Wednesday, June 5, 2019

திரைப்பட இயக்குநர் 'புதியவன் ராசையா'வுடனோர் அந்திப் பொழுது!

இன்று மாலை (ஜூன் 4, 2019) ஸ்கார்பரோவில் மார்க்கம் & மக்னிகல் பகுதியில் 2901 மார்க்கம் றோட் என்னும் முகவரியில் அமைந்துள்ள , நட்பான பணியாளர்களைக் கொண்ட 'தோசா ராமா' உணவகத்தில் நண்பர் எல்லாளனுடன் ('ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' நூலாசிரியர்) திரைப்பட இயக்குநர் புதியவன் ராசையாவைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தனது திரைப்படங்கள் மூலம் நன்கு அறியப்பட்டவரான புதியவன் ராசையா அவர்கள் தற்போது அவரது திரைப்படமான 'ஒற்றைப் பனைமரம்' திரைப்படத்தினைக் கனடாவில் திரையிடுவதற்காகத் தற்சமயம் கனடாவுக்கு வருகை தந்துள்ளார். ஏற்கனவே இவர் 'மாற்று' (2001), 'கனவுகள் நிஜமானால்' (2003), 'மண்' (2005) & 'யாவும் வசப்ப்டும்' (2015) ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை RSSS என்னும் தமிழக நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்.  படத்துக்கு இசையமைத்துள்ளவர் அண்டாவக் காணோம், காஞ்சனா, சதுரங்க வேட்டை 2 போன்ற பல படங்களில் பணியாற்றிய அஷ்வமித்ரா. படத்தின் ஒளிப்பதிவாளர் இலங்கையைச் சேர்ந்த மகிந்த அபேசிங்க. இவர் சர்வதேச விருது பெற ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தைத் தொகுத்திருப்பவர் சுரேஷ் அர்ஸ். இத்திரைப்படத்தின் முக்கிய பாத்திரங்களில் புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன் மற்றும் தனுவன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 37 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் தேர்வாகி, இசை, ஒளிப்பதிவு , சிறந்த நடிப்பு போன்றவற்றுக்காக விருதுகளைப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜூன் 9, 2019 அன்று 5637 ஃபிஞ்ச் அவென்யூ ஈஸ்ட் , யுனிட் 1 என்னும் முகவரியில் காலை மணி பதினொன்றுக்கு இத்திரைப்படம் திரையிடப்படவுள்ளது. கட்டண விபரங்கள்: கடைசி வரிசை 20 & முதல் வரிசை 50 & 100. மேலதிக விபரங்களுக்கு 416.834.6618 / 437.241.9526 என்னும் தொலைபேசி இலக்கங்களில் தொடர்புகொள்ளுங்கள். இத்திரைப்படம் 14.06.2019 அன்றும் 'டொராண்டோ'வில் மீளத்திரையிடப்படவுள்ளதாகவும் அறிகின்றேன்.

புதியவன் ராசையா பற்றி அறிந்திருந்தாலும் அவரைச் சந்திப்பது இதுவே முதற் தடவை. சிலருடனான முதற் சந்திப்பு நன்கு அறிமுகமான ஒருவருடனான சந்திப்பைப்போன்று அமைந்துவிடுவதுண்டு. புதியவன் ராசையாவுடனான சந்திப்பும் அத்தகையது. புதியவன் புதியவராகத் தெரியவில்லை. நன்கு அறிமுகமான பழையவர் ஒருவரைப்போன்றே தென்பட்டார். எடுத்த எடுப்பிலேயே மிகவும் இயல்பாக உரையாடத்தொடங்கினார். சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளை , தேர்வுகளை, பரிந்துரைகளைப்பெற்ற திரைப்படமான 'ஒற்றைப்பனைமரம்' திரைப்படத்தின் , இயக்குநரான புதியவன் ராசையாவின் எளிமையான பண்பு என்னைக் கவர்ந்தது. சந்திப்பின் நேரம் குறுகியதாகவிருந்தபோதும் அவரைப்பற்றி, அவரது ஆளுமையைப்பற்றி நன்கு அறியக்கூடியதாக அவருடனான உரையாடல் அமைந்திருந்ததில் மகிழ்ச்சியே. உரையாடல் பல்வேறு விடயங்களைத் தொட்டுச் சென்றது. அவரது ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து இன்று வரையிலான அவரது அனுபவங்கள் பலவற்றை அறிய அவ்வுரையாடல் மிகவும் உதவியது என்றே கூறுவேன். ஏற்கனவே 'மண்' என்னும் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது பெற்ற இயக்குநர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாங்கிய தத்துவம் பற்றியும் அதன் அடிப்படையான அம்சம் பற்றியும் அவர் உரையாடியது அவரது பன்முகப்பட்ட அறிவினை வெளிப்படுத்தியது.

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜன் குளம் பகுதியைச் சேர்ந்தவரான புதியவன் ராசையா இலண்டனுக்குப் புலம் பெயர்ந்தபின்னர் ஆரம்பத்தில் இளநிலைப்பட்டப்படிப்பைக் கணக்கியல் ஆகிய துறையில் கற்றுப் பட்டயக் கணக்காளராகப் பணியாற்றியவர். பின்னர் கிங்க்ஸ்டன் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். இலண்டன் திரைப்படக் கல்லூரியில் முதுகலையில் சினிமாத்துறையை மையமாக வைத்துப்பட்டம் பெற்றவர். ஆரம்பத்தில் 'ஈழபூமி' என்னுமொரு பத்திரிகையை வெளியிட்டுள்ளார். பின்னர் பொருளியல் நிலை காரணமாக அதனை அவரால் தொடர்ந்து வெளியிட முடியவில்லை. அச்சமயத்திலேயே அவர் தன் கருத்துகளை வெளியிடச் சினிமாத்துறையே சிறந்த ஊடகமென்னும் முடிவுக்கு வந்துள்ளார்.

திரைப்படங்களுக்கு நடிகர்களை எவ்விதம் தயார் படுத்துகின்றீர்கள் என்று கேட்டபோது அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்களுக்கு நடிப்புத்துறையில் இரு வார பயிற்சி கொடுக்கின்றோம். அதனை அவரே செய்வதாகக் குறிப்பிட்டார். உதாரணமாகக் கமராவை எவ்விதம் நடிகர்கள் நடிப்பின் பல்வேறு கட்டங்களிலும் பார்க்க வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளும் அப்பயிற்சியில் கொடுக்கப்படுவதாகக் கூறினார். மேலும் திரைப்படத்துறையின் மீதான ஈர்ப்பு காரணமாகவே தான் முதுகலைப் பட்டப்படிப்பினை இத்துறையில் கற்றதாகவும் கூறினார்.

என் பால்ய காலம் வவுனியாவிலே கழிந்ததாலும், அவரது இளமைப்பருவம் அங்கு கழிந்ததாலும் வன்னி மண் பற்றிய பல்வேறு விடயங்கள் சம்பந்தமாகவும் உரையாடிக்கொண்டோம். மேலும் இந்தியத்தத்துவ மரபு பற்றிய விடயத்திலிருந்து கேரளாவின் 'படகு வீடு' உல்லாசச்சவாரி வரை பல்வேறு விடயங்களையும் பகிர்ந்துகொண்டார்.


சமுதாயப்பிரக்ஞை மிக்க ஒருவராகவே இவருடனான உரையாடல் எனக்கு இவரை வெளிப்படுத்தியது. அதன் காரணமாகவே இவரால் 'ஈழபூமி' என்றொரு பத்திரிகையை வெளியிடவும், தற்போது வருடத்துக்கொரு தமிழ்த்திரைப்படமொன்றினையும் உருவாக்க முடிகின்றது. இதன் காரணமாகவே எண்பதுகளில் இலங்கையில் நிலவிய அரசியற் சூழல் காரணமாகப் போராடப் பொங்கியெழுந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவராகவும் இவரிருந்திருக்கின்றார்.அதன் காரணமாக நான்காம் மாடி, வெலிக்கடை, தங்காலை மற்றும் பூசா முகாம்களில் இவரது சிறை வாசம் கழிந்திருக்கின்றது. தற்போதுகூட இவர் உருவாக்கும் திரைப்படங்களில் நாட்டின் சமூக , அரசியற் பிரச்சினைகளே மையக்கருக்களாகவிருக்கும். 'ஒற்றைப்பனைமரம்' கூட புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த விதவைப்பெண் ஒருத்தி, மாற்றியக்க முன்னாட் போராளி மற்றும் முஸ்லீம் பெண் ஒருவர் ஆகியோரை பிரதான பாத்திரங்களகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

'கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது' என்பார்கள். இவருடனான சந்திப்பும் அத்தகையதொன்றுதான். சந்திப்பு குறுகியதானாலும் , மிகவும் பயனுள்ள சந்திப்பு. புதியவன் ராசையாவின் ஆளுமையை, கலை, இலக்கிய மற்றும் அரசியற் செயற்பாடுகளைப் பற்றியெல்லாம் நன்கறிந்திட வழி சமைத்த சந்திப்பல்லவா இச்சந்திப்பு. இவரது திரைப்பட வெளியீடுகள் வெற்றியடைய வாழ்த்துகள். சந்திப்பை ஏற்பாடு செய்த நண்பர் எல்லாளனுக்கும் நன்றி.

ngiri2704@rogers.com

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்