Sunday, June 30, 2019

அஞ்சலி: எழுத்தாளர் திருமலை ஷகி மறைவு.


எழுத்தாளர் திருமலை எம்.ஏ.ஷகியின் மரணச்செய்தியை முகநூல் வாயிலாக அறிந்தேன். கொடுநோயில் வாடி உதிர்ந்திருக்கின்றார். அண்மையில்தான் என் நட்பு வட்டத்தில் இணைந்திருந்ததால் அதிகம் இவரது கவிதைகளை வாசிக்கவில்லை. ஆனால் இவர் பங்கு பற்றும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை அவ்வப்போது பார்த்திருக்கின்றேன். பலரும் இவரது கவிதைகளை இவரது மறைவையொட்டி முகநூலில் பகிர்ந்துள்ளார்கள். இருப்பின் நிலையாமை பற்றி பல கவிதைகளை எழுதியிருப்பதை அறிய முடிகின்றது. கவிதைகளுக்கான இவரது செறிவான மொழி இவரது கவித்திறனை வெளிப்படுத்துகின்றது. இவரது இளவயது மறைவு துயர் தருவது. மின்னலைப்போல் ஒளி வீசி மறைந்திட்ட இலக்கிய ஆளுமைகள் வரிசையில் திருமலை ஷகியும் இணைந்துவிட்டார். இவர் தன் எழுத்துகளூடு இனியும் கலை, இலக்கியப் பரப்பில் நிலைத்து நிற்பார். இவரது இழப்பால் துயருறும் அனைவர்தம் துயரிலும் பங்குகொள்கின்றேன்.

அவர் நினைவாக அவரது கவிதையொன்று:

" கடக்கமுடியாத இந்த அரிதான பெருநீர்ப்பரப்பை ஒரு போதுமே நினைவுகளாலும் கடந்து அப்பாலுற முடிவதில்லை என்னால்
அதன் ஆழம் , விரிந்த பரப்பு ,
நீரோட்டம் ,கொந்தளிப்பு ,
எழும் அலை , உவர் நீர் மழை தரும்
விந்தைகள்
மேற்பரப்பில் நீலம் பச்சை என நிறங்கள் அப்பிக்கிடக்கும் அழகு
பற்றிய சிந்தனைகள்
என்னை சூழ்ந்து விடும்போது
மழலையின் இனிமைக்குள்
லயித்து வெளியேறமறுக்கும் ஒரு பிள்ளைப்பேறற்றவளின் மனதின் ஏக்கத்தையே
பெருங்கடலின் சிறு நீர்ப்பரப்பும் தந்து அணிமைப்படுகிறது என்னுள்
ஆகாயத்தை அண்ணார்ந்து பார்க்கும்போது உண்டாகும் ஏகாந்த மன நிலையை ஒத்ததல்ல இது
முற்றிலும் மாறுபட்டடது .
சுண்ணாம்பு பூச்சால் மெழுகியது போல் எதுவுமே அறியாத அப்பிராணியின் உறக்க சாயலுடன் அலைகளடங்க சலனங்களற்று அமைதியாக கிடத்தப்பட்டிருக்கும்
நீர்வெளியைக் காணும்போதோ ,
அதனருகில் பயணிக்கும் போதோ ,
கால் நனைத்து நிற்கும் போதோ,
கடல் காற்று தீண்டும் போதோ...
மனித காலடி பதிக்க முடியாத ,
சூரிய ஔியாலும் ஊடுருவ முடியாத , அதிக அமுக்கம் அடர்ந்த
குளிர் நிறைந்த ஒன்றன் மேலொன்றாக அலைகளால் மூடப்பட்டிருக்கும் கடலின் அடித்தளத்தில் சூழ்ந்திருக்கும் கருமையை நோக்கியே
என் எண்ணங்கள் பயணித்திருக்கும்
கரையின் சுறறு்ச்சூழலை மறந்து சென்று விட்ட மனதை இலகுவில் மீட்க முடியாமல் ஒன்றித்து நின்ற பொழுதுகள்தான் அதிகம்
தனித்து விடப்பட்டு தவித்த குழந்தை தாயைக்கண்டதும் ஓடிவந்து அணைத்து ஆறுதலடைவது போலவே இந்தக்கடலடித்தளத்துக்குள் விரைந்து விடக்கூடாதா
நானும் ? இது தீராத ஏக்கமாகவே வளர்ந்து வருவதை ஏனென்று சொல்லத்தெரியவில்லை
கடலுக்கப்பாலிருந்து சொல்லப்பட்டு கடல் பயணங்களில் வளர்ந்து
கடல் ஊடறுத்ததாலேயே முடிந்து போன காதலும்
கடலலையோடே உறவாடி
கடலிலேயே உயிர் துறந்த உடன்பிறப்பும்... நெஞ்சுக்குள்
கடலை நிறுத்தி அலை முழுக வைத்த சம்பவங்கள்தான் ..
எனினும்
கடலை அன்னையாகவே நினைக்கிறது உள்ளம்
அன்னையின் மடிச்சேலையில்
தலை சாய்ந்து உலகை மறக்கும்
தனித்த மனதில் மேவிக்கொள்ளும் அமைதியை இதே கடலை பார்த்திருக்கும் பொழுதுகளில் அடைந்து கொள்கிறது அலைக்கழியும் மனதும் .
புவியின் பெரும்பகுதியை உவர்நீரால் ஆட்கொண்ட இப்புவித்தளத்தை பூமி என்பதை விட கடல் என்றே பெயர் சூட்டியிருக்கலாம் என்று ஆதங்கம்
எனக்குள் எழும்
நான் கடலின் காதலி
கடலலையில் மிதப்பதற்கல்ல
என்னுடல் ...
படைப்பின்
பெரும் பகுதியை தன்னுள் அடக்கி
மலைகள்
கனவாய்கள்
குகைகள்
பள்ளத்தாக்குகள்
சுரங்கங்கள்
என பல மர்மப்பிரதேசங்களைக் கொண்ட அதிபயங்கரப்பெரும் இருள் சூழ்ந்த கடலினடித்தளத்தில் சமாதியாகிடத்துடிக்கும்
கடல்காதல் , காதல் கடல் என்னுடையது"

No comments:

வ.ந.கிரிதரன் பாடல் - காலவெளிக் குழந்தைகள் நாம்

இசை & குரல்: AI SUNO | ஓவியம் : AI காலவெளிக் குழந்தைகள் நாம் விரிந்து கிடக்கிறது பேர் அண்டம். புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன். இரு...

பிரபலமான பதிவுகள்