயல்பான உணர்வுகள் , செயல்களே.  இதற்குதாரங்களாக அடிக்கடி பலர் குறிப்பிடுவது சேரன், ஜெயபாலனது இரு கவிதைகளைத்தான்.

"ஊரான ஊரிழந்தோம்...
ஒற்றைப்பனைத் தோப்பிழந்தோம்.
பாராள வந்தவரே!
உம்மையும் தான் நாமிழந்தோம்.
கடலே நீ இரையாதே!
காற்றே நீ வீசாதே!
நிலவே நீ அவியாதே!
நெஞ்சமெல்லாம் தீயாச்சே!
ஆற்றோரம் மணல் மேடு.
மணல் மேட்டில் பட்டிபூ!
பட்டிப் பூ பூத்திருக்கு.
யார் வரவைக் காத்திருக்கு" என்னும் சேரனது கவிதையொன்றில் வரும் வரிகள் இழந்த மண்மீதான கழிவிரக்கத்தையும், சோகத்தையும் அவற்றாலேற்பட்ட பாதிப்புகளையும் அற்புதமாக வெளிப்படுத்தும்:

" யாழ்நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்போட்டில்
ஒரு சகோதரியோ ப்ரான்ஸ் நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்கா
வந்து விட்ட ஒட்டகம்போல்
ஒஸ்லோவில்"

என்னும் ஜெயபாலனின் வரிகள்  உலகின் பல்வேறு திக்குகளுக்குமாகத் தூக்கியெறியப்பட்ட ஈழத்தமிழர்கள் எந்தவிதமான சட்டரீதியான குடியுரிமை ஆவணங்களுமின்றி, எதிர்காலம் பற்றி நிச்சயமற்ற நிலையில், கனவுகளுடனும், மண் மீதான கழிவிரக்கங்களுடன், அந்தந்த நாடுகளில் நிலவிய சட்டதிட்டங்கள் சுமத்திய சுமைகளின் கனத்துடன் வாழும் வாழ்க்கையினை விபரிப்பது. மேலுள்ள கவிதை வரிகளைப் பார்த்தால் இன்னுமொரு விடயமும் புரியும். யாழ்நகரில் பையன்; கொழும்பில் பெண்டாட்டி; வன்னியில் தந்தை; தள்ளாத வயதில் பிராங்போட்டில் அம்மா;  சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்; நானோ வழிதவறி அலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகமாக ஒஸ்லோவில். இவ்விதமாக அகதியொருவரின் குடும்பம் பல்வேறு நாடுகளுக்கும் பரந்திருக்கும் பெரியதொரு குடும்பமாகப் பரிணமித்திருக்கிறது. இந்நிலையில் ஊரிலுள்ள ஒருவரின் துயரமும், சோகமும் அகதியின் துயரமும்தான். ஊரிலுள்ளவர்கள் அடையும் பாதிப்பு இவரையும் பாதிக்கிறது. மேலும் பல் ஊடகங்கள் வளர்ந்து வாழ்வின் பிரிக்க முடியாத அங்கங்களாக ஆகிவிட்ட நிலையில் தகவல்கள் எவ்வளவு விரைவில் காணொளிக்காட்சிகளுடன் உலகெங்கும் பரவிவிடுகின்றன. இவையெல்லாம் அகதியொருவரைப் பாதிக்கத்தான் செய்யும். அந்நிலையில் அவற்றை வெறும் வரிகளாக ஒதுக்கிவிடமுடியுமா? உண்மையில் வேற்றுநாட்டைச் சேர்ந்த புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகள் பல (குறிப்பாக யூதர்கள் , பால்ஸ்தீனர்கள், ஈழத்தமிழர்கள், ஆபிரிக்கர்கள் போன்றோரின் ஆகியோரின் ) சொந்த அனுபங்களை வெளிப்படுத்தும் படைப்புகளே.  உண்மையில் பல்வேறு காலகட்டங்களில் மானுடர்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்திருக்கின்றார்கள். வியாபார நிமித்தம் , பொருளியற்காரணங்களுக்காக தமது இராச்சியத்தினை விரிவுபடுத்துவதற்காக (நெப்போலியன், இராசஇராசசோழன், அலெக்ஸாண்டர், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் போன்று) , நாட்டில் நிலவிய, நிலவும் அரசியல் காரணங்களுக்காக (ஆபிரிக்கர்கள்,  ஈழத் தமிழர்கள், ஆப்கானிஸ்தானியர்கள், ஈராக்கியர், செஸ்னியர்களென )..  இவ்விதமாகப் பல்வேறு காரணிகள் மானுடரின் புலம்பெயர்தலுக்கு இருந்தபோதிலும் இவர்கள் அனைவருக்கும் இருக்ககூடியதொரு பொதுவான இயல்பாக இழந்த மண்ணுடனான கழிவிரக்கத்தையும், அது தரும் சோகத்தினையும் கூறலாம்.

உண்மையில் புலம்பெயர் தமிழர் இலக்கியம் பற்றிய ஆய்வுகள் முறையாக, மேம்போக்காக அல்லாமல், செய்ய வேண்டியது அவசியம். அதற்கு வெறும் கிடைக்கும் ஒரு சில படைப்புகளை மட்டும் ஒரு மாதிரியாக வைத்துகொண்டு ஆய்வுகள் செய்யும் போக்கினைக் கைவிட்டு, ஆழமான தேடுதலுடன் கிடைக்கக் கூடிய தரவுகளைத் (தனிப்பட்டவர்கள் தொடக்கம் பல் ஊடகங்கள் வரையில்) திரட்டி விட்டு, அப்படைப்புகளை நன்கு வாசித்து,  புலம்பெயர்ந்து வாழும், வாழ்ந்த மானுடர்களின் புலம்பெயர் இலக்கியங்கள் (புனைவுகள் / அபுனைவுகள்) கூறும் பொருள் பற்றிய ஞானத்தினை நன்கு விருத்தி செய்து ஆய்வுகள் செய்வதவசியம். அவ்விதம் செய்வதன்மூலம் புலம்பெயர் தமிழர் இலக்கியத்தின் உண்மையான பண்பினை ஓரளவாவது அறிந்து கொள்ளக் கூடியதாயிருக்கும்.

19. பொ. ஐங்கரநேசனின் 'ஏழாவது ஊழி'!

தமிழில் சூழற் பாதுகாப்பு பற்றிய விரிவான தகவல்களுடன் கூடிய, சாதாரண வாசகர்களுக்குரிய நூல்கள் மிகவும் குறைவு. இவ்விதமானதொரு நிலையில் வெளிவந்திருக்கும் பொ.ஐங்கரநேசனின் 'ஏழாவது ஊழி' மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  இந்த நூலினை அண்மையில் வாசித்தபோது இவ்விதம்தான் தோன்றியது. தாவரவியலில் முதுநிலைப் பட்டதாரியான பொ.ஐங்கரநேசன் மேற்படி சூழல் பாதுகாப்பு பற்றிய துறையிலுள்ள தன் புலமையினை நன்கு பயன்படுத்திப் பொதுவான வாசகரொருவருக்கு மிகவும் இலகுவாக விளங்கும் வகையில், செறிவானதொரு நூலினைப் படைத்துள்ளார். சூழற் பாதுகாப்பு பற்றிய நாற்பத்தியொரு கட்டுரைகளை உள்ளடக்கிய 'ஏழாவது ஊழி' நூலினைத் தமிழகத்திலிருந்து சாளரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இன்றைய மனிதரின் செயற்பாடுகளினால் நாம் வாழும் இந்த அழகிய நீல்வண்ணக்கோள் எவ்விதம் பாதிக்கப்படுகின்றது, இதனைத் தவிர்க்க சர்வதேச உலகம் என்ன செய்ய வேண்டும், தனிப்பட்ட மனிதர்கள் எவ்விதம் பங்களிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் மிகவும் விரிவாக, அரிய பல தகவல்களுடன் நூலினைப் படைத்துள்ள ஐங்கரநேசன் முயற்சி காலத்தின் தேவைக்குரிய பயனுள்ள முயற்சி. இந்த நூல் சூழற் பாதுகாப்பு பற்றி விரிவாக விளக்குவதுடன், சூழற் சீரழிவுக்குக் காரணமான நாடுகள், நிறுவனங்கள் (குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்கள் ) பற்றியதொரு விமர்சனமாகவும் அதே சமயத்தில் இந்த விடயத்தில் இன்னும் நம்பிக்கையினை இழக்காததொரு நம்பிக்கைக் குரலாகவும் விளங்குகின்றது. பெரும்பான்மையின் பெயரால் நிலம், இயற்கைச் சூழல் அபகரிக்கப்படும்போது, பாதிக்கப்படும் சிறுபான்மையினமும் சூழற் சீரழிவுக்குக் காரணமாகவிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

சூழலியலை வெறும் அறிவியற் துறையாக மட்டும் ஐங்கரநேசன் கருதவில்லை. அதனை 'இயற்கையில் தோய்ந்து அதனொரு அங்கமாக, அனுபவித்து வாழுமொரு வாழ்க்கையாகவே' கருதுகின்றாரென்பதை நூலின் முன்னுரையிலுள்ள அவரது பின்வரும் கூற்று புலப்படுத்துகின்றது:

" சூழலியல் வெறுமனே கல்வி அல்ல. அது வாழ்க்கை.  இரத்தமும் சதையும் என்பார்களே; அதுபோல் இயற்கையில் தோய்ந்து அதன் ஒரு அங்கமாகவே அனுபவித்து வாழுகின்ற வாழ்க்கைதான் சூழலியல். சூழலியல் குறித்து இவ்வாறுதான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.  இதனால் அபிவிருத்தியின் பெயரால் காடுகள் அழிக்கப்படும்போது, எனக்கு வலிக்கிறது. காற்றில் குவியும் கரிப்புகை எனக்குச் சுடுகிறது.  உயிர்ப்பல் வகைமையில் அழியும் ஒவ்வொரு உயிரினமும் என்னை அழ வைக்கிறது. உடையில் , உணவில், அருந்தும் பானத்தில், மொழியில் பல்லினத்துவத்தை நிராகரிக்கும் உலகமயமாக்கலின் போக்கு என்னைக் கோபப்படுத்துகிறது.  பெரும்பான்மையின் பெயரால் எனது நிலம், இயற்கைச் சூழல் அபகரிக்கப்படும்போது என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை." [ பக்கம் 11]

நவகால மனிதரின் தொழிற் புரட்சி காரணமாகக் காபனீரொட்சைட்டு, காபனோரொட்சைட்டு, மெதேன், கந்தக ஈரொக்சைட்டு, நைட்ரஸ் ஒக்சைட்டு போன்ற 'பச்சை வீட்டு வாயுக்கள்; எனப்படும் வாயுக்கள் மிக அதிக அளவில் இந்தக் கிரகத்தின் வளிமண்டலத்தினுள் செலுத்தப்படுகின்றன. இந்தக் கிரகத்தில் உயிரினங்கள் வாழுவதற்குரிய வெதுவெதுப்பான சூழலுக்கு வளி மண்டலத்திலுள்ள மேற்படி வாயுக்களின் விளைவாக உருவாகும் வெப்பம் முக்கிய காரணம். ஆனால் மேற்படி வாயுக்கள் அளவுக்கு மீறி அதிகரிக்கும்போது மேற்படி 'பச்சை வீட்டு வாயுக்க'ளின் அளவு பல மடங்குகள் அதிகரிக்கின்றன. அதுவே பூமியின் வெப்பம் விரைவாக அதிகரிப்பதற்குக் காரணமாகின்றது. இதன் காரணமாகத் துருவங்கள் உருகுவதும், பல்வேறு காலநிலை மாற்றங்கள் உருவாவதும் அதிகரிக்கின்றன. இவற்றின் விளைவாக இந்தக் கிரகமானது உயிரினங்கள் வாழுவதற்குரிய கிரகமென்ற அந்தஸ்தினை விரைவாகவே இழந்து வருகின்றது. பல உயிரினங்களின் அழிவுக்குக் காரணமாகவும் இந்த அதிகரிக்கும் வெப்பம் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஒரு புறம் துருவங்கள் உருகிக் கடல்களின் நீர் மட்டங்கள் உயர்ந்து நாடுகளை இழக்கும் அபாயம் அதிகரிக்கின்றது. இன்னொருபுறமோ பசுந்சோலைகள் பாலைகளாகி, வளம் நிறைந்த வறண்டு போகின்றன. பவளப் பாறைகள் அழிந்துவருகின்றன. போதிய உணவின்றி வறிய நாடுகளில் வறுமை, பட்டினியால் மக்கள் துன்புறுகின்றார்கள்; மடிகின்றார்கள்.

இதே சமயம் இக்கிரகத்தின் சீரழிவுக்கு அபிவிருத்தி அடைந்த, செல்வந்த நாடுகளான மேற்கு நாடுகளே (குறிப்பாக அமெரிக்கா) முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. சூழற் பாதுகாப்பு சம்பந்தமாக, 'பச்சை இல்ல வாயுக்களை'க் குறைப்பதற்காக உருவான  சர்வதேச ஒப்பந்தங்களை மீறுவதும், மறுப்பதுமாக அமெரிக்கா இருந்துவருகின்றது. 1992ம் ஆண்டில் றியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற, ஐக்கிய நாடுகள் சபையினால் கூட்டப்பட்ட 'புவி உச்சி மாநாட்டில்' 'பச்சை இல்ல வாயுக்களை' மிக அதிக அளவில் வெளியேற்றும் செல்வந்த நாடுகள் இவ்விதமான வாயுக்களைக் கட்டுப்படுத்தும்படி கொண்டுவரப்பட்ட ஒப்பந்ததினை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை. மேற்படி ஒப்பந்தமானது மேற்படி 'பச்சை இல்ல வாயுக்க'ளின் அதிகரிப்புக்குக் காரணமான செல்வந்த நாடுகளை வற்புறுத்தியதைப்போல், ஏனைய வறிய, அபிவிருத்தி அடையாத, நாடுகளையும் வற்புறுத்த வேண்டுமென்பது அமெரிக்காவின் கருத்தாக இருந்துவருகின்றது. இது சம்பந்தமாக ஜப்பானில், கியோட்டோவிலும் ஒரு சர்வதேச ஒப்பந்தம் ' பச்சை இல்ல வாயுக்களை'க் குறைத்து, புவி வெப்பமுறுவதைத் தடுக்கும் வகையில் 1997இல் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டுவரப்பட்டது.  இதன் பிரகாரம் 2012ற்குள் பச்சை இல்ல வாயுக்களை 1990இல் இருந்த அளவிலும் பார்க்க  5.2 விழுக்காடு குறைவாகக் கொண்டுவரவேண்டுமென்று வற்புறுத்தப்பட்டது. 300 மில்லியன் தொன்கள் காபனை உறுஞ்சக் கூடிய அளவுக்குக் காடுகளை வளர்த்துள்ளதால் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் செயற்படவேண்டிய தேவையில்லையென்று அமெரிக்கா வாதிட்டது. 'மேலும் வளர்முக நாடுகளைக் கட்டுப்படுத்தாத இந்த ஒப்பந்தம் ஒருதலைப் பட்சமானது' என எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார் அன்று ஜனாதிபதியாகவிருந்த அதிபர் ஜோர்ஜ் புஷ் அவர்கள்.

இவ்விதமாகச் சூழற் பாதுகாப்பானது எவ்விதம் அஸ்பெஸ்டாஸ் என்னும்  கட்டடப் பொருள், பிளாஸ்ரிக் என்னும் பல்வேறு பொருட்களின் உற்பத்திக்காகப் பாவிக்கப்படும் மூலப்பொருள் போன்றவற்றால் சீரழிக்கப்படுகின்றதென்பதை 'ஏழாவது ஊழி' என்னும் இந்நூல் மிகவும் விரிவாகவே விளக்குகின்றது. உதாரணமாக பிளாஸ்ரிக் ஆயிரக்கணக்கான வருடங்களாக உக்கிச் சிதையாமலிருக்கும் தன்மை மிக்கது. இதன் காரணமாக பிளாஸ்ரிக் கழிவுகள் மழை நீரை நிலத்தினுள் நுழைய விடாமல் தடுத்து, நிலத்தடி நீரின் பற்றாக்குறையினை அதிகரிக்கின்றது. கழிவுகள் இயற்கையாகச் சிதைந்து அழிவதை 'உயிர்மச் சிதைவு' (Bio - Degradation) என்பார்கள். இதனைப் பிளாஸ்ரிக் தடுத்து நடைபெறவேண்டிய இயற்கைச் சுழற்சியினைத் தடுத்து விடுகின்றது. நிலத்தினுள் செல்லும் காற்றினை அளவினையும் அழியாத பிளாஸ்ரிக் தடுத்து, மண்ணினுள் வாழும் நுண்ணுயிர்களின் வாழ்க்கையினைச் சீரழிக்கின்றது. பிளாஸ்ரிக் உறையினுள் கிடக்கும் உணவுகளை உண்டு பறவைகள், மிருகங்கள் எனப் பல உயிர்கள் உயிரிழக்கின்றன.

இது போல் மரங்களை வெட்டுவதன் மூலம் அழிந்துவரும் மழைக்காடுகள் , மென்சதுப்பு நிலக் காடுகள், இவற்றால் அழிந்து வரும் உயிரினங்கள், காலநிலை மாற்றங்கள், பாதிப்புகள் எனச் சூழற்சீரழிவினை விரிவாக விளக்கி வைக்கும் இந்நூல் உலகமயமாதல் எவ்விதம் சூழற் சீரழிவுக்குக் காரணமாக விளங்குகின்றதென்பதை,. பன்னாட்டு நிறுவனங்கள் எவ்விதம் வறிய நாடுகளின் நிலங்களைச் சுரண்டி, சூழற் சீரழிவுக்கு வழி வகுக்கின்றனவென்பதைக்  கடுமையாக விமர்சிக்கின்றது. உதாரணமாக இன்று உலகமெங்கும் அனைவராலும் அணியப்படும் ஜீன்ஸ் உடைகளுக்குத் தேவையான பருத்தி நூலின் உற்பத்திக்காக எவ்விதம் வறிய, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் வளமான நிலங்கள் (அதுவரையில் உணவுக்காகப் பாவிக்கப்பட்டுக்கொண்டிருந்த) பாவிக்கப்படுகின்றன. இதனால் எவ்விதம் அந்நாடுகளின் நிலங்கள், அவற்றில் வாழும் உயிரினங்கள் பாதிப்புறுகின்றன, அந்நிலங்களில் காலங்காலமாக வாழ்ந்த பூர்விக குடிகள் இடம் பெயர்க்கப்பட்டு பாதிப்புறுகின்றார்கள், எவ்விதம் பருத்திச் செய்கைக்காக நதிகள் திருப்பி விடப்பட்டுக் காலப்போக்கில் வறண்டு போகின்றன, எவ்விதம் பருத்திப் பயிர்ச்செய்கைக்காகப் பாவிக்கப்படும் கிருமி நாசினிகள், பருத்திப் பஞ்சினை நீல நிறமாககப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் ஆகியன சூழலினை (நிலத்தினை, நீரினை) நஞ்சாக்குகின்றன என்பவற்றையெல்லாம் நூலில் ஆசிரியர் ஐங்கரநேசன் மிகவும் விரிவாக, மனது உறைக்கும்படியாக விளக்கியுள்ளார். இதற்குதாரணமாக எதியோப்பியாவைக் குறிப்பிடும் ஆசிரியர் அதற்காகப் பன்னாட்டு நிறுவனங்களின் மீதான தனது கடுமையான விமர்சனத்தையும் முன் வைக்கின்றார்:

"மேற்கு நாடுகள் தங்களது ஜீன்ஸ் தயாரிப்பு நிறுவனங்களை மூன்றால் உலக நாடுகளில் இயக்க ஆரம்பித்திருப்பதற்குத் தமது சுற்றுச் சூழலைத் தற்காத்துக் கொள்வது மாத்திரம் காரணம் அல்ல. மூன்றாம் உலக நாடுகளில் சம்பாதிக்கக் கூடிய கொள்ளை இலாபமும் இதன் பின்னணியில் உள்ளது. மூன்றாம் உலகத்தில் நிலவும் வறுமை இவர்களுக்கு அங்கே இரத்தினக் கம்பள வரவேற்பைக் கொடுத்திருக்கிறது. இந்தியா, வங்காளதேசம், கவுதமாலா, பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் குறைந்த ஊதியத்துடன் நிறைந்த வேலையை இவர்களால் வாங்க முடிகிறது. இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் தொடுப்பில் உள்ள கலப்பினப் பருத்திவிதை உற்பத்திப் பண்ணைகள் பெண் குழந்தைகளைக் கொத்தடிமைகளாக வேலைக்கு அமர்த்தியுள்ளன. ...கண்ணீரும்  கம்பலையுமாக வாடி நிற்கும் இந்தக் குழந்தைகளில் ஒன்றின் பிஞ்சு விரல்கள் தடவி உருவாக்கிய  பருத்திப் பஞ்சிலிருந்து கூட நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் ஜீன்ஸ் நெய்யப்பட்டிருக்கலாம்." [பக்கங்கள் 89- 90]

இவ்விதமாக இப்புவியில் வாழும் மானுடர்கள் தமது நெறியற்ற செயலால், பேராசையால், இந்த அழகான கோளினைச் சீரழித்து வருகின்றார்கள். ஒரு காலத்தில் இக்கோளின் மீது மோதுண்ட எரிகல்லினால் அச்சமயம் வாழ்ந்த டைனசோர்கள் போன்ற உயிரினங்களெல்லாம் அழிந்தன. அது போல் இன்றைய மனிதரின் சூழற் சீரழிவின் விளைவுகளால் இந்தக் கோளில் வாழும் உயிரினங்கள் அனைத்துமே அழியும் ஆபத்து ஏற்பட்டிருக்கின்றதென்பதை எச்சரிக்கும் நூலாசிரியர் அதனையே ஏழாவது ஊழியாகவும் கருதுகின்றார். இந்த நிலையிலும் ஆசிரியர் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையினை இழந்து விடவில்லை என்பதை நூலின் இறுதி அத்தியாயமான 'விடுதலைச் சூழலிய'லும், நூலின் முன்னுரையில் அவர் கூறியுள்ள சில வார்த்தைகளும் புலப்படுத்துகின்றன.

"பூமி அனுபவித்துவரும் இன்னோரன்ன சீரழிவுகளுக்கு மத்தியிலும் , மனிதன் பூமியின்மீது மேலாண்மை செய்வதை விடுத்துக் கூட்டாண்மை உறவுக்குத் திரும்புவான் என்ற நம்பிக்கை எனக்குள் இன்னமும் மீதமிருக்கிறது." [பக்கம் 13]

பீட்டர் மார்ஷல் என்னும் தத்துவஞானியால் முன்மொழியப்பட்ட 'விடுதலைச் சூழலியல்' என்னும் கொள்கையினை அனைவரும் ஏற்றுக்கொண்டு செயற்படுவதன் மூலமே தற்போது மானிடர் சூழற் சீரழிவின் விளைவாக உருவாகும், உருவாகவிருக்கும் அபாயங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியுமென்பது ' நூலாசிரியரின் கருத்தாகவிருக்கிறது. விடுதலைச் சூழலியல் என்னும் கோட்பாடானது 'ஒன்றுடன் ஒன்று உறவுகொண்ட இயற்கையை அங்கீகரிக்கின்றது; மனிதரே மையம் என்பதை நிராகரிக்கிறது; இங்கு வாழும் உயிர்களின் வலைப்பின்னலில் மனிதரும் ஓர் இழை, சக உயிரினங்களில் ஓரினமாக மனிதர் இருக்கின்றார் என்பதையும், மனிதரைப் போலவே தாவரங்களும், விலங்குகளும் இப்பூவுலகில் வாழ உரிமை உடையவை என்பதையும், மனித வாழ்க்கையைப் போலவே அவற்றின் வாழ்க்கையும் பெறுமதி மற்றும் பரஸ்பர பெறுமதி மிக்கவை (அத்துடன் பயனுள்ளவை)  என்பதையும்' நூலாசிரியர் ஆணித்தரமாக வலியுறுத்துகின்றார்.

சூழற் சீரழிவென்னும் 'ஏழாவது ஊழி'யின் விளைவாக அழிவினை எதிர்நோக்கியிருக்கும் இன்றைய மானுடரின் நிலைக்குக் காரணமான காரணிகளையும், காரணமானவர்களையும் தெளிந்த பார்வையுடன் விளக்கும் இந்நூலானது இவ்வளவு அழிவுகளுக்கு மத்தியிலும் மானுட சமுதாயத்தில் நம்பிக்கை இழக்காத ஆசிரியர் பொ. ஐங்கரநேசனின் 'விடுதலைச் சூழலியல்' கோட்பாடு மீதான நம்பிக்கையினை வெளிப்படுத்தி நிற்பதுடன், வாசகர்களுக்கும் நம்பிக்கையினைத் தருவதுடன் அதற்காக அவர்களின் பங்களிப்பினையும் கோரி நிற்கிறது. அதில் நூலாசிரியர் வெற்றியே அடைந்துள்ளார். ஏனெனில் சூழல் சீரழிவு பற்றிய விரிவான, தெளிவான பார்வையினை வாசிக்குமொருவருக்குத் தரும் வகையில் எழுதுவதில் ஆசிரியர் வெற்றியடைந்துள்ளார். அதன் காரணமாக இதனை வாசிக்குமொருவர் சூழல் பாதுகாப்புக்கான தனது பங்களிப்பினை முடிந்த வகையில் செய்யவே முற்படுவாரென்பது திண்ணம். நூலின் வெற்றியே அதுதானே.


20. 'ஜான் மார்டெலி'ன் (Yann Martel) 'பை'யின் வாழ்வு (Life Of Pi)!

கனடிய எழுத்தாளரான ஜான் மார்டெல் (Yann Martel) எழுதிய புகழ்பெற்ற நாவல் 'பை'யின் வாழ்வு (Life Of Pi). இந்த நாவல் 2002ஆம் ஆண்டுக்குரிய 'புக்கர்' விருதினைப் பெற்றதுடன் பிரான்சின் புக்கர் விருதினை இதன் பிரெஞ்சிய மொழிபெயர்ப்பிற்காகப் பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்க நாவல் விருது, இலக்கியத்திற்கான ஆசிய/பஸிபிக் அமெரிக்க விருது (2001-2003)எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த நாவல் ஐந்து தடவைகள் பிரித்தானிய பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.  அண்மையில் நான் வாசித்த நாவல்களில் மட்டுமல்ல, இதுவரையில் நான் வாசித்த நாவல்களில் எனக்குப் பிடித்த நாவல்களிலொன்றாக இந்நாவலும் அமைந்து விட்டதென்று கூறினால் அது மிகையான கூற்றல்ல. ஜான் மார்டெல்லின் இந்த நாவல் பல்வேறு காரணங்களுக்காக என்னைக் கவர்ந்துள்ளது. அவற்றில் முக்கியமானவையாக நான் கருதுவது: கதை கூறப்படும் முறை, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, மானுட இருப்பு பற்றிய தேடல், இயற்கை பற்றிய சித்திரிப்பு... இவைதான் முக்கியமாக இந்நாவல் என்னைக் கவர்ந்ததற்குக் காரணம். இவையெல்லாம் சேர்ந்து இந்நாவலை வாசிக்கும் அனுபவத்தையொரு இன்பகரமானதொரு அனுபவமாக்கி விட்டன. அதன் விளைவே இந்நாவல் பற்றிய எனது இந்தக் குறிப்புகளும்.

இந்நாவல் உருவான கதையினை ஆசிரியர் நூலின் ஆசிரியர் குறிப்பில் குறிப்பிடுகின்றார். தனது இரண்டாவது நாவல் போதிய வரவேற்பினைப் பெறாத நிலையில், பொருளியல்ரீதியில் பாதிப்புற்றிருந்த நிலையில் , ஆசிரியர் மும்பாய் பயணமாகின்றார். பின் அங்கிருந்து பாண்டிச்சேரிக்குச் செல்கின்றார். ஒரு 'காபி கபே'யில் பாண்டிச்சேரி வாசியான முதியவரொருவரைச் சந்திக்கின்றார். அவர் பிரான்சிஸ் அதிருபசாமி. அவர் தனது உரையாடலில் 'என்னிடமொரு உன்னைக் கடவுளை நம்புமொருவனாக ஆக்குமொரு கதை உள்ளது' என்கின்றார். அவர் இவ்விதம் கூறவே ஆரம்பத்தில் ஆசிரியர் அந்த முதியவரைப் பற்றி, சமயத்தைப் பரப்பும் இன்னுமொரு பிரச்சாரகரோ என்று சந்தேகமுறுகின்றார். அதன் எதிரொலியாக அந்தக் கதை இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னைய ரோம் நகரின் ஒதுக்குப் புறத்தில் அல்லது ஏழாம் நூற்றாண்டு அராபியாவில் நடைபெறுகிறதா' என்று கேள்விகளைத் தொடுக்கின்றார். அதற்கு அந்த முதியவர் 'இல்லை, அந்தக் கதை சில வருடங்களுக்கு முன், இங்கு பாண்டிச்சேரியில்தான் ஆரம்பிக்கிறது. அத்துடன் அது நீ எந்த நாட்டிலிருந்து வந்திருக்கின்றாயோ அந்த அந்த நாட்டில்தான் முடிவடைகிறதென்பதைக் கூறுவதில் நான் மகிழ்ச்சியுறுகிறேன்' என்று கூறுகின்றார். இவ்விதமாக நாவல், ஆசிரியரின் குறிப்புடன் ஆரம்பமாகிறது. அந்த முதியவர் கூறும் கதையின் பிரதான நாயகனே 'பிஸ்ஸின் மொலிடொர் பட்டேல்' (Piscine Molitor Patel).

பிரான்சிஸ் அதிருபசாமி கூறிய கதையின் நாயகன் அப்பொழுது பதின்ம வயதினன். அவனது வாழ்க்கை பற்றிய விபரங்களை கனடாவில் வசிக்கும் அவனிடமே கேட்கும்படி பிரான்ஸிஸ் அதிருபசாமி கூறுகின்றார். அதன் பின்னர் கனடா திரும்பும் கதாசிரியர் கனடாவில் வசிக்கும் பிஸ்ஸின் மொலிடொர் பட்டேலைத் தேடிக் கண்டு பிடிக்கின்றார். அவனோ தொரான்டோ பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற புனித மைக்கல் கல்லூரியில் சமயம், விலங்கியல் ஆகியவற்றில் பட்டங்களைப் பெற்ற பட்டதாரி. அவன் கூறிய கதையினை அவனே கூறுவதுபோல் கதாசிரியர் நாவலை அமைத்திருக்கின்றார். ஆயினும் அவ்வப்போது தன் தலையினையும் காட்டவும் அவர் தவறவில்லை.

பட்டேலுக்கு 'பிஸ்ஸின் மொலிடொர் பட்டேல்' (Piscine Molitor Patel) என்னும் பெயர் வந்ததற்குக் காரணமே அவனது தந்தையின் வர்த்தக நண்பரான, மாமாஜி என அழைக்கப்பட்ட பிரான்ஸிஸ் அதிருபசாமிதான். நீச்சலில் நன்கு பயிற்சி பெற்றவரான அதிருபசாமி பாரிஸிலுள்ள நீச்சல் குளமொன்றான பிஸ்ஸின் மொலிடொர்'' (Piscine Molitor) மீது மிகவும் மதிப்பு வைத்திருப்பவர். 'கடவுளே நீந்துவதற்கு மகிழ்ச்சியடையும் நீச்சல் குளம் அது' என்பதவர் கருத்து. இதன் காரணமாகவே ,பட்டேல் பிறந்தபொழுது அவனுக்கு அந்தப் பெயரிடப்பட்டது. ஆனால் இந்தப் பெயர் பட்டேலின் இளம்பிராயத்தில் அவனுக்குப் பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. அவனது பெயர்  சக மாணவர்களின், ஆசிரியர்களின் பாதுகாவலர்களின் வார்த்தைகளில் கேலிக்குரியதாக வெளிப்படுகின்றது. Piscine  Patel , Pissing Patel என ஆகிவிடுகின்றான். இதிலிருந்து தப்புவதற்குப் பட்டேல் கண்டுபிடித்த தந்திரோபாயம்தான் 'பை' பட்டேல். 'பை' என்பது கணிதத்தில் ஒரு மாறிலி. 3.14 என்னும் பெறுமானத்தைக் குறிப்பது. ஒரு முறை வகுப்பறையில் ஆசிரியரொருவர் மாணவர்களின் வரவினை எடுப்பதன் பொருட்டு ஒவ்வொரு மாணவராகப் பெயர் சொல்லி அழைத்து வருகின்றார். தன் முறை வரும்பொழுது பட்டேல் எழுந்து, ஆசிரியருக்கு முன்பாகவே கரும்பலகையில் 'My Name is Piscine Molitor Patel. Known to all as Pi Patel' என்று எழுதுகின்றான். அத்துடன் 'பை'யின் கிரேக்க எழுத்தையும் எழுதி அதற்குச் சமனாக 3.14 என்றும் எழுதி விடுகின்றான். இந்தத் தந்திரத்தையே அவன் தொடர்ந்தும் கையாளத் தொடங்கி விடுகின்றான். இதன் விளைவாகக் காலப்போக்கில் 'பை' ,பட்டேல் ஆகிவிடுகின்றான். மற்றவர்கள் வாய்களிலிருந்து 'பிஸ்ஸிங் பட்டேல்' என்று வருவதைத் தடுப்பதற்காகப் ,பட்டேல் கையாண்ட தந்திரத்தின் விளைவது.

நாவலின் பிரதானமான நிகழ்வுகளாக பட்டேல் பயணித்த ஜப்பானிய சரக்குக் கப்பல் பசிபிக் சமுத்திரத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து, 227 நாட்களாக அவனும் ரிச்சர்ட் பார்க்கர் என்று அழைக்கப்படும் 450 இறாத்தல்களையுடைய வங்காளப் புலியும் 'வாழ்க்கைப்' படகொன்றில் (Life Boat)) நிராதரவாகத் தப்பிப் பிழைத்த அனுபவங்களையே குறிப்பிடலாம். 'பை'யின் வாழ்வு என்னும் மேற்படி நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் ஆசிரியரின் குறிப்பு என்னும் நூலின் ஆரம்பக் கட்டுரையினையும் நாவலின் பகுதியாகவே கருதவேண்டும். நாவலின் முதல் பகுதி பட்டேலின் இளம்பிராயத்து நிகழ்வுகளை விபரிக்கிறது. இளம்பிராயத்திலேயே அவனது உள்ளம் கடவுள், சமயம் பற்றியெல்லாம் ஆழமாகவே சிந்திக்கத் தொடங்கி விடுகிறது. இந்துவான அவன் தனது பதினான்கு வயதிலேயே கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து சமயங்கள் ஆகிய மூன்று சமயங்களையும் இறைவனிடத்தில் அன்பு செலுத்த வேண்டுமென்பதற்காகப் பின்பற்றத் தொடங்கிவிடுகின்றான். அவனது பெற்றார் மிருகக்காட்சிசாலையொன்றினையும் நடாத்துவதால் இளம் பருவத்திலேயே மிருகங்கள் பற்றியும், அவற்றின் உளவியல் பற்றியும் அறிந்து கொண்டிருக்கின்றான்.

இந்தியாவின் அரசியல் நிலை பற்றிய விமர்சனங்களையும் பட்டேல் வாயிலாக ஆசிரியர் அவ்வப்போது விபரிக்கின்றார். அவனது உயிரியல் ஆசிரியரான சதீஷ் குமார் ஒரு மார்க்சியர்; கம்யூனிஸ்ட். 'தமிழகம் நடிகர்களை அரசியலில் தேர்வு செய்வதை நிறுத்திக் கேரளாவின் வழியில் செல்லும்' என்பதில் எப்பொழுதும் நம்பிக்கை கொண்டவர். இந்தக் கதை நடைபெறும் காலகட்டம் 1977 என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பட்டேலின் குடும்பத்தவர்கள் நடாத்தும் மிருகக்காட்சிச்சாலைக்கு அடிக்கடி வருபவர். அங்கு காண்டாமிருகங்கள் இரண்டும், ஆடுகள் சிலவும் ஒன்றாக , ஒருவருக்கொருவர் துணையாக வாழுவதைப் பார்த்து அவர் கூறுவார்:" இங்கு நான் அடிக்கடி வருபவன். இது எனது ஆலயமென்று ஒருவர் கூறலாம். இங்குள்ள காண்டாமிருகங்களையும், ஆடுகளையும் போல் நமது அரசியல்வாதிகள் இருந்தால் நாட்டில் குறைந்தளவு பிரச்சினைகளேயிருக்கும். துரதிருஷ்ட்டவசமாக நமது பிரதமர் காண்டாமிருகங்களின் நல்ல குணங்களில்லாத,  அவற்றின் தடித்த தோற் கவசங்களை மட்டுமே கொண்டவராகவிருக்கின்றார்". அப்பொழுது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. இது பற்றிக் குறிப்பிடும் ,பட்டேல் வீட்டில் தாயும் தந்தையும் அடிக்கடி காந்தி பற்றிக் குற்றஞ்சாட்டிக் கொள்வதாகவும், இது தன்னைப் பொறுத்தவரையில் சிறிய விடயமென்றும் ஏனெனில் காந்தி வடக்கே மிகவும் தொலைவில் இருக்கிறாரென்றும் குறிப்பிடுவார். அத்துடன் ஆசிரியர் சதீஷுக்கு 'சமயம் எங்களைக் காப்பாற்றும்' என்கின்றார். அதற்குச் சிரித்தபடியே ஆசிரியர் சதீஷ் 'நான் சமயத்தை நம்பவில்லை. சமயமென்பது இருள்' என்கின்றார். சமயமென்றால் ஒளியென்றும் நம்பும், சமயங்களினூடு இறைவனைக் காணவிழையும் பட்டேலுக்கு அது திகைப்பினையூட்டுகிறது. ஆசிரியர் சதீஷோ 'உண்மையினை விபரிக்கும் விஞ்ஞானரீதியிலான விளக்கங்களுக்கெதிராகச் செல்வதற்கே இடமில்லை. எங்களது உணர்வுகளை மீறி எதனையும் நம்புதற்குக் காத்திரமான காரணங்களில்லை' என்று குறிப்பிடுவார். இவ்விதமாக நாவலின் முதற்பகுதி பட்டேலின் இளம்பிராயத்தை விபரிக்கும் அதே சமயம், அரசியல், சமயம், சமூகம் பற்றியேல்லாம் கேள்விகளை எழுப்புகிறது. முதற்பகுதி பட்டேலின்  குடும்பத்தவர்கள் தாம் நடாத்தும் மிருகக்காட்சிச்சாலையினை விற்றுவிட்டு, மிருகங்கள் சிலவற்றுடன் , ஜப்பானியச் சரக்குக் கப்பலொன்றில் கனடா நோக்கிச் செல்வதுடன் முடிவடைகின்றது.

கனடிய எழுத்தாளரான ஜான் மார்டெல் (Yann Martel) எழுதிய புகழ்பெற்ற நாவல் 'பை'யின் வாழ்வு (Life Of Pi). இந்த நாவல் 2002ஆம் ஆண்டுக்குரிய 'புக்கர்' விருதினைப் பெற்றதுடன் பிரான்சின் புக்கர் விருதினை இதன் பிரெஞ்சிய மொழிபெயர்ப்பிற்காகப் பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்க நாவல் விருது, இலக்கியத்திற்கான ஆசிய/பஸிபிக் அமெரிக்க விருது (2001-2003)எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த நாவல் ஐந்து தடவைகள் பிரித்தானிய பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நான் வாசித்த நாவல்களில் மட்டுமல்ல, இதுவரையில் நான் வாசித்த நாவல்களில் எனக்குப் பிடித்ததொரு நாவலாக இந்நாவலும் அமைந்து விட்டதென்று கூறினால் அது மிகையான கூற்றல்ல. ஸ்பானிஸ்ய கனேடியரான ஜான் மார்டெல்லின் இந்த நாவல் பல்வேறு காரணங்களுக்காக என்னைக் கவர்ந்துள்ளது. அவற்றில் முக்கியமானவையாக நான் கருதுவது: கதை கூறப்படும் முறை, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, மானுட இருப்பு பற்றிய தேடல், இயற்கை பற்றிய சித்திரிப்பு... இவைதான் முக்கியமாக இந்நாவல் என்னைக் கவர்ந்ததற்குக் காரணம். இவையெல்லாம் சேர்ந்து இந்நாவலை வாசிக்கும் அனுபவத்தையொரு இன்பகரமானதொரு அனுபவமாக்கி விட்டன. அதன் விளைவே இந்நாவல் பற்றிய எனது இந்தக் குறிப்புகளும்.நாவலின் இரண்டாவது பகுதியே நாவலின் பிரதானமான பகுதி. இப்பகுதி பசிபிக் கடலில் ,பட்டேல் குடும்பத்தவர்கள் பயணிக்கும் ஜப்பானிய சரக்குக் கப்பல் மூழ்குவதையும், அதிலிருந்து பட்டேலும், வரிக்குதிரையொன்றும், 'ஹையீனா'வொன்றும், 'உராங் குடான்' என்னுமொரு மனிதவகைக் குரங்கொன்றும், 450 இறாத்தல்களைக் கொன்ட, ரிச்சர்ட் பார்க்கர் என்று அழைக்கப்படும்  'பெங்கால்' புலியொன்றும் மட்டும் உயிர்தப்புவதற்காகப் பாவிக்கப்படும் 'வாழ்க்கைப் படகொன்'றில் தப்புவதற்காக நடாத்தும் போராட்டங்களை விபரிக்கிறது. ஆரம்பத்தில் மூழுகும் கப்பலிலிருந்து படகினுள் பாயும்பொழுது ஒரு கால் முறிவுற்ற நிலையிலிருக்கும் வரிக்குதிரையினைக்  ஹையினா வரிக்குதிரை உயிருனுடனிருக்கும்போதே சிறுகச் சிறுகத் தின்று தீர்க்கிறது. பின்னர் அது 'உராங் குடான'யும் தின்று பசியாறுகிறது. 'ஹையினா'வை ரிச்சர்ட் பார்க்கர் கொன்று தனக்கு உணவாக்கிக் கொள்கிறது. இதன் பின்னர் ரிச்சர்ட் பார்க்கரும், பட்டேலும் மட்டுமே படகினில் தனித்து விடப்படுகின்றனர். ஆரம்பத்தில் ரிச்சர்ட் பார்க்கரையெண்ணிப் பயப்படும் ,பட்டேல் அதனத் தன் வழிக்குக் கொண்டுவருவதற்காக, கப்பலிலிருந்த ஆமைகள், மீன்களைப் பிடித்து அதற்கு உணவாக்குகின்றான். [மிகவும் ஆன்மிகவாதியான, மச்ச உணவு வகைகளையே அதுவரையில் உண்டிராத ,பட்டேல் முதல் முறையாக மீனொன்றைக் கொன்றதும் அதற்காக மிகவும் வருந்துகின்றான்].  கடல் நீரிலிருந்து குடி நீர் தயாரிக்கும் உபகரணத்தின் மூலம் நன்னீர் தயாரித்து அதனுடனும் பகிர்ந்து கொள்கின்றான். ரிச்சர்ட் பார்க்கரைப் பழக்கப்படுத்தித் தன் வழிக்குக் கொண்டு வருகின்றான். அதன் கழிவுகளைச் சுத்திகரிக்கின்றான். ரிச்சர்ட் பார்க்கருக்கும், பட்டேலுக்குமிடையிலான நாளாந்த அனுபவங்களைப் பட்டேல் விபரிக்கும் பகுதிகள் நாவலின் அற்புதமான , சுவையான பகுதிகள். குறிப்பாக ரிச்சர்ட் பார்க்கருடனான பட்டேலின் நீண்ட உரையாடல்.  இந்த உரையாடல் உண்மையானதா அல்லது கடற்பயணத்தின் விளைவாக பட்டேலுக்கு ஏற்பட்ட மனப்பிரமையா என்பதை வாசகர்கள் தாமாகவே ஊகித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் ரிச்சர்ட் பார்க்கரும், பட்டேலும் ஒருவருக்கொருவர் ஏகாந்தம் விரவிக் கிடந்த சூழலில், துணையாக இருக்கின்றார்கள். இது போன்ற கடற்பயணங்களில் தப்பிப் பிழைப்பதற்கான வழிமுறைகள், மிருகங்களின் உளவியல், அவற்றை வழிக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளென ஏராளமான தகவல்களையும் நாவல் அவ்வப்போது வழங்குகின்றது.

இவ்விதமான அவர்களது தப்பிப்பிழைத்தலிற்கான பயணத்தில் கீரியினத்தைச் சேர்ந்த 'மீர்கட்' (Meerkat) என்ற பாலூட்டிகள் அதிகமாக வாழும் புதிரான தீவொன்றும் எதிர்ப்படுகின்றது. அங்குள்ள மரங்கள், குளங்களெல்லாமே மாமிசபட்சணிகளாக விளங்குகின்றன. அத்தீவின் குளங்களில் அகப்பட்டுக்கொள்ளும்  உப்பு நீரில் மட்டுமே வாழும் கடல் மீன்களைக் குளங்கள் நன்னீராக்கிச் சாகடித்து உணவாக்கிக் கொள்கின்றன. அங்குள்ள மரங்கள் கூட மாமிச பட்சணிகளாகவிருக்கின்றன. அதனை உணர்ந்தபின் அங்கிருந்து தப்பி மீண்டும் படகினில் பட்டேலும் , ரிச்சர்ட் பார்க்கரும் தப்பிப் பிழைத்தலுக்காகப் பயணிக்கின்றனர்.

இவ்விதமாகப் பயணிக்கும் அவர்களது படகு மெக்ஸிக்கோ நாட்டின் கரையினை அடைகின்றது. அதுவரையில் தப்பிப் பிழைத்தலுக்கான பயணத்தில் பட்டேலுக்குத் துணையாக விளங்கிய ரிச்சர்ட் பார்க்கர், அவனுக்குப் பிரியாவிடை கூடக் கூறாமல், அருகிலிருந்து காட்டினுள் சென்றுவிடுவதுடன், அவனுடைய வாழ்விலிருந்தே நிரந்தரமாகப் பிரிந்து விடுகின்றது. அது மிகவும் ஆறாத மனத்துயரினைப் பட்டேலுக்கு அளித்துவிடுகின்றது. இத்துடன் நாவலின், பிரதானமான இரண்டாவது பகுதி முடிவுறுகிறது.

அதன் பின் நாவலின் மூன்றாவது பகுதி தொடங்குகின்றது. இது மிகவும் சுவையான பகுதி. மூழ்கியிருப்பது ஜப்பானிய நாட்டினைச் சேர்ந்த சரக்குக் கப்பலானதால், அது பற்றிய விபரங்களைச் சேகரிப்பதற்காக, அதன் மூழ்கியதன் காரணத்தை அறிவதற்காக, ஜப்பானிய போக்குவரத்து அமைச்சின் கடற்துறைப் பிரிவைச் சேர்ந்த  'டொமகிரொ ஓகமொடொ', 'டொமகிரோ'வின் உதவியாளானான 'அட்சுரொ சிபா' என்னும் அதிகாரிகளிருவர் வழிதடுமாறி கலிபோர்னியா சென்று ஒருவழியாகச் சரியான இருப்பிடமறிந்து மெக்சிக்கோ வருகின்றார்கள்.  நாவலின் மூன்றாவது பகுதி முழுவதும் அவர்களிருவரினதும் பட்டேலினுடனான நேர்காணலில், விசாரணையில் நடைபெற்ற உரையாடல்களாகவேயிருக்கின்றன. மிகவும் சுவையான விசாரணை. அந்த அதிகாரிகள் தமக்குள் அவ்வப்போது ஜப்பானிய மொழியில் பேசிக்கொள்வார்கள். அதனை நாவலாசிரியர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தடித்த எழுத்தில் வெளிப்படுத்தியிருப்பார். அவர்கள் பட்டேலினுடைய அனுபவத்தைக் கேட்டதும் அதை நம்பவில்லை. மிருகங்கள் எதனையும் காணாத நிலையில், ரிச்சர்ட் பார்க்கரும் கானகத்தினுள் சென்று விட்ட நிலையில், மிருகங்களுடனான அவனது கதை அவர்களுக்கு நம்பத் தகுந்ததாகவிருக்கவில்லை. எனவே அவர்கள் நம்புவதற்காக ,பட்டேல்இன்னுமொரு கதையினைத் தனது அனுபவமாகக் கூறுவான். ஆரம்பத்தில் அவன் மிருகங்களை உள்ளடக்கிய அனுபவங்களுக்கெதிராக, மிருகங்களேயில்லாத கதையொன்றை அவன் அவர்களுக்குக் கூறுவான். அந்தக் கதையில் வரும் கப்பலின் சமையல்காரன், காலொடிந்து கிடக்கும் கப்பலின் மாலுமியொருவனையும், பட்டேலின் தாயாரையும் கொன்று விடுகின்றான். தாயைக் கொன்று அவளது தலையை மட்டும் வெட்டி எடுத்து , பட்டேலின் மேல் எறிகின்றான். இறுதியில் பட்டேல் அந்தச் சமையல்காரனைக் கொன்றுவிடுகின்றான். அவனுடன் உரையாடும் ஜப்பானிய அதிகாரிகள் அவன் கூறிய இரு கதைகளுக்குமிடையில் சில ஒற்றுமையான அம்சங்களைக் கண்டுகொள்கின்றார்கள். கப்பலின் சமையல்காரனைக் ஹையினாவாகவும், காலில் காயம்பட்ட மாலுமியை காலொடிந்து ஹையினாவுக்குணவாகிய வரிக்குதிரையாகவும், 'உராங் குடானை' பட்டேலின் தாயாராகவும், ரிச்சர்ட் பார்க்கரைப் பட்டேலாகவும் அவர்கள் ஒருவித ஒற்றுமையினை அவதானிக்கின்றார்கள்.

இவ்விதமாக இருவித கதைகளைத் தனது அனுபவங்களாகக் கூறிய பட்டேல் அந்த அதிகாரிகளிடம் அவர்கள் எந்தக் கதையினைத் தேர்வு செய்ய விரும்புகின்றார்களென்று வினாவுகின்றான். அதற்கு அவர்கள் அவனது மிருகங்களுடனான அனுபவங்களை விபரிக்கும் கதையினையே தேர்வு செய்ய விரும்புவதாகக் கூறுகின்றார்கள். அவனுடனான விசாரனையின் மூலம் அந்த அதிகாரிகளால கப்பல் மூழ்கியதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் பட்டேலுடனான தமது உரையாடல் பற்றிய கருத்துகளை நாவலாசிரியருக்குக் கடிதமொன்றின் மூலம் தெரியப்படுத்தியிருப்பதுடன் நாவல் முடிவடைகிறது. அதில் அவர் ஒல்லியான, கடுமையான, மிகுந்த அறிவுள்ளவன் பட்டேல்.  இவ்விதமான இதுவரை கால அனுபவங்களில் வெகு சிலரே பட்டேலைப் போல் நீண்ட நாட்கள் தத்தளித்துத் தப்பியிருக்கின்றார்கள். ஆனால் ஒருவராவது இவ்விதம் இளம் 'பெங்கால் புலி'யொன்றின் துணையுடன் தப்பியதாகச் சரித்திரமேயில்லை என்று கூறியிருப்பார்கள்.

கனடிய எழுத்தாளரான ஜான் மார்டெல் (Yann Martel) எழுதிய புகழ்பெற்ற நாவல் 'பை'யின் வாழ்வு (Life Of Pi). இந்த நாவல் 2002ஆம் ஆண்டுக்குரிய 'புக்கர்' விருதினைப் பெற்றதுடன் பிரான்சின் புக்கர் விருதினை இதன் பிரெஞ்சிய மொழிபெயர்ப்பிற்காகப் பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்க நாவல் விருது, இலக்கியத்திற்கான ஆசிய/பஸிபிக் அமெரிக்க விருது (2001-2003)எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த நாவல் ஐந்து தடவைகள் பிரித்தானிய பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நான் வாசித்த நாவல்களில் மட்டுமல்ல, இதுவரையில் நான் வாசித்த நாவல்களில் எனக்குப் பிடித்ததொரு நாவலாக இந்நாவலும் அமைந்து விட்டதென்று கூறினால் அது மிகையான கூற்றல்ல. ஸ்பானிஸ்ய கனேடியரான ஜான் மார்டெல்லின் இந்த நாவல் பல்வேறு காரணங்களுக்காக என்னைக் கவர்ந்துள்ளது. அவற்றில் முக்கியமானவையாக நான் கருதுவது: கதை கூறப்படும் முறை, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, மானுட இருப்பு பற்றிய தேடல், இயற்கை பற்றிய சித்திரிப்பு... இவைதான் முக்கியமாக இந்நாவல் என்னைக் கவர்ந்ததற்குக் காரணம். இவையெல்லாம் சேர்ந்து இந்நாவலை வாசிக்கும் அனுபவத்தையொரு இன்பகரமானதொரு அனுபவமாக்கி விட்டன. அதன் விளைவே இந்நாவல் பற்றிய எனது இந்தக் குறிப்புகளும்.உண்மையில் 'பை'யின் வாழ்வு என்னும் இந்த நாவல் ஒரு அற்புதங்களும் , கற்பனையும் மிகுந்த சாகச நாவலா? அல்லது மானுட இருப்பினை விபரிக்குமொரு குறியீட்டு நாவலா? இந்த நாவலை வாசிக்கும் ஒருவருக்கு ஹெமிங்வேயின் கடலும் கிழவனும், 'டானியல் டிஃபோ'வின் ரொபின்சன் குருஷோ , ஹேர்மன் மெல்விலின் 'மோபி டிக்'போன்ற நாவல்கள் நினைவுக்கு வராமல் போகாது. இவையெல்லாம் கடலனுபவங்களை, எதிர்பாராத சூழலில் தப்பிப்பிழைத்தலுக்கான போராட்டங்களையெல்லாம் விபரிக்கும் நாவல்கள். அத்துடன் இவையெல்லாம் மானுட இருப்பினை விபரிக்கும் குறியீட்டு நாவல்களாகவும் கருதலாம். அந்த வகையில் ஜான் மார்ட்டேலின் 'பை'யின் வாழ்வு என்னும் இந்நாவலும் ஆங்கில இலக்கியத்தின் முக்கியமானதொரு படைப்பாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றது. இந்நாவல் வெளிவந்த போது பிரேசிலிய நாவலாசிரியரான Moacyr Scliar என்பவரின் (இவர் ஒரு மருத்துவர் கூட)  Max and the Cats என்னும் நாவலின் தழுவலிதெனக் கண்டனங்களெழுந்தன. அந்நாவலில் ஜேர்மனிய வர்த்தகரொருவர் நாசிகளிடமிருந்து தப்புவதற்காகத் தன் குடும்பத்தவருடன் பிரேசில் நோக்கிப் பயணிக்கின்றார். வழியில் கப்பல் மூழ்கிவிட அந்த வர்த்தகரின் மகனும், ஜாகுவார் வகைப் புலியொன்றும் தப்புகின்றார்கள். இது பற்றிய தனது குறிப்பொன்றில் ஜான் மார்ட்டேல் மேற்படி பிரேசிலிய நாவல் ஏற்படுத்திய 'வாழ்க்கை பற்றிய பொறிக்காக' நன்றி தெரிவித்திருக்கின்றார். ஆரம்பத்தில் ஜான் மார்ட்டெல் மீது மான நஷ்ட்ட வழக்குப் போட விரும்பிய பிரேசிலிய நாவலாசிரியர் பின்னர், ஜான் மார்ட்டலுடனான சந்திப்பின் பின்னர் அம்முடிவினை மாற்றிக் கொண்டதாகவும் தெரிய வருகின்றது. மேற்படி இரு நாவல்களுக்குமிடையில் ஒற்றுமையான அம்சங்கள் பல இருக்கின்றன. அவை விரிவாக ஆராயப்பட வேண்டியவை. அது போல் இந்நாவலில் வரும் பெங்கால் புலியின் பெயர் ரிச்சர்ட் பார்க்கரென இருப்பது பற்றியும் விரிவாக ஆராயலாம். எட்கார் அலன்போவினால் எழுதப்பட்ட முழுமையான நாவலான The Narrative of Arthur Gordon Pym of Nantucket என்னும் நாவலின் பாத்திரமொன்றின் பெயர் ரிச்சர்ட் பார்க்கர். திமிங்கல் வேட்டைக்குப் பயன்படும் கப்பலொன்றின் பயணிக்கும் ஆர்தர் கோர்டன் பைம்மின் கடற்பயண அனுபவங்களை விபரிக்கும் நாவலது. இது போன்ற பல கடற்பயண சாகச நாவல்களில் ரிச்சர்ட் பார்க்கர் என்னும் பாத்திரமொன்று வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் பெங்கால் புலியின் பெயராக ரிச்சர்ட் பார்க்கர் என்னும் பெயரினை நாவலாசிரியரான ஜான் மார்ட்டெல் தெரிவு செய்தாரா? ஆய்வுக்குரிய விடயமது.  ஆனால் இத்தகைய சர்ச்சைகளையெல்லாம் தாண்டி இன்று 'பை'யின் வாழ்வு என்னும் இந்த நாவல் உலக இலக்கியத்தின் முக்கியமானதொரு நாவலாக விளங்குகின்றது.

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்