Sunday, June 2, 2019

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி நான்கு (31 -36)

31. மக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்!

- இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் வித்துவான் வேந்தனாரின் எழுத்துலகப்பங்களிப்பு முக்கியமானது. அவரது நூற்றாண்டு விழாவையொட்டி நூற்றாண்டு விழாமலர் 548 பக்கங்கங்களைக் கொண்ட விரிவான நூலாக வெளியாகியுள்ளது. அம்மலரில் வெளியான எனது கட்டுரையிது. மலரைச் சிறப்பாக வெளியிட்ட அவரது மகனும், கவிஞரும் , நண்பருமான வேந்தனார் இளஞ்சேய் அவர்கள் இதன் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார். வாழ்த்துகிறேன். -

வித்துவான் வேந்தனாரைப் பற்றி எனது மாணவப் பருவத்திலேயே எனக்கு மிகுந்த மதிப்பிருந்தது. வித்துவான்களில் அவர்  சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கான வித்துவான். பாரதியின் வழிவந்த மரபுக் கவிஞரான அவர் சிறந்த குழந்தைக்கவிஞர்களிலொருவராகவும் தென்பட்டார். அவரது மானுட விடுதலைக்  கவிதைகளில் தொனிக்கும் முற்போக்குக் கருத்துகளெல்லாம் அவற்றைத்தான் எனக்கு எடுத்தியம்பின. பண்டிதர்கள் என்றாலே பழமைவாதிகள் என்றோர் எண்ணம் நிலவுவதுண்டு. ஆனால் இதற்கு விதிவிலக்காகத் திகழ்ந்த பண்டிதர்களில் வித்துவான் வேந்தனார், எழுத்தாளர் சொக்கன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். வித்துவான் வேந்தனார் அவர்கள் பழமையின் சிறப்பம்சங்களைப்பேணிய அதே சமயம், புதுமையின் சிறப்பம்சங்களையும் உள்வாங்கி இலக்கியம் படைத்தவர்; மக்கள் இலக்கியம் படைத்தவர்.

வேந்தனாரைப்பற்றி விரிவாக அறியும் சந்தர்ப்பம் என் வாழ்க்கையிலேற்பட்டதற்கு முக்கிய காரணம் அவரது புத்திரர்களிலொருவரான வேந்தனார் இளஞ்சேய். நான் யாழ் இந்துக்கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்த சமயம் என் வகுப்பில் என்னுடன் ஒன்றாகக் கல்வி பயின்ற மாணவர்களிலொருவர். என் பதின்ம வயதுகளில் இளஞ்சேயும், நானும் அடிக்கடி வாசிப்பதற்காக ஒருவருக்கொருவர் எம்மிடமுள்ள நூல்களை இரவல் கொடுப்பதுண்டு. பல சந்தர்ப்பங்களில் யாழ் இந்து  மகளிர் கல்லூரிக்கண்மையிலிருந்த அவரது இல்லத்துக்குச் சென்றதுண்டு. அக்காலகட்டத்தில் வேந்தனார் இளஞ்சேய் அவர்கள் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார்.  இன்று தந்தையைப்போல் எழுத்துலகிலும் தன் எழுத்தாற்றலைக் காட்டி வருகின்றார். தந்தையாரின் படைப்புகளைத் திரட்டி , நூல்களாகத்தொகுத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருகின்றார். வாழ்த்துகின்றேன்.

வேந்தனாரின் இலக்கிய நோக்கினை அவரது பின்வரும் கவிதை வரிகளினூடு பார்க்கலாம்,

“பாடுகின்றோர் எல்லோருங் கவிஞ ரல்லர்
பாட்டென்றாற் பண்டிதர்க்கே உரிமை யல்ல
ஓடுகின்ற பெருவெள்ளப் பெருக்கே போல
உணர்ச்சியிலே ஊற்றெழுந்த ஒளியால் ஓங்கி
வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள
மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல்
கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு
குமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான்”

என்று அவர் பாடினார். வித்துவானான அவரே 'பாட்டென்றால் பண்டிதர்க்கு மட்டும் உரிமையல்ல' என்று சாடினார். கூடவே 'வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல் கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு குமுறுகின்ற கோளரியே கவிஞனாவான்' என்று எடுத்துரைத்தார். அதற்கேற்ப குமுறுகின்ற கோளரியாக விளங்கிய கவிஞன் அவர். 'மக்களினம் மாட்சி கொள்ள மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல் கூடுகின்ற கொள்கை' இதுவே அவரது பிரதானமான இலக்கிய நோக்காக நான் கருதுகின்றேன்.

மேலும் மேற்படி ‘கவிஞன்’ என்னும் கவிதையில் அவர் பின்வருமாறும் பாடுவார்:

“பஞ்சனையில் வீற்றிருந்தே பனுவல் பார்த்துப்
பாடுகின்ற கவிதைகளும் பாராள் வேந்தர்க்
கஞ்சியவர் ஆணைவழி அடங்கி நின்றே
ஆக்குகின்ற கவிதைகளும் அழிந்தே போகும்..”

“வீட்டிற்குள் வீற்றிருந்தே கொள்கை யின்றி
விண்ணப்பப் பதிகங்கள் விளம்பு வோரை
ஏட்டிற்குள் கவிஞரென எழுதி னாலும்
இறவாத கவிஞரையே உலகம் ஏற்கும்”

அதிகாரத்திற்கஞ்சி, பிழைப்புக்காய் ஆக்கப்படும் கவிதைகளெல்லாம் அழிந்தே போகும் என்று அவர் கூறியவற்றின் உணமையினை நாம் நேரிலேயே பல தடவைகள் பார்த்ததுண்டு. இவ்விதமாகக் கொள்கையின்றி விண்ணப்பப் பதிகங்கள் எழுதுவோரை ஏடுகள் கவிஞரென எழுதி வைத்தாலும் கால ஓட்டத்தில் இறவாத கவிஞரையே உலகம் ஏற்கும் என்பதுதான் எத்துணை உண்மையான வார்த்தைகள். பாரதியாரின் வாழ்க்கையே இதற்கொரு சிறந்ததொரு உதாரணம். இறவாத அவரது கவிதைகள் இன்றும் நிலைத்து வாழ, அவரது காலகட்டத்தில் அவரை எள்ளி நகையாடிய எத்தனைபேரை ஏடுகள் சிலாகித்திருக்கும். தூக்கிவைத்துப் புகழ்மொழி பேசியிருக்கும். இன்று அத்தகையவர்களில் பலர் காலவெள்ளத்தில் அடியுண்டு போகவில்லையா? இதுபோல்தான் இன்றைய பத்திரிகை, சஞ்சிகைகள் பலவற்றில் காணப்படும் பெயர்களில் பலவற்றை இன்னும் ஐம்பது வருடங்களில் காண முடியாது போய் விடலாம். அதே சமயம் இன்று காணமுடியாத பல பெயர்கள் , திறமை காரணமாக மீள்பரிசோதனை செய்யப்பட்டு நிலைத்து நிற்கப் போவதையும் வரலாறு பதிவு செய்யும்.

ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் வேந்தனாரின் சிறுவர் இலக்கியத்திற்கான பங்களிப்பு மகத்தானது. சோமசுந்தரப் புலவரைத் தொடர்ந்து இவரது பல சிறுவர் கவிதைகள் தமிழ்ப் பாடநூல்களில் சேர்க்கப்பட்டன. வேந்தனாரின் புகழ்பெற்ற குழந்தைப் பாடலான ‘அம்மாவின் அன்பு’ என்னும் தலைப்பில் வெளியான ‘காலைத் தூக்கிக் கண்ணிலொற்றி.. ‘  நவாலி சோமசுந்தரப்புலவரின் 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை' என்னும் குழந்தைகளுக்கான பாடல் போல் தமிழ் இலக்கியத்தில் நிலைத்து நிற்குமொரு சிறந்த பாடல். ‘அம்மாவின் அன்பு’  பாடலின் முழு வடிவமும் கீழே:

காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா.

புழுதி துடைத்து நீரும் ஆட்டிப்
பூவுஞ் சூட்டும் அம்மா
அழுது விழுந்த போதும் என்னை
அணைத்துத் தாங்கும் அம்மா.

அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி
அழிவு செய்த போதும்
பிள்ளைக் குணத்தில் செய்தான் என்று
பொறுத்துக் கொள்ளும் அம்மா.

பள்ளிக் கூடம் விட்ட நேரம்
பாதி வழிக்கு வந்த
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கி
தோளிற் போடும் அம்மா.

பாப்பா மலர்ப் பாட்டை நானும்
பாடி ஆடும் போது
வாப்பா இங்கே வாடா என்று
வாரித் தூக்கும் அம்மா.

‘நாட்டில் அன்பு’ என்னுமொரு சிறுவர் கவிதையில் வேந்தனார் பின்வருமாறு கூறுவார்:

“பொருளும் நிலமும் எவர்க்கும்
பொதுவாய் இருத்தல் வேண்டும்
அருளுந் தொண்டும் உலகை
ஆளப் பார்க்க வேண்டும்”

பொருளும் நிலமும் எவர்க்கும் பொதுவாய் இருத்தல் வேண்டும் என்னும் தனது எண்ணத்தை அவர் எத்துணை அழகாகக் குழந்தைகளுக்குக் கூறுகின்றார் பாருங்கள்! பொதுவுடமைத் தத்துவத்தினை இதனைவிட எளிமையாகக் குழந்தைகளுக்குப் புரியும்படி கூற முடியுமா?

இரசிகமணி கனகசெந்திநாதன் வேந்தனாரின் கவிதைகளில் குறிப்பாகச் சிறுவர் கவிதைகளில் மனதைப் பறிகொடுத்தவர். வேந்தனாரின் கவிதைகளைப் பற்றி, சிறுவர் கவிதைகளைப் பற்றி ‘வியத்தகு குழந்தைப் பாடல்கள் பாடிய வேந்தனார்’ (தினகரன்), ‘பாட்டி எங்கள் பாட்டி’ (ஈழநாடு), ‘பாலைக் காய்ச்சிச் சீனிபோட்ட பாவலன்’ மற்றும் ‘வித்துவான் வேந்தனார்’ (ஈழகேசரியில் வெளிவந்த ஈழத்துப் பேனா மன்னர்கள் தொடரில்) எனக் கட்டுரைகள் பல எழுதியவர். சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதெல்லாம் அவற்றைப் பற்றிச் சிலாகித்துப் பேசியவர்.

வேந்தனாரது குழந்தைக் கவிதைகளில் காணப்படும் இன்னுமொரு சிறப்பு சக உயிர்களிடத்தில் அவர் காட்டும் அன்பு. பரிவு. ‘மான்’ என்னும் கவிதையில் மான்களை வேட்டையாடும் மானிடர்களின் செயலை

‘குட்டியோடு மான்கள்
கூடித் திரியும் போது
சுட்டு வீழ்த்த லாமோ
துன்பஞ் செய்ய லாமோ’ எனச் சாடுவார். மான்களை

‘துனபப் படுத்தி டாமல்
தோழ ராகக் கொள்வோம்’ என்பார். இவ்விதமே ‘அணில்’ கவிதையிலும்

‘கூட்டில் அணிலைப் பூட்டி – வைத்தல்
கொடுமை கொடுமை யடா
காட்டில் மரத்தில் அணில்கள் – வாழும்
காட்சி இனிய தடா’ என்றும்,

‘துள்ளும் அணிலின் கூட்டம் – எங்கள்
சொந்தத் தோழ ரெடா’ என்றும் பாடுவார்.

‘கூண்டிற் கிளி’ என்னும் கவிதையில் பவளம் என்னும் சிறுமி கூண்டில் கிளியை அடைத்து வைத்திருக்கின்றாள். கூண்டில் அடைத்து வைப்பதன் மூலம் அக்கிளியைப் பூனையிடமிருந்து காப்பதாகவும், அதற்கு உணவுகள் தருவதாகவும் எண்ணுகின்றாள். அவளைப் பார்த்துக் அந்தக் கிளியானது கூண்டினுள் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் வாழும் தன் அடிமை வாழ்வினை விளக்குகின்றது. இறுதியில் உண்மையினைப் புரிந்து கொண்ட பவளம் அக்கிளியைப் பார்த்து

‘நல்ல மொழிகள் கூறியே
நாண வைத்தாய் என்னைநீ
செல்வக் கிளியென் தோழியே
சிறையை நீக்கி விடுகின்றேன்.

கூட்டில் உங்கள் குலத்தினைக்
கொண்ட டைத்தல் கொடியது
காட்டில் வானிற் பறந்துநீர்
காணும் இன்பம் பெரியது.’

என்று கூறியவாறு

‘பவளம் கூட்டைத் திறந்தனள்
பச்சைக் கிளியும் பறந்தது
அவளும் வானைப் பார்த்தனள்
அன்புக் குரலுங் கேட்டது’

இவ்விதமாக குழந்தைப் பாடல்களில் சக உயிர்களிடத்தில் அன்பு காட்டுதலை வலியுறுத்தும் வேந்தனார் பெரியவர்களுக்காக எழுதிய கவிதைகளிலும் இவ்விதமே தன் எண்ணங்களைப் பாரதியைப் போல் வெளிப்படுத்துவார். சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளிலொன்று தெய்வங்களுக்குப் பலி கொடுப்பது. அதனைப் பற்றியதொரு கவிதை ‘உலகம் எங்கள் தாயகம்’. அதில் அக்கொடுஞ் செயலினை

‘ ஆட்டை அன்புக் கோவில்முன்
அறுக்கும் கொடுமை அகற்றுவோம்
நாட்டில் இந்தக் கொடுமையோ
நாங்கள் காட்டு மறவரோ.’ என்று சீற்றத்துடன் கண்டிக்கும் கவிஞர் நாட்டில் நிலவும் தீண்டாமைக் கொடுமையினையும் கண்டிப்பார்

‘பாழுஞ் சாதிப் பகுப்பெலாம்
பட்ட தென்று பாடுங்கள்’ என்று.

வேந்தனாரின் இளம் பருவம் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் அடிமைகளாக இருந்த காலகட்டம். அன்றைய சூழலில் அன்னியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதை ஆதரித்து பாரதியைப் போல் வேந்தனாரும் கவிதைகளை யாத்தார். அதே வேந்தனார் பின்னர் தமிழின், தமிழரின் இன்றைய நிலையினை எண்ணிப் பொருமினார். இவற்றிற்கான அடிப்படைக் காரணங்கள் பற்றியெல்லாம் அவர் நெஞ்சு தொடுத்த வினாக்களையும், அவற்றிற்கான அவரது விடைகளையும் புலப்படுத்தும் வகையிலுள்ளன அவரது கவிதைகள் குறிப்பாகக் காவியங்கள்.

தமிழரின் இன்றைய தாழ்ந்த நிலைக்குக் காரணங்கள் எவையாகவிருக்கும்? அவரது கவிதைகளினூடு அவற்றைக் காண்போம். தமிழரின் தாழ்ந்த நிலைக்கு முக்கியமான காரணங்களிலிரண்டு சாதிப் பாகுபாடும், சமயப் பிரிவுகளும். இதனையே அவரது ‘வீரர் முரசு’ கவிதையில் வரும் பின்வரும் வரிகள் புலப்படுத்தும்:

‘ ஆளு கின்ற எம்மை யின்றும்
அடிமை யாக வைத்திடும்
தாழு கின்ற சாதி சமயச்
சண்டைக் கான மெரியவே
மூளு கின்ற சுதந்தி ரத்தீ
முனைந்தெ ழுந்த துடிப்பினாற்
சூழு கின்றோம் தமிழ ரென்று
சொல்லி முரசைக் கொட்டுவோம்’

 ‘வியத்தகு குழந்தைப் பாடல்கள் பாடிய வேந்தனார்’ என்னும் தனது கட்டுரையில் இரசிகமணி கனக் செந்திநாதன் பின்வருமாறு கூடி முடித்திருப்பார்: ” அவரது குழந்தைப் பாடல்கள் தனிநூலாக அழகான படங்களுடன் பெரிய அளவில் இரண்டாம் பதிப்பாக வெளிவந்து ஈழத்துக் குழந்தைகளின் நாவை இனிக்கச் செய்தல் வேண்டும் என்பது எனது அவா’ என்ற அவரது அவாவினை வித்துவான் வேந்தனாரின் குடும்பத்தினரின் உதவியுடன் எழுத்தாளர் எஸ்.பொ.வின்’மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்’ (தமிழகம்) பதிப்பகத்தினர் நிறைவேற்றி வைத்திருக்கின்றார்கள்.

இவ்விதமாக மக்கள் இலக்கியம் படைத்த எழுத்தாளர் வேந்தனாரின் பங்களிப்பானது தமிழிலக்கியம் பற்றிய அவரது கட்டுரைகளுக்காகவும், கவிதைகளுக்காகவும், குழந்தை இலக்கியப்பங்களிப்புக்காகவும் என்றென்றும் நினைவு கூரப்படும். அவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவை; சேர்ப்பவை. வரலாற்றில் நிலைத்து நிற்கும் வளமான படைப்புகள் அவை. ஒன்று மட்டும் உண்மை. பாரதியைப் போல், புதுமைப் பித்தனைப் போல் வேந்தனாரின் வாழ்வு குறுகியதாக அமைந்த போதிலும், அக்குறுகிய காலகட்டத்தில் அவர் சாதித்தவை அளப்பரியன. அவரது படைப்புகள் மேலும் பல மீள்பதிப்புகளாக, புத்தம் புதிய பதிப்புகளாக வெளிவர வேண்டும். இலக்கியமென்ற பெயரில் குப்பைகளையெல்லாம் நூற்றுக் கணக்கில் வெளியிடும் பதிப்பகங்கள், வேந்தனார் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளையெல்லாம் நூலுருவாக்க வேண்டும். இத்தகைய படைப்பாளிகளின் படைப்புகளையெல்லாம் அவரவர் குடும்பத்தவரே வெளியிட வேண்டுமென்ற நிலை எதிர்காலத்திலாவது மாற வேண்டும். தற்போது வேந்தனாரின்  படைப்புகளையெல்லாம் தேடி எடுத்து வெளியிட்டுவரும் அவரது குடும்பத்தவர்களுக்குத் தமிழ் இலக்கிய உலகு என்றென்றும் கடமைப்பட்டிருக்கும்.

நன்றி: பதிவுகள்.காம்

32. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!

எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' நூலுக்காக எழுதிய அறிமுகக்குறிப்புகள் இங்கு ஒரு பதிவுக்காகப் பிரசுரமாகின்றது. -

ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவெடுத்து  இன்று முற்றாக மெளனிக்கப்பட்டுவிட்டது. அகிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம், இலங்கையை ஆண்ட அரசுகளின் இனவாதக்கொள்கைகளாலும், காலத்துக்குக்காலம் தமிழ் மக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளினாலும், அரசுகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இனக்கலவரங்களினாலும் தனிநாட்டுபோராட்டமாக பரிணாமடைந்ததன் விளைவே ஈழ்த்தமிழர்களால் குறிப்பாக இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைக்கான ஆயுதப்போராட்டமாகும். இவ்விதமாகப்பரிணாமடைந்த விடுதலைப்போராட்டமானது மிகவும் குறுகிய காலத்தில் பல்வேறு குழுக்களாக வீங்கி வெடித்ததற்கு முக்கிய காரணி இந்திரா காந்தி தலைமையிலான பாரத அரசாகும். ஆரம்பத்தில் விடுதலைக்காக ஆயுதம் தூக்கியவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிளவுண்டு மோதிக்கொண்டதன் விளைவாக விடுதலைப்புலிகள் பலம்பொருந்திய ஆயுத அமைப்பாக உருவெடுத்தார்கள். இறுதியில் அவர்கள் ஆயுதங்களை மெளனிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் யுத்தத்தில் பலியானார்கள்; காணாமல் போனார்கள். சரண்டைந்த பின் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். மேலும் பலர் கைது செய்யப்ப்பட்டார்கள். பலர் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலையாகியுள்ளார்கள்.  இவ்விதமானதொரு சூழலில் இன்று பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் தமது கடந்த கால அனுபவங்களைப்பதிவு செய்து வருகின்றார்கள். இவ்வகையான பதிவுகள் அபுனைவுகளாக, புனைவுகளாக என வெவ்வேறு வடிவங்களில் வெளிவருவதைக்காணக்கூடியதாகவுள்ளது. இவர்கள் தாம் சேர்ந்திருந்த அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் இயங்கியவர்கள். சிலர் அடிமட்டப்போராளியாக இருந்தார்கள். சிலர் அவ்விதமிருந்து இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களாக மாறியவர்கள். சிலர் மாற்று இயக்கங்களினால் சிறைப்பிடிக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு தப்பியவர்கள்; இன்னும் சிலர் தாம் சார்ந்திருந்த அமைப்புகளில் நிலவிய உள் முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள். இவ்விதமான முன்னாள் போராளிகளின் சுய பரிசோதனைகள் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் என்பதை நிர்ணையிப்பதற்கு இவை போன்ற போராளிகளின் அனுபவங்களை உள்ளடக்கிய நூல்கள் பல வரவேண்டும். இன்றுதான் ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்து விட்டதே இனியும் எதற்கு இவை பற்றி ஆராய வேண்டிய தேவை என்று சிலர்  குதர்க்கக்கேள்வி கேட்கலாம். ஆனால் இத்தகைய அனுபவப்பதிவேடுகளின் முக்கியத்துவம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிலவிய ஈழதமிழர்களின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் பற்றிய ஆவணப்படுத்தலில்தான் தங்கியுள்ளது. இவ்விதமான அனுபவப்பதிவேடுகள்தாம் ஆயுதம் தாங்கிப்போராடிய ஈழத்தமிழர்களின் விடுதலை அமைப்புகள் பற்றிய புரிதல்களை, அவற்றின் ஆக்கபூர்வமான , எதிர்மறையான செயற்பாடுகளை விளக்கி நிற்கும் வரலாற்றின் ஆவணப்பதிவுகள்.

சிலர் இவ்விதமான விடுதலை அமைப்புகளில் இணைந்து இயங்கிய காரணத்தினால் அவ்வமைப்புகளிலிருந்த மிகவும் சாதாரணபோராளிகளும் தம் அனுபவங்களைப்பதிவு செய்வது அவசியம்தானா? அதனால் ஏதும் பயனுண்டா? என்று கேள்விகணைகளைத்தொடுக்கலாம். அதற்கான் பதில் அமைப்பொன்றின் சாதாரண போராளியிலிருந்து மிகவும் முக்கியமான போராளி வரையில் இவ்விதமான அனுபவப்பதிவுகளை ஆவணப்படுத்துவது மிகவும் அவசியம். அதுமட்டுமல்ல அமைப்புகளில் இல்லாத பொதுமக்கள் கூட அக்காலகட்டத்தில் தாம் அறிந்த , தாம் புரிந்த அமைப்புகள் சார்ந்த செயற்பாடுகளைப் பதிவு செய்ய வேண்டும். அவ்விதமான பதிவுகளும் ஈழத்தமிழர்களின் ஆயுதமேந்திய விடுதலைப்போராட்டம் பற்றிய விரிவான, ஆழமான புரிதல்களுக்கு அவசியமானவையென்பதென் கருத்து.

இந்த வகையில்தான் எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' அனுபவப்பதிவுகளின் முக்கியத்துவமுமுள்ளது. இவர் தனது பதிவுகளை சரிநிகர் பத்திரிகையில் , ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்படுவதற்குப்பல வருடங்களின் முன்னரே புனைபெயரில் பதிவு செய்தவர். அந்த அனுபவப்பதிவுகள்தாம் இப்பொழுது நூலாக வெளிவருகின்றது.

இப்பதிவுகள் மூலம் எல்லாளனைப்பற்றிய பன்முகப்புரிதல்களை அடைய முடிகின்றது. அவர் கோப்பாயைச்சேர்ந்த ஒரு கிறிஸ்தவர்.  அவர் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தைச்சேர்ந்தவராக இருந்தபோதும் அவரது பெற்றோர் தம் குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர்களையே வைக்கும் பண்பு வாய்த்தவர்கள். அதனால் அவர்கள் எல்லாருக்கும் தமிழ்ப்பெயர்களே வைக்கப்படுகின்றன.  எல்லாளனின் ஆரம்பக்கட்ட வாழ்வு ஆலயத்துடன் சார்ந்தே ஆரம்பிக்கின்றது. மதரீதியிலான அவரது செயற்பாடுகள் அவரை வாலிபர் சங்கம் , ஆலய நிர்வாகம் போன்றவற்றில் செயற்பட உதவுகின்றன.

எண்பதுகளின் ஆரம்பத்தில் யாழ் புனித பரியோவன் கல்லூரி நிர்வாகம் ஆண்டுக்கான கட்டணத்தை மாதா மாதம் கட்ட அனுமதித்து அவரை உயர்கல்வி கற்பதற்கு அனுமதித்தபோதும் அக்காலகட்டத்தில் அதிபராக இருந்தவர் அனுமதிக்கவில்லை. அதன் காரணமாக அவர் யாழ் மத்திய கல்லூரியில் தனது உயர் கல்வியினைக்கற்கத்தொடங்கினார். பின்னர் பட்டயக்கணக்காளர் பாடத்திட்டத்தைப்படிக்க எண்ணுகின்றார்.

இவ்விதம் அவரது மாணவப்பருவம் தொடருகின்றது. அதன் விளைவாக அவர் ஈழப்பொது மாணவர் மன்றம் அமைப்பில் இணைந்து செயற்படுகின்றார். 1983இல் தென்னிலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் இவர் செயற்பட்ட கோப்பாய்க்கிறிஸ்தவ ஆலயத்துக்குக்குருவாக வருகின்றார். ஏன் அவரைச் சிங்களக்கிறிஸ்தவர்களோ, குருமார்களோ, 'பிஷப்'போ பாதுகாக்கத்தவறினார்கள் என்ற கேள்வி எழுகின்றது. அவர்களது  செயற்பாடுகள் அவருக்கு அதிருப்தியினைத்தருகின்றன. இதன் விளைவாக தென்னிலங்கையிலிருந்து சிங்கள 'பிஷப்' கோப்பாய் வரும்போது ஆலயத்தின் வாசலில் கறுப்புக்கொடி காட்டி வரவேற்கின்றார். அவ்விதம் சிங்களவர்கள் செயற்பட்டதற்கு இனவெறியே காரணமாக இவருக்குத்தென்படுகின்றது. இவ்விதமாகத்தொடரும் வாழ்வில் மதம் பற்றிய பல கேள்விகள் அவருக்கு எழுகின்றன.

அதே சமயம் அவரது தந்தையாரின் தமிழரசுக்கட்சியுடனான தொடர்பு காரணமாகவும் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகியவற்றுடனான அவரது தொடர்புகள், பரமேஸ்வரன் போன்றோருடனான தொடர்புகள் , 1983 இனக்கலவரம், தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், அரசின் அடக்குமுறைகள் எல்லாம் மெல்ல மெல்ல அவரைத் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தினுள் இழுத்து விடுகின்றன. அதன் விளைவாகத் தமீழீழ ஈழ விடுதலை இயக்கத்துடன் ரஞ்சித் என்னும் இயக்கப்பெயரில் போராளியாக இணைந்துகொள்கின்றார்.

இவ்விதமாகத்தனது சுயவரலாற்றை விபரிக்கும் எல்லாளன் தான் ஏன் தமீழீழ விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார், அவ்விதம் சேர்ந்தவருக்குத் தமிழகத்து முகாம்களில் ஏற்பட்ட அனுபவங்கள், அவரது இயக்கத்தின் உள்முரண்பாடுகள் ஏற்படுத்திய மனித உரிமை மீறல்கள் ஏமாற்றத்தினையே தருகின்றன. இவற்றின் விளைவாக, ஏன் தான் ஆர்வத்துடன் சேர்ந்து இயங்கிய அமைப்பிலிருந்து விலக வேண்டி ஏற்பட்டது, அவ்விதம் விலகியபோது தமிழகத்தில் அடைந்த அனுபவங்கள், அன்றாட வாழ்வினைக்கொண்டு நடாத்திட முடியாது அடைந்த சிரமங்கள், அச்சமயங்களில் ஏனைய இயக்கங்களிலிருந்து விலகி வந்த போராளிகளுடனான அனுபவங்கள் எனத்தன் போராளியாகச்செயற்பட்ட போராட்ட அனுபவங்களை எந்தவிதப்பாசாங்குகளுமற்றுத் தனது பார்வையில் பதிவு செய்திருக்கின்றார்.

இவ்விதமான இந்த அனுபவங்களின் பதிவுகள் முக்கியமானவை. அதே சமயம் ஒன்றினையும் நாம் முக்கியமாக மனதிலிருத்த வேண்டும். எல்லாளளின் அவர் சார்ந்த அமைப்பின் மீதான அனுபவங்களின் சுய விமர்சனப்பதிவுகளான இவை, அவரது அக்காலகட்டத்து வாழ்வு பற்றிய சுய விமர்சனப்பதிவுகளுமாகும் என்பதுதான் அது. ஆனால் இவ்விதமான போராளி ஒருவரின் பதிவுகள் இவற்றையெல்லாம் மீறி முக்கியத்துவம் பெறுவது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துப் போராட்ட அனுபவங்களை, வரலாற்றினை ஆவணப்படுத்துவதில்தாம். ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தின் ஆயுதபோராட்ட வரலாற்றின் உண்மையான வரலாற்றினை எழுதுவதற்கு, அறிவதற்கு இது போன்ற பதிவுகளை அக்காலகட்டத்தில் இயங்கிய பல்வேறு அமைப்புகளிலிருந்து இயங்கியவர்கள் வெளிப்படுத்துதல் அவசியமானதும் முக்கியமானதுமாகும்.  அதே சமயம் ஒரு போராளி எவ்விதம் உருவாகுகின்றார்? அவர் உருவாகுவதற்கு எவ்விதம் அவர் வாழ்ந்த சமூக, அரசியல் மற்றும் குடும்பச்சூழல்கள் காரணிகளாக விளங்குகின்றன என்பதை எடுத்துக்காட்டும் அனுபவப்பதிவுகளாகவும் இவை விளங்குகின்றன. அந்த வகையில் முக்கியத்துவம் பெறும் எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' என்னுமிவ்வனுபவப்பதிவுகளின் தொகுப்பும் முக்கியமானதோர் ஆவணப்பதிவாகும்..


33. தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்'

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' நேற்றுதான் என் கையில் கிடைத்தது. இந்த நாவலைப் பற்றி வெளிவந்த விமர்சனக் குறிப்புகள் காரணமாக இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. அதற்கு வடிகாலாகப் புத்தகம் இங்குள்ள புத்தகக் கடையொன்றில் நேற்றுத்தான் கிடைத்தது. இந்த நூலினை வாசிக்க வேண்டுமென்று நான் நினைத்ததற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

1. தமிழ் மக்கள் எதிர்நோக்கிய, முள்ளிவாய்க்காலில் முடிந்த யுத்தக் காலகட்டத்தில் , எவ்விதமான சிரமங்களை அவர்கள் எதிர்நோக்கினார்கள். வெளிவரும் காணொளிகள் அழிவுகளைத்தாம் காட்டும். ஆனால் அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த மக்களின் அன்றாடச் செயற்பாடுகளை, அழிவுகளை அவர்கள் எதிர்நோக்கியது எவ்வாறு போன்றவற்றை அக்காணொளிகள் காட்டுவதில்லை. இதனை அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த ஒருவரின் நாட்குறிப்புகள் அல்லது பதிவுகள்தாம் புலப்படுத்தும். இதுவுமொரு காரணம் இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற என் ஆவலுக்கு.

2. தமிழ்க்கவி விடுதலைப் புலிகள் அமைப்பிலும் இணைந்து இயங்கிய ஒருவர். அதனால் அவரது பதிவுகள் இயக்கம் சார்ந்ததாக இருக்குமா அல்லது நடுநிலையுடன் இருக்குமா என்பது பற்றி அறிய எனக்கிருந்த ஆர்வம் இன்னுமொரு காரணம்.

இதுபோன்ற மேலும் சில காரணங்களைக் குறிப்பிடலாம். ஆனால் மேலுள்ள காரணங்கள்தாம் முக்கியமானவை.

இந்த நாவலைப் பொறுத்தவரையில் ஏனைய முக்கியமான நாவல்களைப் போல் பாத்திரப்படைப்பு, கதைப்பின்னல், உரையாடல், கூறும்பொருள், மொழி என்பவற்றின் அடிப்படையில் அணுக முடியாது. இதன் முக்கியத்துவம் நடந்து முடிந்த பேரழிவினை ஆவணப்படுத்தும் பதிவுகள் என்ற வகையில்தானிருக்கின்றது. யூதச்சிறுமி ஆன் ஃபிராங்கின் புகழ்பெற்ற 'தினக்குறிப்புகள்' எவ்விதம் ஆவணச்சிறப்பு மிக்கவையாக இருக்கின்றனவோ (அத்தினக்குறிப்புகள் அச்சிறுமியின் பதின்ம வயது உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இலக்கியச்சிறப்பும் மிக்கவை) அதுபோல்தான் தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' நாவலும் ஆவணச்சிறப்பு மிக்கதாகவிருக்கின்றது. அதன் காரணமாகவே ஈழத்தமிழர் இலக்கியத்தில் முக்கியமானதொரு படைப்பாகத் தன்னை நிலைநிறுத்துக்கொள்கின்றது.

இந்த நாவலில் யுத்தக்காலகட்டத்தில் மக்களின் இடம்பெயர்வுகளை, கூவிவரும் எறிகணைகளிலிருந்து தப்புவதற்காக அவர்கள் படும் சிரமங்களை, அன்றாட வாழ்வியற் பிரச்சினைகளை, இயக்கத்தவரின் செயற்பாடுகளை, இயக்கத்தைக் காரணமாக வைத்துச் சிலர் அடையும் ஆதாயங்களை .. இவற்றையெல்லாம் தமிழ்க்கவி இயலுமானவரையில் பதிவு செய்திருக்கின்றார். இயக்கத்தின் செயற்பாடுகளைப் பாராட்ட வேண்டிய இடங்களில் பாராட்டியும், கண்டிக்க வேண்டிய இடங்களில் கண்டித்துமுள்ளார். இறுதிக்கட்டம் வரையில் புலிகள் போராடிக்கொண்டிருந்ததை பதிவு செய்யும் 'ஊழிக்காலம்', இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் செல்ல முயன்றவர்கள் மீது புலிகள் துப்பாக்கிக்ப் பிரயோகம் செய்ததையும் விபரிக்கின்றது. இதற்குப் படகில் தப்பிச்சென்ற பாலகுமாரின் மனைவியும், மகளும் கூட விதிவிலக்கானவர்களல்லர். பாலகுமாரின் மகளும் இவ்விதமானதொரு சூழலில் , துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயங்களுக்குள்ளாகவதாக 'ஊழிக்காலம்' விபரிக்கின்றது. இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்ததால் , விடுதலைப்புலிகள் பற்றிய இவரது விமர்சனங்கள் பற்றி மாற்றுக்கருத்தினர் நிச்சயம் தத்தமது பார்வையில் விமர்சனங்களை வைக்கத்தான் செய்வார்கள்.

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' என்னுமிந்த ஆவணப்பதிவில் என்னை மிகவும் பிரமிக்க வைத்தது மக்கள் இருப்பினை எதிர்நோக்கிய இயல்பு. பல்வேறு பட்ட எறிகணைகள் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களெல்லாம் சீறிப்பாய்கின்றன. பலரைப் பலிகொள்கின்றன. இலங்கை இராணுவத்தின் கைகளில் ஒவ்வொரு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமும் விழுந்தவுடன் , மக்கள் மீண்டும் , மீண்டும் இடம்பெயர்கின்றார்கள். யுத்தத்தின் இறுதிவரையில் மக்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றார்கள். அதே சமயம் தமிழீழ வைப்பகம் போன்ற அமைப்புகள் இயங்கிக்கொண்டுதானிருக்கின்றன. மக்கள் வைப்பகங்களில் வைத்திருந்த பணத்தை அவ்வப்போது எடுத்து , உணவுக்காக, பங்கர்கள் கட்ட உதவும் பொருட்களைக் காவி வருவதற்கான கூலி போன்றவற்றுக்காக என்றெல்லாம் செலவழிக்கின்றார்கள். விலை அதிகமாகக்கொடுத்துப் பொருட்களை வாங்குகின்றார்கள். வியாபாரிகளும் அதிக விலைக்கு விற்கின்றார்கள். சங்கக்கடை போன்ற அமைப்புகள் யுத்தநிலைக்கேற்ப சந்திக்குச் சந்தி இடம்மாறி தம் சேவைகளை வழங்கிக்கொண்டுதானிருக்கின்றன. குழந்தைகள் பங்கர்களுக்குள் சதுரங்கம், தாயத்து போன்ற விளையாட்டுகளை விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருமுறை இடம் மாறும்போதும் , புதிய இடங்களில் பங்கர்கள், மலசலக்கூடங்கள் அமைத்துத் தம் வாழ்வினைத் தொடர்கின்றார்கள். இவ்விதமான அழிவுகளுக்கு மத்தியிலும், மக்கள் ஒழுங்கிழந்து , சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அழிவுகளை எதிர்நோக்கி, மீண்டும் நம்பிக்கையுடன் யுத்தத்தினை எதிர்கொள்கின்றார்கள்.

இவ்விதமான யுத்தச்சூழலில் மக்களின் அன்றாட இருப்பினை நன்கு பதிவு செய்துள்ளார் தமிழ்க்கவி. அது இந்நூலின் ஆவணச்சிறப்பினை அதிகரிக்கின்றது. பொதுவாக அமைப்பைச் சார்ந்தவர்களின் பதிவுகளில் தனிப்பட்ட மன உணர்வுகளைத்தான் , அதுவும் ஒருபக்கச்சார்பாகப் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' இயலுமானவரையில் யுத்தச்சூழலில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்வினைக் குறை, நிறைகளுடன் பதிவு செய்திருக்கின்றது.

நூலில் தமிழ்க்கவி நூல் நல்ல முறையில் வெளிவருவதற்குக் காரணமாக இளங்கோ (கனடா), 'ஆறா வடு' சயந்தன் ஆகியோர் இருந்ததாக நன்றி நவின்றிருப்பார். அதற்காக அவர்களையும் பாராட்டலாம் இவ்விதமானதொரு நூல் வெளிவரக் காரணமாகவிருந்ததற்காக.


34. சயந்தனின் 'ஆறா வடு'வும் ஷோபா சக்தியின் 'கொரில்லா'வும் பற்றி...

அண்மைக்காலத்தில் பரவலாக வரவேற்பினையும், விமர்சனங்களையும் பெற்ற சயந்தனின் 'ஆறா வடு' புகலிட நாவல்களில் தவிர்க்க முடியாத இன்னுமொரு படைப்பு. இந்த நாவலை முதலில் வாசித்ததும் ஏனோ தெரியவில்லை உடனடியாகவே எனக்கு 'ஷோபா சக்தி'யின் 'கொரில்லா' ஞாபகத்துக்கு வந்தது. அதற்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. இரு நாவல்களுமே முன்னாள் விடுதலைப் புலி ஒருவரின் கடந்த கால, புகலிட அனுபவங்களை மையமாகக் கொண்டவை இரண்டிலுமே அவ்வப்போது பட்டும் படாமலும் இயக்கத்தின் நடவடிக்கைகள் விமர்சிக்கப்படுகின்றன.  அதே சமயம் இரண்டிலும் இயக்கத்தின் ஆரோக்கியமான பக்கங்களும் சுட்டிக் காட்டப்படுகின்றன.

2. கொரில்லாவில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப்போராளியால் இந்திய அமைதிப்படையின் மேஜர் கல்யாணசுந்தரம் கொல்லப்படுகின்றார். பிரின்ஸியை விசாரணக்குட்படுத்தும் சமயம், மேஜர் அவளது மார்புகளைக் காமத்துடன் பார்த்து "இங்கே என்ன பாம் வைச்சிருகேயா?" என்று கேட்கும் சமயம், மார்பினில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளுடன் அவனைப் பாய்ந்து கட்டிக்கொள்கின்றாள் பிரின்ஸி. குண்டுகள் வெடிக்கின்றன. 'ஆறா வடு'வில் வரும் நிலாமதி என்னும் பதின்ம வயதுப் பெண் வயதுக்கு மீறிய மார்பகங்களின் வளர்ச்சியைப் பெற்றவள். அதன் காரணமாகவே 'குண்டுப் பாப்பா' என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படுபவள். அவளது குடும்பம் விடுதலைப் புலிகளுக்கு அவ்வப்போது உதவி செய்யும் தமிழ்க் குடும்பம். வெற்றி என்று அழைக்கப்படும் விடுதலைப் புலி உறுப்பினன் ஆரம்பத்தில் திலீபன் நினைவுதினத்துக்காக அச்சடித்த துண்டுப்பிரசுரங்களை நிலாமதியிடன் பாதுகாப்பாக வைத்துத் தரும்படி வேண்டுகின்றான். இவ்விதமாக ஆரம்பிக்கும் தொடர்பு ஆயுதங்களை அவர்களது இடத்தில் மறைத்து வைக்கும் அளவுக்கு வளர்கிறது. ஒரு முறை இந்திய அமைதிப்படை இராணுவத்தின் தேடுதலில் அவளது வீடு அகப்பட்டுக்கொள்கிறது. அதற்குச் சற்று முன்னர்தான் போராளிகள் அங்கிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டிருந்தார்கள். ஆனால் கிரேனைட் குண்டொன்று தவறுதலாக விடுபட்டுப் போகிறது. அதே சமயம் இந்தியப் படைச் சிப்பாய்கள் வீட்டினுள் நுழைகின்றார்கள். நிலாமதி கிரேனைட்டினைத் தனது மார்பகங்களுக்குள் மறைத்து நிற்கின்றாள். வந்திருந்த சிப்பாய்களில் ஒருவன் அறையைச் சோதிக்கும் பாவனையில் அறையினுள் அவளைத் தள்ளி அவளைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குகின்றான். அச்சமயம் அவளது பிராவினைப் பற்றி இழுக்கும்போது உள்ளிருந்த கிரேனைட் குண்டு கீழே விழுகிறது. அதிர்ச்சியுற்ற அந்தப் படையினன் கிரேனைட் குண்டினை எடுத்து, கிளிப்பை நீக்கி, நிலாமதி மீது வீச எத்தனிக்கையில், நிலாமதி அவனைப் பாய்ந்து கட்டிக்கொள்கின்றாள். வெடிப்பில் இருவருமே கொல்லப்படுகின்றனர்.

3. ஆறா வடு நாவலில் லூசு தேவி என்றொரு பாத்திரம் வருகிறது. சிறு வயதில் தாயை இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் இழந்தவள். அவளை 'செக் போஸ்'டுகளில் நிற்கும் இராணுவத்தினர் பாலியல் தேவைக்காகப் பாவித்துக்கொள்கின்றனர். அதன் விளைவாக, பத்து மாதக் கர்ப்பத்துடனிருந்த அவள் வயிற்றில் சுடப்பட்டுக்கொல்லப்படுகின்றாள். அவள் யாரால் கொல்லப்படுகின்றாள் என்பது நேரடியாகக் கூறப்படவில்லை. ஆனால் மறைமுறைமாகக் கூறப்படுகின்றது. "அப்பொழுது ஊரில்  பலதரப்பட்ட கதைகள் அவளைப்பற்றி இருந்தன. தேவியொரு உளவாளியாம்... ஆமிக்காரங்களுக்கு மெசேஜ் எடுத்துக் குடுக்கிறவளாம். ஆமியோடை தொடர்பு எண்டு இயக்கம்தான் போட்டதாம்... இவள் ஆமிக்காரங்களோடை போய்ச் சண்டை பிடிச்சவளாம். .. அவங்கள்தான் சுட்டுட்டாங்களாம்." இவ்விதமால நிலவும் கதைகள் அவளது மரணம் பற்றி வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இதே போல் கொரில்லா நாவலிலும் ஒரு பாத்திரம் வருகிறது. அவள்: யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரிக்கு முன்னாளிலுள்ள  லக்கி ஹொட்டலில்  66வது இலக்க  அறையில் தொழில் செய்து வரும் சலங்கை. "சலங்கையை இயக்கம்  சி.ஐ.டி.  எண்டு சுட்டுப் போட்டு பஸ் ஸ்ராண்டில போட்ட அண்டு இஞ்ச வந்தனான" என்று சிறைக்கைதி ஒருவன் கூறும் கூற்றில் வருகின்றது.

4. 1994 வரையிலான கால கட்டச் சம்பவங்களின் அடிப்படையில் கொரில்லா கூறப்பட்டிருக்கின்றது. ஆறா வடு 1987 - 2001 வரையிலான காலகட்டத்தை மையமாக வைத்துக் கூறப்பட்டுள்ளது. இரண்டிலும் இயக்கத்தின் அக்காலகட்டங்களுரிய சமர்கள், அரசியல் நிகழ்வுகள் , இயக்கத்தின் நடைமுறைகள் ஆகியவை விபரிக்கப்பட்டுள்ளன.

வாசிப்பும், யோசிப்பும் 42: சயந்தனின் 'ஆறா வடு'வும் ஷோபா சக்தியின் 'கொரில்லா'வும் பற்றி... 5. கொரில்லா நாவலின் இறுதி அத்தியாயம் அதுவரை கூறப்பட்ட கதைக்கு எந்தவிதத் தொடர்புமில்லாத பாரிஸ் சபாலிங்கம் கொலையுடன் முடிவடைகின்றது. ஆறா வடு அது வரையில் கூறப்பட்ட கதைக்கு எந்தவிதச் சம்பந்தமுமில்லாத இத்ரீஸ் என்றழைக்கப்படும் முன்னாள் எரித்திரியா விடுதலைப் போராளி ஒருவனின் கதையுடன் முடிவடைகின்றது. கொரில்லாவில் அதுவரை கூறப்பட்ட கதைக்கும் , இறுதி அத்தியாயத்துக்குமிடையிலுள்ள ஒரேயொரு தொடர்பு: பாரிசில் நடைபெற்ற இன்னுமொரு ஈழத்தமிழனின் படுகொலைதான். 'ஆறா வடு' நாவலில் வரும் இறுதி அத்தியாயத்துக்கும் அது வரை கூறப்பட்ட கதைக்குமுமிடையிலுள்ள ஒரேயொரு தொடர்பு: புகலிடம் நாடி, இத்தாலி நோக்கிப் படகில் ஏனையவர்களுடன் பயணிக்கும் அமுதன், படகு மூழ்கியதில் கடலினுள் மரித்துப் போகின்றான். ஆனால் , அவனது பைபர் க்ளாசிலான செயற்கைக் கால் மட்டும் கழன்று நீரில் மிதந்து வருகின்றது. ஏற்கனவே தனது காலொன்றினை இழந்திருந்த இத்ரீஸ் கிழவனுக்கு அச்செயற்கைக்கால் அச்சொட்டாகப் பொருந்துகின்றது. இச்செயற்கைக்காலொன்றே தொடர்பு.

இரு நாவல்களும் கூறப்பட்ட முறையில் வேறுபடவும் செய்கின்றன. 'கொரில்லா'வில் கதை பைபிள் கூறப்பட்டுள்ளதைப் போன்றதொரு நடையில் நகர்கின்றது. அதே சமயம் காடாற்ற ஏசுதாசனான சண்டியன் 'கொரில்லா'வின் கதையும், அவனது மகனான ரொக்கிராஜ் என்கின்ற அந்தோனிதாசனின் (இவனும் தந்தையைப் போன்றே கொரில்லா என்றழைக்கப்படுகின்றான். ஆனால் இவன் கெரில்லா. அவனது சந்தையோ ஊர்ச்சண்டியன்) கதையும் கூறப்படுகின்றது. அந்தோனிதாசனின் புகலிட வாழ்வும் கூறப்படுகின்றது. ஆனால் 'ஆறா வடு'வில் புகலிடம் நாடிச் செல்லும் முன்னாள் போராளி அமுதனின் வாழ்வு செல்லும் படகு கடலுள் மூழ்குவதுடன் முடிந்து விடுகின்றது. அவனது புகலிடம் நாடிய தேடல் முற்றுப்பெறவில்லை. எனவே அவனது புகலிட வாழ்வு பற்றிய அனுபவங்களைக் கூறுவதற்குரிய வாய்ப்பு கொரில்லா நாவலுக்குள்ளதைப்போல் ஆறா வடு நாவலுக்கில்லை. இன்னுமொரு முக்கியமான வித்தியாசம்: ஆறா வடு நாவலில் முன்னாட் போராளியான அமுதனின் கடந்த கால வாழ்வு உணர்ச்சி பூர்வமாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அவனது காதல், காதலி அகிலாவின், அவனது உணர்வுகள் மனதைத் தொடும் வகையில் நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ளன. இன்னுமொரு விடயம் கூறும் நடையிலும் இரு நாவல்களும் வேறுபட்டுள்ளன். கொரில்லாவில் கதை பேச்சு வழக்கில் கூறப்பட்டுள்ளது. ஆறா வடு நாவலில் உரையாடல்களில் மட்டும் பெரும்பாலும் பேச்சு நடை பாவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இருவரது நடையிலும் அங்கதம் அவ்வப்போது தலை காட்டவும் செய்கின்றது என்பதையும் குறிப்பிட வேண்டும்

35. புஷ்பராணியின் 'அகாலம்: ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்'
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அதில் முன்னணியிலிருந்த பெண்களில் மயிலிட்டி  புஷ்பராணி முக்கியமானவர். பின்னர் பல்வேறு அமைப்புகள் உருவாகக் காரணமாகவிருந்த ஆரம்பகாலத் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் அமைப்பான தமிழ் மகளிர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை அமைப்பிலும் (TLO) தீவிரமாக இயங்கியவர். புலோலி வங்கிக் கொள்ளையில் சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு காவற்துறையினரின் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானவர். 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்னும் நூலை எழுதிய புஷ்பராஜாவின் சகோதரி. இவரது 'அகாலம் (ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்)' என்னும் நூலை அண்மையில் வாசித்தேன். 'கருப்புப் பிரதிகள்' வெளியீடாக வெளிவந்த நூல்.

இந்நூலுக்குப் பல முக்கியத்துவங்களுள்ளன. ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் பெண் போராளிகளில் முன்னோடியான புஷ்பராணியின் அனுபவப் பதிவுகளிவை. இந்த நூல் ஏனைய இதுபோன்ற அண்மைக்காலப் பதிவுகளிலிருந்து இன்னுமொருவகையில் வேறுபடுகின்றது. ஏனைய நூல்களெல்லாம் ஆவணப்பதிவுகளென்ற வகையில் முக்கியத்துவம் பெற்றால், 'அகாலம்' ஆவணப்பதிவாக இருக்கும் அதே சமயம் இலக்கியத்தரமிக்க பிரதியாகவும் அமைந்திருப்பது இதன் சிறப்பு. இதற்கு புஷ்பராணி ஓர் எழுத்தாளராகவுமிருப்பது காரணம். தனது போராட்ட அனுபவங்களை விபரிக்கையில் அக்காலத்து மெல்லிய உணர்வுகளையெல்லாம், தன் இளமைக்காலத்து வாசிப்பு அனுபவங்களையெல்லாம் விபரித்துச் செல்கின்றார். அடுத்த முக்கியமான அம்சம் தனது அனுபவங்களை வெளிப்படையாக, குறைநிறைகளுடன் விபரிக்கின்றார். சிவகுமாரின் தாயாரான அன்னலட்சுமி அம்மையாரின் சிறப்புகளை விபரிக்கும் அதே சமயம் சிவகுமாரின் அந்திரட்டியில் அவ்வூர்த் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாக உணவு வழங்குவதையும் அதுபற்றிய அன்னலட்சுமி அம்மையாரின் மன உணர்வுகளையும் கூடவே விபரிக்கின்றார். அது போல் தமிழ் மகளிர் அமைப்பின் ஆரம்பகாலப் பெண் போராளிகளிலொருவரான அங்கயற்கண்ணி மறைந்து மறைந்து தன்னை வந்து சந்திப்பதையும் விபரிக்கின்றார். இவ்விதமாகப் பலருடனான அனுபவங்களை விபரிக்கையில் அவர்களின் குறைநிறைகளை விபரிக்கின்றார். அவர்கள்மேல் கோபம் போன்ற உணர்வுகளின்றி விபரிக்கின்றார். தமிழ், சிங்களப் பொலிசாரின் வன்முறைகளை விபரிக்கும் அதே சமயம் அவர்களது நல்ல அம்சங்களையும் குறிப்பிடுகின்றார். இவ்விதமான விபரிப்பால் இவர் கூறும் நபர்களைப் பற்றிய ஓரளவுக்கு முழுமையான பிம்பங்கள் கிடைக்கின்றன. பெண் போராளிகளாகக் கைது செய்யப்பட்ட இவரும், கல்யாணி போன்றவர்களும் விசாரணைகளில் அடைந்து சித்திரவதைகள் துயரகரமானவை. அவற்றையெல்லாம் தாங்கித் தப்பிபிழைத்த இவர்களது துணிவு மிக்க ஆளுமை வியப்பூட்டுவது.

இவரது அனுபவப் பதிவுகளின் இன்னுமொரு முக்கியமான அம்சம் வெலிக்கடையில் இவருடன் பல்வேறு காரணங்களுக்காக (அரசியல், சமூகக் குற்றங்கள்) அடைபட்டிருக்கும் சிங்களப் பெண் கைதிகளைப் பற்றிய விபரங்களாகும். எந்தவித இனத்துவேசமுமின்றி அவர்களைப் பற்றி விபரிக்கின்றார். ஒருவருக்கொருவர் துணையாகவிருப்பதை விபரிக்கின்றார். இந்த அனுபவப் பதிவுகளில் சிங்களப் பெண் கைதிகளைப் பற்றிய விபரங்களும் முக்கியமானதோர் அம்சம்.

அடுத்த முக்கியமானதோர் அம்சம் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுத மயப்பட்ட காலகட்டத்தில் அதற்காகத் தம்மை அர்ப்பணித்த பெண்களைப் பற்றிய விபரங்கள். இந்த நூல் விபரிப்பதைப் போல் ஏனைய அனுபவப் பதிவுகள் இவ்வளவு தகவல்களை ஆரம்பகாலப் பெண் போராளிகளைப் பற்றி விபரிக்கவில்லையென்றே நினைக்கின்றேன். உதாரணமாக வீமன்காமம் பத்மினி, குருநகர் குலம் அக்கா, சங்கானை அம்மா, காங்கேசந்துறை டொறத்தி, காங்கேசந்துறை திலகமணி, திருகோணமலை பிலோமினா அக்கா, மயிலிட்டி அங்கயற்கண்ணி, வேலணை திலகவதி, மாவிட்டபுரம் பாப்பா அக்கா, வசாவிளான் ஜெயராணி, காரைநகர் கனகராணி, வசாவிளான் செல்வராணி, மாவிட்டபுரம் செல்வராணி என்று தன்னுடன் இணைந்து போராட்ட நடவடிக்கைகளில் பங்குபற்றிய தோழிகளைப் பற்றிய இவரது விபரிப்புகள் முக்கியமான ஆவணப்பதிவுகள். இத்தோழிகளைப் பற்றிக் குறிப்பிடும் புஷ்பராணி 'இந்தத் தோழிகளது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும், தியாகங்களும் மிகச்சீக்கிரமே வரலாற்றால் மறக்கப்பட்டுவிட்டன.  ஆனால் எனது மனதில்  என்னை மரணம் தழுவும்வரை இந்தத் தோழிகள் நிறைந்திருப்பார்கள். ஈழத்தின் ஒவ்வொரு பிடி மண்ணிலும் எனது தோழிகளது பாடுகள் பதிந்துள்ளன.' என்கின்றார். ஆனால் நூலாசிரியர் தனது 'அகாலம்' அனுபவப் பதிவுகள் மூலம் அத்தோழிகளை வரலாறு மறக்காமல் செய்துவிட்டாரென்றே கூறவேண்டும். வரலாற்றால் இதுவரை மறக்கப்பட்டிருந்த பெண் போராளிகளைப் பற்றிய விபரங்களைப் பதிவு செய்வதும் இந்நூலின் முக்கியமானதோர் அம்சம்.

இவ்வனுபவப் பதிவுகளின் இன்னுமொரு முக்கியமான அம்சம் அமைப்புகள் பலமடையத் தொடங்குவதற்கு முன்னர் , 1983ற்கு முன்னர் நிலவிய தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் போன்றவற்றில் இயங்கிய ஆண் தோழர்கள் பலரைப் பற்றியும் வரலாறு மறந்துவிடாமலிருக்கும் வகையில் பதிவு செய்ததாகும். அத்துடன் பின்னர் பல்வேறு போராட்ட அமைப்புகளின் தலைவர்களாக விளங்கிய பலரைப் பற்றி (விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், ஈரோஸ் தலைவர் பாலகுமார், ஈழ மக்கள் புரட்சிகர முன்னணித் தலைவர் நா.பத்மநாபா, வரதராஜப்பெருமாள், சந்ததியார் போன்ற பலரைப்பற்றி) தனது அனுபவங்களை நூலில் புஷ்பராணி பகிர்ந்திருக்கின்றார். அவையும் ஆவணமுக்கியத்துவம் மிக்கவை.

ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் இன்றைய நிலைக்குக் காரணமானவர்களென்று தான் நினைப்பவர்களை, அதற்கான காரணங்களையும் கடுமையாக் கண்டனம் செய்யும் பணியினையும் 'அகாலம்' செய்கின்றது. ஆனால் இதுவரை நடைபெற்ற விடுதலைப் போராட்ட வரலாற்றை, அதன் இன்றைய நிலையினை உணர்ச்சிவசப்படாது, ஆய்வுரீதியில் அணுகுவது பயனுள்ளதென்பதென் தனிப்பட்ட கருத்து.

இப்பதிவுகளின் இன்னுமொரு குறிப்படத்தக்க அம்சம் புஷ்பராணி தான் பிறந்த தாழ்த்தப்பட்ட சமூகம் காரணமாக அடைந்த அவமானங்களை, அனுபவங்களை விபரிப்பதாகும்.  காவற்துறையினர் குறிப்பாகத் தமிழ்ப் பொலிசார் அவர்களை அவர்களது சமூகப் பின்னணி காரணமாக நையாண்டி செய்து புரியும் வதைகள், அதன் காரணமாக அவரும், அவருடன் கைது செய்யப்பட்ட கல்யாணி போன்றவர்கள், அடையும் சித்திரவதைகள், பெண்களாகவிருப்பதால் அடையும் மன உளைச்சல்கள் (உதாரணமாக மாதவிடாய்க் கால அனுபவப் பதிவுகள்) இவை முக்கியமான அனுபவப்பதிவுகள். கைது செய்யப்பட்டவர்களையும் அவர்களது சமூகநிலை காரணமாகச் சட்டம் எவ்விதம் பாரபட்சமாகக் கையாள்கிறது என்பதைத் தெளிவுடன் 'அகாலம்' விபரிக்கின்றது. சிலர் சித்திரவதைகளிலிருந்து விடுபடுகின்றார்கள். இன்னும் சிலர் விரைவாக விடுதலையாகின்றார்கள். இவ்வளவு அவமானங்களினூடும் ஈழத்தமிழ் மக்கள் அனைவரினிதும் விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்ட இவரைப் போன்ற போராளிகள் அனைவரையும் முழுத் தமிழினமும் நன்றியுடன் நினைவில் வைத்திருக்க வேண்டும். அதற்குரிய உண்மையான நன்றி ஈழத்தமிழர்கள் மத்தியில் புரையோடிப்போய்க்கிடக்கும் தீண்டாமைப் பேயை ஒழிப்பதாகும்.

இந்நூலில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் நடைபெற்ற கலவரம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

"இரா ஜனார்த்தனம் பேசியதாலேயே அங்கே குழப்பம் ஏற்பட்டதென்றும் சிவகுமாரன் அல்லது தமிழ் மாணவர் பேரவையினர் காவற்துறையோடு மோதியதாலேயே  குழப்பம் ஏற்பட்டது எனச்சொல்வதெல்லாம் தவறான செய்திகளே. மாநாட்டில் வந்த ஊர்திகளில் ஓர் ஊர்தியில் கட்டப்பட்டிருந்த  உலோகத்தாலான கொடிக்கம்பம்  மின்சாரக் கம்பியைத் தொட்டதினால் ஊர்தியில்  வந்த இருவர் முதலில் பலியானார்கள்.'

இதனை யாராவது உறுதிப்படுத்த வேண்டும். நானும் அன்று சிறுவனாகக் கலவரம் நடந்த சமயம் அங்கிருந்தேன். மேடை அமைந்திருந்த வீரசிங்கம் மண்டபத்துக்கு முன் புறத்துக்கும், முற்றவெளிக்குமிடையில் வீதி ஊடறுத்துச் சென்றுகொண்டிருந்தது. கூட்டத்தில் பங்குபற்றிய மக்கள் அந்த வீதியிலும் முற்றாக நிறைந்திருந்தார்கள். அப்பொழுது அங்கு வந்த பொலிசார் அம்மக்களைக் கலைத்து வீதியைத் திறக்க முனைந்தார்கள். அப்பொழுது அவ்விதம் முற்பட்ட பொலிசார்மீது சுற்றிவர இருந்த மக்கள் தமது செருப்புகள் உட்படக் கிடைத்ததையெல்லாம் எறியத் தொடங்கினார்கள். இதனை எதிர்பாராத பொலிசார் பின்வாங்கிச் சென்றார்கள். சென்றவர்கள் சென்ற வேகத்திலேயே மீண்டும் வந்தார்கள். கூட்டத்தினர்மீதி கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினார்கள். இதுதான் நான் என் அனுபவத்திலிருந்து புரிந்துகொண்டது. எனக்கு அடுத்த நாளே ஒன்பது தமிழ் மக்கள் இறந்த விடயம் தெரிந்தது. அது பொலிசார் மின்சாரக் கம்பிகளைச் சுட்டி வீழ்த்தியதால் விழுந்த கம்பிகளின் மீது இறந்த தமிழர்களென்று கூறியதைக் கேட்டேன். இது பற்றிய பூரண விபரங்கள் அறிந்துகொண்டவர்கள்தாம் கூறவேண்டும்.

நூலின் சமர்ப்பணத்தில் '.. ஈழப்போராட்டத்தில் தங்களது உயிர்களைத் துறந்த அனைத்துப் போராளிகளையும் ஞாபகம் கொள்கிறேன். நீங்கள் எல்லாவித அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாலும் என் இதயத்தில் இருப்பீர்கள்' என்கின்றார். இது நூலாசிரியரின் பண்பட்ட உள்ளத்தின் வெளிப்பாடு. இவ்விதமான முதிர்ச்சியுடன் தனது அனுபவங்களை அணுகி விபரித்திருப்பதும் 'அகாலம்' பதிவுகளின் இன்னுமொரு சிறப்பு. இது போன்ற அனுபவப் பதிவுகள் அதிக அளவில் வரவேண்டிய காலகட்டமிது. அவ்விதம் வந்தால்தான் அவற்றைப் பற்றிய, ஒன்றுடன் ஒன்று ஒப்பு நோக்கிய,  விரிவான ஆய்வுகள் சாத்தியம். இதுவரைகால ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட
வரலாற்றின் குறைநிறைகளை அறிவதற்கு இவ்விதமான ஆய்வுகள் அவசியம்.

நூல்: அகாலம் (ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்)
வெளியீடு: கருப்புப் பிரதிகள்
பதிப்பாசிரியர்: ஷோபாசக்தி

36. எனது குறிப்பேட்டுப் பதிவுகள்
எண்பதுகளில் குறிப்பேடுகளில் என் உள்ளத்து உணர்வுகளையெல்லாம் கவிதைகளாக, உரைச்சித்திரங்களாக, கட்டுரைகளாக என்றெல்லாம் எழுதி வைப்பது வழக்கம். அவை ஒருவிதத்தில் உணர்வுகளின் வடிகால்களாக அன்று விளங்கின. அவ்விதம் அன்றைய காலகட்டத்தில் அறிந்தவற்றை , புரிந்தவற்றைப் பற்றிச் சிந்திப்பதை குறிப்பேடுகளில் எழுதுவதென்பது எனக்கு மிகவும் பிடித்தமானதொரு செயல்.  அவ்விதம் எழுதிய குறிப்பேடுகளில் பல நாட்டுச்சூழலில் தொலைந்துவிட்டன. எஞ்சிய குறிப்பேடுகளை மீண்டும் வாசிக்கும்போது அவை அன்றைய காலகட்டச் சமூக, அரசியல் சூழல் என்மேல் ஏற்படுத்திய தாக்கங்களின் பிரதிபலிப்புகளாக விளங்கியதை அறியமுடியும். அவற்றை எந்தவித மாற்றமுமின்றிப் பதிவு செய்வது அவசியமென்று பட்டதன் விளைவாக, அக்குறிப்பேட்டுக் குறிப்புகள் சிலவற்றை பதிவுகள் இணைய இதழிலும், அண்மையில் முகநூலிலும் பதிவு செய்திருந்தேன். அவ்விதம் அண்மையில் முகநூலில் பதிவு செய்தவற்றை ஒரு பதிவுக்காக இம்முறை வாசிப்பும், யோசிப்பும் பகுதிக்காகப் பதிவிடுகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் இந்தக் குறிப்புகள் ஒருவிதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் இவை அன்றைய காலகட்டத்து என் உணர்வுகளை, சிந்தனைப் போக்குகளைப் பிரதிபலிப்பவை. ஒரு பதிவுக்காக இங்கே.

'வெளியில் அவர்கள்!' என்னுமிக் கவிதை. அன்றைய காலகட்டத்து உணர்வுகளைப் பிரதிபலிப்பது. இன்றைய காலகட்டத்து உணர்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வரலாறு ஒரு முறை பூரணமானதொரு சுழற்சியில் முடிந்து, தொடங்கியிருக்கிறதென்பது புரிகின்றது. 1982இல் எழுதப்பட்ட கவிதை. அன்று எழுதிய கவிதைகள் சிலவற்றை இளங்கவிஞர் ஒருவர் தொகுப்புக்காகக் கேட்டபோது கொடுத்திருந்தேன். ஆனால் அவர் அவற்றில் சிலவற்றைத் தனது கவிதைகளாக வெளியிட்டதாகப் பல வருடங்களின் பின் அறிந்தேன். அப்பொழுது நான் நாட்டிலில்லை. அவரைப் பற்றிப் பின்னர் நான் எதுவும் பெரிதாகக் கேள்விப்பட்டதில்லை. அவர் எழுதுவதாகவும் தெரியவில்லை. அவர் எந்தக் கவிதைகளைத் தனது தொகுப்பிலிட்டார் என்பதுவும் தெரியவில்லை.

குறிப்பேட்டிலிருந்து... வெளியில் அவர்கள்!  - வ.ந.கிரிதரன் -

இந்தக் குடிசையினின்றும் வெளியே
இறங்கிடவே யான் அஞ்சுகின்றேன். ஆம்! ஏனெனில்
இங்கு நான் பூரணமனிதனாக, பூரண மனிதனாகவே
இருப்பதனை உணர்கிறேன்.
இருப்பதையுண்டு, உறங்கிட முடிகின்றது.
இன்பமே! உந்தனன்பினில் குளித்திட முடிகின்றது.
இங்கு யாரிடத்துமென் தன்மானத்தினை நான்
இழந்திடத் தேவையில்லை.
கூனிக் குறுகி யார் கால்,கையையும் பற்றிக்
கும்பிடு போடுமொரு வாழ்வு இங்கில்லை.
உள்வைத்துப் புறம்பேசுமொரு
உழுத்த பழக்கத்திற்கு அவசியமேதுமில்லை.
ஆயின் அவர்கள் வெளியே நிற்கின்றார்கள்.
அவர்தம் வெடிமருந்து தோய்ந்திட்ட கைகளைப் போலவே,
இதயமும்... ஆம்! வெடிமருந்து தோய்ந்த நெஞ்சம் அவருடையது.
சிதைத்தல்! சீரழித்தல்! வதைத்தல்! அவர்தம் வாய்ப்பாடு
இதுவே.
அச்சமும், பேடிமையும், அடிமைச் சிறுமதியும் கவிந்த
புறவுலகோ,
பாவத்தின் சன்னிதியில் மாய்ந்து வேகும்; நோகும்.
தருமத்தின் சரித்திரத்தில் பொறுமைக்கும்
ஓரெல்லையுண்டு.
இனி ஒரு விதி செய்வோம். ஆம்! எந்நாளுமே
அதனைக் காத்திடப் போகின்றேன். அஞ்சிடப் போவதில்லை.
ஆமாம்! ஆமாம்! ஆமாம்!
இனி நானும் வெளியே இறங்கிடப் போகின்றேன்.
வெளியே இறங்கிடப் போகின்றேன்.
- 1982 -

குறிப்பேட்டுப் பதிவுகள் சில: தத்துவஞானம் பற்றியதொரு விசாரம் அல்லது ஆராய்வு!.

18.8.1982!

கருத்துமுதல்வாதமா, பொருள்முதல்வாதமா என்று மனிதர்கள் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கையில், விஞ்ஞானத்தின் வெற்றியும், மானிடரின் வளர்ச்சியும் பொருள்முதலவாதத்திற்கே ஆதரவாக நின்றன. பொருள் பிரபஞ்சத்தின் அடிப்படையென்று பொருள்முதல்வாதிகள் ஆதாரபூர்வமாக அல்லாவிடினும், பகுத்தறிவிற்கேற்ப அறுதியிட்டுக் கூறினர். இயல்பாகவே மூடநம்பிக்கைகளுடன் கூடிய மதமும், அதனைச் சார்ந்த கருத்துமுதல்வாதமும் அடிபட்டுப் போயிற்று. ஆனால் கருத்துமுதல்வாதம் , அறிந்தோர் மத்தியில் மட்டுமே அடிபட்டுப் போயிற்று என்பதனையும் நாம் மறந்து விடலாகாது. அறியாமையும், சுரண்டல் சமுதாய அமைப்பிலுள்ள குறுகிய நோக்குள்ள அறிவினைப் பெற்று சமூகத்தில் படித்த பெரிய மனிதர்களாக உலாவிவரும் அறிந்தோர் கருத்து முதல்வாதத்தினை அழிந்து விடாதபடி காத்து வைத்திருபோராவர். உண்மையில் மானுட சமுதாயம் முழுவதுமே பொருளாதாரரீதியிலான விடுதலையினைப் பெற்றபின்னரே, மானுட வர்க்கத்தின் பரிணாம வளர்ச்சிப் போக்கின் அடுத்த கட்டம் (மனரீதியிலானது) ஆரம்பமாகும்.

இதுவரை கால மானுட வர்க்கத்தின் சமுதாய அமைப்பின் பரிணாம வளர்ச்சிப் போக்கினை அவதானிப்போமாயின், ஆதி காலத்து மானுடர் அறியாமையில் வாழந்த காலகட்டத்தில், அவரது மனம் பூரணமாகத் தொழிற்பட ஆரம்பிக்காதவொரு காலகட்டத்தில் நிலவிய தாய்வழி மரபினையொட்டிய பொதுவுடமைச் சமுதாய அமைப்பு, பின்னர் உற்பத்திக் கருவிகளின் பரிணாமவளர்ச்சிப் போக்கிற்கேற்ப மாறுதலடைந்து வந்த ஆண்டான், அடிமை, அதாவது அடிமை-உடைமை சமுதாய அமைப்பு, நிலப்பிரபு-பண்ணையடிமை அல்லது நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு, அதன் பின்னர் உருவான முதலாளித்துவ சமுதாய அமைப்பு, நவீன முதலாளித்துவ சமுதாய அமைப்பு .... இப்படியாகப் பரிணாம வளர்ச்சிப் போக்கினைக் கொண்டுள்ள சமுதாய வரலாற்றுப் போக்கில் , அடுத்ததாக நிச்சயம இன்னுமொரு மாற்றம் நிச்சயம ஏற்பட்டே தீரும். இன்னுமொன்றையும் இச்சமுதாய அமைப்பின் வளர்ச்சிப் போக்கில் அவதானிக்கலாம். அதாவது, எண்ணற்ற வர்க்கங்களாகப் பிரிந்து கிடந்த மானுடவர்க்கத்தினை, இச்சமுதாய அமைப்பின் பரிணாம வளர்ச்சிப்போக்கு மேலும் மேலும் எளிய வர்க்கங்களாகப் பிரித்து, இறுதியில் முதலாளி, தொழிலாளி என்னுமிரு வர்க்கங்களை உள்ளடக்கியதொரு சமுதாய அமைப்பாக மாற்றி விட்டுள்ளது. இதற்கு அடுத்த படி நிச்சயமாக வர்க்கங்களேயற்றதொரு சமுதாய அமைப்பாகத்தானிருக்க முடியும். பொதுவுடமைச் சமுதாய அமைப்பு ஒன்றே அத்தகையதொரு அமைப்பாகவிருக்க முடியும். பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தின் மூலம் உருவாகும் அத்தகைய சமுதாய அமைப்பில் பொருள்முதல்வாதிகள் கூறுவதுபோல் இறுதியில் 'அரசு' என்னும் ஒன்றே இல்லாமல் போய்விடும். அது நிச்சயம். உண்மையில் 'அரசு' என்பதே இறுதியில் உதிர்ந்து உலர்ந்துதான் போய்விடும். ஆனால் அத்துடன் மானுடவர்க்கத்தின் சகல பிரச்சினைகளும் தீர்ந்து போய்விடுமா என்ன?

அதன்பிறகுதான் மானுட வர்க்கத்தின் சிந்தனைப் போக்கிலான பரிணாம வளர்ச்சிப் போக்கின் அடுத்தகட்டமான , அரவிந்தர் கூறும் 'உயர்நிலை மனம்' (Super Mind) உடைய 'உயர்நிலை மனிதர்களைக்' கொண்ட (Super Human) சமுதாய அமைப்பு உருவாகும். இதுவரை கால மானுட வர்க்கத்தின் வரலாற்றுப் போக்கில் , சமுதாயத்தில் மட்டுமல்ல, சகல ஜீவராசிகளிலும், சகல நிலைகளிலும், பிரபஞ்சம் முழுவதுமே பரிணாம வளர்ச்சிப்போக்கிற்காட்பட்டுத்தான் வந்துள்ளது. தத்துவஞானப் போக்கிலும் , ஆரம்பத்தில் மூட நம்பிக்கைகளுடன் கூடிய கருத்துமுதல்வாதமும், இறுதியில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப பொருள்முதல்வாதமும் மானுட வர்க்கத்தினை ஆட்கொண்டன.
ஆனால் 'உயர்நிலை மனம்', 'உயர்நிலை மனிதர்க'ளைக் கொண்ட 'அதிமானுட' வர்க்கத்துச் சமுதாய அமைப்பிற்குரிய தத்துவஞானம் எதுவாகவிருக்க முடியும்? நிச்சயம் பொருள்முதல்வாதம் மட்டுமாயிருக்க முடியாது. அதே சமயம் கருத்துமுதல்வாதமாக மட்டுமிருக்க முடியாது. இவற்றை இரண்டினையும் இணைத்த , இவற்றை மேலும் சுத்திகரித்ததொரு தத்துவஞானமாகத்தானிருக்க முடியும். மானுட வர்க்கத்தின் பரிணாம வளர்ச்சிப் போக்கு 'அதிமானுட' சமுதாய அமைப்புடன் நின்றுவிடுமா என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அப்படி நின்றுவிடாது அதன் அடுத்த படியினை , அதற்கடுத்த படியினையென்று... பரிணாம வளர்ச்சிப் போக்கும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். தற்போது மானிடருக்கு விளங்காமலிருக்கும், பிரபஞ்சம் பற்றிய உண்மைகளெல்லாம் அச்சமயத்தில் இலகுவாகத் தெரியவரும்.

இன்றைய மனிதர் 'விஞ்ஞானத்தால்' பிரபஞ்சத்தையே அளந்துவிட்டோம் என்பதுபோல் கொலம்பியா ஓடங்களில் கொக்கரிப்புடன் சேர்ந்து சிரிக்கின்றார். ஆனால் அவரால், கேவலம் இந்த விஞ்ஞானத்தால் 'அகவிடுதலைக்கு' எதையுமே ஆற்ற முடியவில்லை. ஆனால் விஞ்ஞானம் மானிடரின் அகத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளில் பூரணமாக இறங்குவதன்மூலம் , மானுட வர்க்கத்தின் 'அகவிடுதலைக்கு' உதவி செய்ய முடியும். ஆனால் நாம் வாழும் உலகில் காண்பதென்ன? இன்றைய மனிதர் ஆக்கத் துறைகளைவிட, பாதுகாப்பு, பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு அழிவுத்துறைகளுக்கே விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி வருகின்றார். அணுக்குண்டுகளும், நியூத்திரன் குண்டுகளும், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளும் மானுட வர்க்கத்திற்கே சவாலாயிருந்த போதிலும், நிச்சயம் மானுட வர்க்கத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சிக் கட்டமான 'அதிமானுட' சமுதாய அமைப்பு உருவாகியே தீரும். சூழ்நிலைகளும் அதற்கேற்ப உருவாகியே தீரும். -

29.11.1982!

.குறிப்பேட்டுப் பதிவுகள் சில: இயற்கையும் மனிதரும்!


11.8.1982

ஒரு காலம் இருந்தது. மானுட வர்க்கத்தின் தோற்றுவாயின் ஆரம்பகாலகட்டமது. ஆறுகள் பொங்கிப் பெருகிப் பாய்ந்தோடின; மரங்கள் தழைத்துச் செழித்துக் கிடந்தன; புட்கள் பாடிப் பறந்து திரிந்தன; இயற்கையின் அரவணைப்பில் காடுகளில், குகைகளில், சமவெளிகளிலென்று ஆதிமானுடர் அலைந்து திரிந்த சமயத்தில், அவரிடம் அறிவு வளர்ச்சியுற்றிருக்கவில்லை. பரிணாம வளர்ச்சிப் போக்கின் ஆரம்பக் கட்டமது. அவர் மனிதிலோ ஒருவித திகில். செயல்களுக்கு அர்த்தம் புரியாத நிலையில் ஒருவித பயம் அவர் மனதை மூடியிருந்தது. இயற்கையோடு இயற்கையாக , அதனோரங்கமாக வாழ்ந்துவந்த ஆதிமானுடர் வரலாற்றில் நிகழ்ந்திட்ட பரிணாமப் போக்கின் இன்றைய விளைவோ? இயற்கையின் குழந்தையான மனிதரை, நாகரிக மனிதரின் அறிவு வளர்ச்சி அவர் தாயிடமிருந்து பிரித்து விட்டது. ஆதிமானுடரிடமிருந்த அறியாமையை அகற்றவேண்டிய வரலாற்றின் இன்றைய வளர்ச்சிப் போக்கு, அவரது வாழ்முறைகளை இன்னுமொரு பிழையான நிலைமைக்கிட்டுச் சென்று விட்டதுபோல்தான் தெரிகின்றது. இன்றைய மனிதரின் போர்வெறிப் பூசல்கள் இவற்றையே உணர்த்தி நிற்பதாகப் படவில்லையா? இன்றைய இறுமாப்புமிக்க மனிதர் அறிவென்று கருதுவதெல்லாம், புதிய புதிய கண்டுபிடிப்புகளை வழங்கும் விஞ்ஞான அறிவினைத்தான். ஆனால் அவரது வாழ்க்கையைச் செப்பனிடக்கூடிய 'மனம்', அவரது 'மனம்' இன்னும் அந்தப் பழைய காட்டுமிராண்டிக் காலத்து மனிதரிடமிருந்து எவ்விதத்திலேனும் பரிணாமம் அடைந்ததாகத் தெரியவில்லை. நாள்தோறும் பத்திரிகைகள் பெரிதாகக் கக்கும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, போர்ப் பூசல்கள் எல்லாம் எதை உணர்த்தி நிற்கின்றன? இவற்றைத்தானல்லவா? ஒருவேளை இனித்தான் மனிதரது மனப் பரிணாம மாற்றம் நடைபெறுமோ? ஆனால் அதற்கிடையில் அவரது அறிவு வளர்ச்சியின் கடந்த காலப் பிழையான பரிணாமப் போக்கால் மனிதரே தமக்கிடையில் இதுவரை ஏற்படுத்திக் கொண்ட சமுக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண்பதற்கே இன்றைய மனிதரின் பரிணாமப் போக்கு ஒழுங்காக நடைபெற வேண்டியதன் அவசியம் அவசியமாகின்றது.

இயற்கைக்கும், இயற்கைவாழ் ஜீவராசிகளுக்குமிடையில் நிலவிவந்த ஒழுங்கான சமநிலையினை இன்றைய மனிதரின் ஆணவம் மிக்க அறிவு குலைத்து விட்டது. ஓங்கி வளர்ந்த பச்சைப் பசிய விருட்சங்களுக்குப் பதிலாக 'காங்ரீட்' காடுகளால் நிறைந்த மாநகரங்களையே காண்கிறோம். அங்கே புள்ளினங்களின் இன்ப கானங்களை நாம் கேட்கவில்லை. நாம் கேட்பதெல்லாம்,.. பார்ப்பதெல்லாம்... வானொலிகளின் அழுகுரல்களையும், தொலைக்காட்சிகளின் ஆரவாரங்களையும்தான். ஊர்வனவற்றின் ஆனந்தமான வாழ்க்கைக்கு இங்கு இடமேது? வாகனங்களின் பெருமூச்சுவிடுதலுடன் கூடிய ஊர்வலங்களையே காண முடிகிறது. தூய்மையான தென்றலென்று காவியங்கள் கூறலாம். ஆனால் இங்கு வீசும் தென்றலோ காபனோரொட்சைட்டு, கந்தவீரொட்சைட்டு போன்ற நச்சு வாயுக்களின் கலவையாகவன்றோவிருக்கிறது. போதாக் குறைக்கு சுயநிர்ணய உரிமை என்று பேசும் மானுடர் இறைச்சிக்காகக் கொன்று குவிக்கும் உயிரினங்களுக்கோ அளவில்லை. ஆமை, ஆடு, அணில், மாடு, மான், மரை, பாம்பு, தவளை,,,, இப்படி ஒன்றைக் கூட இந்தப் பாவி மனுசர் விட்டு வைப்பதில்லையே. மிருகங்களைப் பொறுத்தவரையில் சிந்தனையாற்றலற்றதனால் அவை ஒன்றையொன்று கொன்று தங்களைக் காத்துக் கொள்கின்றன. ஆனால் மானுடரோ.. ஆறறிவு பெற்ற அற்புதப் பிறவிகளென்று தம்மையே புள்காங்கிதத்துடன் வர்ணித்துக் கொள்கின்றார். இத்தகைய மனிதரும், மிருகங்களைப் போல் மற்றைய உயிர்களைக் கொன்று குவிப்பாரென்றால் இவருக்கும் அவற்றிற்குமிடையிலான வித்தியாசம்தானென்ன? மானுட விடுதலைக்காய் போராடும் மனிதர் சகலஜீவராசிகளினினதும் சுயநிர்ணய உரிமைகளையும் அங்கீகரிக்க வேண்டியவராகவன்றோயிருக்கின்றார். ஆனால் அவர் அதைச் செய்கின்றாரா என்ன?

இயற்கையாக உருவாகிய ஒவ்வொன்றுமே அதனதன் வாழ்நாள் முடிவுறும் வரையில் வாழுதற்குரிய சுயநிர்ணய உரிமையினை யாவருமே அங்கீகரிக்க வேண்டும். மனிதர் இயற்கையோடு இயற்கையாக , அதனோர் உறுப்பாகவொன்றி வாழவேண்டுமே தவிர, அதனைச் சிதைப்பதன்மூலம் 'காங்க்ரீட்' காடுகளை உருவாக்கி அதனோர் அங்கமாக வாழுவது அவருக்கு மட்டுமல்ல அவர் வாழும் இவ்வுலகிற்குமே ஏற்றதல்ல. இன்றைய மனிதரின் கட்டடக்கலையின் வளர்ச்சியில் இன்னுமொரு பரிணாமப் போக்கு எழவேண்டியதன் தேவை அவசியமாகின்றது. அவரது கட்டடங்களின் அடிப்படைத் தேவைகள் என்ன, எவை?

1. சூழலின் கோர விளைவுகளிலிருந்து அவரைக் காப்பது.
2. அவர் வசிப்பதற்கு.

இவற்றைப் பூர்த்தி செய்வதற்கு அவருக்குத் தேவையான கட்டடங்கள் இயற்கையோடொத்ததாக, எளிமையானதாக உருவாக்கப்படல் வேண்டும். இவற்றை அடைவதற்கு முன்னோடியாக மனிதர் அளவற்று இனப்பெருக்கம் செய்வது நிச்சயம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். எதற்கும் ஓரளவின் அவசியம் தேவையாகின்றது. 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்றொரு பழமொழி பேச்சு வழக்கிலுண்டு. இயற்கைக்கும், மனிதருக்குமிடையிலான தொடர்பு அறுந்து போகாதபடி செயலாற்ற வேண்டியது அதிமானுடத்தினை நோக்கி முன்னேறும் இன்றைய மனிதர் செய்ய வேண்டிய கடமையாகும்.

11.8.1982.



13.1.1983:
மனிதரும், இயற்கை, புற, அக உலகத்துடனான மோதல்கள் அல்லது ஆதிமனிதரிலிருந்து ...(ஒரு சிக்கலான பிரச்சினை பற்றிய கண்ணோட்டம்).
இன்றைய மனிதர் தம்மை அதிபெரும் மேதாவியென்றும் , நாகரிகத்தின் உச்சாணிக் கொப்பிலிருப்பவராகவும் மிகவும் பெரிதாகவே இயலும் போதெல்லாம தம்பட்டமடித்தும் பீற்றியும் கொள்கின்றார். கொலம்பியா விமானங்களிலேறி இப்பிரபஞ்சத்தையே சுற்றி வந்தவர் போல் கொக்கரித்துக் கொள்கின்றார். செயற்கையிருதயமென்ன, செயற்கை மனிதரையே உருவாக்கி விடுவோமென்பதுபோல் ஆர்ப்பரித்துக் கொள்கின்றார். இவையெல்லாம் மனிதரின் அறியாமையின் விளைவிலிருந்துருவான கர்வத்தின் வெளிப்பாடுகளே தவிர வேறல்ல. ஆதிமனிதர், குகைகளிலும், காடுகளிலும், அலைந்து திரிந்த ஆதிமனிதர், இயற்கையுடன் பெரிதும் போராடியே வாழவேண்டியிருந்தது. ஆசை, கோபம், பொறாமை முதலான குணங்கள் அறியாமையில் கிடந்த ஆதிமனிதரைப் பெரிதும் ஆட்கொண்டதன் விளைவாக ஈவு, இரக்கமற்ற முறையில் கொலைகள், மோதல்கள் வெடித்துச் சிதறின; இரத்தம் ஆறாகப் பெருகியோடியது. பெண்களே சமுதாயத்தின் முக்கிய உறுப்பினர்களாக இருந்த காலகட்டமது. பெண்களின் தலைமையிலேயே குழுக்கள், குழுக்களாக ஆதிமனிதக் குழுக்கள் வாழ்ந்து வந்தன. ஒவ்வொரு குழுக்களின் தலைவராகப் பெண்ணேயிருந்தாள். ஆண்கள் இனப்பெருக்கம் செய்வதற்கும், உணவு சேகரிப்பதற்குமே பயன்படுத்தப்பட்டார்கள். இயலாதவர்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.

காலம் உருண்டோட, உருண்டோட மனிதரது சிந்தையிலேற்பட்ட வளர்ச்சியின் விளைவாக இயற்கைக்கும், மனிதருக்குமிடையிலான மோதலிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. உண்மையில் முற்றாக ஒழிக்கப்படவில்லையென்றே கூறலாம். இன்னும் ஆறுகள் பெருகி ஊர்கள் நாசமாவதும், எரிமலைகள் பொங்கி உருகுவதும், சூறாவளிகள் உயிர்களைச் சுருட்டிச் செலவதும் சர்வசாதாரணமல்லவா. இயற்கையை வெற்றி கொள்ளத் தொடங்கிய மனிதரின் வாழ்நிலைகளிலும் மாற்றங்கள் பல உருவாகின. நாடோடிகளாகத் திரிந்தவர் நாடு, நகரங்களை உருவாக்கினார். உற்பத்திகளின் விளைவாக ஏற்றத்தாழ்வுகள் உருவாகின. ஏழை, பணக்காரர் என்று மனித சமுதாயம் பிரிவுபட்டதிலிருந்து இன்றைய முதலாளித்துவ சமுதாய அமைப்பு வரையிலான காலகட்டத்தில் மனித சமுதாயம் பலவிதமான சமுதாய அமைப்புகளைக் கண்டு கொண்டது. எவ்வாறு இத்தகைய அமைப்புகள் (அடிமை உடமைச் சமுதாய அமைப்பு, நிலப்பிரபுத்துவ அமைப்பு முதலியவை) நீங்கி முதலாளித்துவ அமைப்பு உருவானதோ அவ்வாறே காலவோட்டத்தில் இவ்வமைப்பு நீங்கி இதனிலும் மேலானதொரு அமைப்பு பொதுவுடமை வரும். ஆனால் மனிதரின் இதுவரை கால வரையிலான வரலாற்றினைப் பார்ப்போமாயின் ஒன்றினை வெகு தெளிவாகவே உணர்ந்து கொள்ளலாம். ஆதியில் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான பிரதானமான மோதல் நிலவியது. மனிதர் அச்சமயம் தமக்குள்ளும் மோதிக் கொண்டனர். ஆனால் இத்தகைய மோதல்கள் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான மோதல்களுடன் ஒப்பிடும்பொழுது மிகச்சிறிதளவாகவேயிருந்தன.

மாறாக, மனிதர் இயற்கையைப் பெரிதும் அடக்கிய காலகட்டத்திலிருந்து உருவான, இன்று வரையிலான காலகட்டத்தினை எடுத்துப் பார்ப்போமாயின் மனிதருக்கும் மனிதருக்குமிடையிலான மோதல்களுடன் ஒப்பிடும்பொழுது , மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான மோதல்கள் மிக்ச்சிறிதளவாகவேயிருப்பதைக் காணலாம். இந்த மோதல்களெல்லாம் மனிதர் மனிதருடன் தாமாக்வே ஏற்படுத்திக் கொண்ட மோதலகள். இந்த மோதல்களின் விளைவாக இக்காலகட்ட வரலாறு முழுவதுமே போர்களினாலும், இரத்தக் களரிகளினாலுமே நிரப்பப்பட்டிருப்பதைக் காணலாம்.

மண்,பெண், பொன் முதலான ஆசைகளின் விளைவாகவும், பொறாமை, கோபம் முதலான உணர்வுகளின் விளைவாகவும் உருவான பிரச்சினைகளே இன்றைய மனிதரின் சகல பிரச்சினைகளும். ஆக ஆரம்ப காலகட்டம் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான மோதல்களையே பிரதானமாகக் கொண்ட காலகட்டமானால், அதன்பிறகு தொடங்கிய இன்று வரையிலான காலகட்டமோ, மனிதருக்கும் , புற உலகுக்கும் (அதாவது மற்றைய மனிதர்கள், நாடுகள் முதலான புறவுலகம்) இடையிலான மோதல்களைக் குறித்திடும் காலகட்டமாகும்.

மனிதர் மட்டும் ஆசை, பொறாமை, கோபம் முதலான குணங்களை அறவேயொதுக்கித் தள்ளிவிடுவாரென்றால், மனிதரின் சகல பிரச்சினைகளுமே தீர்ந்த மாதிரித்தான். ஆனால் அப்படி இம்மனிதரால் வாழ்ந்திட முடியாமலிருக்கின்றதே. ஏன்? அதன் சரியான காரணம் இதுதான்: மனிதர் தம்மையே உணரத்தொடங்கினால் இப்பிரச்சினைகள் யாவுமே தீரும். தீர அவர் தம் மனதினை உணர்ந்திட அதன் சக்தியில் நம்பிக்கை வைத்திட வேண்டும். எதனையாவது நன்கு கிரகித்துக் கொள்ளவேண்டுமென்றால் அமைதியான சூழலை நாடுகிறோமே. ஏன்? தெளிந்த மனதில் விடயங்கள் மிக இலகுவாகவே பதிந்து விடுகின்றன. அதுபோல்தான் மனிதரும் தம்மைப் பற்றி, தமக்கும் பிரபஞ்சத்திற்குமிடையிலான தொடர்புகள் பற்றிச் சிந்தித்து உணர்ந்திட வேண்டுமென்றால், முதலில் அவர் புற உலகச் சூழ்நிலைகளின் கோரத்தாக்குதல்களிருந்து விடுபட வேண்டும். எவ்வாறு இயற்கையின் கோரத்தாக்குதல்களிலிருந்து விடுபட மனிதர் இயற்கையைப் பற்றி ஆராய்ந்திடத் தொடங்கினாரோ, அவ்வாறே இன்றைய மனிதரின் சகல பிரச்சினைகளுக்கும் காரணமான, அவரே உருவாக்கிய புறவுலகச் சூழ்நிலைகளின் தாக்குதல்களுக்கான காரணங்களை அறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். பசி, வறுமை, நோய், துன்பம் இவையல்லவா புறவுலகச் சூழலின் தாக்குதல்கள். இவற்றை நீக்கிட வேண்டுமானால், இவை உருவாகுவதன் காரணங்களை அறிந்திட வேண்டும். இவையனைத்திற்கும் காரணம் ஒரு சிலரிடம் அபரிமிதமானச் செல்வம் குவிந்திடுவதை அனுமதிக்கிற , அதாவது 'தனியுடமை' அமைப்பல்லவா காரணம். ஆக மனிதர் முதலில் செய்யவேண்டியது இத்தகைய அமைப்பினை உடைத்தெறிவதுதான். கார்ல்மார்க்ஸ் கூறுவதுபோல் பொதுவுடமை அமைப்பினை உருவாக்கிவிடுவதுதான்.

சரி இப்பொழுது இப்படியொரு கேள்வி எழலாம்? 'சரி பொதுவுடமை உலகம் முழுவதும் பரவியபின் என்ன நடக்கும்?'. விடை இதுதான்: அத்தகையதொரு நிலையில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனனுமொரு நிலை உருவாகும். மனிதர் தமது புற உலகப் பிரச்சினைகளிலிருந்து பெரிதும் விடுபடுமொரு சூழல் உதயமாகும். அந்நிலையில் மனிதர் தம்மையே , தம் மனதினையே அறிந்து கொளவதற்குப் பெரிதும் நேரம் கிடைக்கும். சகல பிரச்சினைகளிற்கும் காரணங்களான ஆசை, கோபம், பொறாமை முதலானவற்றினை நிரந்தரமாக உதறித்தள்ளிடக் கூடியதொரு நிலை உதயமாகும். இன்றைய மனிதரிற்கு இவ்வுண்மை தெரிந்தபோதும், அவர் நிரந்தரமாகவே , தூயவராக வாழுதற்கு அவர் சார்ந்திருக்கும் புறச்சூழல் விடுவதில்லை. ஆக, இயற்கைகளுடனான மோதல்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்ட மனிதரின் , அவரே உருவாக்கிய புறச்சூழலுடனான மோதல்கள் முற்றுபெற்றதும், அவருள்ளமைந்துள்ள அகவுலகுடனான மோதல்கள் ஆரம்பமாகும். அதன் வெற்றியிலேயே 'பிரபஞ்சத்தின் புதிர்' தங்கியுள்ளது. காலவோட்டம் நிச்சயமாகவே இதனைச சாதித்து வைத்திடும்.
13.1.1983

23.2.1983இல் எழுதிய இன்னுமொரு கவிதை குறிப்பேட்டிலிருந்து ஒரு பதிவுக்காக இங்கே.

விளக்கு!  - வ.ந.கிரிதரன் -
காலக்கடலின் குமிழியென அர்த்தமற்ற
குறுவாழ்வில்
அவலங்களே அனர்த்தங்களாயவிந்திட
அர்த்தமற்றதொரு வாழ்வு.
... 'பொய்மையின் நிழல்படர்ந்து'
புழுங்குமுலகிலெல்லாமே நாசம்;
படுநாசம்; அழிவு; அழிவுதான்.
காரணமற்ற வாழ்வின் காரணம்தான்
யாதோ?
வெளியே, வெற்றிடமே, விரிகதிரே!
விடை பகின்றிடாயோ?
விடை பகின்றிடாயோ?
சலிப்பின் அலைக்கழிப்பில்
நலிந்திட்ட வுலகில்
வழிந்திடும் சோகங்களென்றுமே
தெளிந்திடாவோ?
அண்டச் சுடர்களே! அண்ரமீடாக்களே!
புதிரை அவிழ்ப்பீரோ? அன்றி,
முதிர வழி சமைப்பீரோ? கூறுவீர்.
நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்
நானென்றால் சிரிக்காதீர்.
திக்குத் திசையோ புரியவில்லை.
திணறலினில் மூச்சு முட்டித்
தடுமாறினேனே.
என்றாலுமொரு விளக்கமெங்கோ
ஒளிந்துதானுள்ளது.
விளக்கிடுவேன்; விளக்கிடுவேன்; அவ்
விளக்கின் ஒளிதனிலே
வழிதனைக் கண்டிடுவேன்; அவ்
வழிதனைக் கண்டிடுவேன்.

23.2.1983

குறிப்பேட்டுப் பதிவுகள் - களத்தில் குதித்திடு!  - வ.ந.கிரிதரன் -

என்று உன்னால் உனது சொந்த மண்ணிலேயே
தலை நிமிர்ந்து நிற்க முடியாமல் ஆகின்றதோ,
என்று உன்னால் சுதந்திரமாக உன் கருத்துகளை
எடுத்துரைக்க முடியாமற் போகின்றதோ,
உனது சோதரர்களின் உயிர்களுக்கு
உத்தரவாதம் என்று இல்லாதொழிந்து போகின்றதோ,
என்று என் தோழனே! பெண்மை கொத்தி
எகிறிடப் படுகின்றதோ,
என்று உனது சுயகெளரவம் சிதைக்கப்பட்டு
எரிக்கப்பட்டு கசக்கப்படுகிறதோ,
என்று உனது தாயின் கண்ணீரிற்கு
உன்னால் பதிலுரை பகரமுடியவில்லையோ,
என்று சுதந்திரமாக மூச்சு மூச்சுவிடுவதுகூட
மறுக்கப்பட்டு விடுகின்றதோ,
என்று உன் பிஞ்சுகளின் கொஞ்சல்களை இரசிக்கமுடியாது
உன்னால் ஆகிவிடுகின்றதோ,
என்று உன்னைச் சுற்றிலும் துப்பாக்கிகளின் புகையால்
அவலங்கள் பரவிடத் தொடங்கிடுதோ,
என்று உன்னைச் சுற்றிலும் அச்சம், அவலம், சோகம், சாவு
ஆகியன வலை பின்னத் தொடங்குகின்றனவோ,
என்று உன்னைச் சுற்றிலும் போராட்டமும், குமுறலும், விரக்தியுமே
வாழ்வென்றாகி விடுகின்றனவோ,
என்று உன்னைச் சுற்றிலும் , ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும்,
ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு கணத்தின்
ஒவ்வொரு துளியுமே..
வாழ்வே ஒரு கேள்வியாக, உயிர்ப் போர்முனையாக,
உருவாகி விடுகின்றதோ, அன்று , ஆமாம் அன்று,
நீ உனது போர்ப்பிரகடனத்தைத்
தொடங்கிவிடு!
சுதந்திரக் காற்றினைத் தரிசிப்பதற்கான
தர்மத்திற்கான உன் போர் முரசத்தினைக் கொட்டிடு.
கோழைத்தனத்தினக் குதறியெறிந்துவிட்டுக்
களத்தே குதித்திடு.
அன்று , உன்னை, இப்பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு துளியும,
ஒவ்வொரு எழிற்பட்சியும்,
மெல்லிய பூந்தென்றலும், நிலமடந்தையும்,
எழில் வானும், நட்சத்திரங்களும், கோள்களும்,
இளங்காலைப் பனியினொவ்வொரு துளியும்,
இளம்பரிதியினொவ்வொரு கதிரும்,
விருட்சத்தினொவ்வோரிலையும்,
வாழ்த்தி வழியனுப்பிடும். ஆம்!
வாழ்த்தி வழியனுப்பிடும். ஆம்!
வாழ்த்தி வழியனுப்பிடும்!
- 14-11-1982.

 'சமர்ப்பணம்.' என்னும் பெயரில் 9-06-1983.இல் எழுதப்பட்ட இன்னுமொரு கவிதையிது. இதுவும் எனது குறிப்பேட்டிலிருந்து.

சமர்ப்பணம்...  - வ.ந.கிரிதரன் -

மீண்டும் இலங்கை பற்றியெரிகின்றது.
தூய மிருதுவான நெஞ்சங்களைச்
சிதைப்பதில்,
மீண்டும் நொந்த உள்ளங்களின்
... மரண ஓலங்கள்.. பிலாக்கணங்கள்...
சோகநிழல்கள்...
சிதறிய பாதைகளில்
வாழ்வேயொரு கேள்விக்குறியாக....
அவமானம், அச்சம், வேதனை, சோகம்
அடியே! புரிகிறதாடீ! உன்னவர்
இங்கு புரியும் கூத்து.
என்ன செய்தாரிவர்? எடியே!
ஏன் மெளனித்து விட்டாய்? உன்னைத்தான்.
உன்னைத்தானடி!
மீண்டும், மீண்டும்.. முடிந்த கதை
தொடர்ந்த கதையாய்...
பென்சீன் வளையமாய்... அடியே!
இங்கு நடக்குமிந்தக் கூத்து..
இதற்கொரு முடிவு?
அன்பே! எனக்குப் பாலஸ்த்தீனத்துக்
கவிஞனொருவனின்
சொற்கள்தான் ஞாபகத்தில் வருகின்றன:
"கோழிக்குஞ்சுக்குக் கோதும்,
முயலிற்கு வளையும் உண்டு.
ஆயின் பாலஸ்த்தீனியனுக்கோ...?"
அன்பே! புரிகின்றதா?
'எலி வளையானாலும் தனிவளை'.
ஆமாம். அது இல்லாததுதான்.

9-06-1983.

'சமர்ப்பணமொன்று..' 30-05-1983இல் எழுதிய கவிதை. எனது குறிப்பேட்டிலிருந்து இங்கே ஒரு பதிவுக்காக,.

சமர்ப்பணமொன்று........  - வ.ந.கிரிதரன் -
இந்தச் சொல் மாலையை நானுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
ஏனெனில் என்னால் தற்சமயம் மட்டுமல்ல
இப்பிறவியிலேயே செய்யக் கூடியது இது ஒன்றுதான்.
சிலவற்றைச் சோல்லாமலிருக்க முடிவதில்லை.
... இதுவும் அப்படிப்பட்டதொன்றுதான். இதயத்தின்
கோடியினில் கொலுவாக்கிடவேண்டிய நினைவு;.
உறவு.
உந்தன் சின்னஞ்சிறிய ஆனால் எளிய, இனிமையான
அதிகாலையையொத்த உலகில் பாடல்களை, வசந்தங்களை,
அருவிகளை, நீரூற்றுகளை,
நீ வார்த்தைகளால் சொல்லிவிடவேண்டிய தேவையென்ற
ஒன்று இங்கிருந்ததில்லை.
உனது அந்தக் கணகள் எல்லாவற்றையுமே எனக்குக்
கூறிவிட்டன.
வாழ்வின் அர்த்தங்களைப் புரியாததொரு பொழுதினில்
நீயாகவே இந்தச் சிறைக்குள் வந்து சிக்குண்டது
உனக்கே தெரியும்.
அர்த்தங்களைப் புரிந்த நிலையில்.. இன்றோ
விடுபட முடியாததொரு நிலை. அது
உனக்கும் புரியும். எனக்கும் தெரிகின்றது.
நான் வேண்டக் கூடியதெல்லாம் இது ஒன்றுதான்:
உன் இரக்கமிக்க நெஞ்சினில் அமைதி நிறையட்டும்.
வீதியினில் நீ எழிலெனப் படர்கையில்
கூடவே ஒரு சோகமும் படர்வதை
என்னால் அறிய முடிகின்றது.
எனக்கே புரியாமல், திடீரென உன்னாலெங்ஙனம்
நுழைந்திட முடிந்தது? நெஞ்சினில்தான்.
கள்ளமற்ற, வெள்ளைச் சிரிப்பில்
பரவிக் கிடக்கும் அந்த இனிமை...
அதன்பின்னே தெரியுமந்த அழுத்தம்...
அபூர்வமாக மலரும் சில மலர்களில்
நீயும் ஒன்றென்பதை அவையே உணர்த்தும்.
அன்று ஒயிலாகச் செல்கையில் , ஓரக்கண்ணால்
சிறைப்பிடித்துச் சென்றாயே. அந்தப் பார்வையை.
நான் உனக்குச் சொல்வதெல்லாம்,
சொல்ல முடிந்ததெல்லாம் இதனைத்தான்.
அந்தப் பார்வையைத் தப்பியோடிட ஒருபோதுமே
விட்டிடாதே. உந்தன் இதயத்தில்
ஆழ்ந்த அறையொன்றின் ஆழத்தே கொண்டுபோய்ச்
சிறை வைத்திடு.
ஏனெனில் சோகமுகிலகள் படர்கையில்,
பாதையில் இருட்டு செறிகையில்,
வாழ்வே ஒரு கேள்விக் குறியாகி,
இதயம் இரணமாகிச் செல்கையில்
அன்பே!
உன்னிதயத்தின் உற்றதோழனாக, தோழியாக
இருக்கப் போவது அது ஒன்றேதான்.
அதனால்தான் சொல்கிறேன். உன்னிதயத்தின்
ஆழத்தே அந்தப் பார்வைத் துண்டத்தைச்
சிறைப்பிடித்து வைத்திடு.
பாலைகளின் பசுமையென,
கோடைகளில் வசந்தமென,
அன்பே! உன் வாழ்வில், நெஞ்சிற்கு
இதமான ஸ்பரிசத்தைத் தந்திடப்
போவது அது ஒன்றுதான்.
உனக்காக என்னால்
வானத்தை வில்லாக வளைக்கவோ அல்ல்து
பூமியைப் பந்தாகவோ மாற்றமுடியாது.
ஆனால் அந்த உனது ஏங்குமிதயத்தின்
துடிப்பலைகளை இனங்கண்டிட முடியும்.
அவற்றை நெஞ்சினொரு கோடியில் வைத்து
அபிஷேகம் செயதிட முடியும்.
புரிகிறதாடீ! புரிந்தால் கவலையை விடு.
உன் பாதையில் இன்பப் பூக்கள்
பூத்துச் சொரிவதாக.

30-05-1983

ருஷ்யக் கவிஞர் புஷ்கினின் காதல் கவிதையொன்று. -  தமிழில்: வ.ந.கிரிதரன் -

ருஷ்யக் கவிஞரான புஷ்கினின் கவிதையொன்றின் மொழிபெயர்ப்பிது. எனது குறிப்பேட்டிலிருந்து. இக்கவிதையின் தலைப்பினை எழுத மறந்து விட்டேன். தேடித்தான் பார்க்க வேண்டும். மூலக் கவிதையின் ஆங்கில வடிவம் என்னிடம் இல்லாததால் இந்தக் கவிதையின் மொழிபெயர்ப்பு பற்றி எதுவும் கூறுவதற்கில்லை. மூலம் கிடைத்தால் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இம்மொழிபெயர்ப்பு எழுதப்பட்ட நாள்: 29 ஜூன் 1983. இருந்தாலும் ஒரு பதிவுக்காக இங்கே.

- இடையிலொரு மொழிபெயர்ப்புக் காதற் கவிதையொன்று. புஷ்கினின்
கவிதையினை இயன்றவரை மொழிபெயர்த்திருக்கிறேன். -

நான் உன்னைக் காதலித்தேன். அழிவதற்கு மறுக்கும்
அந்தக் காதல்... இன்னமும் இருக்கக் கூடும்.
யாரறிவார்? இவன் நெஞ்சினில் எரிந்து கொண்டிருக்கக்
கூடும்.
பிரார்த்தி! வருத்தமடையாதே!
என்னை நம்பு! என்னுடைய தெரிவின் மூலம்
நான் ஒரு போதுமே உன்னை
பிரச்சினையிலாழ்த்தியதில்லை.
இன்னமும் அந்த மிருதுவான அன்பு
மிகுந்த ஆர்வத்துடன்
இங்கே தகதகத்துக் கொண்டுதானுள்ளது.
என்னுடைய காதல் சுயநயலமானது. ஆயினும்
கட்டுப்படுத்த முடியாதது.
சொர்க்கம் உனக்கு இன்னுமொரு காதலைத் தரட்டும்.

- 29 யூன் 1983

 மனப்பெண்ணே!  - வ.ந.கிரிதரன் -

அன்று எழுதிய கவிதைகளிலொன்று. குறிப்பேட்டிலிருந்து/

ஜூன் 6, 1983

என்ன ஆயிற்றாம்? உன்னைத்தான் கேட்கின்றேனடீ!
என்னவாயிற்றாம்? அட உன்னைத்தானென் மனப்பெண்ணே!
... உனக்கென்னவாயிற்றாம்? உரைப்பாயெனிலது நன்றன்றோ!
தாவித் தாவிக் குதியாட்டம் போட்டிருந்தவுன்னாலெங்ஙனம்
வாடிக் கிடந்திட முடிந்ததோ?
வனிதையே! விளம்புவையே!
போராட்டங்களிற்குள் புத்தெழுச்சி பெற்றனையே! பின்னேன்
பதுங்கி மாய்ந்து கிடக்கின்றனை.
பாய்ந்தெழு! பாய்ந்தெழு! பாய்ந்தெழு! அட,
பாய்ந்தெழத்தான் மாட்டாயோ பைங்கிளியே!
தோல்விகள் செறிந்திட்ட போதெல்லாம்
தோள்கொட்டி எழுந்து எழுந்து நின்றனையே!
சிரித்தனையே! ஆயின், வெட்டுண்ட விருட்சமென
வீழ்ந்து கிடப்பதுவும்தான் முறையாமோ?
விருட்டெனப் பொங்கியெழத்தான் முடியாதோ?
அட, உன்னைத்தானென் ஆருயிர் மனமே!
உன்னைத்தான்.
வாழுமிச் சிறுவாழ்விலுமுனைத்
தாழ்த்துவதுதானெதுவுமுண்டோ?
உண்டோ? உண்டோ? சொல் மனமே!
பிரபஞ்சச் சுழல்களிற்குள்
உரமற்று உளைவதாலென்ன பயனோ?
உளைவதாலென்ன பயனோ? பயனோ? பயனோ

ngiri2704@rogers.com

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்