இணையம் மூலம், குறிப்பாக முகநூல் வாயிலாக நாம் அடைந்த பயன்கள் ஆரோக்கியமானவை என்பதற்கு இவரைப்போன்ற கலை, இலக்கியவாதிகளுடனான தொடர்புகள், கருத்துப்பரிமாறல்களே பிரதான சான்றுகள். இவரது மொழிபெயர்ப்பில் எனது சிறுகதைகளான 'உடைந்த காலும், உடைந்த மனிதனும்', மற்றும் 'நடு வழ்யில் ஒரு பயணம்' ஆகியன லக்பிமா' சிங்களப் பத்திரிகையின் வாரவெளியீட்டில் வெளியாகியுள்ளன. எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலினையும் மொழிபெயர்ப்பதில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
1. முதலில் உங்களைப்பற்றிய அறிமுகமொன்றினைத் தாருங்கள். உங்களது எழுத்துப்பணியின் ஆரம்பம், குடும்பம் போன்ற விடயங்கள்..?
நான் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தில் திஸ்ஸமஹாராம (Tissamaharama) நகரத்தில் பிறந்தேன். பிறந்த திகதி 20/06/1972. அப்பா ஒரு விவசாயி. அம்மாவுக்குத் தொழில் இல்லை. (ஒரு குடும்பப் பெண்.) இப்போது அவர்கள் உயிருடனில்லை. மறைந்து விட்டார்கள். எனக்கு எட்டு சகோதர, சகோதரிகள். நான் தான் கடைக்குட்டி. இளையவன். நெதிகம்வில (Nadigamwila) என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகின்றேன். திஸ்ஸமஹாராம – தெபரவெவ (Debarawewa) தேசீய கல்லூரியில் படித்தேன். பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிப்புற மாணவனாக இளங்கலைப் (B.A) பட்டமும், களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் (M.A) பட்டமும் பெற்றுள்ளேன். திருமணமாகிவிட்டது. மனைவியின் பெயர் ஸுமித்ரா. ஆரம்பத்தில் ‘லக்பிம’ சிங்கள பத்திரிகையின் நிருபராகப்பணியாற்றினேன். அதுவே என் முதற் தொழில்.
சிறிது காலம் திஸ்ஸமஹாராம பிரிவேனாவில் ஓர் ஆசிரியராகவும் வேலை பார்த்தேன். 2005 ஆண்டிலிருந்து) 'காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தில்' (Department of Land Title Settlement) ஓர் அபிவிருத்தி உத்தியோகத்தராக (Development officer) வேலை பார்த்து வருகின்றேன்.
பாடசாலைக் காலத்திலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகின்றேன். அவை பல பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. அவற்றில் சில இலக்கிய போட்டிகளில், சான்றிதழ்கள், பரிசுகள் பெற்றுள்ளன. ஆதலால் ஆர்வம் அதிகரித்தது. அப்படி தான் நான் இலக்கியத் துறைக்கு வந்தேன்.
2. தமிழ்ப்படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டுமென்ற ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? தமிழ் மொழியைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? இவ்வகையான ஆர்வம் ஏற்படுவதற்கு உங்களைத் தூண்டிய விடயங்கள் யாவை?
நான் வாழும் பகுதியில் தமிழ் மொழி பாவனையிலில்லை . கல்விப்பொதுத்தராதர உயர்தரப் (G.C.E - A/L) பரீட்சைக்காக விஞ்ஞான பாடங்களை படிக்கும் காலத்தில் நல்லோர் ஆசிரியரைச் சந்தித்தேன். அந்த ஆசிரியரின் பெயர் M.H.M. நவாஸ். அவர் மூலம் தமிழ் மொழியைப் படித்தேன். A/L முடித்தவுடன் றுஹுண பல்கலைக்கழகத்தில் ‘Certificate course in Tamil language’ படித்து சான்றிதழைP பெற்றுள்ளேன். மற்றும் ‘மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்’ (Centre for policy alternatives) மூலம் நடாத்திய ‘விபாஷா மொழிபெயர்ப்பு நிகழ்ச்சி திட்டத்தி'ல் திறமைச் சித்தி பெற்று, 'டிப்ளோமா' சான்றிதலைப் பெற்றுள்ளேன். அப்பாட நெறியைக் கற்கும்போது பிரபல உரை மொழிபெயர்ப்பாளரான எஸ்.சிவகுருநாதன் அவர்களை சந்திக்கும் சந்தர்பம் கிடைத்தது. தமிழ்ப் படைப்புகளை சிங்களத்துக்கு மொழிபெயர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி அவர்தான் எனக்கு எடுத்துரைத்தார். இந்தப் பாதைக்கு என்னைக் கொண்டு வந்தவர் அவர். அது மட்டுமல்ல. இலங்கையில் பிரபல தமிழ் எழுத்தாளர்களின் நூல்களையும் அவர் எனக்குத் தந்தார். அவற்றை வாசிக்கும்போது அந்த அனுபவங்களை எனது சிங்கள சமூகத்துக்கும் தர வேண்டும் என நினைத்தேன்.
முதலாவதாக நான் தமிழ்ச் சிறுகதைகளை மொழிபெயர்த்து சிங்கள பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலம் வெளியிட்டேன். பிறகு தான் நூல்களாக வெளியிட ஆரம்பித்தேன். என் முதலாம் நூல் தான் ‘பேத நெத்தி ஹதவத்’ (பேதமில்லா நெஞ்சங்கள்) என்ற சிறுகதைத் தொகுப்பு. அது 2003ஆம் ஆண்டில் வெளியானது. 2004ஆம் ஆண்டில் அரசகரும மொழிகள் திணைக்களம் (Department of official languages) நடாத்திய ‘எழுத்துக்கலை மூலம் மொழி அபிவிருத்திக்கும், இன ஒற்றுமைக்கும் வழங்கும் பங்களிப்புக்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூலைத் தெரிவு செய்வதற்கான போட்டியில்’ முதலாம் இடத்தை அந்த நூல் பெற்றது. அதற்கான பரிசாக 10,000 ரூபாய் பெறுமதியுள்ள ஒரு காசோலையும் கிடைத்தது. என் ஆர்வமும் அதிகரித்த்து. அவ்வாறு தான் இத்துறைக்கு பிரவேசித்தேன்.